/* up Facebook

Mar 7, 2019

பெண்களுக்கு ரயிலில் தனிப்பெட்டி : பால்வாத (Sexist) முடிவு!


 2019 - சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இலங்கை அரசு ரயிலில் பெண்களுக்கான தனிப்பெட்டியை அறிமுகம் செய்து வைக்கிறது. இது பால் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மேலும் அசமத்துவத்தை ஊக்குவிக்கும் ஒன்றாக ஆகப் போகிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அது குறித்து ஞாயிறு தினகரன் வார மஞ்சரியில் வெளிவந்த  சில பெண் செயற்பாட்டளர்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்கிறோம்.

ரயிலில் தனிப்பெட்டி ஒதுக்கப்படுவது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் வழங்கிய கருத்துக்களை இங்கே தொகுத்து தருகிறோம்

ஏற்பதா? மறுப்பதா?

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க வியாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அண்​ைமயில் சென்றிருந்தார். அங்கு அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த அதிரடி அறிவிப்பு இன்று பெண்கள் மத்தியில் சமூகத்தில் பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. இதை சில பெண்கள் வரவேற்றாலும் எம்மால் இதை ஏற்க முடியாதுள்ளது. அவரின் இவ் அறிவிப்பானது எமக்கு வேறு ஒரு கோணத்தின் சிந்தனையை தூண்டுகிறது. 'நாங்கள் அப்படித்தான் செய்வோம்'. நீங்கள் தனியாக செல்லுங்கள்்' என்ற ஆணாதிக்க அடக்குமுறை ஒளிக்கப்பட்ட கருத்தாக இதனை நோக்க வேண்டியுள்ளது. பெண்கள் செல்வதற்கு ரயிலில் தனி பெட்டி ஒதுக்குவது பெண்களுக்கு வழங்கும் உரிமையாக எப்படி கருத முடியும்? பெண்களுக்கு பொது போக்குவரத்தில் பாலியல் சீண்டல்கள் முடிவிலியாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறான தீர்வுகளினால் அச் செயற்பாடுகளை முற்று முழுதாக ஒழிப்பது எவ்வகையில் சாத்தியப்படும் என்ற நடைமுறை சாத்தியமான சிந்தனைக்கு அப்பாற்பட்டே இருக்கிறது. பெண்களை தனி பெட்டியில் செல்ல அனுமதித்தால் பாலியல் சீண்டல் குறையும் என்று அமைச்சர் எவ்வாறு ஊகித்தார் என்று எமக்கு விளங்கவில்லை. அமைச்சரும் ஓர் ஆண் என்ற நோக்கில் அவரின் கருத்தை பார்க்க வேண்டியுள்ளது. ஆணாதிக்க அதிகார வர்க்கம் ஏதோ எங்களுக்காக பாவப்பட்டு இச் சலுகைகளை வழங்கியதா? இதை எவ்வாறு எங்களுக்கான உரிமை என்று ஏற்றுக் கொள்வது? நாங்கள் கேட்பது சமத்துவம் அன்றி தனித்துவம் அல்ல. ஆண், பெண் சமநிலையே எமக்கான நிரந்தர உரிமையாகும். இதில் ஆண் பெண் வேறுபடுத்தலால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எவ்வாறு ஒழிக்க முடியும். பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டலுக்கு ஏன் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது?
பொதுப் போக்குவரத்துகளில் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது பெரும் குற்றமாகும். அதற்கு எதிராக சட்ட நடவடிக்ைக எடுக்கலாம் என்று பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தாலும் கூட எங்காவது அதற்கு எதிரான சட்ட நடவடிக்ைக எடுக்கப்பட்டதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம். சட்டங்கள் வெறுமனே அறிவிப்பு பலகைகளில் மட்டுமே உள்ளது.
முதலில் பொது போக்குவரத்துகளில் பெண்களுக்ெகதிராக நடக்கும் பாலியல் சீண்டல்களை எவ்வாறு தடுப்பது அதற்குரிய சட்ட நடவடிக்ைககளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது போன்றவற்றுக்கு தீர்வு காணாமல் பெண்களை தனிமைப்படுத்துவதால் மட்டும் ஆண்களின் மனதிலுள்ள வன்மத்தை அழிக்க முடியாது. ஆண்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளின் முன்னேற்றம் காண்பதே பாலியல் சீண்டலுக்கான நிரந்தர தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.

பத்மா சோமகாந்தன் (எழுத்தாளர்)

நீண்டகாலமாக பெண்களுக்கு தங்களுக்கான பிரத்தியேக வசதி வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையே என்ற ஓர் ஏக்கம் இருந்தது. அதனால் பல போராட்டங்கள், கருத்து முரண்பாடுகள் நிலவின.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமைச்சர் அர்ஜூனவின் அறிவிப்பு வரவேற்கக் கூடியது. கல்வியில் முன்னோக்கி நகர்ந்த பெண்கள் வேலை வாய்ப்புகளுக்கு செல்வதால் சமுதாயத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பெண்கள் தனியே செல்லும் சந்தர்ப்பங்கள் இன்று எற்பட்டுள்ளதால் ஆண்களினால் ஏற்படுகின்ற பாலியல் சீண்டல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இவற்றை நோக்கும் போது 'பெண்களுக்கான தனியான ரயில் பெட்டி ஒதுக்கீடு' வயதான பெண்கள், நோயாளர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள் ஆகியோருக்கு பேருதவியாக அமையும். மகளிருக்கு மாத்திரம் தனியே ரயில் பெட்டி என்பதை வரப்பிரசாதம் என்றே குறிப்பிடலாம்.

இருப்பினும், எல்லா விடயங்களிலும் சமத்துவம் தேவை என்று நாம் குரல் கொடுக்கிறோம். ஆனால் பெண்களுக்கு மாத்திரம் தனியான ஒதுக்கீடு எதற்கு.

இவ் விடயம் எம்மை ஒதுக்கி வைப்பது போல் அல்லவா தோன்றுகிறது? காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று போராடினோம். இச் சூழலில் இவ்வாறான தனிமைப்படுத்தல்கள் ஏன் என்பதுவும் நியாயமான கேள்வி தான்.

அதற்கான பதில் என்ன? பெண்களும் ஓர் உயிருள்ள இனம், அவர்களுக்கும் வாழ்வதற்கு உரிமை இருக்கின்றது.

பொது போக்குவரத்தில் பெண்களை சமத்துவமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் சமுதாயத்தில் தற்போது குறைந்து போனதால் தான் இந் நடவடிக்கைகள் எடுக்க காரணமாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஆண்-, பெண் வேறுபாடுகள் கிடையாது. வேறுப்படுத்தும் சிந்தனைகள் களையப்பட வேண்டும்.

பிரத்தியேக ஒதுக்கீடுகளால் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதால் மட்டுமே குற்றங்களை குறைக்கலாம் என்பது எனது வாதமாகும்.


பேராசிரியர் அ. மங்கை இந்தியா அரங்கியல் செயற்பாட்டாளர்

இலங்கையை பொறுத்தவரை 'பெண்களின் பாதுகாப்பு கருதி' இத்திட்டத்தை கொண்டு வருகின்றார்கள் என்றால், ஆண்கள் மோசமானவர்கள் என்று அவர்களே அவர்களின் பிழையை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்று தான் அர்த்தம்.

அதனால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்க சொல்கிறார்கள்.

அந்த தர்க்கத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சமூக ரீதியில் கருத்தை அடிப்படையாக வைத்து கேட்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது.

70களில் பெண்கள் அமைப்புகள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று தான் பொது வெளிகளில் பெண்களுக்கான தனி இருக்கைகள் கொடுக்க வேண்டும் என்பது.

பெண்ணியத்தினுடைய ஓர் அம்சம் சமூக நீதி என்கின்ற கருத்தில் சாதிய ரீதியாக, பாலின ரீதியாக நீங்கள் பல காலம் ஒதுக்கி வைத்ததை மாற்ற வேண்டும் என்றால் எடுத்த எடுப்பில் சமமாக முடியாது.

அதற்கான ஒரு சூழலை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும் என்பதற்கான வாதத்தை தான் முன் வைத்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.

மும்பாயில் முழுக்க முழுக்க பெண்களுக்கான விசேட ரயில் சேவை இருக்கின்றது. மாலை நேரத்தில் அலுவலகத்தில் இருந்து செல்வதற்கு பெண்களுக்கென்றே தனி ரயில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, இன்றும் எல்லாவற்றிலும் பெண்களுக்கான பிரத்தியேக பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். இத் திட்டம் இந்தியாவில் சகல இடங்களிலும் இருக்கின்றது.

இலங்கையை பொறுத்தவரை தனி ரயில் பெட்டி ஒரு விதத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை தர கூடியது தான்.ஆனால் சமத்துவம் என்ற கருத்தில் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல.

பாத்திமா மஜீதா லண்டன் (எழுத்தாளர்)

ஒரு வகையில் இத்தகைய நடைமுறை போக்குவரத்தில் நடைபெறும் வன்முறைகள் குறைவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் பெண்களை வேறுபடுத்தி அவர்களுக்கென்று தனியே அறைகளை ஒதுக்கீடு செய்வதென்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பால்நிலை அடிப்படையில் பெண்களை வேறுபடுத்தலுக்கு சமமானது. அதாவது இத்தகைய ஒழுங்கு முறை ஆணியச்சமூகத்தினை மீளுருவாக்கம் செய்கின்ற முறையாகும். இதன் மூலம் பெண்கள் தொடர்பாக சமூகத்தில் இருக்கின்ற மதிப்பீடுகள் மேலும் மேலும் நிலைநிறுத்துப்படுமேயன்றி ஆண், பெண் சமத்துவம் என்ற கொள்கை மறைந்து விடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும். அதேநேரம் சட்டத்தின் மூலம் போக்குவரத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்காக இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் வலுவிழந்துவிடக்கூடிய நிலையையும் தோற்றுவிக்கலாம். எனவே அரசானது வன்முறைகளை தோற்றுவிக்கின்றவர்களை தண்டிப்பதில் வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களினை வேறுபடுத்தி வைப்பது நியாயமற்ற நடவடிக்கையாகும்.

நதீ கம்மல்லவீர (எழுத்தாளர், நடிகை)

சர்வதேச பெண்கள் தினத்திலிருந்து ரயிலில் பெண்களுக்கான தனியான பெட்டியை இணைக்க அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எடுத்த நடவடிக்கையை நான் நகைச்சுவையாகவே நோக்கினேன். கடவுளே இந்நாட்டு மக்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கின்றார்கள் என எண்ணினேன். நாம் எல்லா விடயத்திலும் மிக வேகமாக பின்னோக்கி மூட நம்பிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பயணிக்கும் இனமாக மாறி வருகின்றோம்.

பெண்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். அந்த பெட்டியில் பெண்கள் யாரும் ஏறக் கூடாது. பெண்களுக்கு ஆண்களுடன் ஒன்றாக பயணம் செய்ய முடியாதென்பதே இதன் அர்த்தம். பெண்கள் ஆண்களால் இம்சிக்கப்படுகின்றார்கள், அவர்கள் அநாதரவானவர்கள் என்பது தானே அதன் அர்த்தம். இதற்கு ஆணையும் பெண்ணையும் பிரிப்பதல்ல நடைமுறை. அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கக் கூடிய முறையொன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறான முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும் போது பொதுப் போக்குவரத்தில் மாத்திரமல்ல ஏனைய பொது இடங்களிலும் பெண்களை கௌரவத்துடன் நோக்கும் எண்ணம் சமூகத்தில் உருவாகும்.

ஆணையும் பெண்ணையும் பிரித்தால் அது ஒரு வகையில் அடிப்படை மனித உரிமை மீறலாக கருதப்படலாம்.

ஆண், பெண் சமத்துவ கருத்துக்கு இது முற்றிலும் எதிரானதாகும். அதேவேளை ஆண்களின் பக்கம் இருந்து நோக்கும் போது இது அவர்களுக்கு ஒரு அவமானமான விடயமாகும்.

நாங்கள் அனைவரும் இணைந்து அமைச்சர் அர்ஜூனவின் இந்த பிற்போக்குத்தனமான கூற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும். உலகிலுள்ள பிற்போக்கான கலாசாரத்தில் பெண் அடிமைத்தனம் மாத்திரமல்ல இவ்வாறான செயற்பாடுகளும் அடங்கும்.

நாம் அரசியல்வாதிகளின் கைபொம்மைகளாக இருக்காமல் இவ்வாறான தீர்மானங்களுக்கு எதிராக நின்று மனித சுதந்திரம் மற்றும் கௌரவத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அதை நாம் செய்ய வேண்டும்.

சீதா ரஞ்சனி  (மூத்த பத்திரிகையாளர், ஊடக செயற்பாட்டாளர்)

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பில் நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னர் பெண்களுக்கான தனியான பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது குறுகிய காலத்தில் செயலற்றுப்போயின. தனியாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரவு, பகல் பஸ் சேவைகளை நடத்துவதாக இருந்தால் அனைத்து பிரதேசங்களிலும் செயல்படுத்த வேண்டும். அத்தோடு இன்றைய சூழ்நிலையில் அநேக பெண்கள் தனிமையிலேயே பிரயாணம் செய்கின்றனர். பொது போக்குவரத்து சேவைகள் போதுமான அளவு நடைபெறாத நிலையில் பெண்களுக்கான தனியான சேவை சாத்தியமற்றது. அது இலாபத்தை நோக்காக கொண்டதாக இருக்கக் கூடாது. எமது நாட்டில் சிரமமின்றி பிரயாணிகள் பயணம் செய்யக்கூடிய நல்ல போக்குவரத்து சேவையே அவசியம். நெரிசலின்றி இருக்கைகளில் அமர்ந்து செல்லக் கூடியதாக இருக்க வேண்டும.இவ்வாறான காரணங்களினாலேயே பெண்கள் பொது போக்குவரத்தில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந் நிலையில் ரயில்களில் பெண்களுக்கான தனியான பெட்டிகளை இணைப்பது போற்றுதற்குரியதாகும். ஆனால் அவை வெறுமனே பிரசாரத்துக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது. அத்துடன் அவை குறுகிய காலத்தில் நிறுத்தப்படவும் கூடாது.

நன்றி - தினகரன்

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்