/* up Facebook

Oct 21, 2018

மீடூ: அடுத்தகட்ட பாதை இதுதான்!


தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் மீடூ விவகாரம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(அக்டோபர் 20) சென்னையில் நடத்தப்பட்டது. இதில் பின்னணி பாடகி சின்மயி, இயக்குநர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்திரனம், நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கெடுத்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் நடைபெற்றவை வாசகர்களுக்காக.

லீனா மணிமேகலை

“மீ டூ போன்ற இயக்கங்கள் மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறுவதோடு நில்லாமல், அதுபோன்ற குற்றங்கள் கவனிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பிரச்சினைகள் கவனிக்கப்படுவதோடு அல்லாமல், தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் இது போன்ற விவகாரங்களை பொது வெளிக்குள் கொண்டு வரும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் தொடர்பான புகார்களுக்காகவே மீடூ போன்ற தளங்கள் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகளையும், அடுத்து யாரும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை துணிந்து வந்து சொல்லும் பெண்களே ஆதாரம் என்பதுதான் மீடூ இயக்கத்தின் அடிப்படை. இதன் மூலம் மாற்றம் உருவானால் அதுவே உண்மையான சமூக மாற்றம்”

லட்சுமி ராமகிருஷ்ணன்

எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்றால் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கே தயங்குகிறேன். ஏழு வயது சிறுமி ஹாசினியை சீரழித்தவர்களை சட்டம் என்ன செய்திருக்கிறது. இது தான் இன்றைய நிலை. மீடூ இயக்கம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய இடம் கிடையாது. இது அந்த பெண்களுக்கு தைரியத்தையும், ஆதரவையும் தரக்கூடிய ஒரு மாஸ் மூவ்மெண்ட். இனிமேல் ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் பொது இடத்திலோ அல்லது வேலை நிமித்தமாகவோ தவறாக நடந்து கொள்வதற்கும் அவளிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதற்கும் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இவ்வமைப்பு உருவாகும். காம்ப்ரமைஸ், அட்ஜெஸ்ட்மெண்ட் போன்றவற்றுக்கு தயாராக இல்லாத பெண்கள் இருக்கிறார்கள். தயாராகவும் சிலர் இருக்கிறார்கள்; இல்லையென்று நான் சொல்லவில்லை.


சின்மயி

வைரமுத்துவுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடர ஆவணங்களை சேகரித்து வருகிறேன். சுவிட்சர்லாந்து சென்றபோது பயன்படுத்திய பாஸ்போர்ட் தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைத்ததும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். வைரமுத்து குறித்து எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதற்கு முன்பே தெரிவித்திருக்கிறேன். வைரமுத்து பற்றி பெண்களுக்குத் தெரியும். ஆண்களுக்குத் தான் தெரியாது. மீடூ விவகாரத்தில் எத்தனை ஆண்கள், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்? 1997ஆம் ஆண்டு விசாகா சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டு மத்திய அரசு அலுவலகங்களில் அந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று வரை ஊடக அலுவலகங்களில் இது அமைக்கப்படவில்லை என்று சில பெண் பத்திரிகையாளர்களே கூறியுள்ளனர். திரைப்பட துறையைவிட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டல்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். திரைத்துறையில் இப்போதுதான் விஷால் இது பற்றி மூன்று பேர் கொண்ட குழு அமைக்க போவதாக அறிவித்திருக்கிறார். அது எந்த மாதிரி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

ஆண்டாள் பிரச்சினையில் எந்த ஒரு கருத்தும் நான் சொன்னது கிடையாது. மற்றவர்கள் என்னை வைத்து அரசியல் செய்தால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. என் பிரச்சினை; அது எனக்கு நடந்தது. இடது, வலது, மையம் என எல்லா அரசியல் கட்சி தரப்பில் உள்ள ஆண்களும் இதில் சிக்கியுள்ளனர். கடவுள் நம்பிக்கை உடையவர், இல்லாதவர், பத்திரிகையாளர், அமைச்சர், கார்பரேட் என எல்லா தரப்பில் உள்ளவர்கள் பெயரும் இதில் அடிப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரும்போது அத்தனை பேரும் சேர்ந்து இழிவுப்படுத்தினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பெண்களை நாங்கள் நம்புவோம். உறுதுணையாக நிற்போம். இந்த மாதிரியான ஒரு சமூகத்தில் எழுந்து நிற்போம். அதற்கான ஆதரவு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது வந்துவிட்டது. கேள்வி கேட்போம். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்போம்.

நன்றி - மின்னம்பலம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்