/* up Facebook

Mar 15, 2018

உஜ்வாலாவும் நானும் - ரானா அயூப்


நான் அந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்னால் என்னுடைய முகத்தில் மிகத் தாராளமாக ‘சன்ஸ்கிரீன்’ தடவிக் கொண்டேன். நடக்கும்போது கொதிக்கும் கோடை வெயிலால் தலைவலி வந்து விடாமல் இருப்பதற்கு என்னுடைய அம்மா ஒரு பாட்டில் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் திரவம் (ஓஆர்எஸ்) என்னிடம் கொடுத்திருந்தார். நான் என் தலை மற்றும் முகத்தை துணிகொண்டு மூடியிருந்தேன். ஓடுவதற்குப் பயன்படுத்துகின்ற நைக் ஷூ என்னுடைய கால்களில் இருந்தது.

பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்த குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தன்னுடைய கிராமத்தினருடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டிருக்கும் உஜ்வாலாவோடு சேர்ந்து நடந்த போது, நகர்ப்புறத்தில் மிகுந்த பாதுகாப்புடன் யாருக்கும் கிடைக்காத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளது தலை உச்சியில் இருந்த மயிரிழையில் இருந்து ஒருதுளி வியர்வை வழிந்தோடியபோது நான் அவளுக்கு என்னிடம் இருந்த ஓஆர்எஸ் பாட்டிலைக் கொடுத்தேன். அவள்சிரித்துக் கொண்டே, மராத்தி மொழியில் சொன்னாள்: “நன்றி அக்கா! எங்களுக்குப் பழகி விட்டது. உங்களுக்குத் தேவைப்படலாம்” என்றாள்.

உஜ்வாலா வைத்திருந்த பை, ஆவணங்களால் நிறைந்திருந்தது. பெரும்பாலும் உள்ளூரில் இருக்கும் வங்கிகளுக்கான விண்ணப்பங்கள். கிராமப்புற பதிவாளரிடமிருந்து, உள்ளூர் பஞ்சாயத்திடமிருந்து பெறப்பட்ட மராத்தியில் எழுதப்பட்ட சில கடிதங்களும் இருந்தன. கடந்த மாதம் குழந்தை பெற்ற பிறகு, கடுமையான ரத்த சோகையின் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் உஜ்வாலா அனுமதிக்கப்பட்டாள்; குழந்தை மிக எடை குறைவாகப் பிறந்திருந்தது. சத்துள்ள உணவு என்பதே ஆடம்பரப் பொருளாக இருப்பதால், மூன்று வேளை சாப்பாடு என்பது ஒரு போராட்டமாகவே இருந்தது. சில நாட்களில் அவளுடைய குடும்பம் அரிசி மற்றும் சர்க்கரையை மட்டும் வைத்து ஒருவேளை மட்டுமே சாப்பிடும் நிலைமையும் ஏற்படும். அதனால் அவள் தன்னுடைய குழந்தைக்கு சரியாகத் தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை.

கடந்த ஆண்டு, அவளுடைய சிறிய நிலத்தில் விளைந்திருந்த பயிர்கள் அனைத்தும் பூச்சிகளால் நாசம் செய்யப்பட்டன. அவளுடைய குடும்பம் மாவட்டக் கூட்டுறவு வங்கியில் இருந்து பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதையெல்லாம் கூறிக்கொண்டே அவளது விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்கு யாராவது அரசாங்கத்தில் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று என்னிடம் கேட்டாள். நான்அவளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க முயன்றேன். வேண்டாம் என்று மறுத்து விட்டாள். நீங்கள் கொடுக்கும் பணம் ஒரு மாதத்திற்கு கூட நீடிக்காது. அரசாங்கம் மட்டுமேஎங்களுக்கு உதவ முடியும், உங்களால் முடியுமானால் எங்களைக் கவனிக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள் என்றாள்.

“லால் சலாம்” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சிவப்புத் தொப்பி, கொடிகளை வைத்திருந்த இளம் சிறுவர்கள் அவளுக்கு சற்றுப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மஜ்தூர் படத்தில் திலீப்குமார் பாடும் பாடலை அவர்கள் பாடிக்கொண்டு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பாடலில் இருந்த ஒரு வரியை மறந்து போனபோது, சிரித்துக் கொண்டே மராத்தி பாடலுக்கு மாறினார்கள். இடதுசாரிக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறீர்களா என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சிரித்துக் கொண்டே, தொலைக்காட்சி சேனலில் வேலை செய்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். மற்றொருவர் "அக்கா, நாங்கள் எல்லாம் விவசாயிகள்" என்றார்.

மாலை வேளையின் இறுதியில், பேரணியில் கலந்துகொண்ட சிலர் சாலையில் இருந்த தேநீர் கடை முன்பாக சற்று நின்று செல்ல முடிவு செய்தனர். 70 வயதிற்கு மேற்பட்டவராக அந்தக் குழுவில் இருந்த வயதான ஒருவருக்கு தொண்டர் ஒருவர் தேநீர் வழங்கினார். யாரோ ஒருவர் பார்லே-ஜி பிஸ்கட்டை அவரிடம் கொடுத்தார். நான் அவரிடம், நாசிக்கிலிருந்து மும்பைக்கு இந்த வயதில் நடந்துவருவது உங்களுக்குத் தேவைதானா என்று கேட்டேன். நான் ஒன்றும் தனியாக இல்லை, என்னுடைய நண்பர்கள் பலரும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார். நேற்று இரவு என் கால்கள் மரத்துவிட்டன என்று சொல்லி விட்டு தனக்கிருக்கும் நீரிழிவு நோயைப் பற்றி என்னிடம் கூறினார். இந்த நடை அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கொரு முறை அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ‘‘நகரத்தில் உள்ள உங்கள் மக்கள் மிகவும் நல்லவர்கள், எங்களுக்கு உணவு, தண்ணீரை கொடுத்தார்கள், மந்திராலயாவில் (மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்) உட்கார்ந்திருக்கும் உங்கள் தலைவர்களிடம் எங்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்கவே நாங்கள் வந்திருக்கிறோம். கிராமத்தில் இருந்து கால்நடையாக உங்கள் நகரத்திற்கு வருமாறு அவர்கள் எங்களைக்கட்டாயப்படுத்தி விட்டார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் கூட, என்னுடைய மகனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் ஏதோ செய்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். வீட்டில் உட்கார்ந்துகொண்டிருந்தால் கடனை அடைக்க முடியாது” என்றார் அவர்.

அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் என்னிடம் தன்னுடைய மற்றும் தனது பேரனின் ஆதார் அட்டைகளைக் காட்டினார். “அவர்களுக்குத் தேவையான எல்லா பொருட்களும் எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன, வாக்காளர் அடையாள அட்டையும் நான் வைத்திருக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமான ஆதித்யா தாக்கரே பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்; “உங்கள் சிவப்புக் கொடிகளை அவர்கள் பார்க்கிறார்கள், நான் உங்கள் ரத்தத்தின் சிவப்பு நிறத்தைப் பார்க்கிறேன்,” என்று தங்களுடைய கட்சிஅங்கம் வகிக்கின்ற கூட்டணி அரசாங்கத்தைச் சீர்குலைக்க இடதுசாரிகள் முயற்சிப்பதாக பாஜக தலைவர்கள் கூறுவதைப் பற்றி விமர்சனம் செய்யும் வகையில் பேசினார். அரசியல் மறதிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவும் கூட கலந்து கொண்டார்.


என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் நான், சிவசேனா அல்லது காங்கிரஸ் கட்சி உங்களுடைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்று கேட்ட போது, கொடிகளின் நிறம் பற்றி எங்களுக்கு கவலையில்லை என்றனர். ‘‘மன்மோகன் சிங் ஒரு விவசாயியின் மகனாகவே இருந்தார். மோடியும் அப்படித்தான் கூறுகிறார். அவர் தேநீர் விற்றுக் கொண்டிருந்தவர். எங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன? எங்களை இந்த இக்கட்டில் இருந்து விடுவிப்பவர்கள் எங்களைக் காக்க வந்த ரட்சகர்களாகவே இருப்பார்கள்.’’

சிவப்பு நதி மும்பையை நெருங்க, நெருங்க ஆள்பவர்களின் வாட்ஸாப் குழுக்களும், ட்விட்டர் கைத்தடிகளும் செயலில் இறங்கின. மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கின்ற பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பறக்க விடப்பட்டன. மும்பை பாஜக எம்பி பூனம் மகாஜன் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, நகர்ப்புற மாவோயிஸ்டுகளால் இந்த விவசாயிகள் போராட்டம் ஊக்குவிக்கப்படுகின்றது என்றார். ஒருவேளை நாடாளுமன்றம் நடைபெறாமல் இருந்திருந்தால், தனது தொகுதியைத் தாண்டிச் செல்கின்ற விவசாயிகளின் கால்களில் உள்ள கொப்புளங்களை அவர் பார்த்திருக்கலாம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து அறிவித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை அப்போது விலக்கிக் கொண்டனர். அந்த அறிவிப்பின் மூலம் 89 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் தன்னிச்சையான கடன் தள்ளுபடி செயல்முறையால் 31 லட்சம் விவசாயிகளே பயன் பெற முடிந்ததாக இந்தப் பேரணியின் அமைப்பாளர்கள் கூறினார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி முதலே, தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளின் மூத்த தலைவர்கள் மாநில அளவிலான போராட்டம் பற்றி பேசி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று கிராமவாசிகளிடம் இருந்து கடன் தொடர்பான விவரங்களைச் சேகரித்து விபரங்களை எடுத்துக் கொண்டு விவசாயிகளைத் திரட்டியது.

நான் இதை எழுதும்போது, ​​விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
முதலமைச்சர் பட்னாவிஸ் அனைவரின் எதிர்பார்ப்பின்படியே, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலமும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. விவசாயிகளின் குரல்கள் இப்போது நம் வீடுகளுக்குள், மும்பையில் இருப்பவர்களின் வீடுகளில் மட்டுமல்லாது, நாடு முழுக்க இருக்கின்ற வீடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. வேதனையைத் தரும் இந்த துன்பகரமான பேரணியை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

களைப்படைந்த முகங்கள், காயமடைந்த கால்களின் படங்கள் மூலமாக, வழக்கமாக ‘வளர்ச்சியை’ மையப்படுத்துகின்ற வாட்ஸாப் பதிவுகளும் பார்வேர்டுகளும் மாற்றி அனுப்பப்பட்டன. நாட்டைப் பீடித்திருக்கும் விவசாயத் துயரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கான சாத்தியத்தை இந்த இயக்கம் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு வாக்குறுதி கொடுத்து, காற்றின் திசையை மாற்ற மோடியும் பட்னாவிசும் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளோ தங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நாட்டின் பிற பகுதிகளுக்கும் திசை திருப்பி தெளிவுபடுத்தி உள்ளனர்.

கடந்த காலத்திலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றாலும், முன்பு மாதிரி இப்போது அது நிறைவேற்றப்படாமல் இருக்கப் போவதில்லை. நம்முடைய விவசாயிகள் மீண்டுமொரு முறை எச்சரிக்கை வழங்குவதற்காக நமது அலட்சியமான நகரத்திற்கு அடுத்த வருடம் திரும்பி வரலாம் என்று கருதி ஆட்சியாளர்கள் சமரசம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஆனால், விவசாயிகளின் துயரக் கதைகள்,விவசாயிகளின் தற்கொலைகள் என்று பத்திரிகைகளின் முக்கியத்துவமற்ற மூலைகளில் வெளியிடப்பட்டு வந்த செய்திகள் இப்போது அனைவராலும் பேசப்படுபவையாக மாறி விட்டன. நாடு அதன் ஆன்மாவை இழந்துவிடவில்லை என்பதற்கு மிகவும் தேவையான உறுதியை அளிப்பதாக இந்தப் பேரணி அமைந்துவிட்டது.

- ராணா அயூப்,
பிரபல பத்திரிகையாளர்
*
தமிழில்: பேரா. தா.சந்திரகுரு
தீக்கதிர் 15-03-2018
...மேலும்

Mar 8, 2018

பெண்ணுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை...

பெண்ணுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை...


Lakshmipriyaa

...மேலும்

பெண், ஆணின் சொத்தா? - பெரியார்


தமிழனுக்குள் இல்லாத இந்த முறையினைப் பார்ப்பான் எதற்காகப் புகுத்தினான் என்றால், மனிதனை அடிமையாக்கவும், முட்டாளாக்குவதற்கும், ஜாதி இழிவை நிலை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது தான் கல்யாணமாகும். இதைத் தான் வள்ளுவனும் சொன்னான். மற்றவனும் சொன்னான். எதற்காக அப்படிச் சொன்னானென்றால், பெண்ணடிமையை வலியுறுத்துவதற்காகவே யாகும். சீர்திருத்தத் திருமணம் செய்ய வேண்டுமென்கின்ற ஆசையால், ரூ.200 கொடுத்து என்னைக் கூப்பிடுகின்றான். அவனும் நேரம் பார்த்து, நாள் பார்த்துத் தான் செய்கிறான். அப்படி நம் இரத்தத்தோடு ஊறிவிட்டது. அதைப் போக்குவது கஷ்டம் தான்; என்றாலும் போக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதைப் போக்காமல் நம் இழிவை, சூத்திரத்தன்மையை, மானமற்றத் தன்மையைப் போக்க முடியாது. என்ன கஷ்ட, நஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இதை மாற்றியாக வேண்டும்.

எவன் ஒருவன் பெண் விடுதலையை விரும்புகிறானோ, மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று நினைக்கின்றானோ அவன் இந்த முறையில் தான் வாழ்க்கை ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். மற்ற முறைகள் அனைத்தும் பெண்ணடிமை - மூட நம்பிக்கை - ஜாதி இழிவு ஆகியவற்றை நிலைநிறுத்தக் கூடியவையேயாகும். நமக்கிருக்கிற புராணங்கள், கடவுள் கதைகள், இலக்கியங்கள் யாவும் பெண்ணடிமையை வலியுறுத்தக் கூடியவையேயாகும். பெண்களுக்கு நீதி சொன்னவர்கள் அத்தனைப் பேருமே, பெண்களென்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்கின்ற தன்மையோடு கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்று தான் சொல்லியிருக்கிறார்களே ஒழிய, ஒருவர் பெண் சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

வள்ளுவரே பெண்ணடிமையை வலியுறுத்துகிறார். வள்ளுவனை விளம்பரப்படுத்தியவன் நான். திருகுறளைப் பரப்பியவன் நான். புலவர்களை விட அவர் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவர் கருத்துகள் அத்தனையுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதல்ல. "தற்கொண்டான்பேணி" என்கின்றார். தற்கொண்டான் என்றால் தன்னைக் கொண்டவன். அதாவது தன்னை விலைக்கு வாங்கியவன் என்று தானே பொருள். அப்படியானால் பெண்கள் விலைக்கு வாங்குகிற பொருள் என்று தானே அர்த்தம். அதுபோன்று ஆணைச் சொல்லவில்லையே. எழுதியவன் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து எழுதி இருந்தான் என்றால் சரி. பெண் பதிவிரதையாக இருக்க வேண்டுமென்று சொன்னவன் ஆண் சதிவிரதத்தோடு இருக்க வேண்டுமென்று சொல்லவில்லையே. நான் வள்ளுவனைக் குற்றம் சொல்லவில்லை. அவன் வாழ்ந்த காலம் பெண்ணடிமை மிகக் கொடுமையாக இருந்த காலம். அதற்கேற்றபடி எழுதி இருக்கிறார். அது இன்றைக்கு எப்படிப் பொருந்தக் கூடியதாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டிலே குறளுக்கு அய்யாதான் சான்றாக இன்று இருக்கிறவர். அவரே சொல்லட்டுமே என்று அய்யா அவர்கள் சொன்னதும், திருக்குறளார் அவர்கள் "ஆண்களைப் பற்றியும் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்" என்று சொல்லி, ஒரு குறளை "பிறர்மனை நோக்கா சான்றாண்மை" என்பதை எடுத்துக் காட்டினார்.

உடனே தந்தை பெரியார் அவர்கள் குறுக்கிட்டு "பிறன் மனை என்று சொன்னால் அவள் இன்னொருத்தன் சொத்து என்பதால் பார்க்கக் கூடாது என்று சொன்னாரே தவிர, கல்யாணமாகாத பெண்களை நோக்கக் கூடாது என்று சொல்லவில்லையே." திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்காட்டி இந்த அதிகாரத்திலுள்ள 10-குறளும் பெண்ணைப் பற்றித் தான் சொல்கிறதே தவிர, ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி ஒரு வரிகூட இல்லையே. அய்யா அவர்கள் எதையாவது எடுத்துக் காட்டினால் மன்னிப்போடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னார்கள். திருக்குறளார் ஒன்றும் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து பேசினார்.

பொதுவாகத் திருமணமென்றால் ஆண் - பெண்ணையோ பார்த்து ஏற்பாடு செய்வது கிடையாது. நீ பெண்ணுக்கு திருமணமென்றால் ஜாதகம் - ஜோசியம் - பொருத்தம் - நாள் - நட்சத்திரம் இவற்றைப் பார்க்கிறாய். நீ அன்னக்காவடி சீதையின் திருமணம் வசிஷ்டனை வைத்து ஜோசியம் பொருத்தம் பார்த்துச் செய்யப்பட்டது தானே. வசிஷ்டனை விட ஜோசியம் பொருத்தம் பார்க்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவனை வைத்துப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணத்தில் தான் சீதை இன்னொருவனுக்குச் சினையாகி கணவனால் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றாள். உண்மையாக நடக்கவில்லை என்றாலும், அவள் துன்பப்பட்டதாக எழுதி இருக்கின்றான். உண்மையாக நடந்தது என்று சொல்லவில்லை. இதற்காக எழுதிய கதையே இப்படி இருக்கிறது. ஜோசியம் பொருத்தம் இவை சக்தியுள்ளவையாக இருந்தால் இவ்வளவு (முண்டச்சி) விதவைகள் ஏன் இருக்கிறார்கள்? இதையெல்லாம் நம் மக்கள் சிந்திக்க வேண்டும். நம் இலக்கியங்கள், புலவர்கள் எல்லோருமே பொம்பளையைக் கெட்டுப் போனவள் என்பதற்கு 1000-சொற்கள் சொல்கிறான். ஆணைக் கெட்டுப் போனவன் என்று சொல்ல ஒரு சொல் கிடையாது.

மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கு உட்பட்டுச் செலவு செய்ய வேண்டும்; ஆடம்பரமான வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும். பிள்ளைகள் பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனிதன் ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் இந்தப் பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொள்வதால் தான். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிக்கவே அவன் வாழ்நாள் பூராவும் சரியாகி விடும். அவர்களைப் படிக்க வைக்க வேலை வாங்கிக் கொடுக்க, இதற்கே அவனுக்குச் சரியாகி விடும். கர்ப்பத்தைக் தடுக்காதே என்று சொல்கிறானே அவனெல்லாம் தீரன். லஞ்சம் வாங்குவதிலே! இயற்கையாக மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டுமானால் பிள்ளைக் குட்டிப் பெறுவதைக் கூடிய வரை குறைத்துக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கையான காரியங்களில் ஈடுபடக் கூடாது. கண்டிப்பாய்க் கோயில்களுக்குப் போகக் கூடாது. பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் வளர்ச்சி அடையாமல் போனதற்குக் காரணம், நாம் அவர்களை எதையும் செய்ய ஒட்டாமல் தட்டித் தட்டி அடக்கி வைத்திருப்பதேயாகும். 3.50 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்றால், 1.45 கோடி பெண்கள் அடிமைகள் தானே! அவர்களால் சமுதாயத்திற்கு எந்தப் பலனும் கிடைக்க முடியாமல் போய் விட்டது. ஜப்பானில் 100-க்கு 50-பேருக்குக் கணவன் இல்லை. அவர்கள் எல்லாம் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே! மலையாளத்திலே இன்றைக்கு அனேகம் பேருக்குக் கணவன் கிடையாது - அவர்களெல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

------------------------------------

18.08.1968 அன்று நடைபெற்ற கலியமூர்த்தி - இராசகுமாரி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 21.09.1968
...மேலும்

பெண்கள் சமையல் செய்யக் கூடாது! - பெரியார்


தாய்மார்களே! பெரியோர்களே! மண மக்களின் பெற்றோர்களே! தோழர்களே!

இந்நிகழ்ச்சியானது இதுவரை நம்மில் கல்யாணம் - விவாகம் - முகூர்த்தம் என்னும் பெயரால் நடைபெற்றுப் பெண்களை ஆண்களின் அடிமைகளாகவும், சொத்துகளாகவும் ஆக்கப்பட்டு வந்திருக்கிறது.

periyar 342பிறகுதான் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆண்களும் பகுத்தறிவு பெற்றுச் சிறந்த வாழ்வு வாழ வேண்டுமெனக் கருதிப் பழைய முறையினை மாற்றி, வாழ்க்கை ஒப்பந்த விழா என்னும் பெயரால் இம்முறையினைத் தோற்றுவித்து இதன்படி நடத்திக் கொண்டு வருகின்றோம். இம்முறையானது கடவுள், மத, சாஸ்திரங்களின் மீதுள்ள வெறுப்பாலோ, சிறுபான்மையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களின் மீது வெறுப்புக் கொண்டோ இந்த நிகழ்ச்சி முறை செய்யப்படுவது கிடையாது. சிலர் பார்ப்பனர்களின் மீது கொண்ட துவேஷத்தால் இது துவக்கப்பட்டது என்று நினைத்துப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அது தவறான பிரசாரமாகும்.

இது பெண்களின் விடுதலையைக் கருதியே ஏற்பாடு செய்து துவக்கப்பட்டதாகும்.

இந்நிகழ்ச்சிக்குச் சுயமரியாதைத் திருமணம் என்று பெயர் வரவேண்டிய அவசியம் என்னவென்றால், இதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும், மான உணர்ச்சி, சமத்துவம் அளிக்கப்படுகின்றன. ஆண்களுக்குப் பகுத்தறிவு இல்லை. இதன் மூலம் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். அறிவைப் பயன்படுத்தாமலிருப்பதற்குக் காரணம் மானம், மரியாதை இல்லாதது தான். அதுபோலவே பெண்களும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அறிவற்று மானம் மரியாதையற்றிருந்தார்கள். இந்த இருபாலரிடமும் இருந்து வந்த அறிவற்ற தன்மை - மானம் மரியாதை அற்ற தன்மையை நீக்குவதால் தான் இந்நிகழ்ச்சியை சுயமரியாதைத் திருமணம் என்கிறோம்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறியால் தான் வித்தியாசமே தவிர, மற்றப்படி அறிவு, வலிவு, பிறப்பு இவற்றில் எல்லாம் இருவரும் சமமானவர்களே ஆவார்கள். மனித சமுதாயத்தில் சோறு சமைப்பதற்கும், வீட்டு வேலைகளை செய்வதற்கும், குட்டி போடுவதற்கும், தன் புருஷனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்வதற்கும், என்றாக்கி அவர்களைக் கல்வி கற்காமலும் வைப்பதே இதுவரை இருந்த முறைகளாகும்.

இந்நிகழ்ச்சியானது இதுவரை சட்ட சம்மதமில்லாத நிகழ்ச்சியாக இருந்து வந்தது என்றாலும், மக்களிடையே பல்லாயிரக்கணக்கில் நடைபெற்று வந்து கொண்டுதானிருந்தது. இவற்றில் சில வழக்கு மன்றங்கள் சென்று இது செல்லுபடியாகாத திருமணம் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்ட போதும், மக்கள் அதனைப் பற்றி இலட்சியம் செய்யாமல் பலப்பல திருமணங்களை இம்முறையில் நடத்தியே வந்திருக்கின்றனர். இப்போது அமைந்துள்ள (தி.மு.க) ஆட்சியானது மக்கள் ஆட்சியானதாலும், பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதாலும் இம்முறையைச் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் செய்து விட்டார்கள்.

இதற்கு முன்னும் இதுபோன்ற முறையில் தான் அரசாங்கத்தால் பதிவுத் திருமணம் என்கிற பெயரால் திருமணம் நடந்து கொண்டிருந்தது. பதிவுத் திருமணத்தில் திருமணம் செய்து கொள்கிற ஆணும், பெண்ணும் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் போய், 'நான் இவரை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன்' என்று பெண்ணும், 'நான் இப்பெண்ணை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று ஆணும் உறுதி கூறிக் கையொப்பமிடுவார்கள். இம்முறையாவது கணவன், மனைவி என்பதை வலியுறுத்தக் கூடியதே ஆகும்.

ஆனால், நாம் செய்கின்ற இம்முறையில் கணவன் - மனைவி என்பது கிடையாது. இருவருக்கும் சமஅந்தஸ்துள்ள நண்பர்கள் என்பதை வலியுறுத்துகிறோம். இதில் ஒருவருக்கொருவர் அடிமை என்கின்ற தன்மை இல்லை.

நான் பொதுத் தொண்டையே முக்கியமாகக் கருதுபவன் ஆனதனாலே, நம் மனித சமுதாயம் முன்னேற வேண்டும் என்பவன் ஆனதனாலே, பழைமைகளில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் ஆனதனாலே என் கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு, அதன்படி மனிதன் முன்னேற வேண்டுமென்று நினைப்பவனாவேன்.

புலவர் அவர்கள் நேற்று, சுமார் அய்ந்து ஆண்டுகளுக்கு முன் நம் கண் முன்னிருந்த பாரதிதாசன் அவர்களின் கதையை எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்கும்போது எனக்கே மிக ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தெளிவாக உண்மையை எடுத்துக் கூறி இருக்கிறார். நமக்கு என்னென்ன தேவை என்பதை எடுத்து விளக்கி இருக்கிறார். இதையெல்லாம் நம் மக்கள் படித்துத் தெளிவடைய வேண்டும். நம் உண்மை நிலையை உணர வேண்டும், திருந்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு நமக்கு என்ன வேண்டுமென்பது வள்ளுவனுக்கு எப்படித் தெரியும்? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே இருந்தவனுக்கு மனிதன் எப்படி ஆவான் என்பது எப்படித் தெரியும்?

அதற்கு முன் பெண்களைப் பார்த்தாலே அவள் அணிந்திருக்கும் நகை - உடைகளை வைத்து, அவள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்று சொல்ல முடியும். இப்போது யாரைப் பார்த்தாலும் ஒன்றாகவே தோன்றுகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு வளர்ச்சியடைந்து விட்டது.

தாலி எதற்காகக் கட்டப்படுகிறது என்பதை நம் பெண்கள் இன்னும் உணரவில்லை. ராஜா மனைவியாக இருந்தாலும், பெரிய ஜமீன்தார் மனைவி - பணக்காரர் மனைவி என யாராக இருந்தாலும், அவன் செத்தவுடன் அறுப்பதற்காகத் தானே அந்தப் பெண்ணை முண்டச்சியாக்கத் தானே பயன்படுகிறது. வேறு எதற்குத் தாலி பயன்படுகிறது?

100-வருடங்களுக்கு முன் வரை உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்து வந்தது. அது மதப்படி ஒரு சடங்காகச் செய்யப்பட்டு வந்தது. வெள்ளைக்காரன் வந்து அது கொலைக் குற்றம் என்று ஆக்கியபின் தான் நின்றது. இப்போது என்ன சொல்கிறோம், இப்படி ஒரு காட்டுமிராண்டிக் காலமா இருந்தது? என்று எண்ணுகின்றோம், ஆச்சரியப்படுகின்றோம். அதுபோல் தான் நாளைக்கு வரும் பெண்கள் நினைப்பார்கள். பெண்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் கூடவா இருந்தது என்று!

நாட்டிலே காட்டுமிராண்டித் தன்மைகள், கொடுமைகள் நிறைந்து விட்டன. பார்ப்பான் வந்தான், அவன் யோசனை சொல்பவனாக ஆகிவிட்டான்.

பெண்கள் ஆண்களின் சொத்துகள். அவன் சொல்படி நடந்து கொள்ள வேண்டியவர்கள் என்றும் ஆக்கி விட்டான். நம் இலக்கியம், புராணம் இவற்றில் வரும் பெண்களை அடிமைகளாகவே காட்டி விட்டான். கண்ணகி - அரிச்சந்திரன் - திரவுபதி இந்தக் கதைகள், பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும், கணவன் சொல்படியே நடந்து கொள்ள வேண்டும், அதுதான் பெண்கள் கற்புடையவர்கள் என்பதற்கு இலக்கணம். இதுபோன்று நடக்கிற பெண்கள் தான் மோட்சத்திற்குப் போக முடியும் என்று எழுதி வைத்து விட்டான்.

இந்தக் கதை எழுதினவனெல்லாம் முட்டாள் என்று கூடக் கருத முடியவில்லை. மகா அயோக்கியன்கள் என்று தான் கருத வேண்டி இருக்கிறது!

அந்தக் காலத்து முட்டாள் கதை எழுதினான் என்றால், இந்தக் காலத்து முட்டாள் அவற்றுக்குச் சிலை வைக்கிறான்.

இந்த நாடு - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து விலகாமல் மக்களைச் சிந்திக்க விடாமல் பாதுகாத்து, முட்டாள்களாக்கவே பாடுபடுகின்றார்கள். அதனால் தான் நம் நாடு இன்னமும் முன்னேற்றமடையாமல் காட்டுமிராண்டி நிலையிலேயே இருக்கின்றது. தமிழன் பண்பாடு - தமிழின நன்மை - தமிழின வாழ்வு என்று போனால், இன்னும் 2,000 ஆண்டுகளுக்குப் பின் தானே செல்வோம். ஓர் அடி கூட முன்னே செல்ல முடியாதே!

தனக்கு வேண்டிய கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய உரிமை கூட பெண்களுக்கு இல்லை என்றால், இது என்ன சுதந்திரம்? ஆறறிவுள்ள மனிதனுக்கு இதுதானா பயன்? பெரிய குறை - பெண்கள் அடிமையாக இருந்ததற்குக் காரணம் பெண்களுக்குக் கல்வி அறிவு, படிப்பு வாசனை இல்லாமல் செய்ததே யாகும். பெண்கள் படித்தாலே கெட்டு விடுவார்கள் என்று ஒரு தவறான கருத்தே நீண்ட காலமாக மக்களிடமிருந்து வந்தது. எதுவரை இருந்தது என்றால், வெள்ளைக்காரன் வந்து 150-வருடம் வரை நம்மை ஆட்சி செய்தும், பெண்கள் படிக்கவேயில்லை. 30, 40-ஆண்டுகளுக்கு முன்பு நம் உணர்ச்சி கிளம்பிய பிறகுதான் பெண்கள் படிக்கவே ஆரம்பித்தனர்.

பெண்கள் உருப்படியாக வேண்டுமானால், இத்திருமண முறையையே உடன்கட்டை ஏறுதல் போல் சட்டம் கிரிமினல் குற்றமாக்க வேண்டும். அப்போது தான் பெண்கள் சமுதாயம் சுதந்திரம் பெற்று சமுதாயத்திற்குப் பயன்பட முடியும்.

இப்போது அரசாங்கத்தில் பெண்களின் திருமண வயது வரம்பை 21-க்கு உயர்த்திச் சட்டம் கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம், 21-வயதில் திருமணம் செய்தால் மூன்று குழந்தைகள் குறையும் என்பதாகும். நாம் சொல்வது அது மட்டுமல்ல, பெண்கள் அந்த வயதுக்குள் நல்ல கல்வி கற்று, தாங்களே உத்தியோகம், தொழில் செய்யும் அளவுக்கு அறிவு பெற்று விடுவர். அதன் பின் தனக்குத் தேவையான ஒத்த உரிமையுள்ள, தனக்கு ஏற்ற துணைவனைத் தாங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளக் கூடிய தன்மையும் பெற்று விடுவார்கள் என்பதுதான்.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். அதோடு ஒரு தொழிலையும் கூடக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் வாழ்வை நடத்தக் கூடிய வருவாய் கிடைக்கும்படியான நிலைமை பெற வேண்டும். பெண்கள் கெட்டுப் போவார்கள் என்ற எண்ணமே பெற்றோர்களுக்கு இருக்கக் கூடாது.

பெண்கள் இனி சமையல் செய்யக் கூடாது. பின் எப்படி என்றால், ஹோட்டலுக்கு, ரெஸ்டாரென்ட்டுக்குப் போய் தங்கள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஆரம்பித்தால் நல்ல ரெஸ்டாரன்ட்டுகளும் ஏற்பட்டு விடும். வெளிநாடுகளில் எல்லாம் அப்படித்தான்! ஆணும், பெண்ணும் தங்கள் தங்கள் வேலைக்குச் சென்று விடுவார்கள். தங்குவதற்கு ஒரு அறையையே வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் ஒரு பீரோ, கட்டில், இரண்டு நாற்காலிகள் இவை தான் இருக்கும். பொதுவான குளியலறையும் - கக்கூசும் இருக்கும். இரவு தூங்குவார்கள். தேவைக்குப் பொது குளியலறை கக்கூசைப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் ருசியான உணவு கிடைக்கிறது; வீட்டு வாடகை குறைகிறது; நேரம் மிச்சமாகிறது; உணவிற்காகச் செலவிடும் பணமும் குறைகிறது.

இன்னும் கொஞ்ச நாள் போனால், பொது உணவு விடுதிகளில் உண்ணும் முறை தான் இங்கு வரும். இதுதான் சுலபமானதாகும்.

நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.

மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்கம் ஆனதோடு - திருமணங்கள் மதத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால், கடவுளோடு சம்பந்தப்படுத்தி விட்டதால் இதனைவிட துணிவின்றி பின்பற்றிக் கொண்டிருகின்றார்.

வாழ்த்துவது என்பது ஒரு சம்பிரதாயப் பழக்கம் என்பதைத் தவிர, இதில் எந்தப் பொருளோ, பலனோ இல்லை. வசைமொழிகளுக்கு என்ன பலனோ அதே பலன்தான் இதற்கும் என்பதை உணர வேண்டும். அறிவோடு - சிக்கனமாக வாழ வேண்டும். வரவிற்கு மேல் செலவிட்டுப் பிறர் கையை எதிர்பார்ப்பதும், ஒழுக்கக் கேடான காரியங்களுக்கு இடம் கொடுப்பதுமான காரியங்கள் இன்றி வரவிற்குள் செலவிட்டு, கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும்.

இறுதியாகக் குழந்தைகள் அதிகம் பெறுவது பெரும் கேடாகும். இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசாங்கமே இதனை உணர்ந்து, பல திட்டங்களைப் போட்டு அதிகக் குழந்தைகள் பெறாமல் தடுக்க மருத்துவ வசதிகள் செய்திருக்கின்றது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகக் குழந்தைகள் பெறுவதுதான் அவன் தன்னையும் தியாகம் செய்து, தனது மனைவியையும் தியாகம் செய்து ஒழுக்கக் கேடான காரியங்களிலும் ஈடுபடச் செய்கிறது. ஓரளவாவது சுதந்திரத்தோடு, பிறர் கையை எதிர்பார்க்காமல், கவலையற்று வாழ வேண்டுமானால் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது.

இதைவிட இன்னும் பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்தால், அரசாங்கமே குழந்தை வளர்ப்தைத் தானே ஏற்றுக் கொள்ளும். ரஷ்யா போன்ற நாடுகளில் அரசாங்கமே குழந்தைகளை வளர்க்கின்றன. நல்ல சுகாதாரத்தோடு 15-வயது வரை வளர்கின்றன.

நான் போய்க் குழந்தைகள் விடுதியைப் பார்க்கப் போன போது, எனது காலில் இருந்த பூட்சைக் கழற்றி விட்டு, அவர்கள் ஒரு பூட்சு கொடுத்தார்கள். என் உடையின் மேல் ஓர் அங்கியை அணிவித்தார்கள். கைகளுக்கு உறை மாட்டினார்கள்.

அதன் பின்தான் விடுதிக்குள் அனுமதித்தார்கள். உள்ளே போனதும் குழந்தைகளைத் தொடக் கூடாது. பார்த்துச் சிரிக்கலாம் என்று சொன்னார்கள். எனக்கு மட்டுமல்ல, குழந்தைகளின் தாய், தகப்பனாக இருந்தாலும் இப்படித்தான்! இதனால் நோய்க் கிருமிகள் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கின்றனர்.

தாய், தகப்பனை விட விஞ்ஞானத்தோடு குழந்தைகளை வளர்க்கின்றனர். அதனால் மக்கள் கவலையற்ற வாழ்வு வாழ்கின்றனர்.

நம்மால் குழந்தைகளை அவ்வளவு நல்ல முறையில் வளர்க்க முடியாது. அவ்வளவு ஆரோக்கியத்தோடு வளர்க்கின்றார்கள்.

மேலும் மணமக்கள் மூட நம்பிக்கையான கோயில் - குளம் - பண்டிகை - உற்சவம் இவற்றுக்குச் செல்லக் கூடாது. மிருக உணர்ச்சியைத் தூண்டும் சினிமாவிற்குச் செல்லக் கூடாது. வேண்டுமானால், கண்காட்சிகளுக்குச் சென்று பெரிய பெரிய இயந்திரங்கள் வேலை செய்யும் நெய்வேலி போன்ற நகரங்களுக்குச் சென்று அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்துத் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

-------------------------

09.02.1968 அன்று தஞ்சை - லால்குடி வாழ்க்கை ஒப்பந்த விழாக்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 20.02.1968
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்