/* up Facebook

Dec 21, 2017

புத்தக விமர்சனம் "இருள் மிதக்கும் பொய்கை" - உமா (ஜேர்மனி)


இருளைத் தன் உற்ற தோழியாக அரவணைத்துக்கொண்டு தர்மினியின் ‘இருள் மிதக்கும் பொய்கை’ என்ற தொகுப்பிலுள்ள 51 கவிதைகளும் நேர்த்திமிக்க வலிய சொற்களினூடாகத் தனியொருத்தியின் அகம் சார்ந்த தேடல்கள், வாழ்வுச்சிக்கல்கள், ஏக்கங்கள், இயற்கை மீதான ஈர்ப்பு, புறம் சார்ந்த கோபங்கள் என்பவற்றைத் தொட்டு நிற்கின்றன.

பெண் விடுதலைக்கான அறை கூவல்களோ, சமூகவிடுதலை நோக்கிய முன்னெடுப்புகளோ இக்கவிதைகளில் இல்லை. அவை தான் சார்ந்த வாழ்வியலை, இயற்கையின் வார்ப்பை, மானுடத்தின் நேசிப்புடன் ஸ்பரிசிக்கின்றன. தர்மினியின் முதலாவது தொகுப்பான ‘சாவுகளால் பிரபலமான ஊர்’ கவிதைகளுடன் ஒப்பிடுகையில் இக்கவிதைகளில் மொழியின் செறிவு ,கருப்பொருட்களை அழகான கவிதைகளாக உருப்பெறச் செய்கின்றன.

இலக்கியத்திலும்  நாளாந்த வாழ்விலும் பொதுவாகவே, நேர்மறை- எதிர்மறை நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்கும் படிமங்களைத் தர்மினியின் கவிதை வரிகள் புரட்டிப்போடுகின்றன. ஆங்கில இலக்கிய வர்ணனை மரபில் லைட்மோடிவ்( Leitmotiv) என்ற குறியீட்டு வடிவத்தை அதிகமான கவிதைகளில் காணக்கூடியதாக இருக்கிறது.

இரவு, இருட்டு, கனவு போன்ற படிமங்கள் பெரும்பாலான கவிதைகளின் கருப்பொருளாக அமைகின்றன. பொதுவாகத் துயரம், அபாயம், கெட்டவை என்பவற்றைக் குறித்து நிற்கும் இருள் - இரவு - கருமை என்பவை ஆளுமைமிக்க, நம்பிக்கை தரும் குறியீட்டுப் படிமங்களாக இங்கு பார்க்கப்படுகின்றது. இருளை வாழ்தல், இப்போது முடிகிறது இரவு, இருளோடு, இருளைத்தரிசிக்க , இரவோடு, இருள் மிதக்கும் பொய்கை போன்ற கவிதைகள் இக்குறியீடுகளைக் கொண்டமைந்துள்ளன.  எமது சமூகக்தில்; இரவு- இருட்டு என்பவை ஒரு பெண்ணிற்கு அச்சம் தரக்கூடிய ஆபத்து நிறைந்த பொழுதாகவே காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. பெண்ணின் கண்ணீர்க் கதைகளை எழுதும் இரவுப் பொழுதுகள், தனிமையின் சுதந்திரவெளியில் அவள் கனவுகளையும் வாழ வைக்கின்றன.

அந்த உன்னதக் கணத்தின் சாட்சியாக ‘இப்போது முடிகிறது இரவு’ எனும் கவிதையைக் கொள்ளலாம்.


மாலை மெல்ல மெல்ல முடிந்து இரவு கனிந்து உருகுகின்றது

கரும்வேலி படர்ந்திருக்க இருள் அளைந்து விளையாடி

தனிமை பருகுகிறாள்

தன்னைத்தின்னும் கருமையினுள் கரைய வேண்டுமாம்

இரவு கடுஞ் சத்தத்துடன் இவளைத்துரத்துகிறது

இப்போது முடிகிறது இரவு

விடிந்துவிட்ட இந்த நாளில் என்ன செய்வது?

இவள் ஒளிந்து கொள்ள

இருளுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?


இரவின் ஸ்தூலமான நிசப்தத்தையும்  ஸ்திரத்தன்மையையும் கவிதா மொழிக்குள் அடுக்க முனைகையில் காலகாலமாய் நேர்மறையான விடியல், புத்துணர்வு என்பவற்றைக் குறிக்கும் படிமங்கள் எதிர் மறையான மொழியுருவாக்கம் செய்யப்படுகின்றன.

‘இருளை வாழ்தல்’  என்ற கவிதையில்…


தன்னைப்பருகச் சொல்கிறது இரவு

உறங்கி எழுவதற்குள்

ஒரு காலை விடிந்து விடுமெனப் பயமாயிருக்கிறது.இதே போன்று ‘சூரியச் செருக்கு' எனும் கவிதையிலும் இருளின் ரம்மியத்தை அழிக்கும் அதிகார விம்பமாகச் சூரியன் வருகிறது.


இறுக்கிக் கண்கள் மூடி

மெது மெதுவாய் அமைதி

இருட் கருமையின்

பெருங்கருணை உறக்கம்!

சூரியச் செருக்கு

இரவைக் கொன்றது!

குறித்த சொற்களை, படிமங்களைக் கொண்டு நிகழ்வுகளைக் கவிதைக்குள் அடக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு மொழியை, தர்மினி மறுதலித்துத் தொடர்ச்சியான இப்படிம மாற்றங்களினூடாகச் சமூகத் தார்ப்பரியங்களை (social prejudices) மாற்றியமைக்கும் புதிய சொல்லாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதன் மூலம் ஒடுக்கப்படுகின்ற, நிராகரிக்கப்படுகின்ற அடையாளங்கள் இலாவகமாக கவிதை மொழிக்குள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் இந்த சமூகக்கட்டமைப்பின் மானுட ஏற்றத்தாழ்வுகளையும் மனித நேசிப்புடன் விசாரணை செய்கின்றன. இயற்கையின் வனப்பை வர்ணிக்கும் போதும், தன் வாழ்வியலில் கற்றறிந்த சமய சித்தாந்தங்களைக் கட்டுடைக்கும் போதும் அடிநாதமாக நசிக்கப்படுகின்ற மனிதக் குரல்களே ஒலிக்கின்றன.
விவிலியத்தில் கூறப்பட்டிருக்கும் கதைகளை மையமாகக் கொண்டு சமகால அநீதிகள், இலங்கையின் யுத்தச்சூழல் தந்த அனுபவங்கள், பெண் மீதான ஒடுக்குமுறை என்பன பல கோணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

‘மழையும் நெருப்பும்' என்ற கவிதையில் உலகப்பேரழிவு (ஜெனசிஸ்) வெள்ளப் பெருக்கத்தின் போது நோவாவினால் கட்டப்பட்ட படகின் சித்திரத்துடன் இலங்கையில் நடந்து முடிந்த யுத்தச் சம்பவங்கள் ஒப்பீடு செய்யப்படுகின்றன. ஜெனஸிசில் குறிப்பிடப்படும் வெள்ளம் குண்டுத் தாக்குதல்களில் எழுந்த நெருப்பாக உருமாறுகிறது. நோவாவின் குடும்பத்தினரையும், உலகத்தின் அனைத்து உயிரினங்களிலும் ஒவ்வொரு சோடியையும், கிராமத்தில் எஞ்சியிருந்த அனைத்தையும் படகில் ஏற்றி 150 நாட்கள் கடலில் பயணம் செய்கிறது நோவாவின் படகு. இறுதியாக அரராத் மலைச்சாரலில் கரை சேர்கிறது. அப்போது வெள்ளப்பெருக்கு வற்றும் நிலைக்கு வருகின்றது. கிராமத்தின் பாதுகாப்புப் பற்றி அறிந்து கொள்வதற்கு நோவாவினால் அனுப்பப்பட்ட காகம் திரும்பி வரவில்லை. இறுதியாக அனுப்பப்பட்ட புறா மட்டும் நீண்ட நாட்களிற்குப் பின் ஒலிவ் கிளையை அலகில் ஏந்தி வந்து சேர்கிறது.

வானம் நெருப்பைப் பொழிந்ததைப் போல

நீரையும் பொழிகிறது

நோவாவின் படகில் தப்பித்த ஜீவராசிகள்

உலகைப் புதிதாக்கினர் என்றானாம்.

இனி;

நீரால் உலகை அழிக்க மாட்டேன் என்பதும் ஒப்பந்தமாம்

நோவா விட்ட காகம் திரும்புமா? திரும்பாதா?

……..

கடலில் கப்பல் நிற்கிறது.

நிர்க்கதியற்று நின்ற மக்களின் துயர் தீர்க்க நோவாவிடம் திரும்பி வராத காகம் திரும்புமா என்ற ஆதங்கம் குறியீடாக முன்வைக்கப்படுகின்றது.

ஒப்பந்தத்தில் சமரசம் செய்ய வழியில்லை எனும் கவிதை விவிலியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்மனசாக இருந்த சாத்தானின் சொர்க்கத்திலிருந்து பூமி நோக்கிய வீழ்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

டயரின் மன்னன் என்று கருதப்படும லுசிபர்; தனது அழகு, அறிவு, ஆளுமை என்பவற்றால் கவரப்பட்டுக் கடவுளிற்கு உரித்தான மரியாதையையும் மகிமையையும் அடைய ஆசைப்பட்டுக் கிளர்ச்சி செய்தாரெனக் குற்றம் சாட்டப்பட்டுச் சாத்தானாகப் பூமிக்கு வீழ்த்தப்பட்டார்.

திரும்பச் சொர்க்கத்தில் சேர்க்காத

கடவுளின் ஒப்பந்தத்தில்

சமரசம் செய்ய வழியில்லை

நிலமிறக்கி 

இக்குட்டிச் சம்மனசைச் சாத்தானாக்கிய

அனைவருக்கும் எச்சரிக்கை!

தர்மினியின் இவ்வெச்சரிக்கை பூமியில் நிகழ்த்தப்படும் அனைத்து அநீதிகளையும் நோக்கியெழும் கண்டனக்குரலாக ஒலிக்கின்றது.

மதநூல்களும் வரலாறுகளும், மனித இனத்தின் வீழ்ச்சிக்கும் சமூகத்தில் இழைக்கப்படும் அனைத்துத் தவறுகளுக்கும் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகிறாள். ஏதேன் பூங்காவில் விலக்கப்பட்ட கனிகளை உண்ணத் துாண்டியமைக்காக ஏவாள் மீதே முழுக்குற்றமும் சுமத்தப்பட்டது. ‘விலக்கப்பட்ட கனி'  , ‘ பாவம்' ஆகிய கவிதைகளில் ஏவாளின் பாத்திரம் இரு கோணங்களில் உருவமைக்கப்பட்டுள்ளது...

‘விலக்கப்பட்ட கனி’ கவிதையில்...

பாதி அப்பிளையாவது

தின்னத் தந்திடுவாள்

ஆதாம் ஒளிந்து கொண்டான்

அவளோ

முழுப்பாவத்தையும்

தானே கட்டிக்கொள்வதாக

ஒப்பந்தத்தோடு அவனையழைக்கிறாள்

அவள் கைகளில் விலக்கப்பட்ட கனி

முதற்கவிதைக்கு மாறாக ஏமாற்றப்பட்டவளான ஏவாள் தப்பித்துச் சென்ற ஆதாமை அழைத்துக் கனியின் பாதியையாவது கொடுக்க முனைகிறாள்.  ‘பாவம்' கவிதையில்...


வெய்யிற் சூட்டில்

தகிப்பதாய் நினைத்த என்னுடல்

அப்பாம்பின் தழுவலில் கிறங்கி

அப்பிளைத் தின்னச் சொன்னது

மிகுதியை

கூப்பிட்டு ஆதாமிடம் கொடுத்தேன்.

கவிதைகளைச் சொல்வதற்கு தர்மினியால் பயன்படுத்தப்படடிருக்கும் இலக்கிய நவீன மொழிக் கூறுகள் (Stylistic devices)

கவிதைகளின் கருத்துச்  செழுமைக்கும், சம்பவங்களின் தாக்கங்களிற்கு அழுத்தம் கொடுப்பவையானவையாகவும், அவை மறைபொருளாக இயங்கி அடியாளத்தில் பொதிந்திருக்கும் மையக்கருத்தோட்டத்தைக் கண்டறியும் தெரிவை வாசகர்களின் சுயதேடலிற்கு விடவும் வாய்ப்பளிக்கின்றன.இந்த அணுகுமுறைக்கான சில உதாரணங்களைக் கீழே குறிப்பிடுகின்றேன்.

1995 ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி என்ற கவிதை ‘ஜயசிக்குறு' இராணுவ நடவடிக்கையின் போது வடமாகாணத்திலிருந்து தமிழ்மக்களின் வெளியேற்றத்தைப் பேசும் அதேசமயம் 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் பலவந்தமாக முஸ்லீம் மக்கள் வெளியேற்றபட்டதையும் நினைவுகூருகின்றது. வரலாற்றில் சில விடயங்கள் போற்றப்படப்படுவதும், சில சம்பவங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதையும் மறுதலிக்கின்றது இக்கவிதை.‘Parallelisim’

என்ற மொழி உத்தியின் பயன்பாடாக ‘அதே’ என்ற சொல் தொடர்ச்சியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த உபயோகம் இந்நடவடிக்கைகளினதும் மூர்க்கத்தைச் சமதளத்தில வைத்து நோக்குகின்றது.

அதே நாட்கள்

அதே மழை

அதே வீதி

அதே நாவற்குழிப்பாலம்

அதே சாவகச்சேரி

அதே கிளாலி

அதே கிளிநொச்சி

அதே பசி

அதே அந்தரிப்பு...

நாங்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சனங்கள்.

இயற்கையின் வார்ப்புகளைக் கொண்டு சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண்ணொடுக்குமுறை, பெண்ணுடலரசியல் எனும் ஆழமான விடயங்களை இலகுவாக வெளிப்படுத்தப்படுகின்றன. ‘Pesonification’

என்ற குறியீட்டு வடிவம் மூலம் உயிரற்ற பொருட்கள் இங்கே, மனிதப் பண்புகள் கொண்டவையாக உருவகப்படுத்தப்படுகின்றன.

பயணம், கரை, பூவண்ணம், மணற்பெண், பாறையும் பனியும் மற்றும் இலையின் பிழை எனும் கவிதைகள் இந்த வகைப்படுத்தல்களிற்குள் அடங்குகின்றன.

…….

‘கரை’ என்ற கவிதை இவ்வாறாக…

அலைகளை அனுப்பிவிட்டு

அமைதியானது நடுக்கடல்.


மோதிய அலைகளின் சிதைவுகளில்

கரைந்து கொண்டிருப்பது

நான்.


கடலுக்கென்ன?

அது ஆழமாய்

அழகாய்

பச்சையாய்

நீலமாய்

மௌனமாய்

கொந்தளிப்பாய்

அவ்வப்போது தோற்றமளிக்கின்றது.

கரையில்

ஒரு போதும் இல்லாத முனகல்களோடு

தேய்வதென் காலம்.

பெண்ணின் பருவ மாற்றத்தோடு பெண்ணுடல் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுச் சமூகத்திற்கேற்ற நுகர்வுப் பண்டமாக மாற்றப்படுகின்றது. யுவதியாய் கிளர்ச்சியேற்படுத்தும் அவளது முலைகள் முதிர்ச்சியின் பிற்பாடு புறக்கணிக்கப்பட்டுப் பெறுமதியற்றதாய் கட்டமைக்கப்படுகின்றது. இந்த சமூகநோக்கு, பெண்களின் உளவியலில் பெரும்பாதிப்பை உண்டாக்குகின்றது. அவள் தன்னனைத்தானே தாழ்த்திக்கொள்ள முனைகிறாள்.

‘மணற்பெண்’ கவிதை மணல்மேட்டின் அழிவைப் பெண்ணுடல் சார்ந்த இந்த உளவியலோடு பொருத்திப் பார்க்கின்றது.

என் உதடுகளின் திட்டு இப்போது சரிகிறது

மார்புகளின் மேடு தளர்கிறது

வயிறு சிதைந்து போகிறது

கால்கள் துவள விரல்கள் அழிகின்றன

நான் மெல்ல மெல்ல இல்லாமல் போகின்றேன்

உதிர்ந்து கொண்டிருக்கும் துகள்களின் முடிவில்

எதுவாயிருப்பேன்?

 என்ற கேள்வி அவளது இருப்பை முன்னிட்டதாகின்றது.

‘இலையின் பிழை’ கவிதை ஆதிக்கத்தின் அனைத்து அதிகார வடிவங்களிற்கும் அடிபணிதலைச் சாடி நிற்கின்றது.


கிளைகளை அசைப்பதும்

இலைகளை உதிர்ப்பதும்

காற்றின் கலை!

மனங்கனிந்தே வீழ்வது

இலையின் பிழை.

குடும்ப வாழ்வில் ஆண்- பெண் பாத்திரம், அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஆண்களின் உத்திகள், பாலியல் தேவைகளிற்கு மாத்திரம் பெண்களை அணுகுதல் போன்றவை சாதாரண வாழ்வு அனுபவங்களுடனான நாட்குறிப்புகள் போல் வெளிப்படுத்துவது தர்மினியின்  கவிதைகளின் ஒரு அம்சம்.

‘சாவுகளால் பிரபலமான ஊர்' தொகுப்பில் வெளியான ' தொனி' போன்ற கவிதையைப் போலொன்று ‘குரல்கள்'.

தலையை விரிச்சுப் போட்டு

பேய் மாதிரிப் படுத்திருக்கிறாய் எழும்பு

நேற்றிரவு

ஏஞ்சலைப் போலிருக்கிறாய் கொஞ்சிய குரல்தானது

ஒன்றின் மேலொன்றாய்

உயர்த்திய தலையணைக்கடியில்

நசிபட்டுப் போன வார்த்தைகள் எக்கச்சக்கம். 

புகலிட வாழ்வின்; அந்நியச் சூழலில் வாழ முற்படுகையில், தாம் வாழும் நாட்டில், இயந்திர வாழ்வில், நாட்களைத் தொலைத்து,  சொந்த நாட்டு ஞாபகங்களுடனான ஏக்கங்களுடன், அடையாளங்களைத் தொலைத்து ஒன்றிலும் ஒட்ட முடியாது கழியும் நாட்கள் என்பவற்றை, வீடென்பது என் ஞாபகங்கள், பனிக்காலச்சோம்பல், இனியொரு காட்சியில்லை, என் நாவு பிளந்தது, சத்தமில்லாத மழை, நாட்களைக் கழித்தல் எனும் கவிதைகள் பேசுகின்றன.

யுத்தத்தின் போது தாம் குடியிருந்த வீடு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அழிந்தும், மீளக்கட்டியெழுப்பப்பட்டும், பின் முற்றாக அழிக்கப்பட்ட போதும் வீடுபற்றின நினைவுகள் அழியாது பசுமையாக நிலைத்திருப்பதை…


கோடை விடுமுறைக்கு வீடு போகவில்லையா?

நட்புகள் விசாரணை.

அங்கிருக்கும் ஊரில் எங்கிருக்கிறது என் வீடு?

வீடென்பது 

என் ஞாபகங்கள்.

அதேவேளை பாதுகாப்பாக வாழ ஸ்திரமான வீடிருந்தும் சலிப்பாக கழியும் நாட்களை...

தேய்ந்து

கறுக்கத் தொடங்கியது நாள். 
அங்கங்கே அலைந்த மனிதர்கள்

வீடு நுழைகின்றனர்.

தனித்த வெளி

என் கதவினுாடு தெரிகிறது.


இனியொரு காட்சியில்லை பல்கனியில்.

கருமென்ற வீட்டினுள் ஓடப்போகின்றேன்

இனியொரு காட்சியில்லை.

இயற்கையை இரசித்தலும், அதனுடானான எமது ஒட்டுதலும் கூட, சொந்தத் தேசத்திலும், அந்நியச் சூழலிலும் எவ்வாறு மாறுபாடான உணர்வுகளை ஏற்டுத்துகின்றது என்பதன் பிரதிபலிப்பாய்…மழைச்சத்தத்தின் வரிகள்.


முன்னொரு காலம்

மழை சத்தமிடுவதைக் கேட்டேன்

......................

மழைக்குதியோசை

நடுக்கூரையொழுக

டப் .... தொப்.... டப் . . தொப் சட்டியிலும் சத்தம்….

கூதலும் சத்தமுமாக மழை... 


என்பதாகவும் மறுவிதமாக,

கதவைத் தாளிட்டு பூட்டி

திரைகள் இழுத்து

மூடிச்சாத்திய சன்னல்களுடன்

உள்ளே என் வாசம்

மின்னி ஒரு வெளிச்சம்

என் முன் விழ

திரை விலக்கி வானம் பார்த்தால்

மழைக் கயிறுகள்

மண்ணில்

கரைந்து கொண்டிருந்தன.

.....................

எனச் ‘சத்தமில்லாத மழை’யில் வரும் வரிகளும் விளங்குகின்றன.

கலாசாரம் என்ற வரையறைக்குள் நாம்  வளர்க்கப்படுவதன் விளைவாக, தனி மனிதச் சுதந்திரமும், அவர்கள் சக உறவுகள் மீது அன்பை வெளிப்படுத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டே வருகின்றது.

தமக்ககுத் தாமே போலித்தனமான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒரு சமூகத்திலிருந்து சற்றுச் சுதந்தரமான வெளியைத் தரிசிக்கும் போது, சகஜமாகவும் இலேசான மனநிலையுடனும் மனிதர்களுடன் உறவுகொள்ள முடிகிறது.

தன் சொந்த மண்ணில் அனுபவித்தவை, இழந்தவை என nostaligic

(பழையவற்றை நினைத்தல்) தன்மையுடன் நினைவு படுத்தகையில் தன் தாயைப் பிரிந்து வருகையில் தாய்க்குக் கொடுக்காத முத்தத்திற்காக வருந்துகிறார் தர்மினி. அதேவேளை, ரயில் பயணத்தில் இயல்பாக ஒரு ஆணிடமிருந்து கிடைத்த முத்தங்களைப் பற்றி இப்படி நினைவுகொள்கிறார்...

முகம் மறந்துவிட்டது

பெயர் கேட்டறியவில்லை

இரு முத்தங்கள் மட்டும்

அத்தருணத்தின் நினைவாக

என்னுடன் பயணிக்கின்றன

கவிதைக்குள் மொழியை நேர்த்தியாக கையாளும் தர்மினினியின் சில கவிதைகளில் தேவைக்கதிகமாகச் சொற்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றின் நயம் குன்றி, அவை வசனக்கோர்வைகளாக வெளிப்படுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

இனி வரும் தொகுப்புகளில் இக்குறையை நிவர்த்தி செய்து, படைப்புலகத்திற்கு, பெண்ணாளுமையாய் இன்னும் நிறையக் கவிதைகளை, தர்மினி தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

--நன்றி-  ஆக்காட்டி 15 (ஒக்டோபர்- டிசம்பர்)  

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்