/* up Facebook

Dec 2, 2017

சுமதியின் "உறையும் பணிப்பெண்கள்" - பாத்திமா மஜீதா


சுமதியின் பிறந்த நாள் பரிசாக . உறையும் பணிப்பெண்கள் நூல் விமர்சனம் சிறுகதையின் மரபார்ந்த முறைக்கு எதிரான சிந்தனையோடும் எழுச்சியோடும் பெண் மொழி, பெண் உடல் மொழி, பெண் புழங்கும் வெளிப் புரிதலோடும் நேசமும் உக்கிரமும் மிக்க கதைப்பெண்களாக உறையும் பனிப்பெண்கள் வெளி வருகின்றார்கள். துணிச்சலும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்த தனது எழுத்துக்களில், புலம்பெயர்சூழலில் வசிக்கும் பெண்கள் வாழ்வியலை நுட்பமிக்க நகர்வுகளாலான கதைகளாக சுமதி ரூபன் வார்த்திருக்கிறார். மொத்தமாக சிறுகதைகளைக் கொண்டமைந்த உறையும் பணிப்பெண்கள் தொகுதி கருப்பு பிரதிகள் வெளியீட்டகத்தினால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பெண்நிலைச் சிந்தனை விரிந்தளாவும் ஒரு மொழியும், வாசகரை கட்டுண்டு கிடக்கச்செய்யும் காட்சிப்படுத்தலும் கதைகளில் நிறைந்திருக்கிறது.
"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப்பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல. இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறி மாறித் தள்ளிவிட வெறுமனே பறந்த வண்ணம் நான்."

இந்த ஒரு பந்தியினுள்ளே இங்கு கூறப்படும் அமானுஷ்ய சாட்சியங்கள் என்ற கதையின் கூறுகளும் கட்டுமானங்களும் ஒட்டுமொத்தத்தின் சாரமாய் வெளிப்பட்டிருக்கின்றன. இளம்வயதிலேயே புலம்பெயர்ந்த தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பதின்மவயது பெண் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சித்ரவதைகளை அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மிகுந்த வலியோடு சொல்கிறது இக்கதை .

அம்பை தான் பங்குபெற்ற நேர்காணல் ஒன்றில் பெண்ணிய எழுத்துகள் பற்றிக்கூறும்பொழுது பெண்ணியச் சிந்தனையை உரக்கக் கூறிக்கொண்டிருப்பது ஒரு பெண்ணிய எழுத்தாளரின் வேலை அல்ல. வாழ்க்கையில் சில நொடிகளில் வெளிவரும் உணர்வுகள், உறவுச்சிதறல்கள், இயற்கையுடன் தொடர்ந்தும் ஒன்றியும் விலகியும் வரும் வாழ்க்கை இவை எல்லாமும் மொழியுமே, எழுத்தின் தன்மையும். இந்த உறையும் பனிப்பெண்களில் வரும் கதைமாந்தர்களில் சிலர் கலகக்குரல்களாக இருக்கின்றார்கள். ஆனால் கூக்குரல் இடுபவர்களாக இல்லை. உதாரணமாக பெண்கள் நான் கணிக்கின்றேன் என்ற கதையில் வரும் நண்பி எனும் பாத்திரம் தனக்கென சுதந்திரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவளாகத் தனித்தன்மை பொருந்தியவளாக இருக்கிறாள். நீ ஏன் இதுவரையில் திருமணமாகாமல் வாழ்கின்றாய் என பலதடவைகள் கேள்வி எழுப்பியும் அவளது பதில் கடைசியாக இவ்வாறு முடிந்தது. நீ சந்தோசமாய் இருக்கிறாய் என்பதை முற்றும் முழுதாக நான் நம்பிறன். ஏன் கலியாணம் கட்டினனீ,பிள்ளைகளை பெத்தனீ என்டு எப்பவாவது கேட்டனானா? என்று தான் தெரிவு செய்து கொண்ட வாழ்வை அசாதாரணமானதாக அணுகுபவர்களிடையே மிகச் சாதாரணமாகத் தன் வினாவை முன்வைக்கிறாள். அமானுஷ்ய சாட்சியங்களில் வரும் நளா, இருள்களால் ஆன கதவில் வரும் மீரா, நாற்பது பிளஸ் கதையில் வரும் ஆஷா, மூளி கதையில் மாமியுடன் உரையாடும் பெண் எனப் பலரின் குரல்கள் கலகம் செய்தல் சுமதியின் கதைக்கூறுகளாக இருக்கின்றன.

இந்தச்சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் இன்னுமொரு அம்சம் பெண்ணாக இருந்து ஆண் உணர்வை ஆண்மையவாதப் பார்வையை சிறப்பாக கூறியிருக்கிறார். நாற்பது பிளஸ் கதையில் நாற்பது வயதினை அடைந்த மனைவியிடம் தான் எதிர்பார்க்கும் சுகத்தை அடையமுடியாத நிலையில் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணொருவரிடம் அடைவதற்காக எடுக்கும் பிரயத்தனங்களை ஆண் நிலையிலிருந்து உள்வாங்கிக் கதையாசிரியர் கூறியுள்ளார். இவ்வாறான உணர்வுகளைச் சித்திரிக்கின்ற இடங்களில் சிலவற்றினை விரசமாகவும் விரசமற்ற வகையிலும் கதையின் வசனங்கள் கட்டமைக்கின்றன. பெண்களினை நுகர்வுப்பண்டமாக நோக்கப்படுவதன் அவலமும் கோபமும் கண்டனமும் வெளிப்படுத்துவதன் பொருட்டே ஆண்நிலை உணர்வுகளை, இத்தனை விரசமாக காட்சிகள் கதைகளில் மையப்படுத்தப்பட்டுள்ளன என்று கொள்கிறேன்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை தோற்றுவிப்பவர்களாக தனியே ஆண்களை மட்டுமே கூறமுடியாது, இதில் பெண்களும் கணிசமான அளவில் இடம்பெறுகிறார்கள் என்பது வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

உதாரணமாக தாங்கள் அனுபவித்த அனுபவிக்கின்ற பாலியல் உணர்வுகளை மற்றவர்கள் அனுபவிக்க முயற்சிக்கும்பொழுது அதை ஏற்றுக்கொள்ளாத ஆணும் பெண்ணும் எம்மத்தியில் உலா வருகின்றார்கள். உணர்வுகளைப் பொறுத்தவரை ஆண், பெண் இருவருக்கும் சமமானதாகவே உற்றுநோக்கப்படவேண்டும். உதாரணமாக பிள்ளைகளின் வயது ரீதியாக ஏற்படும் பருவ மாற்றங்கள், அவர்களுடைய திருமணத்தினைத் தீர்மானிப்பது போன்ற பலவித உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்ற ஆயுதம் ஆண், பெண் என்ற பெற்றோரிடமே காணப்படுகின்றன. ரெக்ஸ் என்டொரு நாய்க்குட்டி கதையில் ஒரு நாய்க்குட்டியின் பாலியல் உணர்வுகளைக் குறைப்பதற்காகக் காயடித்துவிட்டு அந்த ஆணும் பெண்ணும் தங்களது சுகங்களை முதிய வயதிலும் அனுபவித்தவாறு குழந்தையை பெற்றெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உறையும் பனிப்பெண் என்ற சிறுகதையிலும் பெண்ணின் உணர்வுகளைத் தாய், தந்தை, சகோதரன் போன்றோர் சிதைக்கின்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கதையினை வைத்தே இச்சிறுகதை தொகுதி தலைப்பிடப்பட்டுள்ளமையும் இச்சிறுகதை தொகுதியின் முடிவில் இக்கதை முடிவுற்றுள்ளமையும் பொருத்தமாக அமைந்துள்ளது. இத்தொகுதியின் அனைத்து கதைகளிலும் வருகின்ற கதைக்கூறுகள் இக்கதையின் கீழ் ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டுள்ளன. வனஜா திருமணவயதினை அடைந்து பல வருடங்கள் கழிந்திருந்த போதிலும் ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணத்தினால் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. படிப்படியாக வயதினைக் கடந்துபோக வனஜாவின் குடும்பத்திலுள்ள அனைவரும் திருமணத்தினைப் பற்றிய அக்கறையை நிறுத்திக்கொண்டார்கள். வனஜாவின் திருமணம் தொடர்பில் யாராவது கேள்வி கேட்கும்பொழுது அவளது சகோதரனும் பெற்றோரும் எதுவுமே தெரியாதவர்கள் போல வாழப்பழகிக்கொண்டார்கள். அதேநேரம் வனஜாவின் உணர்வுகள் திருமணம் போன்றவற்றினை வயது கடந்துவிட்டது இனி தேவையில்லை என்பதைத் தீர்மானித்து விட்டு தங்களுக்கு வயது சென்றும் தங்களின் சுகங்களை அனுபவிக்கின்ற பெற்றோர், காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழும் அவளது சகோதரன் என இக்கதா பாத்திரங்களின் சம்பவங்கள் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஐம்பது வயதுவரை உலகமே தெரியாத திருமணம் என்றவொரு உணர்வினையே நினைக்காத வனஜாவுக்கு அவளது வீட்டில் புதிதாகத் தங்கியிருக்க வந்த உறவுக்கார ஆணொன்றின் மீது காதலேற்படுகின்றது. வாழ்க்கையின் சில விடயங்களில் பிடிப்பு ஏற்படுகிறது. ஆனால் குறித்த ஆண் வனஜாவின் மீது கொண்டிருப்பது காதலல்ல என்பதை வனஜா அறியும்பொழுது ஏற்படும் வலியுடன் பிரமாண்டமான அந்த வீட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய் விட்டழுததை அந்த வீட்டின் சுவர்கள் கூட கேட்காதது போல முகம் திருப்பி கொண்டன; என்றவாறே கதை முடிவுறுகின்றது.

யாழ்ப்பாண நிலப்பரப்பும் அவை சார்ந்த சம்பவங்களும் சில கதைகளின் இடையிடையே வந்து செல்கின்றன. முழுக்க முழுக்க யாழ்ப்பாணப் பேச்சுமொழியினைக் கதையாசிரியர் கையாண்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்கின்றபோதிலும் தங்களது கலாச்சார பண்பாட்டு விடயங்களை விட்டுவிடவில்லை என்பதையும் இக்கதைகள் உணர்த்தி நிற்கின்றன. உதாரணமாக, சாமத்திய சடங்குகள், பிள்ளைப்பேறு சடங்குகள், சீதன முறைமைகள் போன்றவை தொடர்பிலும் இக்கதைகள் பேசிச்செல்கின்றன.

எனவே இங்கு கூறப்பட்டுள்ள எல்லா கதைகளும் புனைவுகளிலிருந்து விடுபட்டவைகளாக மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை, கருத்தியலை முலமாகக்கொண்டமைந்தவையாக உள்ளன. பெண்ணின் சுயத்தினை அக்கறையோடும் நியாயத்தோடும் முன்னெடுத்துச்செல்கின்ற ஆணாதிக்கத்திற்கெதிரான கலகக்குரலையும் தன் இருத்தலுக்கான போராட்டத்தினையும் கொண்ட இன்னுமொரு அழுத்தமான ஆழமான கதைத்தொகுதியை சுமதியிடமிருந்து எதிர்பார்த்தவளாய் நிற்கின்றேன்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்