/* up Facebook

Jun 20, 2017

ஆடையில் நவீனம் சிந்தனையில் பழமை: இந்திய இளைஞர்களின் மனநிலை – அருண் பாண்டியன்


வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையாக எல்லா நவீன வசதிகளையும் இந்திய இளைஞர்கள் கைக்கொள்கிறார்கள். ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என படு மார்டனாக தன்னை காட்டிக்கொள்ளும் 20 வயது இந்திய இளைஞனின் மனநிலையோ பழமைவாதங்களால் கிழடுதட்டிப் போயிருக்கிறது. இந்து தேசியம் எழுச்சி பெற்று பண்பாட்டுவாதம் மதம் வழியே இந்தியா முழுக்க வியாபித்து வரும் இந்தக் காலக்கட்டத்தில், இந்திய இளைஞர்களின் சிந்தனையில்  நவீனம் இல்லை என்று  தேசிய அளவிலான கணக்கெடுப்பு கூறுகிறது.

உடைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும்  செலவழிக்கும் நேரத்தை சிந்தனையை மேம்படுத்த செலவழிப்பதில்லை. இந்திய இளைஞர்களின் சமூகம் சார்ந்த அணுகுமுறைகள், கவலைகள், விருப்பங்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு அவர்களின்  பழமைவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது. 15 வயது முதல் 34 வயதிற்குட்பட்ட  6,122 இளைஞர்களிடம்  எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு, வளரும் சமுதாயத்தை பற்றி அறிய உதவும் கொன்ராட் அடினவ்ர் ஸ்டிஃப்டங் மற்றும் லோக்னிடி ( Konrad Adenauer Stiftung and Lokniti) மையங்களால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே வரையிலும் 19 மாநிலங்களில் எடுக்கப்பட்டது. இது இரண்டாம் கணக்கெடுப்பாகும், இந்தியா முழுக்க மரணதண்டனை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருந்த 2007-ஆம் ஆண்டில் மரணதண்டனையை ஆதரிக்கின்றீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆதரிக்கிறோம் என்று 49% பேர்  கருத்துத் தெரிவித்திருந்தனர். 33% பேர் மரண தண்டனை வழங்குவது வருந்தத்தக்கது, அதனை ஒழிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். திரைப்படக் கலைஞர்களை மதத் தலைவர்கள் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் இந்திய கலைத்துறையில் சவாலாக ஒரு சங்கடமாக நீடித்து வருகிறது. அது பற்றிய கேள்வி ஒன்றுக்கு மத உணர்வுகளை காயப்படுத்தும் திரைப்படங்களை தடை செய்ய  வேண்டுமென 60% கருத்துத் தெரிவித்தனர். இதுபோன்று தடை விதிப்பதற்கு எதிராய் வெறும் 23% இளைஞர்கள் மட்டுமே எதிர்ப்பை பதிவு செய்து கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தனர்.

இன்று நாடு முழுக்க விவாதத்திற்குள்ளாகியிருக்கு மாட்டிறைச்சி உண்ணும் விவகாரத்திலும், கலப்பு மணம் செய்து கொள்வது  தொடர்பாகவும் இளைஞர்களின் பார்வையை பார்ப்போம்.

மாட்டிறைச்சி உண்ணுதல்

2015 ஆம் ஆண்டு  வீட்டில் மாட்டிறைச்சி வைத்து சாப்பிட்டார் என்று பரவிய வதந்தியை அடுத்து உத்திரபிரதேசத்தைச் சார்ந்த 50  வயது அக்லக் அடித்தே கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் வட இந்தியா முழுக்க மாட்டிறைச்சி உண்ணும் மக்களும், மாட்டு வணிகர்களும் தாக்கப்பட்டார்கள். 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பசு பாதுகாப்பு எனும்  பெயரில் இத்தாக்குதல்கள் நடந்தேறின. உத்திரபிரதேச தேர்தல் வெற்றிக்குப் பிறகு இத்தாக்குதல் மூர்க்கமடைந்து செல்கிறது.  இந்த சர்ச்சைக்குரிய பிரச்சனை பற்றி இளைஞர்களிடம் கேட்கப்பட்டது. மாட்டிறைச்சி எடுத்துக்கொள்வது தனி மனிதனின் உணவுப் பழக்க வழக்கம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை என்ற கருத்துக்கு 46% இளைஞர்களுக்கு உடன்பாடில்லை என்றனர். அதாவது மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என்கிறார்கள். மாட்டிறைச்சி உண்ணுவது அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதை  36% பேர் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் அசைவத்தை உண்ணும் 40% இந்து மத இளைஞர்களுக்கும் மற்ற 90% நபர்களுக்கும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கணக்கெடுப்பின்படி 58% இளைஞர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள், 30% பேர் சைவம் சாப்பிடுபவர்கள் மற்றும் 9% பேர் முட்டையுடன் சைவ உணவு எடுத்துக்கொள்பவர்கள் என அறியப்படுகிறது.

பன்மைத் தன்மையுள்ள இந்த பழக்கவழங்கங்களை ஏற்க மறுக்கும் இந்திய இளைஞர்களின் மன நிலையே திருமண பந்தம் போன்ற உறவுக் களத்திலும் காணப்படுகிறது. திருமணம் என்ற வட்டத்துக்குள் அடங்காமல் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழும் முறை ( live-in relationship) பற்றிய கணக்கெடுப்பில், 67% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோன்று மதம் மாற்றி திருமணம் செய்வதற்கு 45% பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மதம் மாறி திருமணம் செய்வதை வெறும் 28% பேர் மட்டுமே ஆதரிக்கின்றனர்.

மேலும் பெண்களை அடிமையாக பாவிக்கும் தன்மை இளைஞர்களிடம் மண்டிப்போய் கிடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு கணவன் சொல்வதைதான் மனைவி கேட்கவேண்டும் என்று 51% பேர் தெரிவித்துள்ளனர். அதேபோல் திருமணமான பெண்கள் வேலைக்கு செல்வது தவறு என 41% பேர் கூறியிருக்கிறார்கள். டேட்டிங் செல்வதற்கு எதிராக 53% பேரும், காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிராக 40% பேரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், பெரும்பான்மையான இளம் பெண்களும் இந்த பழமைவாத கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம்

சாதிய ஆணவ கொலைகள் அதிகரித்துவரும் வேளையில், இதுபற்றி இளைஞர்களின் பார்வையை அறிவது அவசியமாகிறது. சாதி மாறி திருமணம் செய்து கொள்வது பற்றி 2007-ஆம் ஆண்டு இதே நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் சாதி மீறி திருமணம் செய்வதை ஆதரித்தவர்கள் 31% பேர். 2016 – இல் அது 55 % உயர்ந்திருக்கிறது. ஆதரிக்கிறவர்களில்  சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்கள் வெறும் 4% மட்டுமே. 84% இளைஞர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொள்ளும் வேளையில் 6% மட்டுமே காதல் திருமணம் நடப்பதாக அறிக்கை கூறுகிறது. அதிலும் மூன்றில் ஒரு பங்குதான் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்கின்றனர். 97% நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ஒரே சாதிக்குள்தான் நடைபெறுகிறது. திருமணமாகாத இளைஞர்களில் 50% பேர் தங்கள் பெற்றோரே வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். 12% பேர் மட்டுமே காதல் திருமணத்தை விரும்புகிறார்கள்.

அதேபோல் தெய்வபக்தியில் இந்திய இளைஞர்களின் சதவிதம் அதிகமாகவே இருக்கிறது. 78% பேருக்கு தினம் பிரார்த்தனை செய்யும் பழக்கமும், 68% பேருக்கு மத வழிபாடு நடத்தப்படும் இடங்களுக்கு செல்லும் பழக்கமும் இருக்கிறது. ஆண், பெண் சமத்துவம் என்பதை இளைஞர்களால் சரிவர ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடுக்கு 48% பேர் ஆதரவும், 26% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், இந்திய இளைஞர்கள் மோசமான மனநிலையில் இருப்பதை விளக்குகிறது.

வட இந்தியாவை விட சிந்தனை அளவிலும், பண்பாட்டு அளவிலும் வேறுபட்ட மாநிலங்களான தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதா என்ற விபரம் இதில் இல்லை.

நன்றி - http://tamilarasial.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்