/* up Facebook

May 9, 2017

கம்பீர நடிப்புக்கு அடையாளம் தந்தவர் மாதுரிதேவி“ஆம்!  பதியைக்  கொன்றேன்.  ஆனால், பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக்கூட்டமாக நினைத்த ஒரு பாவியைத்தான் கொன்றேன். என்னையே கொல்ல வந்த ஒரு விஷப் பூச்சியைத்தான் கொன்றேன். ஒரு பெண்ணுக்கு அன்பிருக்கும் அளவுக்கு வீரப் பண்பும் இருக்கும் என்பதை மறந்த ஒரு மகா பாவியைத்தான் கொன்றேன். 

ஏன்? என் மேல் பழியா? கொலைகாரியா? நான் அவரைக் கொல்லாவிட்டால் அவர் என்னைக் கொன்றிருக்க மாட்டாரா? அவர் இப்படிக் கொல்லப்படாவிட்டால் உலகத்தில் எத்தனை கோடி கொலைகள் செய்திருப்பார்? அன்பே என ஆசையாய் அழைக்கும் எத்தனை பெண்களை  தன் ராட்சச நகங்களால் பிறாண்டியிருப்பார்?” இந்தக் கேள்விகளில்தான் எத்தனை உண்மை பொதிந்திருக்கிறது. 

‘மந்திரி குமாரி’ படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அரச சபையில் நீதி கேட்டுப் போராடும் கதாநாயகனுக்கு ஆதரவாக ‘நானிருக்கிறேன்’ என்று அபயமளித்து, பின் மாதுரிதேவி உணர்வும் வீரமும் தெறிக்கப் பேசும் வசனம் இது. எழுதியவர் கலைஞரென்றால், பேசி நடித்தவர் மகா கலைஞர். ‘மந்திரி குமாரி’ படத்தின் கதாநாயகன் என்றும் அவரைச் சொல்லலாம்; தவறில்லை. அந்த அளவு அற்புதமான நடிப்பை வழங்கி படம் முழுதும் ஆக்கிரமித்திருப்பவர் மாதுரிதேவி. 


அவர் வசனம் உச்சரிக்கும் பாங்கு ஏற்ற இறக்கங்களுடன், கோபம் கொப்புளிக்க வீரக்கனல் தெறிக்க என பல படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து ரசிக்க முடியும். உடல் மொழியிலும் அதை ஈடுகட்டும் கம்பீரம் தொனிக்கும். தமிழ்த் திரையுலகில் வீரம் மிக்க பெண்ணாக, கம்பீரமான பல ஆண் வேடங்களை அதிகம் ஏற்று நடித்தவர் இவர் ஒருவர் மட்டும்தான் என்று சொல்லலாம். நடிப்பின் மீதான அதீதப் பற்றுதலும் காதலும் மிகச் சிறு வயதிலேயே மாதுரிக்கு ஏற்பட்டு விட்டது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், நிறைய படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதால், நடிப்பின் மீது நாட்டம் இயல்பாகவே படிந்துவிட்டது. 

கருப்பர் நகரத்தில் உதயமான நாயகி

வெள்ளைக்காரர்களால் சென்னையின் பழமையான ‘கருப்பர் நகரம்’ என்று அடையாளம் காட்டப்பட்டது ராயபுரம். அந்தப் பகுதியில் சூசை முதலியார்- மனோரஞ்சிதம் தம்பதியரின் மகளாக 1927ல் பிறந்தவர் க்ளாரா. தெய்வ பக்தி மிகுந்த ரோமன் கத்தோலிக்க கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த சிறுமி க்ளாராவுக்கும் எல்லோரையும் போல சினிமா மீது ஆழ்ந்த காதல் இருந்தது. செயின்ட் ஆன்டனி பள்ளியின் மாணவி. பாடத்தை விட, சினிமாப் பாடல்கள் பாடுவதிலும் ஆடுவதிலும் மிகுந்த விருப்பம். 

கர்நாடக இசைப் பயிற்சியைப் புகழ் பெற்ற பாடகியும், பின்னர் நடிகையுமான என்.சி.வசந்த கோகிலத்திடம் பெற்றார். இயல்பான ஆர்வம், சில தோழிகளின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி எப்படியாவது தானும் சினிமாவில் தலை காட்டி விட வேண்டும் என்ற ஆசை பிடித்தாட்டியது. 

இவரது ஆர்வத்தைப் பார்த்து கோசலம் என்ற நண்பர் ஒருவர் ‘சியாம் சுந்தர்’ படத்தில் நடிப்பதற்காக வேண்டி அணுகினார். ஆனால், ‘அப்பா இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரே’ என்ற கவலையும் உள்ளூர அரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆசை வெட்கமறியாமல் பயத்தை உதறித் தள்ளியது. எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அப்பாவின் காதில் மெல்ல செய்தியைப் போட்டு விட்டார். 

எந்தக் குடும்பத்தில்தான் தங்கள் மகள் சினிமாவில் நடிப்பதைப் பெற்றவர்கள் விரும்புவார்கள். எல்லா அப்பாக்களையும் போலவே சூசை முதலியாரும் ‘நோ’ சொல்லி விட்டார். ‘பொம்பளப் புள்ளை, அதிலும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பொம்பளப் புள்ளைக்கு சினிமா கேட்குதா?’ என்று ஒரே வார்த்தையில் தடை விதித்துவிட்டார். 

ஆனால் மகளின் பிடிவாதம் கொஞ்சம் அவரைப் பணிய வைத்தது. ‘பெரிய மனுஷி’ ஆகும் வரை சினிமா, டிராமா எல்லாம்….’ என்று ஒரு நிபந்தனையையும் சேர்த்து ஒப்புதல் கொடுத்தார்.. பள்ளிப்படிப்பு பாதியில் நின்றது. ‘அப்பாவிடமிருந்து அனுமதி கிடைத்ததே பெரிய விஷயம்’ என்று க்ளாராவும் அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டாள். இந்த க்ளாரா திரையுலகில் அறிமுகமாகி பின்னாளில் மாதுரிதேவி என்ற பெயரில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமானார். 

மெல்லப் பரவிய புகழ் வெளிச்சம் 

1939ல் வெளிவந்த ‘பாண்டுரங்கன்’ என்ற படத்தில் இந்திராணி வேடமேற்று நடித்தார். அடுத்து 1940ல் ‘போலி பாஞ்சாலி வாயாடி’ என்ற நகைச்சுவைப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து நடித்தார். ஏ.டி. கிருஷ்ணசாமி இயக்கிய இப்படத்தை  தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். நகைச்சுவை ததும்ப மாதுரிதேவி நடித்தாராம்! 

வயதுக்கு மீறிய வேடங்களே இரு படங்களிலும் வாய்த்தன. ’பெரிய மனுஷி’ ஆகாமலே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை அவருக்கு. அத்துடன் ‘தான் பெரிய மனுஷி’யாகிவிட்டால் படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுமே என்ற பயமும் ஏக்கமும் மனதை அரித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் மாதுரியின் பிரார்த்தனை ‘நான் பெரிய மனுஷி’ ஆகிவிடக்கூடாது’ என்பதாக இருந்தது. அவர் பயந்ததைப் போலவே நடைமுறையும் இருந்தது. பின்னர், அப்பா, அவரைத் தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை.

மாதுரிதேவியின் மறு விஜயம் 

இரு படங்களுடன் திரையுலக வாழ்வு ஏறக்குறைய முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், ஏழாண்டுகள் இடைவெளிக்குப் பின் 1947ல் பொம்மன் இரானி இயக்கத்தில் ’லட்சுமி விஜயம்’ மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது மாதுரி தேவிக்கு. அதற்கான முயற்சி எடுத்தவர் டி.வி.சாரி. என்பவர். 

திருமழிசை ஆழ்வார் பற்றிய நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக பெற்றோருடன் சென்றபோது, டி.வி.சாரியின் தூண்டுதலாலும், முயற்சியாலும் மீண்டும் மாதுரி தேவியை திரையுலகம் பெற்றது. ஜாக்பாட் அடித்ததைப் போல அமுதா, குமுதா என்று இரட்டை வேடம் வாய்த்தது. பி.எஸ்.கோவிந்தன் கதாநாயகன். அதன் பிறகு தடையேதும் விதிக்காமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க அப்பா பச்சைக்கொடி காட்டி விட்டார்.  

1948 இல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘மோகினி’ படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு ஜோடியாக நடித்தார். ‘ஆடு பேயே’ என்ற பாடலுக்கு அற்புதமாக ஒரு மோகினியாட்டமும் ஆடினார். எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என். ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படமும் மிகப் பெரிய வெற்றிப் படமானது. மாதுரிதேவி அவர் விருப்பத்துக்கேற்ப புகழ் பெற்ற நடிகையானார். 

இரட்டை வேடத்தில் கன்னியும் காதலனும்

மீண்டும் ஒரு ஜூபிடர் படம், ‘கன்னியின் காதலி’ (1949). ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ என்ற பிரபல நாடகத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஆண்- பெண் என இரட்டை வேடங்களில் நடித்தார் மாதுரி தேவி. அவரது திறன் முழுமையும் நன்கு வெளிப்பட்ட படமாக அது கொண்டாடப்பட்டது. 

எஸ்.ஏ. நடராஜன், கே.ஆர். ராம்சிங், அஞ்சலி தேவி மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வழக்கமாக இரட்டை வேடம் என்றால் ஒத்த உருவச் சாயல் கொண்ட சகோதரர்களாகவோ, சகோதரிகளாகவோ தான் அதுவரை படங்கள் வெளிவந்தன. ஆனால், அந்த நடைமுறையை மாற்றியது இப்படம். ஒரே முகச்சாயல் கொண்ட அண்ணனும் தங்கையும் எதிர்பாராத விதமாகப் பிரிய நேர்கிறது. 

இருவரும் வெவ்வேறு இடங்களில் வளர்கிறார்கள். அண்ணன், தங்கை என இரட்டையரில் ஒரு ஆண் வேடத்தையும் மாதுரிதேவி சவாலாக ஏற்றார். ஒரு சந்தர்ப்பத்தில் தங்கை மாதுரி தேவியும் ஆண் வேடத்தில் ஒளிந்து வாழும் நிலை ஏற்படுகிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வசந்தபுரி மன்னனிடம் (புளிமூட்டை ராமசாமி) அடைக்கலம் தேடி வருகிறாள். 

ஆண் வேடத்திலிருக்கும் அவரை ஆண் என நம்பி அரண்மனையின் ஆஸ்தானக்கவி ஆக்குகிறான் மன்னன். இங்குதான் படத்தின் திருப்புமுனை அமைகிறது. மன்னனின் மகளான கன்னி, ஆண் வேடமிட்ட பெண்ணைக் காதலிக்கிறாள். எனவே கன்னியின் காதலியாகிறாள். இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்து வழக்கம் போல சுபமாக முடியும் கதை. படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 

மூன்று சவாலான வேடங்கள்  

மாதுரி தேவிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை வேடங்கள். அடுத்து ஆண் வேடம் போட வேண்டிய சூழல். உண்மையில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா என மூன்று வேடங்கள். இவற்றில் இரண்டு ஆண் வேடங்களுக்கும் இடையில் வித்தியாசமாக தோன்ற வேண்டும். மிகப் பெரிய சவால்தான் அது. ஆனால், கொஞ்சமும் சளைக்காமல் அதைச் செய்து முடித்திருப்பார் மாதுரி என்றே நம்பலாம். 

அதேபோல இரண்டு ஆண் வேடங்களின் குரலிலும் கூட வேறுபாடு தெரிய வேண்டுமென்பதால், அக்காலத்தில் இளைஞராக, அறிமுக நடிகராக இருந்த நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் குரலை இரவல் குரலாகப் பயன்படுத்தியதாகத் திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கய் எழுதுகிறார். 

தமிழர் வாழ்வைப் பேசிய பொன்முடி

1950ல் பொங்கலன்று வெளியான ‘பொன்முடி’ பாவேந்தர் பாரதி தாசனின் ’எதிர்பாராத முத்தம்’ என்ற நாடகத்தின் திரை வடிவம். பீரியட் ஃபிலிம் என்றும் சொல்லலாம். ராஜா ராணி கதையல்ல. தமிழர் வாழ்வை, பண்பாட்டை, வணிகர்களின் வாழ்க்கை நடைமுறைகளை, காதலின் மேன்மையை மிக அழுத்தமாகப் பதிவு செய்த படமென்றும் குறிப்பிடலாம். முத்து வணிகர்களின் அன்றாட நடைமுறை, பணம் படைத்த வணிகர்களே என்றாலும் எவ்வளவு எளிமையான வாழக்கையை அவர்கள் கைக்கொண்டார்கள் என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். 

கதாநாயகன் பொன்முடியாக நடித்தவர் நரசிம்ம பாரதி. சிறு வயது முதலே மாமன் மகளாகவும் காதலி பூங்கோதையாகவும் மாதுரிதேவி நடித்திருப்பார். வெகு இயல்பான நடிப்பு. படம் முழுதுமே அலட்டல்கள், அதீத நடிப்பு, நாடகத்தனமான காதல், கதை என்றில்லாமல் இயல்பானதாகவே அனைத்தும் அமைந்திருப்பது சிறப்பு. கருப்பு, வெள்ளை காவியம் என்றாலும் மிகையில்லை. 

இனிய தமிழ்நாட்டின் இயல்புடன் கூடிய களங்கமற்ற காதல் கதை” என இப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டது. காதலர்களின் நெருக்கமான காதல் காட்சிகள் அப்போதைய சினிமாவுக்கு மிகப் புதிது. இந்தப் படத்தில் மட்டுமல்லாது அவர் நடித்த பல படங்களில் காதல் காட்சிகளில் மிக இயல்பாகவும் கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாகவும் நடித்திருப்பார். 

அமெரிக்கரான இயக்குநர் எல்லீஸ்.ஆர்.டங்கன், டி.ஆர்.சுந்தரத்துடன் இணைந்து மிகச் சிறப்பாக இயக்கியிருப்பார். மிகப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படம் இது. அத்தை மகன் பொன்முடி அத்தானின் மீது அளவற்ற அன்பும், காதலும், பிரியமும் என அனைத்தையும் ஒருசேர வைத்து, அவனைப் பிரிய மாட்டேன் என பிடிவாதம் செய்வதிலாகட்டும், இரு தரப்பு பெற்றோர் மத்தியில் உறவில் விரிசல் ஏற்பட்டு, காதல் கைகூடாது என்ற நிலை வந்தபோதும், கொண்ட காதலில் மாறாத உறுதியுடன், வியாபாரம் செய்வதற்காக குழுவுடன் சென்றிருக்கும் காதலனைத் தேடிச் சென்று ஆண் வேடத்தில் அவனை ஆபத்திலிருந்து மீட்பது வரை என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார் மாதுரி தேவி. சில காட்சிகளில் அவரது நடிப்பைப் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு நம்மை விட்டு அகல மறுத்து அடம் பிடிக்கும். 

அறிவின் பெருக்கு ‘மந்திரி குமாரி’ அமுதவல்லி 

‘மந்திரி குமாரி’ மாதுரி தேவியின் புகழை உச்சத்தில் நிறுத்தியது. அமுதவல்லியாக, அன்பும் பண்பும் கொண்டவளாக அதே நேரம் கொடுமைகளைக் கண்டு பொங்கியெழுபவளாக வீரத்தின் விளைநிலமாக, தவறு செய்பவன் கணவனே என்றாலும் அவனைக் கண்டிப்பவள். தன்னைக் கொல்ல வரும்போது, சமயோசித அறிவின் மூலமாக அதே வழியைப் பின்பற்றி அவனைக் கொல்பவள்.

‘மந்திரி குமாரி’யில் எம்.என்.நம்பியார், எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.ஏ.நடராஜன், மாதுரி தேவி, ஜி.சகுந்தலா என பலரும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரும் ஜி.சகுந்தலாவும் தான் நாயக  நாயகிகள். ராஜ குருவான நம்பியார் வில்லன். அவருடைய மகனான எஸ்.ஏ.நடராஜன் வில்லனைத் தூக்கி விழுங்கும் மகா வில்லன். திருட்டு, கொள்ளை இவற்றை கலையாக என்ணி ரசிப்பவன். 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான ‘குண்டலகேசி’ காப்பியத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு அடுத்து இன்றைக்கும் இப்படம் தொடர்பாக பேசப்படுபவர்கள் மாதுரி தேவி, எஸ்.ஏ.நடராஜன், நம்பியார் மூவரும்தான். அவ்வளவு வலிமையான பாத்திரங்கள். இத்தனை கதாபாத்திரங்களையும் பின்னால் தள்ளி முதலிடம் பெறுபவர் ‘மந்திரி குமாரி’ யான மாதுரி தேவியே. ‘உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே…, ‘வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்… ’ இரண்டு பாடல்களும் என்றும் நினைவில் நிற்பவை. 

50களில் பிற படங்கள் 

1950கள் முழுவதும் அவருடைய படங்கள் வெளியாயின. அதில் வெற்றி, தோல்வி என எல்லாம் கலந்தே இருந்தது. பின்னாட்களில் ஜாம்பவான்கள் என அறியப்பட்டவர்களின் படங்களில் எல்லாம் அவர் நடித்தார். அதே போல பெரிய நிறுவனங்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர் என பெரு நிறுவனங்கள் தயாரித்த படங்களின் நாயகியுமானார். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக இல்லாவிட்டாலும் பல படங்களில் நடித்தார். 

எம்.ஜி.ஆரே அப்போது அறிமுக நிலையில்தானே இருந்தார். ‘மோகினி’, ‘மர்மயோகி’ ‘என் தங்கை’ போன்ற படங்கள் வெற்றிப் படங்கள். 1951ல் ‘தேவகி’ படத்தில் வி.என்.ஜானகியின் தங்கையாக நடித்தார். லண்டன் சென்று மேற்படிப்பு முடித்துத் திரும்பும் நாயகி, தன் அக்காளின் வாழ்க்கையில் வீசிய துன்பங்களுக்கு எதிராகப் போராடி அவரைக் காக்கும் பெண்ணாக நடித்தார். இப்படத்திலும் கலைஞர் கருணாநிதியின் வசனங்களே இடம் பெற்றன. 

சிறை சென்று மீண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ‘புதுவாழ்வு’ படத்திலும் இவர்தான் நாயகி. ஆனால், பாகவதருக்கு இப்படத்தின் மூலம் புதுவாழ்வு ஏதும் கிட்டவில்லை. ‘நல்ல தங்கை’ என்றோர் படம். படித்த பெண் படிக்காத நபரையும், படிக்காத பெண் படித்த பட்டணத்து வாலிபரையும் மணந்து கொள்வதான கதை. 

இதில் அதிகம் படித்த நாகரிகமான பெண்ணாகத் தோன்றி, படிக்காத கணவராக நடித்த நம்பியாரை மாற்றுவதாக அவரது வாழ்க்கையையே திசை திருப்பிக் கொள்வார். படிக்காத தங்கையாக ராஜசுலோசனா நடித்தார். ஏ.பி.நாகராஜனின் கைவண்ணம் இப்படம். சிவாஜியுடன் ஒரே ஒரு படம் ‘மனிதனும் மிருகமும்’ இது 1953ல் வெளியானது. 

அண்ணன்- தங்கை அன்புக்கு அடையாளம் 

இன்றளவும் அண்ணன்-தங்கை பாசத்துக்கும் வறுமையின் கொடுமைக்கும் உதாரணம் சொல்லப்படுவது ‘நல்லதங்காள்’ கர்ண பரம்பரைக் கதை. அதன் வீச்சு, உடன் பிறந்த அக்காள், தங்கைகளுக்கு பச்சை சேலை வாங்கி சீராகக் கொடுக்காவிட்டால், அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை அதோகதிதான் என்று பயமுறுத்தி, அன்பை, சகோதர பாசத்தை வளர்ப்பதில் வந்து முடிந்ததையும் 90களில் கண்டோம். 

இந்த நல்லதங்காளின் கதை படமாகவும் மாறியபோது, நாத்தனார் நல்லதங்காளை கொடுமைப்படுத்தி விரட்டும் அண்ணி மூளி அலங்காரியாக வில்லி வேடமேற்று நடித்தார் மாதுரி தேவி. நல்லதங்காளின் ஏ.பி.நாகராஜன். இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அண்ணன் நல்லதம்பியாகவும் அவரே நடித்தார். 

அன்பின் வெளிப்பாடாக தங்கையைப் பார்த்துப் பாடும் ‘பொன்னே புதுமலரே, பொங்கி வரும் காவிரியே’ பாடல் இன்றைக்கும் காதுகளுக்குக் குளுமை. இம்மாதிரி கதைகள் எப்போதும் பெண்களை ஈர்க்கக் கூடியவை. வெளியான நேரத்தில் படம் ஓடாவிட்டாலும், பின்னர் திரையிடும்போதெல்லாம் திரையரங்குகளில் பெண்கள் கூட்டம் குழுமி, கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க விட்டார்கள். படமும் வசூலை வாரிக் குவித்தது. 

நடிகைகளில் சாமுராய் 

வழக்கமாக 1940-50 காலகட்டத்து நாயகிகள் சோகம் கவிந்த முகங்களுடன், உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் துயரங்களையும் ஒருசேர அனுபவித்துக் கொண்டு, பிழியப் பிழியக் கண்ணீர் விட்டு, மூக்கைச் சிந்திக் கொண்டிருந்த நிலையில், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நாயகியாகத்தான் மாதுரிதேவி தமிழ்த் திரையில் தோன்றினார். 

கம்பீரமான பெண்ணாக, ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே தன் உரிமையைப் பேசுவதாக அல்லது மரபை மீறி அதை உடைத்து நொறுக்குவதாக என அமர்க்களப்படுத்தியவர் இவர் ஒருவர்தான். பல படங்களில் சளைக்காமல் ஆண் வேடம் ஏற்றவர். ’பொன்முடி’, ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’, ‘மந்திரிகுமாரி’, ‘கன்னியின் காதலி’ என பல படங்கள். 

அதிலும் கதாநாயகர்களுக்கு நிகராக வாள் வீச்சிலும் ஈடுபட்டு சண்டைக் காட்சிகளிலும் அசத்தியவர். ஒரு வெற்றிகரமான போர் வீரனைப் போல அவர் தோன்றுவதால் ‘சாமுராய்’ என்றும் அவரைக் குறிப்பிடலாம். மிக இளம் வயதிலேயே தன் தந்தையின் வங்காள நண்பரின் மகன் சாந்தி முகர்ஜியைக் காதலித்து 1944ல் திருமணம் செய்து கொண்டவர். அதன் பிறகே பல படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வெற்றிகரமான நடிகையானார்.  

சொந்தப் படம் தந்த அனுபவங்கள்

நடிப்பின் வழியாக சம்பாதித்த பணத்தை சொந்தப் படங்களில் முதலீடாகச் செலுத்தி வெற்றி பெற்றவர்களை விட தோல்வியைச் சந்தித்தவர்களே அதிகம். அதே தவறை மாதுரி தேவியும் செய்தார். 1953ல் ‘ரோகிணி’ என்ற படத்தைத் தன் கணவர் எஸ்.முகர்ஜி பெயரில் சொந்தமாகத் தயாரித்தார். அவர் தேர்வு செய்த ‘கிருஷ்ணகாந்த்தின் உயில்’ என்ற வங்காளக் கதைக்குச் சொந்தக்காரர் பங்கிம்சந்திர சட்டர்ஜி. ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதியவரும் அவரே. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பல படங்களில் நடித்தாலும், மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியதைப் போல, தயாரிப்பு மோகம் தலைக்கேறியது. எப்படியாவது விட்ட பணத்தைப் பிடித்து விடலாம் என்ற என்ணமும் காரணமாக இருக்கலாம். 1959ல் ‘மாலா ஒரு மங்கல விளக்கு’ என்ற படத்தைத் தயாரித்ததுடன், கணவரும் ஒளிப்பதிவாளருமான சாந்தி முகர்ஜியை இயக்குநராகவும் நியமித்தார். 

ஆனால், தோல்விதான் பலனாகக் கிடைத்தது. அப்போது சினிமாவில் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி போன்ற திறமையான அழகான இளம் நடிகைகள் பலரும் முன்னணியில் இருந்ததால், மாதுரிதேவி அவர்களுடன் போட்டியிட முடியாத நிலை. சொந்தப் படம் தோல்வியடைந்த அதிர்ச்சி எல்லாமும் சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்தது. 

1962ல் திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். அதன் பின் திரையுலகுடன் அதிகம் தொடர்பில்லாமல் வாழ்ந்தார். சிறுநீரகக் கோளாறு மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 1990 ஜூன் மாதத்தில் காலமானார். ராயபுரம் ஞானப்பிரகாசியார் கல்லறையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாதுரிதேவி தமிழ்த்திரை ரசிகர்கள் மனதில் என்றும் வீரம் மிக்க பெண்ணாக நாயகியாக ஒளிரும் நட்சத்திரமாகவே நிலைத்திருக்கிறார்.  
(ரசிப்போம்!)

நன்றி - குங்குமம் தோழி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்