/* up Facebook

May 6, 2017

‘‘இந்தியப் பெண்களின் மனசாட்சி பில்கிஸ் பானு’’ தன்னை சிதைத்தவர்களை சட்டத்தால் தண்டித்து நிரூபித்தவர்


பில்கிஸ் பானு

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த கோர சம்பவம் அது. இன்று, இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வர். கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகான கலவரத்தில் பில்கிஸ் பானு சந்தித்த, நேர்ந்த கொடுமையை வார்த்தைகளில் வார்க்க முடியாது. 6  மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்யும் வெறியை அந்த ஆண்களுக்கு கொடுத்தது எதுவாக இருக்கும் என்றுயோசித்துக் கொள்ளுங்கள். 

பாலியல் வன்கொடுமையில் பில்கிஸ் பானுவின் உடலை ரணமாக்கியதோடு அந்தக்கும்பல் நிற்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்று குவித்தனர். அவரின் மூன்று வயது குழந்தையை கல்லில் அடித்துக் கொன்றனர். மொத்த நம்பிக்கையையும் சிதைத்து அவரது உயிரை மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர். இத்தனை கொடுமைகளுக்கு பின்னும் ஒரு பெண் எழுந்து நின்று எதிரிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர போராடுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. குற்றத்தை நடத்தியிருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் அவர்கள் தப்பித்து விடவும் வாய்ப்புகள் அதிகம். 

ஆனால், அவரை உடலால் சிதைக்க முடிந்தவர்கள் அவர் மன உறுதியிடம் தோற்றுப் போனார்கள். உறவுகளையும் பெற்ற மகளையும் இழந்த அந்தப் பெண் மீண்டும் உயிரோடு வாழ வேண்டும் என்று நினைத்ததே தன்னை சிதைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆம்! பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்கள் மறுத்துள்ளனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை பில்கிஸ் பானுவின் புகாரைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளது. தன்னை கொடுமைப்படுத்திய, அலட்சியப்படுத்திய யாரையும் அவர்  விட்டுவைக்கவில்லை. அத்தனை பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தார். சட்டத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை வீண் போவில்லை.

அவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டிய ஐந்து போலீசார் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தவறிய இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். குஜாராத்தின் அகமதாபாத்தில் வழக்கு விசாரணை நடந்தால் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்ற அவரது முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையை மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றியது. அவர் மன உறுதியோடு தொடர்ந்து போராடினார். இழப்புகள் தந்த வலி அவரை உறங்க விடாமல் நீதிக் கேட்டுத் துரத்தியது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பில்கிஸ் பானுவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியன்று. ஒட்டுமொத்த இந்தியப்பெண்களின் மனசாட்சியாக பில்கிஸ் பானுவை உயரச் செய்துள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அதிலிருந்து மீள்வது அவ்வளவு சாதாரணம் கிடையாது. உடலில் ரணம் ஆறிய பின்னும்கூட மனம் அடையும் காயம் ஆறாது. தூக்கத்திலும், விழிப்பிலும் துரத்திக் கொல்லும். பாதிக்கப்பட்ட பின் ஆளும் அரசையும், ஆட்சியாளர்ளையும் எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும்போது தொடர்ந்து மிரட்டல்களை அனுபவிக்க வேண்டி வரும். பாதுகாப்பும், இருப்பிடமும் தேடி ஓட வேண்டிய அவலமும் நேரும். மொத்த வாழ்க்கையும் ரணமாகிப் போன பெண் அதன்பின் உயிர்வாழும் ஒவ்வொரு நிமிடமும் மர்ரணத்தின் விளிம்பில் இருப்பதுபோலத்தான். அந்த வாழ்வையே நீதிக்கான போராட்டமாக அவர்  தொடர்ந்துள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பின் அவரது நெற்றியில் நீதி தேவதை வெற்றித் திலகமிட்டு வாழ்த்தியிருக்கிறாள். 

பில்கிஸ் பானுவின் வெற்றியை வழக்கறிஞர் ச.பாலமுருகன் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘2002-ம் ஆண்டு குஜராத்தில் அரசும் இந்துத்துவா வெறியர்கள் நடத்திய வன்முறையில் உயிர் பிழைக்க தனது குடும்பம் குழந்தைகள் உடன் 19 வயதான பில்கிஸ் பானு ஓடும்போது 30-க்கும் மேற்பட்ட வெறியர்கள் அவர்களைத் தாக்கினர். அவள் பாலியல் வல்லுறவு எதிர்கொண்ட போது அவள் குழந்தை கண்ணெதிரே கொல்லப்பட்டது. அவளது குடும்பத்தினர் 14 பேரும் கொல்லப்பட்டனர். அதில் 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளும் அடக்கம். உயிர்ப் பிழைத்த அவள் கொடுத்த புகாரைப் பதிவு செய்ய மறுத்தது காவல் துறை. பெரும் போராட்டத்துக்குப் பின் வழக்கு பதிவுசெய்த போதும் வழக்கை நீர்த்துப் போகச்செய்ய எல்லா முயற்சிகளையும் எடுத்தது காவல் துறை. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின் மும்பை உயர்நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்டோர் தங்கள் நியாயங்களுக்காக நடத்தும் போராட்டம் வலியும், சோர்வும், அச்சமும் நிறைந்தது. அதனைக் கடந்து ஜனநாயக சமூகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய சகோதரி பில்கிஸ் பானு இந்தப் பெண்களின் மனசாட்சியாக எழுந்துள்ளார். வாழ்க சகோதரி,’’ என்று பதிவு செய்துள்ளார். நம்பிக்கையின் கரம் பற்றி தங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடத் துணியும் பெண்களின் மனசாட்சியும் இனி பில்கிஸ் பானு தான்.

Photo Credit: outlookindia.com

நன்றி - ஆனந்த விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்