/* up Facebook

May 2, 2017

ஆண்களின் அதீத புனைவுக் கற்பனை - நசீஹா முஹைதீன்


காலங்காலமாகவே எங்கள் சமூகத்தின் மத்தியில் காணப்படும் ஒரு நிலைப்பாடு தான் பெண்ணியம் பேசுபவர்களை எள்ளி நகையாடுதல் மற்றும் வேடிக்கையாக நோக்குதலாகும்.முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்ற புரிதல் பலருக்குக் கிடையாது. குறைந்த ஆடை அணிவதற்கும் அல்லது நள்ளிரவில் வெளியில் சுற்றித்திரிவதற்காகவும் அனுமதி கேட்பதே பெண்ணியம் என ஏழாவது முத்திரை குத்தியிருக்கின்றனர்.

ஆதி காலத்தில் பெண்கள் தங்களின் உரிமைகளை சரியான முறையிலேயே அனுபவித்து வந்தனர் என்பதை நிறைய சரித்திரவியலாளர்கள் கூறி வருகின்றனர்.

பின் வந்தகாலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய சமூகத்தில் பிளவுபட்ட மனிதனது மூளை என்றுமில்லாதவாறு பெண்களை தன் கீழ் உள்ள ஒரு சொத்தாக கருதத் தொடங்கியது.இப்படியாக வளர்ந்த சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக தன் உரிமைக்காக பெண்ணானவள் போராடும் போது அவளை கையாளுவதற்கு சில வழிகளை ஆண் மேலாண்மைச் சிந்தனைவாதிகள் உருவாக்கினார்.

இன்றைய நவீன காலத்தில் அது வேறுவழியில் பரிணமித்துள்ளது.சமூக வலைத்தளம்,சினிமாக்களின் ஊடாக பெண்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்படலானாது மலிந்து கிடக்கையில் "ஜெர்மனியோ, சீனாவோ, அமெரிக்கவோ, இந்தியாவோ அவள் மீது ஆண் மேலாதிக்கம் கட்டவிழ்த்து விடும் குரூரங்களின் அடிப்படை ஒன்றுதான்.பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் அளவே இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதை உலக சினிமாக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டு கொள்ளலாம்"

என Eva Hoffman சொல்வது நினைவுக்கு வருகிறது.

"நான் என் தாயை கடவுளுக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.இருந்தாலும் தந்தை இறந்தபிறகு அவளுக்கு பாலியல் தேவை இருக்கும் என கூச்சல் போடுவது என்னால் ஏற்க முடியாது. அந்த காலத்தில் எட்டு வயதில் கணவனை இழந்தாலும் அறுபது வயது வரை திருமணமோ எந்த வித ஏனைய பாலியல் தேவைகளோ இல்லாமல் தானே என் மூத்தம்மா இருந்தாள்"

இதுதான் நிகழ்காலத்தில் கசக்கும் நிஜம்.வீணாக பெண்ணியம் பேசுபவர்கள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளவே இதைப் பேசுகிறார்கள், இதைக் கிளறுகிறார்கள் என்பதுவே பலரின் மனநிலை முறுகலாக இருக்கிறது. உதாரணமாக பெண் விருத்தசேதனம் பற்றி பேசினாலே அது புகழடைவதற்காக அல்லது கவனக் குவிப்பிற்கான செயல் என தம் கருத்துக்களை நிறைய படித்த சமூகத்து ஆண்களும் பெண்களும் கூட முன்வைக்கின்றனர். சமமாக பெண் உடலியல் கவிதைகளை ஆண்கள் எழுதும் போது நோக்கப்படும் கோணத்திற்கும் பெண் எழுதும் போது நோக்கப்படும் கோணத்திற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கவே செய்கிறது.

பெண்ணோ, ஆணோ முன் வைக்கப்படும் விடயத்தின் வழியே தான் அவர்கள் நோக்கப்பட வேண்டும். மாறாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, அதற்கு பின்னால் இருப்பவைகளை வைத்துக்கொண்டு சப்பைக் கட்டுக்காக விமர்சனங்கள் எழுதப்படுவதானது குதத்திற்கு பதிலாக வாயால் கழிவகற்றுவதாகவே இருக்கும்.

பெண்ணின் துணிச்சல், அவளுக்கான காதல்,அவளுக்கான விருப்பம் என்பன அவளுக்கானதாகவே இருக்க வேண்டும். அவளைச் சார்ந்தோராலோ அல்லது அவளின் துணையனவர்களாலோ அழுத்தி வைக்கப்படுதலை ஏற்கமுடியாது.

அகிலத்தை நிறுவுதல் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின் "பெண்கள் சோசலிசத்திற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் வெற்றிக்குப் பின் தங்களின் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார்கள்"எனக் கூறியிருக்கிறார்.அவரின் எதிர்பார்ப்பெல்லாம் அரசியலிலும் இலக்கியத்திலும் பெண் தனக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதேயாகும்.

நடப்பதோ தலைகீழாகத்தான். இலக்கியத்தில் பெண் நிலைவாதம் சொன்னாலே அவளை ஆண்கள் நோக்கும் விதம் வேறு. இன்னொரு பேச வேண்டிய வியாதிதான் பெண் கருத்துக்களை பேசுபவர்களை விமர்சித்தால் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுதல் ஆகும்.இதற்கு சுயமாக சிந்திக்க தகுதியற்ற சில பெண்களும் துணை போவது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. இலக்கியத்தில் தன்னை நிலைநிறுத்தி பெண்களின் மறைத்து வைக்கப்பட்ட,அழுந்திச் செத்துக் கிடக்கின்ற தேவைகளை நியாயப்படுத்தவே பெரும் சிரத்தை எடுக்கையில் இது எதுவுமே தெரியாது ஜோக்கர்மேனிக்கு எழுதித் தீர்ப்பது கேலிக்குரியதாக இருக்கிறது.

இளம் சமூகத்தையாவது இந்த மனோநிலையிலிருந்து வெளிவர வைத்தாலும் சில வயதான மனிதர்களை என்னவென்பது.ஆணின் நிகழ்கால காதல் அல்லது திருமண வாழ்க்கை வெறுத்தால் இரண்டாவது,மூன்றாவது காதலை அங்கீகரிக்கும் போது பெண்ணொருத்தியின் மறுமணம் பேசுவதானது அவர்களது மனத்தை பாதிக்கச் செய்கிறது போலும்...

ஆண்களின் அதீத புனைவுக் கற்பனை (Male fantasy) மூலமாக இலக்கியங்களில் பெண்களானவர்கள் வெறும் மன்னர்களின் வீரத்திலும் காதலிலும் மூழ்கிக் கிடப்பவர்களாகவே காட்டப்பட்டனர். பின் வந்த காலத்தில் இது மேலும் முன்னேற்றமடைந்தது.

இதில் அடிக்கோடிடப்பட வேண்டிய விடயம் பல பெண் எழுத்தாளர்களே பெண்களது அடிப்படை பிரச்சினைகளை பேசுவதில்லை.என்ன சுதந்திரமானவளாக அவள் ஆரம்பத்தில் காட்டப்பட்டாலும் பிற்பாடு அவள் சம்பிரதாய,சடங்குகள், குடும்பத்தில் சிக்கி உழல்பவளாகவே தங்களின் நாவல்கள்,சிறுகதைகளில் கட்டமைக்கப்படுகின்றனர். மேலாதிக்க ஆண்களினை சிந்தனை ரீதியாக எதிர்கொள்வதற்கும் தைரியமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் சுயமாக எதையும் பேசத் துணியும் பெண் எழுத்தாளர்கள் அல்லது ஆண்களில் நக்கல் பதிவுகளை கூட்டாக சேர்ந்து எள்ளி நகையாடும் ஒரு தைரியமான பெண் சமூகம் வரும் வரை இதுவெல்லாம் பேசப்பட வேண்டியே இருக்கும்.

ஒருவேளை என் மர்யத்தின் அல்லது அவளின் மகளின் காலத்திலாவது பெண் நிலையுறுதியை சரியான கண்ணோடத்துடன் பார்க்கும் ஒரு சமூகம் அதாவது நாலு காதல் கவிதைகளை எழுதி விட்டு பெரிய சிந்தனைத்துவமான பெண் எழுத்தாளர்களை கேலி பண்ணும் தோரணையில் மூக்குடைபடும் ஆசாமிகளின் தொல்லை குறையட்டுமாக...

நசீஹா முஹைதீன் அவர்களின் முகநூலிளிருந்து நன்றியுடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்