/* up Facebook

May 14, 2017

33வது புகலிட பெண்கள் சந்திப்பு


33 வது புகலிட பெண்கள் சந்திப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் கடந்த வாரம் மே 6,7 ஆகிய திகதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

1988 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த முதலாவது இலக்கியச் சந்திப்பைத் தொடர்ந்து பெண்களின் சந்திப்புக்கும் தனியான தேவை உணரப்பட்டது. பெண்களின் பிரேத்தியேகமான பிரச்சினைகளை தனித்தும், பெண்கள் தமக்குள் சுதந்திரமாக பகிர்ந்துகொள்வதற்குமான தளத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அங்கு பெண்ணியம் சார்ந்த கோட்பாட்டு பிரச்சினை தொடக்கம் “கலாசார” கட்டுடைப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை பன்முக நோக்கில் ஆராய்வது என்று தொடர்ந்தது பெண்கள் சந்திப்பு. அதன் விளைவாக பெண்களுக்கான இலக்கிய சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் அவர்களால் கொண்டுவரப்பட்டன.

அந்த வரிசையில், ஊதா, மறையாத மறுபாதி என்ற தலைப்பில் வெளிவந்த புலம்பெயர்ந்து வாழும் பெண் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு, நோர்வேயிலிருந்து சக்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு, புது உலகம்; எமை நோக்கி, ஊடறு என்பன போன்ற சில படைப்புக்களைக் குறிப்பிடப்படலாம். இவை தனிப்பட்ட நிதிமுதலீட்டுடன், எந்தவொரு அமைப்பினதும் அனுசரணையின்றி புலத்தில் சுதந்திரமாக வெளிவந்த படைப்புக்களாகும்.

ஆணாதிக்க உலகில் தமக்கு நேரும் இன்னல்கள், சுதந்திரமான வளர்ச்சிக்கான தடைகள், பாரம்பரியமாகத் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறிப் புலத்தில் தமது இருப்பை ஆணித்தரமாகப் பதியவைக்கும் போக்கை புகலிட பெண் எழுத்தாளர்களிடம் காண முடிகிறது.

புகலிட மாற்று சமூக, அரசியல், இலக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதலான தளமாக பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் கடந்த மூன்று தசாப்த காலமாக இருந்து வந்திருக்கிறது.

புகலிட சூழலில் அரசியல் மற்றும் கலாசார வெகுஜன அமைப்புகள் பற்பல ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அவை எதுவும் அதிக காலம் நின்று பிடிக்கவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த அமைப்பும் நிலைக்கவில்லை என்பதை சுயவிமர்சனத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இலக்கிய சந்திப்பும், பெண்கள் சந்திப்பும் இத்தனை வருடகாலம் தொடர்ச்சியாக நிலைத்து நின்று பிடித்திருப்பதற்கான காரணம் அதற்கு நிறுவன வடிவம் கிடையாது என்பதால் தான். அதனால் தான் இந்த சந்திப்பை எவரும் உரிமை கோரவும் முடியாது. எந்த அரசியல் இயக்கமும் இதன் பின்னால் இல்லை. காலத்துக்கு காலம் தோன்றிய அதிருப்தியாளர்களாலும் இதனை உடைக்க முடியவில்லை. காரணம் உடைப்பதற்கான “நிறுவன வடிவம்” அதற்கு இல்லை. அனைவரையும், அனைவரது கருத்துக்களையும் சங்கமிக்கச் செய்யும் தளம் மட்டுமே இவை. இதற்கென்று நிலையான யாப்போ, நிர்வாகமோ போஷகர்களோ கிடையாது. இந்த செயல் வடிவம் ஒரு முன்னுதாரணமான ஒன்றாக பேசப்படுகிறது.

ஒவ்வொரு சந்திப்பும் நிகழும் போது அது நிறைவடையும் நேரத்தில் அடுத்த சந்திப்புக்கான யோசனை கலந்துனர்களிடம் கேட்கப்படும். அங்கு கலந்து கொண்ட ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்தவர் தாம் அடுத்த சந்திப்பை தமது நாட்டில் நடத்தவிருக்கும் விருப்பத்தை பரிந்துரைப்பார். வேறெவருக்கும் அதில் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் அவர் கேட்டுக்கொண்ட நாட்டில் அடுத்தது நடக்கும். அப்படி வேறொரு நாடும் தமது விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அங்குள்ளோரிடம் வாக்கெடுப்பு எடுத்து பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்கள் அந்த சந்திப்பை பொறுப்பேற்பார்கள். பொறுப்பேற்றவர்கள் அந்த சந்திப்பை நடத்தி முடிக்கும் வரையான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். செலவுகளை கலந்து கொள்ளும் அனைவரும் பகிர்ந்துகொள்வார்கள். சில சந்தர்ப்பங்களில் செலவுகளை பகிர்ந்து கொள்ளாமல் தாமே அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்த சந்திப்புகளுக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சிறப்புக் கலந்துனர்களாகவும் பலர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பல சமூக, இலக்கிய செயற்ப்பாட்டாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து இலக்கியத்தை மட்டுமன்றி அன்பையும், தோழமையும் பரிமாறி மகிழ்வுறும் சந்திப்புகளாக இவை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

17.3.1990 இல் தமது முதலாவது பெண்கள் சந்திப்பினை ஜேர்மனியில் நிகழ்த்தத் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருப்பதுடன் 8 தடவை பெண்கள் சந்திப்பு மலர்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

தமது தாய் நாட்டில் சாதாரண பெண்களாக இருந்தவர்கள் கூட இந்த பெண்கள் சந்திப்புகளின் மூலம் இலக்கியவாதிகளாகவும், சமூக செயற்பாட்டாளர்களாகவும், பெண்ணிய செயற்பாட்டாளர்களாவும் ஆகியிருக்கிறார்கள். ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தினகரன் - 14.05.2017

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்