/* up Facebook

May 30, 2017

வந்தியத்தேவன் வழியில் தோழிகளின் வரலாற்றுப் பயணம்!தமிழில் எத்தனையோ வரலாற்றுப் புதினங்கள் இருந்தாலும் 67 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை விட்டு அகலாமல் இருப்பது கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மது குடித்த வண்டுகளைப் போல அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவந்துவிட முடியாது. நாவல் தொடர்பான விஷயங்களைத் தேடவைக்கும், படிக்கவைக்கும் சக்தி அந்த நாவலுக்கு இருக்கிறது. அப்படியொரு தேடுதல் பயணத்தை மேற்கொண்டு, வித்தியாசமான அனுபவங்களோடு திரும்பியிருக்கிறார்கள் நான்கு தோழிகள்.

ஆசிரியர் ஜெயபிரியா ஆதிமுருகன், பட்டயக் கணக்கர் நித்யா சீதாராமன், யோகக்கலை நிபுணர் பத்மா கணபதி, மனிதவள அதிகாரி தீபா நவீன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழிகள். ஜெயபிரியா திருவண்ணாமலையிலும் மற்றவர்கள் சென்னையிலும் வசிக்கிறார்கள். ஆக்கபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்தத் தோழிகள், ‘பொன்னியின் செல்வன்’குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். அப்போதுதான் நால்வரும் பொன்னியின் செல்வனின் தீவிர ரசிகைகள் என்ற விஷயம் தெரிந்தது. விவாதம் இன்னும் ஆழமாகச் சென்றது.

ஆடிப் பெருக்கு நாளில் வீராணம் ஏரிக் கரையில் வந்தியத்தேவன் குதிரைமேல் அமர்ந்து வருவதுதான் நாவலின் தொடக்கம். அதை அசைபோடும்போது, “நாம் ஏன் வந்தியத்தேவன் பயணித்த வழியில் ஒரு பயணம் போய், அந்த இடங்களைப் பார்த்துவரக் கூடாது?’’ என்று பத்மா கேட்கவும் மற்றவர்களுக்கும் அது பிரமாதமான யோசனையாகத் தோன்றியது. உடனே பயணத்திட்டம் தயாரானது.

“மூன்று நாள் பயணம் என்று முடிவு செய்து, ‘வந்தியத்தேவன் வழியில்’ என்று பெயரும் வைத்தோம். தொண்டை மண்டலத்திலிருந்து வந்தியத்தேவன் புறப்படுவதாக இருந்தாலும் வீராணம் ஏரியிலிருந்துதான் வந்தியத்தேவனை அறிமுகப்படுத்துவார் கல்கி. அதனால் சென்னையிலிருந்து கார் மூலம் வீராணம் சென்று, அங்கிருந்து ‘வந்தியத்தேவன் வழியில்’ பயணத்தைத் தொடங்கினோம்’’ என்கிறார் ஜெயபிரியா.

வீராணம் ஏரி, வீரநாராயணர் கோயில், கடம்பூர், கங்கைகொண்ட சோழபுரம், ராஜேந்திரச் சோழன் மாளிகை இருந்த மாளிகைமேடு ஆகியவை முதல் நாள் பயணத்துக்கான இடங்கள். இரண்டாவது நாள் கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு பழுவூர், பழையாறை போன்றவற்றைப் பார்த்திருக்கிறார்கள். மூன்றாவது நாள் தஞ்சை பெரிய கோயிலிலிருந்து பயணத்தை ஆரம்பித்து, சோழர்கள் போருக்கு முன் வழிபட்டுச் செல்லும் நிசும்பசூதனி கோயிலைப் பார்த்துவிட்டு, மாலையில் கோடியக்கரைக்கு வந்து சேர்ந்தனர். இங்கிருந்த சோழர்களின் துறைமுகம் வழியாகத்தான் வந்தியத்தேவன் ஈழநாட்டுக்குச் செல்வதாகக் கல்கி விவரித்திருப்பார். கோடியக்கரையோடு பயணத்தை முடித்துக் கொண்டு, அனுபவங்களை ஆனந்தமாகப் பகிர்ந்தபடி சென்னை வந்துசேர்ந்தார்கள்.

“நாவலைக் கையில் வைத்துக்கொண்டுதான் பயணத்தைத் தொடர்ந்தோம். அதிலுள்ள இடங்களை நேரில் பார்த்தபோது பரவசமாக இருந்தது. சோழன் மாளிகை ஊரில் இருந்த இரண்டு கோயில்கள் உள்பட நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான இடங்கள் தடயமின்றி அழிந்து போயிருப்பதையும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியிருப்பதையும் பார்த்து நெஞ்சம் பதைத்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பத்தை நம்மவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அவர்களின் கட்டிடக் கலை வியக்க வைக்கிறது. கொடிகட்டிப் பறந்த நம் முன்னோர்களைப் பற்றி முழுமையான பதிவுகள் இல்லை என்பதை எங்கள் பயணத்தில் தெரிந்துகொண்டோம். முன்னோர்கள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் வருங்காலச் சந்ததிக்கு நாம் ஆவணப்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு பற்றி எங்களுக்குள் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் பல்லவ ராஜ்யம் நோக்கி எங்கள் பயணம் செல்லும்’’ என்கிறார்கள் இந்தத் தோழிகள்.

நன்றி - திஇந்து 
...மேலும்

May 28, 2017

வடக்கில் 58.121 பெண்களின் தலைமையில் குடும்பங்கள் - சுகந்தி


வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 58.121 பெண்கள் தமது வீடுகளில் தலைமைப் பாத்திரம் வகித்து குடும்பங்களை கவனித்து வருவதாக “வீட்டு வரவு செலவு பற்றிய ஆய்வறிக்கை” தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2012-2013 க்கான அறிக்கை அதற்கடுத்ததடுத்த ஆண்டுகளிலேயே வெளியிடப்பட்டன. அப்படி வெளியான அறிக்கையிலேயே இந்த விபரங்கள் பல வெளியாகியுள்ளன. ஆனாலும் உத்தியோகபூர்வ தவல்களை விட மோசமாகவே இந்த நிலை இருக்கக் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

யுத்தத்தின் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில்  கணவரை இழந்தவர்களின் தொகை 90,000 என்று கருதப்படுகிறது. அதைவிட காணாமல் போனவர்கள், ஊடமுற்றவர்கள், நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் என வீட்டின் பிரதான பாத்திரம் வகித்து வந்த ஆண்களின் துணை அல்லாத குடும்பங்களும் ஏராளம்.

யுத்தத்தில் கணவரை இழந்தவர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக மட்டக்களப்பே இருந்து வருகிறது.

கணவரை இழந்தவர்கள்:
இலங்கையில் பெண்களின் பொறுப்பில்/தலைமையில் இருக்கும் வீடுகளில் 50% வீதமானோர் கவரை இழந்தவர்கள் ஆவர். இயற்கை மரணம், தற்கொலை, யுத்தத்தில் கொல்லப்பட்ட போன்ற காரணங்களால் ஆண்கள் அற்றுப்போன வீடுகளை அப்படிக் குறிப்பிடலாம்.

திருமணமானோர்
பெண் தலைமையில் உள்ள 30% பெண்கள் திருமணமானோராவர். ஆண்கள் உழைப்புக்காக நாடு கடந்து சென்றவர்கள், காணாமல் போன ஆண்கள், நோயுற்ற ஆண்கள், பொறுப்பற்ற ஆண்கள் ஆகியோரின் துணைவிகளால் இந்த 30 வீத தலைமை கொடுக்கப்படுகின்றது.

பிரிந்துவாழ்பவர்கள் / விவாகரத்து ஆனவர்கள்
இவர்கள் குடும்ப பெண் தலைமையில் 15% வீதத்தினராக உள்ளனர்.

திருமானவர்கள் / தனித்து வாழ்பவர்கள்
இவர்கள் குடும்ப பெண் தலைமையில் 4% வீதத்தினராக காணப்படுகின்றனர்.

இதில் கவலைகொள்ள வேண்டிய இன்னொரு பக்கம் என்னவென்றால் இவர்களில் 35% வீதத்தினர் மாத்திரமே ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்கிற அதிர்ச்சித் தகவல்.

மலையகப் பகுதிகளில் பெண் தலைமையில் உள்ள குடும்பங்களில் 52% வீதத்தினர் தொழிலில் ஈடுபடுபவர்களாக இருந்தபோதும் அவர்களின் வருமான நிலை ஆகக் கீழ் மட்டத்தில் இருப்பதையும் இந்த புள்ளிவிபரங்களில் இருந்து அறிய முடிகிறது.

இதைவிட பெண் தலைமை வகிக்கும் 22% வீதமானோர் தொழில் புரியும் வயதையும் தாண்டிய முதியோர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு சீர் செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையும் ஆதரவும் கிடைக்கவிருப்பதாக அறியக் கிடைக்கிற போதும் இது எந்தளவு உரியவர்களுக்கு போய் சேரப் போகிறது என்பது குறித்த விசனங்கள் ஏற்கெனவே எழ ஆரம்பித்துள்ளன. இதற்கு முன்னரான நிவாரணங்கள் இறுதியில் சென்றடைவதில் காணப்பட்ட அசமத்துவமும், பாரபட்சங்களும், கவனயீனங்களும் இந்த விடயத்திலும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதே சம்பந்தப்பட்டவர்களின் அவா.

நிவாரண நடவடிக்கைகளுக்கு அப்பால் இந்த நிலைமை இனித் தோன்றாது பார்த்துக்கொள்வதற்கான கொள்கைவகுப்பும், நடைமுறை செயற்திட்டங்களுமே அதிகம் அவசியப்படுகின்றன.

நன்றி - தினகரன்
...மேலும்

May 24, 2017

நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை - ஓர் எதிர்வினை -அத்தியா


முரண்படும் கருத்துக்களுக்கான என் எதிர்வினை

"நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை" என்னும் தலைப்பில் பிரான்சில் இருந்து வெளியாகும் "ஆக்காட்டி" இதழில் மொழிபெயர்ப்புக்கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இந்த கட்டுரையை ஈழத்து இலக்கியச்செயற்பாட்டாளர் மிஹாத் Mihad Mihad சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து முகப்புத்தகத்தில் சிறிதுகாலத்திற்கு முன்னர் பதிவிட்டு இருந்தார். வாசித்து வியந்து போன கட்டுரை எனலாம். இதன் மூலப்பிரதி அமெரிக்க ஊடகவியலாளரான (Chris Hedges) க்ரிஷ் ஹெட்ஜஸ் இனால் எழுதப்பட்டது. இருந்தாலும் கருத்தியல் ரீதியாக மட்டுமல்லாது நடைமுறைச்சாத்திய முரண்பாட்டு ரீதியாக சில வினாக்கள் என்னுள் எழுந்தன.அதனை கட்டுரையுடன் தொடர்புபடுத்தி முன்வைத்துவிடுகிறேன்.

வழக்கமாக பெண்களுக்கு எங்கே அநீதி இழைக்கப்படுகிறது? என்று சிலர் அவர்களுக்காக பரிந்து பேசவே முன்வருவதனை காணக்கூடியதாக உள்ளது.அதாவது "பெண்கள் பாவப்பட்ட ஜென்மம்" என்னும் உளவியலை தோற்றுவிப்பதாக இருக்கும்.அது எல்லா இடத்திற்கும் பொருந்துமா என்பது சற்று சிக்கலானது.ஆபாசத்திரைபட நடிககைகளாக இருக்கும் பெண்கள் பாவப்பட்டவர்கள்,அறியாமையால் இந்த ஆபாச சினிமாத்துறையில் இருந்துகொண்டு மிகுந்த துன்பப்பட்டு இருக்கின்றனர் என்னும் தோரணையிலேயே இந்த கட்டுரை நகர்ந்து செல்கின்றது.
// (Fifty Shades Of Grey) பிப்டி ஷேட்ஸ் ஓப் கிரே எனும் நூல் உடல்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் கொடுஞ் செயல்களைக் கொண்டாட்டக் கருவாகக் கொண்டது. இந்நூலிலுள்ளவை பின்னர் சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது. இவை தீவிர ஆபாச சினிமாவினதும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அமெரிக்க நோய்மைக் கலாசார அபிலாசைகளை எடுத்துரைக்கிறது. இத்திரைப்படம் பெண்ணை சக மனிதனாக நோக்கும் பழக்கத்தை மறுத்து விடும் கொண்டாட்டங்களை உருவாக்குகிறது. இது வெறுமையான கருணையினாலும் அத்துமீறிய காதலாகவும் உலக மனங்களை வெல்ல முயல்கிறது. இந்த சினிமாக்கள் ஆண்களின் அதீத காமத்தையும் மட்டற்ற பாலியல் வேட்கையையும் வன்மம், துன்புறுத்தல், பலாத்காரம் போன்றவையூடாகத் தீர்த்துக் கொள்வதற்காக பெண்ணுடலை விளையாட்டுப் பண்டமாக்குகிறது. அதற்காக பெண்ணின் உயிர்ப்பான ஆளுமையை நீக்கம் செய்யும் கருத்தியலை நீலப்படங்கள் உருவாக்குகின்றன. இதன்போது அத்துமீறல்கள் யாவும் ஆண்மையின் காம லீலைகள் என்பதான கண்ணோட்டத்தைப் பெறுகிறது. இச்செயலானது நலிவானவர்களைச் சுரண்டிக் கொன்றுண்ணும் அதிகார வர்க்கத்தின் உலகியல் வன்முறை நியாயங்களை தெய்வச் செயல் போல ஏற்றுக் கொள்வதற்கான பண்பாகத் திரள்கிறது. இன்றைய முதலாளித்துவ நரகத்தை இந்தப் படைப்புகள் இயல்பானதெனவும் சிறப்பானதெனவும் ஆசீர்வதிக்கின்றன. இங்கு சுயம் சிதைந்த பெருமகிழ்வினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன.//
மேலே உள்ள பத்தி பிப்டி ஷேட்ஸ் ஒப் க்ரே நாவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்றால் BDSM உறவு முறை பற்றிய தெளிவின்மையும்,ஒருபக்கசார்பாக பெண்களுக்காக பரிதாபப்பட்டு பேசும் மனநிலையும் காணப்படுகிறது.உண்மையில் அந்த நாவலில் முதலில் தன்வளர்ப்புத்தாயின் தோழி றொபின்சன் (Robinson) என்பவள் சிறுவன் க்ரிஸ்ட்டின் க்ரே (Christian grey )15 வயதாக இருக்கும்போது தன்னை உடலுறவு கொள்வதற்காக'BDSM' என்னும் உறவு முறையை அறிமுகப்படுத்தி,6 வருடமாக அதன் மூலம் இந்த சிறுவன் துன்புற கிடப்பதும் அதை பார்த்து அந்த பெண் பாலியல் இன்பமுற்றதன் விளைவால் அந்த சிறுவனும் உளவியல் உடலியல் ரீதியாக "பிறரைத்துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவித்தல்" (Sexual Sadism Disorder) என்னும் உறவுக்கட்டமைப்பு நோய்க்குள் உள்ளாக்கப்படுகிறான்.

அதன் பிரதிபலிப்பாக சந்திக்கும் பெண்களை தான் அனுபவித்த 'BDSM'என்னும் உறவு நிலைகளில் 'Submissive and Dominant 'என்னும் உறவைத் தேர்வு செய்து பெண்களது பிற உணர்வுகளைபுறக்கணித்து உடல்களுடன் உறவு கொண்டாடி வருவதாக இந்தநாவல் கூறுகிறது.இப்போ இதன் அடிப்படையில் பார்த்தால் முதலில் சிறுவனாக இருக்கும்போது அவனது தாயின் தோழி BDSM உறவை பயன்படுத்தி துன்புறுத்தி அதன்மூலம் இன்பமுற்று வந்திருக்கிறாள்.அதை பற்றி பேசவும் இல்லை.இதற்காக பரிதாபப்படவும் இல்லை.ஏனென்றால் "ஆண் என்பவனுக்கு பெண்ணுடனான காம உறவு எவ்வளவு மோசமானதாக, வன்முறையானதாக இருந்தாலும் கொண்டாட்டமானதுதான்" என்னும் கற்பிதம் சமூக மனங்களில் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுக்கு காமமலீலை செயற்பாடானது உளவியல் உடலியல் ரீதியாக இன்பமானதாக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் அது ஒரு வன்மமான செயலாகவே கணிக்கப்படுகின்றது. ஏனெனில் ஆண் காமத்தை அனுபவிக்க வரையறைகள் கிடையாது,ஆனால் பெண்ணுக்கு அதிகப்படியான வரையறைகள் உண்டு. BDSM சார்ந்த ஆபாசத்திரைப்படங்களை மேலோட்டமாக நோக்காமல் ஆழமாக பார்க்கும் போது அந்த இடங்களில் பெண்களால் ஆண்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள், அருவறுப்பானவைகளை அனுபவிக்கிறார்கள் என்பது புரியும். இதனை "Femdom BDSM" வகையினுள் காணலாம்.

அடுத்து இந்த BDSM என்னும் உறவுமுறையானது "பாலின வேறுபாடின்றி" மேற்கொள்ளப்பட்டுவரும் ஒன்று.இதை ஆண் மட்டுமே பெண்ணுக்கு செய்கின்றான் என்றில்லை.இதற்கான பாலின உறவை அவரவரே தேர்வு செய்வர். ஆணை பெண் அடிமைப்படுத்தல், பெண்ணை ஆண் அடிமைப்படுத்தல், பெண்ணைப்பெண், ஆணை ஆண், மூன்றாம் பாலினத்தெரிவும் உண்டு.
//ஆண் பார்வையாளர் பட்டாளத்தினை சலிப்பில்லாமல் தொடர் தூண்டுதலில் வைத்திருக்க வன்முறையும் பண்பு வீழ்ச்சியும் மிகையான காட்சிகளை உருவாக்கும் எண்ணத்தில் ஆபாச படைப்பாளிகள் செயல்படுகிறார்கள். படப்பிடிப்புத் தளத்திலேயே பெண்களுக்கு நிஜமான வலிகளை உண்டாக்கும் காரியங்கள் திட்டமிடப்படுகிறது. தொண்டை வரை மூர்க்கமாக குறிகளைச் செலுத்தும் வாய் மூலமான புணர்வு அல்லது முகப்புணர்வு என்பது கொடூரமானது. இதில் பெண்கள் பாவகரமாக விகாரமாக்கப்பட்டு வாந்தி எடுக்கும் நிலை வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். இது போன்ற காட்சிகளில் ஆண் என்பவன் பெண்ணின் முகத்தை கழிப்பறையின் மலப்பாத்திரம் போலவே கையாள்கிறான். இது போன்ற காட்சிகள் பலவந்தமாகவே உருவாக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் மூலம் இப்பட நிறுவனங்கள் கட்டமைக்கும் உளவியல் தாத்பரியமானது பெண்ணைப் புணர்ந்த பின் அகற்றி விடு என்பதுதான்.//
// உடல் உபாதை மிக்க தொந்தரவுகளையும் மோசமான நிதிச் சுரண்டலையும் சகிக்க முடியாத மக்கள் கூட்டம் கூட ஆபாச சினிமாவை மறு கேள்வி கேட்பதில்லை. அபூகிராய் சித்திரவதை முகாம்களில் இடம்பெறும் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அதே வகையான செயல்பாடுகள் நிகழ்த்தப்படும் நீலப்படத் துறையை அனுமதிப்பவர்களாகவும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். அபூகிராய் வதை முகாமில் கைதிகள் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்படுவதையும் தொந்தரவுக்குள்ளாவதையும் அனுமதிக்காத நாம் ஆபாசப் படப்பிடிப்புத் தளங்களில் இடம்பெறும் வாதைகளை அனுமதிக்கிறோம்.//

பெண் பார்வையாளர் பட்டாளத்தை சலிப்பில்லாமல் தொடர் தூண்டுதலில் வைத்திருக்க என்னவெல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவோ?ஆண்களுக்கு மட்டும் நுகரக்கக்கூடியதல்லவே ஆபாசசினிமா. பாலின வேறுபாட்டை மையப்படுத்தி தேவைக்கேற்ப அது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆபாச சினிமாத்துறைக்கு வரும் நடிகைகள் ஒன்றும் எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் இல்லை என்று நினைக்கிறேன்.அதற்காக தங்களை தயார்படுத்திய நிலையிலேயே அதனுள் நுழைகிறார்கள். இதற்காகவென்று போர்ன் ஸ்டார்ஸ் ,போர்ன் மாடல்களாக தங்களை பெருமையப்படுத்திக்கொள்ளும் நிலை காணப்படுகிறது. ஒருவேளைச்சாப்பாட்டுக்கு வழியில்லாத காரணத்திற்காகவெல்லாம் இந்த துறைக்குள் பெரும்பாலும் நுழைவதில்லை.அவர்கள் விரும்பியே இதனுள் நுழைகின்றார்கள்.” இவ்வளவு வன்மமானது”ஆபாசசினிமாத்துறை என்று அறிந்த பெண்கள் அதனை விட்டுமுழுமையாக நீங்கி விட வேண்டியது தானே? அடக்குமுறை,அதிகாரங்களுக்குள் சிக்குண்ட பெண்களுக்காக குரல் கொடுக்கலாம். இவர்களை எந்தவகையில் சேர்ப்பது.?சமூகத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை தீர்த்து வைக்க வேறுவகையான "போராளிகள்" தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கே தங்களுக்கு என்ன சிக்கல் என்பது புரியாமல் இருப்பதாகவே தோன்றுகின்றது.

//நீங்கள் ஆபாசத்திற்கு எதிராகப் போராடுகிறீர் என்றால் உலகளாவிய முதலாத்துவதத்திற்கு எதிராக போராடுகின்கிறீர்கள்//

இதெல்லாம் நடை முறைச்சாரத்தியமான காரியமா? எங்கே ஆபாச சினிமாக்களை பகிஷ்கரிக்க ஒரு குழாமை அமைத்துத்தான் பாருங்களேன். முதலில் எத்தனை உறுப்பினர்கள் முன்வருகிறார்கள் என்று பார்ப்போம்.நம் சமூகத்தைப் பொறுத்தவரை "செக்ஸ்" என்னும் வார்த்தையே தேவையற்ற பதட்டத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது.வயதுக்குவந்த ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளவேண்டும் எனில் அவர்களுக்கான ஒரே ஒரு தீர்வு “திருமணம்”.இதுவல்லாமல் செக்ஸ் ஐ ஒரு ஆணும் பெண்ணும் நுகர்வது சமூக கலாச்சார ரீதியில் மாபெரும் குற்றம்.பண்பாட்டுக்காவலாளர்கள் விடமாட்டார்கள்.இது இவ்வாறிருக்க உரியவயதில் ஏற்படும் இந்த பாலியல் ரீதியான உடலியல் கிளர்ச்சியை எவ்வாறு தணித்துக்கொள்வார்கள்?

பாலியல் சுதந்திரமற்ற நம் சமூகத்திற்கு இந்த ஆபாச திரைப்படங்கள் இன்றியமையாத ஒன்றாக இருப்பது போலத்தான் தோன்றுகிறது. பெரும்பாலான ஆபாசத்திரைப்படங்கள் ஆண்மையவாதச்சிந்தனையில் ஆரம்பகாலகட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டாலும் பின்னர் பெண்ணாதிக்கம், பெண்ணை திருப்திப்படுத்தும் நிலையிலான படங்களும் உருவாக்கப்பட்டன. பாலியல்தொழில் எவ்வாறு ஒரு முடிவுக்குக்கொண்டு வரப்படாமல் திண்டாடுகிறதோ அதே நிலைதான் இந்த ஆபாச திரைப்படங்களுக்கும். "ஒழுக்கம்" என்னும் சிந்தனையை கட்டுடைப்பு செய்கிறது. இந்த ஆபாசத்திரைப்படங்கள் வெளிப்படையாக சமூக ஒழுக்க விழுமியங்களை சீரழித்து மனித மனங்களை சின்னாபின்னமாக்குகின்றது என்னும் குற்றச்சாட்டுக்கள் அனைத்து சமூகங்களில் இருந்து பொங்கி வழிந்தாலும் ரகசியமாக எந்த வித எதிர்ப்புக் காழ்ப்புணர்வுகளும் வெளிப்படுவதாக தெரியவில்லை.வெறுமனே பெண்ணின் நிர்வாண உடலை கண்டாலே கிளர்ச்சி கொள்ளும் நம் சமூகத்தவர்களிடம் ஆபாசத்திரைப்படங்களில் காணப்படும் கூட்டு வன்புணர்வுகளைப் பார்த்ததும் அறத்துடன் கூடிய கோபம் பொங்கி வழியுமா? அல்லது நிர்வாண வன்புணர்வுடன் கூடிய அவளது அலறலையும் முனைகலயும் ரசித்து கிளர்ச்சி அடைவார்களா?

ஏற்கனவே இதே திரைப்படத்தை மையமாக வைத்து எழுதிய "சுயத்தை தொலைக்கும் கண்மூடித்தனமான பின்பற்றல்கள்" என்னும் கட்டுரையில் கூட கூறி இருப்பேன்.ஆபாசத்திரைப்படங்களை ஏன் அதிகமாக கீழைத்தேய நாடுகளில் நுகர்கிறார்கள் என்று.
//உலக நாடுகளிலே செக்ஸ் (sex) எனும் வார்த்தையை கூகுளில் தேடுவதில் இலங்கை தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டதாம்.இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதாம்.இதற்கிடையில் உள்ள நாடுகள் பற்றியும் புள்ளி விபரங்கள் பற்றியும் நீங்களே கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.செக்ஸ் என்னும் வார்த்தையை தேடிப்பார்ப்பவர்களுக்கு இந்த புள்ளி விபரங்களைத்தேடிப்பார்ப்பதும் ஒரு வித இன்பமாக இருக்கலாம்.இந்த புள்ளி விபரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடுகளையும் நாட்டு மக்களையும் தரக்குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்று நினைக்கின்றேன்.இது பாலுணர்வு பற்றிய அறிவுக்காகவும் தெளிவின்மைக்காகவும் கூட தேடி இருக்கலாம்.பாலியல் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் மாணவர்கள் கூட தேடி இருக்கலாம்.எந்த ஒரு நபரையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யக்கூடாது,பாலியல் வன்முறையில் ஈடு பட கூடாது என்று நினைக்கும் நபர்கள் தாங்கள் சுய இன்பம் அடைந்து கொள்வதற்காக கூட தேடி இருக்கலாம். வேலைப்பளு, மன உளைச்சலில் உள்ளவர்கள் தங்கள் சிந்தனையை திசை திருப்ப இவ்வாறான விடயங்களை தேடிப்பார்த்திருக்கலாம். பாலியல் உணர்வு நாட்டமற்றவர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத்தூ ண்டிக்கொண்டு தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதற்காக தேடிப்பார்த்திருக்கலாம்.இங்கு நான் கூறிய காரணங்கள் அனைத்தும் என் கற்பனையில் விளைந்த ஒன்றல்ல என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//
ஆபாச சினிமாக்கள் ஏற்படுத்தும் பாரிய எதிர்வினைகள் சமூகத்தில் ஏற்படுத்தாமலும் இல்லை. வீட்டு துஷ்பிரயோகம், வன்புணர்வு, கூட்டுப்பாலியல் வன்புணர்வு என்பன அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன.ஆபாச சினிமாக்களால் மட்டுமே இவை நிகழ்கின்றன என்றால் அது கேள்விக்குரியதே.!எதிர்பாலின பாலியல் பற்றிய பதட்டம், சமூக கற்பிதம்,பாலியல் வறட்சி போன்ற பல்வேறு காரணங்களும் உண்டு.இருந்தாலும் இந்த ஆபாச சினிமாக்களை புரிதலுடன் அணுகுவதினால் பாரிய சிக்கல்களில் இருந்து சமூகம் தங்களைக்காத்துக்கொள்ளலாம். ஆனால் ஆபாச சினிமாத்துறையில் உள்ள பெண்களை யாரும் காக்கவும் முடியாது. எதுவும் கேட்கவும் முடியாது. அவர்களுக்குத்தே வையான விடுதலையை அவர்களேதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
மிஹாத் மொழி பெயர்த்த க்ரிஷ் ஹெட்ஜஸின் முழுமையான கட்டுரை கீழே

நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச் சீரழிவின் வடிவைப் போன்றவை

ஆங்கிலத்தில் : கிறிஷ் ஹெட்ஜஸ்
தமிழில் : மிஹாத்

பிப்டி ஷேட்ஸ் ஓப் கிரே எனும் நூல் உடல்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் கொடுஞ் செயல்களைக் கொண்டாட்டக் கருவாகக் கொண்டது. இந்நூலிலுள்ளவை பின்னர் சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது. இவை தீவிர ஆபாச சினிமாவினதும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அமெரிக்க நோய்மைக் கலாசார அபிலாசைகளை எடுத்துரைக்கிறது. இத்திரைப்படம் பெண்ணை சக மனிதனாக நோக்கும் பழக்கத்தை மறுத்து விடும் கொண்டாட்டங்களை உருவாக்குகிறது. இது வெறுமையான கருணையினாலும் அத்துமீறிய காதலாகவும் உலக மனங்களை வெல்ல முயல்கிறது. இந்த சினிமாக்கள் ஆண்களின் அதீத காமத்தையும் மட்டற்ற பாலியல் வேட்கையையும் வன்மம், துன்புறுத்தல், பலாத்காரம் போன்றவையூடாகத் தீர்த்துக் கொள்வதற்காக பெண்ணுடலை விளையாட்டுப் பண்டமாக்குகிறது. அதற்காக பெண்ணின் உயிர்ப்பான ஆளுமையை நீக்கம் செய்யும் கருத்தியலை நீலப்படங்கள் உருவாக்குகின்றன. இதன்போது அத்துமீறல்கள் யாவும் ஆண்மையின் காம லீலைகள் என்பதான கண்ணோட்டத்தைப் பெறுகிறது. இச்செயலானது நலிவானவர்களைச் சுரண்டிக் கொன்றுண்ணும் அதிகார வர்க்கத்தின் உலகியல் வன்முறை நியாயங்களை தெய்வச் செயல் போல ஏற்றுக் கொள்வதற்கான பண்பாகத் திரள்கிறது. இன்றைய முதலாளித்துவ நரகத்தை இந்தப் படைப்புகள் இயல்பானதெனவும் சிறப்பானதெனவும் ஆசீர்வதிக்கின்றன. இங்கு சுயம் சிதைந்த பெருமகிழ்வினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், ராட்சத விளையாட்டு விநோதங்கள், சமூக வலைத்தளங்கள், ஆபாச சினிமா, மயக்கும் ஆடம்பர உற்பத்திப் பொருட்கள், போதைவஸ்துகள், மது இவை யாவும் அவற்றின் மூர்க்கமான ஈர்ப்பின் வழியே எதார்த்தச் சூழலை அப்புறப்படுத்தி விட்டன. நாம் பிரபலமான கேளிக்கைப் புள்ளியாகவும் பெரும் பணக்காரர்களாகவும் இருக்கவே ஏங்குகிறோம். இன்றைய வாழ்க்கையை பரிதாபகரமாகச் சிதைத்து நசுக்குவதினை ஆபாச சினிமாத்துறை ஈர்க்கும் தகுதியாகக் கொண்டுள்ளது. இந்தப் பேரவலமானது கூட்டான மாயைகளின் அடையாளமாக இருப்பதுடன் பொய்யான சூழ்ச்சித் திட்டங்களைத் தாண்டிய கலாசார செயல் முறையாகவும் உள்ளது.

பாலியலை கொடுங் காம இன்பமாக மாற்றிக் கொள்ளவே ஆபாச சினிமாக் கலை முயல்கிறது. நீலப்படங்களில் பெண்கள் சில மாமூலான வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் பண்ண நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். 

நானொரு யோனி, நானொரு பேடி நாய், நானொரு பரத்தை, நானொரு அசூசி;உனது பெரிய ஆண்குறியால் என்னை ஈனமாகத் தாக்கு என்று தம்மை வன்மமாகப் புணரும் படி அவர்கள் மண்டியிடுகிறார்கள்.

நீலப்படங்கள் இனவெறியின் வகைமைகளை சிதைத்துப் பரிமாறுகிறது. கறுப்பு நிற ஆண்கள் பாலுறவு ரீதியாக வெள்ளைப் பெண்களைப் பின் தொடரும் மிருக ஆற்றல்களைப் பெற்று விடுகிறார்கள், கறுப்புப் பெண்கள் பழைமை மிக்க காம மூலப் பொருளைக் கொண்டவர்கள், லத்தீன் பெண்கள் சூடான இரத்தத்தில் வளர்ந்த காமப் புழுக்கம் கொண்டவர்கள், ஆசியப் பெண்கள் கீழ்ப்படிவுள்ள காம அர்ப்பணிப்புக் கேந்திரங்கள் என்ற வகையிலான பார்வைகள் இவற்றினால் உருவாக்கப்படுகிறது.

ஆபாசப் படங்களில் மனிதக் குறைபாடுகள் எதுவும் இருப்பதில்லை. உருப்பெருக்கப்பட்ட சிலிக்கன் முலைகள், களிம்புகளால் மேன்மைப்படுத்தப்பட்ட உதடுகள், பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகளால் சிற்பமாக்கப்பட்ட மோக உடல்கள், போதைப்பொருள்களால் தூண்டப்பட்டுக் குறையாத குறி விறைப்புகள், மிகை ஒப்பனை செய்யப்பட்ட மர்மஸ்தான வலயங்கள் என எல்லாமே மிகைத்த ஆபாசத் திரைக் கலை இச்சையாகப் பரிமாறப்படும் போது அதில் பங்கேற்கின்றவர்கள் பிளாஸ்ரிக் துண்டுகளில் காமக் கிரியை புரிவது போல மாறி விடுகிறார்கள். மணம், வியர்வை, மூச்சு, இதயத் துடிப்பு, தொடுகை இவை யாவும் பெண்ணுடலின் மென்மையோடு சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.இந்தப் படங்களுக்குள் உலவும் பெண்ணுடல்கள் பண்டங்கள் போல பொதி செய்யப்பட்டவை. அவர்கள் பாலியல் இன்பத் துய்ப்புக்கான கைப்பாவைகளாகவும் ஆண்களை மகிழ்வூட்டும் பதுமைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையான உணர்வுகள் யாவும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது.

நீலப்படங்கள் பாலுறவைப் பற்றியவையல்ல. பாலுறவு என்பது இரண்டு பங்காளி உடல்களுக்கிடையிலான பரஸ்பரச் செயல்பாடு என கருத முடியும். ஆனால் இந்த அம்சங்களை ஆபாச சினிமாக்கள் ஒரு விடயமாகக் கொள்வதில்லை. கை மைதுன உறவு, காதலும் நெருக்கமும் அற்ற தனித்த தற்தூண்டுதல் போன்ற பாலியல் நடவடிக்கைகள் வணிக நோக்கம் கொண்ட முதலாளித்துவ மையங்களினால் ஒரு வழிபாட்டு நடைமுறை போல செறிவூட்டப்படுகிறது. அதனால் முதலாளித்துவ பண்பு விதிகளை பின்பற்றும் ஆபாசத் திரைத்துறையானது மனிதத்துவத்தை சாகடித்து விடுகிறது.

இன்று அபாயத்தின் பிடியில் சிக்கிய சில மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது நெருக்கமான காதல், பாலுறவு போன்றவற்றை ஆபாச சினிமாவின் கற்பிதங்களுக்குள் இடம்மாற்றிக் கொண்டவர்கள். இன்றைய ஆபாசக் கலைத்துறை என அழைக்கப்படும் தொழிற்கூடங்கள் தான்தோன்றித் தன்மையாக ஒரு பண்பாட்டு மொழியால் பேசுவதை நாம் அனுமதித்து விடுகிறோம். உடல் உபாதை மிக்க தொந்தரவுகளையும் மோசமான நிதிச் சுரண்டலையும் சகிக்க முடியாத மக்கள் கூட்டம் கூட ஆபாச சினிமாவை மறு கேள்வி கேட்பதில்லை. அபூகிராய் சித்திரவதை முகாம்களில் இடம்பெறும் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அதே வகையான செயல்பாடுகள் நிகழ்த்தப்படும் நீலப்படத் துறையை அனுமதிப்பவர்களாகவும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். அபூகிராய் வதை முகாமில் கைதிகள் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்படுவதையும் தொந்தரவுக்குள்ளாவதையும் அனுமதிக்காத நாம் ஆபாசப் படப்பிடிப்புத் தளங்களில் இடம்பெறும் வாதைகளை அனுமதிக்கிறோம்.

"புதிய அலை " பெண்ணியவாதிகள் ஆபாச சினிமாவைக் காப்பாற்றும் முகமாக அது பாலியல் விடுதலைக்கிணையானது, சுயமான தேர்வுச் சாத்தியங்கள் கொண்டது என கருத்துகளை வழிமொழிந்ததன் மூலம் பெரும் துரோகமிழைத்தனர். இந்தப் போலிப் பெண்ணியவாதிகள் பூக்கோ, ஜூடித் பட்லர் போன்றவர்களின் அடித்தளத்தில் நிலைபெற்ற பின்நவீனத்துவ புதிய தாராளவாத சிந்தனைகளின் வளர்ச்சி குன்றிய உற்பத்திகளே. இவர்களைப் பொறுத்த வரை பெண்ணியம் என்பது ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலை வேட்கை பற்றியது அல்ல. அவர்களது பார்வையில் வெற்றி பெறும் பெண் என்பவள் வசதியான அதிகாரம் மிக்க ஆண்களின் சங்கடங்களைத் தீர்த்து தன்னை வளப்படுத்திக் கொள்பவளே. "பிப்டி ஷேட்ஸ் ஓப் கிறே " படம் இதனைத்தான் கூறுகிறது. ஒரு பெண் எழுதிய நூல் தான் இப்படம்.திரைக்கதையும் அவர்தான். பெண் மேலாளரைக் கொண்ட நிறுவனம் ஒன்றுதான் இதனை வாங்கி வெளியிட்டது. பாலியல் வன்முறையையும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் ஆபாச சினிமாவின் மூலம் உலகமயப்படுத்த பெண்களைத் துணைக்களைத்து கூட்டுச் சதி நிகழ்த்தப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும். புதிய ஆபாச சினிமாக்கள் பெரும் சவக் குழிகள் போலுள்ளன. அங்கு எல்லாமே சாகடிக்கப்படுகின்றன.

அண்மையில் பொஸ்டனில் உள்ள தேனீர் விடுதியொன்றில் கேயில்ஸ் டைன்ஸ் என்ற கடும்போக்கு கருத்துகளில் ஊறிய ஒருவரைச் சந்தித்தேன். வீல்லொக் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் porn land எனும் நூலை எழுதியவர். அதில் இன்றைய ஆபாசக் கலைகள் பாலியலை எவ்வாறு அதன் இயல்புணர்விலிருந்து அகற்றுகிறதென எழுதியிருக்கிறார். அவர் போலவே ஜீன் சென் போன்றவர்களும் இப்போது கலாசாரத்தை விகாரமாக்கும் ஆபாசக் கலையை அச்சமில்லாமல் கடுமையாக சாடி விமர்சிக்கிறார்கள். ஆபாசத் துறையானது இயல்பான பாலியல் பண்பாடுகளை அழித்து விட்டு இளம் ஆண், பெண் தலைமுறைகளுக்கு முன்னே கழிவுகளைப் பரப்பி வருவதாக குற்றம் சுமத்துகிறார்கள். நீங்கள் ஆபாசத்திற்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்றால் உலகளாவிய முதலாளித்துவத்துக்கு எதிராகவே போராடுகிறீர்கள் என அவர் கூறுகிறார்.

அபாயகரமான முதலாளிகளும் வங்கிகளும் கடனட்டை நிறுவனங்களும் இந்தக் கழிவூட்டிகளின் சங்கிலித் தொடராக இருக்கின்றன. அதனால் ஆபாச சினிமா துறைக்கு எதிரான பிரசாரங்களை எந்த இடத்திலும் காணவே முடியாது. தற்காலத்தில் ஊடகங்கள் அனைத்தும் இதன் பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த ஊடகங்கள் எல்லாமே குறிப்பிட்ட கழிவூட்டும் சங்கிலித் தொடர் நிறுவனங்களால் போசிக்கப்பட்டு வருகின்றன. ஆபாசக் கலையானது இப்போது ஊடகங்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது.

இக்காலத்தில் எம்மிடத்தில் நாணயமும் வரையறையான வேட்கைகளும் நிஜமான படைப்பாற்றலும் மனிதத்துவத்திற்கு அவசியமற்றதென ஆபாசத்துறை விதந்துரைக்கிறது. பெண் என்பவள் மூன்று துவாரங்களையும் இரண்டு கைகளையும் கொண்ட பொருள் என்ற மதிப்பீட்டுக்குள் சுருக்கப்பட்டிருக்கிறாள். இந்த அழிவு மதிப்பீட்டைப் பின்னி வரும் முதலாளித்துவம் பூமியில் மனிதருக்கிருக்கின்ற தொடர்புகளைச் சிதைத்து வருகிறது.

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பொறிமுறையான சமத்துவமின்மைகள் ஏதுமில்லை என்பது பொருளாதார பெறுபேறுகளின் அடிப்படையில் நிரூபணமாகிறதென ஆபாசக்கலை நிறுவுகிறது. ஆனால் சமமின்மைகள் உயிரியல் ரீதியானவை. பெண்கள் பரத்தையராகவும் பேடிகளாகவும் இருப்பது பாலுறவுக்கு மட்டும் சிறந்தது. பிரத்தியேக சமத்துவ அந்தஸ்துக்கு அவர்கள் யோக்கியதை அற்றவர்கள் என்பது ஆபாசத் துறையின் தர்க்கமாகும். பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகளை நெறிப்படுத்தும் கருத்தியல் நியாயங்களை வடிவமைப்பதில் ஆபாசக்கலைத்துறை பெரும் பங்கு வகிக்கிறது.

ஆண் பார்வையாளர் பட்டாளத்தினை சலிப்பில்லாமல் தொடர் தூண்டுதலில் வைத்திருக்க வன்முறையும் பண்பு வீழ்ச்சியும் மிகையான காட்சிகளை உருவாக்கும் எண்ணத்தில் ஆபாச படைப்பாளிகள் செயல்படுகிறார்கள். படப்பிடிப்புத் தளத்திலேயே பெண்களுக்கு நிஜமான வலிகளை உண்டாக்கும் காரியங்கள் திட்டமிடப்படுகிறது. தொண்டை வரை மூர்க்கமாக குறிகளைச் செலுத்தும் வாய் மூலமான புணர்வு அல்லது முகப்புணர்வு என்பது கொடூரமானது. இதில் பெண்கள் பாவகரமாக விகாரமாக்கப்பட்டு வாந்தி எடுக்கும் நிலை வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். இது போன்ற காட்சிகளில் ஆண் என்பவன் பெண்ணின் முகத்தை கழிப்பறையின் மலப்பாத்திரம் போலவே கையாள்கிறான். இது போன்ற காட்சிகள் பலவந்தமாகவே உருவாக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் மூலம் இப்பட நிறுவனங்கள் கட்டமைக்கும் உளவியல் தாத்பரியமானது பெண்ணைப் புணர்ந்த பின் அகற்றி விடு என்பதுதான்.

குத வழிப் புணர்வு மற்றும் வன்மமான புணர்வு என்பவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மலக்குடல் கிழிந்து குதமானது வெளியே துருத்திக் கொள்ளும் நிலை உண்டாகிறது. இதனை "ரோசா அரும்புதல் " என்கிறார்கள். தொடர்ச்சியாகப் பல ஆண்களினால் குதப்புணர்வுக்கு உள்ளாகும் பெண்கள் படப்பிடிப்பு முடிந்ததும் கை நிறைய வலி தீர்க்கும் வில்லைகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி யோனி மீள் நிர்மாண சத்திரசிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியேற்படுகிறது. நடிகைகள் பாலியல் நோய்களுக்கும் மன அழுத்த வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

சில நீலப்படப் பங்கேற்பாளர்கள் திரை நட்சத்திரங்கள் போல மைய நீரோட்ட ஊடகங்களால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் உள்ளீர்க்கப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் ஆடை அவிழ்ப்பும் ஒழுக்கமீறலும் ஏனைய கலவி நடத்தைகளும் நவ நாகரிகப் பாணியாகி விடுகிறது. இது பெண்கள் மத்தியில் அபாய விளைவுகளை ஏற்படுத்தும் முன்னுதாரணமாகி விடுகிறது.

ஆபாசக் கலையின் பரிந்துரைப்படி பெண்களிடம் இரண்டு விதமான தெரிவுகளே இன்றுள்ளன. ஒன்று புணர்வதற்குத் தயாராய் இருப்பது. மற்றையது மறைவாய் இருப்பது. புணர்வதற்குத் தயாராய் இருப்பதென்பது ஆபாசக் கலாசார உளவியலை உறுதி செய்வதுதான். பார்வைக்கு ஆபாசமாய் இருப்பது. ஆண் தேவைக்கு ஏற்றபடி கீழ்ப்படிவாக இருப்பது. அப்போதுதான் பெண் என்பவள் பார்க்கக் கூடிய நிலையில் இருக்கிறாள் என்பது அதன் அர்த்தம்.

பண்டக் கலாசார வளர்ச்சி துரிதமடைந்திருக்கும் வேளையில் அதன் கர்த்தாக்களான முதலாளித்துவ சக்திகள் ஆபாசத்துறையினையும் முதலீட்டும் நோக்கில் பயன்படுத்துகிறது. இன்றைய அமெரிக்க நடுத்தர வர்க்கமானது எவ்வாறு தமது வருமானங்களைச் செலவிட வேண்டும் என்பதற்கான சுரண்டல் நோக்கில் தேவையற்ற பொருட்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி பணத்தை விரயமாக்கும் பழக்கத்தை முதலாளித்துவம் புகுத்தியிருக்கிறது.

பெண்களின் பொழுது போக்கிற்கென வீடுகளுக்குள் தொலைக்காட்சிகள் கொண்டு வரப்பட்டன. தொழுவத்தின் மத்தியிலுள்ள புல்லை பல கால்நடைகள் ஏக காலத்தில் உண்பது போல ஒரு தொலைக்காட்சியை முழுக் குடும்பமும் நடுக் கூடத்தில் நுகர முடிந்த வேளையில் பெண்கள் சமையற்கட்டில் நேரங்களை செலவழித்தனர். பிறகு சமையற்கட்டில் இருந்தபடி அவர்கள் தொலைக்காட்சியை நுகர்வதற்கான ஏற்பாடுகளும் வீடுகளில் திட்டமிடப்பட்டன. பெண்கள் அதற்கும் பயிற்றுவிக்கப்பட்டு விட்டனர்.

ஆனால் ஆண்களின் ரசிப்புலகம் வேறாக சுழல்கிறது. பணத்தை எவ்வாறு விரயமாக்குவதென்பதற்கான உபாயங்களை எது கற்றுக் கொடுக்றது? அவர்களுக்கு பலவிதமான மஞ்சள் சஞ்சிகைகளும் பலான படங்களும் உள்ளன. இன்று பாலுறவு பண்டமாக்கப் படுவதை விட பண்டங்களை பாலுறவாக்கம் செய்து விற்பது ஒரு பாணியாகியிருக்கிறது. பலான சஞ்சிகைகள் ஏற்படுத்தியிருக்கும் கருத்தோட்டம் விசித்திரமானது. ஒரு சஞ்சிகையினை வாங்கிப் பார்ப்பதென்பது பெண்ணுடலுடன் இன்புறுவதற்குச் சமனான பேறாகும் எனும் மனப்பாங்கை அது உருவாக்கியிருக்கிறது. இந்த உளவியல் கட்டமைப்புத்தான் குறிப்பிட்ட பண்டத்தை நுகர்விப்பதற்கான உந்துதலாக அமைந்திருக்கிறது.

ஆண் மனது ஆபாசப் படிமங்களால் போர்த்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடலுக்கு ஆண் கூட்டு மனத்திடமிருந்து மேல்பூச்சான மரியாதையே கிடைக்கிறது. மேல்தட்டு சமூகங்களின் மறைவான நடைமுறைகளுக்குள் பெண்ணுடல் புணர்ச்சிப் பண்டமாகவே மூடி வைக்கப்பட்டிருக்கிறது.

இலத்திரன் மின் சாதனங்களும் ஆபாச உற்பத்திகளை ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் உந்தித் தள்ள வழியமைக்கின்றன. இதனால் ஆபாசமான பாலுறவுத் தூண்டலை சாவகாசமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாகிறது.

அமெரிக்காவும் உலகின் பெரும்பாலான நாடுகளும் ஆபாச உற்பத்திகளின் நுகர்வு மையங்களாக மாறி வெகு காலமாயிற்று. ஆபாச சினிமாவின் சராசரி ஆண்டு வருமானம் 96 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப் பட்டது. இதில் அமெரிக்காவில் மட்டும் 13 பில்லியன் டொலர்கள் ஈட்டப் படுகிறது. 420 மில்லியன் இணைய ஆபாசப் படங்களும் 4.2 மில்லியன் ஆபாச வலைத்தளங்களும் 68 மில்லியன் தேடல்பொறிகளும் நாளாந்த ஆபாச வேட்கை நுகர்விற்காய் பணியாற்றுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆபாச நுகர்வின் உப விளைபொருளாக பாலியல் வன்முறைகளான வீட்டு துஷ்பிரயோகம், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்பவை அதிகரித்துள்ளன.

ஆபாச ஊடகக் கலையை இன்னும் விரிவாக அணுகும் போது அதன் வீரியம் புரியும். சுற்றுப்புற மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட இந்திய உப கண்ட நாடுகளில் ஆபாச சினிமாக்கள் கைப்பேசி மூலம் இலகுவான புழக்கத்திற்கு வந்து விட்டது. வீட்டில் மடிக்கணினி இருந்தால் அதன் பாவனையாளர் அதனை வீட்டின் நடுக் கூடத்தில் வைத்து இயக்குவதைத் தவிர்த்து விடுகிறார். ஆனாலும் இந்த சங்கடங்கள் ஏதுமில்லாமல் கைப்பேசியை இலகுவாகக் கொண்டு செல்லவும் ரகசியமாக ஆபாசத்தை நுகரவும் முடிகிறது. சராசரியாக குழந்தைகள் கூட ஆபாசங்களை இலகுவில் நுகரக் கூடிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் மட்டுமே இலாபங்களைக் கண்ட பழைய ஆபாசத்துறை இப்போது இல்லை. இன்று தயாரிப்பாளர்களே தொடர்ந்தும் இலாபமீட்டும் நிலையிலும் இல்லை. இப்போது ஆபாசங்களை புதிது புதிதாக விநியோகிப்பவர்களே பணம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளனர். மைன்ட் கீக் போன்ற உலகளாவிய ஐ ரீ நிறுவனங்கள் ஆபாச சினிமா விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை சில இலவச ஆபாச காட்சிகளை இணைய தளங்களில் உலவ விட்டு பருவ வயது இளைஞர்களைத் தூண்டி வசப்படுத்தி பாரிய சுரண்டலுக்கான முன்னோட்டத்தை விரிவு படுத்துகின்றன.12 - 15 வயதுடைய வளரும் பிள்ளைகளின் பாலியல் வார்ப்பு இதனால் மிகைப்பெருக்கம் அடைகிறது. குரூர புணர்வு, வன்புணர்வு போன்ற ஆபாசக் காட்சிகளின் பக்கம் இவர்கள் ஈர்க்கப்படும் போது விகாரமான கற்பிதங்களுக்குள் ஒன்றித்து விடுகையில் நிஜமான பெண்களுடன் பாலுணர்வு நாட்டம் மந்தமடையவும் வாய்ப்புள்ளது. அல்லது நிஜத்தில் பெண்களுடன் விறைப்புடன் நீடித்திருக்க முடியாமல் போகவும் கூடும்.

ஆபாச சினிமாவில் காதல் உணர்வுகள் இருப்பதில்லை. அதில் வெறுப்புகளை உருவாக்கும் உளவியல்தான் செயல்படுகிறது. அங்கு ஆண் பெண்ணை இழிவாகவே நடத்துகிறான். பெண்ணால் ஆண் வெறுப்பும் கலகமும் அடைபவனாக சித்தரிக்கப்படுகிறான். பெண் கீழ்ப்படிவானவளாக உருவகிக்கப்படுகிறாள். அதில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள்ஆண், பெண் சமூகங்களின் மத்தியில் எதுவித கேள்விகளுக்கும் உட்படாமலே போய் விட்டது.

ஆபாச சினிமாக்கள் பாலியல் சித்திரவதைகளை சமூக உளவியலாக ஆண் மனதிற்குள் நிலைநிறுத்தி வருகிறது. பொதுவாக எவரும் அது போன்ற மனநிலையுடன் பிறப்பதில்லை. ஆனால் இந்த சினிமாவினால் அப்படி உருவாக்கப்படுகிறார்கள்.
* இதில் மொழிபெயர்ப்பின் மரபான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.
* இங்குள்ள படங்கள் இரண்டும் சுவாரசியம் கருதி இணைக்கப் பட்டிருக்கிறது. இதில் உள்ள banana பெண் Sasha Grey, இதில் உள்ள apple பெண் Lupe Fuentes. இவர்கள் இருவரும் 2007 காலத்தில் தமது பதினெட்டு வயதில் நீலப்படங்களில் அறிமுகம் ஆன போதும் பின்னர் ஹொலிவூட் சினிமா, இசை, தீவிர இலக்கியம் என தம்மை வளர்த்துக் கொண்டனர்.

நன்றி - அத்தியா
...மேலும்

May 14, 2017

33வது புகலிட பெண்கள் சந்திப்பு


33 வது புகலிட பெண்கள் சந்திப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் கடந்த வாரம் மே 6,7 ஆகிய திகதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.

1988 ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த முதலாவது இலக்கியச் சந்திப்பைத் தொடர்ந்து பெண்களின் சந்திப்புக்கும் தனியான தேவை உணரப்பட்டது. பெண்களின் பிரேத்தியேகமான பிரச்சினைகளை தனித்தும், பெண்கள் தமக்குள் சுதந்திரமாக பகிர்ந்துகொள்வதற்குமான தளத்தை உருவாக்கிக் கொண்டார்கள். அங்கு பெண்ணியம் சார்ந்த கோட்பாட்டு பிரச்சினை தொடக்கம் “கலாசார” கட்டுடைப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை பன்முக நோக்கில் ஆராய்வது என்று தொடர்ந்தது பெண்கள் சந்திப்பு. அதன் விளைவாக பெண்களுக்கான இலக்கிய சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் அவர்களால் கொண்டுவரப்பட்டன.

அந்த வரிசையில், ஊதா, மறையாத மறுபாதி என்ற தலைப்பில் வெளிவந்த புலம்பெயர்ந்து வாழும் பெண் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு, நோர்வேயிலிருந்து சக்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு, புது உலகம்; எமை நோக்கி, ஊடறு என்பன போன்ற சில படைப்புக்களைக் குறிப்பிடப்படலாம். இவை தனிப்பட்ட நிதிமுதலீட்டுடன், எந்தவொரு அமைப்பினதும் அனுசரணையின்றி புலத்தில் சுதந்திரமாக வெளிவந்த படைப்புக்களாகும்.

ஆணாதிக்க உலகில் தமக்கு நேரும் இன்னல்கள், சுதந்திரமான வளர்ச்சிக்கான தடைகள், பாரம்பரியமாகத் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறிப் புலத்தில் தமது இருப்பை ஆணித்தரமாகப் பதியவைக்கும் போக்கை புகலிட பெண் எழுத்தாளர்களிடம் காண முடிகிறது.

புகலிட மாற்று சமூக, அரசியல், இலக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஆறுதலான தளமாக பெண்கள் சந்திப்பும், இலக்கிய சந்திப்பும் கடந்த மூன்று தசாப்த காலமாக இருந்து வந்திருக்கிறது.

புகலிட சூழலில் அரசியல் மற்றும் கலாசார வெகுஜன அமைப்புகள் பற்பல ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அவை எதுவும் அதிக காலம் நின்று பிடிக்கவில்லை. நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த அமைப்பும் நிலைக்கவில்லை என்பதை சுயவிமர்சனத்தோடு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இலக்கிய சந்திப்பும், பெண்கள் சந்திப்பும் இத்தனை வருடகாலம் தொடர்ச்சியாக நிலைத்து நின்று பிடித்திருப்பதற்கான காரணம் அதற்கு நிறுவன வடிவம் கிடையாது என்பதால் தான். அதனால் தான் இந்த சந்திப்பை எவரும் உரிமை கோரவும் முடியாது. எந்த அரசியல் இயக்கமும் இதன் பின்னால் இல்லை. காலத்துக்கு காலம் தோன்றிய அதிருப்தியாளர்களாலும் இதனை உடைக்க முடியவில்லை. காரணம் உடைப்பதற்கான “நிறுவன வடிவம்” அதற்கு இல்லை. அனைவரையும், அனைவரது கருத்துக்களையும் சங்கமிக்கச் செய்யும் தளம் மட்டுமே இவை. இதற்கென்று நிலையான யாப்போ, நிர்வாகமோ போஷகர்களோ கிடையாது. இந்த செயல் வடிவம் ஒரு முன்னுதாரணமான ஒன்றாக பேசப்படுகிறது.

ஒவ்வொரு சந்திப்பும் நிகழும் போது அது நிறைவடையும் நேரத்தில் அடுத்த சந்திப்புக்கான யோசனை கலந்துனர்களிடம் கேட்கப்படும். அங்கு கலந்து கொண்ட ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்தவர் தாம் அடுத்த சந்திப்பை தமது நாட்டில் நடத்தவிருக்கும் விருப்பத்தை பரிந்துரைப்பார். வேறெவருக்கும் அதில் ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் அவர் கேட்டுக்கொண்ட நாட்டில் அடுத்தது நடக்கும். அப்படி வேறொரு நாடும் தமது விருப்பத்தை தெரிவிக்கும் பட்சத்தில் அங்குள்ளோரிடம் வாக்கெடுப்பு எடுத்து பெரும்பான்மை ஆதரவு பெற்றவர்கள் அந்த சந்திப்பை பொறுப்பேற்பார்கள். பொறுப்பேற்றவர்கள் அந்த சந்திப்பை நடத்தி முடிக்கும் வரையான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். செலவுகளை கலந்து கொள்ளும் அனைவரும் பகிர்ந்துகொள்வார்கள். சில சந்தர்ப்பங்களில் செலவுகளை பகிர்ந்து கொள்ளாமல் தாமே அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

இந்த சந்திப்புகளுக்கு இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து சிறப்புக் கலந்துனர்களாகவும் பலர் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பல சமூக, இலக்கிய செயற்ப்பாட்டாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து இலக்கியத்தை மட்டுமன்றி அன்பையும், தோழமையும் பரிமாறி மகிழ்வுறும் சந்திப்புகளாக இவை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

17.3.1990 இல் தமது முதலாவது பெண்கள் சந்திப்பினை ஜேர்மனியில் நிகழ்த்தத் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ், போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருப்பதுடன் 8 தடவை பெண்கள் சந்திப்பு மலர்களையும் வெளியிட்டிருக்கின்றனர்.

தமது தாய் நாட்டில் சாதாரண பெண்களாக இருந்தவர்கள் கூட இந்த பெண்கள் சந்திப்புகளின் மூலம் இலக்கியவாதிகளாகவும், சமூக செயற்பாட்டாளர்களாகவும், பெண்ணிய செயற்பாட்டாளர்களாவும் ஆகியிருக்கிறார்கள். ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தினகரன் - 14.05.2017
...மேலும்

May 9, 2017

கம்பீர நடிப்புக்கு அடையாளம் தந்தவர் மாதுரிதேவி“ஆம்!  பதியைக்  கொன்றேன்.  ஆனால், பெண் இனத்தை மண்ணில் நெளியும் புழுக்கூட்டமாக நினைத்த ஒரு பாவியைத்தான் கொன்றேன். என்னையே கொல்ல வந்த ஒரு விஷப் பூச்சியைத்தான் கொன்றேன். ஒரு பெண்ணுக்கு அன்பிருக்கும் அளவுக்கு வீரப் பண்பும் இருக்கும் என்பதை மறந்த ஒரு மகா பாவியைத்தான் கொன்றேன். 

ஏன்? என் மேல் பழியா? கொலைகாரியா? நான் அவரைக் கொல்லாவிட்டால் அவர் என்னைக் கொன்றிருக்க மாட்டாரா? அவர் இப்படிக் கொல்லப்படாவிட்டால் உலகத்தில் எத்தனை கோடி கொலைகள் செய்திருப்பார்? அன்பே என ஆசையாய் அழைக்கும் எத்தனை பெண்களை  தன் ராட்சச நகங்களால் பிறாண்டியிருப்பார்?” இந்தக் கேள்விகளில்தான் எத்தனை உண்மை பொதிந்திருக்கிறது. 

‘மந்திரி குமாரி’ படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அரச சபையில் நீதி கேட்டுப் போராடும் கதாநாயகனுக்கு ஆதரவாக ‘நானிருக்கிறேன்’ என்று அபயமளித்து, பின் மாதுரிதேவி உணர்வும் வீரமும் தெறிக்கப் பேசும் வசனம் இது. எழுதியவர் கலைஞரென்றால், பேசி நடித்தவர் மகா கலைஞர். ‘மந்திரி குமாரி’ படத்தின் கதாநாயகன் என்றும் அவரைச் சொல்லலாம்; தவறில்லை. அந்த அளவு அற்புதமான நடிப்பை வழங்கி படம் முழுதும் ஆக்கிரமித்திருப்பவர் மாதுரிதேவி. 


அவர் வசனம் உச்சரிக்கும் பாங்கு ஏற்ற இறக்கங்களுடன், கோபம் கொப்புளிக்க வீரக்கனல் தெறிக்க என பல படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து ரசிக்க முடியும். உடல் மொழியிலும் அதை ஈடுகட்டும் கம்பீரம் தொனிக்கும். தமிழ்த் திரையுலகில் வீரம் மிக்க பெண்ணாக, கம்பீரமான பல ஆண் வேடங்களை அதிகம் ஏற்று நடித்தவர் இவர் ஒருவர் மட்டும்தான் என்று சொல்லலாம். நடிப்பின் மீதான அதீதப் பற்றுதலும் காதலும் மிகச் சிறு வயதிலேயே மாதுரிக்கு ஏற்பட்டு விட்டது. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், நிறைய படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியதால், நடிப்பின் மீது நாட்டம் இயல்பாகவே படிந்துவிட்டது. 

கருப்பர் நகரத்தில் உதயமான நாயகி

வெள்ளைக்காரர்களால் சென்னையின் பழமையான ‘கருப்பர் நகரம்’ என்று அடையாளம் காட்டப்பட்டது ராயபுரம். அந்தப் பகுதியில் சூசை முதலியார்- மனோரஞ்சிதம் தம்பதியரின் மகளாக 1927ல் பிறந்தவர் க்ளாரா. தெய்வ பக்தி மிகுந்த ரோமன் கத்தோலிக்க கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த சிறுமி க்ளாராவுக்கும் எல்லோரையும் போல சினிமா மீது ஆழ்ந்த காதல் இருந்தது. செயின்ட் ஆன்டனி பள்ளியின் மாணவி. பாடத்தை விட, சினிமாப் பாடல்கள் பாடுவதிலும் ஆடுவதிலும் மிகுந்த விருப்பம். 

கர்நாடக இசைப் பயிற்சியைப் புகழ் பெற்ற பாடகியும், பின்னர் நடிகையுமான என்.சி.வசந்த கோகிலத்திடம் பெற்றார். இயல்பான ஆர்வம், சில தோழிகளின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி எப்படியாவது தானும் சினிமாவில் தலை காட்டி விட வேண்டும் என்ற ஆசை பிடித்தாட்டியது. 

இவரது ஆர்வத்தைப் பார்த்து கோசலம் என்ற நண்பர் ஒருவர் ‘சியாம் சுந்தர்’ படத்தில் நடிப்பதற்காக வேண்டி அணுகினார். ஆனால், ‘அப்பா இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரே’ என்ற கவலையும் உள்ளூர அரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆசை வெட்கமறியாமல் பயத்தை உதறித் தள்ளியது. எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அப்பாவின் காதில் மெல்ல செய்தியைப் போட்டு விட்டார். 

எந்தக் குடும்பத்தில்தான் தங்கள் மகள் சினிமாவில் நடிப்பதைப் பெற்றவர்கள் விரும்புவார்கள். எல்லா அப்பாக்களையும் போலவே சூசை முதலியாரும் ‘நோ’ சொல்லி விட்டார். ‘பொம்பளப் புள்ளை, அதிலும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பொம்பளப் புள்ளைக்கு சினிமா கேட்குதா?’ என்று ஒரே வார்த்தையில் தடை விதித்துவிட்டார். 

ஆனால் மகளின் பிடிவாதம் கொஞ்சம் அவரைப் பணிய வைத்தது. ‘பெரிய மனுஷி’ ஆகும் வரை சினிமா, டிராமா எல்லாம்….’ என்று ஒரு நிபந்தனையையும் சேர்த்து ஒப்புதல் கொடுத்தார்.. பள்ளிப்படிப்பு பாதியில் நின்றது. ‘அப்பாவிடமிருந்து அனுமதி கிடைத்ததே பெரிய விஷயம்’ என்று க்ளாராவும் அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டாள். இந்த க்ளாரா திரையுலகில் அறிமுகமாகி பின்னாளில் மாதுரிதேவி என்ற பெயரில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமானார். 

மெல்லப் பரவிய புகழ் வெளிச்சம் 

1939ல் வெளிவந்த ‘பாண்டுரங்கன்’ என்ற படத்தில் இந்திராணி வேடமேற்று நடித்தார். அடுத்து 1940ல் ‘போலி பாஞ்சாலி வாயாடி’ என்ற நகைச்சுவைப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுடன் இணைந்து நடித்தார். ஏ.டி. கிருஷ்ணசாமி இயக்கிய இப்படத்தை  தயாரித்தவர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். நகைச்சுவை ததும்ப மாதுரிதேவி நடித்தாராம்! 

வயதுக்கு மீறிய வேடங்களே இரு படங்களிலும் வாய்த்தன. ’பெரிய மனுஷி’ ஆகாமலே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை அவருக்கு. அத்துடன் ‘தான் பெரிய மனுஷி’யாகிவிட்டால் படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுமே என்ற பயமும் ஏக்கமும் மனதை அரித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் மாதுரியின் பிரார்த்தனை ‘நான் பெரிய மனுஷி’ ஆகிவிடக்கூடாது’ என்பதாக இருந்தது. அவர் பயந்ததைப் போலவே நடைமுறையும் இருந்தது. பின்னர், அப்பா, அவரைத் தொடர்ந்து நடிக்க அனுமதிக்கவில்லை.

மாதுரிதேவியின் மறு விஜயம் 

இரு படங்களுடன் திரையுலக வாழ்வு ஏறக்குறைய முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், ஏழாண்டுகள் இடைவெளிக்குப் பின் 1947ல் பொம்மன் இரானி இயக்கத்தில் ’லட்சுமி விஜயம்’ மூலம் மீண்டும் சினிமாவுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது மாதுரி தேவிக்கு. அதற்கான முயற்சி எடுத்தவர் டி.வி.சாரி. என்பவர். 

திருமழிசை ஆழ்வார் பற்றிய நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக பெற்றோருடன் சென்றபோது, டி.வி.சாரியின் தூண்டுதலாலும், முயற்சியாலும் மீண்டும் மாதுரி தேவியை திரையுலகம் பெற்றது. ஜாக்பாட் அடித்ததைப் போல அமுதா, குமுதா என்று இரட்டை வேடம் வாய்த்தது. பி.எஸ்.கோவிந்தன் கதாநாயகன். அதன் பிறகு தடையேதும் விதிக்காமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க அப்பா பச்சைக்கொடி காட்டி விட்டார்.  

1948 இல் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘மோகினி’ படத்தில் டி.எஸ். பாலையாவுக்கு ஜோடியாக நடித்தார். ‘ஆடு பேயே’ என்ற பாடலுக்கு அற்புதமாக ஒரு மோகினியாட்டமும் ஆடினார். எம்.ஜி.ராமச்சந்திரன், வி.என். ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படமும் மிகப் பெரிய வெற்றிப் படமானது. மாதுரிதேவி அவர் விருப்பத்துக்கேற்ப புகழ் பெற்ற நடிகையானார். 

இரட்டை வேடத்தில் கன்னியும் காதலனும்

மீண்டும் ஒரு ஜூபிடர் படம், ‘கன்னியின் காதலி’ (1949). ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ என்ற பிரபல நாடகத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஆண்- பெண் என இரட்டை வேடங்களில் நடித்தார் மாதுரி தேவி. அவரது திறன் முழுமையும் நன்கு வெளிப்பட்ட படமாக அது கொண்டாடப்பட்டது. 

எஸ்.ஏ. நடராஜன், கே.ஆர். ராம்சிங், அஞ்சலி தேவி மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வழக்கமாக இரட்டை வேடம் என்றால் ஒத்த உருவச் சாயல் கொண்ட சகோதரர்களாகவோ, சகோதரிகளாகவோ தான் அதுவரை படங்கள் வெளிவந்தன. ஆனால், அந்த நடைமுறையை மாற்றியது இப்படம். ஒரே முகச்சாயல் கொண்ட அண்ணனும் தங்கையும் எதிர்பாராத விதமாகப் பிரிய நேர்கிறது. 

இருவரும் வெவ்வேறு இடங்களில் வளர்கிறார்கள். அண்ணன், தங்கை என இரட்டையரில் ஒரு ஆண் வேடத்தையும் மாதுரிதேவி சவாலாக ஏற்றார். ஒரு சந்தர்ப்பத்தில் தங்கை மாதுரி தேவியும் ஆண் வேடத்தில் ஒளிந்து வாழும் நிலை ஏற்படுகிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வசந்தபுரி மன்னனிடம் (புளிமூட்டை ராமசாமி) அடைக்கலம் தேடி வருகிறாள். 

ஆண் வேடத்திலிருக்கும் அவரை ஆண் என நம்பி அரண்மனையின் ஆஸ்தானக்கவி ஆக்குகிறான் மன்னன். இங்குதான் படத்தின் திருப்புமுனை அமைகிறது. மன்னனின் மகளான கன்னி, ஆண் வேடமிட்ட பெண்ணைக் காதலிக்கிறாள். எனவே கன்னியின் காதலியாகிறாள். இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்து வழக்கம் போல சுபமாக முடியும் கதை. படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது. 

மூன்று சவாலான வேடங்கள்  

மாதுரி தேவிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை வேடங்கள். அடுத்து ஆண் வேடம் போட வேண்டிய சூழல். உண்மையில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா என மூன்று வேடங்கள். இவற்றில் இரண்டு ஆண் வேடங்களுக்கும் இடையில் வித்தியாசமாக தோன்ற வேண்டும். மிகப் பெரிய சவால்தான் அது. ஆனால், கொஞ்சமும் சளைக்காமல் அதைச் செய்து முடித்திருப்பார் மாதுரி என்றே நம்பலாம். 

அதேபோல இரண்டு ஆண் வேடங்களின் குரலிலும் கூட வேறுபாடு தெரிய வேண்டுமென்பதால், அக்காலத்தில் இளைஞராக, அறிமுக நடிகராக இருந்த நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் குரலை இரவல் குரலாகப் பயன்படுத்தியதாகத் திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கய் எழுதுகிறார். 

தமிழர் வாழ்வைப் பேசிய பொன்முடி

1950ல் பொங்கலன்று வெளியான ‘பொன்முடி’ பாவேந்தர் பாரதி தாசனின் ’எதிர்பாராத முத்தம்’ என்ற நாடகத்தின் திரை வடிவம். பீரியட் ஃபிலிம் என்றும் சொல்லலாம். ராஜா ராணி கதையல்ல. தமிழர் வாழ்வை, பண்பாட்டை, வணிகர்களின் வாழ்க்கை நடைமுறைகளை, காதலின் மேன்மையை மிக அழுத்தமாகப் பதிவு செய்த படமென்றும் குறிப்பிடலாம். முத்து வணிகர்களின் அன்றாட நடைமுறை, பணம் படைத்த வணிகர்களே என்றாலும் எவ்வளவு எளிமையான வாழக்கையை அவர்கள் கைக்கொண்டார்கள் என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம். 

கதாநாயகன் பொன்முடியாக நடித்தவர் நரசிம்ம பாரதி. சிறு வயது முதலே மாமன் மகளாகவும் காதலி பூங்கோதையாகவும் மாதுரிதேவி நடித்திருப்பார். வெகு இயல்பான நடிப்பு. படம் முழுதுமே அலட்டல்கள், அதீத நடிப்பு, நாடகத்தனமான காதல், கதை என்றில்லாமல் இயல்பானதாகவே அனைத்தும் அமைந்திருப்பது சிறப்பு. கருப்பு, வெள்ளை காவியம் என்றாலும் மிகையில்லை. 

இனிய தமிழ்நாட்டின் இயல்புடன் கூடிய களங்கமற்ற காதல் கதை” என இப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டது. காதலர்களின் நெருக்கமான காதல் காட்சிகள் அப்போதைய சினிமாவுக்கு மிகப் புதிது. இந்தப் படத்தில் மட்டுமல்லாது அவர் நடித்த பல படங்களில் காதல் காட்சிகளில் மிக இயல்பாகவும் கதாநாயகர்களுடன் மிக நெருக்கமாகவும் நடித்திருப்பார். 

அமெரிக்கரான இயக்குநர் எல்லீஸ்.ஆர்.டங்கன், டி.ஆர்.சுந்தரத்துடன் இணைந்து மிகச் சிறப்பாக இயக்கியிருப்பார். மிகப் பெரும் வெற்றியை ஈட்டித் தந்த படம் இது. அத்தை மகன் பொன்முடி அத்தானின் மீது அளவற்ற அன்பும், காதலும், பிரியமும் என அனைத்தையும் ஒருசேர வைத்து, அவனைப் பிரிய மாட்டேன் என பிடிவாதம் செய்வதிலாகட்டும், இரு தரப்பு பெற்றோர் மத்தியில் உறவில் விரிசல் ஏற்பட்டு, காதல் கைகூடாது என்ற நிலை வந்தபோதும், கொண்ட காதலில் மாறாத உறுதியுடன், வியாபாரம் செய்வதற்காக குழுவுடன் சென்றிருக்கும் காதலனைத் தேடிச் சென்று ஆண் வேடத்தில் அவனை ஆபத்திலிருந்து மீட்பது வரை என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடித்திருப்பார் மாதுரி தேவி. சில காட்சிகளில் அவரது நடிப்பைப் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பு நம்மை விட்டு அகல மறுத்து அடம் பிடிக்கும். 

அறிவின் பெருக்கு ‘மந்திரி குமாரி’ அமுதவல்லி 

‘மந்திரி குமாரி’ மாதுரி தேவியின் புகழை உச்சத்தில் நிறுத்தியது. அமுதவல்லியாக, அன்பும் பண்பும் கொண்டவளாக அதே நேரம் கொடுமைகளைக் கண்டு பொங்கியெழுபவளாக வீரத்தின் விளைநிலமாக, தவறு செய்பவன் கணவனே என்றாலும் அவனைக் கண்டிப்பவள். தன்னைக் கொல்ல வரும்போது, சமயோசித அறிவின் மூலமாக அதே வழியைப் பின்பற்றி அவனைக் கொல்பவள்.

‘மந்திரி குமாரி’யில் எம்.என்.நம்பியார், எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.ஏ.நடராஜன், மாதுரி தேவி, ஜி.சகுந்தலா என பலரும் நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரும் ஜி.சகுந்தலாவும் தான் நாயக  நாயகிகள். ராஜ குருவான நம்பியார் வில்லன். அவருடைய மகனான எஸ்.ஏ.நடராஜன் வில்லனைத் தூக்கி விழுங்கும் மகா வில்லன். திருட்டு, கொள்ளை இவற்றை கலையாக என்ணி ரசிப்பவன். 

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான ‘குண்டலகேசி’ காப்பியத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு அடுத்து இன்றைக்கும் இப்படம் தொடர்பாக பேசப்படுபவர்கள் மாதுரி தேவி, எஸ்.ஏ.நடராஜன், நம்பியார் மூவரும்தான். அவ்வளவு வலிமையான பாத்திரங்கள். இத்தனை கதாபாத்திரங்களையும் பின்னால் தள்ளி முதலிடம் பெறுபவர் ‘மந்திரி குமாரி’ யான மாதுரி தேவியே. ‘உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே…, ‘வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்… ’ இரண்டு பாடல்களும் என்றும் நினைவில் நிற்பவை. 

50களில் பிற படங்கள் 

1950கள் முழுவதும் அவருடைய படங்கள் வெளியாயின. அதில் வெற்றி, தோல்வி என எல்லாம் கலந்தே இருந்தது. பின்னாட்களில் ஜாம்பவான்கள் என அறியப்பட்டவர்களின் படங்களில் எல்லாம் அவர் நடித்தார். அதே போல பெரிய நிறுவனங்களான மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர் என பெரு நிறுவனங்கள் தயாரித்த படங்களின் நாயகியுமானார். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக இல்லாவிட்டாலும் பல படங்களில் நடித்தார். 

எம்.ஜி.ஆரே அப்போது அறிமுக நிலையில்தானே இருந்தார். ‘மோகினி’, ‘மர்மயோகி’ ‘என் தங்கை’ போன்ற படங்கள் வெற்றிப் படங்கள். 1951ல் ‘தேவகி’ படத்தில் வி.என்.ஜானகியின் தங்கையாக நடித்தார். லண்டன் சென்று மேற்படிப்பு முடித்துத் திரும்பும் நாயகி, தன் அக்காளின் வாழ்க்கையில் வீசிய துன்பங்களுக்கு எதிராகப் போராடி அவரைக் காக்கும் பெண்ணாக நடித்தார். இப்படத்திலும் கலைஞர் கருணாநிதியின் வசனங்களே இடம் பெற்றன. 

சிறை சென்று மீண்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் வெளியான ‘புதுவாழ்வு’ படத்திலும் இவர்தான் நாயகி. ஆனால், பாகவதருக்கு இப்படத்தின் மூலம் புதுவாழ்வு ஏதும் கிட்டவில்லை. ‘நல்ல தங்கை’ என்றோர் படம். படித்த பெண் படிக்காத நபரையும், படிக்காத பெண் படித்த பட்டணத்து வாலிபரையும் மணந்து கொள்வதான கதை. 

இதில் அதிகம் படித்த நாகரிகமான பெண்ணாகத் தோன்றி, படிக்காத கணவராக நடித்த நம்பியாரை மாற்றுவதாக அவரது வாழ்க்கையையே திசை திருப்பிக் கொள்வார். படிக்காத தங்கையாக ராஜசுலோசனா நடித்தார். ஏ.பி.நாகராஜனின் கைவண்ணம் இப்படம். சிவாஜியுடன் ஒரே ஒரு படம் ‘மனிதனும் மிருகமும்’ இது 1953ல் வெளியானது. 

அண்ணன்- தங்கை அன்புக்கு அடையாளம் 

இன்றளவும் அண்ணன்-தங்கை பாசத்துக்கும் வறுமையின் கொடுமைக்கும் உதாரணம் சொல்லப்படுவது ‘நல்லதங்காள்’ கர்ண பரம்பரைக் கதை. அதன் வீச்சு, உடன் பிறந்த அக்காள், தங்கைகளுக்கு பச்சை சேலை வாங்கி சீராகக் கொடுக்காவிட்டால், அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை அதோகதிதான் என்று பயமுறுத்தி, அன்பை, சகோதர பாசத்தை வளர்ப்பதில் வந்து முடிந்ததையும் 90களில் கண்டோம். 

இந்த நல்லதங்காளின் கதை படமாகவும் மாறியபோது, நாத்தனார் நல்லதங்காளை கொடுமைப்படுத்தி விரட்டும் அண்ணி மூளி அலங்காரியாக வில்லி வேடமேற்று நடித்தார் மாதுரி தேவி. நல்லதங்காளின் ஏ.பி.நாகராஜன். இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அண்ணன் நல்லதம்பியாகவும் அவரே நடித்தார். 

அன்பின் வெளிப்பாடாக தங்கையைப் பார்த்துப் பாடும் ‘பொன்னே புதுமலரே, பொங்கி வரும் காவிரியே’ பாடல் இன்றைக்கும் காதுகளுக்குக் குளுமை. இம்மாதிரி கதைகள் எப்போதும் பெண்களை ஈர்க்கக் கூடியவை. வெளியான நேரத்தில் படம் ஓடாவிட்டாலும், பின்னர் திரையிடும்போதெல்லாம் திரையரங்குகளில் பெண்கள் கூட்டம் குழுமி, கண்ணீர் வெள்ளத்தில் மிதக்க விட்டார்கள். படமும் வசூலை வாரிக் குவித்தது. 

நடிகைகளில் சாமுராய் 

வழக்கமாக 1940-50 காலகட்டத்து நாயகிகள் சோகம் கவிந்த முகங்களுடன், உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் துயரங்களையும் ஒருசேர அனுபவித்துக் கொண்டு, பிழியப் பிழியக் கண்ணீர் விட்டு, மூக்கைச் சிந்திக் கொண்டிருந்த நிலையில், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நாயகியாகத்தான் மாதுரிதேவி தமிழ்த் திரையில் தோன்றினார். 

கம்பீரமான பெண்ணாக, ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே தன் உரிமையைப் பேசுவதாக அல்லது மரபை மீறி அதை உடைத்து நொறுக்குவதாக என அமர்க்களப்படுத்தியவர் இவர் ஒருவர்தான். பல படங்களில் சளைக்காமல் ஆண் வேடம் ஏற்றவர். ’பொன்முடி’, ‘ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி’, ‘மந்திரிகுமாரி’, ‘கன்னியின் காதலி’ என பல படங்கள். 

அதிலும் கதாநாயகர்களுக்கு நிகராக வாள் வீச்சிலும் ஈடுபட்டு சண்டைக் காட்சிகளிலும் அசத்தியவர். ஒரு வெற்றிகரமான போர் வீரனைப் போல அவர் தோன்றுவதால் ‘சாமுராய்’ என்றும் அவரைக் குறிப்பிடலாம். மிக இளம் வயதிலேயே தன் தந்தையின் வங்காள நண்பரின் மகன் சாந்தி முகர்ஜியைக் காதலித்து 1944ல் திருமணம் செய்து கொண்டவர். அதன் பிறகே பல படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வெற்றிகரமான நடிகையானார்.  

சொந்தப் படம் தந்த அனுபவங்கள்

நடிப்பின் வழியாக சம்பாதித்த பணத்தை சொந்தப் படங்களில் முதலீடாகச் செலுத்தி வெற்றி பெற்றவர்களை விட தோல்வியைச் சந்தித்தவர்களே அதிகம். அதே தவறை மாதுரி தேவியும் செய்தார். 1953ல் ‘ரோகிணி’ என்ற படத்தைத் தன் கணவர் எஸ்.முகர்ஜி பெயரில் சொந்தமாகத் தயாரித்தார். அவர் தேர்வு செய்த ‘கிருஷ்ணகாந்த்தின் உயில்’ என்ற வங்காளக் கதைக்குச் சொந்தக்காரர் பங்கிம்சந்திர சட்டர்ஜி. ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதியவரும் அவரே. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. 

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பல படங்களில் நடித்தாலும், மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியதைப் போல, தயாரிப்பு மோகம் தலைக்கேறியது. எப்படியாவது விட்ட பணத்தைப் பிடித்து விடலாம் என்ற என்ணமும் காரணமாக இருக்கலாம். 1959ல் ‘மாலா ஒரு மங்கல விளக்கு’ என்ற படத்தைத் தயாரித்ததுடன், கணவரும் ஒளிப்பதிவாளருமான சாந்தி முகர்ஜியை இயக்குநராகவும் நியமித்தார். 

ஆனால், தோல்விதான் பலனாகக் கிடைத்தது. அப்போது சினிமாவில் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி போன்ற திறமையான அழகான இளம் நடிகைகள் பலரும் முன்னணியில் இருந்ததால், மாதுரிதேவி அவர்களுடன் போட்டியிட முடியாத நிலை. சொந்தப் படம் தோல்வியடைந்த அதிர்ச்சி எல்லாமும் சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்தது. 

1962ல் திரையுலகை விட்டு முற்றிலும் விலகினார். அதன் பின் திரையுலகுடன் அதிகம் தொடர்பில்லாமல் வாழ்ந்தார். சிறுநீரகக் கோளாறு மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 1990 ஜூன் மாதத்தில் காலமானார். ராயபுரம் ஞானப்பிரகாசியார் கல்லறையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாதுரிதேவி தமிழ்த்திரை ரசிகர்கள் மனதில் என்றும் வீரம் மிக்க பெண்ணாக நாயகியாக ஒளிரும் நட்சத்திரமாகவே நிலைத்திருக்கிறார்.  
(ரசிப்போம்!)

நன்றி - குங்குமம் தோழி

...மேலும்

May 6, 2017

‘‘இந்தியப் பெண்களின் மனசாட்சி பில்கிஸ் பானு’’ தன்னை சிதைத்தவர்களை சட்டத்தால் தண்டித்து நிரூபித்தவர்


பில்கிஸ் பானு

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த கோர சம்பவம் அது. இன்று, இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வர். கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகான கலவரத்தில் பில்கிஸ் பானு சந்தித்த, நேர்ந்த கொடுமையை வார்த்தைகளில் வார்க்க முடியாது. 6  மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை பத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணை பலாத்காரம் செய்யும் வெறியை அந்த ஆண்களுக்கு கொடுத்தது எதுவாக இருக்கும் என்றுயோசித்துக் கொள்ளுங்கள். 

பாலியல் வன்கொடுமையில் பில்கிஸ் பானுவின் உடலை ரணமாக்கியதோடு அந்தக்கும்பல் நிற்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்று குவித்தனர். அவரின் மூன்று வயது குழந்தையை கல்லில் அடித்துக் கொன்றனர். மொத்த நம்பிக்கையையும் சிதைத்து அவரது உயிரை மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர். இத்தனை கொடுமைகளுக்கு பின்னும் ஒரு பெண் எழுந்து நின்று எதிரிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர போராடுவது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. குற்றத்தை நடத்தியிருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் அவர்கள் தப்பித்து விடவும் வாய்ப்புகள் அதிகம். 

ஆனால், அவரை உடலால் சிதைக்க முடிந்தவர்கள் அவர் மன உறுதியிடம் தோற்றுப் போனார்கள். உறவுகளையும் பெற்ற மகளையும் இழந்த அந்தப் பெண் மீண்டும் உயிரோடு வாழ வேண்டும் என்று நினைத்ததே தன்னை சிதைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆம்! பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்கள் மறுத்துள்ளனர். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை பில்கிஸ் பானுவின் புகாரைக் கூட ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளது. தன்னை கொடுமைப்படுத்திய, அலட்சியப்படுத்திய யாரையும் அவர்  விட்டுவைக்கவில்லை. அத்தனை பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தார். சட்டத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கை வீண் போவில்லை.

அவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் புகாரை ஏற்காமல் அலட்சியம் காட்டிய ஐந்து போலீசார் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தவறிய இரண்டு மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். குஜாராத்தின் அகமதாபாத்தில் வழக்கு விசாரணை நடந்தால் குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என்ற அவரது முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு விசாரணையை மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றியது. அவர் மன உறுதியோடு தொடர்ந்து போராடினார். இழப்புகள் தந்த வலி அவரை உறங்க விடாமல் நீதிக் கேட்டுத் துரத்தியது. குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது பில்கிஸ் பானுவுக்கு மட்டுமே கிடைத்த வெற்றியன்று. ஒட்டுமொத்த இந்தியப்பெண்களின் மனசாட்சியாக பில்கிஸ் பானுவை உயரச் செய்துள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அதிலிருந்து மீள்வது அவ்வளவு சாதாரணம் கிடையாது. உடலில் ரணம் ஆறிய பின்னும்கூட மனம் அடையும் காயம் ஆறாது. தூக்கத்திலும், விழிப்பிலும் துரத்திக் கொல்லும். பாதிக்கப்பட்ட பின் ஆளும் அரசையும், ஆட்சியாளர்ளையும் எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும்போது தொடர்ந்து மிரட்டல்களை அனுபவிக்க வேண்டி வரும். பாதுகாப்பும், இருப்பிடமும் தேடி ஓட வேண்டிய அவலமும் நேரும். மொத்த வாழ்க்கையும் ரணமாகிப் போன பெண் அதன்பின் உயிர்வாழும் ஒவ்வொரு நிமிடமும் மர்ரணத்தின் விளிம்பில் இருப்பதுபோலத்தான். அந்த வாழ்வையே நீதிக்கான போராட்டமாக அவர்  தொடர்ந்துள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பின் அவரது நெற்றியில் நீதி தேவதை வெற்றித் திலகமிட்டு வாழ்த்தியிருக்கிறாள். 

பில்கிஸ் பானுவின் வெற்றியை வழக்கறிஞர் ச.பாலமுருகன் தனது முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘2002-ம் ஆண்டு குஜராத்தில் அரசும் இந்துத்துவா வெறியர்கள் நடத்திய வன்முறையில் உயிர் பிழைக்க தனது குடும்பம் குழந்தைகள் உடன் 19 வயதான பில்கிஸ் பானு ஓடும்போது 30-க்கும் மேற்பட்ட வெறியர்கள் அவர்களைத் தாக்கினர். அவள் பாலியல் வல்லுறவு எதிர்கொண்ட போது அவள் குழந்தை கண்ணெதிரே கொல்லப்பட்டது. அவளது குடும்பத்தினர் 14 பேரும் கொல்லப்பட்டனர். அதில் 4 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளும் அடக்கம். உயிர்ப் பிழைத்த அவள் கொடுத்த புகாரைப் பதிவு செய்ய மறுத்தது காவல் துறை. பெரும் போராட்டத்துக்குப் பின் வழக்கு பதிவுசெய்த போதும் வழக்கை நீர்த்துப் போகச்செய்ய எல்லா முயற்சிகளையும் எடுத்தது காவல் துறை. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின் மும்பை உயர்நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்டோர் தங்கள் நியாயங்களுக்காக நடத்தும் போராட்டம் வலியும், சோர்வும், அச்சமும் நிறைந்தது. அதனைக் கடந்து ஜனநாயக சமூகத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய சகோதரி பில்கிஸ் பானு இந்தப் பெண்களின் மனசாட்சியாக எழுந்துள்ளார். வாழ்க சகோதரி,’’ என்று பதிவு செய்துள்ளார். நம்பிக்கையின் கரம் பற்றி தங்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடத் துணியும் பெண்களின் மனசாட்சியும் இனி பில்கிஸ் பானு தான்.

Photo Credit: outlookindia.com

நன்றி - ஆனந்த விகடன்
...மேலும்

May 5, 2017

மலையக பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வளர்ப்பதற்கான வழிகள் - தயானி விஜயகுமார்


இலங்கையில் வாழக்கூடிய பல்லின சமூகத்தவர்களில் நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப்பிடிக்கக்கூடிய முக்கிய பங்காளியாக காணப்படும் மலையகப் பெண்களின் வாழ்க்கை நிலையானது மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. தேயிலைத் தொழில்துறை, ஆடை கைத்தொழில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு என முத்துறைகளில் தடம் பதித்து உடலுழைப்பை நாட்டுக்காக வழங்குவோரின் வாழ்க்கை இன்னும் அவலங்கள் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. 

இரு சகாப்தங்களுக்கு மேல் இந்நாட்டில் வாழும் இப்பெண்களுக்கான அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்திசெய்யமுடியாத நிலையிலே உள்ளது. அடிப்படை உரிமைகள் இவை தான் என   தெரியாத பெண்கள் கூட உள்ளனர். இத்தகையோர் தினம் தினம் உரிமை மீறல்களுக்கு உள்ளாகிவருவதோடு அடக்குமுறைக்குள் உள்ளாகி வருகின்றனர்.

ஆண்மைய வாதம் என்பது  நாகரிகமடைந்த சமூகத்தில் கூட இன்னும் வேரூன்றியுள்ள தருணத்தில் மலையகத்தில் மட்டும் இல்லாமல் சென்றிருக்குமா? இத்தகைய ஆண்மைய வாதத்திற்குள் மலையக பெண்கள் சிக்குண்டு தினமும் கவலையையும் கண்ணீரையும் மட்டுமே மிச்சப்படுத்துவைத்திருப்பது பரிதாபத்திற்குரிய விடயம். குடும்பம் என்றால் கணவன் அல்லது தந்தை சொல் கேட்டு நடக்கவும், வேலைத்தளத்தில் கங்காணி கணக்குப்பிள்ளை சொல் கேட்டு நடக்கவும், அரசியல் என்றால் அரசியல் வாதி என்ன சொல்கிறாரோ அதற்கு தலையசைந்து நடக்க வேண்டும் என எங்கு பார்த்தாலும் ஆணின் வழிநடத்திலே தான் பெண் தனக்கு வாழ்க்கையை நடாத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் சார் அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள் ஆங்காங்கே செயற்பட்டு வந்தாலும் அதன் நடைமுறை செயற்பாடு இன்னும் முடங்கியே கிடக்கின்றன.

மலையகப் பெண்களின் பிரச்சினைகள் ஏட்டளவிலோ, பேச்சளவிலோ இருந்தாலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததற்கான அடிப்படைக் காரணம் பெண்களின் பிரதிநித்துவம் உயர மட்டங்களில் வற்றிய நிலையில் காணப்படுவதாகும். குறிப்பாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுதலாகும். சமகாலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு பெண்கள் அரசியலில் நுழைந்திருந்தாலும் அவர்கள் மலையக பெண்களின் பிரச்சனை தொடர்பாக பேசுகிறார்களா அல்லது அப்பெண்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொடுத்தார்களா என வினா எழுப்பினால் விடை கூறுவது கடினம். காரணம் அவர்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற்றாலும் அரசியல் கட்சியின் தலைவரின் சொற்படி நடக்க வேண்டிய நிர்ப்பந்திக்கப்படுவதோடு சுயமாக செயற்பட முடியாதவண்ணம் ஆண்மைய வாதம் முடக்கும் நிலையும் காணப்படுகின்றது. 
     
அத்தோடு மலையகத்தில் அரசியலில் நுழைந்த பெண்களின் பின்னணியில் உறவினர் செல்வாக்கு அதிக தாக்கம் செலுத்துகின்றது. அவ்வாறாயின் உழைத்துழைத்து கருகிப்போகும் தொழிலாளர் வர்க்கப் பெண்களின்  அல்லது அவர்களின் பிள்ளைகள் அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவது என்பது எட்டாகனியா,  அரசியல் நுழைய முடியாதா என பல வகையான வினாக்கள் எழுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்தை சேராத ஒருவர் தோட்டத்தொழிலாளர்களை தேர்தலில் போட்டியிடச் செய்து வாக்குவங்கிகளை நிரப்ப நினைத்து தோல்வியை தழுவினார். உண்மையில் இது சாத்தியமற்ற ஒரு முயற்சி என்றே கூறலாம். அரசியலில் நுழைவதாக இருந்தால் தலைமைத்துவ பண்பு பெண்களிடம் கட்டியெழுப்ப வேண்டும். அத்தலைமைத்துவ பண்பும் பேச்சாற்றலும் துணிச்சலும் மட்டுமே அவர்களை வெற்றியை நோக்கி நகர வழிசமைக்கும். 

மலையக பெண்கள் அரசியலில் நுழைய வேண்டுமென்றால் தலைமைத்துவ பயிற்சியினை அளிக்க வேண்டும். தற்காலத்தில் மாணவர்களுக்கான பாராளுமன்ற தேர்தல் பாடசாலைகளில் நடைபெறுகின்றது. இந்த தேர்தல்களில் பெண்களை போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமைப்புக்களில் பெண்களின் உறுப்புரிமையை உறுதி செய்ய வேண்டும். உளவியல் ரீதியில் அவர்களின் தலைமைத்துவ பண்பையும், ஆளுமையையும் விருத்தி செய்ய வேண்டும். 

எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியைத் தாண்டக்கூடிய வகையில் பெண்களின் சனத்தொகை காணப்படுகின்றது. ஆனால் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பத்து வீதத்தை கூட எட்டிப்பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பெண்களே பெண்களுக்கு வாக்களிப்பதில்லை . பெண்களே பெண்களை நம்புவதில்லை என கூறலாம். பெண்களால் முடியும் அவர்களுக்கு பக்கபலமாய் நிற்போம் என முதலில் பெண்கள் எண்ணி பெண் அபேட்சகர்களுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். மலையகத்தில் குடும்பத்தில் தலைவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றாரோ அவருக்கே வாக்களிக்கும் மரபு காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும் பெண்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

மலையகத்தில் காணப்படும் அரசியல் கட்சிகளில் 90 சதவீதத்திற்கு மேலாக ஆண் வேட்பாளர்களே பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.  இந்நிலை மாறி பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். அத்துடன் அரசியல் கட்சிகள் பெண் பிரதிநிதிகளை இணைக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிரான்ஸில் அரசியலில் பெண்களை குறித்த விகிதாசாரத்தில் இணைக்கும் கட்சிகளுக்கு பரிசாக நிதியுதவி வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. இலங்கையிலும் அவ்வாறான முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். 

ஏனைய சமூக அமைப்பினரோடு ஒப்பிடும் போது மலையகத்தில் வாழும் பெண்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற நிலைகளில் பின்தங்கிய நிலையில் வாழ்வதனால் அரசியலைப் பற்றி சிந்திக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படும்.  பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் போது உலக அறிவை புரிந்துக்கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். ஏட்டுக்கல்வியை புகுத்துவதோடு மாத்திரம் நின்றுவிடாது அனுபவ அறிவை புகுத்த வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். யதார்த்த உலகியல் விடயங்களை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். கல்விகற்ற சமுதாயத்தாலே பகுத்தறிந்து சிந்திக்க முடியும் அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முன்வர வேண்டும்.

அரசியல் ரீதியான வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் பெண்களை அரசியல் பக்கம் தலைகாட்ட முடியாதளவு தடுப்புவேலி போடுகின்றன. இந்நிலைகளை மட்டுப்படுத்த கூடிய நடவடிக்கையினையும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நிலையினை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். 

அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புக்கள் என பெண்கள் சார்பாக நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் ஊடகங்கள் பெண்களில் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் நிகழ்ச்சிகளையும் நடாத்த வேண்டும். 

சமகாலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது வாக்களித்தல், கோஷமெழுப்புதல், ஆர்ப்பாட்டம் செய்தல் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியுள்ளன.  அரசாங்கத்தில் செயற்பாடு, தான் வாக்களித்த பிரதிநிதி தனக்காக என்ன செய்கிறார் போன்ற அடிப்படை அறிவுகள் எதுவுமின்றி அன்றாட  வாழ்வாதாரத்திற்காவே போராடிவருகின்றனர். இந்நிலை மாற வேண்டும். இரு சகாப்தத்திற்கு மேல் இந்நாட்டில்  உழைத்து வாழும் இம்மக்களின் வேலைத்தளத்தில் கழிப்பறை வசதியோ, சாப்பிடுவதற்கென தனியான இடமோ இல்லை. இத்தனை அவலம் இலங்கையில் எந்த சமூகவமைப்பினருக்கும இடம்பெறவில்லை. அத்தோடு கர்ப்பிணி பெண்களுக்கென விசேட சலுகைகளோ இல்லை. உடழுழைப்பை மட்டுமே உறிஞ்சும் தேசம் அவர்களின் உய்வைப்பற்றி சிந்திப்பதில்லை. இந்நிலை மாற வேண்டுமாயின் மலையக மக்களின் மீது அக்கறைக்கொண்ட, ஆளுமைக்கொண்ட பெண் தலைமைகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக கல்விகற்ற பெண்கள் அரசியலில் நுழைய வேண்டும் அதற்கான களத்தினை அரசியல் கட்சிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். பெண்கள் பலவீனமானவர் என்று எண்ணும் மனநிலையை தகர்க்க வேண்டும். 

இன்று ருவண்டாவில் 56 சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. அந்நாட்டில் இலஞ்சம், ஊழல் மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. 

இன்று மலையகப்பெண்கள் பல்கலைக்கழகம்,  கல்வியற்கல்லூரி போன்றவற்றில் விரிவுரையாளர்களாகவும் உயர்மட்ட உத்தியோகஸ்த்தர்களாகவும் மாறிவருகின்றனர். இம்மாற்றம் அரசியலிலும் ஏற்பட வேண்டும். குடும்பத்தடைகள், மூடநம்பிக்கைகள், கலாசார கட்டுகளில் இருந்து வெளிவர வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் மேலாக பெண்கள் பெண்களை பலவீனமானவர்களாக எண்ணாது துணிந்து அரசியலில் பிரவேசிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். 

இவ்வாறான மாற்றங்களை உடனடியாக ஏற்படுத்த முடியாவிட்டாலும்  பகுதியளவில் தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது எதிர்காலத்தில் மலையகப் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கமுடியும்.

நன்றி - http://www.uvangal.com/
...மேலும்

33வது பெண்கள் சந்திப்பு

சுமார் இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்று தொடராக இடம்பெற்றுவரும் புகலிட பெண்கள் சந்திப்பின் 33வது நிகழ்வு இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் நடைபெறவுள்ளது. பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு விசேட நிகழ்வாக இந்த சந்திப்பு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இலக்கியம், பெண்ணியம், அரசியல், என்று பல்வேறுபட்ட ஆளுமைகளின் பங்கெடுப்புடன் இடம்பெறும் இச் சந்திப்பானது பெண்களின் உரிமைக்குரலாக ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இரு முழு நாள் அரங்காக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுகளில் இலங்கை இந்திய மற்றும் ஐரோப்பாவின்  பல்வேறுநாடுகளில் இருந்தும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பெண்ணிய, மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் .

...மேலும்

May 2, 2017

ஆண்களின் அதீத புனைவுக் கற்பனை - நசீஹா முஹைதீன்


காலங்காலமாகவே எங்கள் சமூகத்தின் மத்தியில் காணப்படும் ஒரு நிலைப்பாடு தான் பெண்ணியம் பேசுபவர்களை எள்ளி நகையாடுதல் மற்றும் வேடிக்கையாக நோக்குதலாகும்.முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்ற புரிதல் பலருக்குக் கிடையாது. குறைந்த ஆடை அணிவதற்கும் அல்லது நள்ளிரவில் வெளியில் சுற்றித்திரிவதற்காகவும் அனுமதி கேட்பதே பெண்ணியம் என ஏழாவது முத்திரை குத்தியிருக்கின்றனர்.

ஆதி காலத்தில் பெண்கள் தங்களின் உரிமைகளை சரியான முறையிலேயே அனுபவித்து வந்தனர் என்பதை நிறைய சரித்திரவியலாளர்கள் கூறி வருகின்றனர்.

பின் வந்தகாலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய சமூகத்தில் பிளவுபட்ட மனிதனது மூளை என்றுமில்லாதவாறு பெண்களை தன் கீழ் உள்ள ஒரு சொத்தாக கருதத் தொடங்கியது.இப்படியாக வளர்ந்த சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக தன் உரிமைக்காக பெண்ணானவள் போராடும் போது அவளை கையாளுவதற்கு சில வழிகளை ஆண் மேலாண்மைச் சிந்தனைவாதிகள் உருவாக்கினார்.

இன்றைய நவீன காலத்தில் அது வேறுவழியில் பரிணமித்துள்ளது.சமூக வலைத்தளம்,சினிமாக்களின் ஊடாக பெண்கள் அடக்குமுறைக்குள்ளாக்கப்படலானாது மலிந்து கிடக்கையில் "ஜெர்மனியோ, சீனாவோ, அமெரிக்கவோ, இந்தியாவோ அவள் மீது ஆண் மேலாதிக்கம் கட்டவிழ்த்து விடும் குரூரங்களின் அடிப்படை ஒன்றுதான்.பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளின் அளவே இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதை உலக சினிமாக்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டு கொள்ளலாம்"

என Eva Hoffman சொல்வது நினைவுக்கு வருகிறது.

"நான் என் தாயை கடவுளுக்கு அடுத்த படியாக நேசிக்கிறேன்.இருந்தாலும் தந்தை இறந்தபிறகு அவளுக்கு பாலியல் தேவை இருக்கும் என கூச்சல் போடுவது என்னால் ஏற்க முடியாது. அந்த காலத்தில் எட்டு வயதில் கணவனை இழந்தாலும் அறுபது வயது வரை திருமணமோ எந்த வித ஏனைய பாலியல் தேவைகளோ இல்லாமல் தானே என் மூத்தம்மா இருந்தாள்"

இதுதான் நிகழ்காலத்தில் கசக்கும் நிஜம்.வீணாக பெண்ணியம் பேசுபவர்கள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளவே இதைப் பேசுகிறார்கள், இதைக் கிளறுகிறார்கள் என்பதுவே பலரின் மனநிலை முறுகலாக இருக்கிறது. உதாரணமாக பெண் விருத்தசேதனம் பற்றி பேசினாலே அது புகழடைவதற்காக அல்லது கவனக் குவிப்பிற்கான செயல் என தம் கருத்துக்களை நிறைய படித்த சமூகத்து ஆண்களும் பெண்களும் கூட முன்வைக்கின்றனர். சமமாக பெண் உடலியல் கவிதைகளை ஆண்கள் எழுதும் போது நோக்கப்படும் கோணத்திற்கும் பெண் எழுதும் போது நோக்கப்படும் கோணத்திற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கவே செய்கிறது.

பெண்ணோ, ஆணோ முன் வைக்கப்படும் விடயத்தின் வழியே தான் அவர்கள் நோக்கப்பட வேண்டும். மாறாக அவர்களின் தனிப்பட்ட வாழ்வு, அதற்கு பின்னால் இருப்பவைகளை வைத்துக்கொண்டு சப்பைக் கட்டுக்காக விமர்சனங்கள் எழுதப்படுவதானது குதத்திற்கு பதிலாக வாயால் கழிவகற்றுவதாகவே இருக்கும்.

பெண்ணின் துணிச்சல், அவளுக்கான காதல்,அவளுக்கான விருப்பம் என்பன அவளுக்கானதாகவே இருக்க வேண்டும். அவளைச் சார்ந்தோராலோ அல்லது அவளின் துணையனவர்களாலோ அழுத்தி வைக்கப்படுதலை ஏற்கமுடியாது.

அகிலத்தை நிறுவுதல் மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின் "பெண்கள் சோசலிசத்திற்காக எல்லாவிதமான உதவிகளையும் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேசமயம் வெற்றிக்குப் பின் தங்களின் உரிமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார்கள்"எனக் கூறியிருக்கிறார்.அவரின் எதிர்பார்ப்பெல்லாம் அரசியலிலும் இலக்கியத்திலும் பெண் தனக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதேயாகும்.

நடப்பதோ தலைகீழாகத்தான். இலக்கியத்தில் பெண் நிலைவாதம் சொன்னாலே அவளை ஆண்கள் நோக்கும் விதம் வேறு. இன்னொரு பேச வேண்டிய வியாதிதான் பெண் கருத்துக்களை பேசுபவர்களை விமர்சித்தால் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுதல் ஆகும்.இதற்கு சுயமாக சிந்திக்க தகுதியற்ற சில பெண்களும் துணை போவது மிகவும் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. இலக்கியத்தில் தன்னை நிலைநிறுத்தி பெண்களின் மறைத்து வைக்கப்பட்ட,அழுந்திச் செத்துக் கிடக்கின்ற தேவைகளை நியாயப்படுத்தவே பெரும் சிரத்தை எடுக்கையில் இது எதுவுமே தெரியாது ஜோக்கர்மேனிக்கு எழுதித் தீர்ப்பது கேலிக்குரியதாக இருக்கிறது.

இளம் சமூகத்தையாவது இந்த மனோநிலையிலிருந்து வெளிவர வைத்தாலும் சில வயதான மனிதர்களை என்னவென்பது.ஆணின் நிகழ்கால காதல் அல்லது திருமண வாழ்க்கை வெறுத்தால் இரண்டாவது,மூன்றாவது காதலை அங்கீகரிக்கும் போது பெண்ணொருத்தியின் மறுமணம் பேசுவதானது அவர்களது மனத்தை பாதிக்கச் செய்கிறது போலும்...

ஆண்களின் அதீத புனைவுக் கற்பனை (Male fantasy) மூலமாக இலக்கியங்களில் பெண்களானவர்கள் வெறும் மன்னர்களின் வீரத்திலும் காதலிலும் மூழ்கிக் கிடப்பவர்களாகவே காட்டப்பட்டனர். பின் வந்த காலத்தில் இது மேலும் முன்னேற்றமடைந்தது.

இதில் அடிக்கோடிடப்பட வேண்டிய விடயம் பல பெண் எழுத்தாளர்களே பெண்களது அடிப்படை பிரச்சினைகளை பேசுவதில்லை.என்ன சுதந்திரமானவளாக அவள் ஆரம்பத்தில் காட்டப்பட்டாலும் பிற்பாடு அவள் சம்பிரதாய,சடங்குகள், குடும்பத்தில் சிக்கி உழல்பவளாகவே தங்களின் நாவல்கள்,சிறுகதைகளில் கட்டமைக்கப்படுகின்றனர். மேலாதிக்க ஆண்களினை சிந்தனை ரீதியாக எதிர்கொள்வதற்கும் தைரியமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் சுயமாக எதையும் பேசத் துணியும் பெண் எழுத்தாளர்கள் அல்லது ஆண்களில் நக்கல் பதிவுகளை கூட்டாக சேர்ந்து எள்ளி நகையாடும் ஒரு தைரியமான பெண் சமூகம் வரும் வரை இதுவெல்லாம் பேசப்பட வேண்டியே இருக்கும்.

ஒருவேளை என் மர்யத்தின் அல்லது அவளின் மகளின் காலத்திலாவது பெண் நிலையுறுதியை சரியான கண்ணோடத்துடன் பார்க்கும் ஒரு சமூகம் அதாவது நாலு காதல் கவிதைகளை எழுதி விட்டு பெரிய சிந்தனைத்துவமான பெண் எழுத்தாளர்களை கேலி பண்ணும் தோரணையில் மூக்குடைபடும் ஆசாமிகளின் தொல்லை குறையட்டுமாக...

நசீஹா முஹைதீன் அவர்களின் முகநூலிளிருந்து நன்றியுடன்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்