/* up Facebook

Apr 17, 2017

பார்வை: ஆண் எப்போது மனிதனாவான்?

ம.சுசித்ரா


உன்னுடைய கணவர் உன்னை ஒரு முறைகூட அறைந்ததில்லையா? அப்படியானால் அவருக்கு உன் மேல் காதல் இல்லை. இப்படிச் சொல்லி, ‘உயர்ந்த மனிதன்’ ஆன கணவனிடம் அறை வாங்கி அவருடைய அன்பை வென்றெடுக்க ஏங்கிய மனைவிகளைப் பெருமையாகக் கட்டமைத்துவந்திருக்கிறது தமிழ் சினிமா. அந்நிலையிலிருந்து, “ஒண்ணு ராணி மாதிரி நடத்துற... இல்ல கீழ போட்டு மிதிக்கிற. நமக்குள்ள சரிப்பட்டு வராது...”, “பொண்ணுனா கருத்து சொல்லக் கூடாது வெறுமன பெத்துப்போடணுமா?” எனக் காதலி (‘காற்று வெளியிடை’) தன் காதலனிடம் சுளீரெனக் கேட்கும் அளவுக்குத் தமிழ் சினிமா மாறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அது மட்டும் போதுமா?

சமயோசித புத்திகூட இருக்காதா?

அருகில் இருந்தபோதெல்லாம் நோகடித்த காதலியை எப்படியாவது சந்தித்து மன்னிப்புக் கேட்கத் துடிக்கும் காதலனின் கதைதான் ‘காற்று வெளியிடை’ திரைப்படம். லீலாவுடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவளிடம் ஆதிக்கம் செலுத்துகிறான் வருண். அதற்கு அடிக்கடி மன்னிப்பும் கேட்கிறான். ஆனால் அதன் பிறகும் அவனுடைய சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும் மூர்க்கத்தனமாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். காரணம் அவனுடைய தந்தைதான் எனவும் அவனுக்கே புரிகிறது. அந்த வகையில் இது வருண் பற்றிய கதை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆணாதிக்கப் போக்கைச் சுட்டும் முயற்சி எனப் பாராட்டலாம்.

தனக்குள் காதல் துளிர்விட்டதை உணர்ந்து வருணைத் தேடி லடாக் லே பகுதிக்குச் செல்கிறாள் லீலா. அங்குப் பனிப் புயலைப் பார்த்துப் பரவசமடையும்போது ஆபத்தைச் சுட்டிக்காட்டி அவளை இழுத்துவர முயல்கிறான் வருண். அப்போது, “வரலேனா அடிச்சு இழுத்துட்டுப்போவியா?”, “நான் முக்கியம்னு சொல்லு, அதை விட்டுட்டு எதுக்கு மக்கு, அடிப்பேங்குற?” என அவனுடைய ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்டிச் சரியான கேள்விகளை எழுப்புகிறார் லீலா. ஆனால், பனி பொழியும் நகரில் மருத்துவராகப் பணி புரியும் ஒரு பெண்ணுக்குப் பனிப் புயல் குறித்த சமயோசித புத்திகூட இருக்காதா? இது ஏன் மணி ரத்னத்துக்குத் தெரியவில்லை?

சுயபுத்தியும் சுயமரியாதையும்

அடுத்து, நிறைமாதக் கர்ப்பிணிக்குத் திருமணம் என்கிற அபத்தம். முற்போக்காகச் சிந்திக்கிறேன் பார் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காகவே திணிக்கப்பட்ட காட்சி அது. கல்யாணத்துக்கு முன்பு உறவு கொள்ளலாமா, கூடாதா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பனிக்குடம் உடையும் தறுவாயில் இருக்கும் பெண்ணுக்கு எதற்காகத் திருமணம் செய்துவைக்க வேண்டும்? சரி, விறுவிறுப்பாகக் காட்சியை நகர்த்துவதற்கு இதுவும் அவசியம்தானே!

அதைத் தொடர்ந்து வருண் எப்படிப் பட்டவன் என்பதைத் துல்லியமாகக் காட்ட மருத்துவமனைக் காட்சி விரிக்கப்பட்டிருக் கிறது. அங்கு, வருணுடைய தம்பி (மனநலம் குன்றியவர்) “ஏற்கெனவே அண்ணன் நாலு கேர்ள் ஃபிரண்ட்ஸ இப்படி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கான்” என்கிறார். அவர் உளறுவதால் பதற்றம் அடையும் வருணின் குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் வலுக்கிறது. அப்போது வருணின் ஆணாதிக்கப் புத்தி அவனுடைய தந்தையின் நீட்சி என்பது திரையில் விரிகிறது. இயக்குநராக இந்தக் காட்சியைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் மணி ரத்னம்.

ஆனால், அங்கும் பெண்ணின் நுண்ணிய உணர்வைப் பதிவு செய்யத் தவறிவிட்டார் இயக்குநர். பள்ளி நாட்கள் முதலே வருண் பற்றிக் கேள்விப்பட்டு அவன் மீது நேசம் வளர்த்தவள், அவனைத் தேடி லடாக் வரை சென்றவள், அவனுடைய குணம் அறிந்து உடைந்துபோவாள். சுயபுத்தியும் சுயமரியாதையும் உடையவள் விலகிப் போவாள். ஆனால் இந்த விஷயத்துக்கு மிகச் சாதாரணமாக ஒரு சிறிய புன்னகையை மட்டும் மணி ரத்னத்தின் லீலா வெளிப்படுத்துகிறாள்.

யாருடைய விதி?

ஒருவரோடு உணர்வுரீதியாகப் பிணைக்கப்படும்போது அவரால் புண் பட்டாலும் அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடியாது என்பது உண்மைதான். நிஜ வாழ்க் கையில் ‘வேண்டும்’, ‘வேண்டாம்’ என்பதை அவ்வளவு எளிதாகத் தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம். அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னைக் காயப்படுத்தும் வருண் கோரும் மன்னிப்பை ஏற்று உருகுகிறாள் லீலா. யாருக்கும் தலைவணங்காதவன் தன்னிடம் சரணடையும்போது நெகிழ்ந்துபோகிறாள். இங்கு ‘நீ படித்தவள், உனக்குச் சுயமரியாதை கிடையாதா, எதற்காக வதைக்கும் ஒருவனைச் சகித்துக்கொள்கிறாய்?’ என்கிற உரிமைக் குரலைப் பொத்தாம்பொதுவாக எழுப்ப முடியாதுதான்.

சொல்லப்போனால் திரைக் கதையும், அந்தப் பெண் அவனை ஏன் தூக்கி எறியக் கூடாது என்கிற கேள்வியை எழுப்பு கிறது. அதற்கு இயக்குநர் முன்னிறுத்தும் விடையில்தான் சிக்கல் உள்ளது. அதுதான், ‘விதி’. அதற்கு அர்த்தம் காதல் விதி வசப்பட்டது என்பதா அல்லது பெண்ணின் தலைவிதி என்பதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

விருப்பத்தை நிராகரிக்கும் வன்மம்

இதில் சகித்துக்கொள்ள முடியாதது, வருண் அவளைத் தூக்கி எறிந்து பேசும் தருணங்கள்கூட அல்ல. தனக்கு எது தேவையோ அதை ஒரு துளிச் சலனமும் இன்றிக் காதலியின் மீது திணிக்கும் அவனுடைய அணுகுமுறைதான். இந்தப் போக்கு மணி ரத்னத்தின் ‘மெளன ராகம்’ மனோகரிடம் (கார்த்திக்) தொடங்கியது. திடீரென ‘நாளைக்கு நமக்குக் கல்யாணம்’ எனக் காதலிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் சுபாவத்தை ஆண்மை எனக் காட்டுவது அப்போதே ஆரம்பித்துவிட்டது! இரண்டிலும் ‘வர மாட்டேன்’ (திவ்யா), ‘நான் இன்னும் சரினு சொல்லலை’ (லீலா) என நாயகிகள் சொன்னாலும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தான் தீர்மானித்ததை நிறைவேற்றும் ஆணாகப்பட்ட நாயகர்களின் மனோபாவம்தான் அச்சுறுத்துகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு பெண்ணைத் துன்புறுத்துவதற்கு நிகரானதுதான் அவளுடைய விருப்பத்தை நிராகரிப்பதும். இதைக் காலங்காலமாக இந்திய ஆண்கள் செய்துவருகிறார்கள்.

நல்லறிவை அடையவில்லையே!

மூர்க்கத்தனமாகவும் சுயநலவாதியாகவும் இருந்த தன்னைச் சக மனிதர்களை நேசிக்கவும் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் வைத்தது கார்கில் யுத்த அனுபவம்தான் என்கிறான் வருண். போர்க் குற்றவாளியாகச் சிக்கி அனுபவித்த சித்திரவதைகள் அவனை மனிதனாக மாற்றுகின்றன. புரையோடிப்போன ஆணாதிக்கச் சிந்தனையைத் தகர்த்தெறிய ஆண் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லவருகிறாரா மணிரத்னம்?

ஒரே ஒரு முறையாவது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற குற்றவுணர்வோடு தேடும் லீவாவை நான்கு ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு யதேச்சையாகச் சந்திக்கிறான் வருண். ஆனால் அப்போதும் அவனிடம் மனமாற்றத்துக்கான எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. அசைவற்று நிற்கும் அவன் தன் மகளைப் பார்த்த பிறகே நெகிழ்கிறான். இதனால் தந்தை, சகோதரன், மகன் என்கிற பிம்பத்தைத் தாண்டி தன் காதலியைச் சக மனுஷியாகப் பாவிக்கும் நல்லறிவை அவன் இன்னமும் அடையவில்லை என்பதே எஞ்சி நிற்கிறது.

இறுதியாக, தன்னை ஏன் இத்தனை நாட்கள் தொடர்புகொள்ளவில்லை எனக் கேட்கும் வருணிடம், “ஒருவேளை உனக்கு என்னையும் என் குழந்தையையும் பிடிக்காமல் போயிட்டா?” என்கிறாள் லீலா. அங்கு லீலா உச்சரித்திருக்க வேண்டிய வார்த்தைகள் இவைதான்: “ஒருவேளை இன்னும் உன்னை மட்டுமே உனக்குப் பிடிச்சிருந்தா?”

நன்றி - தி இந்து 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்