/* up Facebook

Apr 30, 2017

கிளிட்டோரிஸ் : ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வரை…-ஸர்மிளா ஸெய்யித்பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200 மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப் பழக்கம்இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்?

பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண் விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில ஆண்கள்,மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம். இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும் ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட சாபம் என்பதாக இந்தக் கொடுமை பற்றி மனச்சாட்சியே இல்லாத அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் முஸ்லிம்கள் அல்லாத பழங்குடியினர்கள் மத்தியில் மட்டும்தான் இந்தப் பண்பாடு இருக்கின்றதென்பதாக மானிடத்திற்கு எதிரான அவர்களது மனங்கள் அமைதி கொள்ளலாம். இவர்கள் தங்களது சொந்தவீட்டுக்குள்ளும் அயலிலும் நடக்கின்ற மாபெரும் அநீதியைப் பற்றியஅக்கறையற்றவர்களாக இருந்துகொண்டு மதத்திலிருந்து ‘ஆகுமாக்கப்பட்ட’ ஆதாரங்களையும் ‘தடுக்கப்பட்ட’ ஆதாரங்களையும் காண்பித்துத் தங்களுக்குள்ளே முரண்பட்டுக் கொண்டிருப்பவர்கள். மனச்சாட்சியை உலுக்குகின்ற ஒரு செயற்பாட்டைத் தடுப்பதற்குக் கூட மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான கோப்புகளுக்குள்தான் ஆதாரம் தேடியாக வேண்டிய கண்மூடித்தனமான பாதையில்தான் நவீன நூற்றாண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றது. தங்கள் கால்களில் முள் குத்தினால்கூட எடுத்துவிடுவதா வேண்டாமா என்று மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மேற்கோள்களிலிருந்தே தீர்மானம் எடுப்போம் என்பதாகப் பிடிவாதமாக இருக்கும் பழைமைவாதிகளிடம் வேறென்ன மாதிரியான எதிர்வினையைநாம் எதிர்பார்க்க முடியும்? மனசாட்சியின் நரம்புகள் அறுந்து ‘மதம்’ முற்றிய பித்தர்களைச் சகித்துக் கொண்டுதான் பல காரியங்களைச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள்,லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா,அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து நாடுகளில் குடியேறிய மக்களிடத்திலும் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்யும் வன் கொடுமை இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

பெண்ணுறுப்பின் உள் உதடுகளில் சிதைப்பை ஏற்படுத்துவதனால் மருத்துவரீதியான நன்மைகள் ஏதும் உண்டா? இதனால் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கோ உடல் நலனுக்கோ நன்மைகள் விளையுமா? இதைக் குறித்த எந்தவொரு தெளிவும் விளக்கமும் ஒய்த்தா மாமிகளுக்குத்தெரியாது. கூர் மினுங்கும் புதிய பிளேட்டும், வெண்ணிற துணித்துண்டும் கையுமாக வந்து இந்தக் கடமையைச் செய்கிறவர்களை இலங்கை, கிழக்குமுஸ்லிம்கள் இப்படித்தான் அழைக்கிறார்கள். சில பிரதேசங்களில் ‘ஒஸ்தாமாமி’ என்றும் சில பிரதேசங்களில் ‘ஒய்த்தா மாமி’ என்றும்அழைக்கப்படுகின்ற இவர்கள் சந்ததி வழியாக இதே தொழிலைச் செய்கிறவர்கள். பெண் குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் பெரும்பாலும் முடிநீக்கம் செய்து, குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து இந்தச் சடங்குக்குக் குழந்தையைத் தயார்ப்படுத்துகிறார்கள். இந்தச் சடங்கு பெரும்பாலும் பெண்களை உள்வாங்கிய செயற்பாடாக இருப்பதனாலேயே இது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்றும் சொல்லலாம். தாயோ, தாயின் தாயோ வெள்ளைத் துணி விரித்த பித்தளை வட்டாவின் மீது குழந்தையின் பிஞ்சுத் தொடைகளை அகல ஊன்றிப் பிடிக்க ‘ஒய்த்தா மாமி’ குழந்தையின் பிறப்புறுப்பில் பிளேட்டினால் இரத்தம் கசியக் கீறிச் சுத்தமான வெண்ணிறச்சாம்பலைக் கிள்ளிக் காயத்தில் போட்டு விடுவாள். குழந்தை வீறிட்டு அழும். இந்தப் பெண்களோ அழுகின்ற குழந்தையை அரவணைத்துக் கொண்டே சிரித்து மகிழ்வார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில் மிகமுக்கியமான மத – பண்பாட்டுக் கடமைகளிலொன்றை நிறைவேற்றி விட்டார்கள். ‘பாலியல் ஒழுக்கம்’ மிக்க பெண்ணாக குழந்தை வளர்ந்துவாழ்வதற்கு அடித்தளமிட்டுள்ளார்கள். ‘கிளிட்டோரிஸ் துண்டிப்புச்’சடங்கினால் இப்படியான ‘நன்மைகளை’ நிலைநாட்டிவிட முடியும் என்பதே இவர்களது நம்பிக்கை. இவர்களுக்கு இது இனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் பெருந்தியாகம்.

இப்படிக் கிளிட்டோரிஸ் நீக்கம் செய்வதால் எப்படிப் பெண்ணின் ‘பாலியல் ஒழுக்கத்தை’(?) இவர்கள் காப்பாற்றுகிறார்கள்? கிளிட்டோரிஸ் என்பது பெண்ணுறுப்பில் காணப்படும் உணர் குவியம் அல்லது மையம். பெண்ணுறுப்பின் இப்பகுதியே ஒரு பெண்ணினது பாலியல் உணர்வுகளைத் தீர்மானிப்பதாக காலங்காலமாக நம்புகிற மக்கள் இதனை நீக்கிவிடுவதன் அரசியல் என்ன?பால் உறவின் போதாமையை உணர்கின்ற ஒரு பெண்ணுக்கு ஓர் ஆணைநிராகரிக்க வேறு காரணங்கள் தேவையில்லை என்கின்ற அச்ச உணர்வே,கிளிட்டோரிஸை நீக்குவதற்கு அல்லது சிதைப்பதற்குப் பின்னாலுள்ள ஆண்களின் அரசியல். பெண்ணை எப்போதும் ‘ஒருவனுக்கு ஒருத்தியாக’ சவக்கிடங்காகக் கிடக்கச் செய்வதற்காகவே இந்தச் சடங்குகொண்டுவரப்பட்டது. எளிதாகச் சொல்வதென்றால் பந்தயத்தில் தான் மட்டுமே சாம்பியனாக இருக்கவேண்டுமென்று சக போட்டியாளரின்கால்களை ஒடித்துவிடுவதுதான் இது.

இந்த நம்பிக்கை மத ரீதியானது என்றாலும், மத ரீதியானது இல்லை என்றாலும் இது பெண் குழந்தைகள் மீதான அப்பட்டமான மனித உரிமை மீறும் வன்முறைச் செயல். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கவனிக்கவேண்டும். அதாவது ஆண் உறுப்பில் முன் தோல் அகற்றுதல். ‘கத்னா’ என்று அழைக்கப்படுகின்ற இந்த வழக்கம் இஸ்லாமியர்கள் மத்தியில் ‘சுன்னத்’ ஆன கடமை. உங்களில் யாராவது கேட்கலாம், ஆண் பிறப்புறுப்பில் முன்தோலை நீக்குவது வன்கொடுமை இல்லையா, மனித உரிமை மீறல் கிடையாதா? அது என்ன பெண்ணுறுப்புச் சிதைப்பை மட்டும் வன்கொடுமை என்றும் உரிமை மீறல் என்றும் சொல்கிறீர்கள் என்று. ஆண் பிறப்பு உறுப்பில் முன் தோல் நீக்கம் செய்வது மருத்துவ ரீதியாகச் சரி காணப்பட்ட ஒரு செயற்பாடு. இது இஸ்லாமியர்களின் பண்பாடுஎன்ற போதிலும், சுகாதார நோக்கத்துடனும், குறி விறைப்பின்போது பின்னுக்குத் தள்ளப்படாத நிலையிலும் எந்தவொரு ஆணும் அதாவது எந்த இனத்தை மதத்தைச் சேர்ந்தவராயினும் முன்தோலை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ளமுடியும். கிராமப் புறங்களில் ‘ஒய்த்தா மாமா’ என்று அழைக்கப்படும் சந்ததி வழியாக இதனைச் செய்வதில் புலமைத்துவம்பெற்றவர்களால் இந்தச் சடங்கு செய்யப்பட்டு வருகின்றது. நகர்ப் புறங்களில் வைத்தியசாலைகளில் வலி தெரியாதவண்ணம் மருத்துவக் கண்காணிப்பில் மிக நூதனமாகவே ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம் நடைமுறையில் உள்ளது.


ஆண் பிள்ளைகளுக்கு ‘கத்னா’ செய்யும் நிகழ்வு இலங்கை கிழக்கு மாகாண மக்களின் பண்பாட்டில் ஒரு கொண்டாட்டமாக இருந்த காலமொன்று இருந்தது. அயலார், உறவினர் மற்றும் ஊர்க்காரர்களை அழைத்து , மாடு வெட்டி விருந்தளித்துக் கோலாகலமாக இச்சடங்கு நடக்கும். கத்னா செய்யப்பட்ட ஆணுறுப்பு பூரண சுகம் பெறும் வரையிலும் நாலைந்துபேர் அந்தச் சிறுவனைச் சுற்றிக் காவல் இருப்பார்கள். உறக்கத்தில் கால்களைப் பிணைத்துக் கொண்டாலோ குப்புறப் புரண்டாலோ மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக்கிவிடும். உறக்கம் விழித்துக் கண்ணும் கருத்துமாக நாலைந்து பேர் சீட்டாடிக் கொண்டும் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டுமிருப்பார்கள். ஈக்கள், கொசுக்கள் அண்டாதிருக்கக் கூரையின் மேல் விட்டத்தில் கயிறு இழுத்து ஒரு வெள்ளைத் துணியைத் தொங்கவிட்டுக் கால்கள் விரித்துக் கிடக்கும் சிறுவனது உடலின் கீழ்ப்பாகத்தை மூடச் செய்திருப்பார்கள். கிட்டத்தட்ட கொசு வலையை ஒத்த இந்த வெண்ணிறத் துணி வலை புண் முழுவதும் ஆறுகிற வரையும் தொங்கிக் கொண்டிருக்கும். கடந்த பத்தாண்டு காலத்திற்குள்தான் இந்தக் கொண்டாட்டம் நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். இப்போதெல்லாம் ஆண் குழந்தை பிறந்த ஏழாவதோ பதினைந்தாவதோ நாளில் டாக்டர்களிடம் தூக்கிச் சென்று காதும் காதும் வைத்தாற்போல ‘நாகரீகமாகக்’ காரியத்தை முடித்துவிடுகிறார்கள்.

      ‘கிளிட்டோரிஸ்’ எனப்படும் பெண்ணுறுப்புத் துண்டிப்புச் சடங்கு பெரும்பாலும் குழந்தை பிறந்து நாற்பதாவது நாள் செய்யப்படுகின்றது. குழந்தைகள் வளர்வதற்கு முன்பே உடலில் செய்யப்படுகின்ற மாறுதல் ‘இதுவே தனது உடல்’ என்பதாக நம்பும்படியும், பருவ உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாதபடியும் செய்துவிடுகின்றது. கிளிட்டோரிஸ் சிதைக்கப்பட்ட பெண்களின் பாலியல் இன்பம் மட்டுப்படுத்தப்பட்டதா என்பதை ஆராயும் பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுகள், தன் வரலாற்று நூல்கள், ஆவணப்படங்கள்  வெளிவந்துள்ளன.

கிளிட்டோரிஸ் நீக்கும் சடங்கு குழந்தைகளை மரணிக்கச் செய்யவும் கூடியது. சில குழந்தைகள் திகைப்பு (Hemorrhaging) என்கிற உள அதிர்விலிருந்து மீள்வதற்கு நாளெடுக்கும். இந்தக் குழந்தைகள் உளப்பிறழ்வு, மூளைப் பாதிப்புக்கு ஆளாகவும் இடமுண்டு. தொடர் இரத்த ஒழுக்கு (Vaginal Bleeding), சிறுநீர் எரிச்சல், பிறப்புறுப்பில் நீர்கட்டிகள் உருவாக்கம், தொற்றுகள், தோல் அரிப்பு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உருவாகுவதற்கும் இது காரணமாகக் கூடியது என்று சில மருத்துவ ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன.

கொடுமையான இந்தப் பண்பாட்டுப் பழக்கம் 200 வருடங்களாக இலங்கையில் இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்பதாக கிளிட்டோரிஸ் நீக்கம் குறித்து 1996 இல் SRI LANKA CULTURE: Mothers Watch as Daughters are Circumcised என்ற கட்டுரையில் ரேணுகா சேனநாயக்க பதிவு செய்துள்ளார். அரேபிய வர்த்தகர்கள், மனைவியர்களாக அழைத்துக் கொண்டுவந்த மலேசியப் பெண்களால் கிளிட்டோரிஸ் நீக்கம் இலங்கை இஸ்லாமியர்களின் பண்பாட்டில் இடம்பிடித்திருக்கலாம் என்றும் ரேணுகாசேனநாயக்க தனது கட்டுரையில் பதிவு செய்கின்றார்.

‘பெண்கள் முஸ்லிம் ஆராய்ச்சி முன்னணியின்’ தலைவி ஜெஸீமா இஸ்மாயில், சமூகச் செயற்பாட்டாளர் டாக்டர் மரீனா றிபாய் போன்றோரினது கருத்துகளும் ரேணுகா சேனநாயக்கவின் கட்டுரையில் பதிவாகியுள்ளன. ஜெஸீமா இஸ்மாயில் இந்நடைமுறையினை “Brutal Practice” கொடூரமான நடைமுறை என்பதாகப் பதிவு செய்துள்ளார். இஸ்லாமிய மக்களின் பண்பாட்டோடு வேரூன்றிப் போயிருக்கும் இந்த அநீதிக்கு எதிராக, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவரும், தவிர்க்க முடியாத பெண் ஆளுமையுமான சமூகச் செயற்பாட்டாளர் ஜெஸீமா இஸ்மாயில் உயர் இடங்களில் பதிவு செய்ததோடு நின்றுவிட்டார். இந்த அநீதி நிறுத்துவதற்காக அவர் செயற்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டியிருக்கின்றது.

1997 இல் என்பதாக ஞாபகம், பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை உலகத்தின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முதல் பெண் வாரிஸ் டைரி. இவர் ஆப்பிரிக்கத் தேசத்தின் சோமாலியா நாட்டிலிருந்து பால்ய வயதுத் திருமணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சொந்த நாட்டை விட்டுத் தப்பித்து வெளியேறியவர். மேற்குலகின் முன்னணி மாடல் அழகியாகத் தன்னைத் தடம்பதித்துக் கொண்டிருக்கும் வாரிஸ், உலகின் பிரபல ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ க்கு அளித்த நேர் காணலே பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிறப்புறுப்புச் சிதைப்பு விவகாரத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றியது. இவரது தன் வரலாற்று நூல் Dessert Flower உலகின் கவனிப்பைப் பெற்றுக் காட்சித் திரைக்கும் கொண்டு வரப்பட்டது. வாரிஸ், தன் வரலாற்று நூலில், தனது பிறப்பு உறுப்பு சிதைக்கப்பட்டதை விபரித்திருக்கிறார். பெண் உறுப்பின் உதடுகளில் அகேஷியா மரத்தின் முட்களை ஒவ்வொன்றாகச் செருகி துளையிடுகின்றாள் மருத்துவச்சி. பிறகு வெள்ளை நூல் கொண்டு உறுப்பைத் தைத்துவிடுகின்றாள். சிறுநீர் கழிக்கப் போதுமான துவாரத்தை வைத்துவிட்டு மீதிப் பிறப்புறுப்பு மூடப்படுகின்றது.

ஆப்பிரிக்க நாடுகளில் 93 விழுக்காடு பெண்களுக்கு இவ்வாறு பிறப்புறுப்புச் சிதைக்கப்படுகின்றது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் பெருந் துயரைச் சுமக்கவேண்டும். மாதவிடாய் காலங்களில் இவர்களது வலி பன்மடங்கு பெருகுகின்றது. கட்டுப்படுத்த முடியாத வலியில் அவர்கள் துடித்துஅழும்போது, மாதவிடாயை நிறுத்த மருத்துவர்கள் கருத்தடை மாத்திரைகளைத் தருகின்றனர்.

மருத்துவிச்சியால் தையலிட்டு மூடப்பட்ட பிறப்பு உறுப்பு, திருமணத்தின் பின்பு, சரியாகச் சொல்வதென்றால் முதலிரவின் போது திறந்து விடப்படுகின்ற வழக்கம் ஆப்பிரிக்கா தேசத்தின் சில நாடுகளில் வழக்கத்திலிருந்து வருகின்றது. தையலிடப்பட்ட பெண்ணுறுப்பை மீண்டும் திறப்பது, தையலிடுவதைவிடவும் கொடிய அனுபவம். வாரிஸ் டைரி மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்தே தனது பெண்ணுறுப்பைத் திறந்து கொண்டதாக Dessert Flower என்ற தன் வரலாற்று நூலில் குறிப்பிடுகின்றார்.லண்டன் போன்ற மேலைத்தேய நாடொன்றுக்கு வாழவந்த அவருக்கு இதுசாத்தியமாகின்றது. ஆப்பிரிக்க நாட்டிலேயே வாழ்கின்ற பெண்களுக்கு பாதுகாப்பான மருத்துவ முறையில் தைக்கப்பட்ட பெண்ணுறுப்பைத் திறப்பது சாத்தியப்படக்கூடியதில்லை. ஏனில், தைக்கப்படும்போது அனுபவித்த அதே கொடிய அனுபவத்தையே திறக்கும்போதும் அவர்கள் திரும்பப் பெறுவார்கள். பெண்ணுறுப்பின் இறுக்கமான துளையை ஆண்கள் விரும்பும் சந்தர்ப்பங்களில், தையலிட்டு மூடப்பட்ட பகுதியைத் திறக்காமலே வாழ்நாள் நெடுகிலும் வாழும் பெருங் கொடுமையைப் பெண்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தப் பெண்கள் பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாது, சிறு துளையில் ஆண் உறுப்பைச் செலுத்துகின்றபோது உண்டாகின்ற வலியில் கதறுவதும், பற்களைக் கடித்துச் சகித்துக்கொள்வதுமே இவர்கள் அறிந்த பாலுணர்வு இன்பம். இப்படியானவர்கள் பிள்ளைப் பேற்றின்போது வலி தாங்கமுடியாமல் தாயும், சிறு துவாரம் வழியாக உலகத்தைப் பார்க்கமுடியாது மூச்சுத் திணறி சிசுவும் இறந்துபோகும் கொடுமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள்.

பெண்ணுறுப்புச் சிதைப்பு, முழுமையாகவும் பகுதியாகவும் நடைமுறையிலிருந்து வருகின்றது. இதில் மூன்று வகையான முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

1. பெண் உறுப்பின் உள் முனையை (கந்து) செதுக்குதல் / நீக்குதல்

2. முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள பெண் உறுப்பின்

உதடுகளை வெட்டி நீக்குதல்

3. பெண் உறுப்பின் உள் முனையை நீக்கிவிட்டு, இதழை அறுத்து

புழையின் மேற்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.

இம்மூன்று முறைகளில் மூன்றாவதே வாரிஸூக்கு நிகழ்த்தப்பட்டிருந்ததை அவரது தன் வரலாற்று நூலிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆசிய நாடுகளில் இருப்பதானது, மேற்சொல்லப்பட்டிருக்கும் மூன்று முறைகளில் முதலாவதாக இருக்கலாம். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் முதலாவதே நடைமுறையில் இருக்கின்றது எனலாம்.

இந்தியாவில் மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு 2016 இல் எடுக்கப்பட்ட India’s Dark Secret : Female Genital Mutilation என்ற ஆவணப்படம் இந்தியாவில் ‘போரா’ முஸ்லிம்களிடையே பிறப்புறுப்புச் சிதைப்பு புழக்கத்தில் இருந்து வருவதைப் பற்றிப் பேசுகின்றது. பிறப்புறுப்புச் சிதைப்புக்கு உள்ளான பெண்கள் குரல்களில் வந்திருக்கும் இந்தியாஸ் டார்க் ஸீக்ரெட் ஆவணப்படம் மிக முக்கியமான தொகுப்பு. இலங்கையைப் போன்று குழந்தை பிறந்த நாற்பதாவது நாளில் இல்லை, வளர்ந்து சிறுமியான பிறகே இச்சடங்கைச் செய்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் தம் அனுபவத்தைப் பகிர்கின்ற பெண்கள் 8 – 14 வயதுச் சிறுமிகளாக இருந்தபோதே கத்னா செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை பெண் உறுப்பு சிதைப்பை 2012, நவம்பர் 27இல் தடை செய்தது. இதனையடுத்து ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள நைஜீரியா நாட்டு அதிபர் எடுத்த வரலாற்று முக்கியத்துமிக்க தீர்மானம் அந்நாட்டுப் பெண்கள் சிறுமிகளுக்கு விடுதலையுணர்வைப் பெற்றுத் தந்துள்ளது. பெண்ணுறுப்புச் சிதைப்பு மிக மோசமான முறைகளில் நடைமுறையில் உள்ளவொரு தேசத்தில் இருந்து வரும் இந்த சுதந்திரக் காற்று பெரும் நிம்மதியைத் தருகின்றது.
ஆம்! நைஜீரியா நாட்டில் பெண் உறுப்பு சிதைப்புச் சடங்கிற்குத் தடை  2015 மே 5 முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு வந்தது. நைஜீரியாவின் அதிபர் குட்லக்ஜோனாத்தன், கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் முஹம்மது புஹாரியினால் தோற்கடிப்புச் செய்யப்பட்டார். இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடப்பதுபோன்று முன்னாள் அதிபர் கொண்டு வந்திருந்த அமலுக்கு வராத சட்ட மசோதாவை புதிய அதிபர் வெட்டுக் குத்து விளையாட்டுகளால் தூக்கிப்போடவில்லை. இது பெண்களின் விவகாரம்தானே என்று புறக்கணிக்கவில்லை. புதிய அதிபர் முஹம்மது புஹாரி பெண் உறுப்புச் சிதைப்பைத் தடை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துச் செயற்படுத்தியுமுள்ளார்.

சட்டங்களை இயற்றுவதும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றுவதும் சிரமமான காரியங்கள் இல்லை. சிரமம், இந்தச் சட்டத்தை மதக் களைவு செய்து மக்கள் மயப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவருவதே. நைஜீரியா அரசாங்கமும் அங்கு செயற்படும் மகளிர் செயற்பாட்டாளர்களும், நாட்டின் முற்போக்கு அமைப்புகள், நிறுவனங்களும் பெண்ணுறுப்புச் சிதைப்பை முற்றிலும் இல்லாது ஒழித்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தக்கூடிய நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேம்பியா நாட்டின் அதிபர் யஹ்யாஜம்மீஹ் பெண் உறுப்புச் சிதைப்பு நடைமுறையை முற்றிலும் தடை செய்வதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்றப் போவதாகஅறிவித்துள்ளார். இப்படி அறிவிப்புச் செய்வதனால் தேர்தலில்தோற்றுப்போவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பது குறித்து எச்சரிக்கப்பட்டும் பொருட்படுத்தாமல் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் அதிபர் யஹ்யா.

           பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கான மனித உரிமைச் சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ள நாடான இலங்கையில் இதுவரையில், பிறப்புறுப்புச் சிதைப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், செயற்பாடுகள் எதுவும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இரு காரணங்கள்: ஒன்று, ஆப்பிரிக்கா நாடுகளில்போன்று தீவிர செயற்பாட்டுத் தளத்திற்குள் இச்சடங்கு இலங்கையில் இல்லை. இரண்டு, இது சிறுபான்மைச் சமூகமாகிய அதாவது 7 விழுக்காடுகளுக்கும் குறைவான இஸ்லாமியர்கள் மத்தியிலேயே புழக்கத்தில் இருக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசுக்கு இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸ் சிதைக்கப்படுவதைக் குறித்து என்ன அக்கறை?

ஏனில், இதைக் குறித்து அக்கறைப்படவேண்டியவர்கள் யார்? இலங்கை இஸ்லாமியத் தலைவர்கள், மதத் தலைவர்கள், முற்போக்காளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், படைப்பாளிகள்.

இலங்கையில் சிறுமிகளைத் திருமணம் செய்வதை நியாயப்படுத்திக்கொண்டு, விவாக விவாகரத்துச் சட்டத்தை மாற்றுவதற்கு இடையூறாக இருக்கின்ற ஆண்களின் கைகளிலேயே இன்று இஸ்லாம் இருந்து கொண்டிருக்கின்றது. இவர்களோடு போராடுவது கல்லில் நார் உரிப்பதுபோன்றது என்பதற்காகவே பல முற்போக்கு இஸ்லாமியர்கள் செவிடராயும் ஊமையராயும் காலந்தள்ளும் ஓர் இருண்ட காலமே இன்று இலங்கையில் நிலவுவது. இஸ்லாம் மதம் என்ற நிலையைக் கடந்து, இஸ்லாம் இயக்கம் என்ற நிலை வந்துவிட்டது. இந்த நிலையில் சமூக நலன், எதிர்காலக் கனவு, விடுதலை உணர்வு, சுதந்திரம், சுயம் ஆகியவற்றுக்காக எதிர்வினையாற்றுவது உயிரையே விலையாகப் பெறக்கூடிய ஆபத்துக்களுக்கான சாத்தியங்கள் இலங்கைக்குள் வந்துவிட்டன.

இத்தகைய சூழலில், இலங்கை இஸ்லாமியப் பெண்களின் கிளிட்டோரிஸை யார் காப்பாற்றுவது? இலங்கை இஸ்லாமியரிடையே இப்படியான பண்பாட்டுச் சடங்கு புழக்கத்தில் இருப்பதே 21ஆம் நூற்றாண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாலியலில் ஆண்களின் அதிகாரத்தை நிறுவுவதற்காக மாத்திரமே இச்சடங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலும்க கூட பெண்கள்தான் இச்சடங்கை முற்றுமுழுதாகக் கையாழுகின்றார்கள்.கண்மூடித்தனமாக காலங்காலமாகத் தொடர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவோர் மதக் கடமை.‘கன்னித்தன்மையைப்’(?) பேணுவதற்காகத் தனக்குச் செய்யப்பட்டது, தனது மகளுக்கும் செய்யப்படவேண்டும் என்றே ஒவ்வொரு தாயும் இந்தச் சடங்கைச் செய்கிறார். கிளிட்டோரிஸ் நீக்கும் இந்தச் சடங்கு, ஆணாதிக்க சமூக அடிமைக் கூறுகளில் ஒன்று என்பதை இந்தப் பெண்களுக்கு எப்படி விளங்கிக் கொள்ளச் செய்வது?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்குப் பிறகும், பல தொழுகைகளுக்குப் பிறகும் மிம்பரில் முல்லாக்கள் முழங்கும் வார்த்தைகளை மந்திரமாகப் பாவிக்கும் இந்தப் பெண்களிடம் சமூகத்திடம் இதை எடுத்துச் செல்லத் துணிந்த ஒரு மௌலவியைத்தானும் கண்டுகொள்ள முடியுமா? இங்கு பெண் மௌலவிகளின் சமூகப் பங்குபற்றுகை பற்றிய மிகப்பெரிய கேள்வி துருத்திக் கொண்டு நிற்கின்றது. ஆண்கள் வகுத்திருக்கும் கொள்கைகளின் பிரதி விம்பங்களாக நிற்கும் பெண் மௌலவிகளின் மீது துயரம்படிந்த மௌனம் கவிகின்றது. பிறந்த குழந்தையின் முடியை மழித்துக் கொள்வது போலத்தான் பெண் உறுப்பின் கிளிட்டோரிஸை நீக்குவதும் என்று கூறிவிடாதீர்கள், பெண்களே! நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முற்படாதவரை , உங்களை வேறெவரும் காப்பாற்ற மாட்டார்கள்.  நம் பெண்குழந்தைகளின் கிளிட்டோரிஸை இனிச் சிதைக்க மாட்டோம் என்று சபதமெடுங்கள்! இதை நம்மால் தான் இல்லாதொழிக்க முடியும்.

நன்றி - தூமை
...மேலும்

Apr 28, 2017

33வது பெண்கள் சந்திப்பு


33வது பெண்கள் சந்திப்பு இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் சூரிச் நகரில் நடக்கிறது

இடம். MAXIM THEATHER ZURICH
Ausstellungstrasse 100
8005 Zurich
Switzerland
06, 07 மே 2017 திகதிகளில்
...மேலும்

Apr 27, 2017

திரைக்குப் பின்னால் - ஃபாத்திமா மாஜிதா


இந்த பதிவினை எத்தனை எத்தனையோ பெண் மழலைகளின் அழுகைக்குரல் உண்டாக்கிய, உண்டாக்குகின்ற துயர உணர்வோடும் பதட்டத்துடனுமே எழுதுகிறேன்.

சமீபத்தில் வாசிக்கக் கிடைத் anar ன்பிளேட் எனும் சிறுகதை, nasheeha mohideen ,Lafees போன்றோரின் முகநூல் பதிவுகள், ஆக்காட்டியில் வெளியான Farhan னின் நேர்காணல், இவையெல்லாவற்றிற்கும் உருண்டு திரண்டு வந்த எதிர்ப்பலைகள், மனித தன்னுணர்வு மிக்கவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் என நிறைய புனைவு, அபுனைவு சார்ந்த விடயங்கள் என் மனத்திரையில் நிழலாடியபடியிருக்கின்றன.

இலங்கை முஸ்லீம் சமூகத்தினுள் பெண் குழந்தைகளின் கிளிட்டோரிஸ் எனும் பகுதியை துண்டிக்கும் அல்லது சிதைக்கும் கொடூர சடங்கு முன்னொரு காலத்தில் இருந்ததாகவும் இப்பொழுது அருகி விட்டதாகவும் அல்லது இஸ்லாத்தில் பெண்களின் கத்னாவாக இம்முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மிகச் சாதாரணமாக கடந்து செல்பவர்கள், சிறு குற்றஉணர்வும் இன்றி இக்கொடுமையை மறுதலிப்பவர்களின் பதற்றங்கள், மிரட்டல்கள்,கேலிப்பேச்சுக்கள் என பட்டியல் நீண்டு கொண்டிருக்க, மனித உரிமை மீறலாகவும் பெண்களுக்கெதிரான வன்முறையின் வடிவமாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இச்செயலானது சில பிரதேசங்களில் அருகியுள்ளதாகவும் சில பிரதேசங்களில் தொடர்ந்து ரகசியமாக நடைமுறையில் நடைபெற்று வருவதாகவும் உறுதியாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆக, திரைக்கு பின்னால் என்ன நடைபெறுகிறது, ஏன் மறுக்கப்படுகின்றது, எதற்காக முற்றாக இல்லை என தொடர்ந்து விதண்டாவாதம் செய்கின்றீர்கள். ஒன்று மட்டும் உண்மை, எல்லா சமூகத்தினுள்ளும் பெண் பாதிப்புக்குள்ளாகின்றாள். ஆனால் அங்கு எதிர்த்து குரல் கொடுப்பது எமது சமூகத்தினுள் இருந்து குரல் கொடுப்பது போல் அவ்வளவு சிக்கலில்லை.

என்னிடம் பிற சமூகத்தினை சேர்ந்த தோழியொருத்தி இது பற்றி அறிந்த பொழுது ஏன் எல்லோரும் வாய் மூடி இருக்கின்றீர்கள், ஒரு குழந்தை அழுதாலும் அதனை சகித்துக்கொண்டு இருக்க முடியுமா? அது நிறுத்தப்படவேண்டிய ஒன்றுதானே என அனல் தெறிக்க கேள்விகளை அடுக்கினாள். அவளது கேள்விகளுக்கு என்னிடம் எந்த வித விடையுமில்லை இவ்வளவு நாட்களும் வாய் மூடி இருந்த அமைதியையும் வெட்கத்தினையும் தவிர.

முடிவாக ஒன்று மட்டும் கூறவேண்டும். இக்கொடூரமான வன்முறை ஒரு குழந்தைக்கு நடந்தாலென்ன நூறு குழந்தைகளுக்கு நடந்தாலென்ன. குற்றம் குற்றம்தானே.

எனது எழுத்துக்களில் இப்பெண் குழந்தைகளின் அழுகைக்குரலும் வலியின் வேதனைகளுமே நிரம்பப்பெற்றுள்ளது. இச்சமூகம் பேசாதிருந்த அல்லது பேசவிரும்பாதிருந்த இப்பேசும்பொருள் தொடர்ந்து விவாதிக்கப்படட்டும். தொடர் விவாதங்கள் எம்மழலைகளின் அழுகைக்குரல் இனியும் வராது காக்க அணை கட்டவேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

ஃபாத்திமா மாஜிதாவின் முகநூலிளிருந்து நன்றியுடன்
...மேலும்

Apr 20, 2017

மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்! : மீனா சோமு

“கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது.”
கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!” -தோழர் Kotravai N

தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் ஜாதிய அமைப்பிற்கு எதிராக ஒன்றிணையும் உணர்வு. தோழர் கொற்றவை போன்ற சில மார்க்ஸிய தோழர்களுக்கு மார்க்ஸ் சொன்ன “proletariat consciousness” என்றால் என்னவென்று புரியாது போல. அது தெரிந்தால் “Dalit consciousness” பற்றியும் புரியும். இப்படி அபத்தமா தலித் என்ற உணர்வை ஜாதிய உணர்வு என்று சொல்ல மாட்டார்கள். பார்ப்பன ஜாதியுணர்வும் மேல் ஜாதி என அந்தந்த ஜாதி மக்களிடையே இருக்கும் ஜாதிய உணர்வு தான் “ஜாதி மனநிலை”. “தலித் உணர்வு” என்பது அத்தகைய ஜாதிய ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு உணர்வு( நிலை). எப்போது தான் தோழர் கொற்றவை போன்றவர்களுக்கு சித்தாந்த தெளிவு ஏற்படும் என புரியவில்லை.

தொழிலாளர் புரட்சி ஏற்ப்பட proletariat consciousness முதல் கட்டமும் அவசியமான ஒருங்கிணைக்கும் நிலை. தொழிலாளர்களது வர்க்க உணர்வு ஒற்றுமை ஏற்ப்படவில்லை எனில் சோசலிச புரட்சியே சாத்தியமில்லை. அது போல ஜாதிய கட்டமைப்பை உடைக்க Dalit consciousness என்பது அவசியமான முதற்நிலை. அதை ஜாதியோடு ஒப்பிடுவது, முதலாளிகளின் வர்க்க சிந்தனையை தொழிலாளர்களது வர்க்க உணர்வோடு ஒப்பிட்டு கூறுவது போல அபத்தமானது. அத்தகைய அபத்தமான கருத்துக்களை தொடர்ந்து மார்க்ஸியவாதிகள் என சொல்லிக்கொள்ளும் ஒரு சிலர் (மார்க்ஸிய தூய்மைவாதிகள்) உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

தூய்மைவாதம் என்பது மத அடிப்படைவாதத்தோடு சம்பந்தப்பட்டது. இது போன்று தூய்மைவாதம் என்று அபத்தமான கருத்துக்களை முன் வைப்பவர்கள், தங்களை மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள், அடிப்படைவாதிகள் என அழைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மார்க்சிய சிந்தனையின் அடித்தளம் இல்லவே இல்லை.

நான் ஒரு தலித்தாக இருப்பதாலேயே மார்க்ஸியவாதி என என்னை உணர்கிறேன் என்று என்னால் சொல்ல இயலும்.

Fundamentalism is closely related to religious fanaticism, so please call yourself fundamentalist rather than Marxist.

I am a Dalit and I turn to be a Marxist as I naturally stand against the system which suppresses me. 

மீனா சோமு, எழுத்தாளர்.

நன்றி - https://thetimestamil.com
...மேலும்

Apr 17, 2017

கண்ணீரும் புன்னகையும்: பிரசவ நலனும் அடிப்படை உரிமையே


பிரசவத்துக்கு முன்னரும் பின்னரும் பெண்களின் மருத்துவ நல உரிமை பாதுகாக்கப்படுவதற்கான நீதிமன்றத் தீர்ப்பை வாங்கித் தந்த ஜைதுன் மார்ச் 17-ம் தேதி காலமானார். ஜைதுனின் மகள் பாத்திமா கர்ப்பமாக இருந்தபோது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டையை வைத்திராததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் தெருவோர மரத்தடியில் மருத்துவர்களின் உதவியின்றி பிரசவிக்க நேர்ந்தது. இந்த அவலத்துக்கு எதிராக பாத்திமாவின் தாய் ஜைதுன் புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் ஹியூமன் ரைட்ஸ் லா நெட்வொர்க் அமைப்பின் உதவியுடன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எண்ணற்றை போராட்டங்களைச் சந்தித்த பின்னர், பிரசவ மருத்துவ நலன் என்பது பெண்களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் அளித்தது. அந்தச் சமயத்தில் பிரசவ சமயத்தில் தாய்மார்கள் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் இறக்கும் சூழந்திலை இருந்தது. தற்போது அது 45 ஆயிரமாக குறைந்துள்ளது. ஜைதுன் என்ற வறிய பெண்மணி அதிகாரத்தை எதிர்த்து போராடிப் பெற்ற தீர்ப்புதான் இன்றும் பெண்களின் பிரசவ நலன் சார்ந்த உரிமைகளைக் கோருவதற்கான முன்னுதாரணமாக இன்றும் விளங்குகிறது.

திருநங்கை நடித்த விளம்பரம்

திருநங்கைகளை யதார்த்தமாகவும் மனிதாபிமானத்துடனும் அணுகும் புதிய விக்ஸ் விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது. எய்ட்ஸ் நோயால் தாயை இழந்த பெண் குழந்தை கவுரியைத் தத்தெடுத்த ஒரு திருநங்கையின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரம் இது. ஆறு வயதில் தாயைப் பறிகொடுத்த கதையைப் பேருந்துப் பயணத்தில் விவரிக்கத் தொடங்குகிறாள் கவுரி.

புதிய தாயாக வந்து தத்தெடுத்தவரைப் பற்றி பேசுகிறார். கடைசியில் அவர்தான் திருநங்கை காயத்ரி என்று தெரிகிறது. ஒரு அம்மாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பும் நெகிழ்வான சம்பவங்களும் இந்த விளம்பரத்தில் காண்பிக்கப்படுகின்றன. கவுரி, தன் அம்மாவைப் போன்றவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர் ஆவேன் என்று சொல்வதுடன் விளம்பரம் முடிகிறது. எல்லாருக்கும் இப்படியான அனுசரனையும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

தேசிய விருதுபெற்ற ஆதிவாசி இயக்குநர்

ஒடிஷாவைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் லிபிகா சிங் தராய்க்கு அவர் எடுத்த 20 நிமிடப் படமான ‘திவாட்டர் பால்’க்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இவர் பரிபாடா பிராந்தியத்தைச் சேர்ந்த ஹோ பழங்குடி இனத்தவர். நகரப்புறத்துக் குழந்தை ஒன்று, கந்தாதர் அருவி பற்றிக் கேள்விப்பட்டு தனது பூர்விக ஊருக்கு வருகிறது. பருவநிலை மாறுதல்கள் அந்தப் பகுதியில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களைக் கண்டுணர்கிறது. லிபிகா சிங் தராய் பெறும் நான்காவது தேசிய விருது இது. ஒடிஷா மாநிலத்தில் இன்னும் நிலவும் செய்வினை, மூடநம்பிக்கைகள் தொடர்பான நடைமுறைகளைப் பற்றி இவர் எடுத்த 53 நிமிட ஆவணப்படமான ‘சம் ஸ்டோரிஸ் அரவுண்ட் விட்ச்சஸ்’ மிகவும் புகழ்பெற்றது.

நன்றி - தி இந்து 
...மேலும்

பார்வை: ஆண் எப்போது மனிதனாவான்?

ம.சுசித்ரா


உன்னுடைய கணவர் உன்னை ஒரு முறைகூட அறைந்ததில்லையா? அப்படியானால் அவருக்கு உன் மேல் காதல் இல்லை. இப்படிச் சொல்லி, ‘உயர்ந்த மனிதன்’ ஆன கணவனிடம் அறை வாங்கி அவருடைய அன்பை வென்றெடுக்க ஏங்கிய மனைவிகளைப் பெருமையாகக் கட்டமைத்துவந்திருக்கிறது தமிழ் சினிமா. அந்நிலையிலிருந்து, “ஒண்ணு ராணி மாதிரி நடத்துற... இல்ல கீழ போட்டு மிதிக்கிற. நமக்குள்ள சரிப்பட்டு வராது...”, “பொண்ணுனா கருத்து சொல்லக் கூடாது வெறுமன பெத்துப்போடணுமா?” எனக் காதலி (‘காற்று வெளியிடை’) தன் காதலனிடம் சுளீரெனக் கேட்கும் அளவுக்குத் தமிழ் சினிமா மாறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அது மட்டும் போதுமா?

சமயோசித புத்திகூட இருக்காதா?

அருகில் இருந்தபோதெல்லாம் நோகடித்த காதலியை எப்படியாவது சந்தித்து மன்னிப்புக் கேட்கத் துடிக்கும் காதலனின் கதைதான் ‘காற்று வெளியிடை’ திரைப்படம். லீலாவுடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவளிடம் ஆதிக்கம் செலுத்துகிறான் வருண். அதற்கு அடிக்கடி மன்னிப்பும் கேட்கிறான். ஆனால் அதன் பிறகும் அவனுடைய சுபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் மீண்டும் மூர்க்கத்தனமாகவே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். காரணம் அவனுடைய தந்தைதான் எனவும் அவனுக்கே புரிகிறது. அந்த வகையில் இது வருண் பற்றிய கதை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆணாதிக்கப் போக்கைச் சுட்டும் முயற்சி எனப் பாராட்டலாம்.

தனக்குள் காதல் துளிர்விட்டதை உணர்ந்து வருணைத் தேடி லடாக் லே பகுதிக்குச் செல்கிறாள் லீலா. அங்குப் பனிப் புயலைப் பார்த்துப் பரவசமடையும்போது ஆபத்தைச் சுட்டிக்காட்டி அவளை இழுத்துவர முயல்கிறான் வருண். அப்போது, “வரலேனா அடிச்சு இழுத்துட்டுப்போவியா?”, “நான் முக்கியம்னு சொல்லு, அதை விட்டுட்டு எதுக்கு மக்கு, அடிப்பேங்குற?” என அவனுடைய ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்டிச் சரியான கேள்விகளை எழுப்புகிறார் லீலா. ஆனால், பனி பொழியும் நகரில் மருத்துவராகப் பணி புரியும் ஒரு பெண்ணுக்குப் பனிப் புயல் குறித்த சமயோசித புத்திகூட இருக்காதா? இது ஏன் மணி ரத்னத்துக்குத் தெரியவில்லை?

சுயபுத்தியும் சுயமரியாதையும்

அடுத்து, நிறைமாதக் கர்ப்பிணிக்குத் திருமணம் என்கிற அபத்தம். முற்போக்காகச் சிந்திக்கிறேன் பார் எனத் தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காகவே திணிக்கப்பட்ட காட்சி அது. கல்யாணத்துக்கு முன்பு உறவு கொள்ளலாமா, கூடாதா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பனிக்குடம் உடையும் தறுவாயில் இருக்கும் பெண்ணுக்கு எதற்காகத் திருமணம் செய்துவைக்க வேண்டும்? சரி, விறுவிறுப்பாகக் காட்சியை நகர்த்துவதற்கு இதுவும் அவசியம்தானே!

அதைத் தொடர்ந்து வருண் எப்படிப் பட்டவன் என்பதைத் துல்லியமாகக் காட்ட மருத்துவமனைக் காட்சி விரிக்கப்பட்டிருக் கிறது. அங்கு, வருணுடைய தம்பி (மனநலம் குன்றியவர்) “ஏற்கெனவே அண்ணன் நாலு கேர்ள் ஃபிரண்ட்ஸ இப்படி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கான்” என்கிறார். அவர் உளறுவதால் பதற்றம் அடையும் வருணின் குடும்பத்தினருக்கு இடையே வாக்குவாதம் வலுக்கிறது. அப்போது வருணின் ஆணாதிக்கப் புத்தி அவனுடைய தந்தையின் நீட்சி என்பது திரையில் விரிகிறது. இயக்குநராக இந்தக் காட்சியைக் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் மணி ரத்னம்.

ஆனால், அங்கும் பெண்ணின் நுண்ணிய உணர்வைப் பதிவு செய்யத் தவறிவிட்டார் இயக்குநர். பள்ளி நாட்கள் முதலே வருண் பற்றிக் கேள்விப்பட்டு அவன் மீது நேசம் வளர்த்தவள், அவனைத் தேடி லடாக் வரை சென்றவள், அவனுடைய குணம் அறிந்து உடைந்துபோவாள். சுயபுத்தியும் சுயமரியாதையும் உடையவள் விலகிப் போவாள். ஆனால் இந்த விஷயத்துக்கு மிகச் சாதாரணமாக ஒரு சிறிய புன்னகையை மட்டும் மணி ரத்னத்தின் லீலா வெளிப்படுத்துகிறாள்.

யாருடைய விதி?

ஒருவரோடு உணர்வுரீதியாகப் பிணைக்கப்படும்போது அவரால் புண் பட்டாலும் அவரை விட்டுப் பிரிந்து செல்ல முடியாது என்பது உண்மைதான். நிஜ வாழ்க் கையில் ‘வேண்டும்’, ‘வேண்டாம்’ என்பதை அவ்வளவு எளிதாகத் தீர்மானிக்க முடியாது என்பதே நிதர்சனம். அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னைக் காயப்படுத்தும் வருண் கோரும் மன்னிப்பை ஏற்று உருகுகிறாள் லீலா. யாருக்கும் தலைவணங்காதவன் தன்னிடம் சரணடையும்போது நெகிழ்ந்துபோகிறாள். இங்கு ‘நீ படித்தவள், உனக்குச் சுயமரியாதை கிடையாதா, எதற்காக வதைக்கும் ஒருவனைச் சகித்துக்கொள்கிறாய்?’ என்கிற உரிமைக் குரலைப் பொத்தாம்பொதுவாக எழுப்ப முடியாதுதான்.

சொல்லப்போனால் திரைக் கதையும், அந்தப் பெண் அவனை ஏன் தூக்கி எறியக் கூடாது என்கிற கேள்வியை எழுப்பு கிறது. அதற்கு இயக்குநர் முன்னிறுத்தும் விடையில்தான் சிக்கல் உள்ளது. அதுதான், ‘விதி’. அதற்கு அர்த்தம் காதல் விதி வசப்பட்டது என்பதா அல்லது பெண்ணின் தலைவிதி என்பதா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.

விருப்பத்தை நிராகரிக்கும் வன்மம்

இதில் சகித்துக்கொள்ள முடியாதது, வருண் அவளைத் தூக்கி எறிந்து பேசும் தருணங்கள்கூட அல்ல. தனக்கு எது தேவையோ அதை ஒரு துளிச் சலனமும் இன்றிக் காதலியின் மீது திணிக்கும் அவனுடைய அணுகுமுறைதான். இந்தப் போக்கு மணி ரத்னத்தின் ‘மெளன ராகம்’ மனோகரிடம் (கார்த்திக்) தொடங்கியது. திடீரென ‘நாளைக்கு நமக்குக் கல்யாணம்’ எனக் காதலிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் சுபாவத்தை ஆண்மை எனக் காட்டுவது அப்போதே ஆரம்பித்துவிட்டது! இரண்டிலும் ‘வர மாட்டேன்’ (திவ்யா), ‘நான் இன்னும் சரினு சொல்லலை’ (லீலா) என நாயகிகள் சொன்னாலும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தான் தீர்மானித்ததை நிறைவேற்றும் ஆணாகப்பட்ட நாயகர்களின் மனோபாவம்தான் அச்சுறுத்துகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு பெண்ணைத் துன்புறுத்துவதற்கு நிகரானதுதான் அவளுடைய விருப்பத்தை நிராகரிப்பதும். இதைக் காலங்காலமாக இந்திய ஆண்கள் செய்துவருகிறார்கள்.

நல்லறிவை அடையவில்லையே!

மூர்க்கத்தனமாகவும் சுயநலவாதியாகவும் இருந்த தன்னைச் சக மனிதர்களை நேசிக்கவும் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் வைத்தது கார்கில் யுத்த அனுபவம்தான் என்கிறான் வருண். போர்க் குற்றவாளியாகச் சிக்கி அனுபவித்த சித்திரவதைகள் அவனை மனிதனாக மாற்றுகின்றன. புரையோடிப்போன ஆணாதிக்கச் சிந்தனையைத் தகர்த்தெறிய ஆண் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லவருகிறாரா மணிரத்னம்?

ஒரே ஒரு முறையாவது மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிற குற்றவுணர்வோடு தேடும் லீவாவை நான்கு ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு யதேச்சையாகச் சந்திக்கிறான் வருண். ஆனால் அப்போதும் அவனிடம் மனமாற்றத்துக்கான எந்த அறிகுறியும் வெளிப்படவில்லை. அசைவற்று நிற்கும் அவன் தன் மகளைப் பார்த்த பிறகே நெகிழ்கிறான். இதனால் தந்தை, சகோதரன், மகன் என்கிற பிம்பத்தைத் தாண்டி தன் காதலியைச் சக மனுஷியாகப் பாவிக்கும் நல்லறிவை அவன் இன்னமும் அடையவில்லை என்பதே எஞ்சி நிற்கிறது.

இறுதியாக, தன்னை ஏன் இத்தனை நாட்கள் தொடர்புகொள்ளவில்லை எனக் கேட்கும் வருணிடம், “ஒருவேளை உனக்கு என்னையும் என் குழந்தையையும் பிடிக்காமல் போயிட்டா?” என்கிறாள் லீலா. அங்கு லீலா உச்சரித்திருக்க வேண்டிய வார்த்தைகள் இவைதான்: “ஒருவேளை இன்னும் உன்னை மட்டுமே உனக்குப் பிடிச்சிருந்தா?”

நன்றி - தி இந்து 
...மேலும்

Apr 13, 2017

"ஆண்மை தவறேல்" - மாதினி விக்னேஸ்வரன்

"முக்கியமாக ஆண்களுக்கான பதிவு"
 ஜுங்கோ புருட்டா (Junko Furuta) 
"அம்மா நான் வீட்டிலிருந்து தப்பி வந்து விட்டேன். எனது நண்பனுடன் இருக்கிறேன். எந்தவித பாதிப்புமில்லை" ஜுங்கோ புருட்டாவின் (Junko Furuta) குரல். அவளின் அம்மா ஜுங்கோ புருட்டா பாதுகாப்பாக இருப்பதாக எண்ணி மனதைத் தேற்றுகிறாள். ஜுங்கோ புருட்டா அழகான துறுதுறு பார்வையுடைய பதினேழு வயதுப்பெண். அவள் ஜப்பான் நாட்டின் மிசாட்டோ நகர (Misato, Saitama Prefecture), உயர்பாடசாலையொன்றில் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். 1972ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அவள் நான்கு பேரால் கடத்தப்பட்டிருந்தாள். அவர்களில் இருவர் பதினெட்டு வயது நிரம்பியவர்கள். ஒருவன் பதினேழு வயதுடைய கமிசக்கு மற்றவன் பதினாறு வயதுடையவன்.

முதலாம் நாள்
ஜுங்கோ புருட்டா அவர்களில் ஒருவனின் காதலியாக நம்ப வைக்கப்பட்டு கமிசக்குவின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டாள். அவளைத் தேடுவதைத் தவிர்க்கவே அவளை மிரட்டி அவளாகவே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு பாதுகாப்பாக இருப்பதாக அவளின் அம்மாவிடம் சொல்லும்படிச் செய்தார்கள். 

அவள் பட்டினியால் வாடி போசாக்கிழந்து போனாள். உண்பதற்கு கரப்பான் பூச்சிகளும் அருந்த சிறுநீரும் திணிக்கப்பட்டது. அனைவரின் முன்னாலும் ஆடைகளை அவிழ்க்கவும் அவளே சுயஇன்பம் செய்யவும் பணிக்கப்பட்டாள். அவளின் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் பெண்ணுறுப்பிலும் சிகரெட்டால் சுடப்பட்டாள். மேலைத்தேய உபகரணங்கள் அவளின் பெண்ணுறுப்பிலும் குதவழியிலும் உட்புகுத்தப்பட்டது.

பதினாராம் நாள் - 1988ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி
அவளின் உள்ளுறுப்புகள் சேதமடைந்து மூக்கால் உதிரம் வெளியேறும் வரை பலமுறை முகத்தை நிலத்தில் அடித்தார்கள். மூக்கு குருதியால் தோய்ந்திருந்தது. அவளால் வாயால் மட்டுமே சுவாசிக்க முடிந்தது. வயிற்றுப்பகுதியில் உடற்பயிற்சி செய்யும் பளுவை வைத்தார்கள். அவள் நீர் அருந்த முயற்சித்த வேளை வாந்தியெடுத்தாள். தப்பிக்க முயற்சித்த வேளை கால்களிலும் பாதங்களிலும் சிகரெட்டுகளால் சுட்டார்கள்.

இருபதாம் நாள் - 1988ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி
மூங்கில் பிரம்புகளால் அடிபட்டதால் அவளால் சரியாக நடக்க முடியவில்லை. குதவழியாக பட்டாசுகள் புகுத்தப்பட்டு பற்ற வைக்கப்பட்டிருந்தன. விரல்கள் உடைக்கப்பட்டிருந்தன. பெண்ணுறுப்பில் சிகரெட்டுகள் நுழைக்கப்பட்டிருந்தன. குளிர்காலத்தில் வெளியே படுக்க விரட்டினார்கள். வாட்டிய இறைச்சியை குத்தும் குச்சியை பெண்ணுறுப்பிலும் குதவழியும் நுழைந்து இரத்தக்கசிவை ஏற்படுத்தினார்கள்.

முப்பதாவது நாள்
.சூடான மெழுகை கண்களிலும் முகத்திலும் ஊற்றினார்கள். மார்பிலே தையல் ஊசிகளால் குத்தினார்கள். இடது முலையை குறட்டினால் சேதப்படுத்தினார்கள். அவள் கழிப்பறையை பயன்படுத்த கீழே செல்ல படிக்கட்டுகளில் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக தவழ்ந்து சென்றாள். மூளையின் அளவு மிகவும் சிறியதாகிற்று. காதுகளும் பலத்த சேதமாயிற்று. கத்தரிக்கோலை நுழைத்தமையால் அவள்

 பிறப்புறுப்பிலிருந்து தொடர்ச்சியாக இரத்தக்கசிவு.

நாற்பதாவது நாள் - 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி
அவள் தனியாகவே அந்த புதுவருடத்தைக் கழித்தாள். "என்னைக் கொன்றிடுங்கள். இதிலிருந்து விடுதலை தாருங்கள்" என அவள் அவர்களைக் கெஞ்சினாள். அவளின் உடல் வலுவிழந்தது.

நாற்பத்து நான்காவது நாள் -1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் திகதி
அவளின் உடலை நிலத்தில் கிடத்தி இரும்பால் அடித்தனர். மெழுகுவர்த்தி சுவாலையால் சுட்டனர். இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக அவள் சித்ரவதை செய்யப்பட்டாள். அந்த நாள் அவளின் உடல் சடலமானது. உணர்வுகளும் உணர்ச்சிகளும் எப்போதோ கொல்லப்பட்டிருந்தது. 44 நாள் துன்பங்களில் விபரிக்கப்பட்டவை பத்தில் ஒரு பங்கே.....

1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அவளின் உடல் கொங்கிறீற்று நிரப்பப்பட்ட கொள்கலனில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.. கடத்திய நான்கு ஆண்நாய்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் தகவலின்படி 44 நாட்களில் அவள் 100க்கும் அதிகமான ஆண்களால் 400க்கும் அதிகமான தடவை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளாள். ஒரே நாளில் பன்னிரெண்டுக்கும் அதிகமான ஆண்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளாள்.

ஜப்பானையே ஏன் உலக நாடுகளையே உலுக்கிப் போட்டது இந்தச் சம்பவம். விசாரணைகளின் போது கமிசக்கு தவிர ஏனையோரின் அடையாளம் அவர்களின் வயது கருதி மறைக்கப்பட்டது. விசாரணைகளில் அவர்கள் சிறுவர்களாக காட்ட முயற்சிக்கபட்ட போதும் இளைஞர்களாகவே கருதப்பட்டு எட்டு வருடத்துக்கும் குறைவான தண்டனையே வழங்கப்பட்டது. அனைவரும் தமது முப்பது வயதை பூர்த்தி செய்ய முன்னரே விடுதலை பெற்றனர். இத்தகைய குற்றங்களைப் புரிபவர்களை விடுதலை செய்தல் சரியா? மனிதர்கள் என்ற வரையறைக்குள் ஏன் பிராணிகள் என்ற வரையறைக்குள்ளாவது கொண்டுவர முடியுமா? ஏராளமான வினாக்கள்...........அடிக்கடி இத்தகைய சில சம்பவங்களை அறிந்தவள் என்ற வகையில் இதற்கான முற்றுப்புள்ளியை எப்படிவைக்கலாம் என்பது கேள்விக்குறி.

ஒவ்வொரு ஆணும் வளர்க்கப்படும் சூழலும் வளரும் சூழலும் அவனை வரையறுக்கின்றன. ஒரு பெண் யாரிடம் பாதுகாப்பின்மையை உணர்கிறாளோ அங்கே குற்றங்கள் நடைபெற சந்தர்ப்பங்களும் அதிகரிக்கின்றன. கணவனோ காதலனோ சகோதரனோ நண்பனோ தந்தையோ அந்நியனோ ஆசானோ தாத்தாவோ ஏன் பூட்டனோ .......ஒரு ஆண் மீதான அவளின் அச்சம் இத்தகைய கொடூரமான காம வக்கிரம் நிறைந்த சில நாய்களின் நடத்தைகளிலிருந்து உருவாகியது. ஒரு பெண் பாதுகாப்பாக இருப்பதை விட முக்கியமானது உங்களைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பை உணரச் செய்வது.
"ஆண்மை தவறேல்"

நன்றி - மாதினியின் முக நூலில் இருந்து அவரின் அனுமதியுடன் பகிரப்பட்டது.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்