/* up Facebook

Mar 9, 2017

பொருளாக்கப்பட்ட பெண்கள் (Objectification of Women) - சுமதி


90% of the women have I hate my body moment
வட அமெரிக்க விளம்பரங்களில் ஆணுடல்களைத் தவிர்த்து பெண்ணுடல்களை விளம்பரங்களுக்கு உபயோகப்படுத்துவது 80களில் அதிகரிக்கத் தொடங்கியது. பின்னர் இவ்விளம்பரங்களில் உபயோகப்படுத்தப்படும் பெண்ணுடல்கள் அவற்றின் அளவு, நிறம், வடிவம் போன்றவற்றால் விமர்சனங்களுக்கும் உள்ளாகத் தொடங்கின. பெண்ணின் ”அழகு” என்பதை ஊடகங்கள் தமது விளம்பரங்கள் மூலம் வரைவிலக்கணப்படுத்தி அவ்வழகைப் பெற்றுக்கொள்ளுவதற்கான சாதனப்பொருள்களையும் விளம்பரப்படுத்தின. இவற்றின் உற்பத்தி அதிகரிப்பிற்கு பெண்ணுடல்களையே விளம்பரங்களுக்குப் பயன்படுத்தின. இதன் விளைவாக, அழகு சாதனப் பொருட்களின் பயன்பாடு பெண்களிடையே அதிகரித்தது மட்டுமல்லாது, ஊடகங்களால் ”அழகு” என்பதற்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணங்களைப் பெற்றுக்கொள்ள  தமது உடலைக் கூறுசெய்து அழகுபடுத்த முயலும் இளம்பெண்களின் எண்ணிக்கையும் இக்காலகட்டத்தில்  அதிகரிக்கத் தொடங்கியது.

அதேவேளை முன்னைய காலங்களைப் போலல்லாது இவை அனைத்தையும் எதிர்த்து பெண்உரிமைக்கான குரல்களும் இணையாக இந்தக் காலகட்டத்தில் ஒலிக்கத் தொடங்கின.

விளம்பரங்களில் பெண்கள் பாரம்பரிய, கலாச்சாரப் பாதுகாவலர்களாக, அலுவலக ஊழியர்களாக, மற்றும் அழகுப் பதுமைகளாகப் பண்டங்களாக உருவகப்படுத்தப்படுகின்றார்கள், ஆனால் உயர் அதிகாரியாக, ஆணுக்குச் சமனாக அல்லது உயர்வாகப்  பெண்களை உருவகப்படுத்துவது இதுவரை காலங்களும் தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றது. 

வடஅமெரிக்கப் பெண்கள், வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் பெண்களோடு தம்மை ஒப்பிட்டுத் தாங்கள் தமக்கான சுதந்திரத்தை, உரிமையை முழுமையாகப் பெற்றுவிட்டதாக நம்புகின்றார்கள். மாறாகப் பொருளாதார வளர்ச்சி இவர்களைச் சிறுகச்சிறுக கொன்று கொண்டிருப்பதை இவர்கள் அவதானிக்கத் தவறிவிடுகின்றார்கள்.

50களில் பெண்கள், குடும்பப்பெண்களாக, வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் விளம்பரங்களுக்காக மட்டுமே  உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள். பெண்ணுடல்கள் இங்கே அதிகம் உபயோகப்படுத்தப்படவில்லை,

கடந்த 40 வருடங்களை எடுத்துக்கொண்டால் கடந்த சில வருடங்களாக  வடஅமெரிக்கப் பெண்களின் உடல்கள் விளம்பரங்களில் பண்டமாக காண்பிக்கப்படுவது  அதிகரித்துள்ளதாக ஆய்வாளர் ஜீன் கில்பேர்ன் கூறுகின்றார். 

தொழில்நுட்பத்தின் காரணமாக ஊடகங்கள் கைகளுக்குள் வந்துவிட்டன. விளம்பரதாரர்கள் இளையவர்களை இலக்கு வைக்கின்றார்கள். அழகு குறித்த வரைவிலக்கணம் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்கள் மனதில் பதிக்கப்பட்டு விடுகின்றது.

விளம்பரம் என்பது எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இயல்பாக, இலகுவாக ஒவ்வொருவர் மனதிலும் அவர்கள் அறியாமலேயே பதிந்தும் விடுகின்றது. இருந்தும் பொதுமக்கள் ”நாம் அதிகம் விளம்பரங்களை கவனிப்பதில்லை, அதுபற்றி எமக்கு அக்கறையுமில்லை” என்று கூறுகின்றார்கள் நம்புகின்றார்கள்.. இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களின் தாக்கத்தினால்தான் பொருட்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்திருக்கின்றது என்கின்றார்கள் ஆய்வாளர்கள். பெண்கள் உபயோகப்படுத்தாத பல பொருட்களுக்குப் பெண்களை வைத்து அவர்கள் உடலை முன்னிறுத்தி விளம்பரங்கள் வெளிவருகின்றன. அன்றாடம் நாம் கடந்து செல்லும் அனைத்து இடங்களிலும் பெண்ணுடல்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். நாம் அவற்றைக் கண்டும் காணாமலும் கடந்து போய்க்கொண்டிருக்கின்றோம். அண்மைக்காலங்களில் என்னை அதிகம் அதிர வைத்த விளம்பரங்கள் சிலவற்றைப் பார்க்கையில் "Skyy Vodka", ”Tom Ford" perfume போன்றவை மிக மிகக் கேவலமான முறையில் பெண்களின் உடல்களைத் தமது உற்பத்திப் பொருட்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இவை நகரின் மத்தியில் அரசின் அனுமதிப் பெற்று பெரிய அளவுகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்விளம்பரங்களை நகரின் மத்தியில் வாழும், தொழில்பார்க்கும் மக்கள் நாளாந்தம் கடந்து செல்கின்றார்கள். அங்காங்கே பெண்ணியவாதிகள் இவற்றிற்கெதிராய்க் குரல்கொடுத்தும், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் சென்று இளையவர்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள். இருந்தும் மாற்றங்கள் பெரிதாய் ஏற்படவில்லை.

தமிழ் நாட்டிலிருந்து தற்போது பல தமிழ் தொலைக்காட்சிகள் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வந்து விட்டன. இவற்றின் உணவுப்பொருட்களின் விளம்பரங்களில் சுவையாகச் சமைத்துக் கணவருக்குப் பரிமாறி கணவரைத் தன்வசம் கவர்ந்திழுக்கும் பெண்ணாகத்தான் மனைவி சித்தரிக்கப்படுகின்றாள். வங்கி சேமிப்புத்திட்ட விளம்பரங்கள் உங்கள் ஆண் மகனின் கல்விக்கும், பெண்ணின் திருமணத்திற்கும் சேமிப்புத்திட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்கின்றார்கள்.. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கூட்டத்திற்கு மக்களை அழைப்பதற்கு ரெக்காட் டான்ஸ் பாடல் ஒன்றை முதலில் ஒலிபரப்பிக் கூட்டத்திற்கு மக்களைச் சேர்த்துவிட்டுத்தான் தமது உரையை ஆரம்பிக்கின்றார்கள் என்று ஒரு சமூகவியளாளர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ரொறொண்டோ நகரில் புலம்பெயர் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட வானொலிகள், தொலைக்காட்சிகள் பல உள்ளன. அண்மையில் எனது நண்பர் ஒருவர் சி.எம்.ஆர் வானொயில் இடம்பெற்ற விளம்பரம் குறித்துத் தனது முகப்புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.

//“இன்னைக்காவது உங்க சொந்தக்காரங்களோட கொண்டாட்டத்துக்கு என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா?”

அவள் இப்படி கேட்டதும்; கணவனோ எரிச்சல் உற்றவனாகிறான்
கொண்டாட்டத்துக்கு என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா?”
அவள் இப்படி கேட்டதும்; கணவனோ எரிச்சல் உற்றவனாகிறான்.
“முதல்ல உன்ர உடம்பைக் குறை. பிறகு பார்க்கலாம்.” என்கிறான்.

இது 'பிளானட் பிட்னஸ்' என்கிற உடற் பயிச்சி நிலையத்திற்கான விளம்பரம். CMR வானொலியில் கேட்டேன்.

ஆரோக்கியமான சிந்தனையை கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல நாம்; என்பதை இதுபோன்ற விளம்பரங்கள் திரும்ப திரும்ப சொல்கின்றன.

விளம்பரங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என பொறுப்பு துறக்கும் ஊடகங்கள்; இது போன்ற பிற்போக்கு விளம்பரங்களுக்கு வியாபார நிறுவனங்களை கை காட்ட முடியாது. இது போன்ற மூடத்தனமான சிந்தைனக் கதைகள் எங்கள் தமிழ் மைய சிந்தனையில் மட்டுமே தோன்றக்கூடியது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு தன் கிளைகளை வேகமாக பரப்பி வரும் உடற் பயிற்சி மையமான பிளானட் பிட்னஸ் இந்த மாதிரியான விளம்பரத்தை Mainstream ஊடகம் ஒன்றில் ஒலி பரப்புமாயின்; அது எவ்வகையான சிக்கலை எதிர் நோக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.\\

இதுபோன்று சமூகப்பொறுப்பற்று ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களை எதிர்த்து, ரொறொண்டோ வாழ் பெண்ணியவாதிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் தனது முகப்புத்தகத்தில் கேட்டிருந்தார். நண்பரின் கேள்வி நியாயமானது. ஆனால் சி.எம்,ஆர் போன்று ரொறொண்டோ நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் பலவற்றை தரமற்றவை என்று நம்மில் பலர் நிராகரித்துக்கொண்டிருக்கின்றோம். ஊடகங்களில் என்ன ஒலிபரப்பாகின்றது என்பது தெரியாத பட்சத்தில் எப்படி அவற்றைக் கண்டிக்க முடியும்? ஊடகத்தில் ஒலி, ஒளிபரப்பாகும் நிகழ்வுகள் கேட்பதற்கோ, பார்ப்பதற்கோ நாம் விரும்பும் தரத்தில் இல்லாவிட்டால் நாம் இயல்பாகவோ அந்த ஊடகத்தை விலத்திவிடுவோம். தமிழ்நாட்டிலிருந்து பல தொலைக்காட்சிகள் கடல்கடந்தும் எமது மக்களின் வீடுகளுட் புகுந்துவிட்டன. அவ்வூடகங்களைத் தமது முக்கிய பொழுதுபோக்குச் சாதனமாக புலம்பெயர் தமிழ் மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். புலம்பெயர் குழந்தைகளும் இவ்வூடகங்களோடேயே வாழ்ந்துகொண்டுமிருக்கின்றார்கள். இந்த ஊடகங்களில் ஒலிபரப்பாகும், நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் ஒன்ராரியோ அரசின் தணிக்கை குழுவிடம் கொடுக்கப்பட்டு அனுமதி பெறப்படுகின்றனவா? இவற்றிற்கு யார் பொறுப்பு? புலம்பெயர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் சமூகப்பொறுப்போடு வெளியாகிக்கொண்டிருக்கின்றனவா? பெண்ணியவாதிகளோ, சமூக அக்கறை கொண்டவர்களோ அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் நிகழ்ச்சிகள், விளம்பரங்களை கண்காணித்துக்கொண்டிருக்க முடியாது. ஊடகங்கள்தாம் எமது அடுத்த சந்ததியை மனதில் கொண்டு சமூகப்பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். 

.நன்றி - தீபம் பத்திரிகை கனடா

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்