/* up Facebook

Mar 8, 2017

வீட்டில் “சும்மா” இருக்கும் பெண்கள் பற்றி... - சுகந்தி மணிமாறன்

எனது நேரம், எனது உழைப்பு, எனது பெறுமதி 


குடும்பப் பெண்களிடம் வழமையாக நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு “வீட்டில் சும்மா தான் இருக்கிறேன்” என்று கொடுக்கப்படும் பதிலைக் கண்டிருப்போம்.

இது ஒரு பழக்கப்பட்ட கேளிவியாகவும் பழக்கப்பட்ட பதிலாகவும் இயல்பாக நிலவுவதைக் காணலாம். ஆனால் பெண்கள் ஒன்றும் வீடுகளில் சும்மா இருப்பதில்லை, இன்னும் கூறப்போனால் ஆண்களையும் விட அதிக நேரம் உழைப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்று எப்போதோ உலக அளவில் நிரூபித்தாகி விட்டது.

மேலும் பெண்கள் இன்று வெளியில் சென்று பணிபுரியும் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். ஆக அவர்களின் வேலைகள் இரட்டிப்பாக ஆகியிருப்பதே நிதர்சனம். இதைத் தான் இரட்டைச் சுமை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் வெளியில் தொழில் புரிந்து வந்ததன் பின்னர் வீட்டில் அவர்களுக்கு இருக்கின்ற பொறுப்புகள் எந்த விதத்திலும் மாறியது கிடையாது. வேலைக் களைப்புடனும், உளைச்சலுடனும் இந்த கடமைகளை கவனித்துத் தான் ஆக வேண்டும் என்பது ஆணாதிக்க சமூக விதி.

வேலையிலிருந்து வீடு திரும்பும் பெண்கள் குழந்தை பராமரிப்பு, உணவு தயாரிப்பு, வீடு துப்பரவு செய்வது, துணி துவைப்பது, கணவனின் தேவையைக் கவனிப்பது என பம்பரமாக சுழன்று கொண்டிருப்பது எங்கெங்கும் காணமுடிகிற அவலம். இந்த உடல் உளச் சிக்கலை அடக்கிக்கொண்டு இயந்திரத்தனமாக வீட்டின் அமைதி சீர்குலையாமல் பேனா வேண்டிய மகா பொறுப்பும் பெண்ணையே சேர்ந்துவிடுகிறது.

எனவே உடற்களைப்பு, உளக் களைப்பு, குறை நித்திரை, நிறை வேளை என தொடரும் பெண்களின் பிரச்சினை கவனத்திற் கொள்ளப்படுவது கிடையாது. “அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும்” என்பது பிரசவத்துக்கு சரியாக இருக்கலாம். ஆனால் ஏனைய அனைத்து சுமைகளையும் அவள் மட்டும் சுமக்க வேண்டும் என்கிற நிலை மாற்றப்படக்கூடியது. வேலைப் பகிர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில் சரி செய்யக்கூடியதே. இன்றைய புதிய உலகில் இதில் ஆணாதிக்க நிர்ப்பந்தங்களுக்கு விடை கொடுக்கலாமே.

பெண்களின் வீட்டு வேலையை அளவிடும் பழக்கம் ஆணாதிக்க சமூக அமைப்பில் கிடையாது. அப்படி ஒரு அளவீடு இருந்துவிட்டால் ஆணைகளை விட பெண்கள் எத்தகைய பலசாலிகள் என்பது மட்டுமல்ல எந்தளவு திறமையானவர்கள் என்பதும் அறியக் கிடைக்கும்.

இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாக ஆகியிருக்கிறார்கள். பெண்களில் 60 சத வீதமானோர் தொழிற்படை என்கின்றன தரவுகள். கல்வித் தரத்திலும், அளவிலும் பெண்களின் வளர்ச்சி அதீதமாக வளர்ந்திருப்பதையும் அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் சகல தளங்களிலும் அதிகாரத்தில் பெண்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே உள்ளனர்.

பெண்கள் செலவிடும் நேரம், அவர்கள் செலுத்தும் உழைப்பு, விரயமாக்கும் சக்தி என்பவற்றின் பெறுமதியை உணரும் சமூகமாக நமது சமூகம் இல்லை.
எனவே தான் இன்னமும் நமது பெண்கள் “சும்மா வீட்டில் இருக்கும் பெண்களாக” கணிக்கப்படுகிறார்கள். தாமும் உழைக்கும் பெண்களே என்று தார்மீகத்துடன் நெஞ்சு நிமிர்ந்து கூற அவர்களுக்கு வழி சமைக்கப்படவில்லை.

பெண்களையும் தனக்கு சமமான மனித ஜீவியாகவும், தனக்கு நிகரான அத்தனை உணர்வுகளும் உள்ள சக தோழியாகவும் நடத்தும் உலகமே அற்புதமான உலக்கெனலாம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்