/* up Facebook

Mar 7, 2017

நவீன பாலியற்சுரண்டல் - சி.புஷ்பராணி

2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை

புலம் பெயர்ந்து வாழும் பல ஆண்களிடம் புதுவித ஆசையொன்று பரவலாகக் காணப்படுகின்றது, அதாவது, தனியாக ஈழத்துக்கு ஒருவித சபலத்தில் அடிக்கடி போவது.

.உண்மையாகத் தனிப்பட்ட காரணங்களுக்காகச் செல்லும் ஆண்களை இதில் நான் சேர்க்கவில்லை.

சின்ன வீடாகப் பெண்களை வைத்திருக்கவேண்டும்; அல்லது, அங்குள்ள இளம் பெண்ணொருத்தியை மணம் முடித்து ,உல்லாசமாகக் கொஞ்ச நாட்கள் அனுபவித்துவிட்டு , ,உன்னை விரைவில் கூப்பிடுகின்றேன் '' என்று பொய்யான வாக்குறுதி கொடுத்துவிட்டுக் கழன்று விடுவது.நான் அறிந்தவரை, இவர்களில் பெரும்பாலோர் ஐம்பது வயது தாண்டியவர்களும் ,அதற்குக் கிட்டவும் உள்ள திருமணவானவர்களும், அல்லது விவாகரத்துப் பெற்றவர்களுமாகவே தெரிகின்றனர்.. 


இந்த விடயம் குறித்துப் பலரும் பல விதமாக எழுதினாலும் ,ஊரில், வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டி மேற்கத்தைய நாடுகளுக்குப் போகவேண்டும் என்று கனவு காணும் பெண்களுக்கோ பேராசை கொண்ட பெற்றோருக்கோ உறைக்கமாட்டேன் என்கின்றது

.. ''நீங்கள் மட்டும் வெளிநாட்டில் வசதியாக வாழலாம் எங்கடை பிள்ளைகள் அப்படி வாழக் கூடாதோ என்று ஊரிலிருக்கும் என் அண்ணன் ஒருவர் கோபத்துடன் கேட்டதும் நினைவுக்கு வருகின்றது..

.ஊருக்குப் போய்த் திருமணம் செய்த பல இளைஞர்கள் மனைவிமாரை நன்றாக வைத்திருக்கவும் செய்கின்றார்கள்தான் ... ...நான் இங்கே சொல்ல வருவது ஏமாற்றும் நோக்குடனும், பாலியல் சார்ந்த ஆசையுடனும் ஊருக்குச் சென்று பெண்களைப் பலிக்கடாக்களாக்கும் சபலபுத்திகொண்ட ஆண்கள் பற்றியதாகும்.

.. பலர்மூலம் நான் தெளிவாகக் கேட்டு அறியும் செய்திகள் [,வதந்திகளல்ல] ...இத்தகைய ஆண்கள் மீதும் ,இவர்களை நம்பி ஏமாறும் பெண்கள் மீதும் ,ஒரு சேரக்கோபத்தை வரவழைக்கின்றன.,

 அநேகமாக இதில் ஏமாறும் பெண்கள் ஒன்றும் தெரியாத சின்னக் குழந்தைகள் அல்ல...படித்துப் பட்டம் பெற்றுப் பெரிய பதவிகளில் இருந்த பல பெண்களே ,வெளிநாட்டு மோகத்திலும்,காசாசையிலும் இப்படிப்பட்ட ஆண்கள் விரிக்கும் வலையில் இலகுவாக மாட்டி அந்தரிக்கின்றனர்...

..நீண்டநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு செல்லும் இந்த ஆண்கள் காசை அள்ளி விசுக்கிக் காட்டும் கோலாகலத்தில் கட்டுண்டு போகும் பெண்களில் பலர் ,கையில் குழந்தையுடன் ,''விரைவில் அவர் எங்களைக் கூப்பிடுவார், என்றும், நான் வெளிநாட்டுக்குப் போனதும் உங்களை நன்கு கவனிப்பேன் என்று வீட்டிலுள்ளோரையும் நம்ப வைத்துக்கொண்டு,வருடக் கணக்காகக் காத்திருந்து அல்லல்படுவதுமான பரிதாபம் தொடர்கதையாகப் போய்க் கொண்டிருக்கின்றது..


இப்படி இலங்கைக்குப் போய் மணம் முடித்துவிட்டு வந்திருக்கும் ஆண்களில் சிலர் சொல்லும் நொண்டிக் காரணங்கள் உலகமகா பொறுக்கித்தனமாக இருக்கின்றது..
 எனக்குத் தெரிந்த ஒருவர் ஊருக்குப் போய் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து விட்டு பிரான்ஸ் திரும்பினார் ..அவர் அங்கு போய் மணம் முடித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன...இடையில் சிலதடவைகள் போய்வரவும் செய்தார் .

.ஆரம்பத்தில் நான் கேட்டபோது, ஆறுமாதங்களில் வந்துவிடுவா'' என உறுதியாகச் சொன்னார்...பிறகு கொஞ்ச நாட்களுக்குப் பின் ,''அவ வந்துவிட்டாவா ''என்று ஆவலுடன் நான் வினாவ, ''எப்படியும் கெதியில் வந்துவிடுவா...அவவுடைய விசாவால் கொஞ்சம் தாமதம் '' என்று ஏதோதோ இழுத்தார்... பிறகு ஆளை நீண்ட நாட்கள் நான் சந்திக்கவேயில்லை. அண்மையில் அவரைப் பார்த்தேன், எடுத்தவுடனேயே, ''மனைவி எப்படியிருக்கின்றா...'' என்று கேட்டுவிட்டேன்..''அவ வரமாட்டா..வர மனமில்லையாம்.அவவுக்கு; எங்கடை ஆட்களை அவவுக்குப் பிடிக்குதில்லை, இது சரிப்பட்டு வராது [அட ..பாவி!] விட்டிட்டன் ...அவ வரமாட்டா''மிகச் சாதாரணமாக இவர் சொன்னது என்னைத் திகைக்க வைத்தது.

இதுபற்றி இன்னொருவர் மூலம் அறிந்த தகவல். இந்த ஆளின் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டியது. இவர் திருமணம் செய்த பெண் ஒரே அழுகையும் ,கண்ணீருமாக ,இவர் எப்போது கூப்பிடுவார் என்ற எதிர்பார்ப்போடு இருக்கின்றார். இப்படியெல்லாம் பெண்களின் மனதில் ஆசையையும் எதிர்பார்ப்புக்களையும் ஊட்டி ஏன் வதைக்கவேண்டும்?

 சமீபத்தில் இலண்டனில் வாழ்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஓர் இளம் பெண் சித்தப்பிரமையில் இறந்துபோனார். இந்தப்பெண் ஊரில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவராம். லண்டனுக்கு வரும் ஆசையில் வேலையையும் உதறிவிட்டுத் திருமணமாகி இங்கு வந்த சில நாட்களிலேயே ,தன் கணவன் குடிக்கு மோசமான நிலையில் அடிமையாகி இருப்பதை அறிந்து திகைத்திருக்கின்றார்.

 இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும் ,கணவனின் நிலைமை மாறாததால் [எப்படி மாறும்?] இந்தப் பெண் மனம் பேதலித்துக் குழந்தைகளையும் சரிவரக் கவனிக்காமல் பிரமை பிடித்த நிலையிலேயே இருந்திருக்கின்றார்... இதை அயலவர் மூலம் அறிந்த போலீசார் குழந்தைகள் நலப்பிரிவுக்கு அறிவிக்க ,அவர்கள் பிள்ளைகளை எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் ...எப்போதும் போதையில் இருக்கும் குழந்தைகளின் தகப்பனிடமும் குழந்தைகள் காட்டப்படவில்லையாம் ...கொஞ்ச நாட்களில் இந்தப் பெண்ணையும் அவர்களே பொறுப்பெடுத்து வைத்திய சாலையில் அனுமதித்திருக்கின்றார்கள்.. மனப்பிறழ்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பெறும் நாட்களியே இறந்துவிட்டார் ..இப்போது அந்தப்பிள்ளைகளை ,அந்தப்பெண்ணின் சகோதரியொருவர் பொறுப்பேற்றிருக்கின்றார்.

வேறுசிலர் ஊருக்குப் போய்த் திருமணம் செய்து இங்கு திரும்பியபின் ,தான் கட்டிய பெண் ஒழுக்கம் சரியில்லாதவள் என்று பின்பு தான் அதைக் கேள்விப்பட்டதாகவும்,அதனாலேயே கூப்பிடவில்லையென்றும் அபத்தமான-அபாண்டமான பழியைப் போட்டுத் தங்களைச் சுத்தவான்களாகக் காட்டி நழுவி ஒதுங்குகின்றனர். இவங்களைப் போன்ற அயோக்கியன்களை என்ன செய்யலாம்?

இனிச் சொல்ல வருவது ,இலண்டனில் வசிக்கும் ஒரு புலம்பெயர்ந்து வாழும் நபர் பற்றியது.முதலில் மனைவிமக்களோடு ஊருக்குப் போனவர் , பிறகு தனியாக அடிக்கடி இலங்கைக்குப் போக ஆரம்பித்தார். கடைசியாகப் போனபோது நீண்டநாட்கள் நின்று குடும்பக் கோவில் ஒன்றைத் திருத்துவதாகச் சொல்லி, இலண்டனிலுள்ள சகோதர, சகோதரிகளிடமிருந்து பணம் வரவழைத்திருக்கின்றார். நிறையச் செலவானதாகவும், புழுகியிருக்கின்றார் இலண்டன் திரும்பி இரண்டு மாதங்கள் ஆகவில்லை .''சொந்தக்காரர்களைப் பார்க்க ஆசையாயிருக்கு '' என்று கூறி இப்போதும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்

.இதற்கிடையில் , ஊரிலுள்ள இவருடைய மகள் முறையான பெண்ணொருத்தி, 'அவரை, இங்கு வரவிட வேண்டாம்..அவர் எங்களைப் பார்க்க வெளிக்கிடவில்லை.பிறகு நீங்கள்தான் மனவருத்தப் படப்போறியள் .அவர் இங்கு பிடித்திருக்கும் சிநேகிதம் எங்களுக்குப் பிடிக்கவில்லை..இவ்வளவுதான் சொல்லுவேன்''என்று அவரது மனைவிக்கு தொலைபேசியில் எச்சரிக்கை பண்ணியிருக்கின்றாள்

.ஆனால் என்ன, அவர் ஊருக்குப் போய்விட்டார் விடுமுறை [?] கழிக்க....

..நடந்து முடிந்த யுத்த அவலத்தால் , பலபெண்கள் ஆதரவற்ற நிலையில் வறுமையில் மூழ்கியிருப்பதைப் பயன்படுத்திச் சில ஆண்கள் பொழுதுபோக்குப் போல் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது சகிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. ஒரு சிலர் சிங்களக் கிராமங்களிலும் .மிகவும் சின்ன வயதுப்பெண்களை மணம் முடித்துத் தாங்கள் இருக்கும் நாட்டுக்குக் கூப்பிடுவதாகப் பசப்பி ,மகிழ்ச்சியாக அவர்களோடு நாட்களைக் கழித்து விட்டு வந்திருக்கின்றார்கள்.

வெள்ளைத்தோல்-வெள்ளைக்காரன் நல்லவன் என நம்புவது போல வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு வருபவர்கள் எல்லாம் உபகாரிகள் உயர்ந்தவர்கள் என்று நம் மக்கள் ஏமாந்துவிடுகின்றனர். இருப்பதில் கிள்ளிக் கொடுப்பதும் கூட ஊரில் பரோபகாரி எனச் சொல்லிப் படமெடுத்துப் போடுவதற்கும் சனங்களை நம்ப வைப்பதற்கும் தானா என்ற கேள்விகள் எழுகின்றன. அங்கிருந்து வரும் கதைகளும் இங்கு அழும் அவர்களது துணைவிகளது கதைகளும் எவரைத் தான் நம்புவதோ எனத் திகிலுாட்டுகின்றன.

.கற்பனையில் இங்கு நான் எதையும் உளறவில்லை.

எல்லாம் உண்மையாக நடந்தவையே. இதில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள்..ஒரு சிலர் அங்கு ‘சின்னவீடு’ வைத்துவிட்டுத் திரும்புவதாகவும் கேள்வி. இது அவரவர் தனிப்பட்ட வாழ்வு-விருப்பம் என அவர்கள் சொல்லலாம். ஆனால், இதேமாதிரி உங்கள் மனைவிமாரும் 'சின்னவீடு' [இது பொதுப்பால்தானே.] வைத்திருக்கப் பொறுக்குமா உங்களுக்கு ?ஆண்கள் என்றால் என்னவும் செய்யலாம் என்ற தெனாவெட்டுத்தானே இது. ஒழுக்கத்தைப் பற்றி இங்கு நான் கதைக்கவில்லை.தெனாவெட்டை,ஆண் திமிரை ஆண்தடித்தனத்தைச் சொல்கின்றேன்...

.என் நெருங்கிய சொந்தக்காரரின் மகளுக்கு , திருமணம் பேசிய போதெல்லாம் ,''வெளிநாட்டு மாப்பிள்ளையைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதமாகஇருந்துவிட்டாள். பல திருமணங்கள் வெளிநாட்டில் பேசி எல்லாமே தட்டிப் போய்விட ,அவள் வயது ஏறிக்கொண்டே போய் 40 வயது வந்துவிட்டது

.குடும்ப நண்பர் ஒருவர் மூலம் ,கனடாவிலுள்ள விவாகரத்தானவர் என்று சொல்லி ,வயது வந்த பிள்ளைகளைக் கொண்ட ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு , கனடாவிலிருந்து மாப்பிள்ளை [!] வந்து ,திருமணம் கோலாகலமாக நடந்தேறியது ..இரண்டு மாதங்கள் மனைவியோடு ஊர் சுற்றி விருந்துண்டு மகிழ்ச்சியில் திளைத்த மாப்பிள்ளை ,''கெதியில் உன்னைக் கனடாவுக்குக் கூப்பிடுகின்றேன் என்ற வழக்கமான வாக்குறுதியோடு கனடா திரும்பிவிட்டார்

. ஆயிற்று இரண்டு வருடங்கள் 
.அவள் இன்னும் கனடா போகவில்லை.இந்தப் பெண்ணின் பெயரில் இருந்த காணியை ஈடு வைத்தே திருமணச் செலவுகள் நடந்ததாக இப்போது அறிந்தேன்.கனடாவுக்குப் போய் காணியை மீட்கலாம் என்பது பெண்ணின் நம்பிக்கையாம்.இந்த வீணாப்போன நம்பிக்கை ஒன்று மட்டும்தான் இத்தகைய பெண்களின் பெரும் பலவீனமுமாகும். 

.இப்படியான வெளிநாட்டு மாப்பிள்ளைகள் மீது பெண்கள் மட்டுமல்ல பெண்களைப் பெற்றவர்களும் கவனமாயிருக்கவேண்டும்.குடும்பத்தில் ஒருத்தி வெளிநாடு போய்விட்டால் தங்களது குடும்பத்தை முன்னேற்றிவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில் பெண்களை முன்பின் அறியாத ஆண்களை நம்பி நடுக்கடலில் தள்ளிவிடுகின்றனர்...

.யுத்த காலத்தில் இராணுவத்தின் கொடுமையால் பெண்கள் பலர் குதறப்பட்ட வேதனையின் ஈரம் இன்னும் காயவில்லை. இப்பொழுது புலம்பெயர்ந்து வந்து தங்களைப் பொருளாதார ரீதியாகவும் வதிவிட அனுமதி ரீதியாகவும் நிலைநிறுத்தி விட்டவர்கள் , நாட்டிற்குத் திரும்பிப் போய் பெண்களைப் பண்டங்கள்போல்  உபயோகித்து உதறிவிட்டு, நல்லபிள்ளைகள் போல் திரும்பும் ஆண்கள் இன்னொரு விதமான பாலியல் வன்முறையையே கையாளுகின்றனர்.

பெண்களின் உடலானது இவர்களைப் பொறுத்தவரை வெறும் நுகர்வுப்பொருள்தான்.

.வெளிநாட்டு ஆசையையும் ஏமாற்று வித்தைகளையும் ஒன்றாகப் பசப்பித் தம் வலையில் விழவைத்து இன்புறுவது ,இவர்களுக்குச் சிரமமாக இல்லாமல் போய்விடுவதே இவர்களுக்கான அனுகூலமாகிவிடுகின்றது.
 இதுவொரு நவீன பாலியற்சுரண்டல் தான்!.

இத்தகைய ஆண்கள் மனதில்,  ஊருக்குப் போய், தங்களை விடவும் மிகவும் இளமையான பெண்களை மணம்செய்யும் விருப்பமிருந்தால், நேர்மையாகத் தங்கள் மனைவிமாரை விவாகரத்துச் செய்துவிட்டு, மணம் முடித்துக் கூட்டிவரலாம்தானே? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற கதைதான். வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவிகளைக் கைவிட மனம் வருமா?

மனைவி என்பவள் தங்கள் பாதுகாப்புக்குக்கும், பொருளாதாதார வளத்துக்கும் இருந்தேயாக வேண்டும். தனக்கென்று குழந்தைகளின் பாசம் அதோடு குடும்ப கௌரவமும் வேண்டும். சும்மா பொழுதுபோக்குக்கும் தம் ஆசை தீர்க்கவும் ஏழைப் பெண்களின் வாழ்க்கையோடும், அவர்களின் கனவுகள் நிறைந்த எதிர்பார்ப்புக்களோடும் விளையாடவேண்டும் என நினைத்துத் தம் வெளிநாட்டு ஆடம்பரத்தை அங்கு விளம்பரம் செய்து ஆண் என்ற மமதையில் எதுவும் செய்துவிட்டுப் போய்க்கொண்டேயிருக்கலாம் என்ற அதி பொறுக்கித்தனத்தின் கேவலம் மிகு வெளிப்பாடேயிது. 

இத்தகைய அயோக்கியர்களிடம் ஏமாந்து நிர்க்கதியாக நிற்கும் பல பெண்கள் பற்றிய விபரங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

நடந்து முடிந்த யுத்தத்தின் துயர்மிகு எச்சங்களில் இதுவும் ஒன்றா?

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்