/* up Facebook

Mar 6, 2017

மொழியின் பெயர் பெண் - சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்: தன்னையே எழுதிக்கொண்ட கவிதை


போர்ச்சுகல் தேசத்தின், போர்த்துக்கீசிய மொழியின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர் சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர் (Sophia de Mello Breyner). போர்ச்சுகலின் துறைமுக நகரான போர்த்தூவில், ஒரு பணக்காரக் குடும்பத்தில் 1919-ல் பிறந்தார் சோஃபியா. அவருடைய தாய் புத்தகக் காதலர். சோஃபியாவுக்கும் சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிக்கொண்டது. 12 வயதில் அவர் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் படித்த ஹோமரின் ‘ஒடிசி’ அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடற்கரைக்கு அருகில் அவர்கள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்ததால் கடல் மீது சோஃபியாவுக்கு அளவற்ற காதல் ஏற்பட்டது. இந்தக் காதல் அவரது கவிதைகளிலும் பிற்காலத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டது.

இளமைப் பருவத்தில் போர்ச்சுகலின் தலைநகரான லிஸ்பனுக்கு சோஃபியா இடம்பெயர்ந்தார். அங்கே உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்த சோஃபியா தனது படிப்பை முடிக்கவில்லை. அவரது முதல் கவிதைத் தொகுப்பு 1944-ல் வெளியாகிப் பெரும் வரவேற்பு பெற்றது. 1946-ல் வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஃப்ரான்ஸிஸ்கோ சௌஸா டவாரீஸுடன் மணவாழ்வில் இணைந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தார்கள்.

அப்போது போர்ச்சுகல் பிரதமராக இருந்த சலஸாரின் ஒடுக்குமுறை ஆட்சியை எதிர்த்தவர்களில் சோஃபி யாவும் ஒருவர். 1974-ல் போர்ச்சுகலில் புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1975-ல் சோஷலிஸ அரசாங்கம் அமைக்கப்பட்டது. சோஷலிஸக் கட்சியின் சார்பாக அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக சோஃபியா தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், நேரடி அரசியலில் ஆர்வம் இல்லாததால் ஓர் ஆண்டு கழித்துத் தனது பதவியில் இருந்து அவர் விலகினார்.

இந்தப் பிரபஞ்சத்துடன் உறவு கொள்வதற்கான மிக முக்கியமான சாதனமாகக் கவிதையை சோஃபியா கருதினார். “கவிதை என்பது தீரவே தீராத, மிகவும் ஆதாரமான ஒன்று. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், நம் அன்றாட வாழ்க்கை போன்றவற்றுடனான நமது உறவிலிருந்து அது தொடங்குகிறது. இந்த உறவு புராணிகத் தன்மை கொண்டது. புராணிகச் சிந்தனையின்றி இந்த உலகில் வாழ மனிதர்களால் முடியாது” என்கிறார் சோஃபியா.

மேலும், “கவிதை என்பது இந்த உலகத்துடனான எனது புரிதல், பொருட்களுடனான எனது நெருக்கம், எது நிதர்சனமோ அதனுடனான என் பங்கேற்பு, குரல்களுடனான பிம்பங்களுடனான எனது ஊடாட்டம். ஆகவேதான், கவிதை என்பது ஆதர்ச வாழ்வை அல்ல, நிதர்சன வாழ்வைப் பற்றிப் பேசுகிறது: ஜன்னல் சட்டங்களின் கோணம்; தெருக்களின், நகரங்களின், அறைகளின் எதிரொலி; சுவரொன்றில் நீளும் நிழல் என்றெல்லாம்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் இலக்கியம் என்று தொடர்ச்சியான எழுத்துச் செயல்பாடு களால் நிரம்பியது சோஃபியாவின் வாழ்க்கை. அவரைப் போலவே அவரது பிள்ளைகளில் ஒருவரான மிகேல் சொஸா டவாரீஸும் எழுத்தாளராக போர்ச்சுகலில் பெரும் புகழ் பெற்றிருப்பவர்.

கவிதைக்காகப் போர்ச்சுகலில் வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘ப்ரெம்யூ கமோய்’ விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை 1999-ல் சோஃபியா பெற்றார். 2001-ல் மாக்ஸ் ஜேகப் கவிதை விருதையும் பெற்றார். இன்னும் ஏராளமான அங்கீகாரங்களையும் பெற்ற சோஃபியா 2004-ல் தனது 84-ம் வயதில் காலமானார்.

சோஃபியாவின் கவிதைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டி ருக்கின்றன. ஆங்கிலத்தில் ரிச்சர்டு ஸெனித், ரூத் ஃபைன்லைட், காலின் ராரிஸன், மார்கரெட் யூல் கோஸ்தா ஆகியோர் செய்த மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை.

சின்னஞ்சிறு சதுக்கம்

சின்னஞ்சிறு சதுக்கத்தின் வடிவெடுத்திருந்தது

என் வாழ்வு

உன் மரணத்துக்கான முன்தயாரிப்புகள்

அவ்வளவு நுணுக்கமாக நடந்தேறிய

அந்த இலையுதிர்காலத்தில்

ரிப்பன்களையும் துணிமணிகளையும் கடைக்காரர்கள்

மடித்துக்கொண்டும் விரித்துக்கொண்டுமிருந்த அவ்விடத்தில்

நீயாக ஆக முயன்றேன் நான்

நீ மரணமடையப் போகிறாய் என்பதால்

அங்கு நான் வாழ்ந்த வாழ்க்கை

இனி எனதென்ற நிலையற்றுப் போகும்

தினசரிகளை விற்பவரைப் பார்த்தும்

புகையிலை விற்பவரைப் பார்த்தும்

வயலட் பூக்களை விற்கும் கால்களற்ற பெண்ணைப் பார்த்தும்

நீ சிரிப்பதுபோல் நானும் சிரிக்க முயன்றேன்

உனை நோக்கிப் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டேன்

கால்களற்ற அந்தப் பெண்ணிடம்

அந்தச் சதுக்கத்தின் மூலையில் நின்ற

தேவாலயங்களின் பலிபீடங்கள் யாவிலும்

மெழுகுவர்த்தி ஏற்றினேன்

என் கண்களைத் திறந்ததுதான் தாமதம்

உன் முகத்தில் நித்தியத்தின் காரிய சித்தம்

எழுதி ஒட்டியிருந்ததைக் கண்டேன்

உன் முகத்துக்குச் சாட்சியமாய் இருந்த

தெருக்களையும் இடங்களையும் நபர்களையும்

அழைத்தேன்

உன்னை அவர்கள் கூப்பிடுவார்கள் என்று

மரணம் உன்னைச் சுற்றி இறுக்கிப் பின்னியிருந்த

இழையை அவர்கள் பிரிப்பார்கள் என்று

-------------------------------------------------------------------------------------------------------------------------

மரித்தோரை உணர்கிறேன்

ஊதாப் பூக்களின் குளுமையிலும்

நிலவின் மகத்தான மங்கலிலும்

மரித்தோரை உணர்கிறேன் நான்.

பேயாய் இருக்கும்படி சபிக்கப்பட்டவள் இந்த பூமி,

எல்லா மரணங்களையும் தானே உடுத்தியிருப்பவள் அவள்.

மௌனத்தின் விளிம்பில் நின்று நான் பாடுவதை அறிவேன், அந்தரத்தைச் சுற்றி நான் நடனமிடுவதையும்,

உரிமைப் பறிப்பைச் சுற்றி ஒரு உரிமையைப் பற்றுகிறேன் என்பதையும் அறிவேன்.

ஓசையற்றுக் கிடக்கும் மரித்தோரை நான் கடப்பதை அறிவேன் எனக்குள்ளேயே என்

மரணத்தை நான் வைத்திருப்பதையும் அறிவேன்.

ஆயினும் என் இருப்பை நான் தொலைத்துவிட்டேன்

எத்தனையோ இருப்புகளில்,

என் வாழ்க்கையை மரணித்துவிட்டேன் எத்தனையோ முறை,

என் ஆவியுருக்களை முத்தமிட்டேன் எத்தனையோ முறை,

ஏதுமறியாதிருந்திருக்கிறேன் எத்தனையோ முறை

என் செயல்கள் குறித்தும்,

மரணம் என்பது வேறொன்றுமல்ல

வீட்டின் உள்ளிருந்து தெருவுக்குள்

போவதுதான் என்பது குறித்தும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து

யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து

யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து

புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்

எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே

கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே

(சோஃபியாவின் வாழ்நாளில் கடைசியாக வெளியான அவருடைய கவிதை இது)

நன்றி - தி இந்து 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்