/* up Facebook

Mar 8, 2017

உலகை உலுக்கும் நோமோஃபோபியா - சுகந்தி மணிமாறன்

2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை

அதென்ன நோமோஃபோபியா என்கிறீர்களா? இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாதலைத் தான் குறிப்பிடுகிறது. போதைப்பொருளை உட்கொண்டவர்கள் அது அல்லாமல் கை நடுங்குவது, இல்லாமல் ஆதீத அச்சத்துக்கு உள்ளாவது போன்று தான் இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் தம் வசம் இல்லாமல் போகும் போது அடைகிற பதட்ட நிலையையும், நடுக்க நிலையையும் தான் நோமோஃபோபியா என்கிற ஒரு வகை நோயாக அதனை அழைக்கின்றனர். உலகத்தின் மிகப் பெரும் “ஃபோபியா” என்பது நோமொஃபோபியாதான் என்கிற தகவல் பொய்யில்லை.

போன் அருகில் இல்லையே, இன்னும் சார்ஜ் ஆகவில்லையே, பயன்படுத்த முடியாத இடத்தில் இருக்கின்றேனே, சிக்னல் கிடைக்கவில்லையே, இனைய இணைப்பு கிடைக்கவில்லையே, மறுமுனையில் பதில் கிடைக்கவில்லையே, முகநூல், டுவீட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் தான் இட்ட நிலைத்தகவலுக்கு லைக்குகள், பின்னூட்டங்கள் கிடைத்து விட்டனவா என்பது போன்றவற்றை சிந்தித்தபடியே அதிக நேரத்தையும் செலவிட்டு, மன உளைச்சலுடன் உலவும் ஒரு சமூகம் உருவாகியிருக்கிறது. இந்த புதிய உலக ஒழுங்கு அடிப்படை இலக்கை விட்டு விலகி ஏதோ போக்கில் வழிநடத்திச் செல்லும் அபாயமான மன நோயை உருவாக்கியிருப்பதை நாம் கவனித்தாக வேண்டும்.

ஓய்வில்லாமல் தொலைபேசியை பயன்படுத்துவது, அடிக்கடி சோதிப்பது, இரவிலும் அடிக்கடி எடுத்துப் பார்ப்பது, நடக்கும் போதும் எடுத்து கவனிப்பது எல்லாமே இந்த நோயில் அறிகுறிகள் தான்.


“No-mobile-phone phobia” என்பதன் சுருக்கமே Nomophobia என்று இந்த புதிய வகை பிரச்சினையை அழைக்கின்றனர். உணவு உண்ணும் போது, உரையாடலில் இருக்கிற போது, நித்திரைகொள்ளும் போது ஏன் மலசல கூடத்திற்கும் கூட கூடவே கொண்டு சென்று பயன்படுத்தும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சினைக்கு இன்று அதிகம் ஆளாகியிருப்பவர்கள் 18-24 க்கும் இடைப்பட்ட வயதினர் தான் என்கின்றன கருத்துக் கணிப்புகள். அதுவும் அந்த தொகையில் அதிகமானோர் ஆண்களை விட பெண்கள் தான் என்கிறது அந்த ஆய்வு. பயன்படுத்துபவர்களில் 66 வீதமானோர் இதற்கு பலியாகியிருப்பவர்களே. 

ஒரு புறம் இவ்வாறு உளப்பிரச்சினையை இது கொடுத்து வருகிற போது மறுபுறம் உடல் ரீதியிலான பல வகையான நீண்டகால பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது என்று பல ஆய்வுகள் தினசரி வெளிவந்தவண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் இத்தகைய மீள முடியாத ஆட்கொல்லியான இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்பது என்பது இன்று உலகப் பிரச்சினையாக ஆகியிருப்பது தான் நாம் கவனிக்க வேண்டிய புள்ளி.

மனிதத் தொடர்பில் இருந்து அந்நியமாகி “சமூக ஊடகம்” என்கிற பெயரில் சமூத்துடன் நேரடி தொடர்பில்லாத இயந்திரத்தனமாக வழிநடத்துகிறது இந்த நோமோஃபோபியா. சிரிப்பு, புன்னகை, கவலை, அழுகை, அன்பு, ஆத்திரம் போன்ற உணர்வுகளைக் கூட கார்ட்டூன் ஸ்மைலிகளாக வெளிபடுத்தி உண்மையான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வழக்கத்திலிருந்து அந்நியமாகின்ற போக்கு வளர்ந்து விட்டுள்ளது. இதற்கு அடிமையாகிறவர்கள் தனிமைக்கு பழக்கப்படுகின்றனர். காலப்போக்கில் சமூகம், குடும்பம், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று கலப்பதை கூட எரிச்சலூட்டுகிற ஒன்றாக ஆக்கிக் கொள்கின்றனர். புன்னகையை விட்டு விலகி தீவிரமாக முகத்தை வைத்திருக்கும் பலரையும் தினசரி நாம் காண்கிறோம்.

இத்தனை காலம் அருகில் இருக்கும் மனிதர்களையும், சூழலையும் கவனிப்பது, ஆராய்வது, மதிப்பிடுவது, அவற்றோடு ஊடாடுவது போன்ற பழக்கங்கள் அற்றுப் போய்க்கொண்டு இருக்கின்றன. காத்திருக்கும் சகல இடங்களிலும் குடிந்த கழுத்துடன், இரு கைகளாலும் போனை முகத்துக்கு அருகில் வைத்து ஊன்றிகவனித்துக் கொண்டிருக்கும் இயந்திர மனிதர்களின் எண்ணிக்கை எங்கெங்கும் அதிகரித்திருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஆய்வை நடத்தினார்கள் அந்த ஆய்வின் போது பெரியவர்களை விட சிறுவர்களுக்கே பல உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய சாத்திங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். குறிப்பாக தம்மோடு கையில் வைத்தோ, மடியில் வைத்தோ நீண்ட நேரம் இத்தகைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் சிறுவர்களை கதிர்வீச்சுக்கள் பெரியவர்களை விட அதிகமாக பாதிப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இதன் பக்க விளைவுகள் உடனடி விளைவாக இருக்காவிட்டாலும் நீண்டகால போக்கில் ஒரு உடல்நலம் குன்றிய ஒரு பரம்பரை இதனால் உருவாவதாக இன்றைய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கண் பிரச்சினை, கழுத்து வலி, கூன் விழுதல் போன்றனவும் மேலதிக உடல் ரீதியான சிக்கல்கள் உருவாக்கி வருகின்றன.நல்ல சந்ததியை உருவாக்க விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார் போன்றோர் இவற்றிலிருந்து எச்சரிக்கையுடன் கையாளுமாரும் கோருகின்றன சில அமைப்புகள்.

பெண்களே அதிகம் இதற்கு இலக்காகி இருக்கிறார்கள் என்கிற தகவலை நாம் புறக்கணித்து விட்டு கடக்க முடியாது. இதற்கு வழிதேடும் காலம் வந்துவிட்டது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்