/* up Facebook

Mar 8, 2017

“மாற்றத்துக்காக பலமுறுவோம்!” அரசியல் அதிகாரத்தை அடைவோம்! - சுகந்தி மணிமாறன்

2017 சர்வதேச பெண்கள் தின சிறப்புக் கட்டுரை

சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் மார்ச் 8 திகதியாகும். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கருப்பொருளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் ஒரு சுலோகம் அறிவிக்கப்படுவதுண்டு. இம்முறை “மாற்றத்துக்காக பலமுறுவோம்!” என்கிற சுலோகத்தை 2017க்காக அறிவித்திருக்கிறார்கள்.

நம் நாட்டைப் பொறுத்தளவில் மகளிர் அமைப்புகள் வருடாந்தம் உடனடிக் கோரிக்கைகளையும், நீண்டகால கோரிக்கைகளையும் முன்வைத்து தமது முன்மொழிவுகளை வலியுறுத்துவார்கள். அந்த வகையில் பெண்களின் அரசியல் பிரதிநித்தித்துவம் பற்றிய கோரிக்கைகளை இம்முறையும் பல அமைப்புகள் முன்வைத்துள்ளன. அப்படி அரசியல் பிரதிநித்துவக் கோரிக்கையை முன்னெடுப்பதில் முன்னணி அமைப்பாக செயல்படுவது “பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு” ஆகும்.

இலங்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்து ஒரே தடவையில் 1931 இல் சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. ஆங்கிலேய காலனித்துவ நாடுகளிலேயே முதலாவதாக சர்வஜன வாக்குரிமையை பெற்ற நாடு இலங்கை. முதலாவது ஆசிய நாடும் இலங்கை தான். வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5 ஐ இது வரைத் தாண்டியதில்லை.

உலகுக்கே முதலாவதாக பெண்ணொருவரை பிரதமராக ஆக்கி முன்னுதாரணத்தைத் தந்ததும் இலங்கை தான். இத்தனை இருந்தும் இன்றுவரை இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவதில் பெண்கள் 6 வீதத்தைத் தாண்டிச் சென்றதில்லை. இதற்கான போராட்டம் பல வருடகாலமாக நீடித்த போதும் இந்த நிலைமையில் மாற்றம் கண்டதில்லை. நியாயமாகப் பார்த்தால் பெண்கள் சனத்தொகையில் தமக்கு நிகரான விகிதாசார அளவுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை கோரியிருக்க முடியும். ஆனால் வெறும் 33 சத வீதத்தையே கோரி வந்திருக்கிறார்கள். இன்று அதையும் குறைத்து 30% வீத ஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்டை நாடுகளான இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஒப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்படுகின்றன. ஆனால் அங்கு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் சனத்தொகையில் பாதிக்கு மேல் பெண்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அது தவிர கல்வி கற்றோர் தொகையும் கூட ஆண்களை விட பெண்களின் தொகை உயர்ந்து கொண்டு செல்கிறது. இலங்கை கல்வியறிவில் 93 வீதமாக காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான ஒதுக்கீடு இன்று வரையுமே எட்டாக்கனியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கைக்கு அதிகளவில் அந்நியசெலாவணியை ஈட்டித்தருபவர்கள் பெண்கள். இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டங்களில் உழைக்கும் பெண்களும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக இருப்பவர்களுமே அதிகமான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தருகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? பல்வேறு வன்முறைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணிபுரியும் இப்பெண்களின் பாதுகாப்புக் குறித்துச் சிந்திப்பதுதான் பல்வேறு பிரச்சினைகள். இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடங்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியினாலும் பெண்ணுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனப்பாங்கும் பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கான பெண்களுக்கான தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக இருந்து வருகின்றன.


பெண் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பருவகால கோஷங்களாகிவிட்டுள்ளன. தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.

அதிகார அசமத்துவத்தை சரி செய்வதற்காக குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, பாலினருக்கோ கோட்டா முறையினை பயன்படுத்தி வரும் பல நாடுகள் உலகில் உள்ளன. பெண்களின் பிரதிநித்துவத்தையும் அப்படித்தான் சரி செய்து வருகிறார்கள். ஆனால் இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 86 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தேர்தலின் பின்னர் ஏற்படும் இந்த போதாமைகளை சரி செய்வதற்காக தேசியப் பட்டியல் முறையை பயன்படுத்தும்படி கெஃபே போன்ற அமைப்புகள் தற்போது குரல் கொடுத்து வருகின்றன.

இம்முறை சர்வதேச பெண்கள் தினத்தை “மாற்றத்துக்காக பலமுறுவோம்!” என்பதை இலங்கையின் அர்த்தத்தில் அரசியல் அதிகாரத்துக்காக பலமுறுவதையே முன்னிறுத்த வேண்டியுள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்