/* up Facebook

Mar 21, 2017

இலங்கையில் முஸ்லிம் தனியார்ச் சட்டம் கோலங்கள் – அலங்கோலங்கள் - பாத்திமா மாஜிதா


இலங்கை அரசின் சிறுபான்மையினர் உரிமை தொடர்பான விவாத அரங்கில் முஸ்லிம் பெண்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஆரம்பக்கட்டமாக முஸ்லிம் தனியார்ச் சட்டத்தில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எப்போதும் இல்லாதவாறு இம்முறை மிகவேகமாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் மேலெழுந் துள்ளன.

இஸ்லாத்தின் ஆரம்பகாலப்பகுதியில் பெண்கள் உரிமைகளை வலியுறுத்தி அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்கான முன்னெடுப்பு முயற்சிகள் இருந்திருப்பதை வரலாறுகள் கூறுகின்றன. அல் குர்ஆன் - ஸூன்னாவின் ஒளியில் இறைத்தூதர் காலப்பெண்களின் செயற்பாடுகள் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் சான்று பகர்கின்றன. அரபுப் பழங்குடி அமைப்பிலிருந்து வெகுதொலைவிற்குக் கடந்துவந்துவிட்டபின் சமூக ஒழுங்கைக் கட்டமைக்கும் பொருட்டு நிகழ்ந்த நெறிப்படுத்தல் காலப்போக்கில் ஒருபால் சார்புத் தன்மையோடு வளைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகக் கலாச்சார மாற்றங்களை நிலைநிறுத்துதல் மூலம் ஆண் மேலாதிக்க வழக்காறுகள் இஸ்லாமியக் கொள்கையினுள் ஊடுருவி ஆண்நோக்கு நிலையை நோக்கி முஸ்லிம் சமூகம் வேகமாக நகர்ந்திருக்கிறது.

தங்களது ஆணாதிக்கச் சிந்தனைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பெண்களின் சுதந்திரத்தினை அடக்கி வைப்பதற்காகவும் பண்பாட்டு ரீதியான வழக்காறுகளை இஸ்லாமியக் கோட்பாடுகள் என்ற வட்டத்தினுள் திணித்துச் சட்டங்களாகவும் திரித்துக்கொண்டனர். இதன்மூலம் அடிப்படையில் பால் சமத்துவத்தையும் சமூகநீதியையும் உள்ளீடாகக் கொண்ட இஸ்லாமிய ஷரியா, பழைமைவாத முஸ்லிம் களினால் பிழையாக உருத்திரிக்கப்பட்டிருக்கிறது. எனினும் காலப் போக்கில் உலகளாவிய ரீதியான மாற்றங்கள், பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள், பெண்களின் உரிமை மீறல்கள் பற்றிய விழிப்புணர்வுகள் அனைத்துச் சமூகப் பண்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதன் விளைவாக ஆண்களுக்கு உரிமைகளையும் பெண்களுக்குக் கடமைகளையும் மட்டுமே இஸ்லாமாக வலியுறுத்தும் முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பிலும் பெண்களின் கண்கள் திறந்துவிடப்பட்டுள்ளன. திருமணம்,குடும்ப வாழ்க்கை, இஸ்லாமிய வழிபாடுகள் என்று வரையறைக்குள் முடுக்கிவிடப்பட்டிருந்த பெண்கள் தம் உரிமைகள் தொடர்பில் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். உணர்வுகளையும் உரிமை மீறல்களையும் இஸ்லாமிய ஷரியாவின் ஆதாரப் பனுவல்களின் அடிப்படையிலேயே உரையாடத் துணிகின்றனர். பல் இன மதங்களைக் கொண்டவொரு கலாச்சாரச் சூழலில் வாழும் சமூகத்தில் இத்தகைய மாற்றம் இடம்பெறுவது யதார்த்தமானதும் தேவை யானதுமாக உள்ளது .

1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தின் மூலாதாரமாக 1770ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட இந்தோனேசியாவின் நடைமுறையிலிருந்த திருமணம் மற்றும் விவாகரத்து சம்பந்தமான சட்டக்கோவை கருதப்படுகிறது. பிந்திய காலப்பகுதியில் இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவ்வப்போது நிலவிய சமூக வழக்காறுகள், கலாச்சார மாதிரிகள் சேர்க்கப்பட்டு 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டமாக வடிவம் பெற்றது.

இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமண வயது, திருமணம் தொடர்பில் பெண்கள் நேரடியாக சம்மதம் தெரிவிப்பதற்கான அனுமதியின்மை, ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள பலதாரத் திருமணம், விவாகரத்து தொடர்பில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகள், கைக்கூலி அல்லது சீதனம் வழங்குதல் போன்ற பல சட்ட ஏற்பாடுகள் பெண்களின் திருமணம், விவாகரத்து சம்பந்தமான உரிமைகளை மீறுகின்றன; இச்சட்ட ஏற்பாடுகளிற்கிணங்க பெண்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்படுவதுடன், சிறுபராயத்திருமணம் சட்டரீதியாக அங்கீகரிப்பட்டதாகிவிட்டது. இச்சட்டத்தின் வழியாக நற்பண்பும் சிறந்த பதவியும் கொண்ட எந்தவோர் ஆண் முஸ்லிமும் காதி நீதிபதியாக நியமிக்கப்படுகின்றார். இவ்வாறு நியமிக்கப்படும் காதி நீதிபதி சட்டம் பற்றிய போதிய அளவு அறிவும் செயற்திறனும், பெண்கள் - சிறுவர்களின் நலன்களில் அக்கறையும் கொண்டவரா என்பன கேள்விக்குறிகளாகும். அனேகமான காதி நீதிபதிகள் வழக்குகளை விசாரணை நடத்தும் முறைமைகள் மனிதநேயமற்றிருக்கின்றன. உதா ரணமாக, விவாகரத்து கோரி நிற்கும் பெண்ணிடம் அவளுக்கும் கணவனுக்குமான தாம்பத்திய உறவுமுறை எவ்வாறு இருந்தது எனப் பகிரங்கமாக அனைவர் முன்னிலையிலும் காதி நீதிபதி கேள்வி எழுப்பும் சந்தர்ப்பங்கள் அதிகம். அத்தகைய தருணங்களில், முறையீடு செய்த

பெண்ணின் அந்தரங்க உரிமை பற்றிய எந்தவோர் அக்கறையினையும் காதிமார் கவனத்தில் எடுப்பதில்லை. மேலும், தீர்ப்பு வழங்கும்போதும் ஆண்களுக்குச் சார்பாகவே பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. சில காதிமார், கணவனிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்குகின்றனர்.

இந்நிலையில் மனிதஉரிமை, பெண்ணிலைவாதம் என்ற சிந்தனைப் பரப்பில் சர்வதேசச் சட்டங்கள் வளர்ச்சியடைந்து வரும் இந்த நூற்றாண்டில் இலங்கையின் முஸ்லிம் தனியார்ச் சட்டமும் அதன் நடைமுறைகளும் பின்தங்கிய நிலையில் இருப்பதனை உணரமுடிகின்றது.

போர்க்காலச்சூழல், நான்கிற்கும் மேற்பட்ட மணம் புரிதல் என்ற நிலை இவற்றை முறைப்படுத்தும் வகையில் மொழியப்பட்ட நான்கு பெண்கள்வரை மணந்து கொள்ளல், அதோடு நீதமாக நடந்து கொள்ளல் என்ற சொற்பயன்பாடு, குலா உரிமை, தலாக்கிற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், பார்வையைத் தாழ்த்திக்கொள்ளுதல் முதல் கல்வி வரை இருபாலாருக்கும் பொதுவான வசனங்கள், பெண் சொத்துரிமை குறித்த அவசியம் முதலான பல இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு முரணாகவே இன்றைய சட்ட ஏற்பாடுகளில் பெரும்பாலானவை விளங்குகின்றன; இவை தலைமைதாங்கிய ஆண் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன. சூழலடிப்படையில் நிகழ்ந்த நிகழ்வுகள் பலநூறு ஆண்டுகள் கடந்துவந்த சூழல் மாறுபாடுகளுக்குப் பின்னும் விடாப்பிடியாக வலியுறுத்தப்படுகின்றன. உதாரணமாக, திருமண வயதெல்லையைப் பொறுத்தவரை இச்சட்ட ஏற்பாடுகளின்படி பெண்ணின் திருமண வயதெல்லை 12 ஆகக் கூறப்பட்டுள்ளதுடன் அதற்குக் குறைந்த வயதிலும் காதி அனுமதித்தால் திருமணம் ஏற்புடையதாகும் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது தெளிவாகவே இஸ்லாத்தின் விழுமியங்கள் மற்றும் அடிப்படை நோக்குகளுக்கு முரண்பட்டதாகும்.

இன்றைய முஸ்லிம் சமூகச் சூழலில் 12 வயதிற்குக் குறைவான அல்லது 12 வயதுடைய சிறுமிகள் திருமணம் செய்யும் நடைமுறை இல்லாவிட்டாலும் 15 - 18 வயதிற்கும் இடைப்பட்ட முஸ்லிம் பெண்களைத் திருமணம் செய்துவைக்கும் நடைமுறைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

சிறுபராயத்திருமணம் என்பது இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் மத்தியில் உள்ள பொதுவான கருத்தாகும். பெருமானார், ஆயிஷா நாயகி ஒன்பது வயதாக இருக்கும்போது திருமணம் முடித்தார் என்பதை அடிப்படை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஆயினும் ஏகோபித்த முடிவன்று. ஏனெனில், ஆயிஷா நாயகி திருமணம் செய்கையில் அவருடைய வயது குறித்து வேறுபட்ட கருத்துகள் ஆய்வுகள் மூலம் அறியப்படுகின்றன. ஆதாரம் குறைந்த கருத்துகளைச் சட்டபூர்வமான கருத்துகளாக இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதேவேளை நடைமுறைக்குப் பாதிப்பில்லாத சட்ட அறிஞர்கள் கருத்தே முற்றும் முழுமையான கருத்தாகும். இது அல்குரானிய நடைமுறைகளுக்கும் முரணானது. ஆரம்ப இஸ்லாத்தின் புகழ்பூத்த சட்ட வல்லுநர்களில் சிலர் அக்கால வழக்காறுகளில் இருந்த சிறுபராய திருமணத்தைக் கடுமையாகக் கண்டித்து இருந்தனர்.

இறைவனின் சட்டங்கள் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என அல்குர்ஆன் கூறுகின்றது. இக்கூற்றானது இஸ்லாமியச் சட்டமுறையைப் புரிந்துகொள்வதற்கான தெளிவான சான்றாகும். ஆனால், இன்றைய சூழலுக்குப் பொருந்தாத ஆதாரம் குறைந்த இஸ்லாமியக் கொள்கைகளைச் சட்டங்களாக நடைமுறைப்படுத்துவதில் சில பழமைவாத இஸ்லாமிய இயக்கங்கள் வெற்றி கண்டுள்ளன; கடிவாளங்களாக ஆணாதிக்க அரசர்களின் கைகளில் அதிகாரங்களைக் குவித்துள்ளன.

இத்தகைய பின்னணியில், இலங்கையில் உருவாகியுள்ள இஸ்லாமிய இயக்கங்களும் ஆண் தலைமைத்துவ அடிப்படையில் தங்களது கொள்கைரீதியான வேறுபட்ட மதப்பிரதிகளைச் சமூகத்தினுள் உள்வாங்கச் செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றன. நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தினுள் எழுந்துள்ள பால்நிலை அடிப்படையிலான பிரச்சனைகள், வன்முறைகள் குறித்த கலந்துரையாடலுக்கு அவை தயாராகவில்லை; அல்லது அத்தகையதொரு பிரச்சனையை எதிர்நோக்கும் சந்தர்ப்பம் வருகையில் முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கும் பலவீனங்களைப் பிற மதத்தவருக்கு வெளிக்காட்டுதல் இஸ்லாத்திற்கு முரணான செயற்பாடாக வியாக்கியானம் செய்து மூடி மறைத்துவிடுகின்றனர். சீர்த்திருத்த நோக்குகள் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களும் இன்னும் மைய நீரோட்டத்தில் தாக்கம் செலுத்தும் வலிமை கொண்டனவாக இல்லை.

இலங்கை முஸ்லிம்களின் கொள்கை, கோட்பாடுகளைத் தீர்மானிக்கும் உயர்பீடமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை திகழ்கிறது. இச்சபையின் பெண்கள் நிகாப் விவகாரத்தில், முகம் மறைப்பது பெண்களின் கட்டாயக் கடமை என்பது அண்மைக்காலத் தீர்ப்பாகும்; பெண்களின் ஆடை உரிமைத் தொடர்பில் இஸ்லாமியச் சட்டக்கொள்கைகளை மிகவும் பலவீனமான முறையில் சூழலுக்குப் பொருந்தாத வகையில் வியாக்கியானம் செய்துள்ளதையே சுட்டிக்காட்டுகின்றது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் தனியார்ச் சட்டச் சீர்த்திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காகப் பேர் கொண்ட ஆண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

இச்சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என பெண்நிறுவனங்கள், பெண்ணிலைச் செயற்பாட்டாளர்கள் காலாகாலமாகக் குரல் எழுப்பி வருகின்றபோதிலும் அவ்வப்போது நிலவி வருகின்ற அரசுப் புறக்கணிப்பும் சிறுபான்மையினரின் சட்டத்தில் கை வைத்தால் பல்லினச் சமூகங்களின் ஆதரவு குறைந்துவிடும் என்ற அரசியல் தந்திரங்களும் இச்சட்டத்திருத்தத்திற்குச் சாதகமான சூழலை உருவாக்கவில்லை. குறித்த சட்டத் திருத்தம் தொடர்பில் கடந்த அரசுகளினால் 1984ஆம் ஆண்டு மற்றும் 90ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும் எத்தகைய திருத்தங்களும் முன்னெடுக்கப்படவில்லை. 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடவினால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் மூன்று முஸ்லிம் பெண்களை உள்ளடக்கியதாக 16பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆறுமாத காலத்துக்குள் சட்டத் திருத்தங்களுக்கான ஆலோசனைகளை இக்குழு வழங்க வேண்டியிருந்த போதிலும் இன்றுவரை அறிக்கை வெளிவரவில்லை. எவ்வாறிருப்பினும் இம்முறை எப்போதும் இல்லாதவாறு குறித்த சட்டம் தொடர்பில் கரிசனை எடுக்குமாறு அரசாங்கம்மீது பல்வேறு மட்டங்களிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 16வது உறுப்புரையானது பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் கொண்ட சட்ட ஏற்பாடாகக் கருதப்படுவதனால் அவ்வுறுப்புரையை நீக்குமாறு போராடி வருகிறார்கள். 16(1வது உறுப்புரை 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு முன்னர் காணப்படுகின்ற எழுதப்பட்ட, எழுதப்படாத அனைத்துச் சட்டங்களும் வலிதானதும் செயல்முறைமிக்கது மாகும் என கூறுகின்றது. அதாவது, இவ்வரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மேற்

கூறிய முஸ்லிம் தனியார்ச் சட்டம் உட்பட எழுதப்பட்ட, எழுதப்படாத அனைத்துச் சட்டங்களுக்கும் முரணாக இருக்கும் பட்சத்தில் எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்களே வலிதானவை. எனவே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் உட்பட ஏனைய 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு முந்தியே எழுதப்பட்ட, எழுதப்படாத அனைத்துச் சட்டங்களும் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறும்போது, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தினை அணுகமுடியாத சந்தர்ப்பம் ஏற்படும்.

எனவே, பல்வேறு மட்டங்களிலிருந்தும் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் முடிவாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முஸ்லிம் தனியார்ச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான உபகுழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்தார்.

இவ்வறிவித்தலைத் தொடர்ந்து அனைத்தையும் தீவிர உணர்ச்சியின் உச்சக் கட்டங்களாக மாற்றியமைக்கும் தௌஹீத் அமைப்பும் ஏனைய வஹ்ஹாபிய கருத்தியல் கொண்ட போராளிகளும் வீதியிலிறங்க ஆரம்பித்து விட்டனர். சிறுபான்மை இனங்களின் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்த பேரினவாத சக்திகள் முயற்சி, சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான சதி போன்ற எண்ணக்கருக்களை வடிவமைத்துத் தங்களது அதிரடிப்படையினரை உஷார் படுத்திவிட்டனர். இன மத வேறுபாடின்றி ஒற்றுமையை வலியுறுத்தும் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை அடியோடு பிடுங்கியெறியும் வகையில் பேரினவாத பௌத்தம் என்ற கோஷத்தினையும் முழங்கினர். இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்களுக்குச் சமத்துவம் வழங்குகிறோம் என்ற கருவூட்டலைத் தங்களது வசதிக்கேற்ப மாற்றியமைத்தனர்; பெண்களிற்கு ஏற்படும் வன்முறைகளை நிறுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட வேண்டிய முஸ்லிம் தனியார்ச் சட்டத்தினை, இஸ்லாமியக் கொள்கைக்கு மாற்றமான செயலாக அடையாளப்படுத்திப் பெண்களையும் தமது போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர்.

ஆனால், பௌத்தப் பேரினவாதம் அமைதி காக்குமோ? தனது கண்களுக்குள் யார் விரலை விடப்போகிறார்கள் என்று அழுவதற்கு எதிர்பார்த்திருந்தபோது பொதுபல சேனா அமைப்பு சிறுபான்மையினரின் கைகள் ஓங்குவதற்குப் பௌத்த நாட்டில் இடமில்லை என்ற ஆதிக்கத்தினூடான நடவடிக்கையில் இறங்கவே சட்ட சீர்திருத்தத்தின் திசை மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து சமூக அமைதிக்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற சட்ட அடிப்படையின் பிரகாரம் இலங்கை தௌஹீத் அமைப்பின் பொதுச்செயலாளரும் பொதுபல சேனாவின் உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பெரும்பான்மைவாத இனஅழிப்புக்கொள்கையில் ஊறிப்போயுள்ள பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் தேச பக்திகளாக அடையாளப்படுத்தப்படும் காலகட்டத்தில் இத்தகைய சிறியதொரு போராட்டத்தைப் பூதாகரமாக இலங்கை அரசாங்கம் வியாக்கியானம் செய்வது அரசாங்கத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது.

இந்த நிலையில் முஸ்லிம் தனியார்ச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள், முன்னெடுப்புக்கள் எந்தத் திசையை நோக்கி நகரப் போகின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எவ்வாறிருப்பினும் பெண்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும், அவர்களது ஒழுக்க நெறிகளை வரையறை செய்ய வேண்டும் என்று மிம்பரில் ஏறிச் சங்கு முழங்கும் இமாம்கள் தங்களது ஆண் நிலை நோக்கிலிருந்து வெளி வர வேண்டும். தங்களின் மனத்தில் படர்ந்துள்ள ஆணாதிக்கச் சிந்தனைகள் எனும் சாத்தான்களைச் சவுக்கடி மூலம் விரட்ட வேண்டும். பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளைப் பால்நிலை அடிப்படையிலான கூற்றுணர்வுடன் ஆராய வேண்டும். ஏனைய நாடுகளின் நடைமுறையிலுள்ள முற்போக்கான முஸ்லிம் தனியார்ச் சட்டங்களை உள்வாங்க வேண்டும்; இல்லையெனில் மாறிவரும் உலகச்சூழலுக்கு முகம் கொடுக்க முடியாதவொரு நிலையை இஸ்லாமியச் சட்டம் எதிர்நோக்கும். அதுவே அதன் வீழ்ச்சிக்கும் ஏதுவாய் அமையும். ஆனால், மாற்றங்களைத் தொடர்ந்தும் தமக்குள் அனுமதிக்கும் உரையாடல் மரபுகொண்ட இஸ்லாமியச் சிந்தனைப் பள்ளியினரும் எதிர்காலத்தில் எழுந்து வரலாம் என்னும் இலேசான நம்பிக்கையும் மிதவாத முஸ்லிம்களிடத்தில் நிலவுகிறது. வெற்றிடத்தை யார் நிரப்பக் கூடும் என்பதே இப்போதைய கேள்வி.

கல்முனை மகளிர் கல்லூரியில் உயர்தரம் கற்று கொழும்பு சட்டபீடத்தில் நான்காண்டுகள் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். ஜெனீவா பங்களாதேசம் பூட்டான் இந்தியா ஆகிய நாடுகளில் மகளிர் தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றவர் தற்போது இலண்டனில் வாழ்கிறார்.

மின்னஞ்சல்: gmajitha@yahoo.com

நன்றி - காலச்சுவடு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்