/* up Facebook

Mar 16, 2017

பெண்கள் தினம் ஒரு சடங்காக...!? - சுகந்தி மணிமாறன்


இம்முறை சர்வதேச பெண்கள் தினம் வழமைபோல நடந்து முடிந்தது.

இப்படித் தான் கூறியாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நினைவு தினங்கள் என்பது ஒரு வகையில் வழக்கமான வைதீகச் சடங்குகக் போல ஆகிவிட்டன.

தொழிலாளர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், எய்ட்ஸ் தினம், என்று அனைத்துமே ஒரு வகையில் மரபுச் சடங்குகளாக ஆக்கப்பட்ட கொடுமையை நாம் அனுபவித்து வருகிறோம்.

அந்த வரிசையில் இலங்கையில் பெண்கள் தினத்தின் பாத்திரமும் அப்படியாகிவிட்டது தான் கசப்பான உண்மை.

வழமைபோல ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, வழமைபோல கூட்டங்கள் நிகழ்ந்தன, வழமைபோல கருத்தரங்குகள் நடத்தப்பட்டன, வழமைபோல பெண் பிரமுகர்கள் ஊடகங்களில் வந்து போனார்கள். ஊடகங்கள் வழமையான கேள்வியை அட்டகாசமாகக் கேட்க; பேட்டி கொடுப்பவர்களும்  வழமையான பதிலை சாகசத் தனமாக கூறி விட்டு களைந்து போனார்கள்.

இப்படி வழமையானவற்றை நடத்தத் தான் இந்த நாளா என்கிற கேள்வி எழுந்து தொலைக்கிறது.

நூறாண்டுகளுக்கு மேலாக பெண்கள் தினம் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்த நூறாண்டுகளுக்குள் பெண்கள் பெண்ணிய கருத்தாக்கங்களை பெரும் சிரத்தையோடு வளர்த்தெடுத்து வந்திருக்கிறார்கள். அந்த சித்தாந்தத்துக்கு செயல் வடிவம் கொடுத்து பலவற்றை வென்றெடுத்தும் இருக்கிறார்கள். இன்று பெண்களுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்பவர்கள் நகைப்புக்கு உள்ளாகும் அளவுக்கு பெண்களின் பிரச்சினைகள் வெகுஜன தளத்தில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

அந்த புரிதலின் ஆழம் எவ்வளவு என்பது கேள்விக்குரியதாக இருக்கலாம். ஆனால் அந்தப் புரிதலின் அளவு வேறுபாடுகளைக் கொண்டிருக்கிற போதும் பால்நிலைப் பிரச்சினை இன்று புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.

அப்படிஎன்றால் இப்போது என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா. ஆம்! இதிலிருந்து எங்கே என்கிற ஒரு பிரச்சினை இருக்கிறது. இந்த சடங்குத்தனமான நினைவு கூரலிளிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி கடந்து செல்வதே இன்றைய தேவையாக ஆகியிருக்கிறது.

பெண்ணியம், பெண் விடுதலை, பெண்களின் பிரச்சினை என்கிற தலைப்பில் உரையாடப்படுகின்ற விடயங்கள் எல்லாம் வெறும் வாய்ப்பாட்டு பெண்ணியமாக குறுகிப் போயிருக்கிறது. பேசியதையே திரும்பப் பேசல் களைப்பில்லாமல் தொடர்கிறது. புதிய தேடல் குறுகி வருகிறது. பேசவேண்டிய பல விடயங்கள் பேசத் துணியாத நிலை தொடர்கிறது.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் பாலியல். பாலுறுப்பு பற்றிய விடயங்கள் கூட பேசத் தயங்குகிற போக்கின் அடித்தளம் வேறென்னவாக இருக்க முடியும். அவை பேசாப் பொருளாக வைத்திருப்பதில் ஆணாதிக்க சமூக அமைப்பு வெற்றி கண்டுள்ளது. பாலியல் தொழில், பாலியல் வன்முறை, பாலுறுப்பு பற்றிய விடயங்கள் உரையாடலுக்கு வரும்போது மிகவும் ஆழமான உரையாடலுக்கு இட்டுச் செல்ல முடியாத நிலையும் தோன்றியிருப்பதற்கு பகிரங்கத் தன்மை இல்லாது போனதன் விளைவு எனலாம்.

அது தவிர அரசியல் அதிகாரம் பற்றிய உரையாடல் போதுமான அளவு வெற்றி பெறவில்லை. பெண்களின் அரசியல் பிரதிநித்துவத்தை அதிகரிப்பதற்காக இயங்கி வருவதாகக் கூறும் இலங்கையில் தேர்ந்த பெண்கள் அமைப்புகளிடம் கூட அது பற்றிய தகவல்கள், தரவுகளைப் பெறமுடியாது இருப்பது வேடிக்கையாக உள்ளது. இதற்காகவே பெருமளவு வெளிநாட்டு உதவிகளைப் பெற்று இயங்கி வரும் அந்த இயக்கங்கள் வெறும் “வாய்ப்பாட்டு வழிமுறையோடு” நின்றுவிடுவதன் விளைவு தான் இது.

இந்த “வாய்ப்பாட்டு மரபு” ரீதியிலான செயற்பாட்டு முறை இலங்கையில் சகல செயற்பாட்டுத் தளங்களிலும் ஊடுருவியே இருக்கிறது. குறிப்பாக அரச சார்பற்ற இயக்கங்களிடம் மோசமாக நிலவி வருகின்றன. போஸ்டர் ஓட்டுவது, துண்டுப் பிரசுங்கள் விநியோகிப்பது, அறிக்கை வெளியிடுவது, கருத்தரங்கு நிகழ்த்துவது போன்றவை ஒரே மாதிரியான சடங்குத் தனத்தையே கொண்டிருக்கிறது என்பதை இன்று காண முடிகிறது. அந்த வகை செயற்பாடுகளின் போது பேசியதையே திரும்பப் பேசலுக்கு அப்பால் புதிய வளர்ச்சியைக் காண முடிவதில்லை.

இதற்கான மாற்று வழிமுறைகளைக் கண்டு பிடிக்காவிட்டால் இந்த போக்கு இப்படியே தங்கிவிட வாய்ப்புள்ளது. இந் நிலையிலிருந்து விடுபட்டு அடுத்த செயற்பாட்டுத் தளத்தை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை சகல மகளிர் அமைப்புகளுக்கும் பொறுப்பாகியுள்ளது.

நாம் யார். நம்மை சுற்றி விதிக்கப்பட்டிருப்பவை எவை? அதை விதித்தது யார்? ஆதரிப்பது எது? அதைப் பேணுவது எது? அது இயல்பானதா? அறிவியல் பூர்வமானதா? இந்த வடிவத்தை உடைக்க உதவும் சித்தாந்தம் எது? அதற்கான வழிமுறை எது? என்பது போன்ற கேள்விகளுக்கு நாம் விடையைத் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.

நினைவு தினங்கள் வெறும் காலச் சடங்கல்ல என்போம் தோழியரே. அது அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றிச் செல்லும் ஒரு ஊக்கி என்பதை வலியுறுத்துவோம்.

நன்றி - தினகரன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்