/* up Facebook

Feb 23, 2017

ஹவ்வா, அஹூ, ஹூரா மற்றும் இன்ன பிற பெண்கள் - எம்.ரிஷான் ஷெரீப்ஹவ்வா -

வழமையாக வீட்டினைச் சுற்றி வர உள்ள வெளியெங்கும் விளையாடச் செல்லும் சிறுமி ஹவ்வாவுக்கு அன்றைய தினம் ஒன்பது வயது பூர்த்தியாகப் போகிறது. அதனால் அவளுக்கு வெளியே விளையாடச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அவளது தாயும், பாட்டியும் அவளுக்கு ஒன்பது வயது பூர்த்தியாவதை முன்னிட்டு, முழுமையாக உடலைப் போர்த்தும் ஃபர்தாவை அணிய அவள் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவள் இனிமேல் வளர்ந்த பெண் எனவும், அவளை பிற ஆண்கள் பார்க்க நேர்ந்தால், அவள் நரகத்துக்கு இட்டுச் செல்லப்படுவாள் என்றும் பாட்டியால் போதிக்கப்படுகிறாள். சற்று நேரம் வெளியே சென்று விளையாடிவிட்டு வர அனுமதிகோரி சிறுமி ஹவ்வா கெஞ்சுகிறாள். ஒன்பது வருடங்களுக்கு முன்பு இதேநாளில் மத்தியானம்தான் அவள் பிறந்தாள் என பாட்டி கூறியதும், அப்படியானால் தனக்கு இன்னும் ஒன்பது வயது ஆகவில்லை அல்லவா? மத்தியானம் பன்னிரண்டு மணியாகும்போது விளையாடிவிட்டு வந்துவிடுவேன், ஃபர்தாவையும் அணிந்துகொள்கிறேன் எனக் கூறுகிறாள் சிறுமி. பன்னிரண்டு மணியானதை எப்படி அறிந்துகொள்வாய் எனக் கேட்ட பாட்டி ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுக்கிறாள். ஒரு குச்சியை செங்குத்தாக நட்டு, அதன் நிழல் இல்லாமல் போனால் அப்பொழுதுதான் சரியாக பன்னிரண்டு மணி. அதைத் தாண்டியும் நீ முக்காடு அணியாமல், பிற ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் நீ நரகத்துக்குச் செல்லும் பாவி ஆகிவிடுவாய் எனக் கூறும் பாட்டி அவளை விளையாடச் செல்ல அனுமதிக்கிறாள்.

கையில் ஒரு குச்சியையும் எடுத்துக் கொண்டு சிறுமி ஹவ்வா வழமையாக அவளுடன் விளையாடும் ஹசனைத் தேடி அவனது வீட்டுக்குச் செல்கிறாள். அவன் வீட்டுப்பாடங்களை முழுமையாகச் செய்து முடித்த பிறகுதான் அவனை வீட்டை விட்டும் வெளியே விளையாட அனுப்புவதாகக் கூறி அவனது மூத்த சகோதரி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்கிறாள். வெளியே வர வழியில்லையாதலால் சிறுவன் ஜன்னலினூடாக அவளுடன் கதைக்கிறான். ஹவ்வாவின் நேரமோ போய்க் கொண்டிருக்கிறது. தான் கடற்கரைக்குச் செல்வதாகவும் ஹசனை அங்கே வரும்படியும் கூறிவிட்டு ஹவ்வா அங்கே செல்கிறாள். 

அங்கு சிறுவர்கள் தகர பீப்பாய்களை இணைத்து, சிறு பாய்க்கப்பல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவள் அங்கும் குச்சியை நட்டு நிழலை அளந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். நிழல் சிறிதாகிக் கொண்டே வருகிறது. பாய்மரக்கப்பலை கட்டிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு, தம் சிறு கப்பலில் கட்டுவதற்காக துணி தேவைப்படுகிறது. எனவே அச் சிறுமிக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுத்துவிட்டு, அவளது தலையை மூடியிருந்த துணியை வாங்கிக் கொள்கிறார்கள்.

அவள் மீண்டும் ஹசனிடம் வருகிறாள். ஹசனுக்கும் இன்னும் வெளியே வந்துகொள்ள வழியில்லை. கையிலிருந்த குச்சியை அங்கு நடுகிறாள். நிழல் குறுகிக் கொண்டே வருகிறது. இன்னும் சில கணங்களில் அவள், அவனிடமிருந்து நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவனுக்கு அவனது தோழியின் முகத்தை இனி என்றென்றைக்கும் பார்க்க முடியாது. எனவே அவன் அவளிடம் பணம் கொடுத்து தமக்கு ஐஸ்கிறீம் வாங்கி வரும்படி கேட்கிறான். அவள் சென்று ஐஸ்கிறீம் இல்லையெனக் கூறி தான் வாங்கி வந்த புளிப்பு மிட்டாயையும், லொலிபப்பையும் அவனுக்கு ஊட்டி விடுகிறாள். இருவரும் மாறி மாறி ஒரு லொலிபப்பைச் சுவைக்கிறார்கள். குச்சியின் நிழல் காணாமல் போகிறது. ஹவ்வாவைத் தேடிக் கொண்டு அவளது தாய் வந்து நீண்ட ஃபர்தாவை அவள் மீது போர்த்தி, அவளை அழைத்துச் செல்கிறாள். சொற்ப நேரத்துக்கு வீட்டுச் சிறையில் அவன். வாழ்நாள் முழுவதற்குமான நிரந்தரமான முக்காட்டுச் சிறையில் இனி அவள்.

*********

அஹூ -

கடற்கரையை ஒட்டிச் செல்லும் ஒரு பாதையில் பெங்குயின்களைப் போன்ற கறுப்பு உருவங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லோருமே கறுப்பு நிற முக்காடிட்டுப் போர்த்திய இளம் பெண்கள். சைக்கிள்களின் மீதமர்ந்து மிக வேகமாக மிதித்தபடி சென்றுகொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே சைக்கிள் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களுள் ஒருத்தியாக அஹூவும் இருக்கிறாள். அவள் சக பெண்களை விடவும் சைக்கிளோடுவதில் முன்னணியில் இருக்கிறாள். திடீரென குதிரையொன்றில் ஏறி அங்கு வரும் அஹூவின் கணவன், பெண்கள் சைக்கிளோட்டுவது கூடாதெனவும், அவள் உடனடியாக அதை நிறுத்திவிட்டு அவனுடன் வர வேண்டுமெனவும் பணிக்கிறான். அவள் சைக்கிளை நிறுத்துவதுமில்லை. இறங்குவதுமில்லை. தன்பாட்டில் வேகமாகப் பயணித்துக் கொண்டேயிருக்கிறாள். 

கணவன் சென்று இன்னுமொரு குதிரையில் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்த முல்லாவை அழைத்து வந்து அவளுக்கு போதிக்கச் செய்கிறான். அவரும் அவளை சைக்கிளை நிறுத்திவிட்டு, அவர்களுடன் வருமாறு அழைக்கிறார். நீ கணவன் பேச்சைக் கேட்காவிட்டால் அவன் உன்னை விவாகரத்து செய்துவிடுவான் என அவர்  அச்சுறுத்துகிறார். எனினும் அவள் கேட்பதாயில்லை. தொடர்ந்தும் பயணித்துக் கொண்டேயிருக்கிறாள். அவர்கள் போய் விடுகிறார்கள். அவர்களின் குறுக்கீடால் தோழிகளை விடவும் சைக்கிளோட்டத்தில் பின் தங்கி விட்ட அவள், மீண்டும் வேகமாக மிதித்து முதலாவதாக பயணித்துக் கொண்டேயிருக்கிறாள். 

திரும்பவும் குதிரைகளின் குழம்படிச் சத்தம். அவளின் இருபுறத்திலும் அவளது தந்தையும், உறவினர்களான முதிய ஆண்களும் அவளை சைக்கிளை விட்டும் இறங்கி கணவனிடம் உடனே செல்லும்படி கூறுகிறார்கள். அவள் நிற்பதாயில்லை. அவளது கணவன் அவளை விவாகரத்து செய்து விட்டானெனக் கூறுகிறார்கள். அவள் அவர்களது குடும்பத்துக்கு இழுக்கைத் தேடித் தந்துவிட்டதாகவும், இனி அவளது அண்ணன்கள் வந்தால் அவளை உயிருடன் விட மாட்டார்கள் எனவும் கூறி அவளை எச்சரிக்கிறார்கள். அவள் சலனமுறுவதாயில்லை. அவளது பயணம் தொடர்கிறது. மீண்டும் வேகமாக சைக்கிள் மிதித்து எல்லோருக்கும் முன்பதாகப் பயணிக்கிறாள். 

தூரத்தே வழியில் குறுக்காக நின்று கொண்டிருக்கும் இரண்டு குதிரைகளையும், அவளது சகோதரர்களையும் கண்டதும் சைக்கிளின் வேகத்தை மட்டுப்படுத்துகிறாள். அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த பெண் அவளைத் தாண்டிச் செல்கிறாள். அந்தப் பெண் திரும்பிப் பார்க்கும்போது தூரத்தே அஹூவையும் அவளது சைக்கிளையும் அந்த ஆண்கள் தாக்குவதும், சேதப்படுத்துவதும் தெரிகிறது.

*********

ஹூரா - 

விமான நிலையத்தில் ஏழைச் சிறுவர்கள் தள்ளுவண்டிகளோடு அமர்ந்திருக்கிறார்கள். விமானங்களில் வரும் பயணிகளது பொதிகளை அவர்கள் கூறும் இடங்களுக்குக் கொண்டு சென்று கொடுப்பது அவர்களது வேலை. ஒரு விமானம் வருகிறது. எல்லாச் சிறுவர்களும் வாயிலுக்குப் பயணிக்கிறார்கள். ஒரு சிறுவன் ஒரு மூதாட்டியைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளி வருகிறான். ஹூரா எனப் பெயர் கொண்ட அம் மூதாட்டியின் கைவிரல்கள் ஒவ்வொன்றிலும் வித விதமான வர்ணங்களில் துணித் துண்டுகள் மோதிரங்கள் போல அணிவிக்கப்பட்டிருக்கின்றன.

அவளை எங்கே கூட்டிச் செல்ல வேண்டுமெனச் சிறுவன் கேட்டதும் தனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதாகக் கூறி கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்கிறாள். தான் வாங்க வேண்டிய பொருட்கள் ஒவ்வொன்றையும் நினைவில் வைத்துக் கொள்வதற்காக தான் ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு நிறத் துணியை அணிந்திருப்பதாகவும், பொருட்களை வாங்கிய பிற்பாடு அவற்றை அகற்றி விடுவதாகவும் கூறுகிறாள். அவனைக் கூட்டிக் கொண்டு சென்று குளிர்சாதனப்பெட்டி, தளபாடங்கள், சமையலறைப் பொருட்கள், மணப் பெண் ஆடை, ஒப்பனை சாதனங்கள், குளியலறைப் பொருட்கள், துணி கழுவும் இயந்திரம், மேசை, கதிரைகள் என எல்லாமும் வாங்குகிறாள். இவ்வளவு பொருட்களும் வாங்க மூதாட்டிக்குப் பணம் ஏது எனக் கேட்கும் சிறுவர்களுக்கு அவள் பதிலளிப்பதில்லை. 

அந்தச் சிறுவன் அவளைத் தன் தள்ளுவண்டியில் அமர்த்தித் தள்ளிக் கொண்டு வர, ஏனைய சிறுவர்கள் அவளை அப் பொருட்களை ஏற்றிய தம் தள்ளுவண்டிகளோடு பின் தொடர்கிறார்கள். அவளுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கியாகிவிட்டது. அவளது சுண்டு விரலில் மட்டும் ஒரு துணி மிஞ்சுகிறது. அது எந்தப் பொருளை ஞாபகப்படுத்த வேண்டிக் கட்டியது என அவளுக்கு மறந்துவிட்டிருக்கிறது. சிறுவர்களிடம் கேட்கிறாள். அவர்களுக்கும் தெரியவில்லை. கடற்கரைக்கு அப்பாலுள்ள பிரதேசத்துக்கு தான் செல்லவேண்டுமெனக் கூறும் மூதாட்டியை சிறுவர்கள் கடற்கரைக்குக் கூட்டி வருகிறார்கள். அங்கு அவளது பொருட்கள் எல்லாம் பரத்தி வைக்கப்படுகின்றன. 

மூதாட்டி ஹூரா தனக்கு தேநீர் ஊற்றித் தரும்படி ஒரு சிறுவனைக் கோருகிறாள். அவன் தேநீர் ஊற்ற முற்படும்போது, அப் பாத்திரத்தைக் கண்டு அது சரியில்லை எனவும், அதனை மாற்றி வர வேண்டுமெனவும் கூறும் மூதாட்டி திரும்பவும் அவனை அழைத்துக் கொண்டு கடைக்கு வருகிறாள். மூதாட்டி கடற்கரையை விட்டு அகன்றதும், சிறுவர்கள் கூத்தாடுகிறார்கள். சத்தமாக வானொலியை ஒலிக்கச் செய்து, சலவை இயந்திரத்தில் துணிகளைக் கழுவி உலர்த்தியெடுத்து, கட்டிலில் உருண்டு, ஒப்பனை சாதனங்களைப் பூசி அழகுபடுத்திப் பார்த்து, மணப்பெண் உடையை உடுத்திப் பார்த்து விளையாடி என இஷ்டம் போல அப் பொருட்களை உபயோகித்துப் பார்க்கிறார்கள். 

கடைக்குச் செல்லும் மூதாட்டி திரும்பி வரும் வழியில், இந்தப் பொருட்களையெல்லாம் அனுபவிக்க தனக்குப் பிள்ளைகள் இல்லையெனவும், அவனை மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளட்டுமா எனவும் கேட்கிறாள். அவனுக்குப் பெற்றோர்கள் இருப்பதாகக் கூறி அவன் மறுத்துவிடுகிறான். அவள் திரும்பவும் கடற்கரைக்கு வருவதைக் கண்ட சிறுவர்கள், சாமான்களையெல்லாம் மீண்டும் ஒழுங்காக வைத்து விடுகிறார்கள். மூதாட்டி வந்து புதிய தேநீர்ப் பாத்திரத்தில் தேநீர் ஊற்றித் தரும்படி இன்னுமொரு சிறுவனைப் பணிக்கிறாள். அவனிடமும் தனது மகனாக அவனைத் தத்தெடுத்துக் கொள்ளட்டுமா எனக் கேட்கிறாள். தனக்குப் பெற்றோர்கள் இருப்பதாகக் கூறி அவனும் மறுத்து விடுகிறான். 

வீட்டுப்பாவனைப் பொருட்கள் எல்லாம் கடற்கரையில் பரத்தப்பட்டிருப்பதைக் காணும் இளம்பெண்கள் இருவர், மூதாட்டியிடம் வந்து விசாரிக்கிறார்கள். ஒரு பெண்ணாக, தான் சிறு வயது முதல் அனுபவிக்க வேண்டுமென ஆசைப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும், தான் இவ்வளவு காலமும் சேமித்த பணத்திலிருந்து இன்று வாங்கியிருப்பதாகக் கூறும் மூதாட்டியிடம், இவ்வாறான பொருட்கள் தமக்கு இருந்தால், தாமும் மணம் முடித்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்திருப்போம் என அந்த இளம்பெண்கள் கூறுகிறார்கள். மூதாட்டி அவர்களுக்கு தேநீர்ப் பாத்திரங்களைப் பரிசளிக்கிறாள். 

பின்னர் பல சிறு பாய்மரக்கப்பல்களில் அப் பொருட்களையும் மூதாட்டியையும் சிறுவர்கள் ஏற்றிவிடுகிறார்கள். மூதாட்டியோடு, அப் பொருட்களும் கடலின் ஆழத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன.

*********

மேற்சொன்ன மூன்று கதைகளும் ஒரு ஈரான் திரைப்படத்திலுள்ளவை. மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைந்து ஒரு முழுத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அவ்வாறு உருவாக்கியவர் பெண் இயக்குனர் மர்ஸியா மெக்மல்பஃப். ஹவா, அஹூ, ஹூரா என ஒன்றோடொன்று தொடர்புபட்ட பெயர்களுடைய மூன்று வெவ்வேறான வயதுகளுடைய பெண்களின் கதாபாத்திரங்களைக் கொண்டு இந் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளிவந்து பல உலக விருதுகளை வென்ற திரைப்படம் இது. ஈரானிய சட்ட திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் அடங்கிப் போக நிர்ப்பந்திக்கப்படும் ஒரு பெண்ணின் மூன்று முக்கியமான கால கட்டங்களைச் சித்தரிக்கும் இத் திரைப்படத்தின் பெயர் The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்). 

பெண்ணானவள் சிறு பிராயத்திலிருந்து பழி பாவங்களுக்கு அஞ்சப்பட வேண்டியவளாகிறாள். அவளது பார்வை தாழ்த்தப்பட வேண்டியிருக்கிறது. அழகும், அலங்காரங்களும் மறைக்கப்பட வேண்டியன. பெண்ணாகப் பிறந்த கணம் முதல் அவளுக்குள் இருக்கும் இயல்பான திறமை முதற்கொண்டு சடப் பொருட்களின் மீதான ஆசைகள் கூட பூர்த்தி செய்யப்படுவதில்லை. அவள் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியவளாகிறாள். அவற்றை மீறினால் தண்டிக்கப்பட வேண்டிவள். சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையோ, தானாக எதையும் செய்யும் உரிமையோ அவளுக்கு இல்லை. தேவையான போது அலங்கரித்துப் பார்க்கப்படும் பொம்மை அவள். அவளைத் தீண்டினால் தீட்டு. அவள் வாழ்நாள் முழுவதற்குமான அடிமை.

இந்தக் கோட்பாடுகள் ஈரானுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எல்லா நாடுகளிலும், எல்லாச் சமூகப் பெண்களினதும் நிலைப்பாடு இதுதான். எழுத்தாளர் அம்பையின் 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை', 'வெளிப்பாடு' ஆகிய சிறுகதைகள் இந் நிலைமையைத் தெளிவாக விளக்குகின்றன. 

பதினான்கு வயது ஜீஜிக்கு திருமணம் செய்து வைக்கப்படும்போது அவளது தாயாரால் இவ்வாறு அவளுக்கு போதிக்கப்படுகிறது.

'சமையலறையை ஆக்கிரமித்துக் கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே... இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்...'

ஒரு பெரிய குடும்பத்துக்கு மருமகளாகி பல தசாப்தங்களாக சமையலறையை ஆண்ட இந்த ஜீஜி, முதியவளாகி படுக்கையில் கிடக்கும்போது அவளது காதில் 'அதிகாரம் அதிலிருந்து வருவதில்லை' என மருமகள் மீனாட்சி விளக்குகிறாள். அங்கிருந்து தொடங்கி பல தலைமுறைகள், பல வருடங்கள் கடந்து 'வெளிப்பாடு' சிறுகதையில் வரும் இளம்பெண் சந்திராவுக்கும்  இதே சமையலறை அடிமை நிலைமைதான் எனும்போது இந் நிலைப்பாடு இன்றும் கூட மாறவில்லை என்பதே புலனாகிறது.

பெண்கள் எங்கு பயணப்பட்டாலும், வீட்டின் மூலையிலுள்ள சமையலறையைப் பற்றியும், செய்யப்பட வேண்டிய சமையல் பற்றியுமே அவர்களது சிந்தனைகள் சுழன்றபடியிருக்கும். அவர்கள் வெங்காயத்தையும், பூண்டு வாசனையையும், மசாலாக்களையும் சுவாசித்துக் கொண்டே இருக்கக் கடமைப்பட்டவர்கள். இன்னும் குழந்தைகளைப் பிரசவிப்பதிலும், அவர்களது அழுக்கு கழுவி வளர்த்து ஆளாக்குவதிலும் பாடுபட்டு உழைக்க வேண்டியவர்கள். சுய சிந்தனையற்றவர்கள். அவர்கள் பெண்கள். இவ்வாறாக அவர்கள் மீது வலிந்து போர்த்தப்பட்டுள்ள இந் நிலைமையானது  ஈரானிலும் ஒன்றுதான். நம் நாடுகளிலும் ஒன்றுதான்.

நம் நாடுகளிலாவது பரவாயில்லை எனும்படியாக, ஈரான் மற்றும் அறபு நாடுகளில் பெண்களின் மீது ஒழுக்கத்தின் பெயரால் திணிக்கப்படும் வன்முறைகள் அதிகமானவை. திரைப்படங்கள் என்று வரும்போது ஈரானை இங்கு குறிப்பாக எடுத்துக் காட்டவேண்டியது ஏனெனில், அங்கு பெண்களும் தரமான படங்களையெடுத்து உலகத்துக்கு வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். தாம் சார்ந்திருக்கும் சமூகம் தரும் அழுத்தங்களும், தமக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும், தம் திரைப்படங்களின் மீதான தணிக்கைகளும் அவர்களது முயற்சிகளை நிறுத்துவதாக இல்லை. 

திரைப்படத்துக்கு அவசியமாயினும் கூட ஆண்-பெண் ஒருவரையொருவர் தொட்டு நடிக்கக் கூடாது. திரையில் வரும் பெண்கள் தமது முகம், கைகள் தவிர்த்து, தம்மை முழுமையாகப் போர்த்தியவாறு நடிக்க வேண்டும். அரசாங்கத்தையோ, மதத்தையோ நிந்தனை செய்யும் வசனங்களை எவரும் பேசக் கூடாது. திரைப்படங்களில் வரும் மனிதர்களோ, காட்சிகளோ வன்முறைகளைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது  போன்ற பல கட்டுப்பாடுகள் ஈரானியத் திரைப்படங்களுக்கு பொதுவாக விதிக்கப்பட்டுள்ளவை. இக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி, யதார்த்தமான படங்களையெடுத்து உலக விருதுகளை வென்றெடுப்பதென்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. 

இவ்வாறாக அடக்குமுறைக்கும், தணிக்கைக்கும் ஆளாகிக் கொண்டேயிருக்கும் மண்ணிலிருந்து கொண்டு, தொடர்ச்சியாகத் தமக்கு இழைக்கப்படும் அநீதங்களை திரைப்படங்கள் மூலமாக உலகுக்குச் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது. The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படமும் கூட வழமை போலவே ஈரானில் தடை செய்யப்பட்டது. ஈரானைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மூன்று முக்கியமான பருவங்களிலும், அவள் எப்படி அடுத்தவருக்குக் கட்டுப்பட்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள் என்பதைச் சித்தரிப்பதாக இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுவாகவே ஈரானியத் திரைப்படங்கள் மென்மையானவை. ஆனால் மனிதனுக்குள் உறங்கும் மனிதாபிமான உணர்வுகளை வெளிக் கொண்டு வருபவை. அங்குள்ள மனிதர்கள் படும் வேதனையை மனித நேய உணர்வுகள் மூலமாக முழு உலகுக்குமே சொல்பவை. The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படத்தின் இயக்குனர் மர்ஸியா மெக்மல்பஃப்பின் முதல் திரைப்படம் இது. அதற்கு முன்பதாக ஒளிப்பதிவாளராகவும், எழுத்தாளராகவும் ஈரானியத் திரையுலகில் அறியப்பட்டவர். இத் திரைப்படத்துக்கான திரைக்கதையை இவரது கணவரான இயக்குனர் மூஸின் மெக்மல்பஃப் எழுதிக் கொடுத்தார். 

மர்ஸியா மெக்மல்பஃப்பின் திரைப்படங்களைப் போலவே கணவரும், இயக்குனருமான மூஸின் மெக்மல்பஃப்பின் அனைத்துத் திரைப்படங்களும், இவர்களது புதல்விகளான ஸமீரா மெக்மல்பஃப், ஹனா மெக்மல்பஃப் ஆகியோரது திரைப்படங்களும் கூட பெண்கள் மீதான வன்முறைகளையும், அவர்கள் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளையும் பற்றியே அதிகம் பேசுகின்றன. தாலிபானின் அடிப்படைவாதக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் முழு சமூகத்தையும் அடிமைப்படுத்திய அண்மைய காலத்தைக் குறித்து அந் நிலத்திலிருந்தே இவ்வாறான திரைப்படங்கள் வெளிவருவதானது பாராட்டத்தக்க அதேவேளை சம்பந்தப்பட்ட படைப்பாளிகளுக்கு ஆபத்தானவை. 

The Day I Became a Woman (நான் பெண்ணான நாள்) எனும் இத் திரைப்படமானது, உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான அனைத்துத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, பல உலக விருதுகளை வென்ற திரைப்படம் ஆகும். இவ்வாறாக உலக மக்கள் அனைவருக்குமே, அடிப்படைவாத அமைப்புக்குள் சிக்குண்டுள்ள ஒரு சமூகம் படும் அவதிகளை வெளிப்படையாகச் சொன்ன, குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படமாக இதனைக் கோடிட்டுக் காட்டலாம். எனினும், இதனை வெளிப்படுத்திய பெண் இயக்குனரும், அவரது புதல்விகளும், இன்றும் கூட அம் மண்ணில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இத் திரைப்படம் கூட ஈரானில் திரையிட அனுமதிக்கப்படவேயில்லை. இதன் மூலமாகத் தெரியவருவது ஒன்றே ஒன்றுதான். தாலிபான்களும், பெண்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் முற்றிலும் ஓய்ந்துவிடவில்லை. இம் மண்ணில் அவர்கள் தம் அடிப்படைவாதக் கொள்கைகளோடு இன்னும் உலவிக் கொண்டேயிருக்கிறார்கள். 

...மேலும்

Feb 21, 2017

பாவனாவுக்கு நிகழ்ந்ததில் ஆண்களின் சைக்காலஜியும் பெண்களின் பாதுகாப்பும்!


`பாவனா… அது பாவம்ணா!’ என்பதைப் போன்று, இன்று சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப்பிலும் ட்ரெண்டிங்கில் இருக்கின்ற அனுதாப ஸ்மைலிகளையும், மீம்களையும் தாங்கிய ஆண்களைச் சேர்த்தே இன்றைய உலகம் உள்ளது. ஆனால், இந்த இரக்க உணர்வோ, அனுதாபமோ பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளைத் தடுத்து நிறுத்துவதில்லை; நிறுத்தப்போவதும் இல்லை. பாவனா வழக்கு, முதலில் உடல்ரீதியான தொல்லையாக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, பின் பணத்துக்காக நடைபெற்ற சம்பவமாக மாற்றம் பெற்றுள்ளது. நடிகையோ அல்லது சாமான்யப் பெண்ணோ இன்றளவில் உணர்வு மற்றும் உடல்ரீதியான தொல்லைகளை அனுபவிப்பது மிகவும் அதிகரித்துவருகிறது. 

பாலியல் தொல்லை - பாவனா

பேருந்தின், ரயிலின் நெருக்கடியிலும், அலுவலகத்தின் சந்தர்ப்பவாதங்களிலும், இன்னமும் பல இடங்களிலும்கூட இது போன்ற வக்கிரங்களை நாம் பார்க்கிறோம். `பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்கிற எச்சரிக்கை வாசகம்போல இதற்கும் பொதுவெளியில் எதிர்ப்பைக் காட்டும் எச்சரிக்கை பதாகைகள் அதிகரித்துவருவதும் இதற்கு ஒரு சான்று. 

மீடியாக்கள் வெளிச்சம் போடாத வரை எந்த ஓர் இழப்பையும் தனி மனிதப் போராட்டமாகவே கையாளவேண்டியிருக்கிறது. மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். ஆனாலும், அதைத் தொடர்ந்து வரும் அடுத்த நிகழ்வு முன்பைவிட பலமடங்கு வக்கிரமாக, தைரியமாக நிகழ்த்தப்படுகிறது. 

குற்றவாளிகளை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் காரணிகளை ஆராய வேண்டும். அது நம் அன்றாட நுகர்வில் இருந்து தொடங்குகிறது. `சட்டங்களை வலிமையாக்க வேண்டும்’, `தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்’ என்ற முழக்கங்கள் எல்லாம் வெறும் தேர்தல் அறிக்கைகள்போல ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்ற நிலையில், இன்னமும் எத்தனைத் துயரங்கள் நிகழ்ந்தாலும், சமுதாயத்திலும் சட்டத்திலும் மாற்றங்கள் வருமா என்பது சொல்வதற்கில்லை. எனவே, ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தற்காப்புடன் செயல்பட வேண்டும். இது ஒன்றுதான் இன்றைய அளவில் நம்மால் நிகழ்த்தக்கூடிய தனிமனித முயற்சி அல்லது அதிகபட்ச சாத்தியமான பாதுகாப்பு முயற்சி. 


``உடல் அளவில் என்னால் ஓர் ஆணை எதிர்க்க முடியாத சூழ்நிலையில், என் எதிர்ப்பை அறிவைக்கொண்டு செயல்படுத்துவேன்.’’ - இது நடிகை கங்கனா ரனாவத்தின் வார்த்தைகள். சமீபத்தில் நான் பார்த்து வியந்த தைரியமான பெண்மணிகளில் இவரும் ஒருவர். தன் தந்தை வயதுடைய ஒருவரால் தாக்கப்பட்டபோது, தன் காலணியால் அவரை அடித்துக் காயப்படுத்தி தப்பித்திருக்கிறார், அது வரை இருந்த கங்கனா, அந்த போராட்டத்துக்குப் பின்னர் தன் வலிமை என்னவென்று உணர்ந்ததாகக் கருத்து தெரிவித்திருந்தார். பிரச்னை என்று வரும்போது ஏதாவது ஒரு ஹீரோ வந்து காப்பாற்ற வேண்டும் என்பது இல்லை. காரணம், பல சமயங்களில் நாம் ஹீரோவாக நினைப்பவர்கள்கூட இது போன்ற வில்லத்தனத்தை நிகழ்த்தியிருப்பார்கள். 

`ஆணைவிட பெண் உடல் அளவில் வலிமை குறைந்தவள்’ என்பது இயற்கையின் நியதியாகப் பார்க்கப்படுகிறது. பல சூழலில் அது சரியாக இருந்தாலும், இரைக்காக வேட்டை குணத்துடன் அலையும் மிருகத்தின் வலிமையைவிட தன் உயிரைக் காத்துக்கொள்ளத் துடிக்கும் இரையின் உணர்வுக்கு வலிமை அதிகம் என்பதை வன்முறைக்குள்ளாகும் ஒவ்வொரு பெண்ணும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். `பெண்ணின் நகம்கூட ஓர் ஆயுதம்’ எனச் சொன்ன காந்தியின் வார்த்தைகளை ஒரு தூண்டுதலாக நினைத்து, பிரச்னை என வரும்போது தன் உடலையே ஆயுதமாக மாற்றிக்கொள்ள நாம் மறக்கக் கூடாது. 

பெண் குழந்தைகள் பிறந்தால் நடனம், சங்கீதம் என சாத்வீகத்தைப் பழக்குவதோடு நில்லாமல் கராத்தே, விங் சுன் (Wing Chun), டேக்வான்டோ (Taekwondo) போன்ற தற்காப்புப் பயற்சிகளையும் பயிற்றுவிப்பது மிக முக்கியம். நீர் நிலைகளே இல்லாத நிலையிலும், இன்று நீச்சல் குளங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து நீச்சல் பயில்வதன் அடிப்படை தற்காப்பென்றும் கொள்ளலாம். அப்படிப்பட்ட உடலைத் தேற்றும் முறைகளுடன் குறுகியகால தற்காப்புப் பயிற்களையாவது சொல்லிக் கொடுக்க வேண்டும். உடல் வலிமை என்பது மன தைரியத்தை மேம்படுத்தும், தன்னம்பிக்கை தரும். எனவே, பெண்கள் உடல் அளவில் ரிஃப்லெக்ஸ் எனும் எச்சரிக்கை உணர்வுடன் வளர்வோம். பிரச்னை என வரும்போது ஒரு பெண்ணின் முகத்தில் தெரியும் பயமும் குறுகும் தோள்பட்டையுமே அவள் வலுவற்று வீழ்த் தயாராவதன் அறிகுறியாக மனநல மேம்பாட்டாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

எனவே, ஒருவர் உங்களைத் தாக்க முயன்றால், முதலில் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, `உன்னைவிட நான் வலியவள்’ என்பதுபோல உடல் மொழியை பாதுகாத்துக்கொள்ளுங்கள். `ஆக்ஸிடன்ட் மற்றும் எந்த துர்நிலையிலும் உன்னைக் காப்பாற்றும் மருந்து உன்னருகிலேயே இருக்கும்’ என்கிறது ஒரு கீழைத் தத்துவம். இதைப் பெண்கள் தங்கள் ஆபத்துக் காலங்களில் நினைவில்கொள்ளுங்கள். அணியும் செருப்பு, தலையில் செருகும் ஹேர்க்ளிப், நகங்கள், பற்கள்... என ஆதிகால மனிதன்போல தன்னைத் தானே காத்துக்கொள்ள தகுந்த ஆயுதங்கள் அருகிலேயே இருக்கும். அவற்றைத் தெளிந்த மன ஓட்டத்தில் மட்டுமே உணர முடியும் என்பதால், பிரச்னை வரும் நேரங்களில் உடனே விழித்துக்கொள்ளுங்கள். கையில் மறைத்தபடி போனில் யாருக்கேனும் அழைப்பைத் தட்டிவிட்டு, எதிராளி உணராத வகையில் பேச்சை நீட்டியோ அல்லது எங்கிருக்கிறோம், யார் இருக்கிறார்கள், என்ன பிரச்னை என்ற சில தகவல்களை எப்படியாவது பரிமாற்றம் செய்ய முனையுங்கள். பெண்களுக்காக உள்ள SOS (Save our Soul) முறையைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

இளம் பெண்கள் உட்பட பெண்களுக்குப் பல இடங்களில் ஏன் வீட்டில்கூட பிரச்னைகள் இருக்கலாம். அமைதியான பெண் என்பது பல சமயங்களில் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வக்கிர ஆணின் ஆயுதமாக இருக்கக்கூடும். எனவே, அமைதி கலைத்து, உங்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணருங்கள். உடல் அளவில் பிரச்னைகள் ஏற்படுமாயின், சத்தம் போடவும், வேறு ஒரு காரணம் காட்டி அவர்கள் உறவைத் துண்டித்துக்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை வன்முறையாளருக்குச் சுட்டிக்காட்டிவிடுங்கள். இவர்கள் பொதுவாக அவமானத்துக்கு அஞ்சுவார்கள். எனவே, காட்டிக் கொடுக்கும் நிலையில் நீங்கள் இருப்பதை உணர்த்திவிடுங்கள். 

அலுவலகங்களிலும் இதே போன்று முன்னெச்சரிக்கையுடன் பழகுங்கள். உங்கள் மேலதிகாரியோ அல்லது எவராக இருந்தாலும், உங்கள் வேலையைவிட உங்கள் உடலும் மனமும் முக்கியம் என்பதை உறுதியாகச் சொல்லிவிடுங்கள். காரணம், தேவையுள்ள இடத்தில்தான் அவர்கள் தேவையை முன்வைப்பார்கள். எந்த நேரமும் தனித்திருக்காதீர்கள். நல்ல நண்பர்களை உடன் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தின் நல்லது கெட்டதுகளை அவ்வப்போது அப்டேட் செய்யுங்கள். பிரச்னைக்குரியவரின் கேபினுக்குள் செல்லும்போது செல்போனை ரெக்கார்ட்டிங்கிலோ அல்லது அழைப்புநிலையிலோ வைத்திருங்கள். இது உங்கள் மீது தவறில்லை எனச் சுட்டிக்காட்ட ஓர் ஆதாரமாக அமையும். இதையும் தாண்டி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கான சட்டதிட்டங்கள் மிகக் கடுமையாக உள்ளன. சக ஆண் பணியாளர்களின் வார்த்தை, மெசேஜ் இவற்றை வைத்து வழக்குத் தொடுக்க இயலும் என்பதால், நம் நிலையில் தேவையற்ற நட்புகளை வளர்க்காமல், பிரச்னை என்றால் துணிச்சலுடன் எதிர்க்க நம்மை நாம் தெளிவாக வரையறுத்துக்கொள்வோம். காதலிலும் கண்ணியமாக, மனைவியாக இருந்தாலும், `நோ மீன்ஸ் நோ’ எனச் சொல்லும் `பிங்க்’ திரைப்படத்தின் வார்த்தைகளை பெண்கள் மீது திமிரால் கைவைக்கத் துணியும் ஒவ்வோர் ஆணுக்கும் சொல்லிக் கொடுப்பது சக சமுதாயத்தின் கடமை. இதில் ஆண், பெண் பேதமில்லை. 

நன்றி - விகடன் 
...மேலும்

Feb 16, 2017

ஆண்களின் திரையுலகில் அத்திப்பூக்கள்கடந்த சில ஆண்டுகளாக பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகரித்துள்ளன. இது மாதிரியான படங்களில் நடிக்க, நடிகைகள் விருப்பமாக உள்ளனர் என்பது நல்ல செய்தி. நம்மூர் ஸ்ரீதேவி இந்தியில் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ பெண்களை மையமாகக் கொண்ட ஒரு நல்ல திரைப்படம். அதன் வெற்றி பெண்களுக்கான படங்களை தயாரிக்கும் தெம்பினை தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது. அதன் தொடர்ச்சியாக மலையாளத்தில் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் வந்தது. அதுவும் பெரிய வெற்றிப்படமாகியது. அதுதான் தமிழில் ஜோதிகா நடித்து ‘36 வயதினிலே’வாக வந்தது. தமிழிலும் இப்படம் வெற்றிப் பெற்றது. 

அதற்குப் பிறகு தமிழில் பெண்களை மையமாகக்கொண்ட படங்கள் மறுபடி வர ஆரம்பித்திருக்கின்றன. தற்போது 2017ம் ஆண்டு வரவிருக்கும் திரைப்படங்களான நயன்தாரா நடித்த ‘அறம்’, ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ ஆகியவையும் பெண்களை மையமாகக்கொண்ட திரைக்கதைகள் தான். இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைத்திருக்கும் ஜிப்ரான் நயன்தாராவின் ‘அறம்’ படத்தின் வேலைகளை முடித்து வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு, இந்தப் படங்கள் குறித்து தனது ட்விட்டரில் புகழ்ந்து எழுதியுள்ளார். 

அவரது ட்விட்டர் கருத்து, “சமீபத்தில் பெண்களைப் போற்றும் இரண்டு படங்களின் ரப் எடிட்டையும் பார்த்தேன். ‘அறம்’, ‘மகளிர்மட்டும்’ இந்த இரண்டு படங்களும் கட்டாயம் தமிழ் சினிமா உலகிற்கு பெருமை சேர்க்கும். அதிலும் ‘அறம்’ இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு சமூகப் பிரச்னைக் குறித்துப் பேசுகிறது. அந்த பிரச்னைக்கான தீர்வும் அந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.  

‘மகளிர் மட்டும்’ பட டைரக்டர் பிரம்மா இது பற்றி கூறியதாவது, ‘‘பெண்களைக் குறித்து தமிழில் நிறைய இலக்கியங்கள் வந்துள்ளன. நிறைய படங்களும் வந்துள்ளன. ஆனால் பெண்கள் வாழ்க்கைக் குறித்து பேச இன்னும் மாளாத விஷயங்கள் உள்ளன. பெண்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான காலக்கட்டங்களில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு. முன்னாடி தலைமுறையின் கண்ணோட்டத்தில் உள்ள சுவையான விஷயங்களை வருங்கால சந்ததிக்குக் கொண்டு செல்லும் நல்ல படமாக இது இருக்கும். 

ஒரு சிலரின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை ஒன்றிணைக்கும் புள்ளியில் உங்களை பயணிக்க வைக்கும் குடும்பப்படமாக இந்த படம் இருக்கும். இன்றைய தமிழ் சினிமா உலகைப் பொறுத்தவரை ஜோதிகா பெண்களின் அடையாளமாக இருக்கிறார். ஒரு நல்ல கதையைத் தூக்கி நிறுத்தும் அதைக் கொண்டு செல்லும் ஒரு சரியான ஆளுமைத்திறன் ஜோதிகாவிடம் உள்ளது. அவங்க கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என தோணியதால் அவரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு இந்த படம் வருகிறது.’’ அவர்கள் பேச்சில் தெறிக்கும் நம்பிக்கை நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இப்படங்களின் வருகைக்காகக் காத்திருப்போம். 

நன்றி - குங்குமம் தோழி 

...மேலும்

Feb 7, 2017

கண்டன அறிக்கை


ஆணாதிக்க சமுதாயமானது பொதுவெளியை ஆண்களுக்கென்றே ஒதுக்கி வைத்துள்ளது. பெண்களுக்கு என்று இந்த பால்வாத சமுதாயம் விட்டுவைத்திருப்பது வீடும் அது சார்ந்த வெளிகளும் மட்டுமே. ஆனாலும் ஆளுமைமிக்க பெண்கள் தொடர்ச்சியாக இந்த பொது – தனிப்பட்டது என்ற பாகுபாட்டிற்கு எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளார்கள். இப்படியாக போராடும் பெண்கள் மீது பால்வாதம் தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட தாக்குதல்களின் போது பால்வாதம் எப்போதும் பெண் உடல், அதன் செயற்பாடுகள், பெண்களது நடத்தைகள் என்பவற்றின் மீதே தனது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இந்த வகையில் பெண்களை தொடர்ந்தும் வீட்டினுள் முடக்கி வைப்பதற்கு பால்வாதம் பாவிக்கும் ஆயுதமாகவே பாலியல்ரீதியான தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற அனைத்து தளங்களிலும், அந்தத் துறைகளில் தலையெடுக்க முனையும் பெண்களை ஆண்கள் தொடர்ச்சியாகவே தாக்கிவந்துள்ளார்கள். தொடர்ந்தும் தாக்கி வருகிறார்கள். பெண்களின் அறிவை மறுப்பது, அவர்களது படைப்புகளை தரமற்றதாக மட்டந்தட்டுவது போன்றவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடப்பவைதாம். ஆனால், பெண்களை இந்த சாதாரண வழிமுறைகளினால் தடுத்து நிறுத்த முடியாதபோது, ஆணாதிக்கவாதிகள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் பெண் உடல் சார்ந்த பாலியல் தாக்குதல்கள், பாலியல் தொந்தரவுகள். 

டொறொன்ரோ நகரில் கடந்த வாரம் மஜீத் எழுதிய நான்கு புத்தகங்களின் வெளியீடு நடைபெற்றது. இந்த நிகழ்வை “பகு பதம்” நண்பர்கள் ஒழுங்குசெய்திருந்தனர். நம் காலத்தின் மந்தாரமான விமர்சனமுறைகள் பற்றியும், கனேடிய இலக்கியச் சூழல் பற்றிய உரையாடல்களும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளின்ள விநியோகம், நூலகங்களுடன் தொடர்புகொள்ளல் எனும் வகையிலான உரையாடல்கள் நிகழ்ந்தன.

ஆண்களால் எழுதப்படும் இக்கால ஆக்கங்களில் பெண்களின் உடலுறுப்புகளை எழுதும் விதங்கள் சலிப்பையும், சில தருணங்களில் கோபத்தையும் கொணர்கின்றன எனும் கருத்து பெண்கள் தரப்பிலிருந்து வெளிவந்தது. அன்று இரவு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடராஜா முரளிதரன் தனது முகநூலில் ஒரு “கவிதை”யை, இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு எழுதியிருந்தார். அந்தக் “கவிதை” பின்வருமாறு:

தனிமைத் துயரம்
அவனை அழித்துக் கொள்ளுமாறு
தூண்டுகிறது
பிள்ளைகள் தன்னைப்
புறந்தள்ளி விட்டார்கள் எனக்...
கதறியழுகின்றான்
தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறான்
தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறான்
எனது ஆறுதல் வார்த்தைகள்
முனை மழுங்கிய அம்புகளாய்
வீழ்ந்து மடிகின்றன
சாவுக்கால் மீண்டெழுந்து வந்தவள்
ஆண் கவிஞர்களை
மார்பகங்களையும் யோனிகளையும்
பாடுதற்காய் சபிக்கின்றாள்
அவ்வாறெனில் அந்தப் பெண்
மார்பகங்களைத் தூக்கிக் காட்டுகின்ற
அதிநவீன மார்புக்கச்சையை
ஏன் அணிந்திருக்கிறாள்
எனக் கல்லை வீசுகிறான் இன்னொருவன்
சமூகத்தின் போதாமைகள் குறித்து
மைந்தர்கள் மீண்டும் ஒரு முறை
கிளர்ந்தெழுந்தார்கள்
வழி தவறிய பறவையாக
என்னைப் பாவனை பண்ணாமல்
மந்தைகளுள் என்னையும் ஒருவனாகப்
பிணைத்துக் கொள்ளும் இலயிப்பில்

இந்த “கவிதை”யில் வரும் இரண்டாம் பந்தியானது தோழி நிரூபா அந்த கூட்டத்தில் பேசிய அதே கருத்துக்களை சுட்டி நிற்கிறது. அடுத்த பந்தியானது “அந்தப் பெண்” என்று தொடர்கையில் இதுவும் தோழி நிரூபாவை பற்றியே பேசுகிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியக்கூடியதுதான்.
இந்தக் “கவிதை” வெளியானதிலிருந்து பலர் முரளிதரனிடம் கவிதையில் தனிப்பட்ட ஒரு பெண் மீதான பாலியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தவறான செயற்பாடு என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் அவர், இது ஒரு இலக்கியப் படைப்பு என்றும், பொதுப்படையாக பேசிச் செல்வதாகவும், யாரையும் தனிப்பட தாக்கும் நோக்கம் தனக்குக் கிடையாது என்றும் தொடர்ந்து ஒரு வாரமாக சாதித்து வந்தார்.

தற்போது அவர் இந்தப் பதிவை தனது முகநூல் தளத்திலிருந்து நீக்கிவிட்டிருந்தாலும், இது போன்ற தாக்குதல்கள் மலினப்பட்டுவிட்ட சூழலில், பொதுத்தளத்தில் செயற்படும் பெண்கள் மீது இந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்தக்கூடிய உடனடி மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்த அக்கறையுடன் இவ்வாறான எதிர்வினையை நிகழ்த்தவேண்டியவர்களாக இருக்கிறோம்.
 1. உரையாடல் என்று வரும்போது பலவிதமான மாற்றுக் கருத்து உள்ளவர்களும் தமது கருத்துக்களை முன்வைத்து சுதந்திரமாக, எந்தவிதமான பின்விளைவுகள் பற்றிய பயமும் இன்றி விவாதிப்பதற்கான சூழல் இருப்பது அவசியமானது. அந்த வகையில் அங்கு முன்வைக்கப்படும் யாருடைய கருத்துக்களையும், வேறு யாருமே நிபந்தனை இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவரும் நிர்ப்பந்திக்க முடியாது. இதே உரையாடல்கள் பின்னர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்வது ஆரோக்கியமானதே. ஆனால் முரளிதரன் இந்த ஆரோக்கியமான விவாதத்திற்கான எல்லைகளைக் கடந்து, தனிப்பட்ட முறையில் தோழி நிரூபா மீது பாலியல்ரீதியான தாக்குதலை நடத்தியுள்ளார். 
 2. பெண்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு முகங்கொடுக்க முடியாத ஆண்கள், சம்பந்தப்பட்ட பெண்கள் மீது தனிப்பட்ட, பாலியல்ரீதியான தாக்குதலில் ஈடுபடுவது எந்த வகையிலும் அனுமதிக்கப்பட முடியாதது. நிஜ வாழ்வில் மட்டுமல்ல, வலைத்தளங்களிலும் கூட இதுதான் நியமம். இது அவர்களுடைய பாலியல் வக்கிரத்தைக் காட்டுகிறது. தனது தவறை ஒத்துக்கொள்ள மறுத்து வாதம் புரிவதும், தவறை சுட்டிக்காட்டுபவர்கள் மீது மேலும் தாக்குதல்களை தொடர முனைவதும் அனுமதிக்க முடியாதன.
 3. பாலியல் ரீதீயான தாக்குதல்கள் பால்வாத சமுதாயத்தில் பெண்களை பொதுவெளியில் இருந்து துரத்தியடிப்பதை நோக்கமாகக் கொண்டவை. பெண்கள் பொதுவெளிகளில் சுதந்திரமாகச் செயற்பட வருவதே அரிதாக இருக்கும் இன்றைய நிலையில், அவர்கள் மீது இவ்வகையான தாக்குதல்களை நிகழ்த்துவது நீண்டகால நோக்கில் மிகவும் பாரதூரமான எதிர்விளைவுகளை கொண்டுவரக்கூடியது என்பதனால், சமூக அக்கறை உள்ள எவரும் இவற்றை அறவே அனுமதிக்க முடியாது. 
 4. பாலியல்ரீதியான தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்களை மிகவும் மனவுளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், சம்பந்தப்பட்ட பெண்களிடம் உடனடியான, நீண்டகால உளவியல் காயங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் இவற்றை வெறுமனே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு செல்ல முடியாது. 
 5. இந்த அறிக்கையை தயாரிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது நடராஜா முரளிதரன் தனது “கவிதையை” அழித்திருக்கின்றபோதும், கவிதை பற்றிய குற்றவுணர்வையோ அது உருவாக்கியிருக்கக்கூடிய மனவுளைச்சல்கள் பற்றியோ எந்தப் புரிதல்களையும் அவரது முகநூற்பக்கத்தில் காணமுடியவில்லை.
 6. தோழி நிரூபாவுடன் இவ்விடயத்தில் நாம் முழுமையான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கருத்துக்களுடன் உடன்பாடு கொண்டவர்கள் எமது அறிக்கையை ஏற்பிசைவு (endorse) பண்ணுமாறும், தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதற்கு போதிய வீச்சை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். 
 7. எமது இந்தக் கண்டனம் நடராஜா முரளிதரனை முதன்மைப்படுத்தியிருந்தாலும், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும், பெண்விடுதலை, பெண்ணியக் கருத்தியல்களைப் பேசுபவர்களை கேலிப்பொருளாக்கும் பாங்கும் சமூக வலைத்தளங்களிலும், இதர கலை இலக்கிய வெளிகளிலும், நடைமுறை வாழ்விலும் அதிகரித்துவருவதை மிக மோசமான ஒரு சமிக்ஞையாக கருதுகிறோம். 
 8. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு தனிப்பட்ட உறவுகள் காரணமாக ஆதரவளிப்பதும், அவர்களின் செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிப்பதும் இதுபோன்ற நடவடிக்கைகளும் சூழலும் தொடர்வதை ஊக்குவிப்பனவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். தமிழ் சூழலில் பரவிவரும் பெண்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், பாலியல் தொல்லைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு நிகழ்வாக மாத்திரமே இது புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்றும், இதனை பலரும் பல்வேறு விதத்திலும் தொடர்வதே எமது சமூக, அரசியல், கலை, இலக்கிய சூழலுக்கு ஆரோக்கியமான அடித்தளத்தை அமைக்கும் என்பதையும் வலியுறுத்திக்கொள்கிறோம்.
இப்படிக்கு.........
 • கிருத்திகன் 
 • அருண்மொழிவர்மன்
 • சேனா
 • ரகுமான் ஜான்
 • சந்திரா
 • நிரூபா
 • யாழினி
 • சபேசன்
 • மெலிஞ்சி முத்தன்
 • சுடரகன்
 • ஶ்ரீறஞ்சனி
 • அகிலன்
 • அவ்வை
 • விக்கினெஸ்வரன்
 • அரசி
 • துஸ்யந்தி
 • தீபா 
 • தான்யா
 • சத்தியா
 • நந்தினி
 • ராதா
 • கிருபா
 • கற்சுறா
 • அதீதா
 • மைதிலி
 • ப.அ. ஜெயகரன்
 • திருவருட்செல்வி ஜெயகரன்
 • சீவரட்ணம்
 • அருள்
 • மயில்
 • தர்சன்
 • ரதன்
 • MisFits for Change
 • தேடகம்
...மேலும்

Feb 3, 2017

புளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale)

புளோரன்ஸ் நைட்டிங்கேல்(Florence Nightingale, மே 12, 1820 –ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல்முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.

பிரிட்டிஷ் செல்வம் பொருந்திய உயர்குடிக் குடும்பமொன்றில் இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார்.[1] இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1889-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்)(1794- 1875). வில்லியம் நைட்டிங்கேலின் இயற்பெயர் வில்லியன் எட்வார்ட் ஷோர். இவரது தாயாரின் மாமனான பீட்டர் நைட்டிங்கேல் என்பவருடைய மரண சாசனத்தின் மூலம் அவருடைய சொத்துக்கள் வில்லியத்துக்குச் சேர்ந்தன. அத்துடன், வில்லியம், நைட்டிங்கேல் என்னும் பெயரையும் நைட்டிங்கேல் குடும்பச் சின்னங்களையும் கூட அவர் ஏற்றுக்கொண்டு வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் ஆனார். புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் [2] அடிமை முறைஒழிப்புக்காக வாதாடியவராவார்.

கிறிஸ்தவர் என்ற முறையில் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாக தாதியர் சேவையை அவர் உணர்ந்தார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், குறிப்பாகத் தாயாரின் எதிர்ப்புக்கும், துன்பத்துக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இவ் விடயத்தில் தொடர்ந்து தாதியர் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டமை அச்சேவையில் இவரது பெருவிருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதாகவும் அடையாளம் காணப்படுகிறது. அக் காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். தாதியர் சமையலாட்களாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் ஜேர்மனி பயணத்தில் கண்ட கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் கவனிப்பும் மருத்துவச் சேவையும் இவரை மிகவும் கவர்ந்தன.

தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார். பின்னாளில், சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராக்ப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

1851 ஆம் ஆண்டு 4 மாதங்கள் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் பெற்ற பயிற்சி மூலம் தாதியியல் பால் இவரது கவனம் தீவிரமடைந்தது.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ், ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப்படைக் கூட்டணிக்குமிடையே 1854 - 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.[3]

கிரீமியப் போரில் காயமடைந்த வீரர்களுடைய நிலைமை மோசமாக இருப்பது குறித்த அறிக்கைகள் போர் முனையில் இருந்து பிரித்தானியாவுக்குக் கசிந்தபோது புளோரன்ஸ் அது குறித்துத் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது சிற்றன்னை உட்பட அவரால் பயிற்றுவிக்கப்பட்ட 38 தாதியரும் துருக்கியில் இருந்த ஐக்கிய இராச்சியத்தின் முதன்மை முகாமிற்கு நவம்பர் 1854ம் ஆண்டு சென்றடைந்தனர்.[4] நவம்பர் தொடக்கத்தில் நைட்டிங்கேல் ஸ்கட்டாரியில் இருந்த செலிமியே முகாமுக்குச் சென்றார். அங்கே நிர்வாக அலட்சியத்தினால், போரிற் காயமுற்ற வீரர்கள் அதிக பணியால் களைத்திருந்த மருத்துவப் பணியாளரால் சரிவரக் கவனிக்கப் படாமையைக் கண்டார்கள். மருந்துத் தட்டுப்பாடும் சுகாதாரக் குறைவும் உயிராபத்து விளைவுக்கும் தொற்றுக்களும் அம்முகாமில் காணப்பட்டன. நோயாளருக்கான உணவைத் தயாரிப்பதற்கான வசதிகளும் இருக்கவில்லை.

புளோரன்ஸ் சூழல் தூய்மையாக இல்லாததாலேயே நோய்கள் பரவுகின்றன என்னும் கொள்கையுடையவர். அதன் சார்பில் தீவிரமாக வாதடியும் வந்தார். இதனால், புளோரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது தாதியர் குழுவும்முகாமின்மருத்துவமனையையும், கருவிகளையும் முழுமையாகச் சுத்தப்படுத்தியதுடன், நோயாளர் கவனிப்பையும் ஒழுங்குபடுத்தினர்.[5] எனினும் இவர் காலத்தில் ஸ்கட்டாரியில், இறப்பு வீதம் குறியவில்லை. மாறாக, அதிகரித்துவந்தது.[6]அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது அங்கேயே கூடுதலான இறப்புக்கள் நிகழ்ந்தன. அவருடைய முதல் மாரிகாலத்தின்போது 4,077 வீரர்கள் அங்கே இறந்தனர். போர்க் காயங்களினால் இறந்ததிலும் 10 மடங்கு கூடுதலானோர், டைபாய்ட், வாந்திபேதி (cholera), வயிற்றோட்டம் (dysentery) ஆகிய நோய்களுக்குப் பலியாயினர். அளவுக்கதிகமான இட நெருக்கடி, குறைபாடுள்ள கழிவு வாய்க்கால்கள், காற்றோட்டம் இன்மை ஆகியவற்றால், முகாமின் தற்காலிக மருத்துவ மனை நோயாளருக்கு உயிராபத்தை விளைவித்தது. இந் நிலை காரணமாக, 1855 ஆம் ஆண்டில் ஒரு சுகாதாரக் குழு பிரித்தானிய அரசினால் ஸ்கட்டாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது புளோரன்சும் அவரது தாதியரும் வந்து 6 மாதத்துக்குப் பின்னராகும். இவர்கள் வாய்க்கால்களைச் சுத்தப்படுத்தி, காற்றோட்டத்தையும் மேம்படுத்தினர். இதனால் இறப்புவீதம் பெருமளவு குறைந்தது.[6][7]

மருந்துத் தட்டுப்பாடும் குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார். படைவீரரின் உடல்நிலை குறித்து அரசாணைக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமெனக் கருத ஆரம்பித்தார். இந்தப் போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது.

பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும் சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்டதாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing)[8], "உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்" (Notes on Matters Affecting the Health), "பிரித்தானிய இரணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.[8][9]

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக பிபிசியினால் கருதப்பட்டார். அவர் சற்று நாட்களில் நோய்வாய்ப்பட நேர்ந்தது. போரில் அவரது பணியின் மூலம் ஏற்பட்ட தகைவே(மனவுளைச்சல்) அதற்கான மூலகாரணியென எண்ணப்படுகிறது.

விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று, படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை.[10][11] சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார்.[12] She often referred to herself in the masculine, as for example "a man of action" and "a man of business".[13] மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் பணத்தில் £45000களைக் கொண்டு புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9 1860அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியிய மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம் என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல்1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.1907 இல் ஓர்டர் ஒவ் மெரிட் எனும் விருதையும் இவர் பெற்றார். இவ்விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவராவார்.

குரோனிக் ஃபட்டீக் சின்ட்ரோம் (Chronic Fatigue Sydnrome)(அதீத களைப்பு ஏற்படல்) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாக உள்ளது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். 1910, ஆகஸ்ட் 13 ஆம் நாள் தனது 90 ஆம் வயதில் மிகவும் அமைதியாக தனது அறையில் மரணமெய்தினார்.[14]Park Lane.[15] இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபியில் புதைக்க அரசு முன்வந்த போதும், அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது.[16][17]புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது.[16][17]

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் தரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் தரவியலை பெரியளவில் பயன்படுத்தினார்.

தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். 1858 இல் பதவியேற்றதன் மூல அரச தரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார்.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புழ் பெற்றிருந்தாலும், இங்கிலாந்தின் பெண்ணியத்தில் முக்கியமான ஒருவருமாவார்.

1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை "சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்" என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப்படவில்லையாயினும் 'கசான்ட்ரா' எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணிய வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

கசான்ட்ரா, கல்வி கற்றிருந்த போதும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் தாய் மற்றும் அக்கா நடத்திய சோர்வான வாழ்க்கை போன்று பெண்கள் அதீத பெண்மையால் கையாலாகாதவர்களாய்ப் ஆக்கப்படுவதைக் கண்டிக்கிறது.சமூக சேவைக்காக அவர்களது வசதியான வாழ்வை புளோரன்ஸ் நிராகரித்தார். இவ்வாக்கம் தனது யோசனைகள் மக்களால் உள்வாங்கப்படாது போய்விடுமோ என்ற புளோரன்சின் கவலையைப் பிரதிபலிக்கிறது. கசான்ட்ரா என்பவள் அப்பலோவின் பெண்பூசாரியாவாள். தெய்வீக தீர்க்கதரிசனம் பெறுபவளாயினும் இவளது எச்சரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை.

பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும்இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.

உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.

கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி (MD)-11 விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.
இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வைத்தியசாலைகள் இவர் பெயரைக் கொண்டுள்ளன.

ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின்முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்டகணினியொன்றிற்கு 'பெட்சைட் புளோரன்ஸ்' (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது.

நன்றி  - மதியரசியின் பதிவிலிருந்து 
...மேலும்

Feb 1, 2017

காணியுரிமை சட்டமும் பெண்கள் மீதான பாராபட்சமும் - செல்வி வினுசியா கமலேஸ்வரன்


பெண்களுக்கெதிரான அனைத்து பாராபட்சங்களையும் இல்லாதொழிப்போம் என்ற சீடோ உடன்படிக்கையில் இலங்கை அரசானது ஏற்று கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் ஆனால் இலங்கை காணி அபிவித்திச்சட்டமானது பெண்களுக்கு பாராபட்சமானதாக அமைந்துள்ளது

குறித்த காணிக்கு சொந்தமான உரிமையாளர் தனது ஆதனத்திற்கு பின்னுரித்திடாமல் இறக்கின்ற போது முதலில் அக்காணி மூத்த ஆண் பிள்ளையையே சேரும் அவ்வாறு ஆண் பிள்ளை எவரும் இல்லாத பட்சத்திலேயே மூத்த பெண்பிள்ளையை சேரும் என குறிப்பிடுகின்றது.

எனவே குடும்பத்தில் நான்கு பெண்கள் மூத்தவர்களாகவும் இறுதியாக ஆண்பிள்ளை இருப்பின் சட்டத்தின் பிரகாரம் குறித்த ஆதனம் இளைய மகனுக்குறியது (மூத்த ஆண் பிள்ளை என்ற காரணத்தினால் ) சில சமயங்களில் பிள்ளைகளுக்கு சமபங்காக பெற்றோர் காணிகளை பேச்சளவில் கூறிவிட்டு பின்னுரிதிடாமலோ அல்லது பிரித்து எழுதாமலோ இறந்துவிட்டால் சட்டப்படி காணி இளைய மகனுக்குரியதாகின்றது. அவ் ஆண் மகன் வெளியேற சொன்னால் அவர்கள் வெளியேறியே ஆகவேண்டும்.
யுத்தத்தின் பின் இவ்வாறான துர்பாக்கிய நிலை கிழக்கில் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த பெற்றோரை இழந்த பெண்கள் அவர்களுடைய ஜீவனோபாயத்தை மேற்கொள்ளவதற்கு காணியும் அற்றவர்களாக மாறியுள்ளனர்.

சில குடும்பங்களை சேர்ந்த ஆண்பிள்ளைகள் அவ்வாறான காணிகளை மனசாட்சியுடன் தனது சகோதரிகளுக்கு வழங்கயுள்ளனர். 

ஆனால் எல்லோரும் அவ்வாறு செய்பவர்கள் என்பதல்ல சில பெண்கள் தமது குடும்பத்துடன் பல காலம் வசித்த காணிகளில் இருந்து வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே  குறித்த உரிமை மூலம் என்ற இடத்தில் பிள்ளை என மாற்றப்படலாம் என சிலர் பரிந்துரைக்கின்றனர். எவ்வாறாயினும் இலங்கை காணிச்சட்டமானது சீர்திருத்தப்படவேண்டியதும் பெண்களுக்கு பாராபட்சமற்றதாக மாற்றியமைக்கப்பட வேண்டியதும் அவசியமாகும்.

நன்றி

செல்வி வினுசியா கமலேஸ்வரன்
செயலாளர் (திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு)

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்