/* up Facebook

Jan 31, 2017

அல்குர் ஆனை ஆணாதிக்க சந்தர்ப்பவாதத்துக்காக திரிப்பது தான் தவறு - பாத்திமா மாஜீதா


பெண்ணியத்தின் பன்மைத்தன்மை குறித்த உரையாடல்களில் மதம்சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும் தவிர்க்க முடியாதவை. இந்த எல்லைப் பரப்பில் இஸ்லாம் தொடர்பான கருத்துக்களும் நடைமுறைகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. இஸ்லாமிய சமயப் பரவலாக்கத்திற்கு முந்தைய சமூகத்தில் நிலைபெற்றிருந்த பெண்ணடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளும் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் வழங்குவதற்கான முன்னெடுப்புகளும்  முன்வைக்கப்பட்டதை இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. இருந்தபோதிலும் காலப்போக்கில் இஸ்லாமிய ஷரீஆ சட்டமானது ஆண்களின் நலன் சார்ந்து வளைக்கப்பட்டுள்ளமை தெளிவாக புலப்படத்தொடங்கியுள்ளது.

இந்தப்பின்னணியில் பெண்ணியம் தொடர்பில் இஸ்லாமிய வரலாறு ,ஷரீஆ சட்ட ஏற்பாடுகள் அவை எவ்வாறு உருத்திரிக்கப்பட்டன போன்ற விடயங்களை ஆராய்வதும் அறிவதும் மிகவும் அவசியமானதாகும். அத்தகைய உண்மைகளை அறிவதற்கான துணிச்சலும் தைரியமும் ஒரு சிலருக்கே கைக்கெட்டியுள்ளது. அந்தவகையில் அறிவதற்கான நிலையைக் கடந்து அறியப்படுத்துவதற்குமான துணிச்சல் மிக்க ஆளுமையாக ஹெச்.ஜி. ரசூல் தனது இஸ்லாமிய பெண்ணியம் எனும் நூலினூடாக அத்தகைய இலக்கினை அடைந்துள்ளார்.

பலதார மணம், தலாக், ஜீவனாம்சம், சொத்துப்பங்கீடு, ஒழுக்கவிதிகள், தர்கா கலாச்சாரம் போன்றவற்றினூடாக பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்ற சம்பவங்களை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸினூடாக ஒப்பிட்டும் ஆராய்ந்தும் விளக்கமளிக்கின்றார். பெண்களின் உரிமைகள் தொடர்பில் இஸ்லாமிய வரலாற்றின் உண்மைகள் பலவற்றினை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் .

ஹெச்.ஜி.ரசூலின் மைலாஞ்சி தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண்ணுடல் அடக்குமுறை குறித்த முக்கியத்துவமான கவிதை

சுமையாக்களின் பெண்ணுறுப்பில் அம்பெய்து கொல்லும் அபூஜஹில்கள்

படுக்கைகள் தோறும் என்ற கவிதையாகும்.

இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி 

என்பது அவரின் மற்றுமொரு கவிதை. இக்கவிதை முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் தனது துணிச்சலில் ஒரு வீதமும் குறையாத திறமும் பக்குவமான கையாள்கையும் இஸ்லாமிய பெண்ணியம் எனும் நூல் வழி அறியலாகிறது.

நெடுங்காலமாக ஆணாதிக்கச் சமூகம் பெண்ணுக்கென்று வடிவமைத்து வைக்கப்பட்ட ஒற்றைக்கட்டமைப்பிலிருந்து பெண்ணியச் சிந்தனை பன்மைத்துவ வாசிப்பாகவும் எழுத்தாகவும் உரிமை கோரலாகவும் போராட்ட நிலையிலும் விரிவடைகிறது.

இந்நிலையில் இஸ்லாம் கூறுகின்ற பாலியல் சமத்துவத்திற்கு ஆதாரமாக  வரும் அல்குர்ஆன் வசனங்களை நூலாசிரியர் ஆதாரமாக கூறுகின்றார். 

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் அத்தியாயம்  வசனம்)

சமத்துவக் கோட்பாட்டினை நோக்கி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குரிய பாதையை நூலாசிரியர் காட்டுகிறார்.

ஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் நற்கருமங்களுக்குத்தக்கவே மதிப்பீடு செய்யப்படுகிறாளே தவிர அவளது கணவன் சார்ந்து அல்ல என்கின்ற சுயசார்புத்தன்மையை அல்குர்ஆன் விளக்குவதையும் எடுத்துரைக்கின்றார்.

ஆண்கள் அல்குர்ஆன் வசனங்களை தங்களது வசதிக்கேற்ப தேவையான ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து அவற்றினை தங்களது ஆதிக்க கருத்தியலுக்கேற்ப வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.எனவே அல்குர்ஆன் வசனங்களை அர்த்தப்படுத்தும் போது கீழ்வரும் இரு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று,

ஒவ்வொரு திருமறை வசனமும் இறங்கும்பொழுது நிலவிய சமூக கலாச்சார சூழலையும் வரலாற்று பின்னணியையும் பரிசீலிப்பது,

இதுவரை பேசப்படாத அர்த்தங்களையும் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு ஏற்றால்போல் பாதிக்கப்பட்டோரினை முன்னெடுத்துச்செல்லும் வகையிலும் அல்குர்ஆன் வசனங்களை அர்த்தப்படுத்துவது
என்ற மிகத் தேவையான குர்ஆனிய வாசிப்பு முறையைத் தெளிவுபடுத்துகிறார்.

அல்குர்ஆன் முன்வைக்கும் பலதாரமணம் தொடர்பான வசனங்கள் யுத்த காலச் சூழல்களை மையப்படுத்தியே முன்வைக்கப்பட்டன. பெற்றோரை இழந்த பாதிப்புக்குள்ளான அனாதைக்குழந்தைகள், கணவனை இழந்த விதவைகள், போர்களில் பிடிபட்டு கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண்கள் ஆகியோரை மையப்படுத்தியே உள்ளன. இஸ்லாமியர் வாழ்வின் அசாதாரணமான யுத்த சூழல் சார்ந்த இந்த அர்த்தத்தினை அமைதிக்கால சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது திணிப்பது சரியன்று என ஆசிரியர் சாடுகிறார்.

தலாக் என்பது மனைவியைக் கணவன் நினைத்த நேரத்தில் மணவிலக்கு செய்யும் மண முறிவு நிகழ்வாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட மணமுறிவு நிகழ்வுகளையும் விளக்கமாக இந்நூல் எடுத்துக்காட்டும் அதேநேரம் குடும்ப அமைப்பில் பிணக்குகளை தீர்க்கும் விதத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் முரண்களைத் தீர்க்க அல்குர்ஆன் கூறியுள்ள முன்னிலை நடவடிக்கைகளையும் விவரிக்கின்றது.தலாக்கைவிட தனக்கு கோபமூட்டக்கூடிய ஒன்றை அல்லாஹ் பூமியில் படைக்கவில்லை என்ற நபிமொழி இருந்தாலும் நடைமுறையில் வெறுப்பிற்குரிய ஒன்றாக இது கருதப்படவில்லை எனவும் நூலாசிரயர் குறிப்பிடுகின்றார்.

இஸ்லாம் பெண்ணின் சார்பில் முன் வைக்கும் குலா விடுவித்துக்கொள்ளுதல் முறையானது தலாக்கில் கணவன் மனைவியின் விருப்பமின்றியே இலகுவில் மணவிலக்கு பெறுவது போன்று மனைவி அவனை விலக்கமுடியாது. அதேநேரம் மனைவி மணவிலக்கு பெறுவதற்கு பல முறைமைகள் இருந்தாலும் கூட ஆண் சார்ந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதை இந்நூல் சுட்டிகாட்டுகின்றது. அதேபோன்று ஷரீஅத், ஜமாஅத் நீதிக்குழு அனைத்தும் ஆண் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில்  நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் தீவிர நிலையில் விவாதிப்பதன் அவசியம் குறித்தும் இந்நூல் வலியுறுத்தி நிற்கின்றது .

ஒழுக்க விதி தொடர்பில் அல்குர்ஆன் கூறும் பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தியே இருக்க வேண்டும் என்ற வசனத்தினை பெண்கள் மீது மட்டும் திணித்துவிட்டு அதற்கு முந்திய வசனமான நபியே விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறும் அவர்கள் தங்களது பார்வைகளை கீழ் நோக்கியே வைக்கவும் தங்கள் கற்பையும் இரட்சித்துக்கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும் என்ற வரிகளை ஆண்கள் மறைக்கும் பொருட்டு எளிதில் கடந்து செல்லும் நிலையையும் இந்நூல் கூறுகின்றது.

அன்றைய அரபுப்பழங்குடி மக்களிடையே பெண்களுக்கு முட்டுக்கு மேலும் தொப்புளுக்கு கீழும் மட்டுமே  உடுப்பதற்கான உரிமை இருந்தது. மார்பை மறைக்க உரிமை இருக்கவில்லை. இந்நிலையில் இஸ்லாமிய பெண்களிக்கு ஆடையின் மூலமாக உடல் முழுவதுமாக மறைத்தல் என்பது நடத்தை சார்ந்த ஒழுக்க விதியாகவும் உரிமை சம்பந்தமான பிரச்சனையாகவும் உருவானதன்  பின்னணி குறித்தும் ஆசிரியர் பதிவு செய்கின்றார். இஸ்லாமிய உடை ஒரு அடையாளம் சார்ந்த விஷயமாகவும் பர்தா ஆடை முறை சவூதி அராபிய கலாச்சார உடையை முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் திணிப்பதைக் குறித்தும் இந்நூல் விளக்கமளிக்கின்றது.

குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்படும் தானம் அகீகா என அழைக்கப்படுகிறது. சமூக வழக்கப்படி ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் பலியிடப்படுகிறது. இவ்வாறு ஆண் பெண் பேதத்தை உருவாக்குவதாக விவாதிக்கும் இச்செயல்முறையானது ஆணுக்கும் பெண்ணுக்கும் தலா ஒவ்வொரு ஆடு கொடுப்பதையே இஸ்லாம் வலியுறுத்துவதாக ஹதீஸ் ஆதாரங்களுடன் ஆசிரியர் நிரூபிக்கின்றார். அதுமட்டுமன்றி ஆண் குழந்தை பெண் குழந்தை என பாரபட்சம் காட்டுபவர்களை நபி அவர்கள் தடுத்திருப்பதையும் அவ்வாறே பாரபட்சம் காட்டுபவர்கள் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் எனவும் கண்டித்ததையும் இங்கு ஆதாரமாக கூறுகின்றார்.

பெண்களின் மாதவிடாய் காலம் ஹைளு என்று அழைக்கப்படுகிறது. உடல் ரீதியான தீட்டுக்கோட்பாடு புனிதங்களின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ளமையை இங்கு நூலாசிரியர் விளக்கிக்கூறுகின்றார். தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது என்ற நபிமொழி தீட்டுக்கோட்பாட்டுக்கு முரணாகவுள்ளதையும் அதேநேரம் ஆயிஷா நாயகியின் மாதவிடாய் பொழுதில் மடியில் நபிகள் நாயகம் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதியதையும் சுட்டுகின்றார்.

இஸ்லாமிய குற்றவியல் சட்ட நடைமுறைப்படுத்தலில் ரஜம் எனும் கல்லெறி தண்டனை முறை மனித உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளதுடன் முஸ்லிம் பெண்ணியல்வாதிகளின் கடும் எதிர்ப்பலைகளுக்கும் உள்ளாகியுள்ளது. விபச்சாரம் செய்த பெண் விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள் என்ற அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களின் மூலம் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முதலே முறை தவறிய பாலியல் உறவிற்கு நூறு கசையடிகளும் திருமணத்திற்கு பிந்திய முறை தவறிய பாலியல் உறவிற்கு கல்லெறிதல் தண்டனையும் வழங்கப்படுவதாக ஆசிரியர் விளக்கமளிக்கின்றார். ஆண்,பெண் இருபாலாருக்கும் பொதுவான தண்டனையாக கூறப்பட்டாலும் இக்குற்றச்சாட்டை உருவாக்குபவர்களும் தண்டனை வழங்குபவர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதுடன் இக்குற்றச்சாட்டுக்களுக்கு பெரும்பாலும் பெண்களே தண்டனை பெறுபவர்களாக இருப்பதனை நூலாசிரியர் விளக்குகிறார்.

சொத்து பங்கீட்டினை பொறுத்தவரையில் வாரிசுரிமை சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் அளிக்கவேண்டும் என்ற அல்குர்ஆன் வசனத்தில் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றாகவும் அதன் மேலோட்டமான வடிவம் பிறிதொன்றாகவும் இருப்பதனை ஆண் பலவீனமானவனா, பெண் பலவீனமானவளா என்ற அபூஹனீபாவின் கேள்விக்கு இமாம் ஜப்பார் விடையளிப்பதை விளக்குவதன்மூலம் இன்றைய சூழலில் அதிகாரத்தின் அடக்குமுறையால் பெண்களே பலவீனமாக உள்ளதால் சொத்துப் பங்கீடு அதிகளவில் பெண்களுக்கே வழங்கப்படவேண்டும் என ஆசிரியர் வாதிடுகிறார்.

தமிழ் நாட்டில் சில பள்ளிவாசல்களில் ஆண்களுடன் இணைந்து தொழுகை நடத்துவதற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருக்கும் பொழுது இறைவனின் வேதத்தினை நன்றாக ஓதக்கூடியவர் இமாமாக நின்று தொழுகை நடத்த முடியும் என்ற ஆயிஷா நாயகியின் அறிவிப்பையும் நபிகள் நாயகத்தின் காலப்பகுதியில் அவரை இமாமாகக் கொண்டு ஆண்களும் பெண்களும் தொழுகை நடத்தியமையையும் கூறுகின்றார்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிகழ்ந்த குஜராத் சம்பவத்தினை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறையில் கெளஸர் பானு என்னும் ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றில் சூலாயுதம் பாய்ச்சி குழந்தையை வெளியேற்றிக்கொன்று தீயில் எரித்த ஒரே சிறுமியை பல வெறியர்கள் சேர்ந்து கூட்டு வன்புணர்ச்சி செய்த நிகழ்வுகள், அமெரிக்கமயமாக்கப்பட்ட உலக முதலாளித்துவத்தின் கோரத்தாக்குதலால் முஸ்லீம் பெண்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்படும் நிலைமைகள், சேர்பிய இராணுவத்தினரால் போஸ்னியாவில் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு சுமந்த கருக்களை வறுமையின் காரணமாக கருவிலுள்ள குழந்தைகளை அளிக்காதீர்கள் என்னும் அல்குர்ஆன் வசனத்தினை சுட்டிக்காட்டி அக்கருவினை அழிக்கக்கூடாது என தீர்ப்பளித்த அரேபிய உலமாக்கள் போன்ற சம்பவங்களை தனது நூலினூடாக ஹெச்.ஜி. ரசூல் கண்டிக்கின்றார். இவ்வாறு முஸ்லீம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அகமும் புறமும் சார்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளதாகவும் இத்தகைய வன்முறைகளைப் புறவெளியில் முறியடிக்கவேண்டிய அதேவேளை இஸ்லாத்தின் உள்கட்டுமானத்தில் நிகழ வேண்டிய பெண்ணிய விடுதலைக்கான சுதந்தித்தினை வலியுறுத்தவேண்டியுள்ளதாகவும்  பதிகின்றார்.

இஸ்லாமிய சமயக் கட்டாயம் என்ற போர்வையில் பெண் மீது தொடுக்கப்படும் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறைகளின் பல்வேறு வடிவங்களை ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய பெண்ணியம் வெளிக்கொண்டுவந்துள்ளது.  முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று அண்மைக்காலமாக இலங்கையில் துரிதப்படும் போராட்டங்கள், இந்தியாவில் நிகழும் முத்தலாக் தொடர்பான விவாதங்கள் ஆகியவற்றின் பரபரப்பில் வாசிக்கப்படும்போது  ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய பெண்ணியம் என்ற நூல் நம்மைத் தானாக அதனுள் இழுத்துச் செல்கிறது. ஊன்றி படிக்க வேண்டிய அவசியத்தினையும் உணர்த்துகிறது.

இஸ்லாம் உருவாகிய காலப்பகுதியில் அது அறிவுறுத்திய பெண்ணுரிமை, சுதந்திரம் போன்றவற்றின் உண்மைப்பொருளிலிருந்து வெகுதூரம் நகர்ந்து விட்டமை தெளிவான ஒரு கணிப்பீடாகும். இதற்கு காரணமான ஆணாதிக்கத்தனம் தங்களது தேவைக்கேற்றாற்போல் அல்குர்ஆன் வசனங்களை தங்களுக்கு சார்பாக பயன்படுத்துகின்றமை, இஸ்லாமிய சட்டங்களை திரிபுபடுத்துகின்றமை போன்றவற்றிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும். அப்படியாயின் அல்குர்ஆன் ,ஹதீஸ் போன்றவற்றினூடான பெண்ணிய வாசிப்பு காலத்தின் தேவையாகும். அத்தகைய பாதையை ஹெச்.ஜி.ரசூல் தனது இஸ்லாமிய பெண்ணியம் என்ற நூல் வழி நெறிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்