/* up Facebook

Jan 31, 2017

தமிழினியின் உயிர்க் கொடை - - எம்.ரிஷான் ஷெரீப்


‘இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும்.’

இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது,  ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.


தமிழினி ஜெயக்குமாரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய நேர்ந்த காரணங்கள் உட்பட, அந்த இயக்கத்தில் போராளியாகி பின்னர் புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகி, இறுதி யுத்தத்தில் இராணுவத்தில் சரணடைந்து, சிறையிலடைக்கப்பட்டு, புனர்வாழ்வு பெற்று, விடுதலை பெறும் வரையான அவரது அனுபவங்கள் விரிவாக இத் தொகுப்பில் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நல்லதும், தீயதுமான செயற்பாடுகளையும் இராணுவத்தின் நல்லதும், தீயதுமான செயற்பாடுகளையும் குறித்து நேர்மையாக, சுய அனுபவங்களோடு அவர் தனது கருத்துக்களை முன்வைத்திருப்பதை இத் தொகுப்பில் காணக் கூடியதாக இருக்கிறது.

 “சுனாமி வேலைத் திட்டத்தின் போது, கிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள், இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் போன்ற பல தரப்பட்டவர்களோடு இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன. அச் சந்தர்ப்பங்களில் வெளிப்பட்ட ஒன்றிணைந்த மக்களின் பெருந்தன்மையும், பேராச்சரியம் தந்த மக்கள் சக்தியும் என்னுள்ளே மிகப் பெரும் உற்சாகத்தைத் தந்தன. அந்த ஆக்கபூர்வமான சக்தியானது, இலங்கையின் அரசியல் தலைமைகளால் யுத்தத்துக்காகப் பாவிக்கப்பட்டு, யுத்தத்தினாலேயே அழிக்கப்பட்டு விட்டன.”

“இராணுவத்தினரதும், விடுதலைப் புலிகளினதும் உயிரற்ற சடலங்கள் மழை நீரில் ஈரமாகி ஆங்காங்கே விறைத்துப் போய்க் கிடந்தன. செந்நிறக் குருதி, மழை நீரோடு கலந்து பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. சொற்ப நேரத்துக்கு முன்பு எதிரி மனப்பான்மையோடு எதிரெதிராக நின்று போரிட்டவர்கள், பெரு நிலத்தின் மீது உயிரற்றவர்களாக வீழ்ந்து பரந்திருக்கும் காட்சி, தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் கைக் குழந்தைகளை நினைவுபடுத்தின.

அனைத்து வேற்றுமைகளும், மோதல்களும், பகைமையும் ஒன்றுமற்றதாகிப் போகுமிடம் யுத்த களம்தான் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தேவையான அறிவு உண்மையிலேயே அப்போது எனக்குள் இல்லாமலிருந்தது.”

“குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நான் சட்ட வைத்தியப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். எனது வைத்தியப் பரிசோதனையை மேற்கொண்ட இளம் பெண் வைத்தியர், அவருக்குத் தெரிந்த தமிழில் என்னோடு உரையாடினார். ‘உயிரொன்றைக் கொலை செய்வது பாவம். இந்த உலகம் எவ்வளவு அழகானது? ஏன் நீங்கள் இவ்வளவு காலமாக தீவிரவாத உறுப்பினராக இருந்தீர்கள்? இதற்குப் பிறகாவது உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள்’ போன்ற அவரது அறிவுரைகள் எனது மனதை மிகவும் பாதித்தன.

நான் போராளியா? தீவிரவாதியா? என்னை போராளியாகவும், தீவிரவாதியாகவும் ஆக்கிய முதன்மைக் காரணங்கள் குறித்து நான் சிந்தித்தேன். அரசியலால்தான் அது. ஆயுதங்களால் மாத்திரமே எமக்கு விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும் என கற்றுக் கொடுக்கப்பட்ட அரசியலால். ஆயுதமேந்தியதாலேயே நீயொரு தீவிரவாதியென முத்திரை குத்தப்பட்டதும் அரசியலாலேயே.

இளமைக் காலத்தில் எனக்கு எவ்வளவு கனவுகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருந்தன? அடுத்தவர்களது வாழ்க்கையை நேசிக்கும் சிறுமியாக நான் சிறு வயதில் வளர்ந்தேன்.

எனது வாழ்க்கையைத் தியாகம் செய்து மக்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக்க முடியுமென்ற நம்பிக்கையினால் நான் போராட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனினும் விடுதலையின் பெயரால் செய்யப்பட்ட அழிவுகளுக்கும், படுகொலைகளுக்கும் நானும் காரணமாக இருந்திருக்கிறேன். அதை மறைப்பதற்கோ, மறுப்பதற்கோ முயற்சிப்பது எனது மனசாட்சிக்கு துரோகம் இழைப்பதாக எனக்குத் தோன்றியது.”

“கடந்த காலம் கற்றுத் தந்தவை எம்மை அடுத்த வெற்றி மற்றும் சரியான பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந் நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நான் கூற முயற்சிக்கும் செய்தியை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகக் கூறியிருக்கிறேனென எனக்குத் தெரியாது. எனினும் நான் மிகுந்த முயற்சியெடுத்து, இந்த இதயம் நிரம்பிய பாரத்தினாலும், தடையேதுமற்று வழிந்தோடிய கண்ணீராலும் இப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். நான் எனது பள்ளிக் காலத்தில், எனது சமூகத்துக்கு ஏதேனும் நல்லதைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் போராளியாக ஆனேன். எனது வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை போராளியாகவே இருந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பியிருந்தேன். ஆயுதமேந்தியோ அல்லது பழிக்குப் பழி வாங்குவதன் மூலமோ எனது சமூகத்துக்கும், தேசத்துக்கும், உலகத்துக்கும் எவ்வித நல்லதையும் எம்மால் செய்ய முடியாதென எமது அனுபவங்கள் எமக்கு கற்றுக் கொடுத்தன. உண்மையான சமாதானத்தின் பாதையானது, போரின் பாதையை விட மிகவும் கடினமானதென நான் அறிந்திருந்தேன்.”

இத் தொகுப்பு குறித்து, சிங்கள வாசக சமூகத்தில் பல தரப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இத் தொகுப்பு, நேரடியான வாசக ஒன்றுகூடல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பிரதான கருப்பொருளுக்குரிய நூலாக, ஆகியிருக்கிறது. தமிழினி ஜெயக்குமாரன் எனும் முன்னாள் போராளி, சிங்கள சமூக வாசகர்களின் நேசத்துக்குரிய பெண்ணாக மாறியிருப்பதை, அவ் வாசகர்களது கலந்துரையாடல்கள் தெரியப்படுத்துகிறது. இத் தொகுப்பு குறித்து அவ் வாசகர்கள் சிலர் கூறியுள்ளதை தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தருகிறேன்.

“இது ஜூலை மாதம். கசப்பான நினைவுகளை எமக்கு மீதமாக்கித் தந்திருக்கும் மாதம். சிங்கள, தமிழ் மக்கள் பகைமையின் முள் விதைகளை செழிப்பாக்கிய மாதம். மனித ஜீவிதங்களுக்கு கறுந் தழும்பொன்றைச் சேர்த்தவாறு கறுப்பு ஜூலையை உருவாக்கிய மாதம். இம் மானிட ஜீவிதங்களில் இணைந்து கொண்டுள்ள இக் கரிய தழும்பை நீக்கி, சகோதரத்துவத்தால் நிரம்பி வழியும் மாதமாக இந்த ஜூலை மாதத்தையும், எதிர்காலத்தையும் மாற்றுவதே இப்பொழுது எமக்கு அவசியமாக இருக்கிறது. அச் சகோதரத்துவத்தின் கைகளைக் கோர்க்க இத் தொகுப்பும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது எனக் கருதுகிறேன்” என்கிறார் வாசகர் பியல் ரஞ்சித்.

“தமிழினியின் இந்த சுயசரிதைத் தொகுப்பானது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்த அவரது மன நிலையை வெளிப்படுத்துகிறது.” எனக் கூறும் வாசகர் தில் நிரோ த சில்வா, தனது அக் கருத்துக்குக் காரணமான சில பத்திகளை தொகுப்பிலிருந்து குறிப்பிட்டுக் காட்டுகிறார். அதை வழிமொழியும் வாசகர் ஷானக “ஆயுதங்களால் பெற்றுக் கொண்டது எதுவுமல்ல, தீவிரவாதம் தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியுள்ளவை எவை என இப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்” என்கிறார்.

இத் தொகுப்பு குறித்து வாசகர் பி.கே.தீபாலின் பார்வை வேறு மாதிரியாக இருக்கிறது. அது ஒட்டுமொத்தமான சிங்கள சமூகத்தின் அக உணர்வை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

“இந்தப் படைப்பை நான் வாசிக்கவென எடுத்தபோது, இதை வாசிப்பதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும், அவர்களது செயற்பாடுகள் குறித்தும் ஏதேனும் அறிந்து கொள்ளக் கிடைக்குமென நான் நினைத்தேன். எனினும், தொகுப்பை வாசித்து முடித்ததும் வாழ்க்கை குறித்தும், மனிதாபிமானம் குறித்தும் ஆழமான உணர்வுகளால் எனது இதயம் நிறைந்து போனது.

இளமைக் காலத்தில் தவறான வழி காட்டல் அத்தோடு எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போனதால் சந்தர்ப்பவாத அரசியலுக்கு ஒரு இரையாய் அவர் ஆகிறார். ஒருபோதும் பூமியில் வெற்றியைச் சாத்தியமாக்காத போராட்டமொன்றுக்காக கொலைகார, மிலேச்ச இயக்கமொன்றின் உறுப்பினராக ஆனது அவரது வாழ்க்கையின் துயரமாகும். ஒரு பெண்ணாக கிடைக்கக் கூடிய உயர் பதவியான தாய்மைப் பதவிக்குப் பதிலாக, தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினராக ஆனது உண்மையிலேயே கவலை தரத் தக்கதாகும். அது அவருக்காக இல்லை. அவர் நினைத்ததைப் போல அவரது மக்களுக்காகவும் இல்லை. துரதிர்ஷ்ட வசமாக அதை நியாயப்படுத்த அவராலும் இயலவில்லை.

மனிதாபிமானத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக வன்முறைக்கும், மிலேச்சத்தனத்துக்கும், தீவிரவாதத்துக்கும் நான் எதிரி. அதனால், இத் தொகுப்பை வாசிப்பதற்கு முன்பு வரை அவரும் எனது கோபத்துக்கும், வெறுப்புக்கும் உரியவராக இருந்தார். இப்பொழுது நான் சொல்கிறேன். தமிழினி ஜெயக்குமாரனாகிய அவரை, (தற்போது உயிருடன் இல்லாத போதும்) அன்பான சகோதரத்துவத்துடன் நான் இன்று அரவணைத்துக் கொள்கிறேன்” எனக் கூறுகிறார் பி.கே.தீபால்.

அதை ஒத்த ஒரு கருத்தை முன்வைக்கிறார் வாசகர் திலும்.டி.திசாநாயக்க. 
“வாசிக்க ஆரம்பித்தபோது, தமிழினி, பிரபாகரனை நியாயப்படுத்தப் போகிறார் என்றே நான் நினைத்தேன். ஆனால், முடிக்கும்போது, தமிழினிக்கும் எம்மைப் போலவே அம் மிலேச்சத்தனத்தின் மீது வெறுப்பு இருந்திருக்கிறதென்பதை நான் உணர்ந்தேன்.”

“தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் எண்ணத்தோடு இயக்கத்தில் சேர்ந்து, முப்பது வருட கால குரூர யுத்தத்தின் சாபத்துக்கு இரையான போராளிகளுக்கு, இறுதியில் எஞ்சியது என்ன என்பதை விபரமாக ஆராய்ந்திருக்கும் தொகுப்பு இது’ என்கிறார் வாசகி நிலக்ஷி கருணாரத்ன. வாசகி ஷ்யாமலீ காரியவசமும் அதே கருத்தை ஒத்த, கருத்தைக் கொண்டிருக்கிறார்.

“கடந்த காலத்தைப் போல இந் நாட்டில் பயங்கரமான, கசப்பான, துயரங்கள் நிறைந்த ஒரு நிலைமை ஏற்படக் கூடாதென்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழினி தனது போர் அனுபவங்கள் குறித்து, சுய விவரணத்தை எழுதியிருக்கிறார்.”

கருத்து தெரிவித்தவர்கள்

வாசகி பாக்யா முதலிகே, இக் கருத்தையே விரிவாக ஆராய்கிறார்.
“பெரும்பான்மையான நாம், ஒருபோதும் நேரில் கண்டிராத யுத்தம் குறித்து கேள்விப்பட்டிருப்பதைப் போலவே, அதைப் பற்றிய எமது தரப்பினரது வாழ்க்கைக் குறிப்புக்கள் பலவற்றையும் வாசித்திருப்போம். எப்போதாவது நாங்கள் தமிழ் சகோதரர்களது வாழ்வனுபவங்களை வாசித்திருப்போமானால், அதுவும் கூட சிங்களவர்கள், தமிழர்களைப் பற்றி எழுதிய ஒன்றாகவே அது இருக்கும்.

தனது இனத்தில், தனது மக்களே செத்துச் செத்து வீழ்ந்து கொண்டிருக்கும்போது தோன்றக் கூடிய அதிர்வில், பயனற்ற யுத்தத்தில் போராளியாக, பதினெட்டு வயதில் தமிழினி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைகிறார். அன்றிலிருந்து இறுதி யுத்தம் வரைக்கும் இயக்கத்தில் இணைந்திருந்த தமிழினி செலவழித்த காலம் தொடர்பான அநேகமான விபரங்கள் இத் தொகுப்பில் உள்ளன.

தமிழினி, யுத்தத்துக்காக தனது ஆசாபாசங்களைத் துறந்தது போலவே, ஏனைய தமிழ் சகோதர, சகோதரிகளும் பிரபாகரன் எனும் தமது தலைவன் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்தையும் துறந்து இயக்கத்தில் இணைந்துள்ளனர். எனினும் இறுதி யுத்தத்தில் போராளிகள் உண்மையை உணர்ந்து கொள்வது, இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் அவர் சந்திக்கும் சிங்களத் தாய்மார்கள் ஆகியன அவருக்குள் அழகான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.

‘சிங்களவர்களாகிய உங்களைப் போலவே தமிழர்களாகிய எங்களுக்கும், எமது இனத்தைக் குறித்து ஈடுபாடு இருக்கிறது. அந்த ஈடுபாட்டால்தான் நாம் போரிட்டோம்’ என தமிழினி எமக்கு ஏதோ கூறவிழைகிறார்.

இத் தொகுப்பு, சிங்களவர்களாகிய நாம் எல்லோருமே படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒரு பயனுமற்ற, இன வாத யுத்தத்தினால் நாம் எல்லோருமே எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போது உணர்கிறோம். நேசித்த இளைஞன், யுவதி, நேசத்தைக் கூறி விட முடியாமல் போன நபர், தந்தை, தாய், குழந்தைகள், கல்வி, பொருளாதாரம் போன்ற அனைத்தையுமே ஒரு பயனுமற்ற இந்த யுத்தத்துக்காக இரு தரப்பினருமே இழந்திருக்கிறோம்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக, எமது தேசத்தில் இன வாதத்தைப் பரப்பிய அரசியல்வாதிகள் சுகமாக வீட்டுக்குள்ளிருக்க, அப்பாவி சிங்கள, தமிழ் இளைஞர், யுவதிகள் ஆயுதங்களைக் கையிலேந்தினர். இந்த உண்மையை இன்றும் கூட புரிந்து கொள்ளாத எம் மக்கள், இப்பொழுதும் கூட அந்த அரசியல் ஒப்பந்தங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழினியைப் போன்ற ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ் இளைஞர் சமுதாயம் அதற்காக நஷ்ட ஈட்டைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழினியின் இப் படைப்பை அனைவரும் வாசித்து உணர்வதை வரவேற்கிறேன்.”


இப் பெறுமதியான தொகுப்பை பதிப்பித்தமைக்கு பதிப்பாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு நன்றி கூறுகிறார் வாசகர் ஜயந்த கஹடபிடிய.

“நேற்று இரவும், இன்று மாலையும் தமிழினியின் தொகுப்புடனே கழிந்தது. புத்தகத்தை வாசிக்கும்போது எனக்கு அவரது மனசாட்சியைக் குறித்தோ, எழுத்து நேர்மையைக் குறித்தோ எந்தச் சிக்கலும் தோன்றவில்லை. ஊடகங்களினூடாக நாம் அறிந்திருந்த தமிழினிக்கும், இந்தத் தமிழினிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ள நீங்கள் இப் புத்தகத்தை வாசித்தே ஆக வேண்டும். அவர் தமிழச்சியோ, புலித் தலைவியோ, தீவிரவாதியோ அல்ல என்பதுவும், உங்களையும் என்னையும் போலவே இப் பூமியில் பிறந்து, இலங்கை வரலாற்றில் ஒரு வித துர்ப்பாக்கியமான, மனிதப் பேரவலமான யுத்தத்துக்கு இரையான ஒரு பெண் அவர் என்பதுவும் புலப்படும். மானிட வரலாறுகள் அவ்வாறான பேரவலங்களால் நிறைந்திருப்பது எவ்வளவு துரதிஷ்டமானது?

‘இத் தொகுப்பை பிரசுரிப்பது, நான் செய்த தவறொன்றெனக் கருதாதீர்’
நான் இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை அடக்கி வைத்திருந்த கண்ணீரானது, இப் புத்தகத்துக்கு அதன் பதிப்பாளரான தர்மசிறி பண்டாரநாயக்க வழங்கியிருந்த மேற்படி குறிப்பைக் கண்டதும், வெளியே குதித்தது.

புற்றுநோயால் அகால மரணமடைந்த தமிழினிக்கும், இலங்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பெறுமதி சேர்த்த பதிப்பாளரே உங்களுக்கும் நன்றி.”
பதிப்பாளரின் மேற்படி கூற்று குறித்து வாசகர் மதுரங்க ஃபெர்ணாண்டோவின் கருத்து இவ்வாறு இருக்கிறது.

“தொகுப்பின் இறுதியில் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் ‘இத் தொகுப்பை பிரசுரிப்பது, நான் செய்த தவறொன்றெனக் கருதாதீர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமானது, பால் குடத்தை எடுத்து அதில் சாணத் துளியொன்றைக் கலந்தது போலுள்ளது. அவர் அவ்வாறு எழுதியது சில அரசியல்வாதிகளுக்கோ அல்லது எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கருத்துக்களைப் பரிமாறும் எமது தேசத்தின் ஏனைய மக்களுக்கோ என அறியேன். ஆனால், இந்தப் புத்தகத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புக்கள், அவற்றைப் பகிரும் மக்கள் மீது எனக்குள்ளே பரிதாபமே தோன்றுகிறது. நிஜமாகவே நாம் அவர்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். ஏனெனில், அவர்கள் உண்மையிலேயே இப் புத்தகத்தை வாசித்திருந்தால், இதன் உள்ளடக்கத்திற்கு, ஒருபோதும் அவர்களால் எதிராக முடியாது என நான் உறுதியாக நம்புகிறேன். அவ்வாறே அந்த அப்பாவி மக்கள், இப் படைப்பை ஆராய்ந்து பார்த்திருந்தால், சந்தேகமேயில்லாது தமிழினியை நேசித்திருப்பார்கள். இதுவரை வாசிக்காதவர்கள், ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட முடியுமான இப் புத்தகத்தை எடுத்து வாசியுங்கள்.

கடந்த கால சிங்கள அரசியல்வாதிகளினது செயற்பாடுகளினால், தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதைத் தவிர வேறு மார்க்கம் இருக்கவில்லை என்பதையும், விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்த சில மோசமான தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளை, அநேகமான இயக்க உறுப்பினர்கள் விரும்பவில்லை எனினும் அவர்களுக்கு வேறு வழியற்றுப் போன விதத்தையும், அவர்கள் சிங்கள மொழியை அறிந்திராததாலும், நாம் தமிழ் மொழியை அறிந்திராததாலும், இனப் பிரச்சினை உக்கிரமடைந்ததையும் அவர் மிகச் சிறப்பான முறையில் முன் வைக்கிறார்.

இத் தொகுப்பானது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசாங்கத்தின் அனுசரணையோடு பதிப்பிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கொண்டு செல்லப்பட வேண்டுமென எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழினி இத் தொகுப்பை மிகவும் நடுநிலை மனப்பான்மையோடு, நேர்மையாக எழுதியிருக்கிறார். சர்வதேசத்திடம் முன்வைக்க வேண்டிய அனைத்து பதில்கள் மற்றும் உண்மையான இனப் பிரச்சினை குறித்து அவர் சிறந்த வாசிப்பொன்றை இங்கு முன் வைத்திருக்கிறார்.”

“இந்தத் தொகுப்பை வாசித்தேன். தமிழினி மீது எனக்கு மிகுந்த அனுதாபம் தோன்றியது. போரின் மீது நம்பிக்கை கொண்டு, அதை நடத்திச் சென்ற போதும், இறுதியில் தனது தவறை உணர்ந்து சுய விமர்சனம் செய்ய அவருக்கு சக்தியிருந்திருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர், சமூகத்தோடு இணைந்து, திருமணமாகி, தொடர்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டு செல்லும் வாய்ப்பு, துரதிர்ஷ்டமாக அவரிடமிருந்து நழுவியது. வாழ்வின் இறுதித் தருணங்களில் தனது இதயத்திலிருந்த வன்மத்தை அகற்றி, சமாதானத்தின் பாதையில் உண்மையாகவே அவர் நெருக்கமாகியிருக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது” என்கிறார்  வைத்தியர் சந்திம பிரதீப்.

“தமிழினியின் இத் தொகுப்பை வாசித்தேன். வாசித்து முடித்த பிறகு மனதில் மிகுந்த அனுதாபம் தோன்றியது. தனது வாழ்க்கையின் சிறந்த காலங்களை தான் கொண்டிருந்த கொள்கைகளுக்காகத் தியாகம் செய்து, அவை தனது கண் முன்பே சிதறிப்போவதைப் போலவே, இன விடுதலைக்காக முன்வந்தவர்கள், இனத்தின் அழிவுக்காக செயற்படுவதைக் கண்ட பொழுது, தனது இதயம் உணர்ந்த சுய பச்சாதாபத்தையும் தமிழினி தெளிவாக விவரித்திருக்கிறார். அவற்றைத் தாங்கிக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் மிகவும் அனுதாபமூட்டக் கூடியவை.

எவ்வாறாயினும் ஆகக் கடைநிலையிலுள்ள போராளிகள் கூட அவர்களது தலைவரை அபரிமிதமாக நம்புவதன் மூலம் அவர்களது அழிவை நெருங்கி விடுகிறார்கள். சிங்கள மக்களுக்கும் இது பொதுவானது. நாங்களும், எப்போதும் எமது அரசியல்வாதிகளை நம்பி எமது அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இரு சாராரும் ஒன்றுதான். அவர்களும் எமது தேசத்தின் ஒரு சமூகம்.

கடைநிலைப் போராளி மீது, புதுக் கோணத்தில் பார்க்க இத் தொகுப்பு எம்மைத் தூண்டுகிறது. தமிழினி இத் தொகுப்பில் எந்தப் பொய்யையும் எமக்குக் கூறவில்லை என்பதை ஆணித்தரமாக நம்ப முடிகிறது. ஏனெனில், அவர் இத் தொகுப்பை, புற்று நோயில் பாதிக்கப்பட்டு, மரணம் நெருங்க நெருங்க எழுதியிருக்கிறார். மரிக்கப் போகும் எவரும் ஒருபோதும் பொய் கூறுவதில்லை.

இதில் பதிப்பாளரின் கூற்றும் கவலையைத் தருகிறது. சிங்கள வாசகர்கள் இத் தொகுப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ளக் கூடுமென அவர் பயந்திருப்பார். எவ்விதம் இருந்தாலும், தமிழினி எமது தேசத்தைச் சேர்ந்த, எமது சகோதரியின் கதையை எழுதியிருக்கிறார். அதைப் புரிந்து கொள்வது உங்கள் கையிலேயே இருக்கிறது. இது, வாசித்து முடித்ததும் எனக்குத் தோன்றிய விதம்.

இத் தொகுப்பினால் கிடைக்கும் வருமானம், புற்று நோய் வைத்தியசாலைக்குச் செல்கிறது எனக் கூறப்பட்டிருப்பதால், புத்தகத்தை வாங்கியதில் பல மடங்கு சந்தோஷம். அனைவரையும் இத் தொகுப்பை வாசிக்கும்படி கூறுகிறேன். ஏனெனில், எமது கொள்கைகளுக்கு மாற்றமாக இருந்த போதிலும், இது நம்மவர் செய்த அளவிலாத் தியாகங்கள் குறித்த வரலாறு” என புதிய வாசகர்களையும் இப் புத்தகத்தை வாங்கி வாசிக்கும்படி தூண்டுகிறார் வாசகர் இரோஷன் ஸ்ரீ டயஸ்.

இவரது கருத்துக்கு வாசகி டயானா சமன்மலீ இவ்வாறு பதிலளிக்கிறார். 
“நானும் இத் தொகுப்பை வாங்கினேன். வாசித்தேன். உங்கள் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். அம் மக்களது வாழ்க்கையின் இளமைக் காலம் முழுவதும் இவ்வாறான கொள்கைகளுக்காகவே கரைந்து போயிருக்கிறது. தாம் செல்லும் வழி தவறானது என உணரும்போது அவர்களால் மீளத் திரும்ப முடியவில்லை. நீண்ட தூரம் பயணித்து விட்டார்கள். அநேகமான விடுதலைப் புலி போராளிகளது வாழ்க்கைச் சரிதம் இவ்வாறுதான் இருக்கக் கூடும். எல்லோருமே இத் தொகுப்பை வாசிக்க வேண்டும்.”

“தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வார்த்தைகளில் விவரிக்க இயலா பல எண்ணங்களால் இதயம் நிறைந்து போயிற்று. சிலருடைய கொள்கைகளுக்காக வேண்டி, அப்பாவி மக்கள் முகம் கொடுக்க நேர்ந்தவை குறித்து மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சி, இயக்கம் பலப்பட்ட விதம், யுத்தங்கள் நடந்த விதம், இறுதி யுத்தத்தில் அனேகமானவர்கள் உண்மையை உணர்ந்து கொண்ட விதம், இராணுவத்தின் நடவடிக்கைகள் போல பலவித விடயங்களை அறிந்து கொள்ள முடியுமான தொகுப்பு இது. மீண்டும் இவ்வாறான, துரதிஷ்டவசமான நிகழ்வுகளுக்கு, இத் தேசம் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் நேரக் கூடாது என்பதே எனது பிரார்த்தனை. அதற்கு அனைத்து இலங்கையரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது” என ஆணித்தரமாக தனது கருத்தை எடுத்துரைக்கிறார் வாசகி பூர்ணிமா சமரசேகர.

வாசகர் பாக்ய கந்தஉடவின் கருத்து வேறொரு கோணத்தில் அமைகிறது.
“விடுதலைப் புலிகள் இயக்கமானது, தோற்றுப் போனதன் பிறகு, தமிழினியின் வீழ்ச்சியும் தெளிவாகிறது. புற்று நோயோடு அது இன்னும் அதிகரித்திருக்கும். எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் இயக்கப் பெண் போராளிகள், மிகுந்த தியாகங்களைச் செய்திருப்பவர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், அது ஒரு விடுதலை இயக்கமல்ல. அதன் இலக்கு, ஒரு தனி நாடு. அடுத்ததாக ஒரு விடுதலை இயக்கம் ஒருபோதும், பொதுமக்களை இலக்காகக் கொண்டு, குண்டு வெடிக்கச் செய்வதில்லை. (உதாரணம் கோட்டை குண்டுத் தாக்குதல்). அது போலவே பிரபாகரனை கடவுளெனக் கருதி, இயக்கத்தைத் தீர்மானிப்பதுவும் பிழை”.
“நல்ல நோக்கத்தைக் கொண்டிருந்த மக்களும் கூட, போராட்டம் எனச் சொல்லிக் கொண்டு பிரபாகரன் எனும் ஏகாதிபத்தியவாதியிடம் சென்றிருக்கிறார்கள். போராட்டத்தின் வழிமுறைதான் பிழை. அதைப் பற்றி, பிரபாகரனின் சுயரூபம் குறித்து தமிழினி கூறியிருக்கிறார். இலங்கையில் வெளியாகியுள்ள மிகப் பெறுமதியான தொகுப்பு இது.

அம் மக்கள் இன்னும் கூட அவர்களது சுயாதீனத்தையே யாசிக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகள் குறித்து தெற்கிலிருப்பவர்கள் இன்னும் சிந்திக்க வேண்டும். பெரும்பான்மை மனப்பாங்கு இருக்கும்வரை, அவர்களுக்கு அவர்களது உரிமைகள்  கிடைக்கப் போவதில்லை. சிறுபான்மையாக இருப்பதால் அவர்கள் உணரும் மனப்பான்மைக்கு அரசியல் தீர்வொன்று வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பிரபாகரன்கள், தமிழினிகள் உதித்துக் கொண்டேயிருப்பார்கள். 
அவர்களுக்கு மிகவும் பொருத்தமான வழிமுறையை அமைத்துக் கொடுப்பது தெற்கிலுள்ள அரசியல்வாதிகளின் கடமை. தமிழர் கூட்டமைப்பானது, அம் மக்களின் பிரச்சினைகளை விற்று, கட்சியை நிலைநிறுத்திக் கொள்வதையே செய்து கொண்டிருக்கிறது. அப் பிரச்சினைகள் இல்லாத நாள் வந்தால், அந் நாளானது தமிழர் கூட்டமைப்பினதும் இறுதி நாள் என்பது அவர்களுக்குத் தெரியும்.” என்று வாசகர் பாக்ய கந்தஉடவுக்கு பதிலளிக்கிறார் வாசகர் ஜெயவர்தன.

“இந்தத் தொகுப்பை எல்லோரும் வாசிக்க வேண்டும். எமக்குத் தெரிந்திராத, நாம் நினைத்துக் கூடப் பார்த்திராத பல விடயங்களை இத் தொகுப்பிலிருந்து அறிந்து கொள்ள முடியும். எமது தேசம் இழந்த பெறுமதியான உயிர்களைக் குறித்து மிகுந்த கவலை தோன்றுகிறது” இது வாசகி உதேஷி மதுபாஷியின் கருத்து. 
தனது தாத்தாவிடமிருந்து தனக்குக் கிடைத்த மிகப் பெறுமதியான அன்பளிப்பு இந்தப் புத்தகம்தானென இளம் வாசகியான மாஷி விமலசூர்ய குறிப்பிடுகையில், ‘சமூகத்திற்கு ஒரு விலை மதிக்க முடியாத புத்தகம் இது’ எனக் கூறுகிறார்கள்  இளைஞர்கள் அஸித் கோசல மற்றும் நளின் கல்கந்த ஆரச்சி.

இந்த இளைஞர், யுவதிகளையெல்லாம் ஒன்றுபடுத்தியிருப்பது தமிழினி எழுதிய இப் புத்தகம். பொதுவாகவே சிங்கள சமூகத்தில் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒரு தியானத்துக்கு இணையாக கௌரவிக்கப்படுகிறது. புத்தகங்களை வாசிக்காத இளைஞர், யுவதிகளைக் காண்பது அரிது. அவற்றுக்காக நிறைய செலவழிக்கிறார்கள். புத்தக நிலையங்களில், பண வசதியற்ற மாணவர்களுக்கு புத்தக விற்பனை நிலையத்திலிருந்தே புத்தகங்களை வாசித்து விட்டுப் போக அனுமதியளிக்கிறார்கள். ஏப்ரல் மாதத்தில், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடிய பிறகு, செப்டம்பர் மாதம் வரவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களை வாங்குவதற்காக பணத்தை அப்போதிலிருந்தே சேமிக்கத் தொடங்குகிறார்கள். தமக்கு வாங்கத் தேவைப்படும் புத்தகங்களின் பட்டியலை எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் அநேகரது பட்டியல்களில் முதன்மையாக இருப்பது தமிழினியின் இப் புத்தகம்தான்.

தமிழினியின் இந்தத் தொகுப்பு, இலங்கையிலுள்ள அனைத்து சிங்கள புத்தக நிலையங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பர் மாத சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அதிகம் விற்கப்படவிருக்கும் புத்தகப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இவற்றுக்கும் மேலதிகமாக, இலங்கையில் விற்கப்படும் இத் தொகுப்பினால் இன்னுமொரு நன்மையும் விளைந்து கொண்டேயிருக்கிறது. அதை தமிழினி விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

அவரது சுயசரிதத் தொகுப்பின் சிங்கள மொழிப் பிரதிகளை விற்று வரும் வருமானத்தை முழுமையாக, இலங்கை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்குக் கொடுக்கும்படி கூறியிருக்கிறார் தமிழினி. அதன் பிரகாரம், அதுவரையில் அவரது தொகுப்பின் பிரதிகளை விற்றுக் கிடைத்த வருமானமான மூன்று இலட்சம் ரூபாய்களை ஆகஸ்ட் மாதம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக அளித்துள்ளார் அவரது கணவர் ஜெயக்குமாரன். மிகவும் வரவேற்கத்தக்கதொரு தீர்மானம் இது. 

எதிர்வரும் காலங்களில் இத் தொகுப்பு இலங்கையில் இன்னுமின்னும் விற்பனையாகும். அந்த வருமானமும் கூட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்கொடையாகச் சென்று கொண்டேயிருக்கும். ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என தமிழில் ஒரு பழமொழி உண்டு. தமிழினி எனும் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அவரது இந் நற்செயல்தான் நினைவுக்கு வருகிறது. நல்லெண்ணத்தோடு அவர் விதைத்துள்ள விதை, விருட்சமாகி என்றென்றும் வசந்தத்தைப் பொழியட்டும், எல்லோருக்குமாக !

mrishanshareef@gmail.com
...மேலும்

ஒரு கூர்வாளின் நிழலில் - மது


விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பெண் பொறுப்பாளராக இருந்த தமிழினி அவர்கள் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதற்கான காரணம் தொடக்கம் அரசியல் துறைக்கு முன்னர் தனது பணிகள், பின் போராட்ட அனுபவங்கள், 2009 பின்னரான சரணடைவு, புனர்வாழ்வு வரையான சம்பவங்கள் ஒரு வரலாறாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அரசியல் பற்றி எழுதுமளவுக்கு ஆழம் இல்லாவிட்டாலும் அவர் இந்த நூலில் எழுதியிருக்கும் சில சம்பவங்கள், சண்டைகள், இடப்பெயர்வுகள், இடங்கள் பல வீர மரணங்களின் பின்னரான வெற்றிகள், தோல்விகள், துன்பங்கள், துரோகங்கள் என சில என்னுடைய பாடசாலைக் காலத்தில் நடைபெற்றவையும் நாம் அனுபவித்தவையும் என்பதால் அது பற்றி நான் எழுத விரும்புவது பரந்தளவில் இல்லாது பெண்கள் பற்றியதாக ஓர் பார்வை. 

ஓர் ஆயுதப் பயிற்சி பெற்ற அரசியல் பெண் போராளியாக அண்ணளவாக 18 வருடங்கள் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி தமிழ் மக்கள், பெண்களின் விடுதலை குரலாயும் சமத்துவத்துக்கான ஒரு சவாலாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார் என்பதில் இல்லை என்பதற்கு ஒன்றுமில்லை. இவரைப் போன்ற ஆயிரமாயிரம் போராளிப் பெண்களும் இத்தகைய சவாலைச் சந்தித்தவர்கள். அரசியல் என்பதால் இவர் அதிகம் அறியப்பட்டார்.பரந்தனைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழினி அவர்கள் போராடத் தூண்டிய காரணங்களாக அழிவுகளும் ஆக்கிரமிப்புக்களும் என்கிறார் அநேகமான போராளிகளைப்போலவே.

சாதாரண நடுத்தர வர்க்க குடும்பப் பின்னணியைக் கொண்டு, நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்கு பொதுவான போராட்ட சூழ் நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னச் சூழ்ந்திருந்த சமூகத்தினதும் பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக் கருதினேன் என்கிறார். “பதற்றம் நிறைந்த பள்ளிப் பருவம்” எனும் தலைப்பின் கீழ் பாடசாலைக் கால காரணங்களையும் இந்திய இராணுவத்தினரின் அடாவடித்தனத்தை விபரிக்கையில் பாலியல் கொடுமைகள் யாழ்ப்பாணத்தில் நடந்ததாக பெரியவர்கள் கதைக்க கேட்டதாகவும் மட்டுமே புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

போராட்டத்தில் இணைந்து கொண்டதன் பின் தனக்கான பொறுப்புக்கள், கிராமிய மட்டத்திலும், பெண்கள் நன்னடத்தைப் பண்னைப் பொறுப்பாளர் என அரசியல் துறைக்கு முன் தனது பணிகள் பற்றிப் பேசும்போது , “சமூகத்தினால் மூடி மறைக்கப்படும் மனித வக்கிரங்களும் பெண்களை மட்டுமே குற்றவாளியாக்கும் எமது சமுக மனப்பாங்கும் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமுகத்தில் பெண்களின் பிரச்சனைகளை நான் ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு அந்தப் பெண்களின் கண்ணீர்க் கதைகள் ஆரம்பப் பாடங்களாக இருந்தன" என்கிறார்.

குமாரபுரம் முருகன் கோவிலில் பாவாடைத் தாவணியில் நடந்து போனபோது, இராசாத்தி மனசிலே என்ற பாடல் ஒலித்ததும் தன்னைப் பார்த்துத்தான் பாடுகிறார்களோ என்று கூச்சப்பட்டுப் போனேன்" இவ்வாறு எழுதியிருத்தல் போராளிப் பெண்களும் சாதாரண விருப்பு வெறுப்பு உணர்வுகளை உடைத்து, கடமை எனும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பதை “எனக்குத் தரப்பட்டிருந்த கடமைகளுக்கு அப்பால் தேவையற்ற உணர்ச்சிகள் என்னை ஆடகொள்ளாத வண்ணம் எனக்கு நானே சில வரையறைகளை ஏற்படுத்தி இருந்தேன்…” என்கிறார். 

1999 வன்னி யுத்தம் உக்கிரமடைந்த காலப் பகுதியில் பேச்சாளராகச் சென்ற போது பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்துக்களை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும் ஆயுதப் போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் அவை முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை. பெண் விடுதலை பற்றிய கருத்துக்களை மகளீர் தினங்களில் தலைவர் விபரித்திருக்கிறார், என்றும் கூறுகிறார். 

சமாதான காலம் எனும் 2003 இல் பெண்களின் சமாதான சந்திப்பு ஒன்று நடந்ததாகவும் தலைமைப் பேச்சாளராக மூத்த பெண்ணியவாதியும் சமூக ஆய்வாளருமாகிய கலாநிதி குமாரி ஜெயவர்த்தனவும், இந்த சந்திப்புக்கு அனுசரனையாளராக நோர்வே நாட்டின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமுக உளவியல் ஆய்வாளருமான திருமதி அஸ்ரிச் கெய்ப்பேர்க் அம்மையாரும் கலந்து கொண்டனர். “அரசியலுக்கு அப்பால் போரின் காரணமாகப் பெண்களைப் பாதிக்கும் விசயங்களில் ஒரே விதமான அபிப்ராயங்களை பல தரப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவம் வித்தியாசமாக இருந்தது”...என்று தனது அனுபவத்தைப் பகிர்வதில் தன் சார் தரப்பு பெண்களின் பிரச்சனைகளும் செவி சாய்க்கப்பட்டுள்ளது என ஒரு பெண்ணாக மன ஆறுதல் அடைகிறார்.

பெண் போராளிகள் நீதிபதிகளாகவும், சட்டவாளர்களாகவும் , நீதிச் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும், ஊடகப் பிரிவுகளான நிதர்சனம், புகைப்படப் பிரிவு, பத்திரிகை, வானொலி ஆகிய துறைகளில் செயற்படுவோராகவும் இருந்தனர். அத்தோடு பல பெண் போராளிகள் சிறந்த இலக்கிய கர்த்தாக்களாகவும், ஆயுதப் போராட்டத்துக்கு அப்பால் அரசியல், சமுகம் பற்றிய தளங்களில் பரந்த தேடல் உள்ளவர்களாகவும் இருந்தனர். என்பது அக்காலத்தில் பெண்களின் ஆளுமை மிகுவாகவும் தனித்துவமானதாகவும் இருந்ததற்கான ஆதாரங்களாகக் கொள்ளலாம். 

இவ்வாறாக பல துறைகளில் வளர்ச்சி பெற்று இருந்தவர்கள், அனைத்துமாய் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து சரணடைந்து வந்தபின் சமுகத்தில் அவர்களது பார்வை பற்றி புத்தகத்தில் சொல்லுவது மனதை நெருடச்செய்கிறது. “பெண்கள் போராடப் போனது தவறல்ல அவர்கள் மீண்டு வந்ததுதான் தவறு”. ஏனெனில் முன்னாள் போராளிகள் சந்திக்கும் சமுகப் பார்வை பற்றிய தனது வருத்தத்தை ஒரு பெண்ணாய் வாழ்வதன் துன்பம் போராடப் போன பெண் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு சமுகத்தில் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டம் பற்றி தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் வலி மிகுந்த வரிகளாக அமைகிறது. மரணங்கள் பற்றி எழுதும் போதெல்லாம் மனம் வலித்தது…..என்பது அனுபவத்தின் வலிகள் போன்றிருந்தது. 

2009 க்கு முன்னும் பின்னரும் அல்லது அந்தக் காலத்தில் இராணுவத்தினரின் கொடுமைகள், பாலியல் வல்லுறவு பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. இசைப் பிரியாவை இராணுவத்தினர் இழுத்துச் செல்வதை சனல் 4 தொலைக் காட்சியினால் செய்திகளிலும் ஊடகங்களிலும் காட்டப்பட்டது. இப்படி ஆவனப்படுத்தப்பட பெண்களுக்கான துன்புறுத்தல்கள் பற்றி எதுவும் பேசப்படவில்லை. 

பெண்களின்  தலைமையாய் இயக்கத்தின் ஒரு அங்கமான அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர், பல இடங்களில் எமது இயக்கம் என்ற சொல்லைக் கூட பாவிக்கவில்லை. அதிலிருந்து விலகி வேறொருவர் எழுதுவதுபோல் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தது. "அனுபவங்கள் வலிகளேயானாலும் அங்கத்துவத்துக்குள் அது பாதுகாக்கப்படாது போகலாமா...." எதுவாயினும் தமிழீழ போராட்ட வரலாற்றில் பெண் விடுதலைக்காகவும், சமுக முன்னேற்றத்துக்காகவும் தன்னுடைய வாழ்நாளின் அதிக காலத்தில் உழைத்த இவர், உலக சாதனைப் பெண்கள் வரிசையில் உள்வாங்கப் படுவதற்குரியவர். 

mullaimathana@gmail.com


...மேலும்

அல்குர் ஆனை ஆணாதிக்க சந்தர்ப்பவாதத்துக்காக திரிப்பது தான் தவறு - பாத்திமா மாஜீதா


பெண்ணியத்தின் பன்மைத்தன்மை குறித்த உரையாடல்களில் மதம்சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும் தவிர்க்க முடியாதவை. இந்த எல்லைப் பரப்பில் இஸ்லாம் தொடர்பான கருத்துக்களும் நடைமுறைகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. இஸ்லாமிய சமயப் பரவலாக்கத்திற்கு முந்தைய சமூகத்தில் நிலைபெற்றிருந்த பெண்ணடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளும் ஆண்களுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் வழங்குவதற்கான முன்னெடுப்புகளும்  முன்வைக்கப்பட்டதை இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. இருந்தபோதிலும் காலப்போக்கில் இஸ்லாமிய ஷரீஆ சட்டமானது ஆண்களின் நலன் சார்ந்து வளைக்கப்பட்டுள்ளமை தெளிவாக புலப்படத்தொடங்கியுள்ளது.

இந்தப்பின்னணியில் பெண்ணியம் தொடர்பில் இஸ்லாமிய வரலாறு ,ஷரீஆ சட்ட ஏற்பாடுகள் அவை எவ்வாறு உருத்திரிக்கப்பட்டன போன்ற விடயங்களை ஆராய்வதும் அறிவதும் மிகவும் அவசியமானதாகும். அத்தகைய உண்மைகளை அறிவதற்கான துணிச்சலும் தைரியமும் ஒரு சிலருக்கே கைக்கெட்டியுள்ளது. அந்தவகையில் அறிவதற்கான நிலையைக் கடந்து அறியப்படுத்துவதற்குமான துணிச்சல் மிக்க ஆளுமையாக ஹெச்.ஜி. ரசூல் தனது இஸ்லாமிய பெண்ணியம் எனும் நூலினூடாக அத்தகைய இலக்கினை அடைந்துள்ளார்.

பலதார மணம், தலாக், ஜீவனாம்சம், சொத்துப்பங்கீடு, ஒழுக்கவிதிகள், தர்கா கலாச்சாரம் போன்றவற்றினூடாக பெண்கள் பாதிப்புக்குள்ளாகின்ற சம்பவங்களை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸினூடாக ஒப்பிட்டும் ஆராய்ந்தும் விளக்கமளிக்கின்றார். பெண்களின் உரிமைகள் தொடர்பில் இஸ்லாமிய வரலாற்றின் உண்மைகள் பலவற்றினை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் .

ஹெச்.ஜி.ரசூலின் மைலாஞ்சி தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெண்ணுடல் அடக்குமுறை குறித்த முக்கியத்துவமான கவிதை

சுமையாக்களின் பெண்ணுறுப்பில் அம்பெய்து கொல்லும் அபூஜஹில்கள்

படுக்கைகள் தோறும் என்ற கவிதையாகும்.

இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி 

என்பது அவரின் மற்றுமொரு கவிதை. இக்கவிதை முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் தனது துணிச்சலில் ஒரு வீதமும் குறையாத திறமும் பக்குவமான கையாள்கையும் இஸ்லாமிய பெண்ணியம் எனும் நூல் வழி அறியலாகிறது.

நெடுங்காலமாக ஆணாதிக்கச் சமூகம் பெண்ணுக்கென்று வடிவமைத்து வைக்கப்பட்ட ஒற்றைக்கட்டமைப்பிலிருந்து பெண்ணியச் சிந்தனை பன்மைத்துவ வாசிப்பாகவும் எழுத்தாகவும் உரிமை கோரலாகவும் போராட்ட நிலையிலும் விரிவடைகிறது.

இந்நிலையில் இஸ்லாம் கூறுகின்ற பாலியல் சமத்துவத்திற்கு ஆதாரமாக  வரும் அல்குர்ஆன் வசனங்களை நூலாசிரியர் ஆதாரமாக கூறுகின்றார். 

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் அத்தியாயம்  வசனம்)

சமத்துவக் கோட்பாட்டினை நோக்கி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குரிய பாதையை நூலாசிரியர் காட்டுகிறார்.

ஒவ்வொரு பெண்ணும் தான் செய்யும் நற்கருமங்களுக்குத்தக்கவே மதிப்பீடு செய்யப்படுகிறாளே தவிர அவளது கணவன் சார்ந்து அல்ல என்கின்ற சுயசார்புத்தன்மையை அல்குர்ஆன் விளக்குவதையும் எடுத்துரைக்கின்றார்.

ஆண்கள் அல்குர்ஆன் வசனங்களை தங்களது வசதிக்கேற்ப தேவையான ஒரு பகுதியை மட்டும் பிரித்தெடுத்து அவற்றினை தங்களது ஆதிக்க கருத்தியலுக்கேற்ப வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.எனவே அல்குர்ஆன் வசனங்களை அர்த்தப்படுத்தும் போது கீழ்வரும் இரு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று,

ஒவ்வொரு திருமறை வசனமும் இறங்கும்பொழுது நிலவிய சமூக கலாச்சார சூழலையும் வரலாற்று பின்னணியையும் பரிசீலிப்பது,

இதுவரை பேசப்படாத அர்த்தங்களையும் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு ஏற்றால்போல் பாதிக்கப்பட்டோரினை முன்னெடுத்துச்செல்லும் வகையிலும் அல்குர்ஆன் வசனங்களை அர்த்தப்படுத்துவது
என்ற மிகத் தேவையான குர்ஆனிய வாசிப்பு முறையைத் தெளிவுபடுத்துகிறார்.

அல்குர்ஆன் முன்வைக்கும் பலதாரமணம் தொடர்பான வசனங்கள் யுத்த காலச் சூழல்களை மையப்படுத்தியே முன்வைக்கப்பட்டன. பெற்றோரை இழந்த பாதிப்புக்குள்ளான அனாதைக்குழந்தைகள், கணவனை இழந்த விதவைகள், போர்களில் பிடிபட்டு கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண்கள் ஆகியோரை மையப்படுத்தியே உள்ளன. இஸ்லாமியர் வாழ்வின் அசாதாரணமான யுத்த சூழல் சார்ந்த இந்த அர்த்தத்தினை அமைதிக்கால சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மீது திணிப்பது சரியன்று என ஆசிரியர் சாடுகிறார்.

தலாக் என்பது மனைவியைக் கணவன் நினைத்த நேரத்தில் மணவிலக்கு செய்யும் மண முறிவு நிகழ்வாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட மணமுறிவு நிகழ்வுகளையும் விளக்கமாக இந்நூல் எடுத்துக்காட்டும் அதேநேரம் குடும்ப அமைப்பில் பிணக்குகளை தீர்க்கும் விதத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் முரண்களைத் தீர்க்க அல்குர்ஆன் கூறியுள்ள முன்னிலை நடவடிக்கைகளையும் விவரிக்கின்றது.தலாக்கைவிட தனக்கு கோபமூட்டக்கூடிய ஒன்றை அல்லாஹ் பூமியில் படைக்கவில்லை என்ற நபிமொழி இருந்தாலும் நடைமுறையில் வெறுப்பிற்குரிய ஒன்றாக இது கருதப்படவில்லை எனவும் நூலாசிரயர் குறிப்பிடுகின்றார்.

இஸ்லாம் பெண்ணின் சார்பில் முன் வைக்கும் குலா விடுவித்துக்கொள்ளுதல் முறையானது தலாக்கில் கணவன் மனைவியின் விருப்பமின்றியே இலகுவில் மணவிலக்கு பெறுவது போன்று மனைவி அவனை விலக்கமுடியாது. அதேநேரம் மனைவி மணவிலக்கு பெறுவதற்கு பல முறைமைகள் இருந்தாலும் கூட ஆண் சார்ந்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவதை இந்நூல் சுட்டிகாட்டுகின்றது. அதேபோன்று ஷரீஅத், ஜமாஅத் நீதிக்குழு அனைத்தும் ஆண் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில்  நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் தீவிர நிலையில் விவாதிப்பதன் அவசியம் குறித்தும் இந்நூல் வலியுறுத்தி நிற்கின்றது .

ஒழுக்க விதி தொடர்பில் அல்குர்ஆன் கூறும் பெண்கள் தங்களது பார்வைகளை தாழ்த்தியே இருக்க வேண்டும் என்ற வசனத்தினை பெண்கள் மீது மட்டும் திணித்துவிட்டு அதற்கு முந்திய வசனமான நபியே விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறும் அவர்கள் தங்களது பார்வைகளை கீழ் நோக்கியே வைக்கவும் தங்கள் கற்பையும் இரட்சித்துக்கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும் என்ற வரிகளை ஆண்கள் மறைக்கும் பொருட்டு எளிதில் கடந்து செல்லும் நிலையையும் இந்நூல் கூறுகின்றது.

அன்றைய அரபுப்பழங்குடி மக்களிடையே பெண்களுக்கு முட்டுக்கு மேலும் தொப்புளுக்கு கீழும் மட்டுமே  உடுப்பதற்கான உரிமை இருந்தது. மார்பை மறைக்க உரிமை இருக்கவில்லை. இந்நிலையில் இஸ்லாமிய பெண்களிக்கு ஆடையின் மூலமாக உடல் முழுவதுமாக மறைத்தல் என்பது நடத்தை சார்ந்த ஒழுக்க விதியாகவும் உரிமை சம்பந்தமான பிரச்சனையாகவும் உருவானதன்  பின்னணி குறித்தும் ஆசிரியர் பதிவு செய்கின்றார். இஸ்லாமிய உடை ஒரு அடையாளம் சார்ந்த விஷயமாகவும் பர்தா ஆடை முறை சவூதி அராபிய கலாச்சார உடையை முழுக்க முழுக்க தமிழ் நாட்டில் திணிப்பதைக் குறித்தும் இந்நூல் விளக்கமளிக்கின்றது.

குழந்தை பிறந்து ஏழாவது நாளில் கொடுக்கப்படும் தானம் அகீகா என அழைக்கப்படுகிறது. சமூக வழக்கப்படி ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் பலியிடப்படுகிறது. இவ்வாறு ஆண் பெண் பேதத்தை உருவாக்குவதாக விவாதிக்கும் இச்செயல்முறையானது ஆணுக்கும் பெண்ணுக்கும் தலா ஒவ்வொரு ஆடு கொடுப்பதையே இஸ்லாம் வலியுறுத்துவதாக ஹதீஸ் ஆதாரங்களுடன் ஆசிரியர் நிரூபிக்கின்றார். அதுமட்டுமன்றி ஆண் குழந்தை பெண் குழந்தை என பாரபட்சம் காட்டுபவர்களை நபி அவர்கள் தடுத்திருப்பதையும் அவ்வாறே பாரபட்சம் காட்டுபவர்கள் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் எனவும் கண்டித்ததையும் இங்கு ஆதாரமாக கூறுகின்றார்.

பெண்களின் மாதவிடாய் காலம் ஹைளு என்று அழைக்கப்படுகிறது. உடல் ரீதியான தீட்டுக்கோட்பாடு புனிதங்களின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ளமையை இங்கு நூலாசிரியர் விளக்கிக்கூறுகின்றார். தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் உள்ளது என்ற நபிமொழி தீட்டுக்கோட்பாட்டுக்கு முரணாகவுள்ளதையும் அதேநேரம் ஆயிஷா நாயகியின் மாதவிடாய் பொழுதில் மடியில் நபிகள் நாயகம் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதியதையும் சுட்டுகின்றார்.

இஸ்லாமிய குற்றவியல் சட்ட நடைமுறைப்படுத்தலில் ரஜம் எனும் கல்லெறி தண்டனை முறை மனித உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளதுடன் முஸ்லிம் பெண்ணியல்வாதிகளின் கடும் எதிர்ப்பலைகளுக்கும் உள்ளாகியுள்ளது. விபச்சாரம் செய்த பெண் விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள் என்ற அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களின் மூலம் இரண்டாக பகுக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முதலே முறை தவறிய பாலியல் உறவிற்கு நூறு கசையடிகளும் திருமணத்திற்கு பிந்திய முறை தவறிய பாலியல் உறவிற்கு கல்லெறிதல் தண்டனையும் வழங்கப்படுவதாக ஆசிரியர் விளக்கமளிக்கின்றார். ஆண்,பெண் இருபாலாருக்கும் பொதுவான தண்டனையாக கூறப்பட்டாலும் இக்குற்றச்சாட்டை உருவாக்குபவர்களும் தண்டனை வழங்குபவர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதுடன் இக்குற்றச்சாட்டுக்களுக்கு பெரும்பாலும் பெண்களே தண்டனை பெறுபவர்களாக இருப்பதனை நூலாசிரியர் விளக்குகிறார்.

சொத்து பங்கீட்டினை பொறுத்தவரையில் வாரிசுரிமை சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் அளிக்கவேண்டும் என்ற அல்குர்ஆன் வசனத்தில் உள்ளார்ந்த அர்த்தம் ஒன்றாகவும் அதன் மேலோட்டமான வடிவம் பிறிதொன்றாகவும் இருப்பதனை ஆண் பலவீனமானவனா, பெண் பலவீனமானவளா என்ற அபூஹனீபாவின் கேள்விக்கு இமாம் ஜப்பார் விடையளிப்பதை விளக்குவதன்மூலம் இன்றைய சூழலில் அதிகாரத்தின் அடக்குமுறையால் பெண்களே பலவீனமாக உள்ளதால் சொத்துப் பங்கீடு அதிகளவில் பெண்களுக்கே வழங்கப்படவேண்டும் என ஆசிரியர் வாதிடுகிறார்.

தமிழ் நாட்டில் சில பள்ளிவாசல்களில் ஆண்களுடன் இணைந்து தொழுகை நடத்துவதற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருக்கும் பொழுது இறைவனின் வேதத்தினை நன்றாக ஓதக்கூடியவர் இமாமாக நின்று தொழுகை நடத்த முடியும் என்ற ஆயிஷா நாயகியின் அறிவிப்பையும் நபிகள் நாயகத்தின் காலப்பகுதியில் அவரை இமாமாகக் கொண்டு ஆண்களும் பெண்களும் தொழுகை நடத்தியமையையும் கூறுகின்றார்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிகழ்ந்த குஜராத் சம்பவத்தினை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறையில் கெளஸர் பானு என்னும் ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றில் சூலாயுதம் பாய்ச்சி குழந்தையை வெளியேற்றிக்கொன்று தீயில் எரித்த ஒரே சிறுமியை பல வெறியர்கள் சேர்ந்து கூட்டு வன்புணர்ச்சி செய்த நிகழ்வுகள், அமெரிக்கமயமாக்கப்பட்ட உலக முதலாளித்துவத்தின் கோரத்தாக்குதலால் முஸ்லீம் பெண்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்படும் நிலைமைகள், சேர்பிய இராணுவத்தினரால் போஸ்னியாவில் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு சுமந்த கருக்களை வறுமையின் காரணமாக கருவிலுள்ள குழந்தைகளை அளிக்காதீர்கள் என்னும் அல்குர்ஆன் வசனத்தினை சுட்டிக்காட்டி அக்கருவினை அழிக்கக்கூடாது என தீர்ப்பளித்த அரேபிய உலமாக்கள் போன்ற சம்பவங்களை தனது நூலினூடாக ஹெச்.ஜி. ரசூல் கண்டிக்கின்றார். இவ்வாறு முஸ்லீம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அகமும் புறமும் சார்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளதாகவும் இத்தகைய வன்முறைகளைப் புறவெளியில் முறியடிக்கவேண்டிய அதேவேளை இஸ்லாத்தின் உள்கட்டுமானத்தில் நிகழ வேண்டிய பெண்ணிய விடுதலைக்கான சுதந்தித்தினை வலியுறுத்தவேண்டியுள்ளதாகவும்  பதிகின்றார்.

இஸ்லாமிய சமயக் கட்டாயம் என்ற போர்வையில் பெண் மீது தொடுக்கப்படும் முஸ்லீம் பெண்கள் மீதான வன்முறைகளின் பல்வேறு வடிவங்களை ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய பெண்ணியம் வெளிக்கொண்டுவந்துள்ளது.  முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று அண்மைக்காலமாக இலங்கையில் துரிதப்படும் போராட்டங்கள், இந்தியாவில் நிகழும் முத்தலாக் தொடர்பான விவாதங்கள் ஆகியவற்றின் பரபரப்பில் வாசிக்கப்படும்போது  ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய பெண்ணியம் என்ற நூல் நம்மைத் தானாக அதனுள் இழுத்துச் செல்கிறது. ஊன்றி படிக்க வேண்டிய அவசியத்தினையும் உணர்த்துகிறது.

இஸ்லாம் உருவாகிய காலப்பகுதியில் அது அறிவுறுத்திய பெண்ணுரிமை, சுதந்திரம் போன்றவற்றின் உண்மைப்பொருளிலிருந்து வெகுதூரம் நகர்ந்து விட்டமை தெளிவான ஒரு கணிப்பீடாகும். இதற்கு காரணமான ஆணாதிக்கத்தனம் தங்களது தேவைக்கேற்றாற்போல் அல்குர்ஆன் வசனங்களை தங்களுக்கு சார்பாக பயன்படுத்துகின்றமை, இஸ்லாமிய சட்டங்களை திரிபுபடுத்துகின்றமை போன்றவற்றிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும். அப்படியாயின் அல்குர்ஆன் ,ஹதீஸ் போன்றவற்றினூடான பெண்ணிய வாசிப்பு காலத்தின் தேவையாகும். அத்தகைய பாதையை ஹெச்.ஜி.ரசூல் தனது இஸ்லாமிய பெண்ணியம் என்ற நூல் வழி நெறிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது.
...மேலும்

Jan 22, 2017

கோரம் நிறைந்தது நந்தினியின் படுகொலை


பொன்னருவி படுகொலையை போலவே கோரம் நிறைந்தது நந்தினியின் மரணம்.

டெல்லி பெண் நிர்பயாவுக்கு நடந்த அநீதிக்கு சற்றும் குறைவில்லாத கொடுமை நந்தினிக்கு நடந்தது..

கருவறுக்கப்பட்ட குஜராத் இஸ்லாமிய சகோதரிக்கு நடந்ததற்கு இணையான கொடூரம்தான் நந்தினிக்கு நடந்தது..

வன்கொடுமை, வன்புணர்ச்சி, ஒடுக்குமுறை போன்றவற்றை கண்டிப்பதில் எந்த சமரசமும் செய்துக்கொள்ளாத சாதியை கடந்த சிந்தனையாளன் என்ற அருகதை உள்ளவனாக இதை எழுதுகிறேன்..

அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்- ராஜகிரி ஆகியோரின் மகள் நந்தினி (16). இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். குடும்பச் சூழல் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு செந்துரையில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நந்தினிக்கும் கீழமாளிகை வடக்கு தெருவில் வசிக்கும் ராமசாமியின் மகனும் இந்து முன்னணியின் ஒன்றியச் செயலாளருமான மணிகண்டன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

செந்துரை பகுதியில் கடந்த ஆண்டு மணிகண்டன் கொத்தனார் வேலை செய்துவந்தபோதுதான் நந்தினிக்கும் மணிகண்டனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் நந்தினி கருவுற்றிருக்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி மணிகண்டனை வற்புறுத்தியுள்ளார்.

ஆனால், மணிகண்டனுடைய அட்டூழியங்கள் அந்த பகுதியில் பிரபலமானவை.

இந்து முன்னணி நிர்வாகியான இவன் பொது இடத்தில் வன்முறை செய்வதில் தொடங்கி அனைத்து வகையான அத்துமீறல்களையும் செய்யக்கூடியவன்.

பொதுக்கூடங்களில் புகுந்து கலவரம் செய்த வழக்கெல்லாம் இவன் மீது உண்டு.

இந்நிலையில் நந்தினியை உடல்தேவைக்காக மட்டுமே பயன்படுத்த நினைத்த இவன், கருத்தரித்ததை வைத்து திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய அவள் பிரச்சனையை அவனது பாணியிலேயே முடிக்க விரும்பினான்.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியன்று பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரை சந்தித்து பேசி ஆலோசனை செய்தபின்பே நந்தினியை இவன் நன்பர்களோடு சேர்ந்துப்படி கடத்திச் சென்றதாக நந்தினி தரப்பில் அனைவரும் உறுதியாக கூறுகின்றனர்.

கடத்தப்பட்ட நந்தினியை மறைவிடத்தில் அடைத்து வைத்த மணிகண்டன் அவனது நன்பர்களான கீழமாளிகை திருமுருகன் (த/பெ அறிவழகன்), அயன்தத்தனூர் வெற்றிச் செல்வன் (த/பெ சீனிவாசன் ), மணிவண்ணன் (த/பெ செல்வராஜ்) ஆகியோருடன் நால்வராக இணைந்து நான்கு நாட்கள் கூட்டு வன்புணர்ச்சி செய்துள்ளனர். அதன் பின்னர் நடந்தது கொடுமைகளின் உச்சம்.. நந்தினியின் பிறப்புறுப்பை பிளேடால் கிழித்து உள்ளே கையை நுழைத்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து, அதை நந்தினியின் துப்பட்டாவில் சுற்றி எரித்துள்ளனர்.

பின்னர் நிர்வாணமான நிலையிலேயே கொடுமை தாளாமல் இறந்துபோன நந்தினியின் உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் போட்டுள்ளனர்.

————————————————————-
புகாரை மாற்றச் சொன்ன காவல்துறை
————————————————————-

இந்நிலையில் தனது மகளை கீழமாளிகை மணிகண்டன் கடத்தி சென்றுள்ளார் என்று செந்துரை காவல் நிலையத்தில் டிச. 30 ஆம்தேதி அன்று ராஜகிரி புகார் கொடுத்துள்ளார். புகாரினை பெற்றுக் கொண்ட எஸ்.ஐ. ராஜேந்திரன், மணிகண்டனால் கடத்தப்பட்டதாக புகாரளித்தால் எடுத்து கொள்ளமுடியாது எனவும், நந்தினியை காணவில்லை என மாற்றி புகார் கொடுத்தால்தான் புகாரை ஏற்றுக்கொண்டு, உனது மகளை தேடி தருவோம் என்று கூறி புகாரை மாற்றிவாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்.

இதனால் நந்தினியின் உறவினர்கள் தினமும் காவல்நிலையத்திற்குச் சென்று நந்தினி கிடைத்துவிட்டாளா என்று விசாரித்துள்ளனர்.
அதற்கு காவல்துறையினர் தாங்கள் தேடிக் கொண்டு இருப்பதாக தொடர்ர்து கூறியுள்ளனர்.

கடந்த ஜன.14 சனிக்கிழமையன்று கீழமாளிகை அருகே உள்ள ஒரு கிணற்றிலிருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பெயரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்றுபார்த்தபோது, அங்கே நிர்வாண நிலையில் அழுகிய பிணமாக நந்தினி கண்டெடுக்கப்பட்டாள். உடனே தீயணைப்புப் படையினர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்விற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு நந்தினியின் தாயார் வரவழைக்கப்பட்டு, இது நந்தினியின் உடல்தான் என அவரும் அடையாளம் காட்டியுள்ளார்.

——————————————————–
மறியல் போராட்டம்
——————————————————–

இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து மருத்துவமனை முன்பு கடந்த சனிக்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பதட்டமான சூழல் ஏற்பட்டதால் ஞாயிற்றுக் கிழமையன்றே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. ஆயினும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் குற்றவாளிகள் கைதை வலியுறுத்தி ஞாயிறன்றும் போராட்டம் தொடர்ந்தது. கைது செய்யாமல் உடலை வாங்கமாட்டோம் எனக் போராட்டக்குழுவினர் கூறிவிட்டனர்.

அதன்பின், அரியலூர் டி.எஸ்.பி. செந்துரை தாசில்தார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து நந்தினியை பலாத்காரம் செய்து கொலை செய்த மணிகண்டன், மணிவண்ணன், திருமுருகன், வெற்றிச்செல்வன் ஆகியோரை மட்டும் கைது செய்துள்ளனர்.

ஆயினும் இந்த கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்துமுன்னணியின் மாவட்டச் செயலாளர் ராஜசேகர் கைது செய்யப்படாததால் அவரை கைது செய்யக்கோரி அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாயன்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து கோட்டாட்சியர், அரியலூர் டிஎஸ்பி மற்றும் அரசு அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், நந்தினியின் கொலைக்கு காரணமான இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் ராஜசேகரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். நந்தினியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்பதான கோரிக்கைகளோடு போராட்டம் தொடர்ந்தது…

இந்த கொடூரச் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். காவல்துறையும் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

//இறுதியாக சமூகநீதிக்கான தொடர் குரலை எழுப்பும் என் மரியாதைக்குரிய தோழர்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

பொன்னருவி, சந்தியா, வசந்தா, கண்ணகி & முருகேசன், கோகுல்ராஜ், கோபாலகிருஷ்ணன், கல்பனா, இளவரசன் உட்பட சாதிவெறியின் பலியாடுகளின் நீண்ட பட்டியலை தொடர்ந்து இந்த ஆண்டு கணக்கை துவக்கியுள்ள சுரேஷ்குமார் மற்றும் நந்தினி ஆகிய ஒவ்வொரு மரணத்தின் போதும் நீங்கள் இந்த பொது சமூகத்தை நோக்கி இவன் வந்தானா, அவன் வந்தானா, மயிரான் வந்தானா மட்டையான் பேசினானா என திரும்ப திரும்ப நியாயம் கேட்கிறீர்கள்.

இந்த சாதிய சமூகத்திடம் சாதி வெறிக்காக நியாயம் கேட்பதை போல அநீதி எதுவும் இருக்கமுடியாது. இங்கு யாருக்கும் எதையும் சுட்டிக்காட்டி, யாருடைய மனசாட்சியையும் தட்டியெழுப்பி எதுவும் ஆகப்போவதில்லை. அப்படியான செயல்களை செய்து நந்தினிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். நமது போராட்டங்கள் என்பது சாதி இந்துக்களோடு நல்லுறவில் இருக்கிற அரசுக்கும், காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் எதிரானது. இந்த போராட்டத்தை தொடர்ந்து கருத்து தளங்களிலும், களத்திலும் செய்துக்கொண்டு இருப்பதுதான் நந்தினி உள்ளிட்டோருக்கு நாம் செய்யும் மரியாதையே தவிர, ஊர்த்தெருக்காரனின் உச்சு கொட்டுதலுக்கு ஏங்கி கிடப்பதல்ல..

அயர்ச்சியோடு…

– பேரறிவாளன்

...மேலும்

Jan 18, 2017

பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்!என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்….அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது.

வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாயன மாற்றங்களும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைப்பது மிகவும் கடினம்.

பல ஆண்கள், பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு பல ஆண்களும் தெரிவிக்கும் தன்னிச்சையான பதில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதுதானே’ என்பதாகத்தான் உள்ளது. ஆனால், சிலர் பெண்களின் மனரீதியான பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அந்த நாட்களில் உதவுவோரும் உண்டு.

இந்த நிலையில், ருமேனிய நாட்டின் கலைஞர் திமியா பால், தனது மாதவிடாயின் போது வெளியாகும் ரத்தத்தைக் கொண்டு ஒரு கரு ஓவியத்தை உருவாக்கியுள்ளார். 28 வயதாகும் இவர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் கிராபிக்ஸ் டிசைனர். அவர் 9 மாதங்களாக ஒரு பயிற்சி மேற்கொண்டு, அந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அதற்கு “தி டைரி ஆஃப் மை பீரியட்” (The Diary of my Period) என்று பெயரிட்டிருப்பதுடன், தனது ஓவியத்தின் மூலம் ஒரு முடிவிலிருந்து புதிய தொடக்கத்தை அவர் உருவாக்கி உள்ளார்.

தான் வரைந்திருக்கும் ஓவியம் பற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு துளி வைத்து செய்த சோதனை, வலியின் அழகை உணரச் செய்தது, மாதவிடாயின் மதிப்பை எனக்குத் தெளிவுபடுத்தியது, என்னுடைய மாத சுழற்சியால் ஒரு உயிரை பெற்றெடுக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஒரு விஷயத்தின் முடிவு வேறொரு விஷயத்துக்கு ஆரம்பமாக இருப்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது.

ஒரு பெண் எந்த மாதம் வேண்டுமானாலும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மாதவிடாயும், அதன் சுழற்சியும் ஒவ்வொரு மாதமும் சரியாகவே நடக்கிறது. கருத்தரிக்காத போது, கரு முட்டையானது மாதவிடாயாக வெளியேற்றப்படுகிறது.

அந்த வகையில், எனது ஓவியத்தில் 9 மாதங்களாக வெளியேற்றபட்ட எனது கருமுட்டையை வைத்து என்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். நான் படைத்த ஓவியமானது, ஒரு முடிவின் தொடக்கம் ஆகி உள்ளது. என்னுடைய கலைப் படைப்பின் பின்னணியில் ஒரு நோக்கம் உள்ளது, நான் வரைந்த ஓவியம் பேசவோ, மூச்சு விடவோ, பார்க்கவோ முடியாது. ஆனால், ஓவியத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் இதைப் பற்றி பேசவும், பார்க்கவும் முடியும். நிறம், மதம், இனம் பற்றி மறந்து இவற்றை ரசிப்பார்கள். ஒரு கரு முட்டை இறந்து, கலைப்படைப்பு பிறந்திருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ஓவியத்தை அவர் தொடங்கும் முன்பு மக்கள் மத்தியில் அவருக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது என்பது தெரியவில்லை. முதலில், தன்னுடைய படத்தையே ரத்தத்தை வைத்து ஓவியமாக அவர் வரைந்துள்ளார். பிறகு, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பாக்ஸாக வரைந்து, மொத்தம் 9 பாக்ஸாக கரு ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் அதிக எதிர்ப்புகள் வந்துள்ளன. எனினும், பின்னர் பலரும் ஓவியத்தைப் பாராட்டியுள்ளனர். மேலும், திமியா பால் தான் உருவாக்கிய ஓவியத்தை, உலகம் முழுவதும் இருக்கும் கலைக் கூடங்களில் பார்வைக்காக வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

மாதவிடாயைப் பற்றி பேசவே தயங்கும் மக்களுக்கு மத்தியில், மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கைக் கொண்டு, ஓவியமாக்கி உள்ள இவரது செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களின் உடலில் இருந்து கழிவாக சிறுநீர், மலம் வெளியேறுவது போன்று பெண்களின் மாதவிடாயும் உடலில் ஏற்படும் வழக்கமான சுழற்சி என்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.

அந்த சமயங்களில் முடிந்தவரை பெண்களுக்கு உதவ முயற்சியுங்கள். இதையே அந்த ஓவியமும் சொல்ல வருகிறது. அது பெண்களின் பிரச்னை என்று பேசத் தயங்கி நிற்காமல், அவர்களிடம் இதுகுறித்துப் பேசவும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்கவும் இந்த ஓவியம் ஒரு கருவியாக அமையட்டும்!

நன்றி - லங்காஸ்ரீ ...மேலும்

Jan 6, 2017

இனஅழிப்பு பின்புலத்தில் 'பாலுணர்வும்' நமது கண்ணோட்டமும்... - பரணி கிருஷ்ணரஜனி

நித்தியானந்தா பல பெண்களுடன் 'உல்லாசமாக' இருக்கும் படங்களை வைத்து பல ஆண்களின் 'அங்கலாய்ப்புக்களை' சமூக வலைத்தளங்களில் பார்க்க கூடியதாக இருக்கிறது. நானும் பகிடியாக ஒரு பின்னூட்டம் இட யோசித்தேன்.. ஆனாலும் இந்த பாலுணர்வு சமாச்சாரத்தை கொஞ்சம் சீpரியசாகவே எழுதுவோம் என்று இந்த பதிவு. இது முகநூலுக்கான பதிவு அல்ல. ஏனென்றால் இது குறித்து எனது 2000 பக்க சுயவரலாற்று நூலில் மிக ஆழமாக பதிவு செய்துள்ளேன்.

நான் பெண்களின் உளவியலை - குறிப்பாக அவர்களின் பாலியல் உளவியல் முரண்பாடுகளை ஆய்வு செய்து வருபவன். மே 18 இற்கு பிறகு இனஅழிப்பின் மையமாக பெண்கள் இருப்பதும் - அவர்கள் சந்திக்கும் பாலியல் உள் முரண்பாடுகளும், இது குறித்த சமூக கண்ணோட்டங்களும் எப்படி அவர்களை அழித்து இன அழிப்பின் மையமாக இருக்கிறது என்பதை ஒரு ஆய்வாகவே முன்வைத்தவன் மட்டுமல்ல அதிலிருந்து அவர்களை மீட்கும் பொறிமுறையை கடந்த ஏழு வருடங்களாக எள் வாழ்வு நெறியாக கொண்டவன் நான்.

பெண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் அதே சமயம் இனத்தின் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்ற ஒரு புதிய சிக்கலை எமது இனப் பெண்கள் சந்திக்கத் தொடங்கிய களம்தான் முள்ளிவாய்க்கால். இங்கு ஆலோசனை என்பதும் அது குறித்த உளவியல் ஆற்றுப்படுத்துகை என்பதும் கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பான விடயம். கொஞ்சம் சறுக்கினாலும் பன்முக பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டி வரும். என்னையே பலி பீடமாக்கித்தான் இந்த பணியில் இருந்தேன் - இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பலருக்கு இது தெரியும்.

கடந்த வருடம்; இந்த பணியில் ஒரு சிறிய அணுகுமுறைத் தவறு என் வாழ்வையே புரட்டிப் போட்டுவிட்டது. அது பணி சார்ந்த ஒன்று என்றால் சரியாகக் கையாண்டிருப்பேன். ஆனால் அதற்கும் அப்பால் எனது அதி நேசிப்புக்குரிய மனிதர்கள் என்ற போது கொஞ்சம் எமோசனலாகிச் சறுக்கி விட்டேன். ஆனாலும் அது ஒரு குறியீடாக மாறி பல சிந்தனை தளங்களை திறந்து வைத்து புதிய இனஅழிப்பு தியரிகளை கண்டடைய வழிகோலியிருக்கிறது. மே 18 அன்று முள்ளிவாய்க்காலை எமது பெண்கள் கடக்க தொடங்கிய நாளிலிருந்து அவர்கள் இந்த இனத்திற்கான பாவச் சிலுவையை சுமக்க தொடங்கி விட்டார்கள். எதிரியின் இலக்கும் அவர்கள்தான் - நமது இலக்கும் அவர்கள்தான்.

போராட்ட களத்தில் நின்று ஆளுமையுடனும் உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமுமாய் இருந்த அவர்களை நாம் மீண்டும் 'பெண்களாக' மாற்ற அல்லது அணுக வேண்டிய நிர்ப்பந்தம். கண்ணுக்குத் தெரியாத போர்க்களம் அது. அதை எனது ஆய்வு நூலில் பல பரிமாணங்களாக விரித்து எழுதியிருக்கிறேன். அதை இங்கு சுருக்கமாக விபரிப்பது கடினம். சுருக்கமாக விபரிப்பது மாறி அர்த்தம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. - தற்போது நான் எதிர் கொண்டுள்ள நெருக்கடியே இத்தகைய அர்த்த திரிபுதான். எனவே அந்த விபரீத விளையாட்டு வேண்டாம்.

விதவைகள், அரை விதவைகள், மாற்று திறனாளிகள் என்று எமது பெண்களின் நிலை இனஅழிப்பு பின்புலத்தில் பாலியல் முரண்பாடுகளை மையமாகக் கொண்டது. இதை மாற்றும் எமது முயற்சி பரிதாபகரமாக தோல்வியை தழுசிக் கொண்டிருக்கும் ஒரு சுய அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன். ஏற்கனவே திருமண தடை, மண முறிவுகள் என்று மே 18 இற்கு பிறகு எமக்கெதிரான ஒரு பண்பாட்டு போர்க்களம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு ஆரோக்கியமான சமூகமாக நாங்கள் இல்லை என்பதும் பிறப்பு வீதம் முற்றாக வீழ்சியடைந்து எமது கருவள வீதம் பாதிக்கப்பட்டு பாரிய இனஅழிப்பை நாம் சந்தித்துள்ளோம். எனவே பாலியல் கல்வி, மற்றும் பாலியல் ரீதியான எமது கண்ணோட்டம் இங்கு அதி தேவையாகிறது. பல அப்பாவி பெண்கள் சமூக கண்ணோட்டத்தில் பாலியல்ரீதியான முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டுப்படும் விபரீத சூழலை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

அனைத்து புரிதல்களும் உள்ள எம்மை போன்றோரே இத்தகைய சூழலை எதிர்கொள்வதில் அணுகுமுறைத் தவறுகளை விடுத்து விடுகிறோம். ஏனென்றால் நாமும் இந்த இனஅழிப்பின் பக்க விளைவுகள் தானே.. ஆண்களின் பார்வை இங்கு மாற்றப்பட வேண்டும். பெண்களும் தம்மை காலத்தின் தேவை கருதி தம்மை சுய பாதுகாப்புக்கு உட்படுத்த வேண்டும்.
பல கோணங்களில் பேச வேண்டிய பிரச்சிளை இது. எனது சுய வரலாற்றின் நூற்றுக்கணக்கான பக்கங்களில் இதைத்தான் எழுதி வைத்திருக்கிறேன்.
நீண்டு கொண்டு செல்வதால், சுருக்கமாக எனது நூலிலிருந்து பாலுணர்வு தொடர்பான ஒரு மேலோட்டமான ஒரு தத்துவ பார்வையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

நாம் பாலியல் எச்சங்கள்தான். பாலுணர்வு இல்லாமல் நாமில்லை - மனித இனமே இல்லை. உயிரினங்களின் தோற்றமூலமே இதுதான். மனிதனின் தோற்றம், வாழ்வு பற்றிப் பேசும் விஞ்ஞானங்கள் மட்டுமல்ல மதங்கள் வழி பரவிய புராணங்கள், ஐதீகங்களும் பாலியல் கதைகளைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. ஆதாம் - ஏவாள் கதையிலிருந்து சிவன் - சக்தி கதைகள் வரை மதம் கடந்து இது பரவிக்கிடக்கிறது. ஆனால் விசித்திரமாக இந்த மதங்கள் பாலுணர்வை ஒரு குற்றமாகவும் அதிலிருந்து மனிதர்களை மீட்பதாகவும் சொல்லிக்கொண்டு முரணாக தமது மதங்களினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை ஒரு கேளிக்கையாகவும் முன்வைக்கின்றன.

மதங்கள் மட்டுமல்ல அறத்தைபோதிக்கும், பண்பாட்டை ஆராதிக்கும் நிறுவனங்களும் அவை சார்ந்த தனிமனிதர்களும் ஏன் அறிவுலகங்கள் கூட பாலுணர்வை ஆராய்வதில்லை. மாறாக பாலுணர்வு சார்ந்து உருவாகும் புதிரை இறுக்குவதிலும் பூடகப்படுத்துவதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதிலுமே தமது செயற்பாட்டை வரையறுத்துள்ளார்கள். இந்த வகையைச் சாராமல் பாலுணர்வை ஆராயமுடியும் என்பதையும் இதனூடாக மனித வாழ்விற்கு ஒரு அர்த்தத்தை கற்பிக்கமுடியும் என்பதையுமே சில தத்துவவாதிகள் வலியுறுத்துகின்றனர். அதன் வழி சில தத்துவங்களையும் உருவாக்கியுள்ளனர். அத்தகைய ஒன்றுதான் சிக்மண்ட் பிராய்டின் உளப்பகுப்பாய்வுத் தத்துவம்

உளப்பகுப்பாய்வுத்தத்துவம் மனித மனத்தின் ஆழத்திற்குள் இருந்து தோண்டியெடுக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல. உணர்ச்சிகள் ஆசைகளாக அடிமனத்திலிருந்து வெளியேற விழைவதும் அவை நனவு மனத்தில் மறுக்கப்படுவதும், மறுக்கப்பபட்ட ஆசைகள் முகமூடிகள் அணிந்து, வேடங்கள் பூண்டு வேறு வழிகளில் வெளிப்பாடு காண விழைவதும், அதனால் எழும் நெருக்குவாரங்களும், முரண்பாடுகளும் உளச்சிக்கல்களாகவும் , மனக்கோளாறுகளாகவும், ஆளுமைச்சிதைவுகளாகவும் விபரீதத் தோற்றம் கொள்வதாகவும் உளப்பகுப்பாய்வின் நீட்சியை நாம் விபரிக்க முடியும்.

அனரன் பாலசிங்கம் தனது விடுதலை நூலில், ஆழ்மனத்தில் முடங்கிக் கிடக்கும் ஆசைகள் கனவுலகத்தை சிருஸ்டித்து வெளிப்பாடு காண விளைவது போல், நனவு மனமும் விழிப்பு நிலையில், கற்பனா உலகில் பிரவேசிக்கிறது. கற்பனை வடிவில் மனிதன் விழித்துக்கொண்டு காணும் கனவுகள் புராணங்களாகக், காவியங்களாக, இலக்கியங்களாக கலைவடிவம் பெறுவதாகவும், மனிதனின் அடக்கப்பட்ட பாலுணர்வு ஆசைகள் இன்பநுகர்ச்சி என்ற அதன் இயல்பான இலக்கிலிருந்து விடுபட்டு, கலாசிருஸ்டிப்பு என்ற உன்னத வெளிப்பாடாக உயர் நிலைமாற்றம் (Sublimation) பெறுவதாகவும் விபரிக்கிறார். ஆதாம்-ஏவாள், சிவன்-சக்தி கதைகள் இ;ப்படித்தான் உருவாகியது போலும்.

எனது சுயவரலாற்று நூலில் இந்த Sublimation குறித்து எழுதியிருக்கிறேன் என்பதை விட பிரித்து மேய்ந்து வைத்திருக்கிறேன் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். அது குறித்து இங்கு தொடர்ந்து எழுதுவது சங்கடத்தைத் தரலாம் என்ற வகையில் தவிர்த்துக்கொள்கிறேன். ஏனெனில் ஈழத்தமிழ் வாசகப்பரப்பிற்கு அந்த எழுத்துக்கள் பீதியையும் கிலியையும் ஏற்படுத்தக்கூடியவை பாலியல்உளவியல், பாலியல் நடத்தைகள், பாலியல் விதிகள், பாலியல் உந்துதல்கள், பாலியல் உள்ளீடுகள், பாலியல் வடிவமாறுபாடுகள், பாலியல் பதிலீடுகள் குறித்து தர்க்கமான ஆய்வு முறைமை ஒன்றையே நான் என் நூலில் முயன்று பார்த்துள்ளேன். ஏனெனில் ஈழத்தமிழ்ச் சூழலில் பாலியல் அளவிற்கதிகமாகவே பூடகப்படுத்தப்பட்டுள்ளதும் அதே சமயம் குற்றங்களின் மூலமாய் அது இருக்கின்றதென்பதனாலும் இந்த ஆய்வை செய்துள்ளேன்.

தற்போது தாயகத்தில் இனஅழிப்பு நோக்கில் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நடக்கம் பாலியல் குற்றங்களை நாம் எல்லோரும் அறிவோம். பெண்ணுடலை வெறுத்த பட்டினத்தாரிலிருந்து பெண்ணுடலைப் போகப்பொருளாக்கிய மார்க்கே து சாட் வரை இதை நீட்டியுள்ளேன். ஏனெனில் எல்லாமே பாலுணர்வை ஆணாதிக்கப் பரப்பில் வைத்தே விளங்கப்படுத்த முற்படுகின்றன. ஆனால் பெண்ணியம் சாhந்து பெண்ணுடல் சார்ந்து ஒரு பார்வையை நான் பதிவு செய்திருக்கிறேன்.

ஈழத்தமிழ்ச்சூழலுக்கு எந்த வகையிலும் பொருந்தாத மனிதராக marquis de sade இருந்தபோதிலும் நான் அவரை என்நூலில் ஆய்வு செய்திருப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று இயற்கை - மனிதன்- அறம் (Nature- Human -Ethics) என்னும் தத்துவ உரையாடலில் மிக முக்கியமான பங்களிப்பை இவர் செய்துள்ளதாக நான் கருதுவதால். இரண்டு ஒரு தத்துவத்தை (தத்துவம் என்றில்லை எதுவுமே..) முழுமையாக ஆராயாமல் அதை நிராகரிப்பதென்பதுடன் நான் என்றுமே முரண்படுகிறபடியால்.

(பெண்:களை மையப்படுத்திய - இனஅழிப்பின் மையமாகவுள்ள எமது பெண்களின் பாலுணர்வு மற்றும் அவர்கள் மீதான சமூக பாலியல் கண்ணோட்ம் குறித்த ஒரு பார்வையை பதிவு செய்து இனஅழிப்பு பின்புலத்தில் அதை நாம் மீளாய்வு மற்றும் மாற்றத்திற்குட்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவை எழுத புகுந்தேன். ஆனால் சுருக்கமாக எழுத முடியவி;ல்லை. அதனால் இத்தோடு நிறுத்துகிறேன். )

முகநூல் பதிவிலிருந்து
...மேலும்

Jan 5, 2017

மொழியின் பெயர் பெண்: வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா - வாழ்வை வெற்றிகொண்ட கவிதை!
இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறவர் போலந்து கவிஞர் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா (Wisława Szymborska). போலந்து நாட்டின் பினின் என்ற சிறு நகரத்தில் 1923-ல் பிறந்தவர் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா. இவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிறந்த யாருமே உலகப் போர்களால் பாதிக்கப்படாமல் இருந்திருக்க மாட்டார்கள். அதிலும் இரண்டாம் உலகப் போரால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வர்கள் போலந் துக்காரர்கள். வரலாற்றின் கொடுமையான இன அழிப்புகள் அங்கே நாஜிக்களால் நிகழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது போலந்தில் ரகசியமாகத்தான் படித்தார் ஷிம்போர்ஸ்கா. பிறகு, ரயில்வே ஊழியராக வேலைபார்த்தார். நாஜிப் படையினரிடம் அகப்படாமல் எப்படியோ தப்பித்தார். அகப்பட்டிருந்தால் ஜெர்மனியின் சித்ரவதை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பார்.

தன் கண்முன்னே நிகழ்ந்த மனிதப் பேரவலங்கள் அவரை ஒரு கவிஞராக மாற்றின. “நான் எழுதத் தொடங்கியபோது மனிதர்களை மிகவும் நேசித்தேன். மனித குலத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், மனித குலத்தைக் காப்பாற்றுவது கடினம் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு விரக்தியை அவருக்கு அளித்திருக்கிறது என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி.

இரண்டாம் உலகப் போரிலிருந்து மீண்டாலும் அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலை அவரைப் போன்ற மனசாட்சியுள்ளவர்களை வேட்டையாடியது. 1957-ல் கம்யூனிஸத்தைத் துறந்தார். போலந்து நாட்டின் கொடுங்கோன்மை கம்யூனிஸ அரசை எதிர்த்துச் செயல்பட்ட இயக்கமொன்றில் தன்னை இணைத்துக் கொண்டார். ராணுவ ஆட்சி நிலவிய எண்பதுகளில் புனைப்பெயரில் கவிதை எழுதிவந்தார். அரசியல் காரணங்களால் அவரது வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானாலும் அவரது பெரும்பாலான கவிதைகள் தனிப்பட்ட உணர்வு ரீதியிலானவை. மரணம் அவரது கவிதையின் முக்கியமான கருப்பொருள்.

தன் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 400 கவிதைகள் எழுதியிருந்தாலும் போலந்தில் ஷிம்போர்ஸ்கா மிகவும் பிரபலம். பிரபல நாவல்களுக்கு இணையாக ஷிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்புகள் விற்பனையாயின. 1996-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதிர்ச்சியில் கிட்டத்தட்ட முடங்கியே போனார் ஷிம்போர்ஸ்கா. கவிதை எழுதுவதற்குப் பல காலம் பிடித்தது.

கவிஞர் ஆடம் வ்லோடெக்குடனான திருமண வாழ்க்கை, விவாகரத்தில் போய் முடிந்தது. பிறகு, கோர்னெல் ஃபிலிப்போவிஷ் என்ற எழுத்தாளருடன் சேர்ந்து வாழ்ந்தார். குழந்தைகள் இல்லை. நோபல் பரிசால் உலகம் முழுவதும் ஷிம்போர்ஸ்காவின் பெயர் பரவியது. நுரையீரல் புற்றுநோயால் 2012-ல் தனது 88-வது வயதில் வீஸ்வாவா ஷிம்போர்ஸ்கா மரணமடைந்தார்.

(ஆங்கிலம் வழி தமிழில்: ஆசை)

ஒரு பூனைக்கு இதை நீ செய்யக்கூடாது

மரித்தல்- ஒரு பூனைக்கு அந்தக் கொடுமையை
இழைக்கக் கூடாது நீ.

யாருமில்லா வீட்டில்
தனியே என்னதான் செய்யும் ஒரு பூனை?
சுவர்களில் ஏறுமா?
அறைக்கலன்களை உரசிக்கொண்டிருக்குமா?

எதிலும் எவ்வித மாற்றமுமில்லை,
எனினும் எதுவுமே முன்பு போலில்லை.
ஏதும் அகற்றப்படவில்லை,
எனினும் முன்னிலும் அதிக இடம்.

விளக்கேதும் ஏற்றப்படவில்லை
இரவு நேரத்தில்.
படிக்கட்டுகளில் காலடி சப்தங்கள்,
ஆனால் அவையாவும் புதியவை.

சாப்பாட்டுத் தட்டில் மீனை வைக்கும் கைகூட
மாறியிருக்கிறது.

வழக்கமான நேரத்தில்
ஏதும் நடப்பதில்லை.
எவ்விதம் நிகழ வேண்டுமோ
அவ்விதம் நிகழவில்லை சில விஷயங்கள்.

ஒருவர் இருந்தார் இங்கே, எப்போதும் எப்போதும்.
சட்டென்று இல்லாமல் போனார் அவர்,
தவிர, இல்லாமலேயே இருந்துவிட்டார்
பிடிவாதமாக.

அருங்காட்சியகம்

தட்டுகள் உண்டு, பசிகொண்டோர்
யாருமில்லை.
திருமண மோதிரங்கள் உண்டு, 
திருப்பியளிப்பதற்கோ எந்தக் காதலும்
இல்லை
குறைந்தபட்சம் மூன்று நூற்றாண்டுகளாக.

விசிறியுண்டு - விசிறுபவளின் வெட்கக்
கன்னமெங்கே?
வாள்கள் உண்டு - ஆவேசம் எங்கே?
அந்திப்பொழுதில் தந்தியொலியும்
கேட்பதில்லை.

நித்தியத்துவம் கையிருப்பில்
இல்லையென்பதால்
அதற்குப் பதிலாக
பழங்காலப் பொருட்கள் பத்தாயிரம்
குவிக்கப்பட்டிருக்கின்றன இங்கே.

பாசி படர்ந்த ஒரு காவலாளி கண்ணாடிப்
பெட்டிக்குள்,
தொங்கும் மீசையுடன்
இனிய கனவுகளில் ஆழ்ந்திருக்கிறான்.

உலோகங்கள், மண்பாண்டங்கள், ஒரு
பறவையின் இறகு
காலத்தை வென்று அமைதியாக.

பண்டைய எகிப்தின் குண்டூசியொன்றின்
சிரிப்பொலி மட்டும்.

சிரசைவிட நீடித்திருக்கும் கிரீடம்.
கைகளை வெற்றிகொண்ட கையுறைகள்.

காலை வென்ற வலது பாதத்தின் காலணி.
நானோவெனில்…
நான் இன்னும் உயிரோடிருக்கிறேன், 
தயவுசெய்து என்னை நம்பு.
எனக்கும் என்னுடைய உடைக்குமான போட்டி
இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.
போராடுகிறது என் உடை, 
அந்த முட்டாள் வஸ்து, 
அவ்வளவு பிடிவாதமாக.
நான் போன பிறகும் என்னை உயிருடன்
வைத்திருக்க வேண்டுமென்ற
முனைப்பு அதற்கு!

நன்றி - தி இந்து 
...மேலும்

Jan 4, 2017

முகங்கள் 2016இந்தியாவின் பெருமை

2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்த பெருமை சாக்‌ஷி மாலிக்கையே சேரும்.

தன்னுடன் மோதியவரை யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்‌ஷி! ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான அடையாளங்களை ஏற்படுத்தியிருக்கிறார் சாக்‌ஷி.

கேள்விக்கு இதுதான் பதில்

டென்னிஸ் உலகத் தர வரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்ததோடு அதை 80 வாரங்களுக்கும் மேலாகத் தக்கவைத்திருக்கிறார் சானியா மிர்சா. இந்தியாவின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையான இவர் Ace against odds என்ற தலைப்பில் தன் சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். அது தொடர்பான பேட்டியின் போது குடும்பம், குழந்தை என “செட்டில் ஆவது” குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பது என்பது வாழ்க்கையில் செட்டில் ஆவது இல்லையா?” என்று தெளிவுடன் பதில் சொன்ன விதம் பலரையும் கவர்ந்தது.

புதிய அடையாளம்

இந்தியாவின் புதிய அடையாளமாகக் கொண்டாடப்பட்டவர் தீபா கர்மகார். இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் துறைக்குப் புத்துயிர் கொடுத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் பெண் என்ற சாதனை படைத்ததன் மூலம் திரிபுராவின் தங்க மகளாக இருந்த தீபா, இந்தியாவின் சாதனை மகளானார்.

வானமே எல்லை

2016 பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முதல் பெண் என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறார் தீபா மாலிக். அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகளால் மார்புக்குக் கீழே உடல் பாகங்கள் செயல்படாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு அவர் புரிந்த சாதனை, தீபா மாலிக்கை வெற்றிப் பெண்ணாக மிளிரச் செய்தது.

உலகைத் திருப்பிய வெற்றி

2016 ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார் பி.வி.சிந்து. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். இந்தியாவில் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவர்கள் என்று யாஹூ நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் கிரிக்கெட் வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் பி.வி. சிந்து.

தளராத போராட்டம்

தடகள வீராங்கனை சாந்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தன் மூன்று ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம் இது என சாந்தி குறிப்பிட்டுள்ளார். 2006-ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் சாந்தி. ஆனால் அதன் பிறகு நடந்த பாலினச் சோதனையின் முடிவால் சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொறுப்பு, பல இளம் வீரர்களை உருவாக்குவதற்கான களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

வசப்பட்ட வானம்!

திரைத் துறை பெண்களுக்கு ஆகிவராத துறை என்பதை உடைத்தெறிந்து, புதிய தடம் பதித்திருக்கிறார்கள் இயக்குநர் சுதா கொங்கராவும் பாடலாசிரியர் உமாதேவியும். பெண் இயக்குநர்கள் என்றாலே காதல் படங்கள் மட்டும்தான் கைவரும் என்ற பொதுவான நினைப்புக்குக் குத்துச் சண்டையை மையமாக வைத்து இயக்கிய ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் சுதா. உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆண்களே பாடல் எழுதிவந்த மரபை ‘மாய நதி இன்று மார்பில் வழியுதே’ பாடலின் மூலம் மாற்றியெழுதியினார் உமாதேவி. இதன் மூலம் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்குப் பாடல் எழுதிய முதல் பெண் பாடலாசிரியர் என்ற பெருமையையும் உமாதேவி பெற்றிருக்கிறார்.

மரங்களின் தாய்

கடந்த ஆண்டு பிபிசி வெளியிட்ட ‘சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 பெண்கள்’ பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களில் முக்கியமானவர் 105 வயது ‘சாலு மரத’ திம்மக்கா. கர்நாடக மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர். நெடுஞ்சாலைகளில் 4 கி.மீ. நீளத்துக்கு வரிசையாகக் கிட்டத்தட்ட நானூறு ஆலமரக் கன்றுகளை நட, அவை இன்று விருட்சங்களாகித் தழைத்திருக்கின்றன. கடந்த 75 ஆண்டுகளாக மரங்கள் வளர்ப்பது பராமரிப்பதையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டவர். வறட்சியான காலங்களில்கூடப் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றிய இவர், சூழல் ஆர்வலர்களுக்குச் சிறந்த முன்னோடி!

போராட்டத்தின் புதிய வடிவம்

ஆயுதப் படைக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்திக் கடந்த பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவந்தவர் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா. உலகின் நீண்ட நெடிய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி அவர் கைவிட்டார். நீதிக்காகவும் நேர்மைக்காகவும் அறவழியில் போராடிய அவர், இனி நேரடி அரசியல் மூலம் மக்களுக்காகப் போராடப்போவதாக அறிவித்தார். மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணி என்ற கட்சியைத் தொடங்கிய இரோம், இந்த ஆண்டு நடக்கப்போகும் மணிப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். திருமணம் செய்துகொள்ளப் போவதாக இரோம் ஷர்மிளா சொல்ல, அதை ஆதரித்தும் எதிர்த்தும் விவாதங்கள் வெளியாகின.

குழந்தைகளின் குரல்

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, யுனிசெஃப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ணத் தூதுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஹாலிவுட் தொடரான ‘குவாண்டிகோ’வில் நடித்தது, ஆஸ்கர் விழாவில் விருது வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவை பிரியங்காவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்றுத் தந்தன. உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குரலாக இனி பிரியங்காவின் குரல் ஒலிக்கும். “குழந்தைகளின் சுதந்திரமே என் முதல் விருப்பம். சிந்திப்பதற்கும் வாழ்வதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

அமெரிக்காவின் பெண் குரல்

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஹிலாரி கிளிண்டன். அனைத்திலும் தன்னை வளர்ச்சி பெற்ற நாடாக அறிவித்துக்கொள்ளும் அமெரிக்காவின் தலைமைப் பீடத்தில் இன்றுவரை ஒரு பெண் அமர்ந்ததேயில்லை. பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களாகக்கூடப் பெண்கள் போட்டியிட்டதில்லை. முதல் முறையாக அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட பெருமையைப் பெற்றதோடு, பெண்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தங்கமே தங்கம்

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு நடத்திய பட்டமளிப்பு விழாவில் 9 தங்கப் பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை அள்ளிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் லாவண்யா. சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த இவர் அரசுப் பள்ளியில் படித்தவர்.

வரலாற்றுப் பதவி

ரோம் நகரத்தின் 2800 ஆண்டு வரலாற்றில் முதல் பெண் மேயராக வர்ஜீனியா ரக்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரோம் வரலாற்றில் மிக இளம்வயதில் மேயராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் வர்ஜீனியா, ஏற்கனவே மூன்று ஆண்டுகள் ரோம் நகரமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

புதிய தலைமை

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான பொது வாக்கெடுப்பின் முடிவு ஏற்புடையதாக இல்லாததால் கடந்த ஆண்டு பதவி விலகினார் டேவிட் கேமரூன். அதைத் தொடர்ந்து பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்றார் தெரசா மே. இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட மார்கரெட் தாட்சருக்குப் பிறகு பிரட்டனின் பிரதமர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் இவர்.

விவசாயப் பெண்கள்

சிறந்த விவசாயிக்கான தேசிய விருது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்கோதைக்கு வழங்கப்பட்டது. மக்காசோள உற்பத்தியில் படைத்த சாதனைக்காக அவருக்கு கிரிஷிகர்மான் என்ற தனிநபர் சாதனையாளர் விருது பிரதமரால் வழங்கப்பட்டது.

மதுரை திருப்பாலை கிராமத்தை சேர்ந்த பிரசன்னா, நெல் விளைச்சலில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். இயற்பியல் பட்டதாரியான இவர், நவீன காலத்துக்கு ஏற்ப புதிய கண்ணோட்டத்துடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

அதிகார மையம்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் பொறுப்பையும் இவர் கூடுதலாகக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய இவர், அதன் பிறகு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர், மதுரை மாவட்ட ஆட்சியர், நிதித்துறை சிறப்புச் செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர், நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். நில நிர்வாக ஆணையராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அரசியல் வெற்றிடம்

பல்வேறு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் ஜெயலலிதா. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே திடீர் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5-ம் தேதி அவர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் குவிந்தார்கள். கருத்து வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சியினரும் அவரது மறைவுக்கு வருந்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகிலேயே வலுவான ஆளுமையான ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தில் வெற்றிடத்தை எற்படுத்தியது.

உரத்து ஒலிக்கும் எதிர்க்குரல்

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 34 ஆண்டு கால ஆட்சியை தேர்தல் வெற்றியின் மூலம் 2011-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவந்தார் மமதா பானர்ஜி. அதற்குப் பிறகு 2016-ல் நடந்த பொதுத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து தன் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகிறார்.

நன்றி - தி இந்து 
...மேலும்

Jan 3, 2017

"கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக" - சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனும் பெருமைக்குரிய சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாள் இன்று.  மகாராஷ்ட்ராவில் பிறந்த இவர் கல்வி வாய்ப்பில்லாத  பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் .ஜோதிபாய் புலே எனும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார். அவர் இவருக்குக் கல்வி பயிற்றுவித்தார்.

இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்குத் தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய் அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகச் சாவித்திரி ஆனார். நடந்து போகிற பொழுது ஆதிக்க சாதியினர் கற்களையும் சாணத்தையும் வீசினர், ஜோதிபாயிடம்  இவர் அதைச்சொல்லி புலம்பியதும் "அழுக்கு ஆடைகளை அணிந்து கொண்டு போ!பின் அங்கே  போய் நல்ல சேலையை அணிந்து கொள் !"என்றார் அவ்வாறே செய்தார் இவர்.

சாவித்திரிபாய்தவித்த வாய்க்கு, தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க  அனுமதித்தார். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே  அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார். விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.

1852ல் இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது. 1876-1878 பஞ்ச  காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். பல மையங்களில் ஜாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்ட என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு பரிமாறினர்.

ஆணின் பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகி கர்ப்பவதி ஆன ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளச் சென்றாள். அவளை ஜோதிபாய் புலே மீட்டு வந்தார். அந்தப் பெண்ணைத் தன்னுடைய வீட்டில் அனுமதிக்க சாவித்திரிபாய் எந்த எதிர்ப்பும் சொல்லாததோடு அவளுக்குப் பிறந்த குழந்தையைத் தன் மகன் போலவே வளர்த்து மருத்துவர் ஆக்கினார். இப்படிக் கைவிடப்பட்ட பெண்களைக் காப்பதற்கும், அவர்களின் பிரசவத்தைக் கவனிக்கவும் 'பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா' எனும் இல்லத்தைத் துவக்கினார்..

1855-ல் அவரின் பதினொரு வயது மாணவி முக்தாபாய் 'தியானோதயா'வில் எழுதிய 'மங்குகள், மகர்களின் துக்கம்' என்கிற கட்டுரையே சாவித்திரிபாய் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதைத் தெளிவாக்கும்  'ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை விட்டு கெட்டு ஒழியட்டும். எங்களின் மனதிற்குள் இப்படிப்பட்ட இழிந்த மதம் எப்பொழுதும் நுழையாமல் இருக்கட்டும்..மங்குகள், மகர்கள், ஏன் பிராமணர்கள் என்று அனைவரையும் படைத்தவன் ஒருவனே! அவனே என்னை அறிவால் நிறைத்து எழுத வைக்கின்றான்... ஓ! மகர்களே! மங்குகளே! நீங்கள் ஏழ்மையிலும், நோயிலும் வாடுகிறீர்கள். அறிவெனும் மருந்து மட்டுமே உங்களைக் குணப்படுத்தவும், ஆற்றவும் முடியும்'

மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று  பரவாமல் இருக்கக் கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டுப் பாதிக்கப்பட்ட  மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை 
ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.


தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து அறுபத்தி ஆறு வயதில் உயிர் காக்கப்போராடினார். அப்படிப் பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு இவர் மரணமடைந்தார். அந்தச் சிறுவன் பிழைத்துக்கொண்டான். வாழ்க்கையையே சேவையால் நிறைத்த அவரை 'இந்தியக்கல்வியின் தாய்' என்று போற்றுகிறோம். .

சாவித்ரிபாய் புலே. சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன அவரின் கவிதை கீழே :

போ கல்வி கல் 
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை-ஞானத்தை,செல்வத்தைச் சேர் 
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும் 
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம் 
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக ! 
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக 
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது 
கற்று, ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக 
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !

சாவித்திரிபாய் பிறந்து 186 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் எதற்காக போராடினாரோ அதன் நோக்கம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவரின் நினைவாக Google டூடூல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. கூகுள் நினைவுக் கூர்ந்தது நல்ல விஷயம் தான். மகிழ்ச்சி தான். அனால், அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை சாதியத்திற்கு எதிராக போராடுவது


நன்றி - விகடன்


...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்