/* up Facebook

Dec 9, 2016

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல் இதுதான்!‘சந்தியாவின் மகளாய் பிறந்தார்... இந்தியாவின் மகளாய் மறைந்தார்’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர், மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும்... அவர் செயல்படுத்திய திட்டங்களும், சாதனைகளும் என்றும் மக்கள் மனதைவிட்டு அகலாதவை. அவர், திரை மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டும் கோலோச்சவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் புலமை வாய்ந்த பெண்மணியாக ஜொலித்த ஜெயலலிதாவுக்கு எழுத்துகள் என்றால் உயிர். தன்னுடைய சிறு வயதிலேயே ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் புத்தகம் படித்தவர் அவர். இலக்கியத்தின் மீதும், எழுத்துகளின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த ஜெ-வின் இன்னொரு பயணம்தான் இந்தக் கட்டுரை. 


‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல!''

சென்னையில் பள்ளியில் படிக்கும்போதே ஜெயலலிதா ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்தார். தன் மகள் படிப்பதற்காக தாய் சந்தியா ஏராளமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ஒரே மூச்சில் பல காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தமிழில் வெளியான மூதறிஞர் ராஜாஜி எழுதிய, ‘சக்கரவர்த்தி திருமகன்’ நாவலை அவர் படித்தார். ஜெயலலிதாவுக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். அதுகுறித்து அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்று ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜெ-வை மிகவும் கவர்ந்த நாவல்!

படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு தயாராகும் முன்பு, ஆங்கில நாவல்களுடன் மூழ்கியிருப்பார். சார்லன்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டேன், ஷிட்னி ஷெல்டன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை ஜெயலலிதா விரும்பிப் படிப்பார். நாவல்களைப் போலவே கவிதைகளைப் படிப்பதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சாமர்ஸெட்டின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கமாட்டார். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் ஏதாவது ஓர் ஆங்கில நாவலைப் படிக்க ஆரம்பித்துவிடுவார். ‘1960-70-ம் ஆண்டுகளில் அவ்வப்போது வெளிவந்த ஆங்கில நாவல்களைப் படிக்கும் ஒருசில திரை நட்சத்திரங்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அன்றைய சமயத்தில், ஆங்கிலத்தில் வெளியான திரில்லர், சமூகம், குடும்ப உறவுகள் கலந்த உணர்வு சம்பந்தமான நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். ‘‘புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஜங் சாங் (jung chang) எழுதிய ‘வைல்டு ஸ்வான்ஸ்: த்ரி டாட்டர்ஸ் ஆஃப் சைனா’ (Wild Swans: Three Daughters of china) என்கிற நாவல்தான் தன்னை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று’’ என ஓர் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. அதில், பெரும்பாலான புத்தகங்கள் எல்லாமே நாவல்கள்தான். அதிலும் ஆங்கில நாவல்கள்தான் அதிகம். அதேபோன்று, கொடநாடு எஸ்டேட்டிலும் ஒரு பெரிய நூலகம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தனக்கு வேண்டிய ஆங்கில நாவல்களை வாங்கிவந்திருக்கிறார் ஜெயலலிதா.‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள்!'' 

ஒருமுறை ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸுக்கு, ஜெயலலிதாவே நேரில் சென்று புத்தகங்கள் வாங்கிய நினைவலைகளை அந்த நிறுவனத்தாரிடம் பேட்டியெடுத்து ஒரு பத்திரிகை வெளியிட்டது. அவருடைய காரில் உடைகள், பொருட்கள் போன்றவற்றோடு புத்தகங்களும் அதிகம் இருக்கும். ‘‘தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் குஷ்வந்த் சிங்கும் ஒருவர்’’ என்று ஜெயலலிதா ஒருமுறை கூறியிருந்தார். 1992-ம் ஆண்டில் சட்டசபை நடவடிக்கைகளை விமர்சித்த ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ (illustrated weekly) இதழ் குறித்து பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘‘ ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ இதழில் குஷ்வந்த் சிங் பணியாற்றிய வரை தரமானதாக இருந்தது. தற்போது தரம் குறைந்துள்ளதாக எண்ணுகிறேன்’’ என்று விமர்சனம் செய்தார். ஜெயலலிதா எம்.பி-யாக இருந்த காலத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவர், ‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உங்களைப் (ஜெயலலிதாவை) பார்த்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன்’’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

எழுத்துகள் உயிரானவை! 

ஜெயலலிதா எழுத்தாளராகவும் கோலோச்சினார். ‘துக்ளக்’ இதழில், ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கட்டுரையை எழுதத் தொடங்கி, பின்னர் இந்திய அரசியல், சர்வதேச விவகாரங்கள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுத ஆரம்பித்தார். ‘இந்திய மருத்துவர்களின் அலட்சியம்’, ‘கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம்’, ‘ஜோஸ்யத்தின் சாத்தியம்’ என அவர் ஆழமான கட்டுரைகள் எழுதினார். இது தவிர, ‘குமுதம்’ வார இதழிலும் எழுத ஆரம்பித்தார். ‘தாய்’ பத்திரிகையில், ‘எனக்குப் பிடித்தவை’ என்ற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை, ஓராண்டு காலம் எழுதினார். தாய் இதழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயலலிதா இருந்தார். ‘பொம்மை’ இதழில் ‘அழகுக்கலை’ பற்றி எழுதினார். 1980-ம் ஆண்டு ‘கல்கி’ இதழில், ‘உறவின் கைதிகள்’ என்ற தொடரை எழுதினார்.

நன்றி - விகடன் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்