/* up Facebook

Oct 28, 2016

பெண்ணியம் தேசியத்தைச் சிதைக்கிறதா? (பகுதி -2) - கேஷாயினி எட்மண்ட்


பெண்ணியம் தமிழ்தேசியத்தினை நோக்கிய பயணத்தினை திசை திருப்புகின்றதா என்கின்ற வினாவிற்கான பதிலாக வரையப்படுகின்ற இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தினை சற்றே ஊடக நடுநிலைமை தாண்டி எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பதற்கு முதற்கண் மன்னிப்பு கோரிக்கொண்டு பாகம் இரண்டினை தொடர்கின்றேன். வரலாற்றினை கூறும் போது ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னுள்ளவர்கள் அல்லது பின்னின்ற அமைப்புக்கள் குறித்து மேற்கோள்காட்ட வேண்டிய தேவை உள்ள போதும் சிலரை சுட்டுவது தீர்வை தந்துவிடப் போவதில்லை என்பதும் வீண் விவாதங்களை வளர்க்குமே தவிர ஏதாவது வழிசமைக்குமா என்பது கேள்விக்குறியே. அதனாலேயே கடக்கின்றேன்…..

கடந்த பாகத்தில் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த பெண்கள் குறித்து பார்த்திருந்தோம். ஆனாலும் பெண்ணாளுமைகளை அரசியலுக்கான உதவியாளர்களாக மட்டும் பார்க்கின்ற மனோபாவம், துணைப்பாத்திரங்களாக செயற்பட வைக்கின்ற தன்மை, பெண் அங்கத்தவர்களது பாலியல் ஒழுக்கங்களை கேள்விக்குட்படுத்தல் போன்றதான போக்குகள் அமைப்புகளுக்குள் இருந்தமை மேற்கோள்காட்டத்தக்கன. 

1983 யூலைக்கலவரமானது தமிழ்ப்பெண்களது வாழ்வியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய வரலாற்று சம்பவம் எனலாம். பாதிப்புக்கள் பேரதிர்வை ஒரு புறம் ஏற்படுத்தியதென்றால் பல பெண்களது சுய விருப்பத்திலான இயக்க இணைவுகள் தமிழ் சமூகத்தில் மறுபுறம் ஏற்படுத்தியிருந்தது. 1985 இல் தமிழீழத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்ட பெண்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டது, 1987 இன் ஆரம்பகட்டத்தில் “ஒப்பரேஷன் லிபரேஷன்” இல் பெண்கள் பயிற்சி எடுக்க தொடங்கியமை இதன் நீட்சியே. இதே ஆண்டில் ஒக்டோபர் 10 ஆந் திகதி தமிழீழ விடுதலைப்புலி அமைப்பினர் இந்திய இராணுவத்திற்கெதிரான போர்பிரகடனம் செய்தது மட்டுமல்ல தமிழீழப் பெண்கள் மூலம் புதிய வரலாறும் எழுதப்பட்டது. போராளி மாலதி பெண்கள் படையணி இந்திய படைகளை எதிர்கொண்டதில் மாலதியின் வீரமரணம் போராளிப் பெண்களுக்கான புதிய வரலாறினையும் எழுத தொடங்கியது. போராளிப்பெண்கள் உருவாக்கமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினை ஏற்படுத்தியது. பெண்ணுடல் பலவீனமானது என்கின்ற கண்ணோட்டம் மாற்றமடைந்தமை, சமூகத்தில் அன்று நிலவிய பெண்மைக்குணங்கள் என கொள்ளப்பட்ட பால்நிலை மாறி ஆண்களுக்கு நிகரான பலம் பெண்ணுக்குண்டு என நிரூபிக்கப்பட்டமை, பெண் போராளிகள் என்பவர்களாவது ஆளுமையுடையவர்கள், சுயாதீன முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் என்கின்ற கருத்தியல் ஏற்படுத்தப்பட்டமை போன்றன அவற்றிற்கான சில எடுத்துக்காட்டல்கள். ஆயினும் தேச விடுதலையின் பின்னரே பெண்விடுதலை என்கின்ற சிந்தனையை போராளிகளிடமும் பொதுமக்களிடமும் ஆழப்பதிப்பதிலும் தலைமை மிகவும் முனைப்புடன் செயற்பட்டது.

இப்புள்ளியில் தான் ஒரு சமூகப்போராளிக்கும் அமைப்பின் போராளிகளுக்குமிடையான முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்து இன்றும் தொடர்கின்றது. ஒருவருடைய சிந்தனைகளையும் போராட்ட பாதைகளையும் தீர்மானிப்பது தனிமனித தாக்கங்களும் சூழ இருப்பவர்களால் தூண்டப்படுகின்ற விடயங்களுமே. அந்த வகையில் பெண்கள் விடயத்தில் மிகவும் கட்டுப்பாடுகொண்டதான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது மட்டுமல்ல பெண்களுக்கு மதிப்பளிக்கின்ற சூழல் இருந்தது. வன்முறையாளர் ஒரு போராளியான போதும் கடும் தண்டணைகள் வழங்கப்பட்ட சான்றுகளும் உண்டு. அதே போன்று ஆயுதம் தாங்கிய போராளி பெண்களிடம் தமது உடல் மற்றும் சமூக வன்முறைகளை பிரயோகிப்பதற்கான தயக்கம் பிற ஆண்களிடமும் இருந்தது. இது பெண் போராளிகளுக்கான உள்,புற பாதுகாப்பான சூழலினையும் தோற்றுவித்திருந்தது. ஆக பாலின போராட்டங்கள் இவ்வமைப்பினை சார் பெண்களுக்கு இருந்திருக்கவில்லை. இது கூட அவர்களது “தேசிய விடுதலையின் பின்னரான பெண் விடுதலை” கொள்கைக்கு ஏதுவாகவும் அமைந்திருந்தது. அதேவேளை சமூகத்தில் பயணிக்கின்ற பெண்கள் அல்லது சமூகத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுடன் பயணித்து தத்தமது மட்டங்களில் எதிர்த்துக்கொண்டிருக்கின்ற பெண்கள் எனும் போது அவர்களது சிந்தனை பால்சார் போராட்டங்களையும் கடக்கவேண்டிய நிலை உள்ளது. இத்தகையதான நேரெதிரான போக்குகள் ஆண்கள் உட்பட சில பெண்களுக்குள்ளும் கருத்தியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளதினை இன்றும் காணலாம். போராட்டத்தில் பங்குகொள்ளாதவர் ஒரு போராளியை விமர்சிப்பது எப்படி உவர்ப்பற்றதோ அதே போன்றதே பெண்ணிய செயற்பாடுகளை சமூக தளத்தில் பயணிக்காத ஒருவர் விமர்சிப்பதுவும். 

ஒரு சமூகம் இணைந்து போராட வேண்டுமாயின் முதலில் சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலான நிறைவடையும் போது தான்; சமூகத்தினை பற்றி சிந்திக்க தலைப்படுகின்றான். உள்ளக முரண்களை களையாமல் குவிக்கப்படுகின்ற போராட்டம் மீதான சிந்தனை ஒரு கட்டத்தில் திசைமாறும். ஏனனில் சமூகம் என்பது உணர்வுகளை உள்ளடக்கிய மனங்களை கொண்ட மனிதர்களாலானது. இன அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றோம் என வாதிடுகின்ற நாம் அதுவே சாதி, பால் அடிப்படையில் பாதிக்கப்படும் போது புறக்கணித்து பயணிக்க வேண்டும் என நினைப்பது எத்தகைய தர்மம் என்பது புரியாத புதிரே…

பெண் விடுதலையை விளங்காமல் பெண்ணிய கருத்தியலை தவறாக புரிந்து கொண்டோர், இதன் தாற்பாpயத்தினையும் சமூகத்தில் இதனாலான தாக்கத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டோர், பெண்ணியம் என்றால் என்னவென்றே விளங்காமல் விமர்சிப்பவர்களால்; பிளவுபடாத சமூகமா பெண்ணியவாதிகளால் அல்லது பெண்ணியம் பேசுபவர்களால் புதிதாக பிளவுபட்டுவிடப்போகின்றது? பெண்ணிலான போராட்ட தடங்களை மெச்சிக்கொண்டால் மட்டும் போதாது மேலும் பெண்களின் பங்களிப்பினை அதிகாpத்திட வேண்டிய தேவையும் இன்று ஈழத்து அரசியலுக்கு இருக்கின்றது. அல்லது பெண்ணியம் வேண்டாம் என போர்க்கொடி தூக்குபவர்களுக்கு இன்றைய ஈழப்பெண்களுக்கு வழிசமைக்கின்ற பொறிமுறையாவது தொpந்திருக்க வேண்டும் அதை விடுத்து தேசியத்தினை பெண்ணியம் காயடிப்பு செய்கின்றது என்று சொல்ல மட்டும் தான் முடிகிறது என்றால் அதை விடவும் மந்தைப் போக்கு வேறெதுவும் இல்லை. பால்நிலை விழிப்புணர்வு அற்ற அரசியல் பிரச்சாரங்கள் நமது பங்கிற்கு வெறும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ தேசியத்தினை மட்டும் கட்டியெழுப்புமே தவிர தமிழ்த்தேசியத்தினை கட்டியெழுப்பிவிடப் போவதில்லை.  

ஏனெனில் கருவொன்று அது பெண்ணா ஆணா என தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டு விடுகின்ற விடயங்களில் ஒன்று அதன் இனம். எந்த கருப்பையில் கருக்கொள்கின்றதோ அதனடிப்படையில் இனம் முடிவாகிய பின்னர் தான் அதன் பால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆக கருவின் அடையாளம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்து பாலினை தீர்மானிக்க சாதி சமயங்களை சமூகம் அடையாளப்படுத்துகின்றது. ஆக அதன் போராட்டம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. இனத்திலிருந்து ஆரம்பிக்கினற போராட்டம் அந்தப்புள்ளியை சென்றடைய வேண்டுமெனில் முதலில் பாதையிலுள்ள பால்நிலைப்பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும். இதற்கான பொறிமுறைகள் பாதையை மாற்றிவிடாதவாறு இருக்க வேண்டுமே தவிர பிரச்சினைகளே இல்லை என சாதிப்பது ஆரோக்கியமற்ற மனநிலையே. நம் வீட்டில் பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தை, துணையிழந்த சகோதரி, சமூகத்தின் பால்ரிதியிலான இழிபார்வைக்குள்ளான அம்மா,  குடும்பத்தலைமை ஏற்று வேலைக்கு செல்லும் இடத்தில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகின்ற அக்கா இருந்தால் ஏன் இவர்களில் ஒருவராவது இருந்து பால் ரிதியாக துன்பப்படும் போது இவர்களை தாண்டி உங்களால் போய் விட முடியுமா? 

பெண் என்பதால் பால் ரிதியில் பாதிக்கப்படுகின்றவர்களை கைதூக்கி விடுவதும் அவர்களும் உரிமையுடன் வாழ வழிசெய்தலுமே நானும் என் சார்ந்தவர்களும் நினைக்கின்ற பெண்ணியம் என்றால் நாம் பெண்ணியவாதிகள் தான்… பெண்ணியம் பேசிக்கொண்டுதானிருக்கப்போகின்றோம். ஆனால் அத்தகைய பெண்ணிய சிந்தனை எவ்வாறான பொறிமுறைகளுடனானதாக இருந்தால் தமிழ்த்தேசியம் நோக்கிய பயணம் பாதைவிலகாமல் பயணிக்கும் என்கின்ற விடயத்தினை அலசவேண்டிய நிர்ப்பந்தமும் எமக்கில்லாமலில்லை…. 
தொடரும்…..

கேஷாயினி எட்மண்ட்

ekeshayinie@gmail.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்