/* up Facebook

Oct 28, 2016

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திராவின் நூயியின் வெற்றிக்கதை                             
'இந்திரா நூயி'...உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவரது பிறந்த நாள் இன்று. உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 

'முடிந்தால் முடியாதது ஏதுமில்லை' 'மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் சிறியதே' என அடுக்குமொழி வசனங்களை எளிதாகப் பேசலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை எனச் சொல்வோர்க்கு இவர் ஒரு நிகழ்கால சான்று. 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. இவரின் வளர்ச்சி மிகவும் நிதானமாகவும் ஆரவாரமின்றியே இன்றியே நிகழ்ந்துள்ளது. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் 'யேல்' பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். குறிப்பாக தன்னுடைய ரிசப்ஷனிஸ்ட் பணியை எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு பல தொழில் அனுபவங்களை அப்பணி எனக்குக் கற்றுக்கொடுத்தது  என அடிக்கடி நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார். பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. 

பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், 'தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்' என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

தொடர்ந்து முந்தைய வேகத்தையெல்லாம் விட கூடுதல் உத்வேகத்துடன் உழைத்தார். உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, பல தொழிலதிபர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினார். தான் சி.இ.ஓ-வாக இருந்தாலும் சக ஊழியர்களுடன் தானும் ஓர் ஊழியர் போலவே எளிமையாகப் பழகினார். உலகம் முழுக்க அந்நிறுவன கிளைகள் அதிகமாகவே நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

படிப்பைத் தீவிரமாக காதலிப்பவர்; படித்தால்தான் அனைவருமே பல சாதனைகளை புரிய முடியும். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதால் எளிதாக உயர்வடைய முடியும் எனச் சொல்லும் இவரது பிடித்தமான செயல்பாடு ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான். மாறிவரும் காலச்சூழலுக்கும் புதுப்புது ரசனைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற முறையிலும் தன்னை மேம்படுத்தியும், அப்டேட் செய்து கொண்டேயும் இருப்பார். புதுப்புது விஷயங்களைத் தயக்கமின்றி தெரிந்தவரிடம் கற்றுக்கொள்வார். இதனால்தான் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து பெப்சி நிறுவனத்தின் தலைவராகவும், உலகின் முன்னணி வர்த்தக ஆளுமைப் பெண்மணியாகவும் திகழ்கிறார். குறிப்பாக பெப்சி குளிர்பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எதிர்ப்புகுரல் ஒலிக்கும் அதே வேளையில், அப்பிரச்னைகளை தகர்த்து நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் இவரது உறுதியான செயல்பாடு பலரும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் ஒருவராக கருதப்படும் இந்திரா, ஒரு நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக இந்திரா நூயின் வழிநடத்தும் திறனும், தொலைநோக்குத் திறனும், உழைப்பும், இலக்கை சரியாக எய்தும் திறனும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும், மிகப்பெரிய நிறுவன தலைவராகவும் பெரிய பொறுப்பில் இருக்கிறேன் என்பதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது இவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அத்தகைய குணங்கள்தான் அவரை எளிதாக உயர்வடையச் செய்கிறது என அந்நிறுவன ஊழியர்களும் பல தொழிலதிபர்களும் அடிக்கடி சொல்வார்கள். ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கு நீ, நான் என ஆண்களுக்குள்ளே நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதிக்கொள்ளும் காலச்சூழலில் ஒரு பெண்ணாக பெப்சி நிறுவனத்தை நிர்வகிக்கும் இவரது ஆளுமை வியக்கத்தக்கதே. இதுகுறித்து இவரிடம் கேட்டால், "ஒரு பெண்ணாக இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறீர்களே? இது எப்படி சாத்தியம் எனப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால் தற்போதைய வளர்ச்சியை அடைய இதுவரை நான் செலவழித்த உழைப்பில் பாதியை மட்டும் செலவழித்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நான் ஒரு பெண்மணியாக இருப்பதால் பல தடைகளைத் தாண்டி ஓர் ஆணை விட இருமடங்குக்கும் அதிகமாகவே உழைத்திருக்கிறேன். என் உழைப்பிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஆனால் இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி அல்ல. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. இதைவிட பெரிய உயரத்தை அடைய வேண்டும். அதற்குள்ளாக இந்த வளர்ச்சியையே பெரிதாக பேசினால் எப்படி?" என்கிறார். 

இவரது சிகை அலங்காரமும், ஆடைத்தேர்வுகளும் பலரும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். குறிப்பாக இவரது சிரிப்பு பலரையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கும் எனப் பலரும் அவரிடமே தெரிவிப்பார்கள். அப்போது அவரது ரியாக்‌ஷன்.... மீண்டும் ஒருமுறை சிரிப்பது மட்டுமே. இவரது கணவர் ராஜ் கிஷான் நூயி. இவரது பிள்ளைகள், பிரீத்தா மற்றும் டாரா. வணிகத்தில் புகழ்பெற்றது போலவே குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் தன் பணியை சிறப்போடு செய்துவருகிறார். இந்திரா நூயி...பெண்களைப் புகழும் ஓட்டுமொத்த உலகிற்கான குரல்களில் தவிர்க்க முடியாதது. 'மீண்டும் ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டே... இந்திரா நூயி'.

* 2008-ம் ஆண்டில் அமெரிக்க இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவரானார்.
* 2007-ம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றார். 
* போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் 15-ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
                                                                       
நன்றி விகடன்                                                                                                                                 
...மேலும்

பெண்ணியம் தேசியத்தைச் சிதைக்கிறதா? (பகுதி -2) - கேஷாயினி எட்மண்ட்


பெண்ணியம் தமிழ்தேசியத்தினை நோக்கிய பயணத்தினை திசை திருப்புகின்றதா என்கின்ற வினாவிற்கான பதிலாக வரையப்படுகின்ற இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தினை சற்றே ஊடக நடுநிலைமை தாண்டி எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பதற்கு முதற்கண் மன்னிப்பு கோரிக்கொண்டு பாகம் இரண்டினை தொடர்கின்றேன். வரலாற்றினை கூறும் போது ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னுள்ளவர்கள் அல்லது பின்னின்ற அமைப்புக்கள் குறித்து மேற்கோள்காட்ட வேண்டிய தேவை உள்ள போதும் சிலரை சுட்டுவது தீர்வை தந்துவிடப் போவதில்லை என்பதும் வீண் விவாதங்களை வளர்க்குமே தவிர ஏதாவது வழிசமைக்குமா என்பது கேள்விக்குறியே. அதனாலேயே கடக்கின்றேன்…..

கடந்த பாகத்தில் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த பெண்கள் குறித்து பார்த்திருந்தோம். ஆனாலும் பெண்ணாளுமைகளை அரசியலுக்கான உதவியாளர்களாக மட்டும் பார்க்கின்ற மனோபாவம், துணைப்பாத்திரங்களாக செயற்பட வைக்கின்ற தன்மை, பெண் அங்கத்தவர்களது பாலியல் ஒழுக்கங்களை கேள்விக்குட்படுத்தல் போன்றதான போக்குகள் அமைப்புகளுக்குள் இருந்தமை மேற்கோள்காட்டத்தக்கன. 

1983 யூலைக்கலவரமானது தமிழ்ப்பெண்களது வாழ்வியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய வரலாற்று சம்பவம் எனலாம். பாதிப்புக்கள் பேரதிர்வை ஒரு புறம் ஏற்படுத்தியதென்றால் பல பெண்களது சுய விருப்பத்திலான இயக்க இணைவுகள் தமிழ் சமூகத்தில் மறுபுறம் ஏற்படுத்தியிருந்தது. 1985 இல் தமிழீழத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்ட பெண்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டது, 1987 இன் ஆரம்பகட்டத்தில் “ஒப்பரேஷன் லிபரேஷன்” இல் பெண்கள் பயிற்சி எடுக்க தொடங்கியமை இதன் நீட்சியே. இதே ஆண்டில் ஒக்டோபர் 10 ஆந் திகதி தமிழீழ விடுதலைப்புலி அமைப்பினர் இந்திய இராணுவத்திற்கெதிரான போர்பிரகடனம் செய்தது மட்டுமல்ல தமிழீழப் பெண்கள் மூலம் புதிய வரலாறும் எழுதப்பட்டது. போராளி மாலதி பெண்கள் படையணி இந்திய படைகளை எதிர்கொண்டதில் மாலதியின் வீரமரணம் போராளிப் பெண்களுக்கான புதிய வரலாறினையும் எழுத தொடங்கியது. போராளிப்பெண்கள் உருவாக்கமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினை ஏற்படுத்தியது. பெண்ணுடல் பலவீனமானது என்கின்ற கண்ணோட்டம் மாற்றமடைந்தமை, சமூகத்தில் அன்று நிலவிய பெண்மைக்குணங்கள் என கொள்ளப்பட்ட பால்நிலை மாறி ஆண்களுக்கு நிகரான பலம் பெண்ணுக்குண்டு என நிரூபிக்கப்பட்டமை, பெண் போராளிகள் என்பவர்களாவது ஆளுமையுடையவர்கள், சுயாதீன முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் என்கின்ற கருத்தியல் ஏற்படுத்தப்பட்டமை போன்றன அவற்றிற்கான சில எடுத்துக்காட்டல்கள். ஆயினும் தேச விடுதலையின் பின்னரே பெண்விடுதலை என்கின்ற சிந்தனையை போராளிகளிடமும் பொதுமக்களிடமும் ஆழப்பதிப்பதிலும் தலைமை மிகவும் முனைப்புடன் செயற்பட்டது.

இப்புள்ளியில் தான் ஒரு சமூகப்போராளிக்கும் அமைப்பின் போராளிகளுக்குமிடையான முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்து இன்றும் தொடர்கின்றது. ஒருவருடைய சிந்தனைகளையும் போராட்ட பாதைகளையும் தீர்மானிப்பது தனிமனித தாக்கங்களும் சூழ இருப்பவர்களால் தூண்டப்படுகின்ற விடயங்களுமே. அந்த வகையில் பெண்கள் விடயத்தில் மிகவும் கட்டுப்பாடுகொண்டதான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது மட்டுமல்ல பெண்களுக்கு மதிப்பளிக்கின்ற சூழல் இருந்தது. வன்முறையாளர் ஒரு போராளியான போதும் கடும் தண்டணைகள் வழங்கப்பட்ட சான்றுகளும் உண்டு. அதே போன்று ஆயுதம் தாங்கிய போராளி பெண்களிடம் தமது உடல் மற்றும் சமூக வன்முறைகளை பிரயோகிப்பதற்கான தயக்கம் பிற ஆண்களிடமும் இருந்தது. இது பெண் போராளிகளுக்கான உள்,புற பாதுகாப்பான சூழலினையும் தோற்றுவித்திருந்தது. ஆக பாலின போராட்டங்கள் இவ்வமைப்பினை சார் பெண்களுக்கு இருந்திருக்கவில்லை. இது கூட அவர்களது “தேசிய விடுதலையின் பின்னரான பெண் விடுதலை” கொள்கைக்கு ஏதுவாகவும் அமைந்திருந்தது. அதேவேளை சமூகத்தில் பயணிக்கின்ற பெண்கள் அல்லது சமூகத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுடன் பயணித்து தத்தமது மட்டங்களில் எதிர்த்துக்கொண்டிருக்கின்ற பெண்கள் எனும் போது அவர்களது சிந்தனை பால்சார் போராட்டங்களையும் கடக்கவேண்டிய நிலை உள்ளது. இத்தகையதான நேரெதிரான போக்குகள் ஆண்கள் உட்பட சில பெண்களுக்குள்ளும் கருத்தியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளதினை இன்றும் காணலாம். போராட்டத்தில் பங்குகொள்ளாதவர் ஒரு போராளியை விமர்சிப்பது எப்படி உவர்ப்பற்றதோ அதே போன்றதே பெண்ணிய செயற்பாடுகளை சமூக தளத்தில் பயணிக்காத ஒருவர் விமர்சிப்பதுவும். 

ஒரு சமூகம் இணைந்து போராட வேண்டுமாயின் முதலில் சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலான நிறைவடையும் போது தான்; சமூகத்தினை பற்றி சிந்திக்க தலைப்படுகின்றான். உள்ளக முரண்களை களையாமல் குவிக்கப்படுகின்ற போராட்டம் மீதான சிந்தனை ஒரு கட்டத்தில் திசைமாறும். ஏனனில் சமூகம் என்பது உணர்வுகளை உள்ளடக்கிய மனங்களை கொண்ட மனிதர்களாலானது. இன அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றோம் என வாதிடுகின்ற நாம் அதுவே சாதி, பால் அடிப்படையில் பாதிக்கப்படும் போது புறக்கணித்து பயணிக்க வேண்டும் என நினைப்பது எத்தகைய தர்மம் என்பது புரியாத புதிரே…

பெண் விடுதலையை விளங்காமல் பெண்ணிய கருத்தியலை தவறாக புரிந்து கொண்டோர், இதன் தாற்பாpயத்தினையும் சமூகத்தில் இதனாலான தாக்கத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டோர், பெண்ணியம் என்றால் என்னவென்றே விளங்காமல் விமர்சிப்பவர்களால்; பிளவுபடாத சமூகமா பெண்ணியவாதிகளால் அல்லது பெண்ணியம் பேசுபவர்களால் புதிதாக பிளவுபட்டுவிடப்போகின்றது? பெண்ணிலான போராட்ட தடங்களை மெச்சிக்கொண்டால் மட்டும் போதாது மேலும் பெண்களின் பங்களிப்பினை அதிகாpத்திட வேண்டிய தேவையும் இன்று ஈழத்து அரசியலுக்கு இருக்கின்றது. அல்லது பெண்ணியம் வேண்டாம் என போர்க்கொடி தூக்குபவர்களுக்கு இன்றைய ஈழப்பெண்களுக்கு வழிசமைக்கின்ற பொறிமுறையாவது தொpந்திருக்க வேண்டும் அதை விடுத்து தேசியத்தினை பெண்ணியம் காயடிப்பு செய்கின்றது என்று சொல்ல மட்டும் தான் முடிகிறது என்றால் அதை விடவும் மந்தைப் போக்கு வேறெதுவும் இல்லை. பால்நிலை விழிப்புணர்வு அற்ற அரசியல் பிரச்சாரங்கள் நமது பங்கிற்கு வெறும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ தேசியத்தினை மட்டும் கட்டியெழுப்புமே தவிர தமிழ்த்தேசியத்தினை கட்டியெழுப்பிவிடப் போவதில்லை.  

ஏனெனில் கருவொன்று அது பெண்ணா ஆணா என தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டு விடுகின்ற விடயங்களில் ஒன்று அதன் இனம். எந்த கருப்பையில் கருக்கொள்கின்றதோ அதனடிப்படையில் இனம் முடிவாகிய பின்னர் தான் அதன் பால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆக கருவின் அடையாளம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்து பாலினை தீர்மானிக்க சாதி சமயங்களை சமூகம் அடையாளப்படுத்துகின்றது. ஆக அதன் போராட்டம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. இனத்திலிருந்து ஆரம்பிக்கினற போராட்டம் அந்தப்புள்ளியை சென்றடைய வேண்டுமெனில் முதலில் பாதையிலுள்ள பால்நிலைப்பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும். இதற்கான பொறிமுறைகள் பாதையை மாற்றிவிடாதவாறு இருக்க வேண்டுமே தவிர பிரச்சினைகளே இல்லை என சாதிப்பது ஆரோக்கியமற்ற மனநிலையே. நம் வீட்டில் பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தை, துணையிழந்த சகோதரி, சமூகத்தின் பால்ரிதியிலான இழிபார்வைக்குள்ளான அம்மா,  குடும்பத்தலைமை ஏற்று வேலைக்கு செல்லும் இடத்தில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகின்ற அக்கா இருந்தால் ஏன் இவர்களில் ஒருவராவது இருந்து பால் ரிதியாக துன்பப்படும் போது இவர்களை தாண்டி உங்களால் போய் விட முடியுமா? 

பெண் என்பதால் பால் ரிதியில் பாதிக்கப்படுகின்றவர்களை கைதூக்கி விடுவதும் அவர்களும் உரிமையுடன் வாழ வழிசெய்தலுமே நானும் என் சார்ந்தவர்களும் நினைக்கின்ற பெண்ணியம் என்றால் நாம் பெண்ணியவாதிகள் தான்… பெண்ணியம் பேசிக்கொண்டுதானிருக்கப்போகின்றோம். ஆனால் அத்தகைய பெண்ணிய சிந்தனை எவ்வாறான பொறிமுறைகளுடனானதாக இருந்தால் தமிழ்த்தேசியம் நோக்கிய பயணம் பாதைவிலகாமல் பயணிக்கும் என்கின்ற விடயத்தினை அலசவேண்டிய நிர்ப்பந்தமும் எமக்கில்லாமலில்லை…. 
தொடரும்…..

கேஷாயினி எட்மண்ட்

ekeshayinie@gmail.com
...மேலும்

Oct 26, 2016

சமத்துவம் பயில்வோம்: இருவருக்கும் பொதுவில் வைப்போம்
தமிழ்ப் பண்பாட்டில் ‘கற்பு’ என்பது பெண்களின் மீது சுமத்தப்பட்ட ஒழுக்க வரையறை. தமிழ்நாட்டுப் பெண் குழந்தைகள் அருந்ததி, நளாயினி, கண்ணகி, சீதை கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று மேடை போட்டுப் பட்டிமன்றம் நடத்தப்படுமே தவிர, ‘கற்பில் சிறந்தவர் கோவலனா? கண்ணகியா?’ என்று பேசக்கூட இங்கே யாரும் முன்வருவதில்லை. ‘கணவனையே கண் கண்ட தெய்வமாக வணங்குபவள் வானுலகில் தெய்வமாகக் கொண்டாடப்படுவாள்’ என்பது பெண்களுக்குச் சொல்லப்படும் செய்தி.

கற்புகள் பலவிதம்

கணவன் மாற்றாளிடம் சென்று வந்தால் அதை ஏற்றுக்கொள்வது ‘கடவுள் கற்பு’, கணவன் குற்றமற்றவன் என்று வாதாடி நிரூபிப்பது ‘பத்தினி கற்பு’, கணவன் போருக்காகவோ, கல்விக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ நீண்டகாலம் பிரிந்து சென்றால், அவன் திரும்பி வரும்வரை மனத்தையும் உடலையும் பேணிக் காத்திருப்பது ‘முல்லை சான்ற கற்பு’, கணவன் இறந்த செய்தி காதில் விழும்முன் இறப்பது ‘தலையாய கற்பு’, கணவன் சிதையுடன் நெருப்பில் இறங்குவது ‘இடையாய கற்பு’(அவள் ‘சதி மாதா’ என்று போற்றப்படுவாள்), இறந்த கணவனுக்காக, வாழ்நாள் முழுவதும் கைம்மை நோற்று, நாளுக்கு ஒரு வேளை உப்பில்லாமல் உண்பது ‘கடையாய கற்பு’ என்று பெண்ணின் கற்பை இந்தச் சமூகம் அளவிட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் பகைவர்கள் அல்ல

நம் மூதாதையப் பெண்களும் ‘கற்புக்கரசி’ என்று பெயர்பெற, ஆணாதிக்கச் சமூகம் விதித்த விதிக்கெல்லாம் கட்டுப்பட்டு வாழ்ந்து மறைந்தனர். ஆனால், இந்த ஆணாதிக்கச் சமூகம் கொண்டாடுவது என்னவோ தம் வீட்டுக் கற்புக்கரசிகளை அல்ல; விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள கற்புக்கரசிகளை மட்டும்தான்.

கற்பு என்ற ஒழுக்கம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையே. இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ‘ஒருத்திக்கு ஒருவன்’ கோட்பாடு வெற்றி பெற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கோட்பாடும் நடைமுறையில் இருக்க வேண்டும் அல்லவா?

உலகில் இயற்கை எல்லாவற்றையும் இரண்டாகப் படைத்துள்ளது, சூரியன் - சந்திரன், பகல் - இரவு, கறுப்பு - வெள்ளை, ஆண் - பெண், கிழக்கு - மேற்கு, நீர் - நெருப்பு என்று இரண்டாக உள்ள இயற்கையை நாம் இணை முரண்களாகப் பார்க்க வேண்டுமே தவிர, பகை முரண்களாகப் பார்க்கக் கூடாது. அதாவது, இரண்டை இரண்டாகப் பார்க்கும் பொதுப் பார்வை வளர வேண்டுமே தவிர, இரண்டையும் பகையாகப் பிரித்துப் பார்க்கக் கூடிய பார்வை கூடாது. ஆணும் பெண்ணும் எதிரெதிரான முரண் இணைகள் தவிர, பகைவர்கள் இல்லை. அதனால்,பெண்ணுக்கு எவையெல்லாம் விதிக்கப்பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் ஆண் சமூகமும் தமக்குரியனவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாரதியார் பார்வையில்

இருபாலரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில், ஒருபாலருக்கு ஒழுக்கக் கட்டுப்பாடும், இன்னொரு பாலருக்குக் கட்டுப்பாட்டில் விதிவிலக்கும் இருந்தால், நடைமுறையில் ஒழுக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பது சாத்தியப்படுமா? பாரதியார் தம் ‘பதிவிரதை’ என்ற கட்டுரையில், ‘அட பரம மூடர்களே, ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும்? கற்பினைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள்.

ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். இதில் நாற்பதாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இட்சிப்பதாக வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நாற்பதினாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கு இடமாக வேண்டும்’ என்று வேடிக்கையாகக் கூறியவர், பெண் கற்பு பேணுவதில் ஆணுக்கும் மிகுதியான பங்கு உண்டு என்று இதன் மூலம் உணர்த்தியுள்ளார். ஒன்றை ஒன்று சிதைக்கும்போதும், ஒன்றை ஒன்று மீறும்போதும் ‘ஒழுக்க விதிகள்’ ‘ஒடுக்க விதி’களாகி விடுகின்றன. கற்பு என்பது இருபாலருக்கும் உரிய ஒழுக்க விதியாக அங்கீகரிக்கப்படும்போதுதான், அது உண்மையில் உயிர்பிக்கப்படும்.

நன்றி / தி இந்து 

...மேலும்

Oct 24, 2016

மதுபாவனையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தால் இன்று நடைபெற்ற மருத்துவமுகாமில் மதுபாவனையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விமோச்சனா இல்லம் தலைவி உரையாடல்!

23.10.2016 மட்டக்களப்பு நகரிலிருந்து பலமைல்கள் தூரத்திலுள்ள சகல வளங்களும் புறக்கணிக்கப்பட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விளாந்தோட்டம் தமிழ் கிராமத்தில் எந்த பிரதிபலன் அரசியல் சாராத மட்டக்களப்பு தமிழ் சமூதாயத்தின் மேல் அக்கரை கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட விருட்சம் சமூக மேம்பாட்டு மையம் எனும் அமைப்பினால் நடத்தப்பட்ட இலவச மருத்துவமுகாமில் சிகிச்சை ஒருபுறம் மறுபுறம் தங்கும் மண்டபத்தில் காலத்திற்கு ஏற்ற தலைப்பான அதிகரித்துவரும் மதுபாவனையால் ஏற்படும் சமூகசீரழிவு பற்றி கல்லடியில் இயங்கும் விமோச்சனா அமைப்பின் தலைவி திருமதி செல்விகா சகாதேவன் இனால் மிகவும் சிறப்பான முறையில் கிராமத்து மக்களுக்கு விளங்கக்கூடிய முறையில் விரிவாக எடுத்து கூறினார்.

அவர் பல கேள்விகளை எழுப்பி கிராம பெண்களிடம் யோசிக்க வைத்து அவர்களிடமே தீர்வை எடுத்துக்கூறினார். ஆண்கள் மதுபாவனை பாவிப்பதன் நோக்கம்? ?கேள்வி கேட்ட போது பெண்களே பலர் இங்குள்ள ஆண்கள் வயல் வேலை செய்வதால் உடல் வலி குறைக்க பாவிப்பதாக கூறினார்கள்.
அப்படியாயின் பெண்களும் கடினவேலை செய்தால் மதுபாவனை செயற்படுத்தலாமா? என மறு கேள்வி கேட்ட போது அவர்கள் திக்குமுக்காடினார்கள்.  "இங்கு நடைபெறும் மருத்துவமுகாமில் பாவிக்கும் ஆங்கிலேய மருந்து பொருட்களில் சிறிதளவு மதுசாரம் மூலப்பொருள் கலந்துதான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எல்லை மீறும் போது போதையாகும்" என எளிமையாக கூறினார்.

இவ் முகாமில் கலந்து கொண்ட ஒரு மதுசாரம் பாவிக்கும் ஐயாவிடம் நீங்கள் ஒருநாளைக்கு மதுசாரம் பாவிக்க எவ்வளவு செலவாகும் என கேட்ட போது 1200 ரூபா என்றார் மதுசாரத்திற்கு சுவையூட்டி புகைத்தல் இதைவிட கூடுதலாக வரும் என்றார். அப்படியாயின் ஒரு நாளை வருமானம் 1000 ரூபா இதைவிட மிதமிஞ்சிய செலவு ஒருமாதம் 30000 இற்கு மேல் மதுபாவனையிற்கு செலவிட வேண்டிவரும். இவ்வளவு காசியும் குடிக்காமல் சேமித்தால் போதும் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவீர்கள்  என கூறியபோது அந்த நபரின் முகத்தில் அதிர்ச்சியினை அவதானிக்க முடிந்தது.

அவருடைய மனைவியை பார்த்து  உங்களுக்கு எத்தனை பிள்ளை என கேட்ட போது இரு பெண்களும் மூன்று ஆண்களும் என கூறினார்கள். திருமண வயதில் இருக்கின்ற உங்கள் பெண்களுக்கு பொருள் வீடு வசதி உள்ளதா? என அவர்களிடம் கேட்ட போது அவர்கள் ஆண் பெடியன்கள் இருக்கின்றார்கள் தானே அவர்கள் கவனிப்பார்கள் என்று அவருடைய ஆண்பிள்ளை மூலம் இன்னொரு பெண்பிள்ளையிடம் சீதனம் வாங்கி தன்னுடைய மகள் வாழ்க்கையை தீர்மானிப்பது என முடிவுடன் உள்ளார்கள் இவ்வாறு தான் அநேக பெண்களே பெண்களுக்கு எதிரியாகின்றார்கள்  என  சுவாரசியமாக சலித்து  போகாமல் யதார்த்த பூர்வமான உரையாடல்களை நடத்தினார்  செல்விகா.

இவ் உரையாடல் நடாத்துவதற்கு வசதி செய்த விருட்சம் மேம்பாட்டு அமையத்திற்கு கோடான கோடி நன்றிகள் விளாந்தோட்ட கிராம மக்கள் சார்பாக இவர்களுடைய சேவை தொடரட்டும்.

நன்றி - கரண் 
...மேலும்

Oct 21, 2016

பெண்ணியம் தேசியத்தைச் சிதைக்கிறதா? (பகுதி -1) - கேஷாயினி எட்மண்ட்


ஒரு போராட்ட புள்ளியை நோக்கி நகர்கின்றோம் என வைத்துக்கொள்ளுங்கள் முதலில் பயணிக்கின்றவர் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். இந்தப்புள்ளி தேசியம் என வைத்துக்கொள்வோம் பயணிக்கும் ஆணோ பெண்ணோ தன்னை அல்லது சுயம் என வரையறுக்கப்படுகின்ற ஒன்றினை முதலில் தக்க வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆயினும் இந்த தக்கவைத்தல் என்பது பாலின அடிப்படையில் வேறுபடுகின்றது. உதாரணமாக வீரம் என்பதன் ஒரு கூறு “தப்பித்தல்”. இந்த தப்பித்தல் என்கின்ற கூறு பல பொதுத்தன்மைகளை கொண்டிருக்கின்ற போதும் இனம் மற்றும் பாலின அடிப்படையில் வேறுபடுகின்றது. ஓரு ஆண் போராளி உயிராபத்திலிருந்து தப்பித்தலுக்கும் அதே பெண்ணாகும் போது உயிருடன் பாலியல் வன்முறையிலிருந்தும் தன்னை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
ஈழத்தினை பொறுத்தளவில் ஒரு தமிழின ஆணுக்கு போராட்டம் என்பது தமிழன் என்கின்ற ரீதியினான போராட்டமும் உயிராபத்தும் மட்டுமே. அதுவே பெண்ணாகும் போது அவள் உடல், கலாசாரம் குறித்த போராட்டங்களும் மேலதிகமாக இணைக்கப்பட்டுவிடுகின்றது. அந்த காலம் முதல் இன்றுவரை எப்போராட்டமானாலும் அதில் பெண்ணுடல் என்கின்ற அரசியல் உண்டு. இந்த பெண்ணுடல் என்கின்ற அரசியலில் அந்தந்த இனத்தின் கலாசாரம் மிகவும் முக்கியமானதொரு பங்கினை வகிக்கின்றது என்பதும் மறுப்பதற்கில்லை. அதிலும் ஈழப்போராட்டத்தின் வித்து கூட அல்லது அதன் போராட்டங்களில் ஈழ தமிழச்சிகள் மீதான வன்முறைகள் ஒரு வகையில் அடிப்படை காரணங்கள் என கூட சொல்லலாம்.

பெண்ணியம் என்பது பெண் விடுதலை மற்றும் சமவுரிமை என அர்த்தப்படுமாயின் தேசியம் நோக்கிய சிந்தனை குவிப்பு அல்லது போராட்ட குவிப்பு பெண்ணியம் போன்ற உட்கூறுகளால் காயடிப்பு செய்யப்படுகின்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. அதிலும் முப்பது வருட ஆயுத போராட்டம் தொடங்கிய புள்ளியை 2009 இல் வந்தடைந்த பின்னரும் அதே பிற்போக்கான சிந்தனைகளை அல்லது இறுகிய சிந்தனைகளை பிரயோகிப்பது மீண்டுமொரு பூச்சியத்தில் சேர்க்கும். ஓவ்வொரு வெற்றியும் தோல்வியும் வரலாறும் நமக்கு தருகின்றவற்றினை கற்றுக்கொள்ளாமல் அதே இறுகிய மனநிலையுடன் பயணிப்பது ஆரோக்கியமற்றதொன்றும் கூட. குறிப்பாக ஈழப்போராட்டம் இன்று பல்லாயிரம் “பெண் தலைமைத்துவம்” கொண்ட குடும்பங்களை விதைத்திருக்கின்றது. பல நூறு ஆண் அரசியல் கைதிகளை போராடி மீட்டெடுக்கின்ற பொறுப்பினை தமிழச்சி கைகளில் திணித்திருக்கின்றது. பாலியல் முறையில் ஈடுபட்டவனை தூணில் கட்டி சுட்டு தொங்கவிடுகின்ற காலம் போய் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு ஈழப்பெண்ணுக்கும் ஏன் ஈழத்தின் ஒவ்வொரு குழந்தைக்கும் கூட இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணியவாதிகளை சாடுவதும் ஒட்டுமொத்த பெண்ணிய சிந்தனைகளையும் தரக்குறைவாக விமர்சிப்பதும் வீண்விதண்டாவாதமே!

பெண்ணியம் என்பது தேசியத்தினை சிதைக்கின்றதா என்கின்ற வினாவிற்கான விடையினை தேட முன்னர் சில வரலாற்று பக்கங்களையும் அதன் தடங்களையும் புரட்டி விட்டு அவற்றிலிருந்து கற்றவற்றினை கொண்டு பெண்ணியத்தினை உள்ளடக்கிய தேசியத்திற்கான பொறிமுறைகள் உள்வாங்கப்பட வேண்டிய தேவை இன்றைய ஈழத்து அரசியலுக்கு இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை பொறுத்தமட்டில் போராட்டங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் இருப்பினும் பெண் ஆளுமைகளிலான பல தடங்களை பதித்த பெருமை தமிழீழ அமைப்புகளுக்கிருக்கின்றது. 

 • ஈழத்தமிழ் அரசியலில் சமூக சீர்திருத்தத்தில் முக்கிய பங்குவகித்த யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் (1924 - 1934) பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான சில தீர்மானங்களை மேற்கொண்டனர்
 • தமிழ்க் காங்கிரஸ் இலிருந்து பிரீந்து 1949 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தாராளவாதக்கட்சியான தமிழரசுக்கட்சி ஆணாதிக்க சிந்தனைகளுடன் செயற்பட்டு பெண் ஆளுமைகளை மதிக்கவில்லை என்பதுடன் அதன் பின்னர் வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இதே பிற்போக்கு சிந்தனையையே கடைப்பிடித்தது. ஆயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி பின்னர் தமிழ் ஈழ மகளிர் அணி என்கின்ற அமைப்பை உருவாக்கிய போது இதன் தலைவராக போராளி சிவக்குமாரனின் தாயார் அன்னலட்சுமி பொன்னுத்துரையும் பொதுச்செயலாளராக மங்கயற்கரசி அமிர்தலிங்கமும் பதவி வகித்தனர்.
 • 1976 ஆம் ஆண்டு புலோலி வங்கியில் பறிமுதல் செய்த நகைகளை பாதுகாத்த புஸ்பராணி தமிழீழ வரலாற்றில் முதன் முதல் சிறைசென்ற பெண்ணாவார்.
 • 1978 ஆம் ஆண்டளவில் பிரபாகரன், உமாமகேஸ்வரன், சந்ததியார் போன்றோர் செயற்பட்டு வந்த தமிழீழ புதிய புலிகள் அமைப்பின் கொழும்பு காரீயாலயத்தில் அமிர்தலிங்கத்தின் செயலாளராக பணியாற்றிய ஊர்மிளாதேவி புலிகளுக்கான இரகசிய உதவிகள் செய்து வந்தார். பின்னர் அரசினால் தேடப்பட்ட நிலையில் இவரே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதல் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட முதல் பெண் போராளி.
 • 1981 இல் புலிகளிலிருந்து பிரீந்து தம்மை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் 1982 இல் “பெண் விடுதலை இயக்கம்” என்கிற துணை அமைப்பினை உருவாக்கினர். இதில் ஆரம்பகட்ட உறுப்பினர்களாக பதவி வகித்த ராதா, உஷா என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் பின்னர் தேடப்பட்ட நிலையில் பின்தளத்திற்கு (இந்தியா) செல்ல நோ;ந்தது. 
 • 1983 இல் தமிழீழ பெண்கள் இயக்கம் (TWO) உருவாக்கப்பட்டதுடன் இவ் இயக்கத்தினால் “தோழி” என்கின்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரீயையாக செல்வநிதி செயற்பட்டார். 
 • இதே ஆண்டு (1983) இல் ஈழமக்கள் புலிகள் விடுதலை முன்னணியினால் பெண்கள் பிரீவான ஈழ பெண்கள் விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டதுடன் “செந்தணல்” சஞ்சிகை பெண்கள் விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டது.
 • யாழ் வட்டாரக்குழுவில் தாரீணி, அஞ்சலி ஆகிய இருபெண்கள் உள்வாங்கப்பட்டனர்
 • வருடந்தோறும் “நெருப்பு தினம்” எனும் பெண்கள் தினம் நினைவு கூறப்பட்டதுடன் ஈ.ம.பு.வி.மு ஆண்களுக்குமான அரசியல் வகுப்பில் “பெண் விடுதலை” எனும் தலைப்பில் சாந்தி சச்சிதானந்தம் போன்றோரீனால் நடாத்தப்பட்டது.
 • 1984 இல் என்.எல்.எவ்.டீ யில் புரட்சிகர பெண்கள் அணி (RWL –Radical Women League) உருவாக்கப்பட்டு “சக்தி” சஞ்சிகை வெளியிடப்பட்டது.
 • 1985 இல் மட்டக்களப்பில் உருவான “காணாமற் போனோரீன் தாய்மாரது இயக்கம்” மற்றும் யாழ்ப்பாணத்தில் உருவான “அன்னையா; முன்னணி” என்பன இராணுவ கைதுகளுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட குறிப்பிடத்தக்க காத்திரமான அழுத்தக்குழுக்கள்.
 • 1985 இல் “சுதந்திர பறவைகள்” எனும் பெயாpல் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரீவு உருவாக்கப்பட்டது.
 • 1987 இல் “ஒப்பரேஷன் லிபரேஷன்” நடவடிக்கை காலகட்டத்தில் பெண்களும் போர் பயிற்சிகளில் உள்வாங்கப்பட்டனர்.
 • 1987 இல் கோப்பாயில் முன்னேறிய இந்தியப்படைகளை மாலதி படையணி எதிர்கொண்டு போரீட்டது அதில் மாலதி வீரமரணமடைந்தார். இது போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்ததுடன் பெண்களும் போரீல் பங்குகொள்வதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
 • 1989 ஆம் ஆண்டு இந்தியப் படைகளை வெளியேறக்கோரி மட்டக்களப்பைச் சோ;ந்த பூபதி (அன்னை பூபதி) சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் நீர்த்தார். 
 • காரைநகர் கடற்படை தள தாக்குதலில் உயிர்நீர்த்த 16 வயதுடைய வனிதா (சோபனா) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் களப்பலியான பெண்ணாவார். 

உசாத்துணை
 • அரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும் - என்.சரவணன்
 • போராட்ட குறிப்புக்கள்
 • பெண் விடுதலையும் சமூக விடுதலையும்

ekeshayinie@gmail.com

தொடரும்………… 

...மேலும்

Oct 3, 2016

பூப்பெய்ததும் மும்பை போகணும்!

ராஜஸ்தானில்' ராஜ்நாட்' என்ற ஒரு சமூகத்தில் ஒரு கொடுமையான பழக்கம் இருக்கிறது. பெண் குழந்தைகள் பூப்பெய்தியவுடன் பாலியல் தொழிலில் ஈடுபட மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள். காலம் காலமாக இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள், பாலியல் தொழிலில்தான் ஈடுபட்டு வருகின்றனர். நாம் எப்படி வேலை தேடி உறவிர்களிடமோ நண்பர்களிடோ செல்கிறோமோ... அதுபோல நாஜ்நாட் சமுக பெண்கள் மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தங்கள் உறவினர்ளிடம் உதவியை நாடுவார்கள். மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகள்தான், பூப்பெய்திய ராஜ்நாட் சமூக பெண்களின் பிற்கால வாழ்க்கை. மும்பையில் டான்ஸ் பார்கள் தொடங்கப்படும் வரை இதுதான் நிலை. 

கடந்த 2004ம் ஆண்டு, பூப்பெய்திய சங்கீதாவும் பாலியல் தொழிலுக்காக மும்பை போகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். துடு என்ற கிராமத்தை சேர்ந்த சங்கீதாவின் குடும்பத்தில் பெற்றோர் உள்பட 8 பேர். சங்கீதா உடன் பிறந்ததில் 2 சகோதரர்கள் 3 சகோதரிகள். பால்ய வயதிலேயே சகோதரர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்களால் குடும்பத்துக்கு எந்த வருவாயும் கிடையாது. திருமணம் முடித்தாலும் குடும்பத்தை ஓட்டுவதற்கு, பாலியல் தொழிலில் ஈடுபடும் சகோதரிகளை நம்பித்தான் இருப்பார்கள். 

சங்கீதாவுக்கு ஒரே குழப்பம். மும்பையில் டான்ஸ் பாரில் வேலை செய்யும் தனது அத்தை பிங்கியிடம் செல்வதா அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுவதா என ஒரே சிந்தனை. பிங்கியும் முதலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, பின்னர் டான்ஸ் பாருக்கு மாறியவர்தான். சங்கீதாவுக்கு பிற நாட் சமூகத்து பெண்களைப் போல பாலியல் தொழிலில் ஈடுபடவும் விருப்பம் இல்லை. வேறு எந்தத் தொழிலும் அவருக்கு தெரியவும் செய்யாது. ஆனாலும் பாலியல் தொழில் மட்டும் வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருந்தார். 

மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள டான்ஸ் பாரில் சங்கீதா வேலைக்குச் சேர்ந்தார். நல்ல வருவாய் கிடைத்தது. சம்பளம் தவிர டிப்ஸ்களும் கிடைத்தன. ஒரே வருடத்தில் துடுவில் சொந்த கிராமத்தில் உள்ள மண்வீட்டை மாற்றிக் கட்டினார். தனது சகோதரர்களுக்கும் வீடு கட்டிக் கொடுத்தார். அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்.துடு கிராமத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் வீடுகள் எல்லாம் மண்வீடுகளாகவே இருக்க, டான்ஸ் பாரில் வேலை பார்த்த சங்கீதாவின் வீடு, மார்பிள் பதிக்கப்பட்டடு பளபளத்தது. சங்கீதாவைப் பார்த்து இப்போது நாட் சமூகத்து இளம் பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருவதில்லை. அந்த தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு ஆடுகிறார்கள்.. பாடுகிறார்கள். 

சங்கீதா இது குறித்து கூறுகையில்,'' டான்ஸ் பார்களுக்குத் தடை விதிக்கப்படுவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்புதான் நான் மும்பை வந்தேன். நானும் என்னோட சகோதரியும் சேர்ந்து டான்ஸ் பாரில் வேலை பார்த்தோம். நல்ல வருமானம் கிடைத்தது. எங்களோட இளைய சகோதரியை பள்ளிக்கு அனுப்பி விட்டோம். டான்ஸ் பாருக்கு தடை விதிச்சதும் நான் பாலியல் தொழிலுக்கு போய் விடவில்லை. ஊருக்குப் போய் விட்டேன். தடை நீக்கப்பட்டதும் இப்போது மீண்டும் வந்துள்ளோம் எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் யாரும் இனிமேல் பாலியல் தொழிலுக்கு போகக் கூடாது என்பதுதான் என் விருப்பம் '' என்றார். 

மும்பை டான்ஸ் பார்களில் கிடைக்கும் வருவாயால், நாட் சமூக பெண்களின் மனநிலை மாறத் தொடங்கியுள்ளது. கவுரவமாக வேலை பார்ப்பதாக கருதுகின்றனர். திருமண வாழ்க்கையில் ஈடுபடும் எண்ணமும் வந்துள்ளது. பொருளாதாரரீதியாகவும் நாட் சமூகத்தினர் முன்னேறத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 'வோல்ர்டு விஷன்' நிறுவனம் 7 நாட் சமூகத்து கிராமங்களை சேர்ந்த 171 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தியது. அதன்படி, மும்பையில் டான்ஸ் பார்கள் செயல்பட்ட காலத்தில் 76 சதவீத  நாட் சமூக மக்கள் குடிசை வீடுகளை சிமெண்ட் வீடுகளாக மாற்றிக் கட்டியுள்ளனர். தொலைக்காட்சிகள் 81 சதவீத வீடுகளில் உள்ளன. 93 சதவீத வீடுகளில் ஷோபாக்களும் 56 சதவீத வீடுகளில் கார்கள் அல்லது மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. இதுவெல்லாம் மும்பையில் டான்ஸ் பார்கள் செயல்பட்ட போது நாட் சமூக மக்களிடையே நிகழ்ந்த பொருளாதார ரீதியான மாற்றங்கள். 

நாட் சமுகப் பெண்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டதில் பிங்கிக்கு முக்கிய பங்கு உண்டு, '' எங்கள் சமூகத்தை மற்ற சமூகத்தினர் ஒதுக்கியேத்தான் வைத்திருப்பார்கள்..எங்க வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் வரமாட்டார்கள். எங்கள் சமூகத்து ஆண்களே தங்கள் சுயநலத்துக்காக எங்களைத் திருமண வாழ்க்கையில் ஈடுபட விட மாட்டார்கள். பத்து வயசுலேயே என்னை இந்த தொழிலுக்குத் தள்ளிட்டாங்க. நானே சாலையோரங்களிலும் தபாக்களிலும் பாலியல் தொழிலில்  ஈடுபட்டேன். சரி... நம்மளால நம்ம குடும்பத்தினர் இருவேளையாவது சாப்பிடுகிறார்களே என்ற ஒரே மனநிறைவு மட்டும்தான் எனக்குள் இருந்தது. பின்னர் டான்ஸ்பாரில் வேலை செய்ய ஆரம்பித்தேன். 

மும்பையில் டான்ஸ் பாரில் குறைந்தது ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். எனது தோழி ஒருவர் பாலியல் தொழிலில்தான் ஈடுபட்டிருந்தார். டான்ஸ் பாரில் என்னுடன் அவரும்  வேலைக்கு சேர்ந்தார்.  நல்ல வருவாய் கிடைத்தது. நிம்மதியாக காலத்தை கடத்தினார். டான்ஸ் பார் மூடப்பட்டது. சொந்த கிராமமான ராஜஸ்தானில் உள்ள நன்ட்லாபுராவுக்கு சென்று விட்டார். வேறு தொழிலும் தெரியாது. இப்போது அங்கும் பாலியல் தொழிலில்தான் ஈடுபடுகிறார். தினமம் 150 ரூபாய் கிடைக்கிறது என்றார் .ஒரு மகனும் உண்டு. மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிலேயே பாலியல் தொழிலில் ஈடுடுகிறார். எங்கே மகனுக்குத் தெரிந்து விடுமோ என தினமும் பயப்படுகிறார். மானத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு டான்ஸ் பார்கள் ஒருவகையில் உதவியாக இருந்தன. அதனை மும்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், இன்னும் பல பெண்களின் வாழ்க்கையை பாலியல் தொழில் தொலைத்து  விடும் ''என்கிறார் பிங்கி.


நன்றி - விகடன்
...மேலும்

Oct 1, 2016

"காமத்திபுராவில் நான் வன்புணரப்படவில்லை... பள்ளியில்தான்...!"

மும்பையின் காமத்திபுரா ஆசியாவின் மிகப் பெரிய ரெட்லைட் ஏரியா. இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் தான் இந்த சமூகத்தில் தான் சந்தித்த, சந்திக்கும் பிரச்னைகளை 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' என்ற  ஃபேஸ்புக்' பக்கத்தில் ஆதங்கமாக கொட்டியுள்ளார். அவரது பதிவு வைரல் ஆகியிருக்கிறது. இந்த பெண் சாதாரண ஆள் இல்லை. காமத்திபுராவில் பிறந்து சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற 'கேர்ள் ஆன் தி ரன்' என்ற மாநாடு வரை சென்று பெண்கள் உரிமை குறித்து பேசியவர். பெயர் குறிப்பிடப்படாத அவரது பதிவு நம்மை அதிரவும் வைக்கிறது. அதே வேளையில் சிந்திக்கவும் சொல்கிறது.  

'' கேரளாவில் இருந்து எனது தாயார் பாலியல் தொழிலுக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டவர்.  எனது தந்தை எனது தாயை சந்தித்த போது, தீவிர காதலில் விழுந்தார். அவரது காதல் கிறுக்குத்தனமாகவே எனது தாய்க்கும் தோன்றியுள்ளது. ஆனாலும் இருவரும் திருமணமும் புரிந்து கொண்டனர். விளைவு காமத்திபுராவிலேயே நான் பிறந்தேன். நான் பிறந்த பிறகும் எனது குடும்பம் காமத்திபுராவை விட்டு வெளியேறி விட முடியவில்லை. காமத்திபுராவுடனேயே அதன் பழக்க வழக்கங்களுடன்தான் நானும் வளர்ந்தேன்.  எனது தாயார் என்னை பள்ளியில் சேர்த்தார். 

வளர வளரத்தான்  இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்னைகளை நான் எதிர்கொள்ள வேண்டியது இருந்தது.  ஒவ்வோரு இடத்திலும்  தனிமைப்படுத்தப்படுவதை உணர்ந்தேன். பள்ளிக்கு சென்றால் சக மாணவிகள் என்னிடம் பேச மாட்டார்கள். கறுப்பாக ரெட்லைட் ஏரியாவில் இருந்து ஒரு பெண் வந்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அதுதான் எனக்கு பள்ளியில் கிடைத்தது. விளையாடினால் என்னைச் சேர்க்க மாட்டார்கள். எனக்கு பின்னால் இருந்து 'காக்கா'  'எருமை மாடு' என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். பள்ளியின் நான் ஒரு தீண்டத் தகாதவளாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் எல்லாமே எனக்கு எதிராகவே போய்க் கொண்டிருந்தது. 

யாரும் என்னைச் சீண்ட மாட்டார்கள். இதனால், எப்போதும் நான் தனியாகவே இருப்பேன். இந்த சமயத்தை பயன்படுத்தி எனது ஆசிரியர் ஒருவர் என்னை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி கொண்டார். அப்போது எனக்கு வயது பத்துதான் ஆகியிருந்தது., ஆனால் நான் வன்புணரப்பட்டது கூட அப்போது எனக்குத் தெரியவில்லை. 'எது குட் டச்..' 'எது பேட் டச்... 'என அப்போது எனக்கு யாரும் சொல்லித் தரவவில்லை. நமது கல்வி முறையும் அப்படி. நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விஷயத்தைக் கூட 16 வயது வரை வெளியே சொல்லவில்லை. எனக்கு விபரம் தெரிந்த பிறகு,  காமத்திபுராவில் 'குட் டச் எது பேட் டச் எது எனத் தெருவோர நாடகங்கள் நடத்தத் தொடங்கினேன்.  மாதவிடாய் குறித்து சிறுமிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். செக்ஸ் என்றால் என்னவென  விளக்கினேன். ஒரு கட்டத்தில் போலீசே கூட என்னைத் துரத்தியிருக்கிறது. வழக்கமாக இங்கே சிறுமிகள் அனுபவரீதியாக செக்ஸ்  பெறும் இடம் என்பது போலீசின் கண்மூடித்தனமான கருத்து. 

எனது பெற்றோர்  கடந்த 2013ம் ஆண்டு கேரளாவுக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஆனால், நான் மும்பையை விட்டு நகரவில்லை. காமத்திபுராதான் எனக்கு வீடு. எனது அழகான வீடு. அன்பு சூழ் உலகம். என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் அன்பு நிறைந்தவர்கள். வெள்ளந்தி மனுஷிகள். அவர்களை விட்டு பிரிய எனக்கு மனம் இல்லை அவர்கள் என்னை மகளைப் போலவே பார்த்துக் கொள்கின்றனர். சில மாதத்திற்கு முன் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. சாலையை கடந்த போது, ஒரு கார் டிரைவர் எனது காலில் காரை ஏற்றி விட்டார்.  அந்த டாக்சி  டிரைவருக்கு காமத்திபுரா உயிர்களை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் . இங்கே உலவுபவர்கள் அழுக்கு ஆத்மாக்கள் என்ற  எண்ணத்தில் அலட்சியமாக சிரித்தார். ஆனால், அந்த காரை மறித்து நிறுத்திய எங்கள் பெண்கள் , அந்த கார் ஓட்டுநரை கீழே இறங்கச் சொன்னார்கள். 'நீ எப்படி எனது மகள் காலில் காரை ஏற்றலாம் மரியாதையாக மன்னிப்பு கேள்'' என்று கெரோ செய்தார்கள். மன்னிப்பு கேட்க  மறுத்த அந்த ஓட்டுநர், என்னை பலமுறை ஏற இறங்கப் பார்த்தார். கீழ்த்தரமான சைககளை காட்டினார். ஆனால் அன்புசூழ் உலகம்தான் எனக்கு பாதுகாப்பாக இருக்கிறதே. மன்னிப்பு கேட்டுவிட்டுதான் அந்த இடத்தில் இருந்து அந்த ஓட்டுநரால் நகர முடிந்தது.  
என்னை பொறுத்தவரை காமத்திபுராதான் பாதுகாப்பான இடம். இங்கே என்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை. ஆனால், பள்ளியில்தான் என்னை ஆசிரியர் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். இங்கே என்னை ஆண்கள் அணுகினாலும் பாதுகாப்புக்கு ஏராளமான தாயார்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் இங்கு வசிக்கிறேன். வசிக்கப் போகிறேன். வசிப்பேன். சான்பிரான்சிஸ்கோவில் 'கேர்ள் ஆன் தி ரன் ' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தேன். அங்கேயிருந்த மக்கள் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள். எனது வர்ணத்தை ஏற்றுக கொண்டார்கள். எனது பின்புலத்தை ஆராயவில்லை. எனது கதையை ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேட்டார்கள். 

செக்ஸை பற்றி சுதந்திரமாக உரக்கப் பேசினேன். பாலியல் கல்வி பற்றி நிறையப் பேசினேன். செக்ஸ் பற்றி பேசியதற்காக என்னை  எந்த போலீசும்  அங்கே விரட்டவில்லை. அங்கே நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அங்கே கற்றதைவைத்து எனது அழகான இந்த வீட்டை வேதனைகள் இல்லாத சொர்க்கமாக மாற்றுவேன். சக மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் இடமாக மாற்றுவேன். நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். நான் கருப்பாக இருக்கலாம். ஆனால் யாரையும் விட நான் அழகாக கருதுகிறேன். அழகுக்கும் வர்ணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ன?  மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல விஷயங்களை ஏன் பார்க்கக் கூடாது?. ஏன் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது? காமத்திபுரா வேண்டுமானால் பலருக்கு வேறு விஷயத்திற்கு சொர்க்கபூமியாக இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை தேவதைகள் வாழும் பூமி! 

-எம்.குமரேசன்
நன்றி - விகடன் 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்