/* up Facebook

Sep 6, 2016

சிறுநீர் : பெண்களுக்கு சிறு பிரச்சினையல்ல ! - – சரசம்மாபொதுவெளியில் ஒரு ஆண் ஒன்னுக்கு வந்தா எந்த எடத்துல வேணுன்னாலும் போக முடியுது. பெண்ணால் அப்படி முடிவதில்லை. பெண் அப்படி நடந்தால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள்- மாதிரிப்படம்
பாதையோரத்தில் போர்வைக்குள் குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள மக்களை உருவாக்கி இருக்கும் அரசுக்கு ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று

வேர்கடலை வறுத்து விற்கும் கடையது. கடையில் ஆள் இல்லை. வாங்குவதற்கு காத்திருந்தேன். ஐந்து நிமிடத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வந்தாள். முகம், கழுத்து, கை எல்லாம் தண்ணீரின் ஈரத்தால் நனைந்திருந்தது. அவள் அணிந்திருந்த மேற் சட்டை வேர்வையில் குளித்திருந்தது. முகத்தை துடைக்க கூட நேரமில்லாமலோ அல்லது எப்பொழுதும் பிசுபிசுக்கும் வேர்வையின் கசகசப்பு இல்லாத ஈரத்தின் குளுமை பிடித்திருந்ததாலோ கையை மட்டும் துடைத்து விட்டு திரும்பியவள் அறிமுகம் இல்லாத பெண்ணான என்னிடம் வேதனையை கொட்டி தீர்த்தாள்.
சிறுநீர் கழிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒன்றுதான். ஆனால் பொது வெளியில் ஆணுக்கு உள்ள சௌகரியம் பெண்ணுக்கு இருப்பதில்லை.
“இந்த லயன்ல உள்ள பத்து கடைக்கும் சேத்து ஒரு டாய்லட்டுதான். நான் ஒருத்திதான் பொம்பள, மத்த கடையில எல்லாம் ஆம்பளைங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா எந்த எடத்துலயும் போய்க்கிறாங்க. பொம்பள நாம அப்படி போக முடியுமா? பாத்ரூம பூட்டி வைக்கிறான் ஓனரு. கேட்டா பள்ளிக்கூடத்துல இருந்து வர்ர எம்பொண்ணுங்க போறாங்களாம். அதனால பூட்டிதான் வச்சுப்பேன், வேணுங்கறப்ப சாவிய வாங்கிக்குங்கன்னு சொல்றான். அவசரத்துக்கு போய் பாத்தா அவங்கடையே பூட்டி கெடக்கு. அனல்ல நின்னு வேற்கடல வருத்ததால ஒடம்பே எரியுது. வேர்வ தாங்காம காலோட வழியிது. வேலைய முடிச்சுட்டு ஒண்ணுக்கு போகலாமுன்னு அடக்கி அடக்கி வயிரே முட்டிருச்சு. போயி பாத்தா பாத்ரூம் பூட்டி கெடக்கு! போகயில என்னத்த கொண்டு போக போறானோ அந்த ஓனர் படுபாவி” என்றாள் அந்தப் பெண்.

மனித உடல் இயங்கு நிலை கூறுகளில் வந்தவுடன் வெளியேற்றியே தீர வேண்டிய விசயங்களில் சிறுநீர் கழிப்பதும் ஒன்று. சிறுநீர் கழிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதுதான். ஆனால் பொது வெளியில் ஆணுக்கு உள்ள சௌகரியம் பெண்ணுக்கு இருப்பதில்லை. இதில் பாலினத்தை தாண்டி பொருளாதாரமும் உண்டு. அந்த வறுகடலை கடை உள்ள வளாகம் நகரின் மையத்தில் இருப்பதால் மற்ற கடைகளிலிருக்கும் ஆண்களுக்கும் அவசரத்திற்கு அந்த கடையை விட்டால் வேறு போக்கிடம் கிடையாது. என்ன, ஐந்து நிமிடம் சுத்தினால் ஒரு மூத்திரச் சந்தை கண்டுபிடிக்கலாம், பெண்ணுக்கு முடியாது.

பொதுவெளியில் ஒரு ஆண் ஒண்ணுக்கு போவது போல பெண் போக முடியாது. பெண்கள் அப்படி நடந்தால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள். பெண்கள் வசதியான உடை அணிவதே ஆண்களின் பாலியல் ரீதியான உணர்வை தூண்டுவதாக விவாதிக்கும் பிற்போக்கு உலகம், பொதுவெளியில் சிறுநீர் போகும் பெண்களை எப்படியெல்லாம் தூற்றும்?

பொதுவெளியில் ஒரு ஆண் ஒன்னுக்கு வந்தா எந்த எடத்துல வேணுன்னாலும் போக முடியுது. பெண்ணால் அப்படி முடிவதில்லை. பெண் அப்படி நடந்தால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள். 
பெரு நகரத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் போது சிறுநீர் கழிக்கும் தேவைக்கு வசதி இருக்கிறதா என்றே நடப்பவர்களின் யோசனை இருக்கும். ஆணும் பெண்ணும் அன்றாட பிழைப்புக்காக எத்தனை எத்தனை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். காலையில் ஆரம்பிக்கும் அவர்களின் பரபரப்பான வாழ்க்கை மாலை இரவு என நீடிக்கிறது. சிறுநீர் அடிவயிற்றை முட்டும் போது கழிப்பதற்கு இடம் இருக்காது. அதிலும் பெண்களின் நிலை என்ன? அடக்கியே பழக்கப்படுவார்கள்.

சென்னையில் ஹவுஸ்சிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகமொன்றில் ஐநூறு வீடுகளுக்களும் 5 பொது பராமரிப்பு பணியாளர்களுக்கும் ஒரு பொது கழிப்பிடம் கூட இல்லை. ஒருநாள் அங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது. பேய் பிடித்து ஆடுவது போல் வயதான பாட்டியம்மா நடித்துக் கொண்டிருந்தார். காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மாலை வரை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் ஒண்ணுக்கு வந்துவிட்டது. ஓரளவுக்கேனும் உள்ள மறைவிடம் கூட அங்கில்லை. படக்குழுவினர் அத்தனை பேர் முன்னிலையிலும் கேமரா முன்பாகவே சிறுநீர் போய்விட்டார். அனைவரும் தலைகவிழ்ந்தனர். படப்பிடிப்பில் உள்ள பெண்களோ வெட்கிக் குறுகினர்.

நடன குழுவில் உள்ளவர்களோ இள வயது பெண்கள். நேரம் ஆக ஆக அவர்களாலும் முடியவில்லை. படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த குடித்தன பெண்களிடம் உங்கள் பாத்ரூம கொஞ்சம் யூஸ் பண்ணிக்கட்டா என்று வெட்கத்தை விட்டு வந்து கேட்டார்கள். மறுப்பதற்கு மனமில்லாத குடித்தனப் பெண்களால் கொடுப்பதற்கும் வழியில்லை. ஹவுஸ்சிங் போர்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிய நேரமது. இருந்தாலும் வீட்டுக்கு ஒரு ஆளாக பகிர்ந்து கொடுத்தார்கள்.

படப்பிடிப்பை வேடிக்கையாகவும், நடனப் பெண்களை ‘அழகு’ மங்கைகளாகவும் பார்ப்போருக்கு அவர்களது அடி வயிற்றில் புயல் போல குமுறும் சிறுநீர் அவஸ்தையை உணர முடியுமா? ஒண்ணுக்கு போறதெல்லாம் ஒரு பிரச்சினையா என்றே பலர் நினைக்கிறார்கள். பெண்களின் அடிப்படை பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக மனித உடல் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி வரைதான் இருக்கும். இந்த பை நிறைய தொடங்கினால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆண்களுக்கு சிறுநீரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் சிறுநீர் பைய்க்கும் அது வெளியேறும் துவாரத்திற்கும் இடையேயான தூரம் 15 செ.மீ. ஆனால், பெண்களுக்கோ வெறும் 4 முதல் 5 செ.மீ. தான். மேலும் சிறுநீர்ப் பைக்கும் பிறப்புறுப்புக்குமான இடைவெளியும் மிகக் குறைவு. சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு இரண்டும் அருகருகே இருப்பதால் சிறுநீரை அடக்கி வைப்பதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு பெண்களுக்கு மிகவும் அதிகம்.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக அளவு தண்ணி குடிக்கவில்லை என்றால் வயிற்று வலி வரும். ரத்த போக்கின் தேவைக்கு ஏற்ப நாப்கின் மாற்ற வேண்டும். இல்லையென்றால் நோய் தொற்று நிச்சயம். நீண்ட கால விளைவாக கர்ப்பப்பை புற்று நோயும் ஏற்படலாம். மாதவிடாய் காலத்து வயிற்று வலியும் பிறப்புறுப்பில் உள்ள வலியும் சேர்ந்து கூடுதலாக மலம் வருவது போல் ஒரு உணர்ச்சியைத் தோற்றுவிக்கும். வெளியில் வேலைக்கோ, கல்லூரிக்கோ அல்லது ஒரு போராட்டத்திற்கோ போகும் பெண்களால் நினைத்த இடத்தில் சீறுநீர் – மலம் கழிக்கவோ நாப்கின் மாற்றவோ முடியுமா? அல்லது இந்த பிரச்சனைக்காக வெளியில் போகமல் இருக்க முடியுமா? வேறு வழியில்லாமல் அடக்கிக் கொண்டு கடமையை செய்ய பழகி விடுகிறார்கள். பெண்ணுக்கு அடக்கம் முக்கியம் என்று பல அடங்காப்பிடாரிகள் சொன்னாலும், இந்த விசயத்தில் பெண்கள் ‘அடங்கித்தான்’ போக வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் 636 மில்லியன் வீடுகளில் கழிவறை வசதி இல்லை
இந்தியாவில் இலட்சக்கணக்கான வீடுகளில் கழிவறை வசதி இல்லை
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால் சிறுநீர் பை நிரம்பி தீவிர நோய்த்தொற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதோடு, கவனச்சிதறலும் ஏற்படும். ஒரு ஆணுக்கு வயிறு முட்டினால் எப்படியாவது வெளியேற்றியே தீர கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பெண்ணுக்கு இல்லை என்பதால் அந்த நேரங்களில் சிந்தனை அதுவாகவே இருக்கும். நகரத்தை நெருக்கும் வாகன நெருக்கடியில் அப்படி அடக்கிக்கொண்டு வாகனம் ஓட்டும் பெண்ணின் கவனச்சிதறலால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லையா என்ன?

கர்ப்பவதிகளுக்கு இத்தகைய நேரத்தில் கர்ப்பம் கலையும் அபாயம் உள்ளதாம். அடக்குவதையே நெடும் பழக்கமாக கொண்டால் சிறுநீர்ப் பையில் அழுத்தம் ஏற்பட்டு அந்த பையின் தாங்கும் திறன் கணிசமாக பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதுவே நாளடைவில் உடல் முழுவதும் நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு நோய்களை கொண்டுவரும் என்கிறார்கள்.

***

இந்தியாவில் இலட்சக்கணக்கான  வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. கழிப்பறை பற்றாக்குறையால் பெண்கள் பல மணிநேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் 2014 -ம் ஆண்டில் இந்தியா குறித்து அளித்திருக்கும் தகவல்களில் குறிப்பிடுகிறது. சொந்த வீடுகளில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் 11,000 பெண்கள் பாலியல் வன்புணர்வுகளில் இருந்து தப்பி இருப்பார்கள் என்கிறது அதே ஆண்டு வெளியான BBC செய்தி ஆய்வு.

இந்த தகவல் வீடுகளில் கழிப்பறை இல்லாததால் ஏற்படும் பாதிப்பை மட்டும் சொல்கிறது. பொதுவெளியில் பொதுக்கழிப்பறைகள் இல்லாததால் ஏற்படும் விபரீதமும் பாதிப்பும் கணக்கு எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவை. பார் வசதியுடன் கூடிய டாஸ்மார்க்கை திறந்து வைத்து குடிக்க வசதியேற்படுத்தி கொடுக்கும் தமிழக அரசு பள்ளிகளில் கல்லூரிகளில் முறையாக கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறதா? நிச்சயமாக இல்லை.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவிகள் கழிவறை வசதி இல்லாததால் சிறுநீர் கழிக்கவும் நாப்கீன் மாத்தவும் படும் அவதி அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை தருகிறது
பத்து வயதை கடந்த நிலையிலேயே வயதுக்கு வந்துவிடும் பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தின் ஆரம்ப நிலையை கடந்து வருவது மிகவும் சிரமம். ஆனால் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் சிறுநீர் கழிக்கவும் நாப்கின் மாற்றவும் படும் அவதி அவர்களுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. கேட்டால் அரசு, பள்ளிகளில் நாப்கின் தருவதாக சிலர் சொல்ல கூடும். அதன் வடிவமைப்பும் தரமும் ரத்தத்தை உள்ளே உறிஞ்சாமல், ரத்தம் சொட்ட சொட்ட பஞ்சு பிரிகளாக வருகிறது. அதை சரி செய்யவோ மாத்தவோ அரசு மெனக்கெடுவதில்லை. இந்த சூழலில் குழந்தைகள் மனதில் மாதவிடாய் பற்றி என்ன சிந்தனை தோன்றும்?

பொது வெளியில் அவசரத்துக்கு போக ஆண்களின் உடல் அமைப்பும் உடை அமைப்பும் அதற்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது. அவசரம் என்ற நிலை ஏற்பட்டாலும் பெண்களின் உடல் அமைப்பும் உடை அமைப்பும் அதற்கு இடம் தருவதில்லை. ஒரு சாதாரண பின்னணியை கொண்ட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண் இந்த பிரச்சனையை  ஓரளவுக்காவது எதிர்கொள்வது போல பெண் போலீசோ மடிசார் மாமியோ அவர்களுடைய உடைகளால் நிச்சயம் எதிர் கொள்ள முடியாது. ஆனல் அதிகாரமட்டத்தல் இருக்கும் பெண்களுக்கும், சாதி மட்டத்தில் உயரத்தில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய பொருளாதார வசதி சில ஏற்பாடுகளை கொடுத்திருக்கிறது. ஏழை, நடுத்தர பெண்களுக்கு அது இல்லை.

இந்த சிரமத்தை எப்படியெல்லாம் பெண்கள் எதிர் கொள்கிறார்கள் என்றால், வெளியில் போகும் போது பெரும்பாலும் தண்ணீர் குடிப்பதில்லை. தாகத்தை அடக்கி கொள்கிறார்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிக நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கிறார்கள். வெளியூர் பயணம் என்றால் பேருந்தை தவிர்த்து இரயிலையே விரும்புகிறார்கள். சிறுநீர் வராமல் இருக்க இப்படி பல வழிகளை கையாள்கிறார்கள்.

யோசித்து பாருங்கள் அங்கு எத்தனை கடைகள் எத்தனை பெண் வியாபாரிகள் அவர்களின் நிலை வேறு வழி அடக்கியே பழக்கப்பட்டிருப்பார்கள்
ஆசியா கண்டத்திலேயே மிகநீண்ட கடற்கரை என்று தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து போகும் சென்னை மெரினா கடற்கரையில் மூன்று இடங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன. யோசித்து பாருங்கள், அங்கு எத்தனை கடைகள் எத்தனை பெண் வியாபாரிகள்…? அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றிஅடக்கியே பழக்கப்பட்டிருப்பார்கள். ஆள் அரவமில்லாத கடற்பகுதியிலோ கடையின் பின்புறத்திலோ போவார்கள்.வேலைக்கு போகும் பெண்களின் சிறுநீர் அவஸ்தைகளை விவரிப்பதாக இருந்தால் ஒரு காவியமே எழுதலாம்.

ஆரம்பத்துல சொன்னது போல சிறுநீர் பிரச்சினை வர்க்கம், ஏழ்மை சார்ந்த ஒன்று என்பதால் உழைக்கும் வர்க்க ஆண்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் கிடையாது.  தி.நகர் சரவணா ஸ்டோர் போன்ற பெரிய கடைகள் முதல், பாதையோர உணவக சிறு கடைகள் வரை ஆண்களும் அடக்கியே வேலை செய்கிறார்கள். பெரிய கடைகளில் கழிப்பறை இருந்தாலும் வியாபாரம் சூடுபிடிக்கும் நேரங்களில் நகர்வதற்கே அனுமதி இல்லை.

காரிலும், இரு சக்கர வாகனத்திலும் செல்பவர்களுக்கு இப்பிரச்சினை அதிகமில்லை. ஏனெனில் காரில் ஏறுமிடத்திலும், இறங்குமிடத்திலும் கழிப்பறை இருக்கும். காலையே வாகனமாகவும், கைகளையே கருவிகளாகவும் பிழைப்போருக்குத்தான் சிறுநீர் அடக்குமுறை அதிகம்.

பாதையோரத்தில் போர்வைக்குள் குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள மக்களை உருவாக்கி இருக்கும் அரசுக்கு ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று

விரிவுபடுத்தப்பட்ட சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் 714 பொது கழிப்பிடம் பராமரிக்கப்பட்டு வருதாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்து மக்களும் வந்து குவியும் இந்த நகரத்துக்கு இதுவெல்லாம் எம்மாத்திரம்? இந்த எண்ணிக்கையில் பாதிக்கு மேல பராமரிப்பு இல்லாமல், பயன்படுத்த முடியாமல்தான் இருக்கும். கழிப்பிடத்தின் முன்னாடி கறைபடிஞ்ச நாலுபக்க சுவரும் நடுப்பகுதியில் ஒரு ஓட்ட பீங்கானும் மட்டும் உள்ள இந்த் கழிப்பறைகளுக்கு  கதவோ, தண்ணியோ முறையான பராமரிப்போ கெடையாது.

சுகாதாரமான கழிப்பறை கட்டுரோம், புனரமைக்கிறோம்னு சொல்லி ஆட்சி மாற்றத்தில் அந்தந்த பகுதி அரசியல் குண்டாந்தடிகள் சிமெண்டு சுவற்றைச் சொரண்டிட்டு கலர் போட்ட டைல்சு கல்லை பதிக்கிறார்கள். வெளிச்சுவரில் எந்த மந்திரி பொறுப்புல கட்டப்பட்டதுன்னு கல்வெட்டில் விளம்பரம் செய்கிறார்கள். இன்னொருபுறம் சுகாதார பிரிவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மேலிருந்து கீழ் வரை எவ்வளவு சுருட்ட முடியுமோ அவ்வளவு சுருட்டுகிறார்கள்.

பொது இடத்தில் திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்போருக்கு ரூ200 முதல் 500 வரை அபராதம் விதிக்க வேண்டுமென்று மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் 2015-ம் ஆண்டில் ஓலை அனுப்பியது. பொது இடங்களில் தூய்மையை பராமரிக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை என்பதாக மத்திய அரசு விளக்கமும் கொடுத்தது. தற்போது மோடி அரசு சினிமா கொட்டாய் முதல் இணையத் திண்ணை வரை கிராமப்புறத்து வீடுகளில் கழிப்பறை கட்டுமாறு உபதேசிக்கிறது. வீடுகளில் அதிக நேரம் இல்லாமல் வேலை நிமித்தம் பொது இடங்களில் இருக்கும் மக்களுக்குத்தான் சிறுநீர் அவஸ்தைகள் அதிகம். அது குறித்து மோடிக்கு யார் வகுப்பு எடுப்பது?

ஆகவே பொதுக்கழிப்பறைகள் கட்டாமல் தொழிலாளிகளுக்கு டாஸ்மாக்கும், முதலாளிகளுக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கட்டி வைத்து தப்பு செய்யும் அரசுகளின் மேல்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி - வினவு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்