/* up Facebook

Sep 20, 2016

ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது: பா. ஜீவசுந்தரி


ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது. என் நண்பர்களில் பலர் எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். குறிப்பிட்ட அந்த நடிகையின் அழகில் மயங்கி, கிறங்கிப் போய் மிகுந்த அழகியலோடும் ரசிப்புத் தன்மையுடன்தான் எழுதியிருக்கிறார்கள். தவறில்லை. ஒரு நடிகையைப் பிடிக்கா விட்டால், மட்டையடியாக அடித்து விமர்சிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை. பெண் தோழமைகள் பலருடன் பேசிப் பார்த்ததில் அவர்களும் கூட நடிப்பை விட நடிகைகளின் அழகையே முதலில் ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பின்னரே படத்தின் உள்ளடக்கம், நடிப்பு பற்றி பேச்சு திரும்பும். பெண்களே மயங்கிக் கிறங்கிய நடிகையர் பலருண்டு.

கலர் படங்களை விட கருப்பு வெள்ளைப் படங்களே கிறங்க வைப்பவையாகவும் இருந்திருக்கின்றன. என் தோழி அமரந்த்தாவும் நானும் பேசிக்கொள்ளும்போதோ, சேர்ந்து படங்கள் பார்க்கும்போதோ ‘நர்கீஸ், நூதன், மதுபாலா, வைஜயந்திமாலா, பத்மினி, சாவித்திரி இப்படி பழைய நடிகைகள் திரையில் தோன்றினாலே திரைக்கே சற்றுப் பளபளப்புக் கூடி விட்டதாகப் பேசிக் கொள்வோம். அப்படி பல்லாயிரம் முறை எங்கள் வீட்டுச் சின்னத்திரையும் பளபளப்புடன் ஜொலித்திருக்கிறது.

’சினிமா ராணி’ டி. பி. ராஜலட்சுமி. அவர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்து சினிமாவுக்கு வந்தவர். முதல் பேசும் படத்தின் நாயகி. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுத்தவர். இதோடு மட்டும் அவர் பங்களிப்பு முடிந்து விடவில்லை. திரைக்கதை அமைத்தார், வசனம் எழுதினார். திரைப்படங்களை இயக்கினார். தயாரித்தார். சமூக சீர்திருத்த நாவல்கள் எழுதினார். காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அது மட்டுமல்ல, சினிமா பற்றி பொது வெளிகளில் கருத்து சொல்பவராகவும் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு உரிய மதிப்பை ஊடகங்கள் வழங்கவில்லை. ‘அப்போதே புகழ் பெற்ற நாடக நடிகையாக இருந்தபோதும், அந்தப் படமே அவர் பெயரை மட்டும் பயன்படுத்தியே விளம்பரம் செய்யப்பட்டது என்றபோதும் அவரை ‘அவள்’ என்று விளித்துதான் ’சுதேசமித்திரன்’ நாளேடு எழுதியது. திரைப்பட, நாடகக் கலைஞர்கள் ‘கூத்தாடிகள்’ என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கப்பட்டார்கள். ஆண் கலைஞர்களுக்கே பெரிய மதிப்பில்லாதபோது, பெண் கலைஞர்களுக்கு மட்டும் மதிப்பு எங்கிருந்து வரும்? !

கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ்.டி சுப்புலட்சுமி இப்படி இவர்களில் ஆரம்பித்து அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம் எனத் தொடர்ந்து, என்.சி.வசந்த கோகிலம், மனோரமா வரையான சினிமாப் பெண்களுடன் பயணிப்பதும் அவர்கள் வாழ்க்கையை உள்ளூர நாமும் வாழ்ந்து பார்ப்பதும் ஒரு ரசிகைக்கு மிகவும் சுகமான, அதே நேரம் கனமான விஷயமும் அனுபவமும் கூட. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து நொறுக்க, மறு கட்டமைப்புச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள். வரலாற்றில் இவர்களின் பங்கு உரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை அல்லது அவர்களின் உலகம் ’கிசுகிசு’க்கள் போன்ற அவலங்களால் நிரப்பப்பட்டு வந்தது. அவர்கள் அழகுப் பதுமைகள். அந்தப் பதுமைகளை மேலும் அழகாகக் காண்பிக்க வேண்டும். ரசிகன் (ரசிகை?) அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்பது கலை தோன்றும் முன்பாகவே எழுதப்பட்டு விட்ட சட்டம் போல. அல்லது எழுதப்படாத சமூகவியல் விதிகளைத் தூக்கி நிறுத்தும் சக்தியாய், தாயாய், தியாகியாய் எதிரொலிக்க வேண்டும். மற்றபடி சமூக உற்பத்தியில் சமூக விழுமியங்கள் உருவாக்கத்தில் ஒரு பாதியான இந்தச் சமுதாயத்துக்கு வேறு எந்தப் பங்கும் கிடையாது. இதற்கு எதிராக எதையுமே செய்ய முடியாமல் உறைநிலையில் வைக்கப்பட்ட செல்லுலாய்டு ஓவியங்கள் இவர்கள்.

இப்போதும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்று சம்பாதித்து விட வேண்டும் என ஒரு ஆண், பெட்டி படுக்கையுடன் சென்னை வந்து வெற்றி பெற்றால் அவன் பெற்ற வெற்றி மதிக்கப்படுகிறது. ஆனால், அதே நோக்கத்துடன் பெண் ஒருத்தி சென்னை வந்து வெற்றி பெற்றால் அந்த வெற்றிச் சரித்திரம் வேறு மாதிரிதான் பேசப்படுகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இப் பொதுப்புத்தியில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை.
பத்திரிகையாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘ரசிகை பார்வை’ நூல் முன்னுரையிலிருந்து…

ரசிகை பார்வை இன்று முதல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். கயல்கவின் வெளியீடு.

நன்றி - thetimestamil.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்