/* up Facebook

Aug 28, 2016

கற்பை நிர்ணயிக்க நாம் யார்? - என்.ரமேஷ்


கன்னித்தன்மைப் பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை

ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்களின் ஒழுக்கத்தைச் சந்தேகப்படுவது, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் கொடூரம். பெண்களின் ‘கற்பை’ச் சோதனையிடுவதும் நிர்ணயிப்பதும், அதைக் காரணமாகச் சொல்லி அவர்களின் வாழ்க்கையையே சிதைப்பதும் இன்னமும் பல இடங்களில் நடப்பதுதான் இன்னும் வேதனை!

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தின் நாசிக்கில், போலீஸ் வேலையில் சேரப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த 25 வயதுப் பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது திருமணம். இருவரும் ‘கஞ்சர்பாத்’ என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றும் சமூகம் அது. கண்காணிக்கவும், தண்டனை வழங்கவும் ‘சாதிப் பஞ்சாயத்து’ உள்ளது. அதை மீறி யாரும் காவல்துறைக்கோ நீதிமன்றத்துக்கோ செல்ல முடியாது. திருமணமான அன்றே தனது மனைவியை விவாகரத்து செய்தார் அந்த மனிதர், மனைவி கன்னித்தன்மை இழந்தவர் என்ற புகாருடன். அவருக்குத் துணை நின்றது, அச்சமூகத்தின் விநோதமான ‘விதிமுறை’.

அந்தச் சமூகத்தில் பெண்களின் கன்னித்தன்மைக்கு ‘சாதிப் பஞ்சாயத்து’அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. முதலிரவின்போது, தம்பதிகள் இருக்கும் அறைக்கு வெளியில் பஞ்சாயத்தார் காத்திருப்பார்கள். வெண்மையான துணி விரிப்பின் மீதுதான் முதலிரவு நடக்கும். அவர்களைப் பொறுத்தவரை, துணிவிரிப்பில் படும் ரத்தக் கறைதான் மணப்பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனை. உறவின்போது மனைவிக்கு ரத்தம் வரவில்லை. எனவே, அவள் ‘கன்னித்தன்மை அற்றவள்’ என்றார் அந்த நபர். அவருக்கு இது இரண்டாவது திருமணம். இரண்டாவது மனைவியும் கன்னியாகத்தான் வேண்டும். என்ன புனிதம் பாருங்கள்!

கண்டுகொள்ளப்படாத கண்ணீர்

தான் கன்னிதான் என்றும், கடுமையான உடற்பயிற்சி காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு ரத்தம் வராமல் இருந்திருக்கலாம் என்றும் கதறினார் அந்தப் பெண். அதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. தாலி கட்டிய ஒரே நாளில் திருமணத்தை ரத்து செய்துவிட்டது பஞ்சாயத்து. அடுத்த நாள், போலீஸில் புகார் செய்ய மணப் பெண்ணும் அவர் தாயாரும் தயாரானபோது, சாதிக் கட்டுப்பாட்டுக்குப் பயந்த அப்பெண்ணின் தந்தை, அவர்களிடமிருந்த செல்பேசியைப் பிடுங்கிக்கொண்டு இருவரையும் அறையில் பூட்டிவைத்தார். சம்பவத்தைக் கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு மூலம்தான், விஷயம் வெளியில் வந்தது.

கற்பு என்பது மனம் தொடர்பானது. கன்னித்தன்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. தன் விருப்பம் இல்லாமல், சூழ்நிலை காரணமாகப் பலாத்காரம் செய்யப்பட்டவரைக் கற்பிழந்தவராகக் கருத முடியாது. கற்பும் கன்னித்தன்மையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அதனால்தான் ‘கற்பு நிலை என்று சொல்லவந்தார் / இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ என்றார் பாரதி. ஆனால், கற்பும் கன்னித்தன்மையும் பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று பொதுப் புத்தியில் உறைந்துபோயிருக்கிறது.

‘கஞ்சர்பாத்’ சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களில் இந்தக் கொடூரமான முட்டாள்தனம் பின்பற்றப்படுகிறது. சோதனையில் தோல்வியுறும் பெண்ணின் திருமணம் உடனடியாக ரத்து செய்யப்படும். அவர் யாருடன் முதல் உறவு கொண்டார் என்று கேட்டு, அவரைச் சித்ரவதையும் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை கன்னிப் பெண் என்றால், முதல் உறவின்போது ரத்தம் வர வேண்டும். சைக்கிள் ஓட்டுவதன் மூலமோ அல்லது உடற்பயிற்சியின்போதோ கன்னித்திரை கிழியும் என்பதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். ஏற்கெனவே, உறவுகொண்டதாக ஒப்புக்கொண்டால், அந்தப் பெண்ணின் தந்தைக்குப் பஞ்சாயத்து அபராதம் விதிக்கும்.

இதுதொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாநில போலீஸாருக்கு மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகைமுரண் என்னவென்றால், இந்தியாவிலேயே முதன்முதலாக, சமூகப் புறக்கணிப்புக்கு எதிராகவும், சாதிப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகவும் 2016-ல் சட்டம் நிறைவேற்றியது மகாராஷ்டிர மாநிலம்தான். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டத்துக்குப் புறம்பான இது போன்ற அமைப்புகளுக்கும், மனிதத்தன்மையே இல்லாத விதிகளுக்கும் முடிவு கட்டப்படலாம்.

அநாகரிகம்

2013-ல் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுஹான் தலைமையில், ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. அப்போது, அப்பெண்களில் பலர், மாவட்ட அதிகாரிகளால் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009-லும் இதே போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவில், சமீபகாலம் வரை பாலியல் வல்லுறவு வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘கன்னித்தன்மை அற்றவர்கள் உறவுக்குச் சம்மதித்திருக்கலாம் என்ற அனுமானம் தவறானது. எனவே, கன்னித்தன்மை பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று 2013-ல் பி.எஸ்.சவுஹான் மற்றும் எம்.எம்.கலிபுல்லா ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு சொல்லிவிட்டது. ஆனாலும், சில நீதிமன்றங்கள் கன்னித்தன்மை பரிசோதனையைப் பின்பற்றுகின்றன.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானவர்களிடம் அவர்களது கன்னித்தன்மையை உறுதிசெய்ய பெண்களின் பிறப்பு உறுப்பில் நடத்தப்படும் இரு விரல் சோதனை அறிவியல் பூர்வமற்றது என்று கூறி அதைத் தடைசெய்தது மத்திய சுகாதார அமைச்சகம்.

பல நாடுகளில் கன்னித்தன்மை பரிசோதனை உள்ளது. பெரும்பாலும் பெண்களின் கன்னித்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்புவது கணவர்கள்தான். சில நாடுகளில் அரசுத் துறைகளே அந்தக் கேள்வியைக் கேட்கின்றன. தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு வருடமும் ‘ரீட் டான்ஸ்’ என்ற அரை நிர்வாணக் கலை நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்துகொள்ளப் பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 2016-ம் ஆண்டு புதிய விதியின்படி, இந்தோனேசிய ராணுவத்தில் சேர, ஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுவரை அந்நாட்டு போலீஸில் பெண்கள் சேர கன்னித்தன்மை சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கம் ஆட்சேபணை செய்ததால் இந்த நிபந்தனை நீக்கப்பட்டது.

பட்டியல் இன்னும் முடியவில்லை. ஈரானில், ஏடெனா ஃபர்கடானி என்ற கார்ட்டூனிஸ்ட், தன் ஆண் வழக்கறிஞருடன் கைகுலுக்கினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 1970-களில் திருமண விசாவில் பிரிட்டனுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களுக்கு அந்த நாட்டு அரசு கன்னித்தன்மை பரிசோதனை நடத்திய வரலாறு உண்டு.

பெண்கள் உலகமெங்கும், எல்லாத் துறைகளிலும் பல தடைகளை உடைத்து முன்னேறி நாட்டை ஆள்கிறார்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். எத்தனையோ சாதனைகளைச் செய்துவருகிறார்கள். ஆனால், திருமணம் என்று வரும்போது, தங்கள் ஒழுக்கத்தை நிரூபிக்க இப்படியெல்லாம் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். கன்னித்தன்மை பரிசோதனை என்பது பெண்களுக்கு எதிரான மனம் மற்றும் உடல்ரீதியான கொடுமை என்பதைச் சமூகம் உணர வேண்டும். இது அவர்களது தனி உரிமையில் தலையிடும் விஷயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதற்கெனத் தனியான சட்டமோ அல்லது சிறப்புச் சட்டமோ தேவையில்லை. இருக்கும் சட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். அதைச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மக்களின், சமுதாயத்தின் பொறுப்பும்கூட!

- என்.ரமேஷ், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: nrameshadvocate@gmail.com

நன்றி - தி  ஹிந்து
...மேலும்

Aug 25, 2016

என் கதை – கமலாதாஸ்


மலையாளத்தில் பிரபல்யமான எழுத்தாளரான கமலாதாஸின் என் கதை சுயசரிதை பெண் படைப்பாளிகளால் எழுதப்பட்ட சுயசரிதைகளில் மிக முக்கியமான சுய சரிதை நூல். காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் குமுதம் இதழிலும் வெளிவந்ததாக தெரிகின்றது. குமுதம் பொதுவாகவே இது போன்ற சுயசரிதைகளை தங்களது வணிக லாபங்களுக்காக பாலியல் பண்டங்களாக மாற்றிவிடுவார்கள். 

குடும்பம் என்ற அமைப்பினுள் இருந்தவாறே தனது வாழ்க்கையின் உன்னதங்களை பதிவாக்கியுள்ளார். குடும்பம் என்ற அமைப்பை ஒரு அனுதாபத்துடனேயே பார்க்கின்றார். “நான் நோயுற்ற சமயத்தில் என் கணவருக்கும் எனக்குமிடையில் உடல் சார்ந்த நெருக்கம் உருவானது” “உடல் சார்ந்த அந்தப் பாசத்தை அன்புக்கு ஈடாக பெற்றுக் கொண்டேன்” என்கின்றார். குடும்ப முறையில் உள்ள ஆணாதிக்க வெளிப்பாட்டை பிறிதொரு இடத்தில் வெகு அழகாக வெளிப்படுத்துகின்றார் “ எளது உடலுக்கு மிதமிஞ்சிய சுதந்திரத்தை கொடுத்து அனுமதித்து விட்டு ரகசியமான முறையில் என் கணவர் என் ஆத்மாவைச் சிறைப்படுத்தினார்” “ வேறோர் ஆணின் விரல் அடையாளங்கள் பதிந்த கைகளுடன் வீட்டுக்குத் திரும்பி வரும்போது தாஸேட்டன் (கணவன்) என்னை மூர்க்கமாக கட்டியணைப்பார்”. தனது கணவனுடான முதல் உறவு மூர்;க்கமானது;, அந்த உடலுறவு எனக்கு அதிர்ச்சியையும், தொந்தரவையும் தந்தது என நினைவு கூறுகின்றார்.

தனது வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களுடான உறவையும் வெகு வெளிப்படையாகவும், இயல்பாகவும் அதே சமயம் எந்த வித குற்றயுணர்வுமின்றி வெளிப்படுத்தியுள்ளமை அவரது சிறப்பாகும். கார்லோவுடனான தனது உறவினை வெளிப்படுத்தும் விதமே தனித்துவமானது “ கார்லோவுடன் செலவழித்த நேரங்களில் நான் கமலாவாக இருக்கவில்லை. நான் வேறொருத்தியாக மாறினேன். எனது பிறப்பின் வேறோர் இதழாக மாறிவந்தது அந்த வாழ்க்கை 

தான் சிறிய வயதில் வாழ்ந்த வீட்டை “தொலை தூரத்திலிருக்கின்றபோதும் எனக்கு அன்பை அளித்தந்த வீடு” என கவிதை ஒன்றில் எழுதியுள்ளார். சுய சரிதையிலும் அவ் வீட்டிற்கு முக்கியத்துவமளித்துள்ளார்.

கமலதாசின் சுய சரிதை சர்ச்சைகளை ஏற்படுத்த காரணமாகவிருந்த முக்கிய விடயம் சமூக ஒழுக்கம். ஒழுக்கம் பற்றிய இவரது கருத்துக்கள் முக்கியமானவை. இன்றைய காலகட்டத்தில் இதன் கூறுகள் விவாதிக்கப்பட வேண்டும். பெண்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒழுக்க விதிகள் அனைத்தும் ஆணாதிக்க சமுதாயத்துக்கு சார்பானவை. கமலதாஸ் தனது சுயசரிதையில் பின்வருமாறு கூறுகின்றார் “அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும் வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்” “ஒழுக்க நெறி என்ற பெயரில் நம்மிடையே விவாதிக்கப்படுவதைப் புறக்கணிக்கவும் ஏற்க மறுக்கவும் தீர்மானித்தற்கு காரணம் உண்டு. அழுகிப் போகும் உடலே அதனுடைய அடித்தளமாகவிருந்தது. மனிதனின் மனமே உண்மையான ஒழுக்க நெறிக்கு ஆதாரமாக விளங்குகின்றது”. கமலதாஸின் ஒழுக்க நெறி பற்றிய கருத்துக்கள் ஆணாதிக்க சமூகம் பெண் உடல் மீது சுமத்தும் அடிமைச் சாசனமாகவே உள்ளன என்பதனை தெளிவுபடுத்துகின்றன. உண்மையும் அதுவே.

இவரது சுயசரிதை ஆங்கிலத்தில் வெளிவந்த காலத்தில், சோபா டி என்ற பத்தி எழுத்தாளரின் நூல்களும் வெளிவந்தன. சோபா டி யும் கமலதாஸ் எழுதிய விடயங்களையே எழுதியிருந்தார். ஆனாலும் சோபா டி க்கு எதிரான விமர்சனங்கள் ஒன்றுமே வெளிவரவில்லை என்றே கூறலாம். கமலாதாஸின் சுயசரிதை சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பேட்டியில் அவர் இது பற்றியளித்த பதிலிது.

Now Shobha De writes about sex and nobody criticises her. When you wrote about love...
Kamaladas: Shobha De is different. Shobha De writes what probably she enjoys. I may have written about love affairs, but I have not glorified lust. There was nothing obscene about love. My love was fashioned after the love of Radha and Krishna. There is something very beautiful about love. I cannot think of it as something horrible.

இவர் தனது கதையில் அன்பைத் தேடும் ஒரு ஜீவனாகவே தென்படுகின்றார். அவரது கவிதை வரிகளே அதற்கு சாட்சியாக உள்ளது
“நான் ஒரு ஆணைச் சந்தித்தேன்இ காதலித்தேன். அவனுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லா ஆண்களையும் போல் அவன் விரும்பியது ஒரு பெண். எல்லாப் பெண்களையும் போல் நான் விரும்பியது காதல்.

அவனுக்குள் நதிகளின் தீராத தாகம்.
எனக்குள் சமுத்திரங்களின் ஓயாத ஏக்கம்”

O sea, i am fed up 
I want to be simple 
I want to be loved 
And 
If love is not to be had, 
I want to be dead, just dead - (The Suicide)

இளம் வயதில் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட கமலதாஸ், தான் குழந்தைகளுடன் இணைந்து தானும் வளர்ச்சி பெற்றதாக குறிப்பிடுகின்றார். மாதவிக் குட்டி பின்னர் கமலதாசாகி பின்னாட்களில் முஸ்லீம் மதத்திற்கு மாறிய பின்னர் சுரையா என பெயரெடுக்கின்றார். மதம் இவரது வாழ்க்கையில் முக்கிய பங்களிக்கின்றது. கிருஸ்ணனின் அறிமுகத்துடன் மதம் மீதான நம்பிக்கைகளை பின்பற்றுகின்றார். இறைவனை தோழானாக பார்க்கின்றேன் என்று குறிப்பிடும் கமலதாஸ் “நாம் மூன்று உண்மைகளை மட்டுமே புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. கடந்த காலத்தில் பிறப்பு, நிகழ்காலத்தில் வாழ்க்கை, எதிர்காலத்தில் மரணம்” என்கின்றார். “மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்பு வைக்க சுதந்திரம் இல்லாத எந்த மதமும் எனக்கு வேணாம். மதத்தை எல்லாம் விட்டுட்டுஇ இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு” இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் இவர் மதத்தின் மீதான பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

ஒரு மேலாதிக்க சமூகத்தின் மதிப்பீடுகளுடன் வாழ்ந்த கமலதாஸ் அதன் முக்கிய கூறான மதத்தை விட்டு வெளியேறவில்லை. கலாச்சார கூறுகளை உடைத்து பெண் உடலை ஆணாதிக்க சமூகம் ஒரு பண்டமாக பார்க்கும் நிலையை வெளிப்படுத்தும் கமலதாஸ், கலாச்சாரத்தின் தோற்றத்தில் பங்களிக்கும் விடயங்களையும் கவனத்திலெடுத்திருக்கலாம். 

இவரது சுயசரிதையைப் போன்றே, இவரது சிறு கதைகளும், கவிதைகளும் மிக முக்கியமானவை. இவரது எழுத்துக்கள் நிச்சயம் ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களின் சிந்தையை சற்றாவாது மாற்றும். பெண் எழுத்துக்களின் வலிமையை மேலும் வலுவாக்கும். 

பிற்குறிப்பு
ஜெயமோகன் இவரையும் விட்டு வைக்கவில்லை.
“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பானஇ குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…

“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”

ஜெயமோகன் போன்ற ஆணாதிக்கவாதிகளின் ஆதிக்கத்தை இவரது கருத்துக்கள் உடைக்கின்றன. கமலதாஸின் சுயசரிதை ஜெயமோகன் போன்றோரின் முகத்திரையை கிழித்துவிட்டன. அதனை தாங்க முடியாமல் கூறிய கருத்துக்களே மேலே உள்ளவை. பாவம் அந்த ஜெயமோகன்.
சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரத்தைப் பற்றிய இவரது கவிதை இங்கே பதிவாகின்றது. இதனை சுகுமாரன் மொழி பெயர்;த்துள்ளார்.
.”
ஜூலைக்குப் பிறகு ...
அந்த ஜூலைக்குப் பிறகு
கொழும்பு நகரத்தில்
தமிழர்களை வெளியில் பார்க்கவில்லை
மண்டபங்களில்
அரங்கேற்றங்கள் இருக்கவில்லை
பெண்களின் கூந்தலுக்கு வாசனை பகிர
முல்லைச்சரங்களுடன்
ஒரு பூக்காரியும் வாசலில் வரவுமில்லை.
வெருண்ட எலிகள்போல
அவர்கள் பொந்துகளில் ஒளிந்தனர்
அவர்களது உடல்களில்
எலியின் நாற்றமிருந்தது.
சாணமும் செம்பும் வெடிமருந்தும் கலந்த நாற்றம்
அவர்கள் வேட்டையாடப்பட்டவர்களாக இருந்தனர்
அவர்களது அறைகளின் . . . மாலை ஒளியில்
கதவுக்குப் பின்னால் பயந்து அரண்டு
அவர்கள் நின்றார்கள்
அவர்களது விழிவெண்மைகள்
முத்துக்கள்போல மின்னின.
இறந்தவர்களிலிருந்து
ஹிட்லர் எழுந்து வந்தான்
மீண்டும் ஒரு கைத்தட்டல்
தேவைப்படுகிறது அவனுக்கு.
வலிமையான ஆரிய ரத்தத்தைப்
புகழ்ந்து பேசுகிறான் அவன்.
அவனது
முன்னாள் நண்பர்களைக் கொல்ல
உரிமைதரும் அந்த ரத்தம்
ஒரு போதையூட்டும் பானம்.
கறுத்த திராவிடன்
மகளை அணைத்து
மடியில் கிடத்திச் சொல்கிறான்:
“கண்ணுறங்குஇ மகளே,
கண்ணுறங்கு.”

- கமலாதாஸ்
தமிழில்: சுகுமாரன்

ரதன் ரகு தனது முகநூலில் எழுதிய  குறிப்பை நன்றியுடன்  பகிர்கிறோம்
...மேலும்

Aug 24, 2016

எப்படி அவர்களை மன்னிப்பேன் ?பில்கிஸை நீங்கள் மறந்திருக்கக் கூடும்! பலருக்கு இப்பதிவே முதல் அறிமுகமாகவும் இருக்கலாம்...  மறந்தவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு சுருக்கமான அறிமுகத்துடனும் கட்டுரையை துவக்கலாம்..

"ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல.. இருவரால் அல்ல... முன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்"

கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற   பெருமூச்சு வெளிப்படுகிறதா?  நம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில் , அழகான வாழ்க்கையில் , இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது! கோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது... அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில்  14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும் !


பில்கிஸ்க்கு நேர்ந்த அவலம் எதனால்? 

அவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் !!! ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை! 

சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.  

அதனை அவர் சொல்லக் கேட்போம்... 

"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.

பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.

ஆனால் ,

அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன. 

எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.

அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர். 

மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.

இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார். 

வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.

பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.

எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது. 

ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.

உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.

இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.

நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.

"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.

அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.

அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.

அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.

எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.

என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!

17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.

நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.

ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!

இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.

ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.

சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.

கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.

போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.

ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.

நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன். 

என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "

முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது. 

எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"

அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.

இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.

ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.

நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.

மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.

இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.

இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...

மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்... 

14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள். 

சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

ஆமினா முஹம்மத்

reference :
Tehelka Magazine, Vol 5, Issue 4, Dated Feb 02, 2008

...மேலும்

Aug 23, 2016

இரோம் ஷர்மிலா இனி தனக்காக வாழட்டும்: பிரேம்


ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்கக்கோரி தன் உயிரை அளிக்கவும் முன் வந்த இரோம் ஷர்மிலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு தன் உண்ணாமை போராட்டத்தை முடித்துக் கொண்டு வேறு வகையான போராட்டத்தை நோக்கிச் சென்றிருக்கிறார்.

மணிப்பூர் மண்ணிலிருந்து வரும் ஒவ்வொரு பெண்ணும் ஆணும் இரோம் ஷர்மிலா பெயரைக் கேட்டதும் கண்களில் காட்டும் ஈர நினைவு பல அர்த்தங்களைக் கொண்டது.

அமைதி, தன்மானம் கொண்ட வாழ்க்கை, தினக்கொலைகளும், வன்கொடுமைகளும் இல்லாத வாழ்க்கை இதுதான் அவருடைய கோரிக்கை அதனை ஒரு பெரும் செய்தியாக உலகம் அறியச் செய்துள்ளார்.

இனி அவர் ஒரு தியாக தெய்வமாக இருக்க விரும்பவில்லை. அந்த வலி நிறைந்த வாழ்விலிருந்து விடுபட்டு தனக்கு விருப்பமான வாழ்வை வாழ நினைக்கிறார். அரசியல்-போராட்டம் என்ற பெயரில் அவரைப் பலிகொடுக்க இனி யாருக்கும் உரிமையில்லை.
அரசின் அச்சுறுத்துதலை, அவமதிப்பை தாங்கி வாழ்ந்து வந்த அவர் ஆயுதம் கொண்ட குழுக்களின் அச்சுறுத்துதலை எதிர்கொண்டு அஞ்சி பதுங்கிவாழ வேண்டிய ஒரு நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமையான ஒரு நிலை இது.

“நான் ஒரு பறவையைப் போல சுதந்திரமாக வாழவிரும்புகிறேன். இயல்பு வாழ்க்கையை வாழ நினைக்கும் என்னை ஏன் தெய்வமாக்க நினைக்கிறார்கள். நான் சாக விரும்பவில்லை. வேண்டுமானால் என்னைக் கொல்லட்டும்.” என்ற கண்ணீர் குரல் மிகுந்த அச்சமூட்டுகிறது.
எதன் பெயராலும் அவர் மீது திணிக்கப்படும் கடமை மிகக்கொடுமையானது.

எந்த நிபந்தனையும் இன்றி அவர் தன்போக்கில் வாழ்வதை மக்களும், அமைப்புகளும் அனுமதிக்க வேண்டும். அவருக்கு நேரும் ஒவ்வொரு அவமதிப்பும் இனிவரும் தலைமுறையை அரசியல் உணர்வு பெறுவதிலிருந்து விலகித் தப்பித்து ஓடவைக்கும். அடக்குமுறை அரசுகளும், அதனை எதிர்க்கிற அமைப்புகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. தனிமனிதர்களைப் பொருளற்றவர்களாக மாற்றுகின்றன. தமது இருப்புக்காக தனிமனிதர்களைப் பலியிடுகின்றன.

இரோம் ஷர்மிலாவின் இனி வரும் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் மிகுந்த நடுக்கம் தருவதாக உள்ளது. அதிலிருந்து அவர் மீண்டு வெளியேற வேண்டும்.

யாரிடம் இருந்து அவருக்கு விடுதலை இப்போது? வரலாறு இத்தனை கொடூரமானதா?
மாலதி மைத்ரியின் கவிதையை நான் ஆங்கிலத்தில் தந்ததை மணிப்பூர் மாணவர்கள் தங்கள் அமைதிக்கான நிகழ்ச்சிகளில் நெகிழ்ச்சியுடன் படிப்பார்கள். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் தாளில் இருந்து அதை மீண்டும் மீண்டும் படித்த ஒரு நிகழ்ச்சி மனதை பாதித்தது.
அவர்கள் சொல்ல நினைப்பது ஆனால் அதை அவர்கள் சொல்ல முடியாது, ஒரு கவிதை அதைச் சொல்கிறது. இன்னொரு மொழியில் தமக்கான கவிதை எழுதப்பட்டுள்ளது என்பதே அவர்களுக்கு ஒரு தெம்பு தருகிறது. எழுத்துக்கு அப்படி ஒரு பங்கு உள்ளது.

Sharmila, My Love…

All my kisses to you return back to me futile
Locked all the entries of indulgence in your body

Streets without regimental parade
Gardens without echoes of gunshot
Villages without torture chambers
Jungles not contain mutilated bodies of women
Mere residual of your dreams

Life and justice of our land trampled under the heavy boots of soldiers
Your emaciated body, your trembling fingers desire peace on our land
Stubborn heart inside your fragile chest
Struggling constantly against bloody maniacal power
Not even mild ray of justice touches your doorway

Demonic mouth of atrocity goes on munching your tender dreams under the silent guard of hundred and ten crores.

-Malathi Maithri

(Let her live her life as she desires, like a bird or a fish or a cat but not in fear and shame)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது ‘காந்தியைக் கடந்த காந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள்.

நன்றி - https://thetimestamil.com/
...மேலும்

Aug 22, 2016

என்னைப் பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்! - நாட்டை உலுக்கும் ராணா அய்யூப் (காணொளியுடன்)


ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

முன்கதை

பூர்வீகம் உத்தரப் பிரதேசம். அப்பா அய்யூப் வகீஃப் உருது கவிஞர். ‘பிளிட்ஸ்’ பத்திரிகையில் பத்திரிகையாளர். முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்திலும் இருந்தவர். அவரைப் பின்தொடர்ந்து, ராணாவும் பத்திரிகைத் துறையில் காலடி எடுத்துவைத்தார்.

இதழியல் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு 2006-ம் ஆண்டு ‘ஆஜ் தக்’ தொலைக்காட்சியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு ஆரம்பித்த அவரது பயணம் ‘தெஹல்கா’வில் உச்சத்தைத் தொட்டது. குஜராத் கலவரங்கள், போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக அங்கு அவர் எழுதிய கட்டுரைகளால் பாரதிய ஜனதா கட்சியின் இந்நாள் தலைவர் அமித் ஷா அன்று கைது செய்யப்பட்டார்.

தெஹல்காவில் சுமார் ஏழு வருடங்கள் ‘பொலிட்டிக்கல் மற்றும் இன்வெஸ்டிகேட்டிவ் கரஸ்பாண்டன்ட்’ ஆகப் பணியாற்றினார். அப்போதைய தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு எதிராகப் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘அந்தப் பிரச்சினை நியாயமான முறையில் கையாளப்படவில்லை’ என்று சொல்லி, ராஜினாமா செய்த முதல் பத்திரிகையாளர் இவர்.

ஏன் இந்தக் கோபம்?

‘குஜராத் கலவரம் மாதிரி சென்ஸிட்டிவான விஷயத்தைத் தொட்டிருக்கீங்க. எப்படி இந்தத் துணிச்சல் வந்தது?’ என்று கேட்டதற்கு, சற்று யோசித்துவிட்டுப் பதில் சொல்கிறார்.

“நீதி! அது மட்டும்தான் என்னை உந்தித் தள்ளியது. அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும், அதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் என்று என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால்தான் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தேன்” என்றார்.

நாட்டின் பல்வேறு மூலைகளில் நடக்கும் விஷயங்களை, அங்கு நேரில் செல்லாமல் தலைநகர் டெல்லியில் இருந்துகொண்டே கட்டுரைகள் எழுதும் போக்கை, இன்றைய ஊடக உலகில் ‘லுட்டியன்ஸ் ஜர்னலிசம்’ என்று சொல்வதுண்டு. இவர் அப்படிப்பட்ட பத்திரிகையாளர் இல்லை.

குஜராத் கலவரம் மற்றும் போலி என்கவுன்ட்டர்களால் பாதிக்கப்பட்டவர்களை, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றி குஜராத்திலேயே எட்டு மாதங்கள் தங்கியிருந்து, பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளார். இதற்காக இவர் ‘வெளிநாட்டிலிருந்து குஜராத் மாநிலத்தைப் பற்றி ஆவணப் படமெடுக்க வந்திருக்கும் பெண் இயக்குநர்’ என்ற வேடமிட வேண்டியிருந்தது. அந்தக் கற்பனைப் பாத்திரத்துக்கு அவர் சூட்டிய பெயர் மைதிலி தியாகி.


உண்மைகளின் பதிவு

‘‘அந்த மைதிலி தியாகி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’’ என்றதும், சிரித்துக்கொண்டே தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ராணா அய்யூப் ஆக என்னால் அந்த மாநிலத்துக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், என் பெயர் அங்கு மிகவும் பிரபலம். பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். எனவே, ‘மைதிலி தியாகி’ ஆக மாறினேன். என் சிகை, உடை அலங்காரம் போன்றவற்றை மாற்றிக்கொண்டேன். வெளிநாட்டவர்களைப் போல ஆங்கில உச்சரிப்பை திருத்திக் கொண்டேன். இந்தியா, ஃபிரான்ஸ் நாட்டு மாணவர்கள் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தியா வந்திருந்த ஃபிரெஞ்சு மாணவர் ‘மைக்’ (இது அவரின் உண்மைப் பெயர் அல்ல) என்பவரை கேமராமேனாக நடிக்கச் சொல்லித் துணைக்கு அழைத்துக்கொண்டேன்.

ஒரு விடுதியில் மாத வாடகைக்குத் தங்கியிருந்து பல காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தோம். போகிற இடங்களிலெல்லாம், என் குர்தாவுக்குள் சிறிய கேமராவை மறைத்து வைத்துக்கொண்டு செல்வேன். எப்போதெல்லாம் ஒரு அதிகாரி சில உண்மைத் தகவல்களைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம், வேண்டுமென்றே என் பேனாவைக் கீழே நழுவவிட்டுக் குனிந்து எடுப்பேன். அப்படிக் குனியும்போது என் கேமராவை ‘ஆன்’ செய்துவிடுவேன்.

சில்லிடச் செய்த அனுபவம்

இப்படி ஒரு முறை ஒரு பெண் காவல்துறை அதிகாரியைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் நாங்கள் அறிமுகமானோம். இரண்டாம் நாள் இரவில் அவர் என்னைத் தனியே ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். ‘ஏதேனும் முக்கியமான தகவலை அவர் நமக்குத் தரப் போகிறாரோ?’ என்ற எண்ணத்துடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். அது ஒரு நெடுஞ்சாலை. சாலையின் இருபுறமும் காடு. ஆள் அரவம் எதுவுமில்லை. ஒரே ஒரு போலீஸ் ஜீப் மட்டும் நின்றிருந்தது. நான்கைந்து ஆண் கான்ஸ்டபிள்கள் இருந்தனர்.

எனக்கு வியர்த்துக் கொட்டியது. முதுகு சில்லிட்டது. அப்போது அதிலிருந்து அந்த அதிகாரி இறங்கி வந்தார். ‘நான் உன்னை ஒரு ரெஸ்டாரன்ட்டுக்குக் கூட்டிப் போகிறேன். நாம் சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்றார். ஜீப்பில் ஏறினோம். ‘இவர் நம்மை எங்கே கூட்டிப்போகிறார்?’ என்ற கேள்விதான் மனதில் அலையடித்துக்கொண்டே இருந்தது. வழி நெடுக அவர் பேசிக்கொண்டே வந்தார். என்னால் அவர் பேச்சைக் கவனிக்க முடியவில்லை. அப்போது என் அப்பா அம்மாவிடம் பேச வேண்டும் போலிருந்தது. இது என் கடைசி இரவாகக்கூட இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், நான் கடைசியாக இருந்த இடத்தையாவது அவர்களுக்குத் தெரிவித்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தேன்.

நல்லவேளை, நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. உண்மையிலேயே ரெஸ்டாரன்ட்டுக்குத்தான் போனோம். அப்போதுதான் கொஞ்சம் நிம்மதி வந்தது. உடனே நான் கழிவறைக்கு ஓடினேன். குழாயைத் திறந்துவிட்டு, அழத் தொடங்கினேன். அன்று நான் அழுத அழுகை... இன்றுவரை அழுததில்லை. இது ஒரு சம்பவம்தான். நான் தங்கியிருந்த எட்டு மாதங்களில் ஒவ்வொரு நிமிடமும் என்னை ஆபத்து சுற்றிக்கொண்டிருந்தது. நான் எந்த நிமிடம் வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருந்தது!” என்று சொல்லிவிட்டுத் தேநீரைப் பருகினார்.

‘ஒரு பெண்ணாக, அதுவும் ஒரு இஸ்லாமியராக இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய வேலையைச் செய்தது நிச்சயம் சாதனைதான்!’ என்று சொன்னதற்கு, “தயவு செய்து நான் ஒரு பெண் என்றோ, இஸ்லாமியர் என்றோ பார்க்காதீர்கள். நான் ஒரு ஆணாகவோ அல்லது இந்துவாகவோ இருந்திருந்தால்கூட, நான் செய்திருக்கும் பணிகளுக்கு வேறு சில கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே, என்னை ஒரு பத்திரிகையாளராக மட்டும் பாருங்கள்!” என்கிறார் கம்பீரமாக!

நன்றி - http://tamil.thehindu.com/
...மேலும்

Aug 15, 2016

சானிட்டரி நாப்கின்களுக்கு விடைகொடுப்போம்!


மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைப்பதில் 1990-களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றின் மூலம் ஒரு தலைமுறையே சானிட்டரி நாப்கின்களை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட யானையைப் போல சானிட்டரி நாப்கின் குப்பைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு வீட்டிலும் மலைமலையாக சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றைக் கழித்துக்கட்டுவதில் முறையான வழிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. வீட்டின் குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். பிறகு தெருவோரக் குப்பைக் கூடையில் கொட்டப்படும். இறுதியில் மனிதர்களே அவற்றைத் தங்கள் கையால் அள்ளும்படியோ, எரியூட்டிகளில் இட்டு அழிக்கும்படியோ ஆகும்.

நாப்கின்களுக்கு மாற்று

பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் தெருவோரத்தில் மலைமலையாகக் குவிக்கப்படுவதற்கு ஒரு மாற்று உள்ளது. அதுதான், சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய். ‘இந்தியாவில் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய்’ (Sustainable Menstruation India) என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் சமூகம் இயங்கிவருகிறது. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளார்கள். தினசரி மேலும் பலர் அதில் இணைந்துகொண்டிருக்கிறார்கள். மீண்டும் பயன்படுத்தத் தக்க ‘துணி அணையாடை’ (cloth pad), மாதவிடாய்க் குப்பி (menstruation cup) போன்ற சூழலுக்கு உகந்த வழிமுறைகளைப் பெண்கள் பின்பற்றுவதற்கு இந்த ஃபேஸ்புக் சமூகத்தினர் ஊக்கமளிக்கின்றனர். இதற்குக் கிடைத்துவரும் வரவேற்பைப் பார்த்தால் இந்தப் பரிவாரத்தில் இணையும் பெண்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றே தெரிகிறது.

“எனக்குத் தெரிந்து மாதவிடாய்க் குப்பியைப் பயன்படுத்தியவர்கள் எல்லாம் அதன் பெருமை குறித்து ஊருக்கெல்லாம் உரக்கச் சொல்ல வேண்டுமென்ற பரவசத்தில் இருக்கிறார்கள்” என்கிறார் அந்த ஃபேஸ்புக் சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவரான மாலினி பர்மார். மாதவிடாய்க் காலத்தில் உடலுக்கு ஊறு விளைவிக்காத இந்த சிலிக்கான் குப்பிகளைப் பெண்ணுறுப்புக்குள்ளே பொருத்திக்கொண்டால் மாதவிடாய் ரத்தம் இந்தக் குப்பியில் சேகரமாகும். ரத்தத்தைக் கழித்துக்கட்டிய பிறகு சுத்தப்படுத்திவிட்டு இந்தக் குப்பியை மறுபடியும் பயன்படுத்திக்கொள்ள முடியும். என்ன ஒன்று, இதைத் தங்கள் உறுப்புக்குள் வைத்துக்கொள்வதற்குப் பெண்கள் பழக்கப்பட வேண்டும்.

“எப்போதும் இரண்டுவிதமான கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன். முதலாவது, ‘அந்தக் குப்பி உடலுக்குள் தொலைந்துபோய்விடுமா?’ என்ற கேள்வி. பெண்ணின் உடல் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது அதற்குச் சாத்தியமே இல்லை என்பது நமக்குத் தெரியும்” என்கிறார் மாலினி பர்மார். இரண்டாவது கேள்வி, ‘அந்தக் குப்பியால் கன்னித்திரைக்கு ஏதாவது சேதம் ஏற்படுமா?’ என்பதுதான். “விளையாட்டு, உடற்பயிற்சி, ஓட்டம் போன்றவற்றின்போது கன்னித்திரை சேதமடைய எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அதே அளவிலான வாய்ப்புதான் இந்தக் குப்பியை வைத்திருக்கும்போதும்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனாட்சி பரத். இந்தக் குப்பிகளை முதல் தடவை பயன்படுத்துவோர் எழுப்பும் கேள்விகளுக்கு இந்த ஃபேஸ்புக் பக்கத்திலுள்ள பெண்கள் பதிலளிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைக் களைவதற்காகவும் சூழலுக்கு ஊறுவிளைவிக்காத மாதவிடாய் வழிமுறைகள் குறித்தும் பெங்களூருவில் பயிலரங்கங்கள் நடத்துகிறார்கள்.

பதின்பருவத்தினருக்கு இந்தக் குப்பிகள் பொருத்தமாக இருக்குமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். “பதின்பருவப் பெண்ணும் அவளுடைய தாயும் கலந்து பேசித்தான் இந்தக் கேள்விக்கு விடைகூற முடியும்” என்கிறார் மாலினி பர்மார். அவருடைய 11 வயது மகள் தற்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி அணையாடைகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் குப்பிகளைப் பயன்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார். துணி அணையாடைகளைத் துவைப்பது அசௌகரியமான ஒன்று என்ற எண்ணத்தை மறுக்கிறார் பர்மார். “என் மகள் அவற்றை ஒன்றுக்குப் பல முறை துவைத்து அலசி, அவற்றை உலர்விப்பானில் மற்ற துணிகளுடன் காயவைக்கிறாள். கொஞ்சம் ரத்தக் கறை உள்ள துணியை மற்ற துணிகளுடன் கலக்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்கிறார் மாலினி பர்மார்.

மாதவிடாய்க் குப்பிகளும் துணி அணையாடைகளும் பெண்களின் உடல் நலத்துக்கு ஏற்றவை என்கிறார் டாக்டர் மீனாட்சி பரத். “சந்தையில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்களில் அஸிட்டோன், ஸ்டைரீன் போன்ற வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றால் மாதவிடாய்க் காலத்தில் இசிவு (இசிவு - வலியேற்படுத்தும் திடீர் தசை இறுக்கம்) அதிகரிக்கலாம். சானிட்டரி நாப்கின்களைக் கைவிட்டு மாற்று வழிகளைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகு அழற்சிகளும் குறைந்திருப்பதாகப் பல பெண்கள் சொல்கிறார்கள்” என்கிறார் மீனாட்சி பரத்.

சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்த பின் அவை எங்கு செல்கின்றன, என்னவாகின்றன என்பதைப் பார்க்கும்படி ‘சூழலுக்கு ஊறு விளைவிக்காத மாதவிடாய்’ குறித்த பிரச்சார இயக்கத்தினர் வலியுறுத்துகின்றனர். “கழிவுநீர்க் குழாய்களும் சாக்கடைகளும் அடைத்துக்கொள்வதற்குப் பெரிய காரணம் சானிட்டரி நாப்கின்களே. குப்பைக் கூடையிலும் குப்பைத் தொட்டியிலும் போட்டால் அவை மனிதர்களால் கையாளப்பட்டு, தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடும்” என்கிறார் இந்த ஃபேஸ்புக் சமூகத்தின் உறுப்பினர்களுள் ஒருவரான ஹரிஸ்ரீ பாபு. எரியூட்டிகளின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அரசுகள் முனைப்பாக இருக்கின்றன. எரியூட்டிகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை எரித்தழிப்பதால் புற்றுநோயை விளைவிக்கும் டையாக்ஸின்கள் காற்றில் ஏராளமாகக் கலக்கக்கூடும்.

பெண்களுக்கான கழிப்பிடங்களில் மட்டும் குசுகுசுவென்று பேசிக்கொள்ளும் விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்தப் பிரச்சாரம். பெண்களின் மாதவிடாய் ரத்தம் என்பது அசுத்தமானது, அவற்றை ‘கழித்துக்கட்டிவிட்டு மறந்துவிடுவது’ உசிதம் என்பதுபோன்ற அசைக்க முடியாத நம்பிக்கைகளை இந்தப் பிரச்சாரம் கேள்வி கேட்கிறது. குப்பைகளால் நகரங்கள் மூழ்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதைத் தடுத்து நிறுத்தவும், தங்கள் ரத்தம் எங்கே செல்கிறது என்று பார்க்கவும் பெண்களைத் தூண்டுகிறது இந்த இயக்கம்!

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை
...மேலும்

Aug 14, 2016

அறிவோம் தெளிவோம்: அனுதினமும் தாய்ப்பால் தினமே!


ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. பச்சிளங் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டே தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே தாய்ப்பால் தினம்தான். நம்மிடையே தாய்ப்பால் குறித்த கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் ஏராளம். ஏன் ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம் என்பதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த இந்தியா ஹோம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அனிதா ஆரோக்கியசாமி.

உயிர் வளர்க்கும் அமுதம்

தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டசத்துக்களும் நிறைந்திருக்கின்றன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். தாய்ப்பால் குடித்தால்தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற வியாதிகள் வராமல் குழந்தைகளைப் பாதுக்காக்கலாம். ஆறு மாதம்வரை தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதமாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்து அரைமணி நேரத்திற்குள் பால் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்தக் குழந்தைக்குப் பால் குடிக்கும் ஆசை குறைந்துவிடும்.

வலுப்படும் தாய்-சேய் உறவு

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வாசனையை உணர முடியும். அதனால்தான் பசிக்கும்போது குழந்தை தன் அம்மாவைப் பார்த்து அழுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பந்தம் வலுப்பெறுவதுடன் இருவருடைய ஆரோக்கியமும் மேம்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும்போது பெண்களின் உடலில்ஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் வெளியாகுவதால், கருப்பை பழைய அளவைப் பெற உதவுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் உடல் பெருத்துவிடும் என்பது கட்டுக்கதை. உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் எடை குறையும். சரியாக தினமும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய் ஒரு நாளில் 600 கலோரிகளைக் குறைக்க முடியும். அதனால் பிரசவத்துக்கு முன்பு இருந்த எடைக்குத் திரும்ப முடியும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் மற்றும் கர்பப்பை சம்பத்தப்பட்ட புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

உணவு முக்கியம்

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய் எடுத்துக்கொள்ளும் உணவு மிகவும் முக்கியமானது. கீரை, பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்கள், இரும்புச் சத்துள்ள அனைத்து உணவுகளையும் உட்கொள்ளலாம். காரமான உணவு வகைகள், டீ, காபி, சோடா போன்றவற்றையும், ஆரோக்கியமில்லாத உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

வேலைக்குப் போனாலும் பாலூட்டலாம்

வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலைச் சேகரித்து வைத்துக்கொள்ள ‘BREASTFEED PUMPS’ உதவுகின்றன. இவற்றில் தாய்ப்பாலைச் சேகரித்துவைத்துவிட்டு அலுவலகத்துக்குப் போகலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சிறிய தேக்கரண்டி மூலம் அந்தப் பாலைக் குழந்தைக்குப் புகட்டலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உடல் நிலை சரியில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. அந்த நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால் அது குழந்தையைப் பாதிக்காது.

ஊட்டச்சத்து குறைவாக இருப்பவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. இதற்கென தனியாக பணம் செலவு செய்து ஊட்டச்சத்து பானங்களை அருந்த வேண்டிய அவசியமில்லை. மூன்று வேளையும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டாலே போதும். தினமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதன்முறையாகத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குச் சிறிது சங்கடமாக இருக்கும். ஆனால் சில நாட்களில் அது பழகிவிடும். தாய்ப்பால் கொடுக்கும்போது உட்கார்ந்த நிலையில் கொடுப்பது நல்லது. அப்போதுதான் குழந்தைக்குப் பால் குடிக்க எளிதாக இருக்கும்.

தாய்ப்பால் சுரக்க

தாய்ப்பால் சுரக்க, தண்ணீர்விட்டான் கிழங்கை உலரவைத்து மாவாக்கிக்கொள்ளுங்கள். அதில், உளுந்து, பச்சரிசி, மிளகு, பச்சைப் பயறு, சீரகம் ஆகியவற்றைப் பொடித்துச் சேர்த்துச் சாப்பிட்டுவர தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை இருக்கிறவர்கள் தாய்ப்பால் வங்கிகளின் உதவியைப் பெறலாம்.

தயக்கம் தேவையில்லை

வெளியில் செல்லும்போது பலரும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தயங்குவார்கள். அந்தத் தயக்கம் தேவையற்றது. நம் குழந்தையின் பசிதான் நமக்கு முக்கியம். பொது இடங்களில் இப்போது இதற்காக இருக்கும் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு கணவர்மார்களும் தங்கள் மனைவிக்கு உதவ வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாயை அன்பாகவும், பொறுமையாகவும், கவனமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மனைவி, கணவன் மற்றும் குழந்தை ஆகிய மூவரின் பந்தம் வலுப்பெறும்.

தொகுப்பு: ப.ஸ்வாதி

நன்றி - http://tamil.thehindu.com/
...மேலும்

Aug 13, 2016

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள் சமூகநீதியின் விளைநிலமான தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் லதா* (20) என்ற தலித் பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீனாவும் (17) கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சாதியப் படுகொலை

தஞ்சாவூரின் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லதா, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளிக் கழிப்பிடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் என்ற இரண்டு ஆதிக்கச் சாதி ஆண்கள் லதாவைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து விவரிக்க இயலாத கொடூரத்தைக் கையாண்டு கொலைசெய்து, அருகிலிருக்கும் முட்புதரில் வீசிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

லதாவின் இந்தக் கொடூரமான கொலைக்குப் பின்னால் அவர் பெண் என்பதோடு, அவரது சாதியும் காரணம் என்றே கருத வேண்டியுள்ளது. சாலியமங்கலத்தில் தலித் பெண்களில் ஆண்டுக்குப் பதினைந்து பேர் அங்கிருக்கும் ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது மனித உரிமை அமைப்பான எவிடென்ஸ். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராகக் காவல் துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதி தலித் சமூகத்தினர். அந்த மக்கள் காவல் துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கின் றனர் என்று தெரிவிக்கிறது எவிடென்ஸ் அமைப்பு.

சிறுமியை எரித்த சைக்கோ காதல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனாவின் கொலை, செந்தில் குமார் (32) என்பவரின் ‘காதல்’ வெறியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி செந்தில்குமார், நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வீட்டுக்குள் சென்று நவீனாவை உயிரோடு எரிக்க முயன்றிருக்கிறார். நவீனா அதிலிருந்து தப்பிக்க முயன்றதால் தன்மீது நெருப்பு வைத்துக்கொண்டு, அருகிலிருந்த நவீனாவையும் சேர்த்து எரித்திருக்கிறார். இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபது சதவீதத் தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீனா அங்கு சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை இறந்துவிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, நவீனாவைப் பின்தொடர்ந்து பிரச்சினை கொடுத்துவந்திருக்கிறார் செந்தில். நவீனா விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார். தன்னுடைய ஒரு கை மற்றும் காலை விபத்தில் இழந்துவிட்டு, நவீனாவின் அப்பாதான் வெட்டினார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரித்தபோது, செந்தில் கூறியவை அனைத்தும் பொய் என்பதும், அவர் ரயில் விபத்து ஒன்றில் காலை இழந்ததும் உறுதியாகி யிருக்கிறது. அதற்குப் பிறகு, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் மீண்டும் நவீனாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளிச் சிறுமியான நவீனாவுக்குச் செவிலியர் படிப்பு படித்து நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. அந்தக் கனவைத் தன் ஒருதலையான காதலின் கொடுந்தீயால் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார் செந்தில்.

தீர்வு என்ன?

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளில் ஒரு விஷயம் புலனாகிறது. இந்தக் கொலைகள் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகளாக மட்டும் நடந்துவிடவில்லை. வன்மமும் ஆண் திமிரின் மூர்க்கமும் வெளிப்பட்டுள்ள கொடூரக் கொலைகள் அவை. கொலையுண்ட பெண்கள் எல்லோருமே கொடூரமாகச் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைச் சக உயிராக நினைக்காமல் தன் உடல் இச்சைக்கும் வக்கிரங்களுக்கும் தீனியாகக் கொள்ளத்தக்க ஒரு நுகர்வுப் பண்டமாக மட்டுமே நினைக்கும் நோய்க்கூறு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வினோதினி, ஸ்வாதி, வினுப்பிரியா, லதா, நவீனா போன்றவர்களின் கொடூர மரணங்கள் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாமல் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரும் வகையில் அதிகமாகவே இருக்கும்.

யாருக்கோ நடக்கிறது, எங்கோ நடக்கிறது என்று இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் விளைவு மோசமானதாகவே இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘பாலின சமத்துவ’த்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுத்துவிட்டால் மட்டுமே நிலைமை மாறிவிடப்போகிறதா? வெகுஜன ஊடகங்கள் அன்றாடம் போதிக்கும் பாலியல் அசமத்துவத்தை முறியடிக்க என்ன வழி? தலித்துகள்,பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துவருவதற்கும் அதிகாரத்தில் உள்ள சித்தாந்தத்துக்கும் தொடர்பு உள்ளது. இதையும் நாம் கணக்கில் கொண்டே பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

சாதியற்ற, பால் சமத்துவம் கொண்ட ஒரு சமூகம் மட்டுமே பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஒரு தொலைதூரப் பெருங்கனவு. அதற்கு முன்பாக, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டியது உடனடித் தேவை. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ்ச் சமூகம் சாதி ரீதியான இத்தகைய கொலைகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

(லதா* - பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

நன்றி - The Hindu
...மேலும்

Aug 12, 2016

வானவில் பெண்கள் : மறக்கடிக்கப்பட்ட சாதனை மனுஷி!


“கணவன், குடும்பம், குழந்தை என்று பெண்ணின் உலகம் குறுகியே இருக்க வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தவர் ஹிட்லர். ஆனால் தன்னை உலகம் முழுக்க பிரஸ்தாபிக்கும் பொறுப்பை ஒரு பெண் திரைப்பட இயக்குநரிடம் அவர் ஒப்படைக்க வேண்டியிருந்தது.

சாகசப் பெண் லெனி

பெர்லினில் 1902-ல் பிறந்தவர் லேனி ரீஃபென்ஸ்டால். இளம் வயதில் ஓவியம் அவரது படிப்பாக இருந்தாலும், அதன் வழியே நடனக் கலை மீது ஆர்வம் பிறந்தது. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பிரபல மேடைகளில் தனது நடனத் திறமையை நிரூபித்துவந்தவரை, கால் காயமும் அறுவை சிகிச்சையும் முடக்கிப்போட்டன. இருந்தாலும் தனது தனித்துவமான உடல் மொழியின் வழியே நடனத்திலிருந்து நடிப்புலகுக்கு மடைமாறினார். அப்படியே திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் என சகல துறைகளிலும் வியாபித்தார். இப்படித்தான் தனது 30 வயதிற்குள் 20-ம் நூற்றாண்டு திரையுலகின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக லேனி ரீஃபென்ஸ்டால் உருவெடுத்தார்.

லெனிக்கு மலையேற்றம் பிடிக்கும். பனிச் சறுக்கு, ஆபத்தான நீச்சல் என சாகச விரும்பி அவர். அதே சாகச ஆர்வத்தோடு திரையுலகின் அனைத்து அம்சங்களையும் சவாலாகக் கற்றுக்கொண்டார். அடுத்த தலைமுறை சினிமா மேதைகள் லெனியைக் கொண்டாட அவரது ஆர்வமும், கடுமையான உழைப்புமே காரணம்.

ஹிட்லரும் ஒலிம்பிக்கும்

ஜெர்மனியின் ஹிட்லர், நாட்டு மக்களிடமும் உலகப் பார்வையிலும் தனது மீட்பர் பிம்பத்தை பிரபலப்படுத்த விரும்பினார். ஹிட்லரின் ஊதுகுழலான கெப்பல்ஸ், அப்போது வித்தியாசமான இயக்குநராக வளர்ந்துவந்த லேனியை ஹிட்லரிடம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நாஜி கட்சியின் பிரச்சார பேரணி, கூட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தினார் லேனி. அந்த வகையில் உருவான Triumph of the Will என்ற 2-வது நாஜி பிரச்சாரத் திரைப்படம் ஹிட்லருக்கு மகிழ்ச்சியையும், லேனிக்குப் பெயரையும் வாரித்தந்தது. தொடர்ந்து பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஆவண திரைப்படமாக்கும் வாய்ப்பு லேனிக்கு வந்தது. சாகச விரும்பியான லேனி, அதுவரையிலான திரைப்பட மரபுகளை உடைத்துப்போட்டு, காட்டாறாய் பல காட்சிகளை சுட்டுத்தள்ளினார். உயிரோட்டமான விளையாட்டுகளையும், வீரர்களின் உணர்ச்சிப் பெருக்கையும் பார்வையாளர்களுக்குப் பாய்ச்சும் வகையில் படமாக்கினார். ஒலிம்பியா (1938) என்ற பெயரில் இரண்டு பாகங்களில் அடுத்தடுத்து வெளியான ஆவணத் திரைப்படங்களும், தொடர்ந்து லேனி உருவாக்கிய தனித்துவமான திரைப்படங்களும் அதன் பின்னரான திரையுலக மொழியின் போக்கில் புதிய அத்தியாயங்களை எழுதின.

வெட்ட வெட்ட கிளைத்த லேனி

இரண்டாம் உலகப் போரின் முடிவு நாஜி ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டியது. நாஜி ஆதரவாளர்களில் ஒருவராகப் பல வருட சிறையும், தீவிர தொடர் விசாரணையும் மனநல சிகிச்சை பெறுமளவுக்கு லேனியை நெட்டித்தள்ளின. குற்றச்சாட்டுகள் மழுங்கியதில் லேனி விடுவிக்கப்பட்டபோது, அவரது படைப்புகள் பலவும் காணமல் போயிருந்தன. சில சிதைக்கப்பட்டிருந்தன. பறிமுதலான கேமரா மற்றும் உடமைகள் திரும்பக் கிடைத்தும் பின்லாந்து ஒலிம்பிக்கை ஆவணப்படுத்தும் அழைப்பை நிராகரித்தார்.

ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு திரைப்பட உலகுக்குத் திரும்பியபோது, நாஜிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒருங்கிணைத்த லாபி ஒன்று லேனியைச் சுழற்றியடித்தது. லேனியும் அவரது படைப்புகளும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் புகைப்பட கேமராவோடு ஆப்பிரிக்க நாடுகளில் ஆசுவாசமானார் லேனி. சூடானின் நூபா பழங்குடியினர் குறித்த தனது புகைப்படப் புத்தகம் மூலம் படைப்புலகை அதன் வேறொரு மூலையிலிருந்து அசைத்துப் பார்த்தார். ஆனால் கென்யாவில் கார் மற்றும் சூடானில் ஹெலிகாப்டர் என லேனி இடறிய விபத்துகள் அவரை தீவிர ஓய்வுக்குத் தள்ளின.

71 வயதில் ஆழ்கடல் சாகசம்

ஆனாலும் சாகசப் பெண்மணியான லேனி சளைக்கவில்லை. பசிபிக் கடலில் ஆழ்கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி தொடர்பான ஆவணப் படத்துக்காகச் சிறப்பு அனுமதியுடன் லேனி தனது கேமராவோடு மூழ்கித் திளைத்தபோது அவருக்கு வயது 71. தனது பாதையில் விழுந்த தடைகளை மீறி அடுத்த ஆவணப் படத்தை வெளியிட அவருக்கு 41 வருடங்கள் பிடித்தன. அதேபோல நாஜி முகாம் தொடர்பான விசாரணை வளையத்தை தனது 100-வது வயதில் மீண்டும் லேனி எதிர்கொண்டு மீண்டார். இரண்டு வருடங்கள்கூட நீடிக்காத திருமண வாழ்க்கை வாய்த்த லேனி, ‘ஹிட்லரின் விருப்பப் பெண்களில் ஒருவரா?’ என்ற கேள்விக்கு தன் வாழ்நாள் முழுவதும் மறுப்பு தெரிவித்துவந்தார். ஹிட்லரைச் சந்தித்தது, அவரை முழுமையாக அவதானிக்காதது ஆகியவற்றுக்காக வருத்தம் தெரிவித்தபோதும், ஒரு படைப்பாளியாகத் தனது திரை ஆக்கங்களுக்காக லேனி கடைசிவரை வருத்தம் தெரிவிக்க மறுத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லேனி தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருப்தியோடு இறந்தார்.

வாழ்நாள் முழுவதும் விருது, விமர்சனம், புகழ், புறக்கணிப்பு என எதையும் பொருட்படுத்தாது தனது இதயத்துக்கு நெருக்கமான படைப்புகளுக்காக, தான் வகுத்துக்கொண்ட தெளிவோடும் நியாயங்களோடும் வாழ்ந்திருக்கிறார் லேனி ரீஃபென்ஸ்டால்.

நன்றி - The Hindu
...மேலும்

Aug 11, 2016

நிழலாய்த் தொடரும் வன்முறை - பா.ஜீவசுந்தரி‘பிறன்மனை நோக்காப் பேராண்மை’ என்று அந்தக் காலப் பெண் நிலையைத் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர். அத்து மீறல்கள், அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து செல்லுதல் போன்றவை திருக்குறளிலும் பிரதிபலித்திருக்கின்றன. ராமாயணத்திலும், அகலிகையை அடைவதற்கு இந்திரன், கௌதம முனியின் வேடமேற்று வரவில்லையா? ஆனால் அதன் பலனைப் பல யுகங்களுக்குக் கல்லாகக் கிடந்து அனுபவித்தவள் அகலிகைதானே.

காலங்கள் மாறினாலும் அதற்கேற்ப வன்முறையின் வடிவங்களை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது ஆதிக்க ஆண் மனம். பெண்ணுக்கு விருப்பமில்லாவிடினும் அவளை விரட்டி விரட்டிக் காதலிப்பது, பின் தன் வலையில் விழவைப்பது போன்றவை பெண் கவர்தலின் நவீன வடிவம்தான்.

சட்டம் அனைவருக்கும் சமமா?

மாணவி சரிகா ஷா ஈவ் டீஸிங்குக்குப் பலியான பின்னரே, அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. ஈவ் டீஸிங் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டது. இருந்தும் என்ன பலன்? ஈவ் டீஸிங் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது. சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அதை மீறுவது வாடிக்கை என்பது போல்தான் அவர்களின் செயல்பாடு இருக்கிறது. அதிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் மீது எந்த மரியாதையும் இல்லை. ஏனென்றால் பெண்கள் சட்டங்கள் அந்த அளவுக்கு கறாராக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவே அந்தச் சட்டங்களை மதிக்காமல் அத்துமீறவும் வைக்கிறது. நம் நாட்டின் அரசியலமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொன்னாலும் நடைமுறை அப்படி இல்லை.

பெண்ணின் விருப்பத்துடன் உறவு கொண்டாலும், பின் எளிதாகக் கைவிட்டுச் செல்வது, அவளை நிராகரிப்பது போன்றவை ஒருபுறம். சம்பந்தப்பட்ட பெண்ணும் சட்டத்தின் துணையோடு ‘கற்பின்’ பெயரால் அவனையே கைப்பிடித்த சம்பவங்களையும் கண்ணாரக் கண்டிருக்கிறோம்.

ஆனால், இப்போது பெண் தெளிவாகி இருக்கிறாள். பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் அவனையே தேடிப்பிடித்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மனப்பாங்கிலிருந்து இப்போது விடுபட்டுவிட்டாள். வல்லுறவின் பலனாகக் கரு உருவானாலும், அதை அழிக்கவும் பெண் தயங்குவதில்லை. கருக்கலைப்புச் சட்டம் அவளுக்கு ஆபத்பாந்தவனாகக் கைகொடுத்தது. இதுபோல் ஒரு சில சட்டங்களாவது பென்களுக்கு அனுசரணையாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் கல்வி, பெண்ணுரிமை சார்ந்த கருத்தியல்களைப் பெண்ணின் பொதுப் புத்தியாக்கியுள்ளது.

தெளிந்த சிந்தையும் நேர்கொண்ட பார்வையும்

பாலியல் வல்லுறவு குறித்தும், தான் அதற்கு பலியாக்கப்பட்டோம் என்பதையும் வெளியில் சொல்லத் தயங்கிய, பயந்த காலங்கள் மலையேறிவிட்டன. சட்டப்படி தண்டனை கிடைக்கும் என்ற நிலை உருவான பின் பெண்கள் துணிச்சலுடன் வெளியில் சொல்லவும், போலீஸில் புகார் செய்யவும் முன்வந்தார்கள்.

ஆனால் ஆண் திமிர் மேலும் குற்ற உணர்வு கொண்டு வன்முறையைத் தீவிரப்படுத்தத்தொடங்கியிருக்கிறது. ‘உயிருடன் விட்டால்தானே வெளியில் சொல்வாய்?’ என்ற மனப்பாங்கில் பெண்ணைக் கொன்று வீசவும் தயங்காத நிலைக்கு ஆண் மனம் வக்கரித்துப் போயிருக்கிறது. கூட்டுப் பாலியல் வல்லுறவுகள் அதன் உச்சம். பின் அந்தப் பெண்ணின் உடல் அறுவை சிகிச்சை இல்லாமலே நைந்த துணியைப் போன்று துண்டு துண்டாகக் கிழித்து வீசப்படுவது கோரத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, கோணல் புத்திக்காரர்களின் மனத்திரிபே. நிர்பயா, ஜிஷா, கலைச்செல்விவரை அது தொடர்கிறது.

வெளியே மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயும் தொடர்கின்றன பெண்ணின் இடையறாத போராட்டங்கள். குடும்ப வன்முறை பற்றி சமூகம் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. திருமணம் என்றால் என்ன என்று அறியாத பருவத்திலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டு, பொம்மைக் கல்யாண நிலையிலேயே கைம்பெண் கோலம், சாரதா சட்டத்தின் வழி அதற்கோர் விடுதலை. ஆனா ஆவன்னாகூட தெரியாத நிலையிலிருந்து கல்வி கற்கப் படி தாண்டி பள்ளி, கல்லூரி நோக்கிய பயணம். வீடு என்ற நான்கு சுவர் சிறைக்குள்ளிருந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி வீதியில் இறங்கி, வெளி உலகைத் தரிசிக்க ஆரம்பித்தபோது தெருவெல்லாம் சில்மிஷம் என்ற பெயரில் தொடர்ந்த வன்முறை அவளை மீண்டும் வீட்டுக்குள்ளேயே இழுத்து வந்து அடைத்தது.

புது வடிவமெடுக்கும் வன்முறை

பணியிடங்களில் மென்னுணர்வுடன் புன்னகை தவழ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வார்த்தைகளால் குதறப்படும்போது படித்த பெண்ணாக இருந்தாலும் அவமானத்தால் உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதே புன்னகையைப் பதிலுக்குத் தர வேண்டியிருக்கிறது. மீறும்போது ஆசிட் வீச்சு போன்ற தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

வீட்டுக்குள்ளும் குறைந்துவிடாத வன்முறை வேறு வடிவம் கொள்ளும். பெண்களுக்கு எதிரான வன்மம் என்பது நுண்ணுணர்வுகளில் வெளிப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஊதியம் ஈட்டுவதால் நேரடியாக வன்முறையைப் பாய்ச்சத் தயங்கும் கணவன்மார்கள் மனைவி மீது கொண்டுள்ள வன்மம் அவ்வப்போது வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுவதும், பிற ஆண்களுடன் தொடர்புபடுத்திப் பேசுவதும் தொடர்கதைகள். ‘உன்னைவிட நான் குறைவானவள்தான்’ என்பதை ஆணின் முன் மண்டியிட்டுக் கூறாத வரைக்கும் இந்த ஆண் வன்மமும் வக்கிரமும் தீர்வதில்லை.

சதி என்ற உடன்கட்டையிலிருந்து மீண்டு, ஸ்டவ், காஸ் வெடித்து செத்த பெண்கள் எண்ணிக்கைக்கு கணக்கு உண்டா? சிசுக்கொலையிலிருந்து மீண்டு ஸ்கேன் ராட்சசர்களின் பசிக்குக் கருக்கொலையாக பலியானவை எத்தனை லட்சம், கோடி உயிர்கள்? புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் என எத்தனை வந்தாலும் அதன் மூலம் எவ்வாறு பெண்கள் மீது வன்முறையை ஏவலாம், தாக்குதல் தொடுக்கலாம் என்பதே மதிப்புக்கூட்டு கண்டுபிடிப்பாக இங்கு இருக்கிறது.

பழுக்கக் காய்ச்சிய கரண்டிக் காம்பால் சூடு போட்டவர்கள், சிகரெட்டால் சூட்டுப் புள்ளிகளைப் பொட்டுகளாக உடலெங்கும் வைத்தார்கள். இஸ்திரிப் பெட்டியால் அடையாளமிட்டதையும் பார்த்தோம். தொலைபேசியைப் பெண்களுக்கு எதிரான கிசுகிசுகளைப் பரப்பப் பயன்படுத்தினர். செல்பேசி, இணையம் அனைத்தும் அடுத்த கட்டப் புதிய பாய்ச்சலாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் புதிய புதிய வடிவங்களில் ஏவப் புறப்பட்டுள்ளன. சமீபத்திய உதாரணம் வினுப்ரியா.

மாற்றத்துக்கு இடமில்லாத ஆண் மனம்

இப்படி ஓராயிரம் கோடி வன்முறைகளை எதிர்கொண்டுதான் பெண் எனும் மானுடம் ஜீவித்துவருகிறது. வன்முறைகளுக்குக் கட்டுப்பட மறுத்து அடங்காமல் திமிறி எழும் பெண், புதிய வெளிகளுக்குள் புகுந்துகொண்டே இருக்கிறாள். புதிய வெளிகள், புதிய அமைப்புகள். அதனால் வன்முறைகளும் புதிய வடிவங்களில் நிழல்போல் அவளைத் தொடர்கின்றன.

இங்கு உடன்போக்கு என்பது இலக்கியத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். அதுவே நடைமுறையில் நிகழ்ந்தால் ஆணவக் கொலைக்கு ஆளாக்கும் அதீத நடைமுறை கைக்கொள்ளப்படும் என்பது இப்போது எழுதப்படாத விதி.

பெண் ஒரு பொருள், பண்டம் என்ற நிலையில் வைத்துப் பார்ப்பதால், பெண்ணாகிய பொருளைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறது ஆண் மனம். அவளுக்கும் மனம் என்பது உண்டு, அதில் தனக்கென்று தனித்த ஆசைகள், தனி விருப்பங்கள் உண்டு என்பதை எப்போதுமே ஏற்றுக் கொள்ளாத சமூகத்தின் ஒரு அங்கமான ஆண் மனம் தன் விருப்பத்தையும் ஆசையையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.

சமீப காலங்களில் தொடர்ச்சியாகப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு பலியாவதும், கண்மூடித்தனமான ஒருதலைக் காதலுக்கு இணங்காவிடில் பெண்ணைக் கொல்வதும் இதன் வெளிப்பாடுகள்தாம். இவை ஆண் மனதின் ஆதிக்கத் திமிரையும் வக்கிரத்தையுமே வெளிப்படுத்துகின்றன.

பெண் ஆரம்ப கால நடைமுறைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, தடைகளைத் தாண்டி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எப்போதும் முன்னேறியே வந்திருக்கிறாள். ஆனால், ஆண் எவ்வளவு படித்தபோதும், அறிவியல் ரீதியான முன்னேற்றங்களை அடைந்தபோதும், மனதளவில் ஆரம்பப் புள்ளியில் நின்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஆதிக்க மனோபாவத்திலிருந்து முற்றிலும் விடுபடத் தயாராக இல்லை. அதனாலேயே, தன்னைவிட மேலானவளாகப் பெண் மாறும்போது அவளைக் கீழே தள்ளச் சற்றும் தயங்குவதில்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

நன்றி - The Hindu
...மேலும்

Aug 10, 2016

களம் புதிது: சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்ஷி


கேள்வி கேட்பதும், விமர்சனம் செய்வதும் மிக எளிது. அதனால்தான் பலரும் அந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்தியர்கள் பதக்கம் வெல்லவில்லையே என்று பலரும் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். இவர்கள் எல்லாம் செல்ஃபி எடுக்கத்தான் லாயக்கு என்று விமர்சனச் சேற்றை வாரியிறைத்தார்கள். ஆனால், மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கியிருக்கிறார் சாக்‌ஷி மாலிக். இந்த மகத்தான வெற்றியின் மூலம் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கை அவர் தொடங்கிவைத்தார்.

யாருமே எதிர்பாராத கடைசி விநாடிகளில் எதிராளியை வீழ்த்திப் பதக்கம் வென்றதன் மூலம், மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் 23 வயது சாக்‌ஷி! ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நான்காவது இந்தியப் பெண், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது நபர் என்று அடுக்கடுக்கான சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

“பெண் குழந்தை பிறந்தால் ஐந்து மரக்கன்றுகளை நடுங்கள். அவை மரமாக வளர்ந்தால், அந்தப் பெண்ணின் திருமணத்துக்கு உதவியாக இருக்கும்” என்று கருத்து சொல்லும் சிந்தனையாளர்கள் நிறைந்த நாட்டைச் சேர்ந்தவர்தான் சாக்‌ஷியும். அவருடைய பெற்றோர் ஐந்து மரக் கன்றுகளை நட்டார்களா என்று தெரியாது. ஆனால், தங்கள் மகளை ஆணுக்கு நிகராக வார்த்தெடுத்திருக்கிறார்கள். பெண்களால் என்ன முடியும் என்ற கற்பிதத்தை உடைத்துப் பெண்களால் எல்லாமே முடியும் என்று நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கும் சாக்‌ஷி மாலிக், பெண் சக்தியின் மற்றுமொரு அடையாளம்.

தீராத மல்யுத்த தாகம்!

சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர் சாக்‌ஷி. ஹரியாணா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தைச் சேர்ந்த சுக்பீர் சுதேஷ் தம்பதியின் இளைய மகள். நான்கு வயதுவரை தன் தாத்தாவின் கிராமமான மோக்ராவில் வளர்ந்தாள் சாக்‌ஷி. இந்தியா முழுவதுமே குழந்தை வளர்ப்பில் பாலினப் பாகுபாடு நிலவும்போது ஹரியாணாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியான பாகுபாட்டுடன்தான் சிறுமி சாக்‌ஷி வளர்க்கப்பட்டாள்.

ஆறாம் வகுப்புக்குத் தேறிய பிறகு, சாக்‌ஷி தன் பெற்றோரிடமே வந்துவிட்டாள். சாக்‌ஷியின் தாத்தா அந்தப் பகுதியின் பேர்பெற்ற மல்யுத்த வீரர். அதனால்தானோ என்னவோ பொம்மைகளை வைத்து விளையாட வேண்டிய வயதாக மற்றவர்கள் நினைத்திருந்த வயதில் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தாள் சாக்‌ஷி. மகளின் விருப்பத்துக்கு மறுப்பேதும் சொல்லவில்லை அவளுடைய பெற்றோர். தன் பத்து வயது மகளை உள்ளூர் மல்யுத்த அகாடமியான சோட்டு ராம் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் சென்றார் சுதேஷ். தாயும் மகளுமாக வந்த அவர்களை அங்கே யாரும் அத்தனை உவப்புடன் எதிர்கொள்ளவில்லை. ஆண்களுக்கான அரங்கில் இவர்களுக்கு என்ன வேலை என்பதாகத்தான் அனைவரது பார்வையும் இருந்தது. ஆனால், மகளின் கனவைச் சிதைக்கக் கூடாது என்பதில் சாக்‌ஷியின் பெற்றோர் உறுதியாக இருந்ததால் சிறுவர்களுக்கு மத்தியில் பத்து வயது சாக்‌ஷியும் மல்யுத்தம் பழகினார்.

குருவின் வழியில்

உள்ளுக்குள் கனன்றெரியும் நெருப்பைக் கண்டுபிடித்துவிடுகிற குரு அமைவதும் வெற்றிக்கு முக்கியக் காரணம். அப்படியொரு குருவாக சாக்‌ஷிக்கு அமைந்தார் ஈஸ்வர் தஹியா. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே இடத்தில் மல்யுத்தப் பயிற்சியளித்ததால் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

சமஉரிமைக்கு அர்த்தம் கொடுத்த சாக்‌ஷி

உள்ளுக்குள் கனன்றெரியும் நெருப்பைக் கண்டுபிடித்துவிடுகிற குரு அமைவதும் வெற்றிக்கு முக்கியக் காரணம். அப்படியொரு குருவாக சாக்‌ஷிக்கு அமைந்தார் ஈஸ்வர் தஹியா. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே இடத்தில் மல்யுத்தப் பயிற்சியளித்ததால் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

“பெண் குழந்தைகளுக்கு மல்யுத்தம் கற்றுத்தந்த என்னைப் பைத்தியம் என்று கேலி செய்தார்கள். அவர்கள் சொல்வதைப் போல பெண்கள் எல்லோரும் பலம் குறைந்த ஆடுகள் அல்ல. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எங்கள் சாக்‌ஷி தன்னை சிங்கம் என்று இப்போது நிரூபித்துவிட்டாள்!” கண்களில் பெருமிதம் பொங்க, தன் மாணவி சாக்‌ஷியைப் புகழ்கிறார் ஈஷ்வர். உள்ளூரில் தன்னுடன் மோதுவதற்குத் திறமையான பெண் போட்டியாளர்கள் இல்லாததால் ஆண்களுடன் போட்டி போட்டிருக்கிறார் சாக்‌ஷி.

2006-ம் ஆண்டு சப் ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் பதக்கம் வென்றதுதான் சாக்‌ஷியின் முதல் பதக்கம். அதற்கடுத்து எல்லாமே ஏறுமுகம்தான். ரோட்டக்கில் ஏற்கெனவே பல மல்யுத்த வீராங்கனைகள் இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் சாக்‌ஷி. 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வென்ற வெள்ளிப் பதக்கம், சாக்‌ஷியின் இடத்தை உறுதி செய்தது!

மகள் பெற்றோருக்கு ஆற்றிய கடமை

மகளுக்காக வீட்டை விற்றுவிட்டு, பயிற்சி பெறும் அரங்கத்துக்குப் பக்கத்தில் குடியேறிய பெற்றோருக்கு, தன் ஒலிம்பிக் வெற்றி மூலம் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஒருசேர அளித்திருக்கிறார் சாக்‌ஷி. அதிகாலையில் எழுந்துவிடுகிற மகளுக்கு எப்போதும் துணைநின்றார் சாக்‌ஷியின் அம்மா சுதேஷ் மாலிக்.

“என் பொண்ணு மல்யுத்தம் செய்யறதைப் பார்த்துட்டுப் பலரும் பலவிதமா பேசினாங்க. இந்த விளையாட்டைப் பொண்ணுங்க விளையாடக் கூடாதுன்னு சொன்னாங்க. மல்யுத்தம் செஞ்சா நளினம் குறைஞ்சு, உடம்பு இறுகிடும், அப்புறம் கல்யாணமே ஆகாதுன்னுகூட சொன்னாங்க. இந்த மாதிரி பேச்செல்லாம் என் பொண்ணு காதுல விழாம பார்த்துக்கிட்டேன். அவளும் கல்யாணம், விசேஷம்னு எதுலயும் ஆர்வமா கலந்துக்க மாட்டா. இன்னைக்கு இந்த வெற்றி மூலமா எல்லாருக்கும் அவ பதில் சொல்லிட்டா” என்று மகளின் வெற்றியைக் கொண்டாடுகிறார் சாக்‌ஷியின் அம்மா.

அடுத்தடுத்துக் காணப்போகும் களங்களுக்காகக் காத்திருக்கிற சாக்‌ஷி, “இந்த வெற்றி, இரவு பகல் பாராமல் நான் எடுத்துக்கொண்ட 12 ஆண்டு பயிற்சிக்கான பரிசு!” என்று சொல்லியிருக்கிறார்.

போட்டி முடிந்த பிறகு, “சோர்வாக இருக்கிறதா?” என்று கேட்ட அம்மாவிடம், “பதக்கம் வென்ற பிறகு யாருக்காவது சோர்வு இருக்குமா அம்மா?” என்று கேட்ட சாக்‌ஷிக்கு, வீட்டுக்குத் திரும்பியதும் ஆலு பராத்தா சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம்!

பாடம் கற்போம்

தங்கள் மகள் பதக்கம் வென்ற நொடியைக் கண்ணீர் மல்கத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார் சாக்‌ஷியின் அப்பா. அம்மாவோ ஆனந்தக் கூத்தாடினார். வாழ்த்து சொல்கிறவர்களுக்கு நன்றி சொல்லியே களைத்துப்போனார் சாக்‌ஷியின் அண்ணன் சச்சின். சாக்‌ஷியின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுமே இந்த வெற்றியைக் கொண்டாடித் தீர்த்தது.

சாக்‌ஷியின் வெற்றி ஒரு நிதர்சனத்தை உணர்த்தியிருக்கிறது. நம் நாட்டில் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த விகிதத்துடன் ஒப்பிடும்போது ஹரியாணா மாநிலத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு. பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்லாமல், அவர்களுக்கு சமஉரிமையும் வாய்ப்பும் கொடுத்தால் அவர்கள் எத்தனை பெரிய சிகரத்தையும் அடைவார்கள் என்பதை சாக்‌ஷி போன்றவர்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இப்படியாக, ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கமே வெல்லாதோ என்ற தவிப்பைத் தன் வெற்றியின் மூலம் தீர்த்துவைத்தார் சாக்‌ஷி. அந்த நம்பிக்கையை தன் வெற்றியால் நீட்டித்தார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஜிம்னாஸ்டிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று, நான்காவது இடத்தைப் பெற்றதன் மூலம் இந்தப் பிரிவில் தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தீபா கர்மாகர். இப்படி, 2016 ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்த அனைவருமே பெண்கள்! வீட்டில் மட்டுமல்ல, சமூகத்திலும் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்புக்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரம் இது. அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டால் வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியல் நிச்சயம் நீளும்!

நன்றி - the hindu
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்