/* up Facebook

Jul 24, 2016

அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை - ப்ரேம்


இறுதியாய் எஞ்சக்கூடிய வன்முறை வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூக அதிகாரம் என்ற அனைத்து வகை அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல்களும் கடந்து இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஆகக்கொடிய வன்முறையாக அமைவது அழகு-அழகின்மை என்ற புனைவு வழி கட்டப்பட்ட வன்முறைதான்.

இனவெறுப்பு-புனித வாதம்- தேர்ந்தெடுத்த உடல் என்ற பிழிந்து- பிரித்தெடுத்தல் செயல்பாடு வழி உருவாக்கப்பட்ட இயற்கை மறுத்த உளவியல்பின் நீட்சிதான் அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை.

நோயற்ற, உறுப்புக் குறைபாடுகள் அற்ற, இயற்கையான உடல்கள் என்பதற்கு மேல் மனித உடல்களின் வகைப்பாடுகள் அமைவது பெரும்புனைவுகளால் கட்டப்பட்ட சுயவெறுப்பு கொண்ட சமூக உளவியல். இனப்பெருக்கம் , போர் இரண்டும் இதன் உருவக அடிப்படைகள்.

இது பாலியல் மையம் கொண்ட புனைவு, உயிர்-உடல் செயல்களை பாலிருப்புக்குள் குறுக்குவது. மிகைபுனைவுகளால் கட்டப்பட்ட முழுமைமையற்ற மனிதநிலை பற்றிய குற்றவுணர்வின் செயல்பாடு.

உயிர்த்தலின் பெருந்திளைப்பை அழித்துவிட்டு, முக்தி பற்றிய ஏக்கம் கொள்ள வைக்கும் சமய உணர்வின் இன்னொரு வடிவம் இது.

பதிலீடு செய்ய முடியாத ஒவ்வொரு உடலுக்கும், இருப்புக்கும் பொருளினமை, பயனின்மை என்ற அடையாளத்தை வழங்கிவிடக்கூடிய நோய்க்கூறுதான் இதன் அடிப்படை.

மதவாதிகள், மனித மறுப்புவாதிகள், தேர்ந்தெடுத்த உடல்களை வணங்கப் பழக்கிய அடிமைநிலைவாதிகள் அழகு,பேரழகு, தெய்வீக அழகு என்ற உடல்மறுப்புக் கருத்துக்குள் அழுந்திக்கிடப்பது தன்னுணர்வின்மையின் விளைவு எனலாம்.

ஆனால் முற்போக்குகள், பகுத்தறிவுகள், புரட்சிகரப் புனிதங்கள், மனித அறம் கோரும் மாற்றுச் சிந்தனையாளர்கள் என அனைத்துவகை அறிவியக்கவாதிகளும் அழகு (உடல்- உருவம்-அளவு) என்ற புனைவைப் பெருக்குவதைக் காணும் போது எங்கோ ஒரு கோளாறு இருப்பது புரிகிறது. (Cosmetic Capitalism)

அழகு என்ற புனைவுக் கருத்தியல் உடலரசியல் சார்ந்த மிகக் கொடிய வன்முறை என்பதைப் புரிந்து கொள்ளத் தடையாக இருப்பது எது?

ஒரு ஆணாக பயிற்றப்பட்ட எனக்குள் இந்த உளவியல் செயல்பட்ட விதம், அதன் வன்முறைகள் நியாயப்படுத்தப் பட்ட விதம் தற்போது பலவடிவில் புரியவருகிறது.

ஒவ்வொரு உடலும் (உயிரினம் அனைத்தும்தான் என்றாலும் தற்போது மனித உடல் மட்டும்) ஒரு பிரபஞ்ச நுட்பம், நுண்பிரபஞ்சம், விளக்க இயலா விபரீத நிகழ்வு. அதனைப் பால் செயலின் பதிலீட்டு அளவையின் வழி வகைப்படுத்துவதும், தேர்ந்தெடுப்பு செய்வதும் குறியீட்டுக் கொலை, அது உடல் வெறுப்பு அரசியலின் அடிப்படை.

(காதல் பற்றியும் அழகு பற்றியுமான புனைவுக் கலைப்பும், உடலரசியல் ஆய்வும் அனைவருக்கும் எரிச்சல் தரக்கூடியது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் அதனைச் செய்தே ஆகவேண்டும். ஆண் உடலின் பெருமிதம் போரியல்-வீரம் என்ற அடையாள உருவாக்கம் கொண்டாடப்படுவதற்கானதா? அழகற்ற பெண்கள்தான் பெண்ணியவாதிகளாகவும், போராளிகளாகவும் மாறுகின்றனர் என்றும், காதல் கிடைக்காத பெண்கள் புரட்சியாளர்களாகின்றனர் என்றும் மிதக்கவிடப்படும் பேச்சுகளின் அறிவீனம் போகிற போக்கில் மறந்துவிடக்கூடியதா? சுய ஆய்வு தேவை.)

ப்ரேம், பேராசிரியர்; எழுத்தாளர். இவருடைய மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வெளியான நூல்கள், சிமாமந்தா எங்கோசி அடிச்சியின் ‘ஊதாநிறச் செம்பருத்தி’, மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’. இரண்டும் அணங்கு வெளியீடுகள்.

நன்றி - thetimestamil.com

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்