/* up Facebook

Jun 30, 2016

நிர்வாணம் அவமானமா..?


1985-ம் ஆண்டு வெளிவந்த 'எமரால்ட் ஃபாரஸ்ட்' திரைப்படத்தில் ஒரு காட்சி. நாயகியான பழங்குடி பெண்ணையும், அவளின் தோழிகளையும் நகர்ப்புற மனிதர்கள் சிலர் கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்த முயல்வார்கள். அதுவரை ஆடை என்ற ஒன்றை அணிந்திராத அப்பெண்களுக்கு, குட்டைப் பாவாடையை யும் , மேற்கத்திய பாணி மேல் கச்சைகளையும் கட்டாயப்படுத்தி அணிவிப்பாரகள். 

அவர்கள் கடத்தப்பட்ட அன்றிரவே, நாயகனும் அவனது பழங்குடி நண்பர்களும் அவர்களை மீட்டு மீண்டும் கானகத்திற்கு அழைத்து வருவார்கள்.கானகத்திற்குள் நுழைந்ததும் அப்பெண்கள் செய்யும் முதல் வேலை, தங்களின் ஆடைகளை கிழித்தெறிவது. அதாவது பெண்களை சதைப் பிண்டமாக பார்க்காமல் அவர்களை சக மனிதர்களாக மட்டுமே பார்க்கும் எந்த இனத்திற்கும் ஆடை என்ற ஒன்று தேவையாக இருப்பதில்லை, நிர்வாணம், அங்கு இழிவாகப் பார்க்கப்படுவதில்லை. நிர்வாணத்தை பார்த்து எவரின் ஆண்மையும் திமிறி எழுவது இல்லை என்பதை விவரிக்கும் காட்சி அது.

இது ஏதோ புனைவு அல்ல. பிரேசிலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஜான் போர்மேன் இயக்கிய படம் அது. 

மேற்கத்திய பழங்குடிகள் மட்டும் அல்ல; இந்தியாவிலும்கூட நாகரிகத்தின் நா தீண்டாமல்  வாழும் பழங்குடி மக்கள்  இன்றும் அப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைப்  பொறுத்தவரை நிர்வாணம் அவமானம் அல்ல.

ஆனால், பழங்குடிகளான அம்மக்களை நாம் நாகரிகமற்றவர்கள், உயர்த்தப்பட வேண்டியவர்கள் என்றும், அதேநேரம்  ஒரு பெண்ணை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அவளது படத்தை மார்ஃபிங் செய்து வெளியிடும் சமூகத்தில் வாழும் நாம், நம்மை நாகரிகமானவர்கள் என்று பிதற்றித் திரிகிறோம்.

அவமானத்திற்கு உரியதா நிர்வாணம் ...?

ஆடைகளே தேவையில்லை, எல்லாம் நிர்வாணமாக அலையலாம் என்று ஆலோசனை வழங்க இந்த கட்டுரையை எழுதவில்லை. ஆடைகளுக்கென்று ஒரு தொன்மம்  இருக்கிறது, அதன் பின் சமூக, பொருளாதாரக் காரணிகள் இருக்கிறது. இயற்கையின் ஒரு அங்கமாக இப்போது நாம் வாழவில்லை. வளர்ச்சி என்னும் பெயரில் இயற்கையைவிட்டு வெகு தொலைவு தள்ளிவந்துவிட்டோம். இக்காலத்தில் நம் நிர்வாணத்தை மறைக்க ஆடைகள் நிச்சயம் தேவைதான். ஆனால், அதே நேரம் நிர்வாணம் ஒன்றும் இழிவானதல்ல என்ற புரிதலும் நமக்கு வேண்டும்.

அதுவும், தொழில்நுட்பம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் பல விபரீதங்களை தவிர்க்க, தடுக்க... ‘நிர்வாணம் இயற்கையானது, இழிவானதல்ல’ என்ற புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும். அதுவும் குறிப்பாக ஆண்களுக்கு.

என்ன சொல்ல வருகிறீர்கள்...வினுப்ரியாவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தவறல்ல... அதை செய்தவன் தண்டனைக்குரியவன் அல்ல என்று விஷத்தைக் கக்குகிறீர்களா அல்லது விஷயத்தை திசை திருப்புகிறீர்களா...? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பதில், 'இல்லை' என்பதே, நிச்சயம் இல்லை என்பதுதான்.

வினுப்பிரியாவின் படத்தை தவறாகச் சித்தரித்து வெளியிட்டவன் மீதும், இந்த விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்ட காவல்துறை மீதும் கண்டிப்பாக நடவடிக்கை  வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அதே நேரம் தொழில்நுட்பம் அனைத்தையும் இலகுவாக்கி, 'போட்டோ ஷாப்' என்னும் ஒரு மென்பொருள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும், யாரையும் மோசமாகச் சித்தரித்துவிடலாம் என்கிற போது ஆடைகள், நிர்வாணம் குறித்து நாம் புரிதல் கொள்வதும், அதுகுறித்த புரிதலை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டியதும், இன்றியமையாதது ஆகிறது.

இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல!

முன்பெல்லாம் பொதுக் கழிப்பறைகளில்  பெண்களை தவறாக சித்திரித்து படங்கள் வரையப்பட்டிருக்கும். வர்ணனைகள் இல்லாமல் பேசவேண்டுமென்றால், இப்போது சமூக ஊடகங்கள்தான் நவீன கழிப்பறைகள்!

இங்கு  யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் சேற்றை வாரி இறைக்க முடியும். தனது மனக்கழிவுகளை பொதுவெளியில் கக்க முடியும். வக்கிரம் நிறைந்த எந்த ஆண் மனம் சுவற்றில் சாக் பீஸால் பெண்களை கழிவறைகளில் கிறுக்கியதோ, அந்த மனம்தான் இப்போது மவுஸைப் பிடித்து கிறுக்குகிறது.
அதே வன்மம்தான், ஆனால் இப்போது அது வேறு பரிணாமத்தை எட்டி உள்ளது. ஆனால், இந்த பரிணாமம் முன்பை விட அபாயகரமானதாகவும் இருக்கிறது. 

இந்த சூழலில் நாம் நம் குழந்தைகளுடன் இதுகுறித்து வெளிப்படையாக உரையாடுவது அத்தியாவசியம் ஆகிறது. இது ச்ச்ச்சீ விஷயம் அல்ல. 

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்