/* up Facebook

Jun 28, 2016

கண்ணீரும் புன்னகையும்: கைம்பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு?


நேபாளத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் ஒன்பதாயிரம் பேர் பலியானதையடுத்து அந்த நாட்டின் கைம்பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விதவைகள் நாட்டில் உள்ளனர். சொத்துரிமை உள்ளிட்ட பல உரிமைகள் இன்னும் பெண்களுக்கு மறுக்கப்படும் நேபாளத்தில் கைம்பெண்கள் பாகுபாடு, துன்புறுத்தல், தனிமைப்படுத்தலுக்கு ஆளாகிவருகின்றனர். கணவரின் சொத்துகளை வாரிசாகப் பெறுவதில் கைம்பெண்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

இதற்கு நேபாளத்தில் இன்னமும் திருமணப் பதிவு என்பது பொதுவான நடைமுறைக்கு வரவில்லையென்பதும் காரணம். நேபாளத்திலிருக்கும் பெரும்பாலான கைம்பெண்கள் கல்வியறிவற்றவர்கள். மூன்றில் இரண்டு பகுதியினர் 35 வயதுக்குக் கீழே இருப்பவர்கள்.

நேபாளத்தைச் சேர்ந்த ‘விமன் பார் ஹியூமன் ரைட்ஸ்’ (women for human rights) அமைப்பின் தலைவியான லைலி தபா, நேபாளத்தில் இன்னும் மூடநம்பிக்கைகளும், கைம்பெண்களைத் தள்ளிவைக்கும் பழைய நடைமுறைகளும் தொடர்வதாகக் குறிப்பிடுகிறார். நேபாளத்தின் ஜனாதிபதியாக இருக்கும் பித்யா தேவி பந்தாரி, கணவனை இழந்தவர். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கோயிலுக்குள் நுழைந்த மறுநாள், உள்ளூர் மக்கள் வெளிப்படுத்திய கண்டனத்தையடுத்து அந்தக் கோயில் புனித நீரால் கழுவப்பட்டது. ஜனாதிபதிக்கே இந்த நிலை!

பெண் குழந்தைக்குக் கட்டணம் கிடையாது

மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனையான தயாவதியில் வெள்ளிக்கிழமை பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மருத்துவக் கட்டணம் கிடையாது. வெள்ளிக்கிழமை என்பது அனைத்து மதத்தவருக்கும் முக்கியமான நாளாக இருப்பதால் இந்த நாளில் கட்டணம் வசூலிப்பது இல்லையென்கிறார் இந்த மருத்துவமனையின் இயக்குநர் ப்ரமோத் பலியான்.

பெண் குழந்தைகளைக் காக்கும் மத்திய அரசின் ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ திட்டத்தினால் தூண்டப்பட்டு இந்த முயற்சியைத் தொடங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். கடந்த நவம்பரிலிருந்து தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் 45 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையில் 12 பெண்குழந்தைகளுக்கு இதுவரை மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பிரசவம் பார்க்கும் மருத்துவர்களுக்கான கட்டணத்துக்கு பிரமோத் பலியான் தானே பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

விடியலுக்கு இன்னும் வெகுதூரம்!

பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளிகளின் சங்கமான பவுராகார்மிகா சங்கமும், அனைத்திந்தியத் தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சிலும் சேர்ந்து கடந்த ஜூன் 15-ம் தேதி, பொது ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. பெங்களூரு மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் பெண்கள். சம்பள உயர்வு, நல்ல விளக்குமாறுகள், கையுறைகள், முகமூடிகள், காலுயர பூட்ஸ்கள், தனிக் கழிப்பறைகள் தொடர்பான தொழிலாளர்களின் கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களாக இருக்கும் பெண்கள் கலந்துகொண்டு, தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். ஒப்பந்த முறையில் சரியான தேதியில் மாத ஊதியம் வழங்கப்படுவதில்லையென்றும் தெரிவித்தனர்.

தற்போதைய மாதச் சம்பளமான 8 ஆயிரத்து 860 ரூபாயிலிருந்து குறைந்தபட்ச ஊதியமாக 21 ஆயிரத்து 865 ரூபாய்க்கு உயர்த்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. கர்நாடக மாநில குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியம், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான மாத ஊதியமாக 14 ஆயிரத்து 40 ரூபாய் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அந்தப் பரிந்துரையை இன்னும் அரசு அமலாக்கவில்லை.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தொழிலாளர் அமைச்சர் பி.டி. பரமேஸ்வர் நாயக் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக கர்நாடகா சபாய் கரம்சாரி ஆணையத்தின் தலைவரான நாராயணா வந்திருந்தார். அவரிடம் தங்கள் சிரமங்களைத் தெரிவித்த துப்புரவுத் தொழிலாளிகள், “அவர்கள் எங்களுக்குச் செவிசாய்த்ததே இல்லை” என்று துயரக் குரல் எழுப்பினர்.

நன்றி- தி. இந்து

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்