/* up Facebook

May 25, 2016

சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண் குழந்தைகள் மீதான அத்துமீறலே! - தர்மினி

 
பனை/தென்னங் குருத்தோலைகள்,  மாவிலைகள், வாழைத்தண்டுகள் எனச் சூழலிலுள்ள மரங்களிலிருந்து பெற்றவற்றைக் கொண்டு கொண்டாட்டங்களுக்கு - சாவீடுகளுக்கு அலங்கரித்தல் என்பது வழமையானது. அதை நுணுக்கமாக விதவிதமான அலங்கரிப்புகளாக்குவதும் திறமை தான். ஆனால் இப்போது தேனி இணையத்தளத்தில் படித்த கட்டுரையொன்று ‘வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை’ என்ற தலைப்போடும்   ‘எளிமையும் அழகும் சிருஸ்டித்துவமும் மிகுந்த சாமத்தியச் சடங்கு’ என்ற உப தலைப்புமாக எழுதப்பட்டிருப்பதைப் படித்து மனம் சோர்ந்து போனேன்.

பேராசிரியரொருவர், மட்டக்களப்பைச் சேர்ந்த விரிவுரையாளரொருவர் தன் மகளுக்குச் செய்த சாமத்தியச் சடங்கின் அழகையும் எளிமையையும் பெருமிதத்தோடு பாராட்டி எழுதியிருக்கிறார்.  <<நிறைந்த வாசிப்புத் திறனும், சிந்தனைத் திறனும்,யதார்த்தவாதியுமன இவர் தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வடிவமைத்த விதம் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்திருந்தது மரபைப் புதுமை செய்யும் சிருஸ்டித்துவம் அச்சடங்கில் அமைந்திருந்தது>> என்று எழுதியிருக்கிறார். எளிமையான இயற்கைப்பொருட்களால் அலங்காரம். பாரம்பரியச் சடங்குகளும் புதுமைகளுமாகச் சேர்ந்து புதுவிதமாகக் கொண்டாடப்பட்டது என ஒரு சிறுமி தன்னுடலில் இயற்கையாக அடையும் மாற்றங்களை முதல் மாதவிடாயை முன்னிட்டு எழுதப்பட்டுள்ளது.

      தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு. சிறுமியை அலங்கரித்துப் பலர் முன்னிலையில் நிறுத்தி பழைய - புதிய எந்தச் சடங்கைச் செய்தாலும் அது அவளது முதல் மாதவிடாயின் பொருட்டான நிகழ்வே. அது இரண்டாவதோ அதன் பின் ஏறத்தாழ 400 தடவைகளாவது அவளது வாழ்நாளில் சந்திக்கப்போகும் வலியும் சோர்வும் கூடிய எல்லா நாட்களையும் போல எடுத்துக் கொள்ளப்படாமல் குடும்பமும் உறவுகளும் தங்களின் பெருமைகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு சடங்காகி விட்டது . 

இன்னும் மாதவிடாய் பற்றியோ உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பற்றியோ அச்சிறுமிக்குக் கற்பிப்பதோ அவளோடு அவை பற்றி உரையாடுவதோ கூட நடக்காது. அச்சிறுமிக்கும் தனக்கு ஏன் அக்கொண்டாட்டம் செய்யப்படுகின்றது என்ற புரிதலே இருப்பதில்லை. அது வழமை மற்றைய உறவுகள் அயலவர்கள் நட்புகள் அதைச் செய்தால் நாமும் செய்யலாம் எனும் பழகிப்போனதைச் செய்வோம் என்ற மனநிலை தான் அவர்களை இது பற்றி கேள்விகளைக் கேட்கவோ யோசிக்கவோ விடுவதில்லை.
 
ஆனால், இயற்கைப்பொருட்களாலான அலங்காரத்தை முதன்மைப்படுத்தி ஒரு பேராசிரியர் சாமத்தியச் சடங்கை விதந்தோதுகிறார். அங்கு அச்சிறுமியின் தந்தையாகிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமத்தியச் சடங்கு சம்பந்தமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுமிருக்கிறார். அதுவொரு ‘அறிவூட்டும் விழாவாக அமைந்தது’ என எழுதியிருப்பதையும் படித்தபோது நமது ஆசிரியர்களும்  பெரியோரும் நமக்கு எவ்விதமான சிந்தனைகளை வழங்குகிறார்கள் எனத் திகைப்பும் கோபமும் ஏற்படுகிறது.
 
இயற்கைப் பொருட்களால் அலங்கார முறைகளும் புதுமையான சடங்குகளும் வித்தியாசமாயிருப்பதாய்  பேராசிரியர் எழுதியிருப்பது பொருந்தவேயில்லை. காலகாலமாக  மாவிலைகள், ஓலைகள்,  பாளைகளால் அலங்கரிப்பது வழமை தான். இங்கு கைவேலைப்பாடுகள் தான் புதுமையாம்.
 
சடங்குகள் என்றாலே பழமை தானே? பிறகு அதிலென்ன புதுமை? கட்டுரைத் தலைப்பில் இருப்பது போல் வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை தான். ஆனால் சாமத்தியச் சடங்கில் அச்சடங்கு பற்றிய புத்தக வெளியீடு என்ற அந்த வித்தியாசம் நகைப்புக்குரியதாயிருக்கிறது. புத்தகத்தில் கட்டுரைகள் எழுதிப் புனருத்தாரணம் செய்கின்ற சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண்கள் மீதான அத்துமீறலே!
 
இங்கு புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த தமிழர்களின் சாமத்தியச்சடங்கின் புதுமைகளோ மிகக் கேவலம். ஹெலிக்கொப்டரில் ஏறி இறங்குதல் வரை அது   நீட்சியடைந்து விட்டது. எங்கள் பண்பாடு,  எங்கள் கலாசாரம், எம்  மகள், என்  காசு என்று ஒரு ஹிந்தி  சினிமாப் படப்பிடிப்புத் தான் அச்சடங்கில் நடத்திக் காட்டப்படுகிறது.தம் போலிப் பெருமைகளுக்காக மகள்களைக் காட்சிப் பொருளாக்கும் பெற்றோருக்கு அய்யோ கேடு!!

3 comments:

Anonymous said...

காலனித்துவ சிந்தனை மரபின் போக்கென்பது மேலைத்தேயத்தை எதுவித கேள்விகளுமின்றி பிரதி பண்ணிக் கொள்வதேயாகும். மாக்சிசமாக இருந்தாலும் சரி, பெண்ணியமாக இருந்தாலும் சரி இதுவே நடந்தேறி வருகின்றது. தர்மினி போன்ற பெண்ணியல் வாதிகளும் ‘பெண்ணியம்’ என வரையறுத்துக்கொண்டு நிற்பது காலனித்துவ சிந்தனை மரபின் அது கற்றுத்தந்த மிச்ச சொச்சங்களேயாகும். இது எமது பாண்பாட்டை, பண்பாட்டின் பெருமையை ஊடறுத்துப் பார்த்து எமக்கான பெண்ணியக் கோட்பாட்டினை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு தடையாக இருக்கின்றது. இவ்வாறான தடைக்குள் கட்டுப்பட்டவராகவே தர்மினி அவர்களைக் காண்கின்றேன்.
சாமத்தியச் சடங்கு எனும் நூலிலுள்ள எனது கட்டுரையை வாசிக்காமல் சோடனைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தர்மினி தனது கருத்தைச் சொல்வது அவருடைய அறிவுக்கு அழகல்ல. எனது கட்டுரையை வாசித்து அதன் பின் அவர் தனது கருத்துக்களை முன்வைப்பாராக இருந்தால் அதன் பின் இவ் விடயம் தொடர்பாக நான் ஒரு திறந்த விவாதத்திற்கு வருவதற்கு தயாராக உள்ளேன்.
சு.சிவரெத்தினம்

Barthipan said...

சரி தர்மினி அவர்களின் கருத்து நூலை படிக்காமல் சொன்னதாகவே இருக்கட்டும். ஆனால் சாமத்திய சடங்கு மிக மோசமாக செலவளிகப்பட்டு எவளவு மன உளைச்சலை உருவாகுகிறது என எதுவுமே வெட்டி விழுத்தாமல் சம்பளம் பெறும் ஆட்களுக்கு தெரியுமா. தங்களின் பெருமையை காட்ட இந்த கீழ்த்தரமான சடங்கு. சாமத்திய சடங்கு தான் தமிழர் பண்பாடு என்றால் நான் மேலைத்தேய அடிமையாகவே இருந்துவிட்டு போகிறேன்.இதிலே புலம் பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தவர் படு கேவலமான நடைமுறைகளை கொண்டுள்ளனர்.

பார்த்திபன் கணேசமூர்த்தி
நல்லூர்

Tharmi Ni said...

சாமத்தியச்சடங்கு என்ற புத்தகம் பற்றிய விமர்சனமல்ல இது.அச்சடங்கு பற்றித் தொட்டுச் செல்வதே என் கருத்துகள்.மேலைத்தேய/கீழைத்தேய ரீதியில் இதை நான் அணுகவில்லை.யதார்த்தமாக எளிமையாக ஒரு பெண்ணாக என் சிந்தனை.
தர்மினி

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்