/* up Facebook

May 4, 2016

அவளது கடைசி வியாழன் அப்படி இருந்திருக்க வேண்டாம்...! - கேரளாவில் ஒரு நிர்பயா


ஒரு பெண் மோசமாக பலாத்காரம் செய்யப்படுகிறாள். பலாத்காரம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவளது மார்பும், பிறப்புறுப்பும்  சிதைக்கப்படுகிறது. இறுதியாக அவள் கடும் வலிகளுடன் மரணிக்கிறாள். - இது யாரையோ உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதா...? தேசமே கொந்தளித்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூர முடிகிறதா...? ஆனால் இந்த வரிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த டெல்லி சம்பவம் குறித்தல்ல.  இது நம் அண்டை மாநிலமான கேரளாவில் நடந்தது. ஆனால், தொலைவில் இருக்கும் டெல்லியில் நடக்கும் சம்பவம் உடனே செவிகளுக்கு எட்டி விடுகிறது. ஆனால், அண்டை மாநிலத்தில் நடந்த சம்பவம் நம் செவிகளுக்கு எட்ட ஐந்து நாட்கள் ஆகி இருக்கிறது. 

அவள் அன்று பட்டாம்பூச்சிகள் குறித்து யோசித்திருக்கலாம்:

அவள் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. உங்கள் பிடித்த பெண்ணின் பெயரை அவளுக்கு நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். கடந்த வியாழன் அன்று, கேரள மாநிலம், பெரும்பாவூர் வட்டோலிப்பிடி கால்வாய் அருகே இருக்கும் தனது வீட்டில் அவள் தனியாக இருக்கிறாள். அவளுக்கு பிடித்த கவிதையை அப்போது வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது நல்ல இசையை கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அமைதியாக அமர்ந்து பட்டாம்பூச்சிகள் குறித்து யோசித்துக் கொண்டிருந்திருக்கலாம். எதுவாகினும் அது தான் அவளது கடைசி வியாழன். ஆம். யாரோ ஒரு மிருகத்தால்... மன்னிக்கவும் மிருகங்கள் வல்லுறவு கொள்வதில்லை. அது மிக நாகரிகமானவை. எவனோ ஒருவனாலோ அல்லது பலராலோ வல்லுறவு கொள்ளப்படுகிறாள். பிறகு கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள்.

வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் அந்த பெண்ணின் தாயார், இறந்த தனது மகளின் கோலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைக்கிறாள், அழுகிறாள், காவல்துறைக்கு புகார் தெரிவிக்கிறாள். (வேறு என்ன எழுத... அந்த வலியை எப்படி  வார்த்தையில் கடத்த முடியும்...?). 

காவல் துறை வருகிறது. வழக்குப் பதிவு செய்கிறது. பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை, அவள் கூர்மையான ஆயதங்களால் தாக்கப்பட்டு இருக்கிறாள் என்றும், அவள் உடல் முழுவதும் வெவ்வேறு இடங்களில் காயம் என்றும் தெரிவிக்கிறது. 

வழக்கம் போல், காவல் துறை  அதிகாரிகள் தீவிரமாக குற்றவாளியை தேடி வருகிறார்கள். கேரளாவிலும் தேர்தல் என்பதால், அரசை குற்றம் சுமத்த இந்த விஷயம் எதிர்க்கட்சிகளுக்கு பயன்படுகிறது. அங்கு தேசிய ஊடகத்தை பார்ப்பவர்கள் குறைவு என்பதால்,  தேசிய ஊடகங்களில் இது குறித்து பெரிதாக விவாதம் நடக்கவில்லை.  'India wants to know' என்று அவர் உச்ச டெசிபலில் கத்தவில்லை. 

ஐந்து நாட்கள் ஆகியும் காவல் துறையின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், மக்கள் கொந்தளித்து சமூக ஊடகங்கள் வாயிலாக பொது சமூகத்திடம் நீதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

புள்ளி விபரங்கள் அச்சமூட்டுகின்றன:

2005 துவங்கி 2014 வரை, இந்த பத்து வருடங்களில் பெண்களுக்கு எதிராக 22,40,000 குற்றங்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு பெண்களுக்கு எதிராக 26 குற்றங்கள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்த பத்தாண்டுகளில் மட்டும் 470556 பலாத்காரங்கள் நிகழ்ந்துள்ளன. இது அனைத்தும் அரசு சொல்லிய கணக்குதான். பொதுவாக சமூகத்திற்கு அஞ்சி பல பெண்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதில்லை. அப்படியானால் உண்மையான கணக்கு எவ்வளவு இருக்கும்...? 

நாம் நாகரிகம் அடைந்து விட்டதாக பிதற்றிக் கொள்கிறோம். சமூகம் வளர்ச்சி அடைகிறது என்கிறோம். எது நாகரிகம்...  எது வளர்ச்சி? 2005 ம் ஆண்டு 155,553 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 2014 ல் 337922 ஆக அதிகரித்து இருக்கிறதே, இதுதான் வளர்ச்சியா...?


இந்த புள்ளிவிபர கணக்கில், நாளை இந்த கேரள சம்பவமும் மற்றொரு எண்ணாகும். நாமும் இரண்டு நாட்கள் பேசிவிட்டு கடந்து சென்று விடுவோம். நாளை இதுபோல் இன்னொரு சம்பவமும் ஏதோ ஒரு சிறு நகரத்தில் நிகழும் என்றால், நாம் என்ன செய்யப் போகிறோம்.

தீர்வு என்ன...?
வேர்களில் விஷம் ஏற்றி வைத்திருக்கிறோம். அதை சரி செய்யாமல் நிச்சயம் இதற்கொரு தீர்வை நாம் காண முடியாது. ஆம். பள்ளி கல்வியிலிருந்தே பெண் ஒரு சக உயிர்தான் என்ற எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.  பெண்களுக்கு நடத்தையை கற்பிக்கும் பெற்றோர், ஆண்களுக்கும் பெண்களை மதிக்க கற்று தர வேண்டும். பெண்கள் வெறும் பண்டம் அல்ல என்று சொல்லித் தர வேண்டும். இதை செய்யாமல் நாம் வெறும் பிரச்னையை பற்றி பேசிக்கொண்டு இருப்போமாயின், இந்த புள்ளிவிபரங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையாது. அரசும் தம் கடமையிலிருந்து நழுவாமல் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கும் பாடங்களை பள்ளி பாடத்திட்டத்திலேயே சேர்க்க வேண்டும். 

- மு. நியாஸ் அகமது 

நன்றி - விகடன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்