/* up Facebook

May 9, 2016

நியோகா: பேசாப் பொருள்களை துணிவுடன் பேசும் திரைப்படம்! – அரசிஏப்ரல்  2ம் திகதி நியோகா திரைப்படத்தின் தொறொன்ரோ திரையிடலிற்குச் செல்லக் கிடைத்தது. இயக்குனர் சுமதியின் சிந்தனை மிகவும் புதியது. அவரது குறும்படங்கள் மற்றும் அவர் நெறியாள்கை செய்த நாடகங்கள் யாருமே பேசாத ஆனால் நம் வாழக்கையின் நிதர்சனமான உண்மைகளை முதன் முதலாக பேச முயல்பவையாக இருந்திருக்கின்றன. நியொகவும் அந்தவகையில் புதிய விடயத்தைப் பேசும் படம்தான். முதல்நாள் திரையிடப்படலுக்கு முன்பாகவே பல நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றிருக்கிறது நியோகா. ஒரு பெண் இயக்குனரின் இயக்கத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடமிருந்து வெளிவரும் முதலாவது திரைப்படம் இது என்ற பெருமையும் அதற்கு உண்டு.

நியோகா என்ற பெயரை மகாபாரதத்தில் இருந்து எடுத்ததாக சுமதி திரையிடலுக்குப்பின்னர் நடந்த கேள்வி பதில் நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு ஆண்மைக்குறை இருப்பின் வம்ச விருத்திக்காக அவனது மனைவியை வேறு ஒரு (யாரென்று தெரியாத) ஆணுடன் உடலுறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்க வைப்பது தான் நியோகா என்று சுருக்கமாகக் கூறலாம். மாதொருபாகன் நூலில் இந்த வழக்கத்தைப் பற்றி எழுதியதால் எழுத்தாளர் பெருமாள்  முருகன் மீது தமிழ்நாட்டில்  பல தாக்குதல்கள் நடந்தது நம்மில் சிலருக்குத்  தெரிந்திருக்கலாம். அந்தப் புத்தகம் அப்படிப்  பிரசித்தியடைய முதலே இந்தப்படத்திற்கு தான் தலைப்பு வைத்துவிட்டதாக சுமதி அப்போது குறிப்பிட்டது எனக்கு ஞாபகம்  இருக்கிறது.இப்படத்தின் கருப்பொருள் ஒரு பெண்ணைப்பற்றியது. கணவன் காணாமல் போன பின்னர் அவன் மீண்டு வருவான் என்கிற எதிபார்ப்பில் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மலர் என்னும் பெண் தான் கதையின் நாயகி. அவளது குடும்பத்தவர்கள் கூட  அவளது மனது இப்படித்தான் இருக்கிறது என்பதை தீர்மானித்து அவளின் ஆசாபாசங்களை கேள்வி கேட்காமலே மறுகின்றனர்,மறைக்கின்றனர், அல்லது கண்டும் காணாமலிருக்கின்றனர். அவளதுமன உணர்வுகளையும் அவளைச் சுற்றி இருப்பவர்கள் அதை எப்படி அணுகுகின்றார்கள் என்பதையும் சித்தரிப்பதே இப்படம்.

கடைசியில் அவள் என்ன முடிவை எடுத்தாள் என்பது தான்  கதையின் உச்சக்கட்டம்.இத்தந்தப்படத்தின் சிறப்பெனச் சொல்வதற்கு தொழில்நுட்பாம் நடிப்பு எனப்பல விடயங்கள் இருந்தாலும் முதலாவதும் முக்கியமானதுமான விடயம் அதன் ஆணித்தரமான, எந்தப் பூச்சுச்சு மெழுக்கு மற்ற கருப்பொருள். ஒரு பெண்ணின் நுண்ணுணர்வுகளை நானறிந்தவரையாரும்  இப்படித் தெளிவாகவும், வெளிப்படையாகவும் சொல்லவில்லை.

மொத்தத்தில் பேசப்படவேண்டிய பேசாப் பொருள்களை தயங்காமல் பேசுகின்ற ஒரு திரைப்படம் நியோகா.  காணமல் போனவர்களின் மனைவிமார், பல இளம் விதவைகள் இருக்கும் நம் சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய இயல்பான உணர்வுகள், ஆசைகள், உடல், உளத் தாபங்கள் போன்ற விடயங்களை ஏன் நாங்கள் இன்னும் உரையாடலுக்குட்படுத்தாமல்  இருந்தோம் என்று படம் முடிந்ததும் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

நடிகர்கள் அனைவரும்  எந்த மிகை நடிப்புமின்றி இயல்பாகவும் பாத்திரத்தோடு ஒன்றியும் திரையில் வலம்  வந்தார்கள். முக்கியமாக மலர் என்கிற பாத்திரத்தில் நடித்த தர்ஷினி வரப்பிரகாசத்தைக் குறிப்பிட வேண்டும்.  ஏற்கனவே அறியப்பட்ட நடிகர்களைப் பயன்படுத்தினால் பாத்திரமாக மக்கள் அதை பார்க்கமாட்டார்கள்,நடிகரே முன்நிற்பார், பாத்திரம் வலுவிழக்கும் என்று ஒரு கருத்துண்டு. ஆனால் அன்று  தர்ஷியை எனக்குத் திரையில் தெரியவேயில்லை. மலர் அக்கா மட்டுமே கண்ணிலும் மனதிலும் நின்றா. அதை அன்று படம் பார்த்த எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். மலரின் தம்பியின் மனைவியாக நடித்த நடிகையை சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று  நினைக்கிறேன். அந்தப்பாத்திரத்தின் வார்ப்பு மிகவும் அருமையானது. படம் போகப் போக அந்தப் பாத்திரத்தின் மேல் எனக்கு இனம்புரியாத அன்பும் நட்புணர்வும் வந்துவிட்டது. உண்மையான மனிதர்களை சந்தித்தது போலவே நான் உணர்ந்தேன்.

இப்படத்தின் கரு நம் சமூகத்தின் சாதாரண மனிதரிடையே இன்னும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கிறது. திருமணத்துக்கு வெளியேயான உடலுறவு,தகப்பனற்ற குழந்தைகள் போன்ற விடயங்களில் பல மனத்தடைகள் நம் சமூகத்துக்கு உண்டு. நாம் இன்னும் முழுமையாக பாலியல் சுதந்திரமடைந்த சமூகம் அல்ல. எனவே இப்படியான படத்தில் நடித்த ஒவ்வொரு பெண்ணும் தனது சாதாரண வாழ்க்கையில் இந்தப் படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்காமல் இதில் இறங்கியிருக்க முடியாது. கேள்வி பதில் நேரத்தில் தன்னிடம் கதையைக் கூடக் கேட்காமல் பலர் நடிக்க சம்மதித்ததாக சுமதி கூறியிருந்தார். அது அவர் மேல் மற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. அதேபோல அந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகளின் மன உறுதியையும் காட்டுகிறது. இப்படியான நடிகர்கள் இருந்தால் தான் இப்படியான படங்களைத் தரமுடியும்.

படத்தின் காட்சியமைப்பு, கமராக் கோணங்கள், ஒளியைப் பயன்படுத்திய விதம் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தது. இதை நான் படத்தின் முன்னோட்டம் கண்ட போதே உணர்ந்தேன். முக்கியமாக ஒரு காட்சி இன்னும் மனதில் நிற்கிறது. மலர் இருளான ஒரு அறையில் படுத்திருக்கிறாள். அவளது அப்பா கதவை இலேசாகத் திறந்து பார்க்கிறார். கதவின் சின்ன இடைவேளிக்குளால் விழும் நேர்கோட்டு வெளிச்சம் அவளது உறங்கிய முகத்தில் விழுகிறது. மிகுந்த அழகியல் உணர்வுடன் அது அமைந்திருந்தது. பின்னணி இசை படத்திற்காக புதிதாகப் போடப்பட்டதா என்று ஒருவர் கேள்வி பதில் நேரத்த்தில் கேட்டிருந்தார்.  இது “நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்”  என்று என்னை நினைக்க வைத்தது. பின்னணி இசை பின்னணியிலேயே படத்தை அழகுபடுத்தி இடையூறு செய்யாமல் நின்றது பாரட்டுக்குரியது. மிகக் கச்சிதமான மீபீவீவவீஸீரீ உம் இணைந்து படத்தை மிக அழகாக்கியிருக்கிறது.

இந்தப்படத்தில் இன்னொரு முக்கிய விடயமாக நான் கண்டது கதையின் திறந்த தன்மை. என்ன நடந்தது என்கிற கதைச் சுவாரசியத்துக்காக மட்டும் படப் பார்ப்பாவ்ர்களை இந்தப்படம் கொஞ்சம் அந்தரத்தில் தவிக்க விட்டிருக்கும் என்றே நினைக்கிறேன். சில நேரங்களில் என்ன நடந்தது என்கிற தகவல் தேவை இல்லை, அல்லது என்னவும் நடந்திருக்கலாம், அல்லாது என்ன நடந்திருந்தாலும் ஒன்றுதான் என்கிற வகையாக நாம் இதை நோக்கலாம். கதை என்றால் ஆரம்பம், ஒரு பிரச்சனை, பின்னர் அதற்கான தீர்வு என்கிற ஒரு சமன்பாட்டுக்குள் இருக்க வேண்டியதில்லை என்பதை நியோகா சொல்கிறது. காணாமல் போனவர்கள் இறந்தார்களா, இருக்கிறார்களா? வருவார்களா, வரமாட்டார்களா? என்பது போன்ற பல பதிலற்ற கேள்விகளை சுமக்கும் சமூகம் தானே நாம். நாம் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவையும் பதிலையும் தேடுகிறோம்? பதிலில்லாத கேள்விகள் ஏன் நம்மை அச்சப்படுத்துகின்றன? கேள்வி பதில் நேரத்தில் வந்த பல கேள்விகள் இவ்வாறுதான் என்னைச் சித்திக்க வைத்தன. இது பார்த்து  முடித்ததும் மறந்துவிட்டு நம் வேலையைத் தொடங்க நம்மை அனுமதிக்காத படம். எல்லாவற்றையும் சொல்லி நம்மை ஒரு வெறும் உள்வாங்குபவராக்காமல், சிலவற்றை கற்பனை செய்யவும்,  சிந்திக்கவும், கேள்வி கேட்கவும்  வேண்டி நம்மையும் தனக்குள் ஈர்த்து விடுகின்ற படம்.

குறை சொல்லத்தான் வேண்டுமெனில்  தொழில்நுட்ப ரீதியாக சில விஷயங்களைக் குறிப்பிடலாம். ஆனால்  இது சுமதியின் முதலாவது படம் என்கிற வகையில் மிகச் சிறப்பானது. திரையிடலின் பின் நடந்த கேள்வி பதில் நேரம் சரியாக ஒழுங்கு செய்யப்படிருந்ததால் காத்திரமான கருத்துப்பரிமாறலுக்கு வழிவகுத்திருக்கும் என்கிற ஒரு ஆதங்கத்தைத் தவிர  நிகழ்வு நன்றாகவே நடந்து முடிந்தது என்றே நினைக்கிறேன்.

நியோகா மீண்டும் ரொறொன்ரோவில் திரையடப்பட வேண்டும் என்பதே எனது ஆவல். இந்தியத் தொலைக்காட்சிகளும், பாடகர்களும், சினிமாக்களும் நமது புலம்பெயர் தமிழர் சந்தையை நன்கு  பயன்படுத்தி பணமும் புகழும் சம்பாதிக்கும் போது  நாம் நம் தரமான சொந்தத் தயாரிப்புக்களை சந்தைப்படுத்தி வெற்றி பெறுவது நமது கலை, கலாசாரம் மற்றும் நமது தனித்துவமான வரலாறு எல்லாவற்றுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை. திரைப்படங்கள் மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் மக்களின் ரசனை திரைப்படத்துறையில் ஏற்படுத்தும் தாக்கம் என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்றிலாமல் இன்னொன்று அமையாது. இதனை காத்திரமான வகையில் வளர்ப்பதற்கான விதை விழுந்து விட்டது என்றே நினைக்கிறேன். நியோகாவுக்கும் அதை எம்முன் கலையாக அனுபவிக்க வைத்த கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

நன்றி - தீபம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்