/* up Facebook

May 11, 2016

பொருளாதார பிரச்சினையில் போராடும் பெண் தலைமைத்துவங்கள் - கேஷாயினி எட்மண்ட்

கூலி வேலை செய்தும் கூட என் பிள்ளைகள் இருவரையும் படிப்பிக்க முடியாமல் பாடசாலையை விட்டு நிறுத்திவிட்டேன்.” 33 வயதுடைய கனிதும ஹெட்டியாராட்சி.

“என் உடலை விற்று தான் குடும்பத்தை காப்பாற்றுகின்றேன்” – கிரிஷாந்தி ரணவக்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கடந்த மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தில சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த ஆண்-பெண் என இருபாலாரும்; காணாமல் ஆக்கப்பட்டு, உயிரிழந்துள்ளதுடன் பலரும்அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். வடக்கு,
கிழக்கைப் பொறுத்தவரையில்  இத்தகைய பாதிப்புக்குள்ளான குடும்பங்களின்
தரவுகள் குறித்து இன்று வரை சரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்படாத நிலையில், அரசபடையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டதுடன், அவர்களுக்கான இழப்பீட்டு உதவிகளும், வழங்கப்பட்டு, ஊடகங்களில் அவை குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த இழப்பீட்டு உதவிகள் சரியான முறையில் மக்களை சென்றடைகின்றதா என்பதும் அவர்களுக்கு போதுமானதாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

நாடளாவியரீதியில் சுமார் 5 லட்சம் பெண்கள் கணவனை இழந்துள்ளதுடன், இவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் தமது குடும்பங்களில் தலைமைத்துவம் வகிக்கின்றனர் என அரசாங்க புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும், அரச பாதுகாப்பு படைகளில் இணைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பெண் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை குருநாகல் மாவட்டத்திலேயே அதிகமாகவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் குறிப்பாக, மாவத்தகம, குளியாப்பிட்டிய, உடுவத்தாவ, பின்னல போன்ற பகுதிகளிலேயே அரச பாதுகாப்பு படைகளில் இணைந்து போரினால் பாதிக்கப்பட்டு 62 வீதமானோர் உயிரிழந்துள்ளதுடன் 15 வீதமானோர் அங்கவீனமுற்றும் 23 வீதமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குருநாகல் பிரதேச செயலக தரவுகளிலிருந்து தெரியவருகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட இராணுவ குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய கிராமமே ரணவிருகம. 

இங்கு இருப்பவர்களுக்கு வீட்டுத்திட்டங்களும், ஓய்வூதிய கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இவர்களின் வாழ்வாதாரநிலை முழுமையடையவில்லை.  

படம்:- சுபானி தனசேகரவும், மகளும்  
தொடர்ந்தும் இக் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுள் ரணவிருகமவில் வசிக்கும் டீ. எம். சுபானி
தனசேகர குறிப்பிடுகையில,; “வடமாராட்சி யுத்தகளத்தில் கடமையின் போது மரணமடைந்த கணவரின் சடலத்தைக் கூட எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. அப்போது எனது மகள் ஐந்து மாத குழந்தையாக இருந்தாள்;. உடுத்த உடையுடன் எமது ஊரைவிட்டு, இங்கு வந்து எமது புது வாழ்க்கையினை ஆரம்பிக்கவேண்டியிருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எமது கடன்களை அடைத்துக் கொண்டிருக்கின்றோம். குறிப்பிட்ட காலம் வரை முழு ஓய்வூதிய பணம் கொடுத்தார்கள், தற்போது அதையும் குறைத்து விட்டார்கள். எனது மகள் உயர்தரம் படிப்பதனால், அவரது உயர்கல்விக்கான செலவீனங்களை செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடனுதவிகள் பெறச் சென்றாலும், ஆண் துணை இல்லாத குடும்பம் என்பதினால், வித்தியாசமான பார்வைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் படும் இன்னல்களை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என மிகுந்த வேதனையுடன் கூறினார்.

மேலும் குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய என்ற பகுதியிலிருந்து கனிதும ஹெட்டியாராட்சி குறிப்பிடுகையில்: எனக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கின்றனர். எனது கணவரோ சாதாரண சிப்பாயாக இருந்து கடந்த 2009 அம் ஆண்டு மேமாதம் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் எமக்கு அவரது சம்பளமாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனது பிள்ளைகள் ஐந்துபேரும் கல்விகற்கும் வயதுடையவர்கள். ஆனால் எனக்;கு அரசினால் வழங்கப்படும்

சம்பளம் போதாமல் இருக்கின்றது. எமக்கு எந்தவித மேலதிக கொடுப்பனவுகளோ, சலுகைகளோ அல்லது கடன் உதவிகள், மாதர் அமைப்புகளின் உதவிகளோ வீட்டுத் திட்டமோ கிடைக்கவில்லை. நாம் வாடகை வீட்டிலேயே குடியிருக்கிறோம். எமக்கு பொருளாதாரம் போதாமல் உள்ளதால் எனது இரண்டு பிள்ளைகள் படிப்பை இடைநிறுத்திவிட்டு தமது சகோதரர்களுக்காக வீடுகளில் கூலி வேலைக்குபோய் வருகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு உடல், உளரீதியில் பாதிப்பை எதிர்கொள்ளநேரிட்டதால் தமது வேலையை விட்டுவிட்டனர். இதனால் எமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கே பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, இராணுவ உயரதிகாரியின் மனைவி சுறுசுறு பிரியங்கா தெரிவிக்கையில், எனது கணவர் இறந்து 21 வருடங்கள் ஆகின்றன. அவரின் ஓய்வூதியமாக மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனக்கு ஒருமகன் மட்டுமே இருக்கின்றார். அவரும் இப்போது படித்துவிட்டு, வேலைசெய்கின்றார். எனது கணவரின் தாயாரும் என்னோடுதான் வசித்துவருகின்றார். எங்களைப் பொறுத்தவரையில், எந்தவித பொருளாதாரப் பிரச்சினைகளும் இல்லையென கூறினார்.

குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அறிக்கையில் போரினால் பாதிப்புற்று
குடும்பங்களுக்கு என கமநெகும திட்டத்தின் கீழ் ; மாவட்ட அபிவிருத்தி
அறிக்கையில் போரினால் பாதிப்புற்று குடும்பங்களுக்கு என “கமநெகும”
திட்டத்தின் கீழ் 400 பில்லியனும், “சமுர்த்தி” திட்டத்தின் கீழ் 1100 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு என “வறுமையற்ற இலங்கை” (ளுசடையமெய றiவாழரவ Pழஎநசவல)எனும் விசேட திட்டத்தின் கீழ் 120 மில்லியன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், போருக்குப் பின்னர் 2013 வரை செலவிடப்பட்டுள்ளன.

அத்துடன் இதனால், 3 லட்சத்து 56 ஆயிரத்தி 775 நபர்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மேற்கூறிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற போதும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 70 வீதமானவர்கள் அன்றாடம் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஆனால், உயர் பதவிவகித்து அங்கவீனமானவர்களுக்கும், ஆரம்பகாலத்தில் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்தவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பொருளாதாரச் சிக்கல் என்பது இல்லாதபோதும், இறுதிக்கட்ட போரில் மரணமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்கள் பல சவால்களுக்கு முகம்கொடுக்கின்றன.

இத்தகைய சவால்களின் தார்ப்பரியங்கள் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமே, கிரிசாந்தி ரணவக்கவின் கதை. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

“எனது கடைசி பிள்ளை வயிற்றில் இருந்தபோது, இராணுவத்தில் கணவர் உயிரிழந்துவிட்டார். எனக்கு 4 பிள்ளைகள். கணவரின் தாயாரும், தகப்பனாரும் என்னுடன் இருக்கின்றார்கள். அவர்களையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. இந்தநிலையில் தான், இங்கிருந்தால், வருமானத்தை ஈட்ட முடியாது என்ற நிலையில், முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்து சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக கடமையாற்ற பயணமானேன். அங்குபோய் இறங்கிய பின்னர் தான், என்னைப் பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்துவதற்காக அல்ல பாலியல் தொழிலாளியாக்குவதற்கே அழைத்து வரப்பட்டேன் என்பது தெரியவந்தது. ஆனாலும், திரும்பிபோனால், பட்டகடனை கட்டுவதற்கு என்ன செய்வது என புரியாமலும், வேறு வழியின்றியும் கடந்த 11 வருடங்களாக சிங்கப்பூரின் ஹேலாங் ( புயலடயபெ) சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் எனக்கு பாலியல் தொற்று இருப்பதும் மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், எனது மூத்த பிள்ளையாவது படித்து ஒரு வேலைக்கு செல்லும் வரை என்னால் திரும்பி எனது கிராமத்திற்குபோக முடியாது. என்னைப் போல், போரில் கணவனை இழந்து மற்றும் அங்கவீனமானவர்கள் உள்ள குடும்பங்களில் தலைமைத்துவம் வகிக்கும் சிலரும் இங்கு பாலியல் தொழிலாளிகளாக இருக்கின்றார்கள். ஆனால், எமது கிராமத்தில் இருப்பவர்கள் நாம் வெளிநாட்டில் நல்ல பணியில் இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வறுமையில் இருப்பதனால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களும் எமது பொருளாதார நிலைமையினை வைத்து, இலகுவாக எம்மை ஏமாற்றி விடுகின்றார்கள். இந்த தொழிலில் இருந்து விடுபடவும் முடியாது. மரணம்தான் எம்மை விடுவிக்கும் என குரல் தளும்பலுடன் தொலைபேசியில் எம்முடன் உரையாடினார்.

குருநாகல் பகுதியில் இவ்வாறான பல்வேறு கண்ணீர் கதைகள் இடம்பெறுகின்றபோதும் இதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான தளம் இல்லாததொரு நிலை காணப்படுகின்றது. இங்கு மகளிர் அமைப்புக்கள் இருந்தும் கூட அவைகள் பெயரளவில் மட்டுமே செயற்படுகின்றன.
இது குறித்து குருநாகல் கிறிஸ்து அரசர் பேராலய குருவானவர் வண.ரஞ்சன் “இப்பகுதிகளில் இராணுவத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் வசிக்கின்றன. நான் அறிந்த வகையில் எந்த மகளிர்; அமைப்புக்களோ, தனியார் நிறுவனங்களோ, இக்குடும்பங்கள் தொடர்பில், எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. உங்களுக்;கு சொல்லுவதற்குகூட எனக்கு ஒரு பெயரும் தெரியாது. நான் இங்கு 7 வருடங்களாக பணியாற்றுகின்றேன். இதுவரையில் எந்த அமைப்புக்களை சார்ந்தவர்களும் என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லையென கவலையாக கூறினார். நாம் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தி;ல் கவலைக்குரியசம்பவமொன்றினையும் அறிந்தோம்.

தமிழ்,சிங்கள கலப்பு திருமணம் புரிந்த தம்பதிகளில் கணவர்போரில் பாதிப்புற்றதால், மகளான 12 வயது சிறுமி பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, தாயாரினால் பிறிதொருவீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த
நிலையில், வீட்டு உரிமையாளரினால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு,
கொலை செய்யப்பட்டுள்ளார்.  சிறுமியின் சடலத்தினை வீட்டிற்குள் வைத்து
பூட்டிவிட்டு, தப்பி ஓடிய நிலையில் 3 நாட்களின் பின்னர் சந்தேக நபரை
மாவத்தகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  
 
இந்த சம்பவத்தினை அடுத்து மரணச் சடங்கு தினமான சனிக்கிழமை (30.01.2016) அன்று மாவத்தகம நகரப் பகுதியில் அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்திய பாடசாலை ஆசிரியருள் ஒருவரான செந்தில் சிவஞானம் “இப்பகுதியில் இடம்பெறும் எதனையும் ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் இல்லை. இந்தசம்பவம் கூட முதற் தடவை என்று கூறிவிட முடியாது. ஊடகங்களில் வெளிவந்தவைகளைவிட மறைக்கப்பட்டவையே ஏராளம். இதற்கெல்லாம் பணப்பிரச்சினைதான் காரணம்” என விசனமடைந்தார்.

போருக்குப் பின்னர் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் ஒரு அங்கமாக இச்சம்பவத்தினை மேற்கோள் காட்டலாம் என்பதுடன் இவை தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக வீட்டுத்திட்டம், சுயதொழில் உதவிகள்,நுண்கடன் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமுல்ப்;படுத்துவதாக ரணவிரு சேவை அதிகாரசபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பல்லாயிரக் கணக்கான படை வீரர்களின் குடும்பங்களுக்கு இவ் உதவித் திட்டங்கள் போதியளவு சென்றடையவில்லை என்று அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் இவர்கள் தாம்
எதிர்கொள்ளும் வாழ்வாதார ரீதியான கஷ்ரங்களை போக்க அரசு தமக்கு போதியளவு உதவித்திட்டங்களை வழங்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

இவ் ஆய்வுக் கட்டுரைக்கு தரவு சேமிப்பது தொடர்பில் குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர், குளியாப்பிட்டி, ரணவீரகம மற்றும் மாவத்தகம கிராம சேவையாளர்கள், மகளீர் அபிவிருத்தி அமைப்பு, பாதுகாப்பு அமைச்சு ஆகிய அரச திணைக்கள அதிகாரிகளை பல தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, வினவிய போதும், அவர்கள் பாதிப்படைந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுப்புத் தெரிவித்தனர்.

கேஷாயினி எட்மண்ட்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்