/* up Facebook

May 10, 2016

அன்னையர் தினம் - வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிஅன்னையர் தினக்  கொண்டாட்டங்கள் பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய நாட்டில் தொடங்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது . கிறித்து பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் ரியா (Rhea )மற்றும் சைபில் (cybele ) என்ற பெண் கடவுளர்களுக்கான கொண்டாட்டங்கள் அவை.

அதே போல பழங்கால இங்கிலாந்தில் (1600) மதரிங் சண்டே (Mothering Sunday ) ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயான மேரியை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்டது . பின்னாளில் மேரியை நினைவு கூர்ந்த பின் தங்களை ஈன்ற தாய்மார்களுக்கும் பரிசுகளும் , மலர்களும் கொடுத்து கொண்டாடி வந்தனர் இங்கிலாந்து மக்கள். மதரிங் சண்டே (Mothering Sunday ) 19 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து போய்விட்டது . 

மீண்டும் இரண்டாம் உலகப் போரின்போது , அமெரிக்க இராணுவத்தினரால் கொண்டாட தொடங்கப்பட்டது . அமெரிக்காவை பொருத்தவரை இரண்டு பெண்மணிகள் அன்னையர் தின வரலாற்றிக்கு வித்திட்டவர்கள் . 

ஜூலியா வார்ட் ஹோவே (Julia Ward Howe ):

1872 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை அமெரிக்காவில் கொண்டாட வேண்டும் என்று எண்ணினார் அமெரிக்காவின் சமூக ஆர்வலர் , எழுத்தாளர், கவிஞர்  ஜூலியா . முதலில் ஜூன் 2 ஆம் தேதி தான் அன்னையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார் ஜூலியா. அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு எதிராக அமைதியை வலியுறுத்தி , போரில் தன் பிள்ளைகளை இழக்கும் தாய்மார்களின் கண்ணீருக்காக அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1870 ஆம் ஆண்டு பாஸ்டன் (Boston ) நகரில் அதிகாரப்பூர்வமாக ஜூலியா அறிவித்தார்.

அன்ன ஜார்விஸ் (Anna Jarvis ):

இன்றைய காலங்களில் மே மாதம் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தின் தோற்றுனர் அமெரிக்காவைச் சேர்ந்த அன்ன ஜார்விஸ் அவர்கள். இவரின் தயார் அன்ன மேரி ரீவேஸ் ஜார்விஸ் (Anna Marie Reeves Jarvis ) அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின்போது காயம்பட்ட வீரர்களுக்கு தொண்டு செய்தவர். உலகில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டி விழா ஒன்றினை நாம் கொண்டாட வேண்டும் என்று தன மகளான அன்ன ஜார்விஸ்யிடம் மேரி ஜார்விஸ் கூறுவார்.  தன்  தாயின் விருப்பத்தை ஜார்விஸ் தன் தாயின் மரணத்திற்குப் பின் (1905) நிறைவேற்ற விரும்பினார். 

தளராது அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார் . அவரின் உழைப்பிற்கான பலன் கிட்டியது . 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் அன்னையர் தினத்தினை கொண்டாடியது . மே 8 ,1914 ஆம் ஆண்டு அதிபர் வூட்ரா வில்சன் (Woodrow Wilson ) அவர்கள் அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினம் மே மதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று கையெழுத்திட்டார். அனால் பின்னாளில் அன்னையர் தினம் வணிகமாக்கப்பட்டதை எதிர்த்து ஜார்விஸ் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார்.அவர் அன்னை, பிள்ளைகள் தங்கள்  கைக்  கொண்டு எழுதிய   சிறிய கவிதை அல்லது ஒரு பொருளை தங்கள் தாய்க்கு பரிசளிக்க வேண்டும் என்றே விரும்பினார் என்பது தான் வரலாற்று உண்மை. 

மேலே நாம் அன்னையர் தினம் உருவான வரலாற்றை பார்த்தோம். சற்றே ஆழமாக யோசித்தால் மனித உயிர்களைப்  போல் அத்துணை உயிர்களும் கருவுற்று குட்டிகளை ஈன்றெடுக்கின்றது . குட்டிகள் தனியாக இயங்கும் வரை உடனிருந்து பாதுகாக்கின்றது ,பசியாற்றுகின்றது ,பராமரிக்கின்றது . இது இயற்கை. ஆனால் மனித இனம் கட்டியமைத்துள்ள தாய்மை எனும் உணர்வு தாகம், பசி, காமம் போன்று இயற்கையானது இல்லை .

Altruism என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தன்னை அழித்துக் கொண்டு மற்றவர்களை பாதுகாப்பது. அதைத்தான் மனித இனம் தாய்மை உணர்வாக கட்டியமைத்திருக்கின்றது . தனக்கான நேரம் , உணவு, கனவு என்று அனைத்தையும் தவிர்த்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன் பெண்டு, பிள்ளை என்று பெண்களை அடைத்து வைத்திருக்கின்றது . இந்த Altruism என்பதை பொது நலம் பேணுதல் என்று பொதுவாக சொன்னாலும் , விலங்கியல்படி ஒரு விலங்கு தன்னை வருத்திக் கொண்டு மற்ற உயிரினத்திற்காக பாடுபடுவது. அதைத்தான்  ஒரு பெண் தாய் என்ற நிலையில் இருந்து செய்கின்றாள். தனது சொந்த விருப்பு , வெறுப்புகளைப் பற்றி சிந்தனை சிறிதுமின்றி காலந்தோறும் சிதைகின்றாள் . இந்தக்  கொண்டாட்டம்  ஒரு பெண் தாய் என்ற நிலையை அடைவது மிக முக்கியம் - தன் விருப்பங்களை அழித்துக் கொண்டு தியாகத்தின் திருவுருவாய் இருந்திட வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே.

இது ஒரு புறமிருக்க இந்த உலகத்தில் தாய்- தந்தை இல்லாத குழந்தைகள் 132 மில்லியன் என்று UNICEF அறிவித்துள்ளது . அமெரிக்காவில் 81.5 மில்லியன் மக்கள் தத்தெடுப்பதைப் பற்றி யோசித்துள்ளனர் . 500 மக்களில் ஒரு நபர் ஒரு குழந்தையை தத்தெடுத்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வீடு கிடைக்கும் என்கிறது ஒரு ஆய்வின் கணிப்பு.  

வணிகமயமாக்கப்பட அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் அந்த யாருமற்ற பிஞ்சுகளின் மனதில் ஏக்கக் கேள்விகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. போரில் இறக்கும் பிள்ளைகளை இழந்து வாடும் தாய்மார்களுக்காக அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலை எங்கே? அன்னையற்ற குழந்தைகளைப் பற்றி கவலைக் கொள்ளாது வணிக சூழலில் கொண்டாடப்படும் இன்றைய அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் பற்றி என்னச் சொல்வது ? யாருமற்ற குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்ற ஒற்றை வரியில் தப்பித்துக் கொள்வது மனிதமாகுமா?கொண்டாட்டங்களில் இருக்கும் சுரண்டலையும் - ஏக்கங்களையும் அறிவார்ந்த சமூகம் என்று கூறிக் கொள்ளும் நாம் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை. 

இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது . முதலாளித்துவத்தை விரும்பாத சில  கம்யுனிச நாடுகள் கூட உலக மகளிர் தினத்தை அன்னையர் தினமாகவும் கொண்டாடுகின்றன. அனால் அதன் தோற்றுனரால் விரும்பப்படாத வணிகமயமாக்கப்பட்ட நிலையில் கொண்டாடப்படுகின்றது என்பது தான் வேதனை.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்