/* up Facebook

May 3, 2016

லா.ச.ரா.வின் ஜனனி - ஆர்.சூடாமணியின் யாமினி: இன்றும் தொடரும் துயரம்


எல்லாம் வல்ல பராசக்தி, மானுட அனுபவத்தை நாடி பூமியில் பிறக்கிறாள். அதுவும் திருமண பந்தத்துக்கு உட்படாத ஓர் உறவின் விளைவாக. இப்படியொரு புனைவை இன்று யாரேனும் இயற்றினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கக்கூடும்! ஆனால் லா.ச.ராமாமிர்தம் அப்படியொரு கதையை (ஜனனி) பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதியிருக்கிறார். உள்ளத்தாலும், எழுத்தாலும் அம்பிகை உபாசகராக விளங்கியவர் லா.ச.ரா. சிவ-சக்தி ஐக்கியத் தத்துவத்தை நிறுவுவதே ‘ஜனனி’ கதையின் நோக்கம்.

கைவிடப்பட்ட ‘தெய்வக் குழந்தையை’ பிள்ளை இல்லாத பிராமணர் ஒருவர் வளர்க்கிறார். அவருடைய மனைவியின் முழு வெறுப்புக்கு உள்ளாகி வளர்கிறாள் ஜனனி. புறக்கணிப்பு, நிராகரிப்பு, பேதம் என்ற மானுட இம்சைகளுக்கு உள்ளாகும்போது, பிராமணர் வீட்டின் பூஜை அறையில் எரியும் விளக்குச் சுடரின் மூலம், பரமேசுவரனின் இருப்பை உணர்ந்து ஆறுதல் கொள்கிறாள் ஜனனி.

திருமண வயதை எட்டும்போது, மானுடச் சடங்குக்கு உட்படுத்தப்பட்டு, மோசமான குணம் கொண்ட பட்டாளத்துக்காரனின் மனைவி ஆகிறாள். சாந்தி முகூர்த்தம் ஏற்பாடாகிறது. அதுவே அவனுக்குச் சாவு முகூர்த்தமாக முடிகிறது. பள்ளியறையில் அணுகிய கணவனை ஜனனி பிடித்துத் தள்ள, அவன் தலையில் அடிபட்டுச் சாகிறான். கொலைக் குற்றத்துக்காகச் சிறை சென்று, நன்னடத்தையால் விடுதலையாகி, ஊர்ப் பைத்தியமாக வாழ்ந்து மடிகிறாள் ஜனனி. மண்ணுலக அனுபவங்களினூடே அவள் தனது விரிவையும் பெருக்கத்தையும் உணரும்படியும் அமைதியுறும்படியும் செய்கிறார் பரமேசுவரன்.

“நீ விளக்கைத் தூண்டியபொழுது யாரைத் தூண்டுவதாக நினைத்தாய்? உன்னையேதான் நீ தூண்ட முயன்றாய். நாளடைவில் நீயாக எடுத்துக்கொண்ட பிறப்பின் மாசும் காலத்தின் துருவும் ஏற ஏற, உன்னுள் இருக்கும் நான் உன்னுள் எங்கேயோ படு ஆழத்தில் புதைந்து போனேன். உன்னுள் நீயே புரண்டதால் உன்னுள் புதைந்துபோன நான் இப்பொழுது வெளிவந்தேன்.”

தன்னில் தானே நிறைவு காண வல்லது பெண்மை. சிவமும் சக்தியும் ஒன்றே என்று மிக வலிமையான பதிவுடன் கதை நிறைவாகிறது. ஆன்மிகத் தளத்தில் சக்தி வழிபாடு மார்க்கத்தையொட்டிய கோட்பாடே கதையை நிர்ணயிக்கிறது, நகர்த்துகிறது, நிறைவு செய்கிறது. அதனாலேயே கதையின் ‘சிக்கலை’ சவுகரியமாக விடுவிக்கவும் முடிகிறது. பெண்மைக்கும் அதன் தன்னிறைவுக்கும் அலாதியான அழுத்தமும் ஏற்றமும் தருகிறது இந்தக் கதை.

ஜனனிக்கு ஒரு நள்ளிரவில் மாயைத் திரை விலகி ஞான ஒளி பிறக்கிறது. யாமினியோ இரவின் காதலி ஜனனியைப் போலவே அவளும் கறுப்பழகி. ஜனனியைப் போலவே அவளும் நீண்ட கதை நெடுக ஏறத்தாழ எதுவும் பேசுவதில்லை. ஆர்.சூடாமணியுடைய ‘இரவுச்சுடர்’ நெடுங்கதையின் நாயகி யாமினி, திருமணம் வேண்டாம் என்று சொல்லத் தெரியாத ஜனனியைப் போல் வெகுளி இல்லை. தன் மனநிலையை நன்குணர்ந்து வெளிப்படுத்துகிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே மனிதத் தீண்டலையும், கொஞ்சலையும் வெறுத்து மறுக்கும் அலாதி பிறவியான அவளை, சராசரிக் குடும்பத்தின் பெற்றோரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. திருமணம் வேண்டாம் என்ற அவளது விருப்பத்தையும் அவர்களால் ஏற்க இயலவில்லை. காரணம் கேட்கிறார்கள்!

“திருமணம் என்ற நினைப்பில் அவளுள் உயிரின் அடித்தளமே பொங்கி எழுந்து புரட்சி செய்தது. பசி, தூக்கம் முதலியவற்றை உணர்வது போன்ற கேள்விக்கிடமில்லாத எளிமையுடன் மிக மிக இயல்பாக அந்த மறுப்பை அவள் உணர்ந்தாள்” என்று எழுதுகிறார் சூடாமணி. திருமண பந்தம் என்பதைப் பசி, தூக்கத்துக்கு நிகரான இயற்கையான தேவையாகக் கருதும் உலகம் யாமினியை எவ்வாறு ஏற்கும்?

“வேறொன்றும் செய்யணும்கிற எண்ணத்தில் நான் பேசலே… ஆனால் நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன். அவ்வளவுதான்” என்ற யாமினியின் பதிலைப் புரிந்துகொள்ளாமலும், புரிந்துகொள்ள அஞ்சியும் அவள் பெற்றோர் திருமணத்துக்குள் அவளைத் திணிக்கின்றனர். பலமுறை தப்பிக்க முயன்று, தோற்றுப்போய் ஒரு குழந்தைக்கும் தாயாகிறாள் யாமினி. அக்குழந்தை அவளது சிதைந்த கனவுகளின் சின்னமாகவே அவளுக்குத் தோன்ற, அதையும் ஏற்க மறுத்து, சித்தம் கலங்கிப் போகிறாள் யாமினி. பல தற்கொலை முயற்சிகளிலிருந்து மீட்கப்பட்டு, சிறைக் கைதி போல் அடைத்து வைக்கப்படுகிறாள். ஓர் அரிய கணத்தின் புரிதலால் அவள் தந்தையின் மெல்லுணர்வு தூண்டப்பட, மகளுக்குத் தான் மிகப் பெரிய அநீதி இழைத்துவிட்டதை அவர் உணர்கிறார். அப்புரிதலின் நீட்சியாக அவளது தற்கொலையை அனுமதித்து யாமினி ‘விடுதலை’ பெற ரகசியமாக உதவுகிறார். அந்தச் செயலுக்கு அவரது மனம் நியாயம் கற்பிப்பதை சூடாமணி இப்படி விவரிக்கிறார்:

“வாழ்க்கை மிக மகத்தான பொருள். அதற்கு ஒப்பானது, ஒரு நாணயத்தின் இரு முகங்கள் போல் அதனுடன் நிரந்தரமாகப் பின்னிப் பிணைந்துள்ள மரணம் என்ற மற்றொன்றுதான். அவை இரண்டும் சமமான ஒன்றுக்கொன்று சமமான இரு சக்திகள். வாழ்வு ஏமாற்றிவிட்டால், உலகத்தின் பிச்சை போன்ற அற்ப நினைவுகளால் அந்த இல்லாமையை இட்டு நிரப்பிவிட முடியாது. வாழ்வுக்கு ஈடுசெய்ய மரணம் ஒன்றினால்தான் முடியும்.”

வஜ்ரம் போன்ற வார்த்தைகள் இவை. யாமினியின் சுதந்திர வேட்கைக்கு உலகம் மறுக்கும் அந்தஸ்தை எளிய சொற்களால் ஏற்படுத்தித் தருகிறார் சூடாமணி. தற்கொலை தவறு என்று எவ்வளவுதான் வாதிட்டாலும், யாமினி விஷயத்தில் இந்தத் தத்துவ நோக்குக்கு ஈடான பதிலைத் தர இயலாது என்றே தோன்றூகிறது!

யாமினியும், ஜனனியும் பெண் குலத்தினுடைய ஆதார துக்கத்தின் பிரதிநிதிகளாகத் தோன்றுகின்றனர். காலம் காலமாக ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படுவதால் மட்டும் ஏற்படும் துக்கம் அல்ல அது. அவள் தன்னில் தானே நிறைவு காண இயலும் என்கிற பேருண்மையின் நிராகரிப்பு ஏற்படுத்தும் துயரம். துய்ப்பவன் ஆண், துய்க்கப்படுகிறவள் பெண் என்கிற இயற்கையின் ஓரவஞ்சனையைக் களைய முடியாத துக்கம். அதைச் சமூக அமைப்பு நிரந்தரப்படுத்தி வேடிக்கை பார்த்து வரும் நெடிய துயரத்தை உதற முடியாத துக்கம்!

“நான் கன்னி! நான் கன்னி” என்று குழந்தை பெற்ற பிறகும் புலம்பும் யாமினியின் சொற்களைப் பாலியல் தளத்தில் மட்டும் நிறுத்திப் பொருள் கொள்வதற்கில்லை. உணர்வால், உணர்வையும் கடந்த நுண்ணுர்வால் தன்னை அறிந்து அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு மனுஷியின் ஓலம் அது. .

“ஜனனி………! ஓர் ஆணுடைய வேட்கையின் வேகத்தையும் தாபத்தையும் எட்ட இருந்த அவன் கண்களில் காணும்போதே சுருண்டு போகிறாள்.“அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையை கல்லாயடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடூரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப் போல் தலை நீட்டுகையில் அந்த முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்குள் உடனே சுருங்கிற்று” என்கிறார் லா.ச.ரா. பெண்மையின் துயரத்தை இதைக் காட்டிலும் நுட்பமாக வெளியிட முடியுமா!

யாமினியின் துயரமும், ஜனனியின் சோகமும் இன்றும் தொடர்கின்றன.

- சீதா ரவி, எழுத்தாளர், ‘கல்கி’ இதழின் முன்னாள் ஆசிரியர். நன்றி- திஇந்து


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்