/* up Facebook

May 18, 2016

முள்ளிவாய்க்காலின் முடிவுறா நினைவுகள் மே18 - மது

ஆண்டுகள்  ஏழு ஆன போதும், ஆறவில்லை அவை விட்டுச் சென்ற வலிகளும் தொட்டுச் சென்ற அனுபவங்களும் என்கிறது மே 18. நாலாம்கட்ட ஈழப்போர் என்ற பதத்தின் மூலம் மிகப்பெரும் அவலமும் அழிவும் நடந்து முடிந்த வன்னிமண்ணின் இறுதி நாட்களை கனத்த மனதுடன் இம் மாதத்தில் நினைவு கூருகிறேன். முல்லைத்தீவை முழு உலகும் உற்றுநோக்கிய அந்த நாட்களை காணொளிகள் மூலம் மட்டுமே பார்த்து கண்கலங்கிய காட்சிகளை இன்னும் மறக்க முடியவில்லை.

மன்னாரிலிருந்து தொடங்கிய இடப்பெயர்வு இப்போ முல்லைத்தீவிலுள்ள முள்ளியவளை, தண்ணீரூற்று இடத்து மக்கள் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டதன் பின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பற்றி அறியும் அவாவில் அங்கிருந்து வரும் செய்திகளை பார்க்கவும் கேட்கவும் தவறவில்லை.  வன்னிமண்ணே வாடிப்போய் நின்ற நாட்கள் அவை. எந்தவித  தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாது எதையும்  அறிய முடியாத நிலையில், காணொளிகளுடன் சில தணிக்கை செய்யப்பட்ட செய்திகளே அன்றைய நிலவரத்தை ஒளிபரப்பியது. இடப்பெயர்வின் அவலங்களும் இறப்பின் ஓலங்களுமே அவை. அந்நிலையில் புதுக்குடியிருப்பில்  இறுதியாக இயங்கிய ஒரேயொரு மருத்துவமனையும் விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்டது என்ற செய்தி காணொளிகளிலும், படங்களுடன் ஒஸ்லோவில் வெளிவரும் Aftenposen என்ற பத்திரிகைவரை வந்திருந்தது. இதன்பின்னரே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தமக்கும் பாதுகாப்பில்லை என்று அங்கிருந்து வெளியேறினர். 

இறுதியாக புதுமாத்தளன் ,முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் அனைத்து மக்களும் அடக்கப்பட்டனர்.  பதுங்கு குளிக்குள் ஓடுவதும் வெளிவருவதுமாக உயிரை மட்டுமே எவ்வாறு காப்பாற்றுவது என்ற பரிதவிப்புடன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தும் அழுகுரல்களும் , சாவின் ஓலங்களும், சாவுக்குள் வாழ்தல் என்ற அந்தக் கொடிய நிகழ்வைத் " தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் சொல்லிவிட முடியாது" .

தாயின் சாவைக் கண்ணெதிரே கண்டு, செய்வதறியாது திகைத்துப்போய் நின்ற பெண்பிள்ளைகளின் காட்சி இன்னும் கண்ணெதிரில் நிற்கிறது. அம்மாவும் அப்பாவும் இல்லை நானும் தம்பியும் என்ன செய்ய என்று அழுத சிறுமி முதல், தாய் இறந்து விட்டது தெரியாமல் குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்த அவலமான காட்சியை  எவ்வாறு விபரித்துவிட  முடியும்? பெண்களுக்கான அத்தியவசிய தேவைகள், சிறுவர்களுக்கான பிரத்தியேகமான உணவுகள் என தனியாக பகுத்துக்கொள்ளும் எந்தவித சூழலும் அங்கிருக்கவில்லை. மனித நேயங்கள் ஏதாவது இக்கட்டத்தில் செவிசாய்க்காதா என்ற சிறிய ஏக்கத்துடன் இன்னும் அங்கிருக்கும் மக்கள். அனைத்தும் பொய்யாகிப்போக, இறுதிவரை அந்த மக்களை காப்பாற்றிய வைத்தியர்கள் சண்முகராஜா, சத்தியமூர்த்தி, வரதராஜா இன்னும் பல மனிதநேயமுள்ளவர்கள்  போற்றப்பட வேண்டியவர்கள், வரலாற்றில் பதியப்பட்டவர்கள்.

"இலங்கையின் நெற்களஞ்சியம்" என வர்ணிக்கட்ட வன்னியின் மக்கள் உணவின்றி தவிர்த்தார்கள். விமோசனமே இல்லையா என வினவினார்கள். விடுதலைக்காக விலை கொடுத்தவர்கள் வெறுமையாக்கப்பட்டார்கள். செய்வதறியாது திகைத்தார்கள். அங்கிருந்து வவுனியா நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியின் சில நாட்களின் பின் என்னுடைய குடும்பத்தவர்களும் அங்கு வந்தார்கள் என்று அறிந்து மனது அமைதியானாலும் அந்த மனிதப் பேரவலத்தின் கொடுமைகளையும் இழப்புக்களையும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும் என்பதை அவர்கள் மூலமே தெரிந்து கொண்டேன் .
                     அதன்பின்னர் வவுனியாவில் அனைத்து மக்களும்  இரும்புக் கம்பிகளால்  அடைக்கப்பட்ட  சிறை போன்ற முகாமுக்குள் சிறிது சிறிதாக தஞ்சம் அடைந்தனர். அப்போது நடந்த ஓர் சம்பவம், பெரியம்மா ஒருவர் தன் இரு மகள்களுடன் வந்த இடத்தில் மற்றைய பிள்ளைகள் வரவில்லையே என்ற ஏக்கத்திலும் ,கவலையாலும் இறந்து விட்டார்.  பின் மற்ற பிள்ளைகள் இங்கு எப்போது வருவார்கள் என்பது தெரியாது. எந்தவித தொலைத் தொடர்புகளும் கொள்ள முடியாது. வருவார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் அந்த உடலை வைத்திருந்தார்கள். அவ்வாறே அவர்களும் இரு நாட்களின் பின் வந்து அந்த அந்தரமான சூழலிலும் அம்மாவின் இறுதிக் கிரியைகளை செய்து முடித்தார்கள். அப்போது அந்த மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை எழுதிவிட முடியுமா? இது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.

 இப்படி பல உறவினர்கள், நட்புக்கள், அறிந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு துயரச் சம்பவமாவது நடக்காமல் இல்லை. பெண்கள்,சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். முகாமுக்குள் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவியிருந்தாலோ அவர்களுக்கென தனியான இடம். என்னுடைய இரு சகோதரர்களும் இவ்வாறு புனர்வாழ்வளித்தல் என்ற பெயரில் வருடக்கணக்கில் வைக்கப்பட்டார்கள். ஒருவர் கண்டியிலுள்ள பூசா வரை கொண்டு செல்லப்பட்டடார். அந் நாட்களில் அம்மா அனுபவித்த துயருடன் நாமும் அதைக் கடந்தே வந்தவர்கள் என்பதால் , இப்படி  இருந்த ஒவ்வொருவரின் துயரங்களும் எவ்வாறு என்பதை அறிய முடியும்.

 அங்கவீனமாக்கப்பட்டோர், அங்கத்தவர்களை இழந்தோர்  என  போர் விட்டுச் சென்ற வடுக்கள்தான் மாறிடுமா?  இறுதி யுத்தகாலத்தில் பெண்கள்மீதான பாலியல் வன் கொடுமைகள் ,மனிதநேயமற்ற குற்றங்கள் ,மக்கள் சந்தித்த துன்பங்கள் என்பன சொல்லில் அடங்காதவை.  யுத்ததால் அனைத்தையும் இழந்ததன் பின்  மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கையை தொடக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்த மக்கள் அனைவரும் இந்நாளில் நினைவுகூரப்படுபவர்களே!


மது
0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்