/* up Facebook

May 27, 2016

என்று ஓயும் இந்த துன்புறுத்தல்?!
‘என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவில் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்துசெல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா. அவர் இன்று உயிரோடிருந்திருந்தால், ‘ஒரு பெண், தனியாக பேருந்தில் எந்தவித உரசல்களும் இல்லாமல் என்று பயணம் செய்ய முடிகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக சொல்ல முடியும்’ என மாற்றிச் சொல்லியிருப்பார். 

ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பேருந்தில் அமர்ந்திருக்கிறாள் அந்தப் பெண். இன்னும் ஐந்து நிமிடங்களில் இறங்கிவிடுவாள். அதனால் அதற்கு முன்பே அவளைப் பற்றி சொல்ல வேண்டும். திருமணமாகி கணவர் வெளிநாட்டுக்கு பிழைப்புக்காக சென்றுவிட, கோவையில் பெண்களுக்கான  ஒரு சுமாரான விடுதியில் தங்கி, ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறாள். ஈரோட்டிலிருந்து கோவைக்கு குடும்பத்தைப் பார்க்கவேண்டி வாரம் ஒரு முறை பயணிக் கிறாள். மூன்று மணிநேர பேருந்துப் பயணம். 

கோவைக்குப் பக்கத்து மாவட்டங்கள் எல்லோமே சனிக்கிழமைகளில் தூரமாகிவிடும் என்பார்கள். வார இறுதியில் சொந்த ஊருக்குக் கிளம்புவோரின் எண்ணிக்கைதான் காரணம். காத்திருந்த பஸ் வந்தபின் கூட்டம் கட்டி ஏறும். கால் மாற்றி கால் மாற்றி தவம்செய்வதைப்போல கிடைத்த இடத்தில் மூன்று மணி நேரத்தை நின்றே கடத்துவது என்பது, நிச்சயம் போன ஜென்மத்தில் வாங்கிவந்த ஏதோ ஒரு சாபமாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உட்கார ஸீட் கிடைத்தால் அருகில் ஆண் - பெண் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. கால் வலி ஒவ்வொரு முறையும் நரக வேதனையைத் தருவதால் ஸீட் கிடைத்தால் உட்கார்ந்துவிடுவாள். சில நேரங்களில் நல்ல மனிதர்கள் அமைந்துவிடுவார்கள். ஆனால், பலநேரங்களில் மிக மோசமான பயண அனுபவமாக இருக்கும். 

அருகில், பின் இருக்கையில் என அமர்ந்திருக்கும் ஆண் கள் இடுப்பைத் தொடுவது, காலை வருடுவது என பாலியல் சீண்டல்களை ஆரம்பிப்பார்கள். முறைப்பு மட்டும் இவளின் பதிலாக இருக்கும். சில கேடுகெட்ட ஜென்மங்கள் தொடர்ந்து சில்மிஷங்களைத் தொடரவும் செய்யும். இதுபோன்ற கஷ்டங்களை அவளுடைய கடந்த மூன்று வருட பயண வாழ்க்கையில் நிறையவே பட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் தேளின் கொடுக்கைப்போல அவளைக் கொட்டிய அந்த வருடல்கள், போகப்போக கம்பளிப்பூச்சியின் ஊர்தல் போலத்தான் தெரிகிறது. 

முதல்முறை கோபப்பட்டு பஸ்ஸில் கூச்சல் போட்டிருக்கிறாள். தனக்கு ஆதரவாக யாரேனும் பேச வருவார்கள் என்ற நினைப்பில் ஒருமுறை பஸ்ஸில் சண்டை போட்டதும், அதற்கான மோசமான எதிர்வினையும் ஞாபகத்தில் வந்து போனது. ‘விடும்மா... அதான் தெரியாமப் பட்ருச்சுனு சொல்றார்ல. இப்ப என்ன கற்பா பறிபோச்சு, இப்படி கூச்சல் போடுற?’ என்ற ஒரு பெருசின் குரலும், ‘சௌகரியம் இல்லைனா கார் வாடகைக்கு எடுத்துப் போகவேண்டியதுதானே... எதுக்கு கவருமென்ட் பஸ்ல வர்றீங்க? உங்க ஒரு ஆளுக்கோசரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விட முடியாது’ என்ற கண்டக்டரின் கேலி வார்த்தைகளும் அவளை அதன்பிறகு கையாலாகாதவளாகவே ஆக்கிவிட்டன.

ஒருமுறை தன்னைப் பாலியல் தொந்தரவு செய்தவனைப் பார்த்து, ‘கண்டர்கிட்ட சொல்லவா?’ என மிரட்ட, ‘போடி, கண்டக்டர் உன் புருஷன் பாரு... அப்படியே வந்து என் தலையை சீவிடுவான்’ எனக் கேலி செய்ததையும், அதை அந்தப் பேருந்தில் யாரும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்ததையும் நினைத்துப் பார்த்து ரொம்பவே மனம் வெதும்பிப்போனாள். நாளடைவில் இந்தத் தீண்டல்களுக்கு காந்திய வழியில் எதிர்வினையாற்ற பழகிவிட்டாள். அதாவது, ஒரு முறைப்புடன் தள்ளி உட்கார்வது மட்டுமே இப்போதைய தீர்வாக வைத்திருக்கிறாள். 

சில நேரங்களில் குடிகாரர்களின் பக்கத்தில் உட்காரும் சூழலில், உள்ளுக்குள் கனன்ற நெருப்பை விழுங்கிக்கொண்டு அப்படியே எழுந்து எவ்வளவு நேரம் என்றாலும் மூட்டெலும்பு தேய நின்றபடி பயணம் செய்யப் பழகிக்கொண்டுவிட்டாள். சரி, நின்றாலாவது சும்மா இருப்பார்களா? `இடிஅமீன்கள்', `தடவல் தாண்டவராயன்கள்' நிறைய பேர் மூச்சுக்காற்றை கழுத்துவரை பரவவிட்டு நெருங்கி நின்று மரண அவஸ்தையைக் கொடுப்பார்கள். எல்லாவிதமான சீண்டல்களுக்கும் முறைப்பையே பதிலாக வைத்து மனதுக்குள் புழுங்கியபடி இடம் மாற்றி கால் மாற்றி நிற்க எத்தனிப்பாள்.

இதுபோன்ற பாலியல் ரீதியான அத்துமீறல் களை பேருந்தில் அச்சமின்றி நிகழ்த்தும் கேடுகெட்ட ஜென்மங்கள் பல. இந்தப் பெண்ணைப்போல எத்தனையோ பெண்கள் தங்களைச் சுருக்கிக்கொண்டு, கண்டும் காணாமல் மன்னித்து விடுவதால்தான் இதையே சலுகையாக எடுத்துக்கொள்கின்றன அந்த மிருகங்கள்.

ரயில்களில் இருப்பதுபோல பாலியல் தொந்தரவுகளை சந்திக்கும் பெண்களுக்கான புகார் சேவை எதுவும் பேருந்து பயணத்தின்போது ஒரு பெண்ணுக்குக் கிடைப்பது இல்லை. ‘தகுந்த சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்’, ‘குடித்திருந்தாலோ டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ பேருந்திலிருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கிவிடப்படுவீர்’ என எழுதப்பட்டிருப்ப தோடு சரி. பயணத்தில் திருக்குறளைவிட, ஒரு பெண்ணின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா? 

நாமறிந்த வகையில் தமிழ்நாட்டில் ஓடும் எந்தப் பேருந்திலும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கான புகார் எண்களோ அதற்கான விழிப்பு உணர்வு எச்சரிக்கை வாசகங்களோ இல்லை. அவ்வளவு ஏன், அதைப்பற்றி பேசக்கூட இங்கு யாருக்கும் அக்கறையும் நேரமும் இல்லை. யாரோ சில நடத்துநர்கள் இதுபோன்ற பாலியல் சீண்டல்களைக் கண்டிக்கிறார்கள் என்பது மட்டும்தான் ஆறுதல். அப்படி என்றால் பேருந்துப் பயணத்தின்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் பெண்கள் எல்லா கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமா? 
இது சமூகத்தின் அசிங்கம்!

நன்றி - விகடன்.

...மேலும்

May 25, 2016

சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண் குழந்தைகள் மீதான அத்துமீறலே! - தர்மினி

 
பனை/தென்னங் குருத்தோலைகள்,  மாவிலைகள், வாழைத்தண்டுகள் எனச் சூழலிலுள்ள மரங்களிலிருந்து பெற்றவற்றைக் கொண்டு கொண்டாட்டங்களுக்கு - சாவீடுகளுக்கு அலங்கரித்தல் என்பது வழமையானது. அதை நுணுக்கமாக விதவிதமான அலங்கரிப்புகளாக்குவதும் திறமை தான். ஆனால் இப்போது தேனி இணையத்தளத்தில் படித்த கட்டுரையொன்று ‘வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை’ என்ற தலைப்போடும்   ‘எளிமையும் அழகும் சிருஸ்டித்துவமும் மிகுந்த சாமத்தியச் சடங்கு’ என்ற உப தலைப்புமாக எழுதப்பட்டிருப்பதைப் படித்து மனம் சோர்ந்து போனேன்.

பேராசிரியரொருவர், மட்டக்களப்பைச் சேர்ந்த விரிவுரையாளரொருவர் தன் மகளுக்குச் செய்த சாமத்தியச் சடங்கின் அழகையும் எளிமையையும் பெருமிதத்தோடு பாராட்டி எழுதியிருக்கிறார்.  <<நிறைந்த வாசிப்புத் திறனும், சிந்தனைத் திறனும்,யதார்த்தவாதியுமன இவர் தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வடிவமைத்த விதம் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்திருந்தது மரபைப் புதுமை செய்யும் சிருஸ்டித்துவம் அச்சடங்கில் அமைந்திருந்தது>> என்று எழுதியிருக்கிறார். எளிமையான இயற்கைப்பொருட்களால் அலங்காரம். பாரம்பரியச் சடங்குகளும் புதுமைகளுமாகச் சேர்ந்து புதுவிதமாகக் கொண்டாடப்பட்டது என ஒரு சிறுமி தன்னுடலில் இயற்கையாக அடையும் மாற்றங்களை முதல் மாதவிடாயை முன்னிட்டு எழுதப்பட்டுள்ளது.

      தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு. சிறுமியை அலங்கரித்துப் பலர் முன்னிலையில் நிறுத்தி பழைய - புதிய எந்தச் சடங்கைச் செய்தாலும் அது அவளது முதல் மாதவிடாயின் பொருட்டான நிகழ்வே. அது இரண்டாவதோ அதன் பின் ஏறத்தாழ 400 தடவைகளாவது அவளது வாழ்நாளில் சந்திக்கப்போகும் வலியும் சோர்வும் கூடிய எல்லா நாட்களையும் போல எடுத்துக் கொள்ளப்படாமல் குடும்பமும் உறவுகளும் தங்களின் பெருமைகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு சடங்காகி விட்டது . 

இன்னும் மாதவிடாய் பற்றியோ உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பற்றியோ அச்சிறுமிக்குக் கற்பிப்பதோ அவளோடு அவை பற்றி உரையாடுவதோ கூட நடக்காது. அச்சிறுமிக்கும் தனக்கு ஏன் அக்கொண்டாட்டம் செய்யப்படுகின்றது என்ற புரிதலே இருப்பதில்லை. அது வழமை மற்றைய உறவுகள் அயலவர்கள் நட்புகள் அதைச் செய்தால் நாமும் செய்யலாம் எனும் பழகிப்போனதைச் செய்வோம் என்ற மனநிலை தான் அவர்களை இது பற்றி கேள்விகளைக் கேட்கவோ யோசிக்கவோ விடுவதில்லை.
 
ஆனால், இயற்கைப்பொருட்களாலான அலங்காரத்தை முதன்மைப்படுத்தி ஒரு பேராசிரியர் சாமத்தியச் சடங்கை விதந்தோதுகிறார். அங்கு அச்சிறுமியின் தந்தையாகிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமத்தியச் சடங்கு சம்பந்தமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுமிருக்கிறார். அதுவொரு ‘அறிவூட்டும் விழாவாக அமைந்தது’ என எழுதியிருப்பதையும் படித்தபோது நமது ஆசிரியர்களும்  பெரியோரும் நமக்கு எவ்விதமான சிந்தனைகளை வழங்குகிறார்கள் எனத் திகைப்பும் கோபமும் ஏற்படுகிறது.
 
இயற்கைப் பொருட்களால் அலங்கார முறைகளும் புதுமையான சடங்குகளும் வித்தியாசமாயிருப்பதாய்  பேராசிரியர் எழுதியிருப்பது பொருந்தவேயில்லை. காலகாலமாக  மாவிலைகள், ஓலைகள்,  பாளைகளால் அலங்கரிப்பது வழமை தான். இங்கு கைவேலைப்பாடுகள் தான் புதுமையாம்.
 
சடங்குகள் என்றாலே பழமை தானே? பிறகு அதிலென்ன புதுமை? கட்டுரைத் தலைப்பில் இருப்பது போல் வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை தான். ஆனால் சாமத்தியச் சடங்கில் அச்சடங்கு பற்றிய புத்தக வெளியீடு என்ற அந்த வித்தியாசம் நகைப்புக்குரியதாயிருக்கிறது. புத்தகத்தில் கட்டுரைகள் எழுதிப் புனருத்தாரணம் செய்கின்ற சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண்கள் மீதான அத்துமீறலே!
 
இங்கு புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த தமிழர்களின் சாமத்தியச்சடங்கின் புதுமைகளோ மிகக் கேவலம். ஹெலிக்கொப்டரில் ஏறி இறங்குதல் வரை அது   நீட்சியடைந்து விட்டது. எங்கள் பண்பாடு,  எங்கள் கலாசாரம், எம்  மகள், என்  காசு என்று ஒரு ஹிந்தி  சினிமாப் படப்பிடிப்புத் தான் அச்சடங்கில் நடத்திக் காட்டப்படுகிறது.தம் போலிப் பெருமைகளுக்காக மகள்களைக் காட்சிப் பொருளாக்கும் பெற்றோருக்கு அய்யோ கேடு!!
...மேலும்

May 24, 2016

கதாநதி 19: தமிழ்நதி - தமிழ் தலை நிமிரும் கதை சொல்லி! - பிரபஞ்சன்


கடந்த 15 ஆண்டுகளில் எழுதப் பட்டிருக்கும் மிகச் சிறந்த தமிழ்க் கதைகளில் தமிழ்நதியின் கதைகளும் அடங்கும். தமிழ்நதிக்கு வாய்த்திருக்கும் மொழி அபூர்வமானது. அவர் சொற்கள், நிலைபெற்ற அர்த்தத்தோடு, யோசித்துப் பெறத்தக்க ஆழப் பொருள்களைக் கொண்டதாக இருக்கும். ஆடம்பரம் அற்ற, அடக்கமான தொனியுடன் கூடிய அவர் கதைகள், பாத்திரங்களின் செயற்பாடுகளை மேற் கட்டுமானமாகவும், அச்செயற்பாடு களின் மன ஊக்கிகளை அடிகட்டு மானமாகவும் கொண்டிருக்கும். நாளின் நிகழ்வுகளைப் பட்டியலிடும் யதார்த்தக் கதைகள் அல்ல, தமிழ் நதியுடையது. நிகழ்வுகளின் மனக் காரணிகளைச் சித்தரிக்கும் ஆழ் யதார்த்தக் கதைகள் அவருடையவை.

ஈழத்தின் திரிகோணமலை நதி மூலம். யுத்தம், அவரைக் கனடாவுக்குப் புலம்பெயர்த்தியது. சென்னை வேடந் தாங்கல். அவர் நீராலானவர். ஒரு பேட்டியில் அவர் சொன்னபடி நதி பிடிக்கும் என்பதால் தமிழ் நதி ஆனார், கலைவாணி. ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும், ‘கானல் வரி’ குறுநாவல், யுத்த வரலாற்றைச் சொல்லும் அரிய படைப்பான ‘பார்த்தீனியம்’ என்ற அண்மை நாவலும், தற்போது தமிழக, உலகப் பத்திரிகைகளில் வெளியான நான்கு ஆகச் சிறந்த சிறுகதைகளும் என்முன் இருக்கின்றன.

காற்று, மரங்களை அசைக்கும். இலைகள் பெயர்ந்து காற்றில் மிதக்கும். தான் செல்லும் திசையை இலை தீர்மானிப்பதில்லை. தமிழ் நதி, இந்த இடப்பெயர்வில் தன் வேரோடும் பெயர்ந்து கொண்டிருக்கிறார். இந்த அலைவை அவர் கதைகளாக்கி இருக் கிறார். மூன்று அம்சங்களை அவர் கதைகளில் பார்க்க முடிகிறது. தன்பால், இனத்தின் மேல் கவிந்திருக்கும் சமூக மரபு, பண்பாட்டின் பெயரால் ஒடுக்கப்படும், சகல வன்முறைக்கும் எதிராக மனித அறத்தை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லாக் காலத்துக்கும் பொதுவான அன்பை முன்னிறுத்தும் மானுட அறத்தை அடர்த்தியாகப் பேசுகிறார் தமிழ்நதி.

இரண்டாம் அம்சம், யுத்த கால ஈழம். அதற்கும் முந்தைய, பிந்தைய வாழ்நிலை ஆகிய தற்கால வரலாற்றை, நியாயங்களை முன்வைத்த சீற்றத்தோடு, வல்லாயுதக்காரர்கள் மற்றும் ஆமிக் காரர்களின் உச்சபட்சக் கொடுங் கோன்மை, தான் தளும்பாது வாசகர் கள் பதைபதைக்கச் சொல்லும் வன்மை கொண்டவை. நல்ல கலைஞர்கள் வரலாற்றுக்கு துரோகம் செய்யாதவர் கள். பக்கத்து தேசத்துத் தமிழ்ச் சகோதரர்களின் ரத்தத்தை, கலகலக்கும் நாணயங்களாக மாற்றிய தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் பற்றிய தமிழ் நதியின் மதிப்பீடுகள் முக்கியமான பதிவுகள்.

மூன்றாவது அம்சம், அவர் நீராலான மனோபாவம். அவர் யுத்த பூமியில் புல் முளைப்பது மட்டுமில்லை; பூவும் பூக்கும். வடிவமைக்கும் காதல் புலங்களில், வசந்தமும் பனியுமன்றி வேறு பருவங்கள் இல்லை. வாசலில் வழியும் மழையில் கைநீட்டிக் களிக்கும் குழந்தைமை, கதைகளை நனைக்கும். கதைகள், கையில் அமுத சுரபியை ஏந்தி பசித்தோர்க்கு அளித்துக் கொண்டு நகரும் மணிமேகலைகள்.

தமிழ் நதி, அண்மையில் எழுதிய சிறுகதை, மாயக் குதிரை. சுருக்கமாக அதை வாசிக்கலாம்.

கனவுக்கும் நனவுக்கும் இடை யிலான அந்தர நிலையில் இருந்தாள் அவள். தன்னைக் குறித்த அயர்ச்சியும் சூதாட்டத்தின் மீதான கிளர்ச்சியும் அவளைச் சூழ்ந்தன. அம்மாவிடம் சென்று ‘‘காசிருந்தால் தாங்கோ’’ என் றாள். ‘‘ஏன்…?’’ என்றாள் அம்மா ‘‘சிநே கிதப் பிள்ளைகளோடு நயாகராவுக்குப் போறன்’’ என்றாள். ‘‘அதை எத்தன தரம் தான் பாக்கிறது?’’ என்றாள் அம்மா. அவள் பேசாமல் நின்றாள். செல்லப் பிள்ளை. அதோடு ஒற்றைப் பிள்ளை. நயாகரா அவளுக்குப் பிடிக்கும். அதைவிட காசினோவுக்குச் சூதாடப் போவது அதிகம் பிடிக்கும். அம்மா போதுமான பணம் தந்தாள். உறவினர் கள் ஒழுக்க வரையறையான வீடு, வேலை, புத்தகங்கள், இசை, மாலை நடை, சில நண்பர்கள், ஒரே ஒரு காதலன் இவைகளோடு அடங்கிய அவளைச் சூதாட்டம் மாற்றிப் போட் டது. காசினோ ஞாபகம் வந்ததும் முற்றிலும் மாறிப் போய்விடுகிறாள் அவள். வங்கிக் கணக்கில் இருப்பது, கடன் அட்டை, அம்மா கொடுத்தது எல்லாம் சேர, செலவுக்குப் போக 550 டாலர்கள் தேறின. புறப்பட்டுவிட்டாள் அவள். ஸ்லொட் இயந்திரத்தில் விளையாடுவது எப்படி என்பதை அவள் நண்பன் சுதன்தான் கற்றுத் தந்தான். பின்னாளில் அதற்காக அவன் வருந்தியிருக்கிறான்.

பயணப் பைக்குள் ஒரு நாளைக்குத் தேவையான ஆடைகளோடு புறப்பட் டாள். பிரம்மாண்டமான அந்தச் சூதாட்டக் கட்டிடம் பல வண்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதில் நுழைவது, கொடிய மிருகங்கள் நிறைந்த குகைக் குள் நுழையும் பதைப்பு வரத்தான் செய்தது. ஆனாலும் சூதாடும் கிளர்ச்சி அதனினும் பெரிதாக இருந்தது. முன்பு ஒரு முறை ஜாக்பாட் அடித்த இயந்திரம் முன் போய் அமர நினைத்தாள். ஆனால், அதில் யாரோ இருந்தார்கள். ஒரு சத இயந்திரம் முன் போய் அமர்ந்தாள். சட்டென்று 160 டாலர்களை இழந்திருந் தாள். இதோ இதோ வெல்லப் போகிறாய் என்று சத்தம் போட்டபடி அந்த இயந்திரம் சுழன்றது. ஆனால், அவள் தோற்றுக்கொண்டே இருந்தாள். வேறொரு இயந்திரத்தை நாடிப் போனாள். வழியில் இரண்டு 20 டாலர்களை இழந்தாள். ஏராளமான மனிதர்கள் குடித்துக்கொண்டும், சிலர் மது அருந்திக்கொண்டும் இருந்தார்கள். திடுமென எல்லோரும் அவனுக்கு மறைந்து போனார்கள்.

கடவுளே கடவுளே என்று அவள் அரற்றிக்கொண்டிருந்தாள். விழப் போகிறது. ‘இதோ… வெற்றி’ என்று படபடப்புடன் காத்திருந்தாள். 100 டாலர்கள் ஜெயித்தாள். உடன் அதை யும், கூட அறுபதையும் இழந்தாள். ‘‘நாசமாய்ப் போனவள்’’ என்று தன் னையே திட்டிக் கொண்டாள். பையைத் திறந்து பணத்தை எண்ணிப் பார்த்தாள். இருந்தது வெறும் 200 டாலர்கள். அவளுக்குத் தலை சுற்றியது.

இதோ ஒரு நொடியில் எல்லாம் மாறிவிடப் போகிறது. அவள் நம்பி னாள். அதோ அந்த மாய நொடி வரப் போகிறது. பணம் குவியப் போகிறது. எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் விடுதி திரும்புவாள். இப்போது இரவு பதி னொன்றரை. யாரோ ‘ஜாக்பாட்’ அடித்திருந்தார்கள். மீண்டும் முயற்சிக் கலாம் என்று தோன்றியது. வயிற்றில பசி எரிந்தது.

தோற்றாள். கையில் வெறும் 20 டாலர் இருந்தது. அறைக்கு ‘அட்வான்ஸ்’ பணம் நூறு, அறையைக் காலி செய்யும்போது கிடைக்கும். இந்த 20 சாப்பிடப் போதும். அவளுக்கு அழுகை வந்தது. வங்கிக் கணக்கில் 80 டாலர்கள் இருந்தன. அதையும் பரிசோதிக்கலாம். அது நம்மைக் காப்பாற்றும். ஆடினாள். தோற்றாள். முகம் சரிந்து அமர்ந்திருந்தாள்.

அறைக்குத் திரும்பினாள். அம்மா பலமுறை அழைத்தது செல்லில் தெரிந்தது. சுதன் ஆறு முறைக்கு மேல் அழைத்திருந்தான். அவள் மீண்டும் அழைத்தான். எடுத்தவுடன் எவ்வளவு தோற்றாய் என்றான். நான் தருகிறேன் என்றான். அவன் குரலில் இருந்த அக்கறை உண்மை.

‘‘இனிமே இங்கே வர மாட்டன். அப்படி வந்தா என்னை விட்டுடுங்க’’ அவள் இதைச் சொன்னபோது, உண்மையாகத்தான் சொன்னாள்.

கதை இப்படி முடிகிறது:
‘நன்றாக உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கண் விழித்ததும் முதல் நாளின் ஞாபகங்கள் நெருஞ்சியாய் நெருடின. தன்னிரக்கம் மிகுந்து கண்கள் பனித்தன. அதனை நினைக்கும்தோறும் நெஞ்சம் காதலில் விம்மியது. அறையைக் காலி செய்தாள். முன்பணமாகக் கொடுத்திருந்த 100 டாலர்கள் வந்தது. விடுதியை விட்டு வெளியே வந்ததும் அந்த 100 டாலர்களையும் வெளியில் எடுத்தாள். அதில் பேருந்து கட்டணத்துக்கு என 25 டாலர்களை எண்ணித் தனியாக வைத்தாள். பிறகு, காசினோவை நோக்கி வெகுவேகமாக நடக்கத் தொடங்கினாள்.’
தமிழ்நதியின் சில சொற்பிரயோகங் கள் இவை:

…அதில் விழுந்து செத்துப் போய்விடத் தூண்டும் அழகோடும் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.

…முதலிரவில் உனக்கு என்னவெல் லாம் பிடிக்கும் என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘புத்தகங்கள்’ என்றாள். அரை இருளில் அவன் முகம் புலப்படவில்லை. எனினும் அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள்.

அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தையைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக் கொண்டு தன் குதிரையோடு ராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.

- நதி நகரும்… 

நன்றி - தி ஹிந்து
...மேலும்

May 23, 2016

மாதவிடாய் குடிசைகள் – தீண்டதகாத நேபாள பெண்கள்!


சப்ரிதா போகட்டிக்கு அன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்; ஏறக்குறைய தனிமைக்குடித்தனத்திற்கு; குளிரும் பனியுமான அந்த மலைப்பிரதேசத்தில் இனி அவளுக்கு அடைக்கலம் தரப்போவது எது? 4X3 அளவேயுள்ள அறை தான். இது மாதவிடாய் குடிசை என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே ஒரு இந்து நாடு என்று பெயர்பெற்ற நேபாளத்தின் மத்திய மேற்கு மலைப்பகுதியில் உள்ள நிறைய கிராமங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ள ஒரு கொடூர நிகழ்வு.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ளது அச்சாம் மற்றும் தோட்டி மாவட்டங்கள். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3800 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ள இந்தப்பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளாகும். இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் செல்வது அவ்வளவு எளிதல்ல; வாகனங்களுக்கு என்ன நிலையோ அதை விட மோசமான நிலை தான் அறிவியலுக்கும்…என்னது டிஜிட்டல் யுகமாகிக்கொண்டிருக்கும் இந்தப் புவியில் அறிவியல் நுழையாத இடமா? யார் இதற்குப் பொறுப்பு என்று பதற வேண்டாம்…. நமக்கு நன்கு அறிமுகமான அந்த ஒன்று தான் இதற்கும் மூலக்காரணம்.

குடாப்பில் அடைக்கப்பட்ட கோழி போல அமர்ந்திருக்கும் சப்ரிதாவுக்கு அவருடைய உறவினரான சிறுமி ஒருவர் உணவு தருகின்றார். சில சமயங்களில் இங்கே தான் பிரசவமும் நடக்குமாம்; பிரசவிப்பதும் தீட்டாகக் கருதப்படுகிறது; மாதவிடாய் காலத்தில் பெண்கள் பால் மற்றும் மாமிச உணவுகள் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே ரொட்டி மட்டுமே தரப்படுகிறது. கொடுப்பவர் மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டும், தப்பித்தவறி கைபட்டுவிட்டால் அது தீட்டாகிவிடும்.இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த நடைமுறைக்கு எந்தச் சாதியும் விதிவிலக்கல்ல.

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம். வீட்டிற்கு அருகில் செல்லக்கூடாது, கோவிலுக்குச் செல்லக்கூடாது; பொதுவான தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.; தான் பெற்ற குழந்தைகளை மட்டுமே தொடலாம்; ஆனால் மற்றவர்களைத் தொடக்கூடாது..


இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.
ஏன் இந்த அவல நிலை?? இது காலங்காலமாகத் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சாரமாகும். இதை “CHHAUPADI” – “சாவ்பாடி” என்கின்றனர். “சாவ்” என்றால் “தீண்டத்தகாதது”  ‘பாடி” என்றால் “இருத்தல் நிலை” – “BEING” என்று பொருள் படும். பூப்பெய்த பெண்ணிற்கு மாதவிடாய் வரும்போது இவர்களின் மரபுப்படி அவர் ”சாவ்பாடி” ஆகிறார்; அதாவது தீண்டத்தகாதவராக….

2006-ம் ஆண்டில் நேபாள அரசு இந்த மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்கும் வண்ணம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் இந்தப் பழக்கம் இன்னும் இந்தப் பகுதிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதால் இன்னும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.

இந்த மாதவிடாய் குடிசை பெரும்பாலும் வீட்டிற்கு அருகில் அதாவது வீட்டிற்கு முன்புறம் அல்லது பின்புறம் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் மாட்டுக்கொட்டகை அருகில் அமைகிறது.

மாட்டுகொட்டைகைக்கு அருகில் அமைந்திருக்கும் சப்ரிதாவின்   மாதவிடாய் குடிசை

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குகைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது; கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்க வேண்டியிருக்கும். ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி மாளாத துன்பங்கள் எத்தனை எத்தனை…மாதவிடாய் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி( நாப்கின் கட்டுரை படிக்கலாம்) இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

21-ம் நூற்றாண்டிலும் இத்தனை பிற்போக்குத் தனங்களா? என்று வியக்க வேண்டாம்…பேமா லக்ரி என்று பெண்கள் நல ஆர்வலர் கூறுகிறார்… “மக்களுக்கு இங்கே மாதவிடாய் பற்றிய அறிவியல் புரிதல் வரவேண்டும்; மாதவிடாய் என்றால் இங்கே அசிங்கமானது;, அவலமானது என்ற ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முதலில் உடைத்தெறியப்பட்டால் தான் இந்த அவல நிலையை அகற்ற முடியும்.பெரும்பாலான பெண்களிடம் மாதவிடாய் ஏன் வருகிறது என்று கேட்டபோது அவர்களில் ஒருவருக்கு கூட இது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று கவலைப்படுகிறார்.


பேமா லக்ரி – கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி என்பவர் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பேச சம்மதித்தார். மற்றவர்களைப் போலவே இவரும் இந்தியாவில் வேலை செய்கிறார். விடுமுறையை முன்னிட்டு வந்திருக்கும் இவர் பேசுகையில் “இனி என்னுடைய குடும்பத்தினர், மாதவிடாய் குடிசைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; மாறாக வீட்டிற்குள்ளேயே ஒரு மாதவிடாய் குடிசை (பதுங்கு குழி) போன்று ஒன்றை அமைத்துள்ளேன்; ( இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்: படத்தில் காண்க). சில சமயங்களில் 3 முதல்  4பேர் வரை இதில் தங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவரவர் வீட்டிலிருந்து தேவையான துணிமனிகளை எடுத்து வர வேண்டும்”.

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி

சரி ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று அவரிடம் கேட்டபோது “கடவுளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறோம். மாதவிடாயின் போது இரத்தப் போக்கு இருப்பதால் அது கடவுளுக்கு எதிரானது; எனவே வீட்டிற்குள் அனுமதிப்பது சரியல்ல” என்கிறார்.

இந்து மதத்தில் புரையோடிப்போன விழுமியங்கள் இன்னும் இங்கே நடைமுறையில் இருப்பதைத் தான் நாம் காண்கிறோம். மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இவர்களின் இந்து மதம்.

இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்ட பகதூர் வடிவமைத்த மாதவிடாய் குடிசை

இந்த ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது எதார்த்தமாக வயல்வெளிகளில் குறுக்கிட்டுச் சென்ற சில மாணவிகளைச் சந்திக்க நேர்ந்தது; அவர்களில் ஒருவர் மட்டுமே தனிப்பாதையில் நடந்து சென்றார். என்னவென்று விசாரித்த போது தான் அவர் நடந்து சென்றது மாதவிடாய் வந்தவர்கள் உபயோகிப்பதற்கான தனிப்பாதை; மற்ற மாணவிகள் நடந்து சென்ற இடம் புனிதமான ஒன்றாகக் கருதப்படுவதால்  இவர்களுக்கென்று மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் பேச மறுத்து விட்ட நிலையில் பாக்கு குமாரி பிஸ்தா என்பவரையும் அவரது தாயையும் சந்திக்க நேர்ந்தது; நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பாக்கு குமாரி பிஸ்தா பெண்கள் நல ஆர்வலர் பேமாவிடம் பேச சம்மதித்தார்; மேலும் அவருடைய மாதவிடாய் குகையையும் காண்பித்தார்.


பாக்கு குமாரி பிஸ்தா – பலர் பேச மறுத்தனர், இவர் சிறிது தயங்கிய பின்னர், நம்மிடம் பேச தொடங்கினார். அவருடைய மாதவிடாய் குடிசையை காட்டினார்.

கேள்வி: உங்களின் வயது என்ன?
பதில்: 16

கே: பள்ளிக்குச் செல்கின்றீர்களா?
ப: இல்லை, 6 வயதிலிருந்து நின்றுவிட்டேன்

கே: ஏன் நின்றீர்கள்?
ப: ம்ம்ம்ம்ம்……..வீட்டு வேலை செய்ய வேண்டும்; எனவே நின்றுவிட்டேன்

கே: அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளிக்குச் செல்லவில்லையா?
ப: ஆம்

கே: சரி. என்ன வேலையெல்லாம் செய்கின்றீர்கள்
ப: புல் அறுப்பேன்; பாத்திரங்கள் கழுவுவேன், வீட்டைச் சுத்தம் செய்வேன்

கே: ஆக மாதவிடாய் காலங்களில் உன்னால் உன்னுடைய தாய்க்கு உதவ முடியாதில்லையா?
ப: ஆம்

கே: மாதவிடாய் காலங்களில் நீ வேலை செய்ய அனுமதிக்கப்படுவாயா?
ப: ஆம்

பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை

கே: வீட்டில் நுழைய அனுமதி உண்டா?
ப: இல்லை

கே: இது உன்னுடைய வீடு; அங்கே நுழைய அனுமதி மறுக்கப்படுவது தவறுதானே?
ப: தவறு தான்

கே: பிறகு வீட்டுக்குள்ளே செல்ல வேண்டியது தானே?
ப: நான் உள்ளே சென்றால் கெட்டது நடக்கும்!

கே: என்ன விதமான கெட்டது நடக்கும்?
ப: பாம்பு வரும், மேலும் ஏதாவது ஒரு கெட்ட செயல் நடக்கும்

கே: மற்ற சிறுமிகளும் இதே போலத்தான் இருக்கின்றார்களா?
ப: ஆம்

கே: இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறாயா?
ப: ஆம்

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்கவழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது தங்கள்மேல் திணிக்கப்பட்ட ஒன்று என்பதாலும் இதற்கு மூலக்காரணம் மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதக் கருத்து என்பதாலும், மேலும் இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் இதை வெளிப்படையாக எதிர்க்கும்  மனநிலையில் இவர்கள் இல்லை.


சமீலா புல் – மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி

இந்தப் பயத்திற்கான சாட்சியாக அந்தக் கிராமத்தில் வாழும் யாக்கியராஜ்  புல் என்பவரின் மூத்த மகளான சமீலா புல் என்ற சிறுமியின் மரணம் உள்ளது. அவருடைய தாயார் இதுகுறித்துக் கூறுகையில் “ நாங்கள் மாதவிடாய் சமயங்களில் வீட்டிற்குள்ளேயே உறங்கினோம்; இதனால் என் கணவர் ஊராரால் கடுமையாகத் தூற்றப்பட்டு குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இதைக் கண்டு பயந்த என் மூத்த மகள் என்னிடம் “ அம்மா! நான் மாதவிடாய் காலங்களில் வெளியிலேயே படுத்துக்கொள்கிறேன்! இல்லாவிட்டால் ஊராரின் பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும்” என்று பிடிவாதமாகக் கூறி மாதவிடாய் குடிசைக்கு ஒரு நாள் இரவு சென்றுவிட்டாள். மறுநாள் காலை நான் அவளை எழுப்பச்சென்ற போது ஒரு கை வயிற்றைப் பிடித்தவண்ணம் குப்புறப் படுத்து கிடந்தாள்; இன்னொரு கையைத் தலைமேல் வைத்திருந்ததைப் பார்த்த போது அமைதியான ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பது போன்று தோன்றியது; ஆனால் நான் நீண்ட நேரம் அழைத்தும் அவள் எழுந்திருக்கவில்லை; எனவே சிறிது பதட்டத்துடன் சென்று அவளைத் நேராகத் திருப்ப முயற்சித்த போதுவாயில் நுரை தள்ளியிருந்தது கண்டு மீள முடியாத அதிர்ச்சியில் நொறுங்கி விட்டேன்.”…

சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை
இதுவரை அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை என்றாலும் அவளின் பெற்றோர் கூற்றுப்படி மிகவும் குளிராக இருந்ததால், காற்று புக முடியாமல் அந்த அறையை முழுவதுமாக மூடிவிட்டதால் மூச்சுத்திணறி இறந்திருக்கவேண்டும் என்று நம்புகின்றனர். யாக்கியராஜ் இந்த முறை தெளிவாக உள்ளார். இனிமேல் யாரையும் வீட்டை விட்டு வெளியே தங்க அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்; ஏனென்றால் அவருக்கு இன்னும் 6 பெண் குழந்தைகள் உள்ளன.

நேபாள தினசரி செய்திகளில் வந்துள்ள தகவல்களின்படி பெரும்பாலானவர்கள் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ இறப்பதாகவும், மேலும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் தெரிகிறது. இதை முன்னிட்டே நேபாள அரசாங்கம் 2006ம் ஆண்டு “சாவ்பாடியை” ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. நிறைய கிராமங்களில் “சாவ்பாடி” முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இன்னும் இந்த அவல நிலை தொடர்கிறது. சில இடங்களில் மாதவிடாய் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது; இந்த நிலையில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக மாறுகின்றது; ஏனென்றால் உடைத்தெறியப்பட்ட மாதவிடாய் குடிசை மீண்டும் எழுப்பப்படவேண்டும் இல்லாவிடில் வெட்ட வெளியில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சரி! மீண்டும் சப்ரிதா போகட்டியிடம் வருவோம், தீண்டத்தகாதவராக அறியப்பட்டவர்; எப்படி மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறார்; இருக்கவே இருக்கின்றது இந்து மதத்தின் புனிதப்பசு…ஐந்தாம் நாள் முடிவில் சப்ரிதா குளிக்கவேண்டும்; அதோடன்றி தான் பயன்படுத்திய அத்தனை துணிகளையும் தானே துவைக்க வேண்டும்; பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னி கழியாத பெண் ஒருவர் இந்து மதத்தில் புனிதமாக ஒன்றாகக் கருதப்படும் பசுவின் மூத்திரத்தை ஒரு டப்பாவில் பிடித்து அதை சப்ரிதா கைகளில் ஊற்ற, சப்ரிதா அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார். பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும் அடுத்ததாக சப்ரிதா துவைத்து வைத்த துணிகளின் மீதும் புனித மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துகிறாள். இனி அவள் புனிதமடைந்து வீட்டிற்குள் அன்று முதல் அனுமதிக்கப்படுகிறாள், அடுத்த மாதவிடாய் வரும் வரை…..

தொகுப்பு, தமிழாக்கம்: வரதன்.

நன்றி வினவு
...மேலும்

"இஸ்லாமிய வழிமுறையில் பெண்களை எப்படித் தாக்குவது!" - வீடியோ வெளியீடு


இஸ்லாமிய வழிமுறையின் படி மனைவிகளை வன்முறை மூலம் தண்டிப்பது எப்படி என்பது பற்றி சவூதி அரச அரச தொலைக்காட்சியில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கணவன் மனைவியை வன்முறை மூலம் முறையாக எப்படி தண்டிப்பது என்பது பற்றி பிரபல மருத்துவர் அல்லாவை மேற்கோள் காட்டி அந்த விளக்கத்தை தருவதை கானொளியில் காண முடிகிறது.

இஸ்லாமிய பெண்கள் உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல உலக பெண்ணுரிமை இயக்கங்கள் இதனை கண்டித்துள்ளன.

கணவனுடன் உடலுறவு கொள்வதை மறுப்பது கூட தண்டனைக்கு உரிய குற்றமாக கொள்ளப்படுகிறது எனது கவனிக்கத்தக்கது.

முதல் நடவடிக்கையாக கட்டிலில் தனிமைப்படுத்துவதை செய்ய வேண்டும் என்றும். அடுத்த நடவடிக்கையாக வன்முறை சார் நடவிக்கைகளில் ஈடுபடுவது எப்படி என்பது பற்றியும் அவர் விளக்குகிறார். 

எப்படிப்பட்ட தடியை பயன்படுத்தி  எவ்வாறு தாக்க வேண்டும். பல்லை சுத்தப்படுத்தும் சிறிய குச்சிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகளை பிபற்ற வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.

இஸ்லாமிய சட்டங்களை ஆளாளுக்கு தம்மிஷ்டப்படி விளக்கம் கொடுத்து பெண்களை அநீதியாக வன்முறைக்குள்ளாக்குவதை பாரபட்சமின்றி கண்டிப்பது மனித இனத்தின் கடமையே.
...மேலும்

May 18, 2016

முள்ளிவாய்க்காலின் முடிவுறா நினைவுகள் மே18 - மது

ஆண்டுகள்  ஏழு ஆன போதும், ஆறவில்லை அவை விட்டுச் சென்ற வலிகளும் தொட்டுச் சென்ற அனுபவங்களும் என்கிறது மே 18. நாலாம்கட்ட ஈழப்போர் என்ற பதத்தின் மூலம் மிகப்பெரும் அவலமும் அழிவும் நடந்து முடிந்த வன்னிமண்ணின் இறுதி நாட்களை கனத்த மனதுடன் இம் மாதத்தில் நினைவு கூருகிறேன். முல்லைத்தீவை முழு உலகும் உற்றுநோக்கிய அந்த நாட்களை காணொளிகள் மூலம் மட்டுமே பார்த்து கண்கலங்கிய காட்சிகளை இன்னும் மறக்க முடியவில்லை.

மன்னாரிலிருந்து தொடங்கிய இடப்பெயர்வு இப்போ முல்லைத்தீவிலுள்ள முள்ளியவளை, தண்ணீரூற்று இடத்து மக்கள் புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற செய்தி கேட்டதன் பின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் பற்றி அறியும் அவாவில் அங்கிருந்து வரும் செய்திகளை பார்க்கவும் கேட்கவும் தவறவில்லை.  வன்னிமண்ணே வாடிப்போய் நின்ற நாட்கள் அவை. எந்தவித  தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாது எதையும்  அறிய முடியாத நிலையில், காணொளிகளுடன் சில தணிக்கை செய்யப்பட்ட செய்திகளே அன்றைய நிலவரத்தை ஒளிபரப்பியது. இடப்பெயர்வின் அவலங்களும் இறப்பின் ஓலங்களுமே அவை. அந்நிலையில் புதுக்குடியிருப்பில்  இறுதியாக இயங்கிய ஒரேயொரு மருத்துவமனையும் விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்டது என்ற செய்தி காணொளிகளிலும், படங்களுடன் ஒஸ்லோவில் வெளிவரும் Aftenposen என்ற பத்திரிகைவரை வந்திருந்தது. இதன்பின்னரே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தமக்கும் பாதுகாப்பில்லை என்று அங்கிருந்து வெளியேறினர். 

இறுதியாக புதுமாத்தளன் ,முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் அனைத்து மக்களும் அடக்கப்பட்டனர்.  பதுங்கு குளிக்குள் ஓடுவதும் வெளிவருவதுமாக உயிரை மட்டுமே எவ்வாறு காப்பாற்றுவது என்ற பரிதவிப்புடன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தும் அழுகுரல்களும் , சாவின் ஓலங்களும், சாவுக்குள் வாழ்தல் என்ற அந்தக் கொடிய நிகழ்வைத் " தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் சொல்லிவிட முடியாது" .

தாயின் சாவைக் கண்ணெதிரே கண்டு, செய்வதறியாது திகைத்துப்போய் நின்ற பெண்பிள்ளைகளின் காட்சி இன்னும் கண்ணெதிரில் நிற்கிறது. அம்மாவும் அப்பாவும் இல்லை நானும் தம்பியும் என்ன செய்ய என்று அழுத சிறுமி முதல், தாய் இறந்து விட்டது தெரியாமல் குழந்தை பால்குடித்துக்கொண்டிருந்த அவலமான காட்சியை  எவ்வாறு விபரித்துவிட  முடியும்? பெண்களுக்கான அத்தியவசிய தேவைகள், சிறுவர்களுக்கான பிரத்தியேகமான உணவுகள் என தனியாக பகுத்துக்கொள்ளும் எந்தவித சூழலும் அங்கிருக்கவில்லை. மனித நேயங்கள் ஏதாவது இக்கட்டத்தில் செவிசாய்க்காதா என்ற சிறிய ஏக்கத்துடன் இன்னும் அங்கிருக்கும் மக்கள். அனைத்தும் பொய்யாகிப்போக, இறுதிவரை அந்த மக்களை காப்பாற்றிய வைத்தியர்கள் சண்முகராஜா, சத்தியமூர்த்தி, வரதராஜா இன்னும் பல மனிதநேயமுள்ளவர்கள்  போற்றப்பட வேண்டியவர்கள், வரலாற்றில் பதியப்பட்டவர்கள்.

"இலங்கையின் நெற்களஞ்சியம்" என வர்ணிக்கட்ட வன்னியின் மக்கள் உணவின்றி தவிர்த்தார்கள். விமோசனமே இல்லையா என வினவினார்கள். விடுதலைக்காக விலை கொடுத்தவர்கள் வெறுமையாக்கப்பட்டார்கள். செய்வதறியாது திகைத்தார்கள். அங்கிருந்து வவுனியா நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியின் சில நாட்களின் பின் என்னுடைய குடும்பத்தவர்களும் அங்கு வந்தார்கள் என்று அறிந்து மனது அமைதியானாலும் அந்த மனிதப் பேரவலத்தின் கொடுமைகளையும் இழப்புக்களையும் அதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும் என்பதை அவர்கள் மூலமே தெரிந்து கொண்டேன் .
                     அதன்பின்னர் வவுனியாவில் அனைத்து மக்களும்  இரும்புக் கம்பிகளால்  அடைக்கப்பட்ட  சிறை போன்ற முகாமுக்குள் சிறிது சிறிதாக தஞ்சம் அடைந்தனர். அப்போது நடந்த ஓர் சம்பவம், பெரியம்மா ஒருவர் தன் இரு மகள்களுடன் வந்த இடத்தில் மற்றைய பிள்ளைகள் வரவில்லையே என்ற ஏக்கத்திலும் ,கவலையாலும் இறந்து விட்டார்.  பின் மற்ற பிள்ளைகள் இங்கு எப்போது வருவார்கள் என்பது தெரியாது. எந்தவித தொலைத் தொடர்புகளும் கொள்ள முடியாது. வருவார்கள் என்ற நம்பிக்கையில் மட்டும் அந்த உடலை வைத்திருந்தார்கள். அவ்வாறே அவர்களும் இரு நாட்களின் பின் வந்து அந்த அந்தரமான சூழலிலும் அம்மாவின் இறுதிக் கிரியைகளை செய்து முடித்தார்கள். அப்போது அந்த மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை எழுதிவிட முடியுமா? இது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.

 இப்படி பல உறவினர்கள், நட்புக்கள், அறிந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு துயரச் சம்பவமாவது நடக்காமல் இல்லை. பெண்கள்,சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். முகாமுக்குள் இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவியிருந்தாலோ அவர்களுக்கென தனியான இடம். என்னுடைய இரு சகோதரர்களும் இவ்வாறு புனர்வாழ்வளித்தல் என்ற பெயரில் வருடக்கணக்கில் வைக்கப்பட்டார்கள். ஒருவர் கண்டியிலுள்ள பூசா வரை கொண்டு செல்லப்பட்டடார். அந் நாட்களில் அம்மா அனுபவித்த துயருடன் நாமும் அதைக் கடந்தே வந்தவர்கள் என்பதால் , இப்படி  இருந்த ஒவ்வொருவரின் துயரங்களும் எவ்வாறு என்பதை அறிய முடியும்.

 அங்கவீனமாக்கப்பட்டோர், அங்கத்தவர்களை இழந்தோர்  என  போர் விட்டுச் சென்ற வடுக்கள்தான் மாறிடுமா?  இறுதி யுத்தகாலத்தில் பெண்கள்மீதான பாலியல் வன் கொடுமைகள் ,மனிதநேயமற்ற குற்றங்கள் ,மக்கள் சந்தித்த துன்பங்கள் என்பன சொல்லில் அடங்காதவை.  யுத்ததால் அனைத்தையும் இழந்ததன் பின்  மீண்டும் ஆரம்பத்திலிருந்தே வாழ்க்கையை தொடக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இறந்த மக்கள் அனைவரும் இந்நாளில் நினைவுகூரப்படுபவர்களே!


மது
...மேலும்

May 13, 2016

மலேசியாவில் தமிழ் இலக்கியம் வளரவில்லை - யோகியின் நேர்காணல்


மலேசியாவைச் சேர்ந்த யோகி சுறுசுறுப்பான இளம் ஊடகவியலாளர். எந்தச் சூழலோடும் தன்னைப் பொருத்திக்கொண்டு தனது பணியை செவ்வனே செய்துகொண்டு செல்பவர். கலகலப்பும், சுறுசுறுப்பும் இயல்பாக புதியவர்களிடம் பழகும் பாணியும் அவருக்குறியது. ஊடறு பெண்கள் அமைப்பும் மலையகப்பெண்களும் இணைந்து மலையகத்தில் நடத்திய பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் நிகழ்வுக்கு ‘மலேசியப் பெண்களின் இன்றைய சவால்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக்கிடைத்தது. இவர் ‘துடைக்கப்படாத ரத்தக் கறைகள்’ எனும் நூலின் ஆசிரியர் ஆவார்.

கேள்வி: மலேசியாவில் இளம் தமிழ்ச் சமூகத்தினரின் இன்றைய நிலை, நம்பிக்கையளிக்கிறதா? 

யோகி: இந்தக் கேள்விக்கு எப்படிப் பதிலளித்தாலும் அதிலிருந்து வேறு கேள்விகளை உற்பத்தி செய்யலாம். அந்த அளவுக்குச் சிக்கலான கேள்வியாகவே இதைப் பார்க்கிறேன். மலேசியாவில் இன்று தமிழ்ச் சமூகத்தின் மக்கள் தொகை விழுக்காடு கணிசமாகக் குறைந்திருக்கிறது. தமிழ் மக்களின் பிறப்பு எண்ணிக்கை குறையும் அதே நேரம் மலாய்க்காரர்களின் பிறப்பு எண்ணிக்கை கூடியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

தற்போதைய இந்திய இளைய சமூகத்தினர் எப்படி இருக்கின்றனர் என்று ஆராயும்போது மூன்று வகையான சூழல் நிலவுகிறது.

1. கல்வியில் முன்னேற்றம்
2. குண்டர்க் கும்பலில் முதல் நிலை
3. அரசியலில் ஈடுபடுதல்

இந்த மூன்று விடயத்தையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு நகரமுடியாது. காரணம் மூன்றும் ஒவ்வொரு கோணத்தில் ஆராயும்போது, மிகமுக்கியமான அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.
கல்வியைப் பொறுத்தவரையில் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்கினாலும், அவர்களுக்கான மேற்கல்வி ஒதுக்கீடு மிகச் சொற்பமாகத்தான் ஒதுக்கப்படுகிறது. பூமிபுத்ராக்களுக்கு (மண்ணின் மைந்தர்கள், நேரடியாகச் சொன்னால் மலாய்க்காரர்கள்) 70 சதவிகிதத்திற்கு மேல் மேற்கல்வி இட ஒதுக்கீடும், சீனர்களுக்கு 10 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 10-க்கும் குறைவான இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் இன்னும் வேதனையான விஷயம் பலவேளைகளில் தாம் விரும்பித் தேந்தெடுத்த துறையில் படிக்க முடியாமல், அங்கு எஞ்சி இருக்கும் துறையை நிர்பந்தத்தில் தேர்ந்தெடுப்பதுதான். மலேசிய மண்ணில் பிறந்த நாங்களும் பூமிபுத்ராக்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். எங்களின் அடையாள அட்டையில் எங்கள் குடியுரிமை மலேசியர் என்றுதான் எழுதப்பட்டிருக்கிறது.   சீனர்களுக்குச் சீனா என்றும் இந்தியர்களுக்கு இந்தியா என்றும் இன குடியேற்றம் குறித்த வரலாற்று பதிவும் அதில் உள்ளது. இதனால், நாட்டில் எங்களுக்குச் சலுகைகளும் பாகுபாடோடுதான் இன்றுவரை வழங்கப்படுகிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

குண்டர்க் கும்பல் என்று பார்க்கும் போது அதிகமாக இந்திய இளைஞர்கள் இருப்பதாகப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதோடு நாட்டில் குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபடும் இனமாக இந்திய இளைஞர்களைத்தான் கைகாட்டப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட ‘ஓப்ஸ் சந்தாஸ்’ என்ற நடவடிக்கையில் பல குண்டர்க் கும்பல்களை மலேசிய போலீஸ் படை அடையாளம் கண்டு, கைது நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் மிக அதிகமான இந்திய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் பள்ளி மாணவர்களையும் பெண்களையும் ஒரு கருவியாக இந்தக் குண்டர்க் கும்பல் பயன்படுத்தி வருவது தெரியவந்தது. ஒவ்வொரு ஆண்டும், போலீஸ் தற்காப்புக்காகச் சுட்டு வீழ்த்தியது அல்லது தற்காப்புக்காகச் சுட்டதில் ‘இந்திய இளைஞர்கள் மரணம்’ என்ற செய்தி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. குண்டர்க் கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் ஏற்படும் மரணமும் பழி வாங்கும் எண்ணமும் இன்னும் மோசமான அடையாளத்தையே இந்திய இளைஞர்களுக்குக் கொடுத்துள்ளது. இனி வரும் இளைய தலைமுறையினர் இதனால் இன்னும் மோசமான நெருக்கடியைத்தான் சந்திக்கப் போகிறார்கள் என்பது எனது கணிப்பாகும். அதே வேளையில், இந்தச் சூழ்நிலைக்கு யார் காரணம், எதனால், இந்த நிலை ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்களை ஆராயத் தொடங்கினால், அது அரசாங்கத்தை நோக்கித் திரும்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.

மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். அவர்களின் உடலுழைப்பை ஒதுக்கிவைத்து மலேசியாவை வடிவமைக்க முடியாது. துன் வீ.தி.சம்பந்தன் காலத்தில் நாட்டுத் தலைவர்களிடத்தில் இன வேறுபாடு என்பது அப்பட்டமாகத் தெரியவில்லை. அதனால்தான், துன் வீ.தி. சம்பந்தனே ஒரு நாள் பிரதமராகவும் இந்த நாட்டில் இருந்திருக்கிறார். ஆனால், இப்போது நிலை வேறு. இந்தியர்களுக்கு அதிகமான கட்சிகளும், அவை அரசாங்க ஆதரவோடு இருந்தாலும், தேர்தலில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களும், நாடாளுமன்றத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சீட்டுகளும் மிகச் சொர்ப்பமானவை. வாக்குகளுக்காகவே இந்திய இளைஞர்களை இந்த நாடு பயன்படுத்திக்கொள்கிறது என்றுதான் எனக்குச் சொல்ல தோன்றுகிறது.

இந்தப் போராட்டத்திற்கிடையில்தான் நடக்கிறது எங்களின் இருப்புகளும், எங்களின் சாதனைகளும்.

கேள்வி: இளம் ஊடகவியளாளராக பால் நிலை சார்ந்த சவால்களை எதிர்கொண்டிருக்கிறீர்களா?

யோகி: மலேசியவில் ஊடக பெண்களுக்கு பால்நிலை சார்ந்த பிரச்னை வருவது கொஞ்சம் அறிதுதான். காரணம் ஊடகவியளாலர்கள் என்றாலே பொதுவாகவே அரசியல்வாதிகள் உட்பட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. அது அவர்களின் 'இமேஜ்' குறித்த பயம். ஆனால், ஓர் ஊடக பெண்ணாக, செய்திகளை சேகரிக்கும்போது சில சவால்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணமாக மலேசியாவில் தமிழர்கள் சிறுபாண்மையினராக இருந்தாலும், 7 தமிழ்ப்பத்திரிக்கைகள் வருகின்றன. செய்திகளில் கூடுதல் தகவல் தருவதுதான் பத்திரிக்கை சவாலாகும். நான் புகைப்படக் கலைஞராகவும் இருப்பதால் அதிலே அதிக சவால்களை சந்திக்கிறேன்.

20-க்கும் அதிகமான புகைப்படக்கலைஞர்களும், வீடியோ ஒளிப்பதிவாளர்களும் குழுமியிருக்கும் ஒரு நிகழ்வில்,  குட்டையான உடல்வாகு கொண்ட என்னை மிக இலகுவாக பின்னுக்கு தள்ளுவார்கள் போட்டி பத்திரிக்கையாளர்கள். கேமராவிலேயே என் தலையில் ஒன்றை போட்டு தெரியாதமாதிரி கண்ணாமூச்சி ஆட்டமெல்லாம் நடக்கும். ஓர் அமைச்சரின், நிகழ்ச்சியின் போது, பின்னாடியிருந்து ஒரு கை என்னை இழுத்து பின்னுக்கு போட்ட சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. யார் இழுத்து போட்டது என்றே எனக்கு தெரியாது. இன்று யோகி, அவர்களுக்கே சவால் விடும் ஒரு பெண்ணாக அவள் துறையில் வளர்ந்து நிற்கிறாள்.

கேள்வி: மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்?

யோகி:  சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் சிந்தனை வளர்ச்சி இன்னும் மரபு சார்ந்துதான் இருக்கிறது.  ஆனால், இளைய பெண்களிடத்தில் அது கொஞ்சம் மாறுப்பட்டிருப்பது காண முடிகிறது. அதற்காக அவர்கள் மரபை பின்பற்றவில்லை என்று  கூறமுடியாது. இது கணினி யுகம். அதற்கு தகுந்த மாதிரி அவர்கள் தங்களை மேம்படுத்த முனைகிறார்கள்.

ஆனால், தங்கள் பொருளாதாரத்திற்காக இன்னும் பூ-மாலை கட்டுதல், பலகாரம் செய்தல், மணி  பின்னுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவற்றையே கற்றுக்கொண்டிருக்காமல்  இந்த காலத்திற்கு ஏற்றமாதிரியான தொழிற்துறைக்கு அவர்களின் சிந்தனை இன்னும் மாறவில்லை என்பது வருத்தம்தான்.   மலேசிய தமிழ்ப்பெண்கள் பண்பாடு, சமய பற்று மிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்தவே விரும்பும்கிறார்கள்.  பட்டப்படிப்பு படிக்கும் மக்களில் பெண்களே அதிகம். ஆயினும் கல்விக்கு வெளியில் அவர்களின் ஆற்றல் வெளிப்படுவது அபூர்வமாகத்தான் இருக்கிறது. அவர்களின் வளர்ச்சி என்பது பொருளாதார சந்தையையும்,  முதலாளியத்தின் தேவையையும் சார்ந்து உள்ளது. உதாரணமாக இன்று மின்னூடக வளர்ச்சியை எல்லா பெண்களும் அறிந்திருந்தாலும் அதை கொண்டு சிந்தனை மாற்றத்திற்கு நகர விரும்புவதில்லை. பொழுது போக்கு கருவியாகவே அது உள்ளது. இலக்கிய ரீதியிலும் சிந்தனை  மாற்றம்  தேங்கி நிற்ப்பது ஒரு படைப்பாளியாக,  எனக்கு வருத்தம் இருக்கிறதுதான்.

கேள்வி: மலேசிய பெருந்தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி சொல்லுங்கள்?

யோகி: மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் தமிழர்கள்தான் அங்கு அதிகமாகக் கூலித் தொழிலாளர்களாக இருந்தார்கள். அதற்கு ஏறக்குறைய 200 வருட வரலாறு உண்டு. இன்று தோட்ட பாரம்பரியம் வீழ்ந்ததற்கு இரு காரணங்கள் முக்கியமானதாக இருக்கின்றன. முதலாவதாக தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் பட்டணத்து மோகத்தாலும், கலிவி வளர்ச்சியினாலும் இரண்டாவது தலைமுறையினர் அதிகமாகத் தோட்டத்தில் வேலைச் செய்ய விருப்பவில்லை. இதன் காரணத்தினால் அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியேறினர்.

இரண்டாவதாக, நாட்டின் முன்னேற்றத்துக்காக அழிக்கப்பட்ட தோட்டங்களில் பல தொழிலாளர்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தனர். உதாரணமாக மூன்றிற்கும் அதிகமான தோட்டங்களை அழித்துதான் புத்ராஜெயா எனும் மாபெரும் நகரம் உருவானது. அந்தத் தோட்டங்களில் வேலை செய்தது அதிகமான தமிழர்கள்தான்.

இப்படித்தான் மலேசியத் தமிழர்களின் தோட்ட வாழ்க்கை ஒரு வழியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இன்னும் சில தோட்டங்களில் தமிழர்கள் வாழத்தான் செய்கிறார்கள். அவர்களின் வருமானம் குறித்துப் பெரிதாகச் சொல்வதற்கும் ஒன்றும் இல்லை. எல்லாருக்கும் மாதம், குறைந்த சம்பளமாக 900 வெள்ளியையே சமிபத்தில்தான் போராடிப் பெற்றுள்ளனர்.

கேள்வி: தொழில் தேடி மலேசியா செல்ல இருப்போர்க்கு, மலேசியா சொர்க்கபுரியாகக் காட்டப்படுகிறது. உண்மையில் மலேசியா தொழில் தேடிச்செல்வோருக்கு ஒரு சொர்க்கபுரிதானா?

யோகி: மலேசியா சொர்க்கபுரி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை. அதன் காரணத்தினால்தான் நேப்பாளம், மியான்மார், ஆப்பிரிக்கா, இந்தோனேசிய, இலங்கை உள்ளிட்ட ஏழை நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். ஆனால்,

- அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கிறதா?
- வேலைக்கு ஏற்ற ஊதியம் பெறுகிறார்களா?
- எம்மாதிரியான சலுகைகள் வழங்கப்படுகின்றன?
- மலேசியத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்?

என்பன  கேள்விகளை முன்வைக்கும் போது கிடைக்கும் பதில்கள் மிகவும் ஏமாற்றமானவை. சில நிறுவனத்தில் மலேசியர்கள் 8 மணிநேரம் வேலை செய்து கூலியை பெறும்போது, கூலி வேலைக்கு வரும் சில அந்நிய நாட்டவர்கள் 12 மணிநேரம் வரையிலும் வேலை செய்து அந்த ஊதியத்தைப் பெறுகிறார்கள். இதை நானே சொல்வதைக் காட்டிலும், அங்கு வேலை செய்யும் அந்நியத் தொழிலாளர்கள் பேசுவதுதான் சரியாக இருக்கும்.  

கேள்வி: மலேசிய தமிழ்ப் படைப்புகள் பற்றிக் கூறுங்கள். இவைப்பற்றித் தமிழ்ச்சூழலில் பெரிதாகப் பேசப்படுவதில்லையே… 

யோகி: அண்மையில் மலேசியாவிற்கு வந்த புகழ்பெற்ற தமிழ் நாட்டு எழுத்தாளர்களை நான் நேர்காணல் செய்யும்போது, அவர்களிடம் முன்வைத்த கேள்விகளில் ஒன்று மலேசிய தமிழ் இலக்கியம் குறித்தக் கேள்வியாகும்.
- மலேசியாவில் தமிழ் இலக்கியமே வளரவில்லை,
- சினிமாவையும் ஆன்மிகத்தையும் வளர்த்த அளவுக்கு இலக்கியத்தை வளர்க்கவில்லை.
- மலேசிய தமிழ் இலக்கியம் 50 ஆண்டுகள் பின்நோக்கி இருக்கிறது.

 இப்படியான பதில்கள்தான் அவர்களிடத்திலிருந்து வந்தது. ஆனால், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவை நேர்காணல் செய்யும்போது அவர் இவ்வாறு பதில் கொடுத்தார்.

“மலேசியாவிற்கு வந்த நம் மூத்தோர்கள் இலக்கியம் வளர்ப்பதற்காக இங்கு வரவில்லை. அவர்கள் வேலைச் செய்வதற்காக வந்தார்கள். அதுவும் சஞ்சிக்கூலிகளாக வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்களோ அல்லது கல்விமான்களோ அல்ல. அவர்கள் இங்கிருந்த மற்ற சமூகத்தினரோடு போராடி வாழ்ந்திருக்கிறார்கள். தங்களை முன்னிருத்திக்கொள்ளவும் தனக்கான உரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடி இருக்கிறார்கள். தங்களுக்கான அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ளப் பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி மலேசியாவில் இலக்கியம் என்ற ஒன்று மழுங்கடிக்கப்படாமல் மலேசிய இந்தியர்கள் இலக்கியம் படைப்பதே ஒரு சாதனையாகும்.” 

நான் அவரின் பதிலோடு ஒத்துப்போகிறேன். அதே வேளையில் தற்போது சூழல் மாறிவருகிறது. சிறந்த வெளிநாட்டு இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் கரிகாலன் சோழன் விருது, சமீபகாலமாக மலேசிய இலக்கியம் பெற்றுவருவது எங்களின் இலக்கிய முன்னேற்றத்தைதான் காட்டுகிறது என நான் நம்புகிறேன். அதோடு குறிப்பிட்ட சில மலேசிய எழுத்தாளர்களின் எழுத்துகளை வெளிநாட்டுச் சிற்றிதழ்கள் கேட்டுப் பெற்றுப் பிரசுரிக்கும் அளவுக்குத் சூழல் மாறியுள்ளது.

மலேசிய இலக்கியம் பேசும்படி இல்லை என்கிற குற்றச்சாட்டு ஒரு புறம் இருந்தாலும் மலேசிய தமிழர்கள் இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் என்றுமே கைவிட்டதில்லை. ஆனால் மற்றவர்களை முந்தியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். உதாரணமாக மலேசியாவில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒரு வரலாற்று பதிவாகும். அதேபோல், இங்கு இயங்கி வரும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் நடத்தும் இலக்கியப் போட்டிக்கு 10 ஆயிரம் டாலர் பரிசை உலக தமிழ் இலக்கியத்துக்கு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.   இனி, மலேசிய தமிழ் இலக்கியம் பேசப்படுவதில்லையே என்ற கேள்வியைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம்.

கேள்வி: இலங்கை பயணம் பற்றி இணையத்திலும் உங்கள் வலைப்பூவிலும் நிறைய எழுதுகிறீர்கள். அதைப்பற்றி எம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

யோகி: இலங்கைப் பயணம் குறித்து ஊடறு இணைய தளத்தின் நிறுவனர் றஞ்சி தொடர்புக்கொண்டு, இலங்கையில்  நடைபெறவிருக்கும் பெண்கள் சந்திப்பில் பங்கு பெறமுடியுமா என்ற செய்தி  என் முகநூலின் உள்பெட்டியில் கேட்டார். எனக்கு அச்செய்தி அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், என்னால் வருவதற்கு சாத்தியம் குறைவு என்று கூறிவிட்டேன். அதற்குச் சில காரணங்களும் உண்டு.

என்னதான் இலங்கையில் போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதாக அமையவில்லை என்பது பொதுவான கருத்தாகும். அதே மகிழ்ச்சியின்மை மலேசியத் தமிழர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்குப் போவதும், அங்கிருக்கும் சுற்றுலாத் தளத்திற்கு ஆதரவு அளிப்பதும், பொருட்களை வாங்கி அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வளம் சேர்ப்பதும், கூடாத விஷயமாக பலர் கூறுவதையும் இங்கு நான் பார்க்கிறேன். போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தாலும்  இன்னும் ஒரு பதற்றமான சூழல் அங்கு நிலவுவதால் நான் இலங்கை போவதை என் துணைவரும், என் குடும்பத்தாரும் விரும்பவே இல்லை. ஆனால், ஊடறுவிடமிருந்து “நீங்கள் வருவதற்கு முயற்சி செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை வார்த்தையில்  கிளம்புவதற்கு முடிவு செய்தேன்.

உண்மையில்,  மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்கள் சந்திப்பு எனக்கு புதிய புரிதல்களை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அதோடு, மலையக மக்களோடு பழகிய அனுபவமும், யாழ்ப்பாண பயண அனுபவமும்  எனக்குள் ஏற்படுத்திய தாக்கம்தான், 20 தொடர்களுக்கும் மேலான அனுபவ பதிவை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருப்பதுடன் இலங்கை மக்களிடத்தில் நல்ல அறிமுகத்தையும் எனக்கு பெற்றுத்தந்துள்ளது.
ஊடறு இணையத் தளம் இந்த வாய்ப்பை எனக்கு மறுத்திருந்தாலோ அல்லது நான் நிராகரித்திருந்தாலோ, எனக்குதான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது நான் நாடு திரும்பும்போது உணர்ந்தேன்.
 நன்றி.

(இந்த நேர்காணல் கடந்த ஜூன் 28-ஆம் தேதி (28.6.2015) இலங்கையின் தினசரி பத்திரிக்கையான தினக்குரலில் இடம்பெற்றதாகும் )

நேர்கண்டவர் : பத்தனை வே.தினகரன்
...மேலும்

May 12, 2016

கனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியாதமிழீழ விடுதலை புலிகளின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வரலாற்று நினைவுகள்.

இசைப்பிரியா (1982 ) ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகள் பிறந்தாள் சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது பேரழகும் புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம் நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர்.

மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள் அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகு பதுமை அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கேளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.

இரக்ககுணத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள் .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன் வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர் யாரவது துன்பப்படுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிசென்று அவர்களுக்கான உதவிகளை செய்து விடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள்.அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.

புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளீரி கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால்.அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில்(1995 ) ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது.எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான்.தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும் துன்புறுத்தியும் படுகொலை செய்தான்.உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்ரோடு நடந்தும் ஓடியும் விழுந்தும் எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள்.அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒரு வழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.

சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள்.தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள்.ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தம் ஆனால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள்.(1999 ) ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.

இசைப்பிரியா நினைவில்…

இயக்கத்தில் இணைந்து கொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்த கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது.இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்க போகின்றது என்பது தெரிந்தோ என்னவோ இசையருவி என பெயர் சூட்டப்பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்சிகளை முடித்தாள்.சோபனா,தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள்.இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவு செய்ய வைத்தது.இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்..

நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுகபடுத்தினாள்.கண்ணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காக உருவாக்க படும் ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் நிகழ்வுக்கு தலைமை தாங்கினாள். தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் எல்லோராலும் நன்கு அறியப்பட்டவள்.

கனீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர்.இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார்.இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊராய் சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.

அத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர் வரை தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினாள். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறாள். (2007 ) ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ளபட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்யபட்டார். கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர். வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்..

நாட்டுகானதும் வீட்டுகானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தாய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது.இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள். அகல்யாள் என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது குழந்தைக்கான பால்மாவை தேடி தேடி ஓடி ஓடி வாங்கி வைத்திருந்தாள்.குழந்தை அகல்யாலும் வழமைக்கு மாறாக மூன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள்.உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள்.அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது.நெருப்பு காச்சலில் குழந்தையின் உடல் நடுக்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாளின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.

மழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கத்தினாள் அழுதாள் ஆனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள்.இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும் இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பிணக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்து கொண்டிருக்கையில் ஓடி சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள்.ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.

வன்னியில் இசைப்பிரியாவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர்.வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அவலை ஆனாள்.இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுற்றாள் தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.

நீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள்.அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள்.அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால். மே திங்கள் ( 18 ) நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.

வர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னி முழுவதையும் கையக படுத்தியது சிறிலங்கா அரசு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயபட்ட போராளிகள் மீதும் மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர்.தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர் சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்.ஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார்.பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள்.தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார்.முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர்.உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது.உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.

ஓயுமலைய புலிகள் அலைகள் தமிழ் மக்களெல்லாம் தம் விடுதலைக்காய் போராடும் புலிகள் என்பதை மறந்தவன் உலகநாடுகளுக்கு சாதகமான பதிலை கூறி ஏமாற்றி வந்தான் தாயக உறவுகளை போர்க்கைதிகளாக வைத்து புலம்பெயர் தமிழரையும் அடக்க எண்ணினான்.இப்படியாக ஆண்டுகள் கடந்து விட்டது (2010 ) ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றிவிழ கொண்டாடியது சிங்கள அரசு.சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம் காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என்று கூறியது.பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும் படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.

இது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.

உலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்டநாள் அது மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது.அம்மா அம்மா என்று கத்தியிருப்பாள் வழியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது.தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா அம்மா அம்மா என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள்.அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் – என்ற விக்கலோடு தன் முச்சை விட்டால் இசைப்பிரிய கொல்லபட்டார் கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது.

தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை தன் தோள் சுமந்த தந்தையை மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை பிரிக்க முடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ உயிருக்கு உயிராய் பெற்று வளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ அயோ அயோ என கொடுமையிது.

நன்றி ஈழமலர்

...மேலும்

May 11, 2016

பொருளாதார பிரச்சினையில் போராடும் பெண் தலைமைத்துவங்கள் - கேஷாயினி எட்மண்ட்

கூலி வேலை செய்தும் கூட என் பிள்ளைகள் இருவரையும் படிப்பிக்க முடியாமல் பாடசாலையை விட்டு நிறுத்திவிட்டேன்.” 33 வயதுடைய கனிதும ஹெட்டியாராட்சி.

“என் உடலை விற்று தான் குடும்பத்தை காப்பாற்றுகின்றேன்” – கிரிஷாந்தி ரணவக்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கடந்த மூன்று தசாப்த உள்நாட்டு யுத்தத்தில சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த ஆண்-பெண் என இருபாலாரும்; காணாமல் ஆக்கப்பட்டு, உயிரிழந்துள்ளதுடன் பலரும்அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். வடக்கு,
கிழக்கைப் பொறுத்தவரையில்  இத்தகைய பாதிப்புக்குள்ளான குடும்பங்களின்
தரவுகள் குறித்து இன்று வரை சரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்படாத நிலையில், அரசபடையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டதுடன், அவர்களுக்கான இழப்பீட்டு உதவிகளும், வழங்கப்பட்டு, ஊடகங்களில் அவை குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த இழப்பீட்டு உதவிகள் சரியான முறையில் மக்களை சென்றடைகின்றதா என்பதும் அவர்களுக்கு போதுமானதாக உள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

நாடளாவியரீதியில் சுமார் 5 லட்சம் பெண்கள் கணவனை இழந்துள்ளதுடன், இவர்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் தமது குடும்பங்களில் தலைமைத்துவம் வகிக்கின்றனர் என அரசாங்க புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும், அரச பாதுகாப்பு படைகளில் இணைந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் பெண் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை குருநாகல் மாவட்டத்திலேயே அதிகமாகவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் குறிப்பாக, மாவத்தகம, குளியாப்பிட்டிய, உடுவத்தாவ, பின்னல போன்ற பகுதிகளிலேயே அரச பாதுகாப்பு படைகளில் இணைந்து போரினால் பாதிக்கப்பட்டு 62 வீதமானோர் உயிரிழந்துள்ளதுடன் 15 வீதமானோர் அங்கவீனமுற்றும் 23 வீதமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குருநாகல் பிரதேச செயலக தரவுகளிலிருந்து தெரியவருகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட இராணுவ குடும்பங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய கிராமமே ரணவிருகம. 

இங்கு இருப்பவர்களுக்கு வீட்டுத்திட்டங்களும், ஓய்வூதிய கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இவர்களின் வாழ்வாதாரநிலை முழுமையடையவில்லை.  

படம்:- சுபானி தனசேகரவும், மகளும்  
தொடர்ந்தும் இக் குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுள் ரணவிருகமவில் வசிக்கும் டீ. எம். சுபானி
தனசேகர குறிப்பிடுகையில,; “வடமாராட்சி யுத்தகளத்தில் கடமையின் போது மரணமடைந்த கணவரின் சடலத்தைக் கூட எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. அப்போது எனது மகள் ஐந்து மாத குழந்தையாக இருந்தாள்;. உடுத்த உடையுடன் எமது ஊரைவிட்டு, இங்கு வந்து எமது புது வாழ்க்கையினை ஆரம்பிக்கவேண்டியிருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எமது கடன்களை அடைத்துக் கொண்டிருக்கின்றோம். குறிப்பிட்ட காலம் வரை முழு ஓய்வூதிய பணம் கொடுத்தார்கள், தற்போது அதையும் குறைத்து விட்டார்கள். எனது மகள் உயர்தரம் படிப்பதனால், அவரது உயர்கல்விக்கான செலவீனங்களை செய்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கடனுதவிகள் பெறச் சென்றாலும், ஆண் துணை இல்லாத குடும்பம் என்பதினால், வித்தியாசமான பார்வைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நான் படும் இன்னல்களை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என மிகுந்த வேதனையுடன் கூறினார்.

மேலும் குருநாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய என்ற பகுதியிலிருந்து கனிதும ஹெட்டியாராட்சி குறிப்பிடுகையில்: எனக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கின்றனர். எனது கணவரோ சாதாரண சிப்பாயாக இருந்து கடந்த 2009 அம் ஆண்டு மேமாதம் 10 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் எமக்கு அவரது சம்பளமாக 30 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. எனது பிள்ளைகள் ஐந்துபேரும் கல்விகற்கும் வயதுடையவர்கள். ஆனால் எனக்;கு அரசினால் வழங்கப்படும்

சம்பளம் போதாமல் இருக்கின்றது. எமக்கு எந்தவித மேலதிக கொடுப்பனவுகளோ, சலுகைகளோ அல்லது கடன் உதவிகள், மாதர் அமைப்புகளின் உதவிகளோ வீட்டுத் திட்டமோ கிடைக்கவில்லை. நாம் வாடகை வீட்டிலேயே குடியிருக்கிறோம். எமக்கு பொருளாதாரம் போதாமல் உள்ளதால் எனது இரண்டு பிள்ளைகள் படிப்பை இடைநிறுத்திவிட்டு தமது சகோதரர்களுக்காக வீடுகளில் கூலி வேலைக்குபோய் வருகின்றனர். ஆனால் அவர்கள் அங்கு உடல், உளரீதியில் பாதிப்பை எதிர்கொள்ளநேரிட்டதால் தமது வேலையை விட்டுவிட்டனர். இதனால் எமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கே பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம்.” எனத் தெரிவித்தார்.
அதேவேளை, இராணுவ உயரதிகாரியின் மனைவி சுறுசுறு பிரியங்கா தெரிவிக்கையில், எனது கணவர் இறந்து 21 வருடங்கள் ஆகின்றன. அவரின் ஓய்வூதியமாக மாதாந்தம் 60 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. எனக்கு ஒருமகன் மட்டுமே இருக்கின்றார். அவரும் இப்போது படித்துவிட்டு, வேலைசெய்கின்றார். எனது கணவரின் தாயாரும் என்னோடுதான் வசித்துவருகின்றார். எங்களைப் பொறுத்தவரையில், எந்தவித பொருளாதாரப் பிரச்சினைகளும் இல்லையென கூறினார்.

குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அறிக்கையில் போரினால் பாதிப்புற்று
குடும்பங்களுக்கு என கமநெகும திட்டத்தின் கீழ் ; மாவட்ட அபிவிருத்தி
அறிக்கையில் போரினால் பாதிப்புற்று குடும்பங்களுக்கு என “கமநெகும”
திட்டத்தின் கீழ் 400 பில்லியனும், “சமுர்த்தி” திட்டத்தின் கீழ் 1100 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு என “வறுமையற்ற இலங்கை” (ளுசடையமெய றiவாழரவ Pழஎநசவல)எனும் விசேட திட்டத்தின் கீழ் 120 மில்லியன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால், போருக்குப் பின்னர் 2013 வரை செலவிடப்பட்டுள்ளன.

அத்துடன் இதனால், 3 லட்சத்து 56 ஆயிரத்தி 775 நபர்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், மேற்கூறிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற போதும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 70 வீதமானவர்கள் அன்றாடம் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

ஆனால், உயர் பதவிவகித்து அங்கவீனமானவர்களுக்கும், ஆரம்பகாலத்தில் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்தவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு பொருளாதாரச் சிக்கல் என்பது இல்லாதபோதும், இறுதிக்கட்ட போரில் மரணமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்கள் பல சவால்களுக்கு முகம்கொடுக்கின்றன.

இத்தகைய சவால்களின் தார்ப்பரியங்கள் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதற்கு ஒரு உதாரணமே, கிரிசாந்தி ரணவக்கவின் கதை. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

“எனது கடைசி பிள்ளை வயிற்றில் இருந்தபோது, இராணுவத்தில் கணவர் உயிரிழந்துவிட்டார். எனக்கு 4 பிள்ளைகள். கணவரின் தாயாரும், தகப்பனாரும் என்னுடன் இருக்கின்றார்கள். அவர்களையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. இந்தநிலையில் தான், இங்கிருந்தால், வருமானத்தை ஈட்ட முடியாது என்ற நிலையில், முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்து சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக கடமையாற்ற பயணமானேன். அங்குபோய் இறங்கிய பின்னர் தான், என்னைப் பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்துவதற்காக அல்ல பாலியல் தொழிலாளியாக்குவதற்கே அழைத்து வரப்பட்டேன் என்பது தெரியவந்தது. ஆனாலும், திரும்பிபோனால், பட்டகடனை கட்டுவதற்கு என்ன செய்வது என புரியாமலும், வேறு வழியின்றியும் கடந்த 11 வருடங்களாக சிங்கப்பூரின் ஹேலாங் ( புயலடயபெ) சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் எனக்கு பாலியல் தொற்று இருப்பதும் மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், எனது மூத்த பிள்ளையாவது படித்து ஒரு வேலைக்கு செல்லும் வரை என்னால் திரும்பி எனது கிராமத்திற்குபோக முடியாது. என்னைப் போல், போரில் கணவனை இழந்து மற்றும் அங்கவீனமானவர்கள் உள்ள குடும்பங்களில் தலைமைத்துவம் வகிக்கும் சிலரும் இங்கு பாலியல் தொழிலாளிகளாக இருக்கின்றார்கள். ஆனால், எமது கிராமத்தில் இருப்பவர்கள் நாம் வெளிநாட்டில் நல்ல பணியில் இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வறுமையில் இருப்பதனால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களும் எமது பொருளாதார நிலைமையினை வைத்து, இலகுவாக எம்மை ஏமாற்றி விடுகின்றார்கள். இந்த தொழிலில் இருந்து விடுபடவும் முடியாது. மரணம்தான் எம்மை விடுவிக்கும் என குரல் தளும்பலுடன் தொலைபேசியில் எம்முடன் உரையாடினார்.

குருநாகல் பகுதியில் இவ்வாறான பல்வேறு கண்ணீர் கதைகள் இடம்பெறுகின்றபோதும் இதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான தளம் இல்லாததொரு நிலை காணப்படுகின்றது. இங்கு மகளிர் அமைப்புக்கள் இருந்தும் கூட அவைகள் பெயரளவில் மட்டுமே செயற்படுகின்றன.
இது குறித்து குருநாகல் கிறிஸ்து அரசர் பேராலய குருவானவர் வண.ரஞ்சன் “இப்பகுதிகளில் இராணுவத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் வசிக்கின்றன. நான் அறிந்த வகையில் எந்த மகளிர்; அமைப்புக்களோ, தனியார் நிறுவனங்களோ, இக்குடும்பங்கள் தொடர்பில், எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை. உங்களுக்;கு சொல்லுவதற்குகூட எனக்கு ஒரு பெயரும் தெரியாது. நான் இங்கு 7 வருடங்களாக பணியாற்றுகின்றேன். இதுவரையில் எந்த அமைப்புக்களை சார்ந்தவர்களும் என்னைத் தொடர்புகொள்ளவும் இல்லையென கவலையாக கூறினார். நாம் கள ஆய்வினை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தி;ல் கவலைக்குரியசம்பவமொன்றினையும் அறிந்தோம்.

தமிழ்,சிங்கள கலப்பு திருமணம் புரிந்த தம்பதிகளில் கணவர்போரில் பாதிப்புற்றதால், மகளான 12 வயது சிறுமி பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, தாயாரினால் பிறிதொருவீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த
நிலையில், வீட்டு உரிமையாளரினால் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு,
கொலை செய்யப்பட்டுள்ளார்.  சிறுமியின் சடலத்தினை வீட்டிற்குள் வைத்து
பூட்டிவிட்டு, தப்பி ஓடிய நிலையில் 3 நாட்களின் பின்னர் சந்தேக நபரை
மாவத்தகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  
 
இந்த சம்பவத்தினை அடுத்து மரணச் சடங்கு தினமான சனிக்கிழமை (30.01.2016) அன்று மாவத்தகம நகரப் பகுதியில் அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். இந்நிகழ்வினை ஒழுங்குபடுத்திய பாடசாலை ஆசிரியருள் ஒருவரான செந்தில் சிவஞானம் “இப்பகுதியில் இடம்பெறும் எதனையும் ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் இல்லை. இந்தசம்பவம் கூட முதற் தடவை என்று கூறிவிட முடியாது. ஊடகங்களில் வெளிவந்தவைகளைவிட மறைக்கப்பட்டவையே ஏராளம். இதற்கெல்லாம் பணப்பிரச்சினைதான் காரணம்” என விசனமடைந்தார்.

போருக்குப் பின்னர் இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களின் ஒரு அங்கமாக இச்சம்பவத்தினை மேற்கோள் காட்டலாம் என்பதுடன் இவை தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்காக வீட்டுத்திட்டம், சுயதொழில் உதவிகள்,நுண்கடன் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமுல்ப்;படுத்துவதாக ரணவிரு சேவை அதிகாரசபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இறந்த பல்லாயிரக் கணக்கான படை வீரர்களின் குடும்பங்களுக்கு இவ் உதவித் திட்டங்கள் போதியளவு சென்றடையவில்லை என்று அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் இவர்கள் தாம்
எதிர்கொள்ளும் வாழ்வாதார ரீதியான கஷ்ரங்களை போக்க அரசு தமக்கு போதியளவு உதவித்திட்டங்களை வழங்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

இவ் ஆய்வுக் கட்டுரைக்கு தரவு சேமிப்பது தொடர்பில் குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர், குளியாப்பிட்டி, ரணவீரகம மற்றும் மாவத்தகம கிராம சேவையாளர்கள், மகளீர் அபிவிருத்தி அமைப்பு, பாதுகாப்பு அமைச்சு ஆகிய அரச திணைக்கள அதிகாரிகளை பல தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு, வினவிய போதும், அவர்கள் பாதிப்படைந்த குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுப்புத் தெரிவித்தனர்.

கேஷாயினி எட்மண்ட்
...மேலும்

May 10, 2016

"தமிழினி ஜெயகுமாரனின்" நூல் சிங்களத்தில் வெளியீடு!!!?


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்தில் வெளியிடப்படுகிறது.

சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில்  மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு வெளியிட்ட நூலில் “தமிழினி” என்று மட்டுமே முகப்பில் இருந்தது. ஆனால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் முகப்பில் "தமிழினி ஜெயகுமாரன்" என்று இருக்கிறது.

ஏற்கெனவே தமிழினியின் “கணவர்” குறித்த சர்ச்சையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையின் இந்த வெளியீடு பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இதனை வெளியிட்டிருப்பது என்னவோ பிரபல சிங்கள இயக்குனரும், பிரமுகருமான தர்மசிறி பண்டாரநாயக வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

மே மாதம் 13 மாலை 4:00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இதன் வெளியீடு நடத்தப்படுவதாக சிங்களத்தில் செய்திகளும் வெளியாகியுள்ளன....மேலும்

அன்னையர் தினம் - வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிஅன்னையர் தினக்  கொண்டாட்டங்கள் பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய நாட்டில் தொடங்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது . கிறித்து பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் ரியா (Rhea )மற்றும் சைபில் (cybele ) என்ற பெண் கடவுளர்களுக்கான கொண்டாட்டங்கள் அவை.

அதே போல பழங்கால இங்கிலாந்தில் (1600) மதரிங் சண்டே (Mothering Sunday ) ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயான மேரியை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்பட்டது . பின்னாளில் மேரியை நினைவு கூர்ந்த பின் தங்களை ஈன்ற தாய்மார்களுக்கும் பரிசுகளும் , மலர்களும் கொடுத்து கொண்டாடி வந்தனர் இங்கிலாந்து மக்கள். மதரிங் சண்டே (Mothering Sunday ) 19 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து போய்விட்டது . 

மீண்டும் இரண்டாம் உலகப் போரின்போது , அமெரிக்க இராணுவத்தினரால் கொண்டாட தொடங்கப்பட்டது . அமெரிக்காவை பொருத்தவரை இரண்டு பெண்மணிகள் அன்னையர் தின வரலாற்றிக்கு வித்திட்டவர்கள் . 

ஜூலியா வார்ட் ஹோவே (Julia Ward Howe ):

1872 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை அமெரிக்காவில் கொண்டாட வேண்டும் என்று எண்ணினார் அமெரிக்காவின் சமூக ஆர்வலர் , எழுத்தாளர், கவிஞர்  ஜூலியா . முதலில் ஜூன் 2 ஆம் தேதி தான் அன்னையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார் ஜூலியா. அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு எதிராக அமைதியை வலியுறுத்தி , போரில் தன் பிள்ளைகளை இழக்கும் தாய்மார்களின் கண்ணீருக்காக அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1870 ஆம் ஆண்டு பாஸ்டன் (Boston ) நகரில் அதிகாரப்பூர்வமாக ஜூலியா அறிவித்தார்.

அன்ன ஜார்விஸ் (Anna Jarvis ):

இன்றைய காலங்களில் மே மாதம் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தின் தோற்றுனர் அமெரிக்காவைச் சேர்ந்த அன்ன ஜார்விஸ் அவர்கள். இவரின் தயார் அன்ன மேரி ரீவேஸ் ஜார்விஸ் (Anna Marie Reeves Jarvis ) அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின்போது காயம்பட்ட வீரர்களுக்கு தொண்டு செய்தவர். உலகில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டி விழா ஒன்றினை நாம் கொண்டாட வேண்டும் என்று தன மகளான அன்ன ஜார்விஸ்யிடம் மேரி ஜார்விஸ் கூறுவார்.  தன்  தாயின் விருப்பத்தை ஜார்விஸ் தன் தாயின் மரணத்திற்குப் பின் (1905) நிறைவேற்ற விரும்பினார். 

தளராது அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார் . அவரின் உழைப்பிற்கான பலன் கிட்டியது . 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் அன்னையர் தினத்தினை கொண்டாடியது . மே 8 ,1914 ஆம் ஆண்டு அதிபர் வூட்ரா வில்சன் (Woodrow Wilson ) அவர்கள் அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினம் மே மதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று கையெழுத்திட்டார். அனால் பின்னாளில் அன்னையர் தினம் வணிகமாக்கப்பட்டதை எதிர்த்து ஜார்விஸ் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார்.அவர் அன்னை, பிள்ளைகள் தங்கள்  கைக்  கொண்டு எழுதிய   சிறிய கவிதை அல்லது ஒரு பொருளை தங்கள் தாய்க்கு பரிசளிக்க வேண்டும் என்றே விரும்பினார் என்பது தான் வரலாற்று உண்மை. 

மேலே நாம் அன்னையர் தினம் உருவான வரலாற்றை பார்த்தோம். சற்றே ஆழமாக யோசித்தால் மனித உயிர்களைப்  போல் அத்துணை உயிர்களும் கருவுற்று குட்டிகளை ஈன்றெடுக்கின்றது . குட்டிகள் தனியாக இயங்கும் வரை உடனிருந்து பாதுகாக்கின்றது ,பசியாற்றுகின்றது ,பராமரிக்கின்றது . இது இயற்கை. ஆனால் மனித இனம் கட்டியமைத்துள்ள தாய்மை எனும் உணர்வு தாகம், பசி, காமம் போன்று இயற்கையானது இல்லை .

Altruism என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தன்னை அழித்துக் கொண்டு மற்றவர்களை பாதுகாப்பது. அதைத்தான் மனித இனம் தாய்மை உணர்வாக கட்டியமைத்திருக்கின்றது . தனக்கான நேரம் , உணவு, கனவு என்று அனைத்தையும் தவிர்த்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன் பெண்டு, பிள்ளை என்று பெண்களை அடைத்து வைத்திருக்கின்றது . இந்த Altruism என்பதை பொது நலம் பேணுதல் என்று பொதுவாக சொன்னாலும் , விலங்கியல்படி ஒரு விலங்கு தன்னை வருத்திக் கொண்டு மற்ற உயிரினத்திற்காக பாடுபடுவது. அதைத்தான்  ஒரு பெண் தாய் என்ற நிலையில் இருந்து செய்கின்றாள். தனது சொந்த விருப்பு , வெறுப்புகளைப் பற்றி சிந்தனை சிறிதுமின்றி காலந்தோறும் சிதைகின்றாள் . இந்தக்  கொண்டாட்டம்  ஒரு பெண் தாய் என்ற நிலையை அடைவது மிக முக்கியம் - தன் விருப்பங்களை அழித்துக் கொண்டு தியாகத்தின் திருவுருவாய் இருந்திட வேண்டும் என்பதை நினைவுபடுத்தவே.

இது ஒரு புறமிருக்க இந்த உலகத்தில் தாய்- தந்தை இல்லாத குழந்தைகள் 132 மில்லியன் என்று UNICEF அறிவித்துள்ளது . அமெரிக்காவில் 81.5 மில்லியன் மக்கள் தத்தெடுப்பதைப் பற்றி யோசித்துள்ளனர் . 500 மக்களில் ஒரு நபர் ஒரு குழந்தையை தத்தெடுத்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வீடு கிடைக்கும் என்கிறது ஒரு ஆய்வின் கணிப்பு.  

வணிகமயமாக்கப்பட அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் அந்த யாருமற்ற பிஞ்சுகளின் மனதில் ஏக்கக் கேள்விகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. போரில் இறக்கும் பிள்ளைகளை இழந்து வாடும் தாய்மார்களுக்காக அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலை எங்கே? அன்னையற்ற குழந்தைகளைப் பற்றி கவலைக் கொள்ளாது வணிக சூழலில் கொண்டாடப்படும் இன்றைய அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் பற்றி என்னச் சொல்வது ? யாருமற்ற குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்ற ஒற்றை வரியில் தப்பித்துக் கொள்வது மனிதமாகுமா?கொண்டாட்டங்களில் இருக்கும் சுரண்டலையும் - ஏக்கங்களையும் அறிவார்ந்த சமூகம் என்று கூறிக் கொள்ளும் நாம் கண்டு கொள்வதில்லை என்பதே உண்மை. 

இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது . முதலாளித்துவத்தை விரும்பாத சில  கம்யுனிச நாடுகள் கூட உலக மகளிர் தினத்தை அன்னையர் தினமாகவும் கொண்டாடுகின்றன. அனால் அதன் தோற்றுனரால் விரும்பப்படாத வணிகமயமாக்கப்பட்ட நிலையில் கொண்டாடப்படுகின்றது என்பது தான் வேதனை.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்