/* up Facebook

Mar 8, 2016

இரண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற மீட்சி


முனைவர்கள்: யு. விந்தியா, யு. சுதாகர்

‘விமுக்தா’ என்ற பெயரில் திருமதி ஓல்கா எழுதிய தெலுங்கு நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகதமி விருதும், ‘மீட்சி’ என்ற பெயரில் திருமதி கௌரி கிருபானந்தன் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகதமியின் விருதும் ஒரே ஆண்டில் வழங்கப்பட்டது சிறப்பானது.

‘‘புராணங்களில் சாசுவதமாக நீடித்திருக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். ஏன் என்றால் மனித இனத்தின் பொதுவான பிள்ளைப் பருவம் அதில் அடங்கியிருக்கும்’’ என்று சொன்னார் மார்க்ஸ். ஆனால் ‘இந்த ஈர்ப்புசக்தி எங்கிருந்து வருகிறது?’ என்ற கேள்வியை எழுப்பினால் புராணக் கதையின் நிகழ்வுகளைவிட பிரதானமாக அந்த புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களின் சிக்கலானதன்மை, முழுமை, உயர்குணம், எக்காலத்திற்கும் பொருந்துதல், உலகளாவிய நம்பகத்தன்மை – இவற்றிலிருந்துதான் என்று பதிலளிக்கலாம். ராமன், பீமன், கர்ணன், அபிமன்யு, திரௌபதி, சீதை ….. இவர்கள் எல்லோரும் உயிரோட்டத்துடன், சாசுவதமாக பண்டித, பாமர மக்கள் இதயத்தில் நிலைத்திருக்கும் நபர்கள்.

ஆனால் புராணப் பாத்திரங்களின் பெருந்தன்மை, வளர்ச்சி, முழுமை, அந்தந்த சூழ்நிலையில் அவர்கள் செய்த போராட்டங்களின் விளைவுதான். வரலாற்றையும், புராணத்தையும் கலந்து குழப்பி களேபரம் உருவாக்கும் சில நபர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்துவிட்டு புராணங்களை எடைபோடும் தராசாக சித்தரிக்க முற்படுவார்கள். அவ்வளவுதானே தவிர நாகரிகத்தை நோக்கி, சத்தியத்தின் தேடுதலை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்லமாட்டர்கள். மிஞ்சிப் போனால் ‘நல்லது’, ‘கெட்டது’ க்கு நடுவில் எந்நேரமும் நடக்கும் போராட்டமாக புராணக் கதைகளை துதி பாடுவார்களே தவிர கொள்ளை, நாட்டாமை, அநியாயம், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஆளுகை இவற்றுக்கு எதிராக புராண பாத்திரங்கள் செய்த போராட்டத்தை எடுத்துக்காட்ட மாட்டார்கள். சூழ்நிலையை ‘கர்மா’ வாகவும், நடத்தையை ‘தர்மமாகவும்’ எளிமைப்படுத்தி க்ஷத்ரிய தர்மம், அது போலவே மற்ற இனத்தார் கடை பிடிக்க வேண்டிய தர்மங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்தினித்தன்மை – இவற்றை எல்லாம் கூட தர்மத்திற்கு கட்டுப்பட்ட தராசில் விதிமுறைகளாக பிரச்சாரம் செய்வார்கள்.

இந்தப் போக்கு எத்திசைக்கு இட்டுச்செல்லும் என்று தெரிந்தே இருக்கிறது. தர்மத்தைக் காப்பாற்றுவது யதார்த்தவாதம் என்றால், நியாயப் போராட்டம் முற்போக்கு வழிக்கான புரட்சி.

மேற்சொன்ன இரண்டு பிரதான பரஸ்பர நேர் எதிர் வாதங்களைத் தவிர ‘வேதங்களிலேயே எல்லாம் இருக்கிறதாம்’’ என்ற மற்றொரு போக்கும் சமீப காலத்தில் பிரபலமாக காணப்படுகிறது. புராண பாத்திரங்களின் கொடைச்சிறப்பை பாராட்டுவதற்கு இவர்கள் உற்சாகம் காட்டுவார்கள். ஆனால் கொள்ளைக்கும், நாட்டாமைக்கும் பலி ஆகிவிட்ட எந்த சமூகத்திலும் – தனி நபர்களாகத் தொடங்கி கூட்டாக செய்த போராட்டங்கள் தான், கடந்த காலத்தை இன்றைய காலத்துடன், இன்றைய காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் உள்சூத்திரமாக இவர்கள் அடையாளம் காண மாட்டார்கள். ஒருமுறை இந்த உள்சூத்திரத்தை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தம்முடைய சரியான வரலாறை உருவாக்கிக்கொள்ளும். நிகழ்கால விழிப்புணர்வால் தங்களது கடந்தகாலத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் இன்று எல்லோரும் அவரவர்களின் வரலாற்றினை உருவாக்கிக் கொள்கிறார்கள். தலித்துகள், பெண்கள், மலைவாசிகள், மற்ற பாதிக்கப்பட்டவர்கள் தம் மீது திணிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச வரலாற்றினை நிராகரிக்கிறார்கள். வரலாற்றுக்கும், புராணங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை, வித்தியாசங்களை ஆராய்கிறார்கள். கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்கிறார்கள்.

தர்மத்தைக் காப்பதாக சொல்லிக்கொள்பவர்கள், புராணங்களை எடுத்துக்காட்டாக காண்பித்து தங்களுடைய சித்தாந்தங்களை நிலைநாட்டுவதற்கு முற்படுவார்கள். அதற்கு மாறாக புராண பாத்திரங்களின் போராட்டங்களை தம்முடைய கதைக்கருவாக அமைத்துக் கொண்டு, தம்முடைய குரல்களை ஒலிக்கச் செய்து கொண்டு இருப்பவர்களில் தலித் மற்றும் பெண்ணிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்னணியில் இருப்பது கவனிக்கத் தக்கது.

ஆண்கள் உருவாக்கிவரும் யுத்தங்களால், இம்சைகளால் முக்கியமாக பாதிக்கப்படுவது பெண்களும், நிலைகுலைந்து போகின்ற அவர்களுடைய வாழ்க்கையும்தான். இந்த உலகளாவிய நிலைமையை ஓல்கா தன்னுடைய ‘போரும் – அமைதியும்’ என்ற நாட்டிய நாடகத்தில் கருவாக எடுத்துக்கொண்டார்.. அதனுடைய தொடர்ச்சிதான் இந்த நான்கு கதைகள். நவீன வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள புராணப் பாத்திரங்கள் உதவி செய்யும் என்று சொன்னால் சிறிது வியப்பாகவே இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பாதிக்கப்பட்ட எல்லோரையும் போலவே காரண காரிய சம்பந்தங்களைத் தேடும் முயற்சி, ஆத்ம பரிசோதனை,

மனித உறவுகளைத் திரும்பவும் வரையறுப்பது, விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடு …. இவை எல்லாம் புராணப் பெண் பாத்திரங்களின் போராட்டத்திலும், வளர்ச்சியிலும் நமக்கு தெளிவாகத் தென்படும்.

புராணப் பெண்களின் உலகத்தில் போருக்கான சூழ்நிலை குறைவாகவும், ஆத்ம சோதனை அதிகமாகவும் தென்படும், இம்சை, யுத்தம் மீது வெறுப்புடனும், இயற்கை மற்றும் ஜீவராசிகளிடம் அன்புடனும் புராணப் பெண் பாத்திரங்கள் நடத்தும் போராட்டம், ஆத்ம பரிசோதனை, புதிய விழிப்புணர்வு என விரிவடைந்தன. ஒருங்கிணைந்து செயல்படுவது சாத்தியம் அல்லாத கட்டத்தில், இந்தப் பெண்கள், மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற சமூகத்தினர் சித்தாந்த அளவில் வெற்றியை சாதித்தார்கள். இந்த பின்னணியில் பரிசீலித்தால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் நவீன புராணக் கதைகள், அதில் பெண் பாத்திரங்களின் போராட்டத்திலிருந்து மலர்ந்த விழிப்புணர்வு நமக்கு எளிதாகப் புரியும். புரியும்போதே சங்கடப்படுத்தும். கடந்த காலத்துக் கதைகள் எல்லாம் இந்நாளைய போராட்டங்களாக உருப்பெற்று நம்மிடையே புராண ‘உபன்யாசங்கள்’ இல்லாமல் செய்துவிடும்.*****

புராண புருஷர்கள் உருவாக்கிய யுத்தங்கள், வன்முறை, இம்சை… இவற்றிலிருந்து மீண்டு நிலைத்து நிற்பதற்கு பெண்கள் ஆழ்ந்த மனப்போராட்டதிற்கு உள்ளானார்கள் என்பதற்கும், இறுதியில் சித்தாந்த அளவில் வெற்றி பெற்றார்கள் என்பதற்கும் ‘சமாகமம்’ கதையில் சூர்ப்பனகையின் வார்த்தைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

‘மீண்டும் அழகை நேசிப்பதற்கும் ரூபம், அரூபத்தின் உண்மையான சாராம்சத்தை கண்டுகொள்வதற்கும் என்னுடன் நான் பெரிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அந்த யுத்தத்தில் எனக்குத் துணையாக இருந்தது இந்த எல்லையில்லா இயற்கை’ என்கிறாள் சூர்ப்பனகை. இதைக்கேட்டு தான் சந்தித்த அக்னிப்ரீட்சைக்கு சூர்ப்பனகை உள்ளான பரீட்சை குறைவானது இல்லை என்று சீதை நினைக்கும் போது – ஒரே ஆண்மகனுக்காகத் தவித்த இரு பெண்களுக்கு இடையில் இருக்க வேண்டிய பொறாமை கடுகளவும் இல்லாமல் போனதோடு உடன் காயப்பட்டோர்களிடம் துளிர்க்கும் நட்பும், பந்தமும் தென்படும். சீதை, சூர்ப்பனகைக்கு இடையில் பெண்ணிய சகோதரித்துவம் புலப்படவைப்பது ஒரு துணிகரச் செயல். ஆனால் அது இயல்பாக நிகழ்ந்த பரிணாமமாக, இயற்கையின் ஆசிகளுடன் முளைவிட்ட நட்பாக நமக்கு இந்தக் கதையில் காட்சி தருகிறது. ராஜ்ஜியத்திற்கும், கானகத்திற்கும் நடுவில் பயங்கரமான இடைவெளி, முரண்பாடு இருப்பதை சூர்ப்பனகை உணருகிறாள். ராஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டு கானகத்தை, இயற்கையை விரும்புவதில் சீதையும் சூர்ப்பனகையும் நெருங்கி விட்டார்கள். ராஜ்ஜியத்திற்கு அதிபதிகளான பிறகும் ஆரண்யத்தின் வழியை மறந்து போகவேண்டாமென்று லவகுசர்களை இறுதியில் எச்சரிக்கிறாள் பூமியின் புத்ரி.

‘அவரவரின் சத்தியம் அவரவருடையது’ என்று உணர்ந்த அகல்யா ‘சத்திய அசத்தியங்களை முடிவு செய்யும் சக்தி இந்த உலகத்தில் யாருக்காவது இருக்கிறதா?’ என்று கேள்வி கேட்கிறாள் மிருண்மயநாதம் என்ற கதையில். அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து இருக்கும் வரையில் எது செய்தாலும் பிராயச்சித்தம், தீர்வு இருக்குமே தவிர அதிகாரத்தையே கேள்வி கேட்டாலோ, அதன் மூலங்களை ஆராய்ந்தாலோ யாரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அப்போதுதான் சர்ச்சை எழும். தன் அனுபவத்தில் சரி தவறுகளைப் போட்டு உடைத்தாற்போல் சொன்ன அகல்யா, ‘நான் கொடுக்காத வரையில் யாரும் என்மீது அதிகாரத்தைப் பெற முடியாது’ என்று தெளிவுபடுத்துகிறாள்.

‘விசாரணைக்கு சம்மதிக்காதே. அதிகாரத்திற்கு அடி பணியாதே’ என்று எதிர்காலத்தை அறிந்தவள்போல் சீதையை ஆசீர்வதிக்கிறாள். பத்தினித்துவத்திலும், தாய்மையிலும் தான் பெண்மையின் சிறப்பு என்பதை மீறி சத்தியத்தைத் தேடுவதற்கு முனைய வேண்டும் என்று பூமியின் மகளுக்கு அகல்யா அன்று செய்த அறிவுரையில் இன்றளவும் எதிரொலிக்கும் பூமியின் ஓசை மறைந்திருக்கிறது.. ‘இறுதியில் இவ்வுலகம் முழுவதும் என்னுடையதே’ என்று ஜானகி உணர்ந்து கொள்கிறாள். அவள் உலகம், கணவன், குழந்தைகள் என்று நின்றுவிடாமல் அற்புதமாக விரிவடைகிறது.

‘சைகத கும்பம்’ – பாதி அறுந்த தலையுடன், சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடிக்கொண்டு, மனதளவில் பெரும் வேதனைக்கு இலக்கான ரேணுகாவின் கதை. அவளுக்கு அதுவரையிலும் எல்லாமாக இருந்த கற்பும், தாய்மையும் ஒரே வெட்டில் சர்வ நாசமடைந்து விட்டன. ரேணுகாவின் மனதில் அடிப்படையான சில கேள்விகள் எழும்பின. சத்யம் (தர்மம் மாதிரி அல்லாமல்) அனுபவபூர்வமாகத் தெரியவரும் என்றும், எல்லோருடைய சத்தியமும் ஒன்று இல்லை என்றும், வாழ்க்கையின் அனுபவம் கூடக்கூட சத்தியம் மாறிக் கொண்டே வரும் என்றும் ரேணுகா தெரிந்து கொள்கிறாள். அதே விஷயத்தை அவள் சீதைக்கு சொல்கிறாள், இருந்தாலும் சொந்த அனுபவத்தில்தான் ரேணுகாவின் வார்த்தைகளின் உள்ளர்த்தத்தை சீதை முழுவதுமாக உணர்ந்து கொள்கிறாள்.

சீதை ராமனின் துணை இல்லாமலேயே லவ குசர்களை.வளர்த்தாள். பத்தினித்தன்மையின் மீதும், தாய்மையின் மீதும் சீதைக்கு எல்லா பிரமைகளும் நீங்கிவிட்டன. லவகுசர்கள் என்றைக்கு இருந்தாலும் க்ஷத்திரிய புத்திரர்கள்தான். ராஜ்ஜியத்தை ஆளுவதுதான் அவர்களுடைய லட்சியம். ரகு வம்சத்தின் முன்னேற்றம்தான் அவர்களுடைய தர்மம்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி இறுதியில் தாமே அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு என்னவாகும்? துரதிர்ஷ்டவசமாக அவர்களுடைய சுயரூபம், சுபாவம் மாறிப் போய்விடும். அதிகார தாகம், பாதுகாப்பின்மை, கொடுங்கோல் மற்றும் ஜனநாயகமற்ற போக்கு, ஊழல் … இவை எல்லாம் திரும்பவும் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த வகையில், உலகளவில் பெரும் மாற்றத்தை விரும்பும் சக்திகள் முழுவதுமாகத் தோல்வியுற்றன. இனி பெண்கள், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தினர், மற்றவர்கள் இதற்கு மாற்று மதிப்பீடுகளை, செயல்பாடுகளை முன்மொழிவது சாத்தியமாகுமா? அல்லது வரலாறு உருவாக்கிய வளையத்தில் சிக்கிக் கொள்வார்களா? ஏமாற்றம் தரும் இந்த யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதிகாரத்தின் சுபாவத்தை, மனிதனின் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘விமுக்தா’ என்ற கதையில், சீதை, ராமனுடன் இலக்குமணன் சென்றுவிட்ட பிறகு, இடைவிடாமல் பதினான்கு வருடங்கள் செய்த சத்திய தேடுதலில், தவத்தில் ஊர்மிளாதேவி தெரிந்து கொண்ட மாபெரும் விஷயம் இதுதான். ‘அதிகாரத்தை எடுத்துக் கொள். அதிகாரத்தை விட்டுக்கொடு. அப்போது உனக்கு நீ சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சி இருப்பாய்’ என்று மிகவும் எளிமையான மொழியில் இந்த மாபெரும் உண்மையை சீதாப்பிராட்டியிடம் தெரியப்படுத்துகிறாள் ஊர்மிளா. ஆனால் (காந்தி மகான் ஒருவரைத் தவிர) அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு எவரும் தயாராக இருப்பதுபோல் தோன்றவில்லை. எது எப்படி இருந்தாலும் போராட்டத்திற்கு பிறகு உருவாகும் பரிணாமத்தை, அதிகாரத்தின் சுய ரூபத்தை விவரிக்கும் உயர்ந்த கதை இது.
***

ஓல்கா தன்னைப் பற்றி தான் ஒரு அரசியல் கதைசொல்லியாகத்தான் சொல்லிக்கொள்கிறார். அதனால் புராண பாத்திரங்களை ஏன் இப்படி வியாக்கியானம் செய்தாய்? வேறு விதமாக ஏன் எழுதவில்லை? என்று அவரைக் கேட்க நினைப்பதில் அர்த்தம் இல்லை. அவர் எந்த அரசியல் நோக்கத்துடன் இந்த முயற்சியைச் செய்தாரோ, அதனை பெருமளவிற்கு கலைத் திறனுடன், படைப்பாற்றலுடன் சாதித்து இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மார்க்ஸ் சொன்ன பொதுவான பிள்ளைப்பருவம், அதன்மூலமாக புராணங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் பின்னால் – பிள்ளப்பருவத்திற்கு உண்டான எளிமை அப்பாவித்தனம் செயற்கையின்மை – இவையெல்லாம் இருக்கின்றன. ‘பிள்ளைப் பருவத்து அனுபவங்களை வேண்டியபோதேல்லாம் நினைவுப்படுத்திக் கொள்வதுதான் திறமை’ என்று சொன்னாராம் போதிலேர்.

நம்மிடையே இன்னும் வலிமையாக இருக்கும் நிலவுடைமையை சார்ந்த, ஜனநாயகமற்ற, முரண்பாடு நிறைந்த அமைப்பில், சமூக கதைகள் சரித்திரக் கதைகளாகவும், சரித்திரக் கதைகள் புராணக் கதைகளாகவும் சட்டென்று உருமாற்றம் கொண்டுவிடும். உயிருடன் இருக்கும் போதே சிலைகள், கோவில்கள் உருவாகும். ஆனால் இந்தப் போக்கினை, பிரவாகத்தை எதிர்த்திசையில் திருப்பி விடுவதற்கு படைப்பாற்றலுடன் துணிச்சலும் இருக்க வேண்டும். இவை இரண்டும் ஓல்கா செய்த, செய்து கொண்டுவரும் சோதனைகளில் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் கதைகள் படிக்கும் போது நமக்கு தர்மம் வேறு, நியாயம் வேறு என்பது தெளிவாகப் புரியும். நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்றும் புலப்படும். புராண புருஷர்கள் தர்மத்தின் பக்கம் நிற்பவர்களாக இருந்தால், அநியாயத்தை புராண யுகத்திலிருந்து இன்று வரையில் எதிர்த்து நிற்பவர்களாகத் தென்படுவார்கள் பெண்கள். சிக்கல்கள், போராட்டம், விழிப்புணர்வு, பரிசோதனை.. இவைதான் இதிஹாசத்தில் ஓல்கா கண்டுபிடித்த வெளிச்சத்து கோணங்கள். கேள்வி கேட்பது, அதிகாரத்திற்கு சவால் விடுவது, எதிர்த்து நிற்பது- இவை எதுவும் கூட மேற்கத்திய போக்குகள் அல்ல. பூர்ஷ்வாத்தனமும் அல்ல. புராணங்கள் அளவுக்குப் பழமையானவை. அதிகார பீடங்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தும் அளவுக்கு புதுமையானவை. எல்லோருக்கும் தெரிந்த கதைகளுடன் தொடங்கி, இருளில் சற்றுநேரம் உங்கள் கையைப்பற்றி, காட்டுக்குள் அழைத்துச் சென்று, அதற்கு பிறகு கொஞ்சம் வெளிச்சம் மங்கலாகத் தென்படும்போது உங்களை உங்கள் வழியில் விட்டுவிட்டு போய்விடுவார் ஓல்கா, ஜாக்கிரதை!

தெரிந்த விஷயங்களுடன் தொடங்கி, தெரியாத விஷயங்களை நோக்கி நாம் தத்தி தத்தி எடுத்துவைக்கும் அடிகளுக்கு கைகொடுக்கும் விதமாக எந்தக் கலைஞனாக இருந்தாலும் செய்யக் கூடியது அந்த அளவுதான். அவரவர் வழியை, சத்தியத்தை அவர்கள்தான் தேடிக்கொள்ள வேண்டும்.

புராணக் காப்பியங்களில் பெண்ணியத்தின் கோணங்களைத் தொட்டுப் பார்க்கும் இந்த முயற்சி, ஒல்கா செய்துவரும் நீண்ட ஆத்ம பரிசோதனையில் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. புராண காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் ஒரே சமூகமாக பார்க்கும் போக்கு இருந்திருக்கிறது. பெண்ணியம் தொடங்கிய முதல் கட்டத்தில் நடந்ததும் அதுதான். எல்லாப் பெண்களுடைய ஒருமித்த முழக்கத்தில் பல மாறுபட்ட குரல்கள் இருப்பதை இப்போது எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டு இருக்கிறார்கள். பெரிய சித்தாந்தங்களும், இறுதித் தீர்வுகளும் காலாவதியாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில்.. நவீன வாழ்க்கையின் சிக்கல்களை தாம் படைக்கவிருக்கும் அரசியல் கதைகளில், நாவல்களில் ஓல்கா போன்ற எழுத்தாளர்கள் எவ்விதமாகக் கையாளப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
நன்றி - புத்தகம் பேசுது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்