/* up Facebook

Mar 10, 2016

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இளநிலை நீதிபதியாக இருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி குணரத்தினம், மற்றும் புற்றுநோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லாவண்யா திருச்செல்வம்கைலை ஆகியோரே இந்த விருதுகளைப் பெற்றுள்ளன. இவ்வாரம் ஒஸ்லோ தமிழ் 3 வானொலி தனது மூன்றாவது ஆண்டு நிறைவினை கொண்டாடிய வேளையே இம்மூவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலாவது தமிழ்ப் பின்னணி நீதிபதி

                                         
ஒரு வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு இடம்பெயர்ந்த பிரசாந்தி சிவபாலச்சந்திரனே நோர்வேயில் முதலாவது தமிழ்ப்பின்னணியினைக் கொண்ட நீதிபதியாக நியமனம் பெற்றவராகின்றார். வடநோர்வேயின் துரொம்சோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பிரசாந்தி பல்வேறு பொறுப்புகளினூடு தனது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

“தலைமைதாங்குவது எனக்குப் பிடித்த விடயம். இந்த வகையில் நீதிபதித் தொழில் எனக்கு நன்கு ஒத்து வருகிறது, என்று கூறும் பிரசாந்தி ஒரு நோக்கத்தினைத் தெரிந்தெடுத்தால் அதற்காகக் கடுமையாக உழைப்பது தனது பண்பு” என்று கூறுகிறார்.

இளவயதுப் பிரதி முதல்வர்

மூன்று வயதில் நோர்வேக்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்த ஹம்சாயினி குணரத்தினத்தினை நோர்வே தொழிற்கட்சி இந்த ஆண்டு இளவயதிலேயே ஒஸ்லோவின் உதவிமேயராக ஆக்கியமை நோர்வே பெருந்தளத்தில் கவனத்தினை ஈர்த்தது.

தனது பத்தொன்பதாவது வயதில் ஒஸ்லோவாழ் தமிழ்மக்களின் அமோக ஆதரவுடன் மாநகரசபைக்குச் சென்ற ஹம்சாயினி வெகுவேகமாக ஒஸ்லோவின் ஒரு முக்கியபதவிக்கு தனது  27 ஆவது வயதிலேயே உயர்ந்தமைக்கு தனது கடும் உழைப்பே காரணம் என்கிறார்.

“எனது பெற்றோர்கள் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்துள்ளார்கள், அதனை விடவும் ஒஸ்லோவில் இருந்த தமிழ்ப்பெரியோர்கள் பலர் எனது வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்கள். எனினும் அரசியல் அரங்கில் எனது கடும் உழைப்புத்தான் என்னை மேலும் வளர்த்து விட்டுள்ளது.”

2013 ஆம் ஆண்டு கம்சாயினி குணரத்தினம் தொழிற்கட்சியின் ஒஸ்லோ பகுதி இளையோரமைப்புத் தலைவராகவும் இருந்துள்ளார். 2011ஆம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற உலகறிந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டவர் கம்சாயினி குணரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சளைக்காத புற்றுநோய் ஆய்வாளர்

நான்கு வயதுச் சிறுமியாக 1988 ஆம் ஆண்டு நோர்வே வந்த லாவண்யா திருச்செல்வம்கைலை, மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவானது முதலே ஆய்வாளராக வரவேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளார்.

மருத்துவம் என்பது நோயாளிகளை மட்டும் கருத்தில் கொள்வது மட்டுமல்ல சுகதேகிகளாக இருப்பவர்கள் நோய்வாய்ப்படாமல் பாதுகாப்பதுவும் மருத்துவக்கல்வியின் முக்கிய பங்கு என்று கூறும் லாவண்யா தனது ஆய்வு உயிர்காக்க உதவலாம் என்கிறார்.

“புற்றுநோய்க்கெதிரான மருந்தொன்றைக் கண்டுபிடிப்பதற்கு எனது ஆய்வு உதவினால் மிகவும் சந்தோசப்படுவேன். சின்னவயதில் இருந்தே ஒருவிடயம் விளங்காவிட்டால் அதனை அறியாமல் விடமாட்டேன்” என்று கூறும் லாவண்யா நோர்வேவாழ் இளையோரிற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகிழ்வாக இருக்கிறது என்கிறார்.

“தமிழ் 3 இன் தமிழர் மூவர்” மதிப்பளிப்பு வைபவத்தினை நோர்வே பேர்கன் வாழ் பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை, மருத்துவக் கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் ரவீனா மனோதீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்

பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை தலைமையில், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், மருத்துவர் ரவீனா மனோதீபன், ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, மற்றும் ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகிய ஐவர் அடங்கிய நடுவர் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆளுமைகளிலிருந்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட மூவரும் கடந்த 06.03.2015 நடைபெற்ற தமிழ் 3 வானொலியின் ‘சங்கமம்’ நிகழ்வில் மதிப்பளிக்களிக்கப்பட்டனர்.

தமிழ் 3 இன் நிகழ்விலே பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அரசியல் ஆய்வாளர் யதீந்திரா, நூலாசிரியர் குணா கவியழகன் மற்றும் பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா ஆகியோரே இந்த மூன்று விருதுகளையும் அரங்கில் வழங்கியிருந்தனர்.

பேராளுமைகளின் கதைகள்

இந்த மூன்று சாதனையாளர்களைத் தெரிவுசெய்வது தமிழ்3 இனால் அமைக்கப்பட்ட நடுவர்களிற்கு அவ்வவளவு சுலபமாக இருக்கவில்லையென அறியப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்ட மூவர் பற்றிய குறும்காணொளிக் காட்சிகளும் மதிப்பளிப்பின்போது அரங்கில் காட்டப்பட்டன.

இந்தச் சாதனையாளர்களிற்கு மதிப்பளிப்பதுடன் அவர்களுடைய வெற்றிக் கதைகளைப் பொதுஅரங்கிற்குக் கொண்டு வருவதே தமிழ் 3 இன் நோக்கம். இவர்கள் பற்றிய குறும் காணொளிகளை இணையத்தளங்களிலும் வெளியிடுகிறோம், என்கிறார் தமிழ் 3 வானொலியின் இணைப்பாளர் ரூபன் சிவராஜா.

– ராஜன் செல்லையா

1 comments:

Geetha M said...

விருது பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துகள்

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்