/* up Facebook

Mar 31, 2016

“நான் உயர்சாதி பெண்’ என சொன்னேனா?”: கொற்றவை மறுப்பு!


உடுமலை சாதிய ஆணவக் கொலையையொட்டி சில பெண்ணியவாதிகள் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள், இணைய இதழ் ஒன்றிடம் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலையை கண்டிக்கிறேன்” என்று குட்டி ரேவதியும், “நான் உயர்சாதிப் பெண். ஆணவக்கொலைகள் என்னை பெருமையடையச் செய்யாது” என்று நிர்மலா கொற்றவையும், “நான் சீர்திருத்த மரபினள். நான் ஆணவக்கொலைகளை எதிர்க்கிறேன்” என்று சுமதி தங்கப்பாண்டியனும், “நான் ஆதிக்க சாதி. ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்” என்று ஜோதிமணியும், இதுபோல் வேறு சில பெண்களும் கருத்துக் கூறியதாக அந்த இணைய இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பான காணொலி:- (காணொலியை நீக்கி விட்டேன்)

இவர்கள் தங்களை உயர்சாதி மற்றும் ஆதிக்க சாதி என சொல்லியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் பதிவிட்டு வருகிறார்கள். உதாரணமாக, ஜெயராணி மயில்வாகனன் தனது பதிவில், “வன்மையான கண்டனங்கள். நாம் யாரும் இவர்களை ஆதிக்க சாதியினராகப் பார்க்கவில்லை. இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் இவர்கள் தம்மை சாதியற்றவர்களாக அடையாளப்படுத்தவே முயன்றிருக்க வேண்டும். இந்த கட்டுரையின் மூலம் தங்களது ஆதிக்க சாதி லேபிளை ஏன் பறைசாற்றுகிறார்கள்? மிக மிக அருவருப்பாக உணர்கிறேன். இதில் சிலர் தம்மை உயர்சாதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று விளக்குங்கள். தமது ஆதிக்க சாதி அடையாளத்தை பறைசாற்றும் ஒருவருக்கு ஆணவக் கொலைகளை எதிர்க்க என்ன தகுதி இருக்கிறது என எனக்கு நிஜமாகவே புரியவில்லை. ஓர் எழுத்தாளராக, பெண்ணியவாதிகளாக, டி.வி பர்சனாலிட்டிகளாக நீங்கள் சமூகத்தில் ஒரு பொறுப்பான இடத்தை வகிக்கிறீர்கள். உங்கள் செயல்பாடுகள் வழியே நீங்கள் யாரென இந்த சமூகம் அறிந்து வைத்திருந்த அனைத்தையும் இன்றைய தினம் இந்த ஒற்றை பிரகடனத்தில் அழித்துவிட்டீர்கள். உங்களின் சாதி அடையாளத்தை அறிந்து கொள்ளாமல் உங்கள் செயல்பாடுகளுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் உங்களை மதிப்பவர்கள் இருக்கக் கூடும். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தாழ்த்தப்பட்டவரில்லை என்று சொல்ல வருகிறீர்களா? இது இச்சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? உங்கள் தனிப்பட்ட வாழ்வில் இதனால் விளையக்கூடிய ஆதாயம் என்ன? சுயசாதி அடையாளத்தை இத்தனை மலர்ச்சியோடு வெளிப்படுத்தும் உங்கள் சமூக அக்கறை நாசமாய் போகட்டும். இந்த பிரகடனத்திற்கு பதில் ஓர் ஆணவக் கொலையையே நிகழ்த்தி இருக்கலாம்” என்று கூறியுள்ளார். இதுபோல், இவரைப்போல், பல, பலர்.

ஆனால், உண்மையில் இவர்கள் யாரும் தங்களை “உயர்சாதிப் பெண்” என்றோ, “ஆதிக்கசாதிப் பெண்” என்றோ கூறவே இல்லையாம். இது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார் கொற்றவை. அவரது விளக்கம்:-

“Ippodhu.com எனும் தளத்தில் சாதி ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு பிரச்சாரம் நடத்தவிருப்பதாகவும், அதில் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளலாமா என்றும் பீர் முகமது அவர்கள் காலையில் இன்பாக்சில் ஒரு செய்தி வைத்தார்.

எப்போதும் எல்லாவிதமான வன்முறைக்கும், மனித உரிமைப் பிரச்சினைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிரான பிரச்சாரங்களுக்கும் கேட்பவரோடு இருக்கும் அறிமுகத்தை வைத்து இதுபோன்ற முயற்சிகளில் எங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ளச் சொல்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் பீர் முகமது அவர்கள் வைத்த தகவலில் உள்ள செய்தியை மட்டுமே, அதாவது சாதி ஆணவக் கொலையை எதிர்க்கிறோம் எனும் கருத்தை வலியுறுத்தும் எனும் நோக்கத்தில்தான் என்னுடைய பெயரை சேர்த்துக்கொள்ளவும் என்று சொல்லி இருந்தேன். அதிலும் கூட, இது வழக்கமாக தயாரிக்கப்படும் ஒரு கடிதமாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ இருக்கும் என்றே எண்ணினேன்.

இந்த உரையாடல்கள் நான் அலுவலகப் பணியில் இருக்கும்பொழுது நடைபெற்றது. கேட்பவர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமே பெயரைக் கொடுத்ததற்கான காரணம்.

இந்தப் பிரச்சாரம் எப்படி மேற்கொள்ளப்படும், என்ன வகையில் மேற்கொள்ளப்படும் என்று எதையுமே கேட்டறியவில்லை.

மாலை வசுமித்ர தொடர்பு கொண்டு “நான் உயர் சாதிப் பெண்” என்று நீ சொல்லி இருக்கிறாயா என்று கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகே அந்த தளத்தை சென்று பார்த்தேன். இடையில் நந்தினி வெள்ளைச்சாமி என்பவர் என் பெயரை டேக் செய்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அப்போதுதான் எனக்கு இந்தப் பிரச்சாரத்தின் ‘ஊடகத் தன்மை’ புரிந்தது.
அதன் வெளிப்பாட்டு தன்மை குறித்த விவாதத்தில் நானும் வசுவும் ஈடுபட்டிருந்தபோது இப்பிரச்சாரத்தில் உள்ள ‘Tonality’ & ‘Message’ எத்தனை ஆபத்தானது என்றும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்கிறது என்பதையும் உணர நேர்ந்தது. உடனே பீர் முகமதுக்கு தகவலும் வைத்தேன். ஆனால் அவர்கள் தங்கள் நோக்கத்தை விளக்குவதற்குள் Damage is already Done என்பதுபோல் எம் நோக்கத்திற்கே களங்கம் கற்பிப்பதாக சென்றுகொண்டிருக்கிறது.

ஆகவே, இந்தப் பிரச்சாரத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன். என்னுடைய புகைப்படத்தையும், நான் சொல்வதாக அவர்கள் சொல்லியிருக்கும் செய்தியையும் நீக்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நல்ல நோக்கத்திற்காக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்போது, பெயர் சேர்த்துக்கொள்ளலாமா என்று எவரேனும் கேட்டால் அதில் கேள்விகள் கேட்பது அகந்தை நிறைந்த செயலாக இருக்குமோ என்றெண்ணி நபரைப் பொறுத்து ஒப்புதல் அளித்துவிடுவதுண்டு. அது மாபெரும் தவறு என்பதை இந்த பிரச்சினை உணர்த்தியிருக்கிறது.

சாதியை அல்லது இன்னபிற அடையாளங்களைச் சொல்லி வன்முறையை கண்டிப்பதன் மூலம் ஒருவரின் கவனத்தை ஈர்த்து விட முடியும் எனும் இந்த அணுகுமுறை தவறானது. அதற்கு நான் துணை நிற்க விரும்பவில்லை. முழுமையாக கேட்டறியாமல் பெயர் கொடுத்தமைக்கு வருந்துகிறேன்.

அதே சமயம் பீர்முகம்மது மற்றும் நந்தினி அவர்களின் செயல்பாடுகள் எப்போதும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவே இருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். அவர்களும் இந்த பிரச்சாரம் குறித்த பல்வேறு கருத்துக்களைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கொற்றவை கூறியுள்ளார்.
சுமதி தங்கப்பாண்டியன் விளக்கம்: “ஆணவக் கொலைக்கு கண்டனங்கள் என்று மட்டுமே இருக்க வேண்டும் என நான் மிகத் தெளிவாக இதற்காக என்னைத் தொடர்பு கொண்ட Peer Mohamedஇடம் கூறினேன். அந்த முதல் வாக்கியத்தில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.”

சம்பந்தப்பட்ட மற்ற பெண்களின் விளக்கமும் இதுவாகத் தான் இருக்கும் என்பதால், இவர்களின் விளக்கத்தை ஏற்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே அறிவுடைமை.

ஊடகவியலாளன் என்ற முறையில் நாம் “பீர் முகமது’களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், முற்போக்காளர்கள் மீது “சாதிப்பெருமிதம்” என்ற கேவலமான ஸ்டிக்கரை நீங்களாக ஒட்டி தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள். மிகுந்த பொறுப்புணர்வுடன் பணியாற்றுங்கள்.

நன்றி - தி இந்து .
...மேலும்

Mar 30, 2016

ஆளுமை வெளிப்பாடு: ஆளுமைத் திறன் என்பது என்ன?

                   

 படித்து வாங்கிய பட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பம், கைவினைகள், கலை, பேச்சு, மொழி, விளையாட்டு முதலான திறமைகளும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்தத் திறமைகளுக்கு அப்பால் இன்னொரு வார்த்தையும் நம் காதுகளில் அடிக்கடி விழும். ஆளுமை என்ற சொல்தான் அது.

ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது.

ஒருவர் வலுவான ஆளுமையாக விளங்க என்ன செய்ய வேண்டும்? இதைப் பல விதமாக விளக்கலாம். உதாரணத்துக்கு ஒரு கோணத்தை இங்கே எடுத்துக்கொள்ளலாம்.

எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொள்ளுதல்

அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறோம். அதில் எதிர்பாராத சூழல் எழும்போது அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குரலைக் கேளுங்கள்: “நானும் பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் எதற்காகப் படிக்கிறோம் எனப் புரியாமல்தான் படித்துவந்தேன். அன்று சுடப்பட்டபோதுதான் கல்வியின் அர்த்தம் ஆணி அடித்தாற்போலப் புரிந்தது. பெண் கல்வி இத்தனை பேரைப் பதற்றம் கொள்ளச் செய்கிறது என்றால் அது எத்தகைய பலத்தைத் தர வல்லது என்பது புரிந்தது. ஆனால், அன்று என்னைச் சுட்டவர் ஒரு தவறு செய்துவிட்டார். என்னைச் சுட்டு, என்னுள் இருந்த பயத்தை முழுவதுமாகக் கொன்றுவிட்டார். இனி சாவைக் கண்டு எனக்கு பயம் இல்லை. இந்தப் போராட்டத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒருநாள் வரும், அன்று அனைத்துக் குழந்தைகளும், ஆணோ பெண்ணோ கறுப்போ வெள்ளையோ கிறிஸ்தவரோ இஸ்லாமியரோ பள்ளிக்கு நிச்சயம் செல்வார்கள்.”

இன்னொரு குரலையும் கேளுங்கள்:

“இது ஜனநாயக நாடு. ஜனநாயகத்தில் சமத்துவத்துக்கான உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு மாணவரோ ஒரு ஏழையோ ஒரு தொழிலாளியோ அம்பானியோ, அதானியோ யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. வன்முறைக்கான விளக்கம் இல்லாமல் வன்முறையை எப்படிப் புரிந்துகொள்வது? துப்பாக்கியால் சுட்டு மனிதர்களைக் கொல்வது மட்டும் வன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் தந்திருக்கும் உரிமைகளை ஜே.என்.யூ. நிர்வாகம் தர மறுக்குமானால் அதற்குப் பெயரும் வன்முறைதான்.

இதைத்தான் அமைப்பு சார்ந்த வன்முறை என்கிறோம். இவர்களெல்லாம் நீதியைப் பற்றிப் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது? ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அதுதான் நீதி நியாயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உணவகங்களுக்குள் நாய்களும் இந்தியர்களும் நுழைய முடியாது. அப்போது அதுதான் நீதி. அந்த நீதிக்கு நாம் சவால் விட்டோம். இப்படித்தான் உங்களுடைய நீதி எங்களுடைய நீதிக்குப் புறம்பானதாக இருக்கும்போது அத்தகைய நீதியை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கும்போதுதான் நீதி நிலவுவதாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.”

எங்கிருந்து வந்தார்கள்?

முதலாவது, பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடிவரும் பாகிஸ்தானி சிறுமி மலாலாவின் குரல். இரண்டாவது, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பின் தலைவர் கண்ணையா குமார் பேசியது.

மலாலா பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா யூசப் சாய் தலைமை ஆசிரியராக இருந்த பள்ளியிலேயே படித்துவந்தார். 2008-ல் ஸ்வாட் பகுதியை தலிபான் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தார்கள். பெண்கள் வெளியில் நடமாடக் கூடாது; பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக் கூடாது எனும் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.

இந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராக வெகுண்டெழுந்தார் 11 வயது மலாலா. 2009-ல் பி.பி.சி. நிறுவனத்தின் உருது மொழி இணையதளத்தில் தலிபான் அத்துமீறலை உலகத்துக்கு அம்பலப்படுத்தினார். பெண் கல்வி வேண்டும், குழந்தைத் திருமணம் கொடுமையானது, பெண்களுக்கு உரிய சுகாதாரம் தேவை எனத் தொடர்ந்து வலைப்பதிவு இட்டார். பாகிஸ்தான் பெண்கள் விழிப்புணர்வு பெறத் தொடங்கினார்கள்.

தலிபான்கள் கொதித்தெழுந்து மலாலாவைக் கொல்ல முயன்றார்கள். அக்டோபர் 9, 2012-ல் மலாலா சுடப்பட்டார். அந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைத்த மலாலா, முன்பைவிடவும் தீவிரத்துடன் தன் பணிகளை மேற்கொண்டார். இவர் ஆற்றிய சேவைகள் உலகின் கவனத்தைக் கவர்ந்தன; அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தன.

தனக்கு ஏற்பட்ட அபாயத்தை மலாலா எப்படி எதிர்கொண்டார் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்த்தோம். இந்த அணுகுமுறைதான் ஆளுமைத் திறனின் முக்கியமான அம்சம். இதுதான் மலாலாவைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. இதுதான் அவருக்கு உலகின் மதிப்பு வாய்ந்த விருதைப் பெற்றுத்தருகிறது. தொடர்ந்து போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

விடாமல் போராடும் குணம்

கண்ணையா குமாரை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் பிஹாரில் பெஹாத் கிராமத்தில் பிறந்தார். அப்பா ஜெயசங்கர் விவசாயத் தொழிலாளி. அம்மா மீனாதேவி அங்கன்வாடி தொழிலாளி. அப்பா நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்கிறார். அம்மாவின் சொற்ப சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்தப்படுகிறது. பள்ளி நாட்களிலிருந்தே இடதுசாரிகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் கண்ணையா.

2007-ல் புவியியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் (ஏ.ஐ.எஸ்.ஏ) உறுப்பினரானார். தற்போது இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜே.என்.யூ.வில் முனைவர் பட்ட ஆய்வாளர். 2015-ல் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஷ்மீர் பிரச்சினை முதல் தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவிகள் தற்கொலை வரை விவாதிக்கும் களமாக ஜே.என்.யூ. இருந்துவருகிறது. அதில் இடைவிடாது குரல் எழுப்பிவருகிறார் கண்ணையா. அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின்போது தேசத்துரோகி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

கொலைத் தாக்குதலைச் சந்தித்த மலாலா மனம் தளராமல் தொடர்ந்து போராடுவதைப் போலவே குமாரும் இத்தகைய குற்றச்சாட்டைக் கண்டு அசராமல் தொடர்ந்து போராடுகிறார்.

ஆளுமைத் திறனுக்கான வரையறை இங்கே விரிவடைகிறது. மதிப்பெண்களைக் குவிப்பது, கைநிறைய சம்பாதிக்கும் வேலையில் சேரத் தயார்படுத்திக்கொள்வது ஆகியவை மட்டும் போதுமா? பொது விவகாரங்களிலோ சமூகப் பிரச்சினைகளிலோ பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி இருக்கலாமா? அப்படி இருப்பவர்களால் நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும்?

ஆளுமையை வளர்ப்பது எப்படி?

ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான புத்தகங்களும் சிறப்பு மையங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. பேச்சாற்றல், நேர நிர்வாகம், உடல் மொழி, குரலில் ஏற்ற இறக்கம் இப்படிப் பல சூட்சுமங்களை இவை சொல்லித்தருகின்றன. ஆனால், பரீட்சை எழுதிவிட்டுத் தோழிகளோடு வீடு திரும்பும்போது, “யார் மலாலா? யார் மலாலா?” எனக் கேட்டு, சரசரவெனச் சுடப்படுகிறாள் ஒரு சிறுமி. மரணப் படுக்கைக்கு தள்ளப்படும் அவள் ஓராண்டு கழித்து நிமிர்ந்து நின்று உலக மக்களைப் பார்த்து உரையாடுகிறாள்.

அடித்தட்டில் இருந்து முன்னேறி, முனைவர் பட்டம் படிக்கும் வாய்ப்பைப் பெறும் சாமானிய இளைஞன் தனது அரசியல் பார்வைக்காக அரசின் வழக்கைச் சந்திக்கிறான். எனினும் தன் கொள்கையில், செயல்பாட்டில் கொண்ட உறுதி தளராமல் நிற்கிறான். கண்ணையாவின் கொள்கைகள் எத்தகையவை என்பது விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால் தன் கொள்கையில் அவருக்கு இருக்கும் உறுதியும் தெளிவும் நெருக்கடியைக் கண்டு அஞ்சாமல் போராடும் குணமும் முக்கியமானவை.

ஆளுமைத் திறன் என்பதற்கான பொருளை விரிவுபடுத்தும் செயலை மலாலாவும் கன்னையாவும் செய்திருக்கிறார்கள். இளைஞர்களின் மென்திறனை மேம்படுத்தக் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்திருக்கும் காலகட்டத்தில் இந்த இளைஞர்கள் ஆளுமைத் திறனுக்குப் புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார்கள்.


நன்றி- திஇந்து...மேலும்

Mar 29, 2016

பெர்சனல்... கொஞ்சம்..!


மாதவிடாய், பிறப்புறுப்பு என்று பேசினாலே சில பெண்கள் முகத்தை திருப்பிக்கொள்ளலாம். ஆனால், ‘பெர்சனல் ஹைஜீன்’ தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களை அறியவேண்டியது உங்கள் கடமை. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதா கண்ணன், அது தொடர்பாகத் தரும் தகவல்கள் இங்கே! படியுங்கள், தெளியுங்கள்...

பிறப்புறுப்பு சுகாதாரம்!

‘‘பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்வது, பல தொற்றுகளில் இருந்து காக்கும். அதற்கான முதல் வழி, சுத்தமான, உலர்வான உள்ளாடைகள் அணிவது. ஈரம், பூஞ்சைத்தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் எக்காரணம்கொண்டும் உள்ளாடைகளை ஈரத்துடன் அணியக்கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் உறங்கும் நேரத்தில் உள்ளாடைகள் தவிர்ப்பது நலம்; காற்றோட்டமும், உலர்வும் கிடைக்கும். ரோமம் இருந்தால்... ஈரம் தங்கும், தொற்று ஏற்படும் என்று பிரச்னைகள் வரிசைகட்டும் என்பதால் அதை நீக்கி பிறப்புறுப்பை சுத்தமாகப் பேண வேண்டும். குளித்து முடித்த பின்னும், ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் பிறப்புறுப்பை உலர்வாக்கிய பின்னரே உள்ளாடை அணிய வேண்டும். மாய்ஸ்ச்சரைஸர், டியோடரன்ட் போன்ற எதையும், மிகவும் சென்சிட்டிவான பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஏதேனும் டிஸ்சார்ஜ் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். 

பிறப்புறுப்புப் பிரச்னைகளுக்கு...

 வெள்ளைப்படுதல் குணமாக, 3 ஸ்பூன் புழுங்கல் அரிசியை 500 மில்லி தண்ணீரில் கொதிக்க  வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தி வர, குணம் பெறலாம். 

 ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை (தனியா) ஒரு கப் தண்ணீரில்  இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்தத் தண்ணீரை அருந்தி வர, ஆரோக்கியம் கூடும். இது காலம்தவறிய மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

பிரைவேட் பார்ட் வாஷ்! 

 ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை ஒரு கப் தண்ணீரில்  கொதிக்கவைத்து, ஆறவிட்டு, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவி வர... அரிப்பு, வெள்ளைப்படுதல் பிரச்னைகள் நீங்கும்.

 3 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்து, அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவிவர... துர்நாற்றம் நீங்கும்.

மாதவிடாய் நாட்கள்! 

சராசரியாக ஒரு பெண் 15 வயதில் பருவமடைகிறாள் என வைத்துக் கொண்டால், 40 வயதுக்கு மேல் அவளுக்கு மெனோபாஸ் ஏற்பட்டு மாதவிடாய் நிற்கும் காலம்வரை, கருத்தரிக்கும் காலம் நீங்கலாக, கிட்டத்தட்ட 300 முறை, அதாவது குறைந்தது 900 நாட்கள் அவள் தன் ஆயுளில் மாதவிடாயுடன், அந்த வலி, அவஸ்தையுடன் வாழ்கிறாள். அதனால்தான், முந்தைய காலங்களில் அந்நாட்களில் பெண்களுக்கு ஓய்வும், ஆரோக்கிய உணவும் தரும் விதமாக அவர்களைத் தனித்திருக்க வைத்தார்கள். இன்றோ ஸ்பெஷல் கிளாஸ், டெஸ்ட், செமஸ்டர், வேலை என்று எல்லா நாட்களிலும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில், மாதவிடாய் ஓய்வு என்பது சாத்தியமற்றது. இருந்தாலும், அந்நாட்களில் ஆரோக்கியமும், சுகாதாரமும் பேணுவது அவசியமாகிறது.

சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் மாதவிடாய், மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை நீடிக்கும். அப்போது வலி, வாந்தி, தலைவலி, உடல் அசதி என்று சிரமப்பட்டாலும், சாப்பாட்டைத் தவிர்க்கக் கூடாது. காரணம், இந்நாட்களின் ரத்தப்போக்கால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, சத்தான உணவு மிகவும் அவசியம். மேலும், இந்த உதிரம் கழிவு ரத்தம் அல்ல. எனில், ஒவ்வொரு மாதமும் இவ்வளவு ரத்தப்போக்கையும் ஈடு செய்யும்விதமாக சத்துணவு உட்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்?!

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் காபி தவிர்த்து பிளாக் டீ குடிக்கலாம். உடல் சூட்டைத் தவிர்க்கும் விதமான குளிர்ச்சியான மற்றும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். கடைகளில் வாங்கும் காஸ்ட்லி நாப்கின்களில் பயன்படுத் தப்படும் ரசாயனங்களால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை ஏற்படும். அவர்கள் அதைத் தவிர்த்து, அம்மாவிடம் காட்டன் நேப்கின்கள் தயாரித்துத் தரச்சொல்லிப் பயன்படுத்தலாம். அல்லது, கடைகளில் காட்டன் நாப்கின் களாக கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம். 

பீரியட்ஸ் வலி, சோர்வு நீங்க...

கற்றாழைச் சோற்றின் சாற்றை, சாப்பாட்டுக்குப் பின் ஒரு ஸ்பூன் இரண்டு வேளைகள் அருந்தலாம். 

 கட்டிப் பெருங்காயத்தை நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம். 

 ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், துளசிச் சாறு இரண்டு ஸ்பூன்கள் கலந்து குடிக்கலாம். 

 ஒரு ஸ்பூன் எள்ளை, ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

ஒரு துண்டு இஞ்சியை சுத்தம் செய்து நசுக்கி ஒரு  கப் தண்ணீரில் கொதிக்கவைத்து,  வடிகட்டி, உணவுக்குப் பின் அந்த நீரை அருந்தலாம்...’’ 

- தேவையான ஆலோசனைகள் தந்துமுடித்தார், மருத்துவர் ராதா கண்ணன்.

நன்றி - விகடன்


...மேலும்

Mar 21, 2016

இரண்டாம் உலகப் போரும் பெண்களும்மார்ச் ‘பெண்கள் வரலாறு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாற்றில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப் போரில் பெண்களின் பங்களிப்பு என்ன?

இரண்டாம் உலகப் போரில் பெண்களின் நிலையும் மாற்றத்தைச் சந்தித்தது. அதுவரை வீட்டையும் பண்ணையையும் பார்த்துக்கொள்வதே பெண்ணின் முக்கியமான வேலையாக இருந்துவந்தது. ஆனால் போர் ஆரம்பித்தவுடன் புதுப் புது வேலைகள் பெண்களைத் தேடி வந்தன. பெண்கள் புது அவதாரங்கள் எடுக்க ஆரம்பித்தனர். அவர்களின் பொறுப்புகள் விரிந்தன. ஆண்கள் போருக்குச் சென்றுவிட, அதுவரை ஆண்கள் பார்த்துவந்த வேலைகளைப் பெண்கள் பார்க்கவேண்டிய நிலை உருவானது. விமானம் கட்டும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தனர். வெடிகுண்டுகள் தயாரிக்கும் இடங்களில் பணிபுரிந்தனர். வாகனங்களை ஓட்டினர். எதிரி விமானங்களைக் கண்காணித்து, மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மருத்துவம் செய்யும் செவிலியர்களாக மாறினர். அதுவரை ஈடுபடாத அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டனர். போரில் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.

போர் முடிந்தபோது மீண்டும் இந்த வேலைகள் எல்லாம் ஆண்களின் கைகளுக்கு வந்து சேர்ந்தன. எதிரிகளுடன் போரிட்ட, எதிரிகளின் முகாம்களுக்கு உளவு பார்க்கச் சென்று வந்த தைரியமான பெண்கள், பதக்கங்கள் அளித்து கெளரவிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் போர் எதிர்ப்பு இயக்கங்களில் சேர்ந்தனர்.

உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போர் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டு, அவர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டுவருகின்றன. அவற்றில் பெண்களின் பங்களிப்பை மட்டும் சொல்லும் சில நினைவுச் சின்னங்களைப் பார்ப்போம்.

* இங்கிலாந்து

லண்டனில் உள்ள ஒயிட் ஹால் பகுதியில், 2005-ம் ஆண்டு பெண்களுக் கான போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. போர் முடிந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக அமைக்கப்பட்டாலும், இப்படி ஒரு நினைவுச் சின்னம் வேறு எங்கும் இல்லை. 22 அடி உயரமும் 6 அடி அகலமும் கொண்ட கறுப்பு வெண்கலச் சுவர். இதில் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட 17 பெண்களின் போர்ச் சீருடைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

* அமெரிக்கா

வர்ஜீனியாவில் இருக்கும் மெமோரியல் அவென்யூ, கோள வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்ற பெண்களுக்கான தனி நினைவுச் சின்னமாக இது இல்லை. அமெரிக்க ராணுவத்தில் இன்றுவரை பணிபுரிந்த, பணிபுரியும் பெண்களின் பங்களிப்பைச் சொல்வதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் படைகள், பெண்களின் பங்களிப்புகள், பெண் தியாகிகள், புகழ்பெற்ற பொன்மொழிகள், புகைப்படங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இங்குள்ள திரையங்கில் ராணுவத்தில் பணிபுரிந்த பெண்களின் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

* ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய ராணுவம் ஆயிரக்கணக்கான ஜப்பானியப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வலுக்கட்டாயமாக மாற்றியது. அவர்களை ‘Comfort women’ என்று அழைக்கிறார்கள். நான்கில் 3 பங்கு, அதாவது 2 லட்சம் கம்ஃபர்ட் பெண்கள் இறந்து போனார்கள். எஞ்சியிருந்தவர்கள் பாலியல் நோய்களுக்கு ஆளாகினர்.

ஜப்பானிய கம்ஃபர்ட் பெண்களுக்கான அருங்காட்சியகம் டோக்கியோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. போரின் கோரத்தையும் அமைதியின் அவசியத்தையும் உணர்த்தும் விதமாக இந்த அருங்காட்சியகம் இயங்கிவருகிறது.

* தென் கொரியா

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். தொழிற்சாலைகள், உணவு விடுதிகளில் வேலை என்று சொல்லி அழைத்துவரப்பட்ட பெண்கள், பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டனர். இரவும் பகலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். கர்ப்பமாகும் பெண்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இணங்காத பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்.

கொரியாவைச் சேர்ந்த கம்ஃபர்ட் பெண்களுக்கான நினைவுச் சின்னம், தென் கொரியத் தலைநகர் சியோலில், ஜப்பான் தூதரகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. உட்கார்ந்திருக்கும் ஒரு சிறுமியின் வெண்கலச் சிலை. 2011-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நினைவுச் சின்னத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் கொரிய பெண்கள் நீதி கேட்டு ஜப்பானுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவந்தனர். சமீபத்தில் ஜப்பானிய ராணுவத்தினர் செய்த கொடூரங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் மன்னிப்பு கோரியிருக்கிறது.

இதேபோன்று ஒரு நினைவுச் சின்னம் லாஸ் ஏஞ்சலீஸில் 2013-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ‘நான் ஜப்பானிய ராணுவத்தினரால் பாலியல் அடிமையாக மாற்றப்பட்டேன்’ என்ற வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், சீனா மற்றும் சில நாடுகளில் கம்ஃபோர்ட் பெண்களுக்கான நினைவுச் சின்னங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் கறுப்புப் பக்கங்களைப் பிரதிபலிக்கும் இந்த நினைவுச் சின்னங்கள் கடந்த காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நிகழ்காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

நன்றி - தி இந்து...மேலும்

Mar 16, 2016

ஆணவக்கொலை:கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்!


கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக,  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா.

கல்லூரியில் துவங்கிய காதல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து முடித்த சங்கர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வியில் சேர்ந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த பழனியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், சங்கருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கவுசல்யாவின் வீட்டுக்கு இது தெரியவந்தது.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகக் கடுமையாக எதிர்த்தனர் கவுசல்யாவின் பெற்றோர். அத்தோடு அவரது உறவினர் வழியில் ஒருவருக்கு கவுசல்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்க, அதிர்ந்து போன சங்கர் - கவுசல்யா ஜோடி,  வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டது. அப்போது சங்கர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கவுசல்யா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், தனது மகளை சங்கர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். அப்போது 'என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பிதான் இவரோடு வந்தேன்' என கவுசல்யா சொல்ல... அவர் மேஜர் என்பதால் சங்கருடனே அனுப்பி வைக்கப்பட்டார். 'கவுசல்யா இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே மாட்டேன்' என சங்கர் சொல்ல, சங்கரின் தந்தை இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். சில நாட்களில் நிலைமை சீராகும். நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த சங்கர் - கவுசல்யா ஜோடிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'காதல்' பட பாணியில் ஒரு மிரட்டல்

திருமணமான சில தினங்களில் அதாவது ஜூலை 24-ம் தேதி,  சங்கரின் வீட்டுக்கு வந்தார் கவுசல்யாவின் தாத்தா. மிக அன்பாக பேசினார். ஸ்கூட்டி பைக் ஒன்றை கொண்டு வந்து கவுசல்யாவுக்கு கொடுத்தார். 'எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். நீ ஒண்ணும் பயப்படாதே' என ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் என்னை இந்த ஹாஸ்பிட்டல் வரைக்கும் விட்டுட்டு வந்துடுறியாமா என தாத்தா கவுசல்யாவிடம் கேட்க, மகிழ்ச்சியுடன் பைக்கில் சென்றார் கவுசல்யா. ஹாஸ்பிட்டல் முன்பு தயாராக இருந்த காரில் அப்படியே கடத்தி செல்லப்பட்டார். காதல் படத்தில் நாயகனையும், நாயகியையும் சந்திக்கும் நாயகியின் சித்தப்பா, அவர்களுக்கு ஆதரவாக பேசி கடத்தி செல்லும் சம்பவத்தை போன்றே அரங்கேறியது இந்த சம்பவம்.

கவுசல்யாவை காணவில்லை என சங்கர் மடத்துக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஒரு வாரத்துக்கு பிறகு போலீசில் ஆஜர்படுத்தப்பட்டார் கவுசல்யா. இந்த ஒரு வாரகாலம் கெஞ்சியும், மிரட்டியும் துளியும் அவர் அசரவில்லை. காவல்நிலையத்தில் சங்கரை பார்த்த உடன்,  வேகமாய் வந்து கட்டியணைத்துக்கொண்டார் கவுசல்யா. ஆனால், அத்தோடு கவுசல்யாவின் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் கவுசல்யாவை மிரட்டிக்கொண்டே வந்தனர். அவ்வப்போது சங்கரும் இதில் சிக்காமல் இல்லை. அவரும் மிக இழிவான பேச்சுகளை கவுசல்யாவின் பெற்றோர்களிடம் இருந்து பெற நேர்ந்தது.

தொடர்ந்து வந்த மிரட்டல்கள்

'நீ வா. அவன் உன்னையா லவ் பண்றான். அவனுக்கு படிச்சா வேலை கூட கிடைக்காது. நீ கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும்' என பெற்றோர் எதிர்காலத்தை காட்டி அச்சுறுத்திய அத்தனை வார்த்தைகளையும் எளிதில் சமாளித்தார் கவுசல்யா. நாட்கள் சென்று கொண்டே இருந்தது. அவ்வப்போது மிரட்டலையும், இழிச்சொற்களையும் கேட்டுக்கொண்டே இருந்தார். சங்கர் கல்லூரி படிப்பை முடிப்பார். நல்ல வேலை கிடைக்கும். அப்போது வாழ்க்கையை இனிதாக துவங்கலாம் என காத்திருந்தார் கவுசல்யா.

எதிர்பார்த்த நேரம் வந்தது. கடந்த வாரத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் சங்கர். அத்தோடு வளாக நேர்காணலில் வென்று வேலையும் பெற்றார். சென்னை சென்று வந்து வேலையை உறுதி செய்தார். ஏப்ரல் மாதத்தில் கவுசல்யாவின் பிறந்த நாள். இந்த மகிழ்வோடு, கவுசல்யாவுக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க நினைத்தார் சங்கர். எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருந்த நேரம், கவுசல்யாவுக்கு வந்த ஒரு போன் கால் எல்லாவற்றையும் மாற்றியது.

எமனாக வந்த போன் கால்

போனில் பேசியது கவுசல்யாவின் குடும்பத்தார். எப்போதும் போல் எங்களோடு வந்து விடு என்ற அழைப்பு தான் அங்கு பிரதானமாய் இருந்தது. 'அவனுக்கு வேலை கிடைக்காது. அவனை நம்பி போய் என்ன பண்ணப்போறேன்?'னு கேட்டது கவுசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. பெருமிதமாக சொன்னார். 'அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சீக்கிரம் சென்னை போகப்போறோம். இப்போ என் பர்த்டேவுக்கு டிரெஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னார். இப்போ டிரஸ் எடுக்கதான் கிளம்பிட்டு இருக்கோம்'னு சொல்லியிருக்கார்.

அங்குதான் வந்தது பிரச்னை. இவர்கள் எப்படி நன்றாக இருக்கலாம் என நினைத்தார்களோ அல்லது சென்னை சென்று விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. உடுமலை பஸ் நிலையம் அருகே துணிக்கடையில் இருந்து வெளியே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள்,  அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். ஓடஓட இவர்களை கொடூரமாக வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில்தான் சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் அல்ல... சாதி வெறியாட்டமே காரணம்

ஒரு காதல்தான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. சாதி வெறியாட்டம் தான் காரணம்.  சங்கர் என்ற தலித் இளைஞன், கவுசல்யா எனும் மேல்சாதி என சொல்லப்படும் மற்றொரு சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. ஊர் பெரியவர்கள் மூலம், காவல்துறை மூலம் என எப்படியாவது கவுசல்யாவை பிரித்துவிட திட்டமிட்டனர். ஆனால், நாங்கள் இணைந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட கூறி மறுத்து விட்டனர் காதல் ஜோடி. ஆனால், அத்தோடு இதை விட யாருக்கும் மனமில்லை. மீண்டும் மீண்டும் மிரட்டல், கடத்தல் என பல வகையில் காதல் ஜோடியை பிரிக்க முயற்சி நடக்கிறது. தான் உறுதியாக நின்று அத்தனையையும் தவிர்க்கிறார் கவுசல்யா. 'அவன் உன்னை வைச்சு காப்பாத்த மாட்டான். நீ நல்லாவே இருக்க மாட்டே' என பல சாபங்களை கடந்துதான், சங்கருக்கு வேலை கிடைத்து, சென்னை செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இவர்கள் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சாதியமைப்பை தகர்ப்பதில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுதான் இவர்களுக்கான பிரச்னை. இதுதான் சாதி வெறியை அதிகரிக்கச் செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன.

நாடக காதல் என்றால் பெண்ணை கொல்வது ஏன்?

காதலித்து கரம் கோர்த்த இவர்கள்,  கண்ணியமாக வாழ வேண்டியதை தடுப்பது ஏன் என்று கேட்டால் இது நாடக காதல் என்கிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி, திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவதாகவும் சொல்கிறர்கள். அப்படியென்றால் வேலை கிடைத்து வாழ்வை இனிமையாக துவங்க வேண்டிய இவர்களை கொன்றது ஏன்? அப்படியே இளைஞர்தான் ஏமாற்றினார் என்றால், அந்த பெண்ணையும் வெட்டி வீழ்த்த உங்களை தள்ளியது எது?

திருமணமான 8 மாதங்களில் தன் காதல் கணவரை இழந்து விட்டு நிற்கிறார் கவுசல்யா. இப்போது கூட, ''இத்தனைக்கும் காரணம் என் பெற்றோரும், மாமாக்களும்தான். நான் நன்றாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை" என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

"இந்த கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. முதல்ல என்னை கடத்திட்டதாக சங்கர் மேல புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜருங்கறதாலயும், நான் அவரோடதான் போவேன்னு சொன்னதாலேயும் என்னை பிரிக்க முடியலை. தொடர்ந்து என் கணவரை பத்தி தப்பா சொல்லியும், சாதி பெருமை பேசியும் என்னை கூப்பிட்டாங்க. நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கலை. கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெஞ்சியும், மிரட்டியும் பாத்து நான் ஒத்துக்காததால எங்களை கொல்ல முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கவுரமும்தான்.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களை துரத்துனாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி 8 மாசமாகிட்டதால இனி எந்த பிரச்னையும் இருக்காது. நல்லா வாழலாம்னு நினைச்சோம். இப்படி பண்ணிட்டாங்க. இதுக்கு என் அப்பா, அம்மா, மாமாக்கள்தான் காரணமா இருப்பாங்க" என தனது உடல் பிரச்னைகளை மறந்து ஆவேசமாக முறையிடுகிறார் கவுசல்யா.

இந்த சமூகம் சாதி வெறிப்பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் கடமை அரசுக்கும், வாக்கு கேக்க தயாராகும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.

இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காதிருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.


நன்றி - விகடன்


...மேலும்

Mar 15, 2016

முன்னேற்றம் அடைந்துவிட்டதா பெண் இனம்..?

ஐரோப்பா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் என உலகமெங்கும் வசிக்கும் பெண்கள், தாங்கள் வாழும் சமூகத்தில் பெண்களின் நிலை எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது, இன்னும் என்னென்ன தளங்களில் மாற்றம் வேண்டும் என்பது பற்றிப் பகிர்கிறார்கள்... அவள் விகடனுக்காக!


ரோசெல்லா ஸ்கில்லாச்சி ஆவணப்பட இயக்குநர், மானுடவியல் ஆராய்ச்சியாளர்- இத்தாலி 

‘‘ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை என்பது மீதான நம்பிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக அதிகமாகவே இருந்தது ஐரோப்பியப் பெண்களுக்கு. ஆனால், அந்த நம்பிக்கை விரைவில் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்தது. அரசியலாகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும், பொருளாதார மையங்கள் ஆகட்டும்... வெகு சிலர் மட்டுமே உரிமை பெற முடிந்தது. இப்போதும் சூழல் அப்படியேதான் இருக்கிறது. மிகக்குறைந்த அளவிலான பெண்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்துக்கு வர முடிகிறது, அவர்களால் மட்டுமே சுயமாக முடிவு எடுக்க முடிகிறது, அவர்களால்தான் பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுக்கு முன்னெடுப்புகள் செய்ய இயல்கிறது.சம்பளம், ஆண்களைவிட பெண்களுக்கு குறைவாகவே வழங்கப்படுகிறது, ஆண்களைவிட அதிகம் படித்திருந்தாலும், பணிச்சூழலில் ஆண்களைவிட குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்கள். பணிகளில் முக்கிய இடம் அளிக்கப்படுவதில்லை. அப்படியே ஒரு பணியில் தன்னை இருத்திக்கொண்டாலும், குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு பொறுப்புகள் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றன. 

இத்தகைய தடைகளின் விளைவாக, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு புதிய புரட்சி ஏற்பட்டு உள்ளது. அது, 35-40 வயதில் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது. உண்மையில் அந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்ணின் உடல் ஒத்துழைப்பது இல்லை. ஆயினும், சிறு வயதில் இருந்து தொடர்ந்து பாடுபட்டு ஒரு பெண் தன் வாழ்க்கைக்கான பணத்தை பணி மூலமோ, வர்த்தகத்தின் மூலமோ பெற்று சுயமாக நிற்கும்போது அவளை தாய்மைப் பொறுப்புகள் மூழ்கடித்துவிடுவதால், இந்த முடிவுக்கு வந்துவிட்டாள்.மொத்தத்தில், பாட்டிகள் முன்வைத்த பெண் இன முன்னேற்ற கோரிக்கைகளுக்காக பேத்திகளும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்!’’


எலிசபெத் க்ளாட்சன்கணினி மென்பொருள் பொறியாளர், அலபாமா, அமெரிக்கா

‘‘கடந்த 20 ஆண்டுகளை ஒப்பிடும்போது கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை செயல் அலுவலர் பொறுப்புகள், விண்வெளி, ஆயுதம் தாங்கும் ராணுவத்தில் படையணி வீரர்கள், கட்டளைத் தளபதிகள், பொது வாழ்க்கையில் அரசியல் தலைவர்கள் என ஒரு நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடம் வரை பெண்கள் பங்களிக்கிறார்கள். 

ஆனால், சில சமூகங்களில் பெண்கள் இன்னும் வீட்டு வேலைகளைச் செய்யும் இயந்திரமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். சில குடும்பங்களில், அவர்கள் இன்னும் இருண்ட காலத்தில்தான் வாழ்கிறார்கள். உலகில் என்ன நிகழ்கிறது என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. சில பெண்களுக்கு சமூக, அரசியல் சுதந்திரம் என்பது கிடைத்தாலும்கூட கட்டுப்பாடுகளோடும், தடைகளோடும்தான் அவை அளிக்கப்படுகின்றன. மேலும், பாலின வேறுபாடு, பாலின துன்புறுத்தல்களும் அவர்களை விடாமல் துரத்துகின்றன. 

இருந்தாலும்கூட பெண்கள் முன்னேற்றத் தைப் பொறுத்தவரை அது நூறாண்டுகள் ஆனாலும் தொடர்கதைதான் என்பதால், நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அதற்கு நம்மை நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம்.’’ 


மீனாகுமாரி சசிகுமார் 12 ஆண்டுகளாக துபாயில் கணினி ஆசிரியர்

“வளைகுடா நாடுகளில், குறிப்பாக அமீரக நகரங்களில், பெண்கள் பாதுகாப்பு எல்லா இடங்களிலும் முழு நிறைவைத் தருகிறது. பணியிடங்களிலும், நகர்ப் பகுதிகளிலும், அரசுப் பேருந்து களிலும் பெண்கள் பாதுகாப்பு சிறப்பா கவே இருக்கிறது. பொது இடங்களில் வரிசைகளில், பேருந்து இருக்கை களில் பெண்களுக்கு முன்னுரிமையும், சிறப்பிடமும் தரப்படுகிறது. இரவு எந்த நேரமும் பெண்கள் தனியாக பயணம் செய்யவோ, வீதிகளில் நடந்து செல்லவோ தடையோ, பயமோ ஏதும் இல்லை. பணியிடங்களில் ஆணும் பெண்ணும் சமமாகவே பாவிக்கப்படுகின்றனர். இந்நிலை இன்று நேற்று அல்ல, கடந்த 10 வருடங்களுக்கு மேலான எனது அமீரக வாழ்வனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

ஆனாலும், சில பெண்கள் வேலைக்குச் செல்வதை வைத்து சமூகப் பெண்களின் தனி மனித சுதந்திரத்தை அளவிட முடியாது என்பது எனது கருத்து. பெண்களின் பொருளாதாரம், சுதந்திரம், விருப்பம் எல்லாம் மற்ற நாடுகளைப் போலவே இங்கும் பெரும்பாலும் கணவனைச் சார்ந்தே இருக்கிறது. பணிக்குச் செல்வதையோ, விரும்பிய வாழ்வை மேற்கொள்ளவோ பொதுவாக பெண்கள், ஆண்கள் பெற்றிருக்கும் சுதந்திரத்தைப் பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை.’’


ஷோபா தர்ஷன் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் ஈழத்துப்பெண்

‘‘நான் இங்கே ஆணுக்குச் சரிசமமாக மதிக்கப்படுகிறேன். அதைவிட ஆண், பெண் என்ற பேதங்களே இங்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். அரசியல் பிரவேசம் முதல், நிர்வாகக் கட்டமைப்பு வரை பெண்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். சட்டங்களும் பெண்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்குகின்றன. நான் எந்நேரமும் எங்கும் சென்று வரலாம். இப்படியான மனித நாகரிகம் வளர்ச்சியடைந்த நாட்டில் வாழ்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நான் செய்தியின் வாயிலாகவே அறிகிறேன். 

16 வயதைக் கடந்த பெண், தனக்கான நண்பரை அல்லது துணையை தேடும் சுதந்திரம் இருக்கிறது. தமது அடிப்படைக் கல்வியை கற்றபிறகு குறைந்தபட்சம் 18 வயதைக் கடந்ததும் தனக்கான இருப்பிடம், வேலை, வாழ்க்கை அனைத்தையும் தாமே முடிவு செய்துகொள்கிறார்கள். அதை இந்தச் சமூகம் அங்கீகரிக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில் நான் மிகவும் சுதந்திரம் பெற்றவளாக உணர்கிறேன். இருந்தாலும், இந்த அளவற்ற சுதந்திரத்தின் பாதிப்பாக நான் உணர்வது, தீயபழக்க வழக்கங்களுக்கு பெண்கள் அடிமையாவதும் இங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குடும்ப வாழ்க்கைமுறை குறைந்துவருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் இந்தச் சுதந்திரம், நமக்கு எதிரான, பிழையான பல அடக்குமுறைகள் களையெடுக்கப்பட்டு நமக்குக் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை, நமது பெற்றோர், முன்னோர் சொன்ன அனைத்தையும் எதிர்ப்பது என்று பொருள்கொள்ளக் கூடாது.’’


யாஸ்மின் அபுபக்கர் ஐக்கிய அரபு எமிரேட்

‘‘முஸ்லிம் பெண்களுக்கு, தானே தலாக் விடுக்கும் உரிமை, சொத்தில் பங்கு ரிமை போன்றவை மதத்தின் பெயரிலேயே வழங்கப்பட் டாலும், அவர்கள் அதை உணராமல் இருப்பதுதான் வேதனை. பெண் என்பதால் நாங்கள் இன்னமும் அனுபவிக்கும் பிரச்னைகளில் வரதட்சணைக் கொடுமை, `படித்துவிட்டாள்... அதனால் இவள் அடங்காதவள்’ என்ற மதிப்பீடுகள், கணவரைவிட படிப்பில், பட்டங்களில் பெண் அதிகம் என்றால் ஈகோ ஏற்பட்டு இல்லறம் கெடுவது, வரன்கள் விஷயத்தில் இதுவே எதிரொலிப்பது, பெண்குழந்தையைப் பெற்றவளைக் கேவலமாக நினைப்பது என பெண்களின் பிரச்னைகள் வடியாமல் நிரம்பியே உள்ளன. 

இத்தனை இடர்களையும் தாண்டி நான் மகிழும் ஒரு மறுமலர்ச்சி, பெண்கள் குறித்தான சமூகத்தின் பார்வை மற்றும் மதிப்பீட்டில் மாற்றம் தெரிவது. வேலைகளில், நிர்வாகத்தில் பெண்களின் பங்கும், சாதனைகளும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. அங்கீகாரம், மதிப்பீடுகள் சரியாகவே இருக்கின்றன. அதனால்தான், மென்மேலும் பெண்கள் வேலைவாய்ப்புகளில் வெற்றி பெறுகிறார்கள். முக்காடு என்பது உடலைப் பாதுகாக்கவே என்றும், மூளைக்கல்ல என்பதையும் இப்போது அரபுப் பெண்கள் நிரூபிக்கின்றனர்!’’

நன்றி - விகடன்

...மேலும்

Mar 10, 2016

மூன்று பெண் சாதனையாளர்களுக்கு “நோர்வே தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருது

நோர்வே தமிழ் 3 வானொலியினால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் “தமிழ்3 இன் தமிழர் மூவர்” விருதுகள் இம்முறை மூன்று பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இளநிலை நீதிபதியாக இருக்கின்ற பிரசாந்தி சிவபாலச்சந்திரன், ஒஸ்லோ மாநகரத்தின் பிரதிமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கம்சாயினி குணரத்தினம், மற்றும் புற்றுநோய் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லாவண்யா திருச்செல்வம்கைலை ஆகியோரே இந்த விருதுகளைப் பெற்றுள்ளன. இவ்வாரம் ஒஸ்லோ தமிழ் 3 வானொலி தனது மூன்றாவது ஆண்டு நிறைவினை கொண்டாடிய வேளையே இம்மூவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

முதலாவது தமிழ்ப் பின்னணி நீதிபதி

                                         
ஒரு வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு இடம்பெயர்ந்த பிரசாந்தி சிவபாலச்சந்திரனே நோர்வேயில் முதலாவது தமிழ்ப்பின்னணியினைக் கொண்ட நீதிபதியாக நியமனம் பெற்றவராகின்றார். வடநோர்வேயின் துரொம்சோ பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்துக்கொண்ட பிரசாந்தி பல்வேறு பொறுப்புகளினூடு தனது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

“தலைமைதாங்குவது எனக்குப் பிடித்த விடயம். இந்த வகையில் நீதிபதித் தொழில் எனக்கு நன்கு ஒத்து வருகிறது, என்று கூறும் பிரசாந்தி ஒரு நோக்கத்தினைத் தெரிந்தெடுத்தால் அதற்காகக் கடுமையாக உழைப்பது தனது பண்பு” என்று கூறுகிறார்.

இளவயதுப் பிரதி முதல்வர்

மூன்று வயதில் நோர்வேக்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்த ஹம்சாயினி குணரத்தினத்தினை நோர்வே தொழிற்கட்சி இந்த ஆண்டு இளவயதிலேயே ஒஸ்லோவின் உதவிமேயராக ஆக்கியமை நோர்வே பெருந்தளத்தில் கவனத்தினை ஈர்த்தது.

தனது பத்தொன்பதாவது வயதில் ஒஸ்லோவாழ் தமிழ்மக்களின் அமோக ஆதரவுடன் மாநகரசபைக்குச் சென்ற ஹம்சாயினி வெகுவேகமாக ஒஸ்லோவின் ஒரு முக்கியபதவிக்கு தனது  27 ஆவது வயதிலேயே உயர்ந்தமைக்கு தனது கடும் உழைப்பே காரணம் என்கிறார்.

“எனது பெற்றோர்கள் எனக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்துள்ளார்கள், அதனை விடவும் ஒஸ்லோவில் இருந்த தமிழ்ப்பெரியோர்கள் பலர் எனது வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்கள். எனினும் அரசியல் அரங்கில் எனது கடும் உழைப்புத்தான் என்னை மேலும் வளர்த்து விட்டுள்ளது.”

2013 ஆம் ஆண்டு கம்சாயினி குணரத்தினம் தொழிற்கட்சியின் ஒஸ்லோ பகுதி இளையோரமைப்புத் தலைவராகவும் இருந்துள்ளார். 2011ஆம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற உலகறிந்த பெரும் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பி மீண்டவர் கம்சாயினி குணரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

சளைக்காத புற்றுநோய் ஆய்வாளர்

நான்கு வயதுச் சிறுமியாக 1988 ஆம் ஆண்டு நோர்வே வந்த லாவண்யா திருச்செல்வம்கைலை, மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவானது முதலே ஆய்வாளராக வரவேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளார்.

மருத்துவம் என்பது நோயாளிகளை மட்டும் கருத்தில் கொள்வது மட்டுமல்ல சுகதேகிகளாக இருப்பவர்கள் நோய்வாய்ப்படாமல் பாதுகாப்பதுவும் மருத்துவக்கல்வியின் முக்கிய பங்கு என்று கூறும் லாவண்யா தனது ஆய்வு உயிர்காக்க உதவலாம் என்கிறார்.

“புற்றுநோய்க்கெதிரான மருந்தொன்றைக் கண்டுபிடிப்பதற்கு எனது ஆய்வு உதவினால் மிகவும் சந்தோசப்படுவேன். சின்னவயதில் இருந்தே ஒருவிடயம் விளங்காவிட்டால் அதனை அறியாமல் விடமாட்டேன்” என்று கூறும் லாவண்யா நோர்வேவாழ் இளையோரிற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மகிழ்வாக இருக்கிறது என்கிறார்.

“தமிழ் 3 இன் தமிழர் மூவர்” மதிப்பளிப்பு வைபவத்தினை நோர்வே பேர்கன் வாழ் பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை, மருத்துவக் கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் ரவீனா மனோதீபன் ஆகியோர் தலைமை தாங்கினர்

பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை தலைமையில், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், மருத்துவர் ரவீனா மனோதீபன், ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, மற்றும் ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகிய ஐவர் அடங்கிய நடுவர் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட ஆளுமைகளிலிருந்து மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட மூவரும் கடந்த 06.03.2015 நடைபெற்ற தமிழ் 3 வானொலியின் ‘சங்கமம்’ நிகழ்வில் மதிப்பளிக்களிக்கப்பட்டனர்.

தமிழ் 3 இன் நிகழ்விலே பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அரசியல் ஆய்வாளர் யதீந்திரா, நூலாசிரியர் குணா கவியழகன் மற்றும் பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா ஆகியோரே இந்த மூன்று விருதுகளையும் அரங்கில் வழங்கியிருந்தனர்.

பேராளுமைகளின் கதைகள்

இந்த மூன்று சாதனையாளர்களைத் தெரிவுசெய்வது தமிழ்3 இனால் அமைக்கப்பட்ட நடுவர்களிற்கு அவ்வவளவு சுலபமாக இருக்கவில்லையென அறியப்படுகிறது. தெரிவுசெய்யப்பட்ட மூவர் பற்றிய குறும்காணொளிக் காட்சிகளும் மதிப்பளிப்பின்போது அரங்கில் காட்டப்பட்டன.

இந்தச் சாதனையாளர்களிற்கு மதிப்பளிப்பதுடன் அவர்களுடைய வெற்றிக் கதைகளைப் பொதுஅரங்கிற்குக் கொண்டு வருவதே தமிழ் 3 இன் நோக்கம். இவர்கள் பற்றிய குறும் காணொளிகளை இணையத்தளங்களிலும் வெளியிடுகிறோம், என்கிறார் தமிழ் 3 வானொலியின் இணைப்பாளர் ரூபன் சிவராஜா.

– ராஜன் செல்லையா
...மேலும்

Mar 9, 2016

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!கேரளத்தில் குறைந்த ஜாதியை சேர்ந்த  பெண்கள் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை  சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள்.  திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.

ஒரு நாள்  அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . 'சரி,   ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள். இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது. 

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது.  கேரளத்தில் சேர்தலா அருகே 'முலைச்சிபுரம் 'என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று சம்பவம் நடந்துள்ளது.   ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது. 

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ''  நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார். 

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ''  மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற் காலத்தவர்கள் மறந்து விட்டனர். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார். 

எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!

நன்றி- விகடன்

...மேலும்

Mar 8, 2016

இரண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற மீட்சி


முனைவர்கள்: யு. விந்தியா, யு. சுதாகர்

‘விமுக்தா’ என்ற பெயரில் திருமதி ஓல்கா எழுதிய தெலுங்கு நாவலுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகதமி விருதும், ‘மீட்சி’ என்ற பெயரில் திருமதி கௌரி கிருபானந்தன் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகதமியின் விருதும் ஒரே ஆண்டில் வழங்கப்பட்டது சிறப்பானது.

‘‘புராணங்களில் சாசுவதமாக நீடித்திருக்கும் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். ஏன் என்றால் மனித இனத்தின் பொதுவான பிள்ளைப் பருவம் அதில் அடங்கியிருக்கும்’’ என்று சொன்னார் மார்க்ஸ். ஆனால் ‘இந்த ஈர்ப்புசக்தி எங்கிருந்து வருகிறது?’ என்ற கேள்வியை எழுப்பினால் புராணக் கதையின் நிகழ்வுகளைவிட பிரதானமாக அந்த புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களின் சிக்கலானதன்மை, முழுமை, உயர்குணம், எக்காலத்திற்கும் பொருந்துதல், உலகளாவிய நம்பகத்தன்மை – இவற்றிலிருந்துதான் என்று பதிலளிக்கலாம். ராமன், பீமன், கர்ணன், அபிமன்யு, திரௌபதி, சீதை ….. இவர்கள் எல்லோரும் உயிரோட்டத்துடன், சாசுவதமாக பண்டித, பாமர மக்கள் இதயத்தில் நிலைத்திருக்கும் நபர்கள்.

ஆனால் புராணப் பாத்திரங்களின் பெருந்தன்மை, வளர்ச்சி, முழுமை, அந்தந்த சூழ்நிலையில் அவர்கள் செய்த போராட்டங்களின் விளைவுதான். வரலாற்றையும், புராணத்தையும் கலந்து குழப்பி களேபரம் உருவாக்கும் சில நபர்கள் இந்த போராட்டத்தை தவிர்த்துவிட்டு புராணங்களை எடைபோடும் தராசாக சித்தரிக்க முற்படுவார்கள். அவ்வளவுதானே தவிர நாகரிகத்தை நோக்கி, சத்தியத்தின் தேடுதலை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்லமாட்டர்கள். மிஞ்சிப் போனால் ‘நல்லது’, ‘கெட்டது’ க்கு நடுவில் எந்நேரமும் நடக்கும் போராட்டமாக புராணக் கதைகளை துதி பாடுவார்களே தவிர கொள்ளை, நாட்டாமை, அநியாயம், சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட ஆளுகை இவற்றுக்கு எதிராக புராண பாத்திரங்கள் செய்த போராட்டத்தை எடுத்துக்காட்ட மாட்டார்கள். சூழ்நிலையை ‘கர்மா’ வாகவும், நடத்தையை ‘தர்மமாகவும்’ எளிமைப்படுத்தி க்ஷத்ரிய தர்மம், அது போலவே மற்ற இனத்தார் கடை பிடிக்க வேண்டிய தர்மங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்தினித்தன்மை – இவற்றை எல்லாம் கூட தர்மத்திற்கு கட்டுப்பட்ட தராசில் விதிமுறைகளாக பிரச்சாரம் செய்வார்கள்.

இந்தப் போக்கு எத்திசைக்கு இட்டுச்செல்லும் என்று தெரிந்தே இருக்கிறது. தர்மத்தைக் காப்பாற்றுவது யதார்த்தவாதம் என்றால், நியாயப் போராட்டம் முற்போக்கு வழிக்கான புரட்சி.

மேற்சொன்ன இரண்டு பிரதான பரஸ்பர நேர் எதிர் வாதங்களைத் தவிர ‘வேதங்களிலேயே எல்லாம் இருக்கிறதாம்’’ என்ற மற்றொரு போக்கும் சமீப காலத்தில் பிரபலமாக காணப்படுகிறது. புராண பாத்திரங்களின் கொடைச்சிறப்பை பாராட்டுவதற்கு இவர்கள் உற்சாகம் காட்டுவார்கள். ஆனால் கொள்ளைக்கும், நாட்டாமைக்கும் பலி ஆகிவிட்ட எந்த சமூகத்திலும் – தனி நபர்களாகத் தொடங்கி கூட்டாக செய்த போராட்டங்கள் தான், கடந்த காலத்தை இன்றைய காலத்துடன், இன்றைய காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கும் உள்சூத்திரமாக இவர்கள் அடையாளம் காண மாட்டார்கள். ஒருமுறை இந்த உள்சூத்திரத்தை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, ஒவ்வொரு மக்கள் சமுதாயமும் தம்முடைய சரியான வரலாறை உருவாக்கிக்கொள்ளும். நிகழ்கால விழிப்புணர்வால் தங்களது கடந்தகாலத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் இன்று எல்லோரும் அவரவர்களின் வரலாற்றினை உருவாக்கிக் கொள்கிறார்கள். தலித்துகள், பெண்கள், மலைவாசிகள், மற்ற பாதிக்கப்பட்டவர்கள் தம் மீது திணிக்கப்பட்ட ஒருதலைப்பட்ச வரலாற்றினை நிராகரிக்கிறார்கள். வரலாற்றுக்கும், புராணங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை, வித்தியாசங்களை ஆராய்கிறார்கள். கடந்தகாலத்தை மறுபரிசீலனை செய்கிறார்கள்.

தர்மத்தைக் காப்பதாக சொல்லிக்கொள்பவர்கள், புராணங்களை எடுத்துக்காட்டாக காண்பித்து தங்களுடைய சித்தாந்தங்களை நிலைநாட்டுவதற்கு முற்படுவார்கள். அதற்கு மாறாக புராண பாத்திரங்களின் போராட்டங்களை தம்முடைய கதைக்கருவாக அமைத்துக் கொண்டு, தம்முடைய குரல்களை ஒலிக்கச் செய்து கொண்டு இருப்பவர்களில் தலித் மற்றும் பெண்ணிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்னணியில் இருப்பது கவனிக்கத் தக்கது.

ஆண்கள் உருவாக்கிவரும் யுத்தங்களால், இம்சைகளால் முக்கியமாக பாதிக்கப்படுவது பெண்களும், நிலைகுலைந்து போகின்ற அவர்களுடைய வாழ்க்கையும்தான். இந்த உலகளாவிய நிலைமையை ஓல்கா தன்னுடைய ‘போரும் – அமைதியும்’ என்ற நாட்டிய நாடகத்தில் கருவாக எடுத்துக்கொண்டார்.. அதனுடைய தொடர்ச்சிதான் இந்த நான்கு கதைகள். நவீன வாழ்க்கையின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள புராணப் பாத்திரங்கள் உதவி செய்யும் என்று சொன்னால் சிறிது வியப்பாகவே இருக்கும். ஆனால் இதுதான் உண்மை. பாதிக்கப்பட்ட எல்லோரையும் போலவே காரண காரிய சம்பந்தங்களைத் தேடும் முயற்சி, ஆத்ம பரிசோதனை,

மனித உறவுகளைத் திரும்பவும் வரையறுப்பது, விழிப்புணர்வுடன் கூடிய செயல்பாடு …. இவை எல்லாம் புராணப் பெண் பாத்திரங்களின் போராட்டத்திலும், வளர்ச்சியிலும் நமக்கு தெளிவாகத் தென்படும்.

புராணப் பெண்களின் உலகத்தில் போருக்கான சூழ்நிலை குறைவாகவும், ஆத்ம சோதனை அதிகமாகவும் தென்படும், இம்சை, யுத்தம் மீது வெறுப்புடனும், இயற்கை மற்றும் ஜீவராசிகளிடம் அன்புடனும் புராணப் பெண் பாத்திரங்கள் நடத்தும் போராட்டம், ஆத்ம பரிசோதனை, புதிய விழிப்புணர்வு என விரிவடைந்தன. ஒருங்கிணைந்து செயல்படுவது சாத்தியம் அல்லாத கட்டத்தில், இந்தப் பெண்கள், மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற சமூகத்தினர் சித்தாந்த அளவில் வெற்றியை சாதித்தார்கள். இந்த பின்னணியில் பரிசீலித்தால் இந்தப் புத்தகத்தில் இருக்கும் நவீன புராணக் கதைகள், அதில் பெண் பாத்திரங்களின் போராட்டத்திலிருந்து மலர்ந்த விழிப்புணர்வு நமக்கு எளிதாகப் புரியும். புரியும்போதே சங்கடப்படுத்தும். கடந்த காலத்துக் கதைகள் எல்லாம் இந்நாளைய போராட்டங்களாக உருப்பெற்று நம்மிடையே புராண ‘உபன்யாசங்கள்’ இல்லாமல் செய்துவிடும்.*****

புராண புருஷர்கள் உருவாக்கிய யுத்தங்கள், வன்முறை, இம்சை… இவற்றிலிருந்து மீண்டு நிலைத்து நிற்பதற்கு பெண்கள் ஆழ்ந்த மனப்போராட்டதிற்கு உள்ளானார்கள் என்பதற்கும், இறுதியில் சித்தாந்த அளவில் வெற்றி பெற்றார்கள் என்பதற்கும் ‘சமாகமம்’ கதையில் சூர்ப்பனகையின் வார்த்தைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

‘மீண்டும் அழகை நேசிப்பதற்கும் ரூபம், அரூபத்தின் உண்மையான சாராம்சத்தை கண்டுகொள்வதற்கும் என்னுடன் நான் பெரிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அந்த யுத்தத்தில் எனக்குத் துணையாக இருந்தது இந்த எல்லையில்லா இயற்கை’ என்கிறாள் சூர்ப்பனகை. இதைக்கேட்டு தான் சந்தித்த அக்னிப்ரீட்சைக்கு சூர்ப்பனகை உள்ளான பரீட்சை குறைவானது இல்லை என்று சீதை நினைக்கும் போது – ஒரே ஆண்மகனுக்காகத் தவித்த இரு பெண்களுக்கு இடையில் இருக்க வேண்டிய பொறாமை கடுகளவும் இல்லாமல் போனதோடு உடன் காயப்பட்டோர்களிடம் துளிர்க்கும் நட்பும், பந்தமும் தென்படும். சீதை, சூர்ப்பனகைக்கு இடையில் பெண்ணிய சகோதரித்துவம் புலப்படவைப்பது ஒரு துணிகரச் செயல். ஆனால் அது இயல்பாக நிகழ்ந்த பரிணாமமாக, இயற்கையின் ஆசிகளுடன் முளைவிட்ட நட்பாக நமக்கு இந்தக் கதையில் காட்சி தருகிறது. ராஜ்ஜியத்திற்கும், கானகத்திற்கும் நடுவில் பயங்கரமான இடைவெளி, முரண்பாடு இருப்பதை சூர்ப்பனகை உணருகிறாள். ராஜ்ஜியத்திலிருந்து வேறுபட்டு கானகத்தை, இயற்கையை விரும்புவதில் சீதையும் சூர்ப்பனகையும் நெருங்கி விட்டார்கள். ராஜ்ஜியத்திற்கு அதிபதிகளான பிறகும் ஆரண்யத்தின் வழியை மறந்து போகவேண்டாமென்று லவகுசர்களை இறுதியில் எச்சரிக்கிறாள் பூமியின் புத்ரி.

‘அவரவரின் சத்தியம் அவரவருடையது’ என்று உணர்ந்த அகல்யா ‘சத்திய அசத்தியங்களை முடிவு செய்யும் சக்தி இந்த உலகத்தில் யாருக்காவது இருக்கிறதா?’ என்று கேள்வி கேட்கிறாள் மிருண்மயநாதம் என்ற கதையில். அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்து இருக்கும் வரையில் எது செய்தாலும் பிராயச்சித்தம், தீர்வு இருக்குமே தவிர அதிகாரத்தையே கேள்வி கேட்டாலோ, அதன் மூலங்களை ஆராய்ந்தாலோ யாரும் சகித்துக் கொள்ளமாட்டார்கள். அப்போதுதான் சர்ச்சை எழும். தன் அனுபவத்தில் சரி தவறுகளைப் போட்டு உடைத்தாற்போல் சொன்ன அகல்யா, ‘நான் கொடுக்காத வரையில் யாரும் என்மீது அதிகாரத்தைப் பெற முடியாது’ என்று தெளிவுபடுத்துகிறாள்.

‘விசாரணைக்கு சம்மதிக்காதே. அதிகாரத்திற்கு அடி பணியாதே’ என்று எதிர்காலத்தை அறிந்தவள்போல் சீதையை ஆசீர்வதிக்கிறாள். பத்தினித்துவத்திலும், தாய்மையிலும் தான் பெண்மையின் சிறப்பு என்பதை மீறி சத்தியத்தைத் தேடுவதற்கு முனைய வேண்டும் என்று பூமியின் மகளுக்கு அகல்யா அன்று செய்த அறிவுரையில் இன்றளவும் எதிரொலிக்கும் பூமியின் ஓசை மறைந்திருக்கிறது.. ‘இறுதியில் இவ்வுலகம் முழுவதும் என்னுடையதே’ என்று ஜானகி உணர்ந்து கொள்கிறாள். அவள் உலகம், கணவன், குழந்தைகள் என்று நின்றுவிடாமல் அற்புதமாக விரிவடைகிறது.

‘சைகத கும்பம்’ – பாதி அறுந்த தலையுடன், சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடிக்கொண்டு, மனதளவில் பெரும் வேதனைக்கு இலக்கான ரேணுகாவின் கதை. அவளுக்கு அதுவரையிலும் எல்லாமாக இருந்த கற்பும், தாய்மையும் ஒரே வெட்டில் சர்வ நாசமடைந்து விட்டன. ரேணுகாவின் மனதில் அடிப்படையான சில கேள்விகள் எழும்பின. சத்யம் (தர்மம் மாதிரி அல்லாமல்) அனுபவபூர்வமாகத் தெரியவரும் என்றும், எல்லோருடைய சத்தியமும் ஒன்று இல்லை என்றும், வாழ்க்கையின் அனுபவம் கூடக்கூட சத்தியம் மாறிக் கொண்டே வரும் என்றும் ரேணுகா தெரிந்து கொள்கிறாள். அதே விஷயத்தை அவள் சீதைக்கு சொல்கிறாள், இருந்தாலும் சொந்த அனுபவத்தில்தான் ரேணுகாவின் வார்த்தைகளின் உள்ளர்த்தத்தை சீதை முழுவதுமாக உணர்ந்து கொள்கிறாள்.

சீதை ராமனின் துணை இல்லாமலேயே லவ குசர்களை.வளர்த்தாள். பத்தினித்தன்மையின் மீதும், தாய்மையின் மீதும் சீதைக்கு எல்லா பிரமைகளும் நீங்கிவிட்டன. லவகுசர்கள் என்றைக்கு இருந்தாலும் க்ஷத்திரிய புத்திரர்கள்தான். ராஜ்ஜியத்தை ஆளுவதுதான் அவர்களுடைய லட்சியம். ரகு வம்சத்தின் முன்னேற்றம்தான் அவர்களுடைய தர்மம்.

அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் பாதிக்கப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தி இறுதியில் தாமே அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு என்னவாகும்? துரதிர்ஷ்டவசமாக அவர்களுடைய சுயரூபம், சுபாவம் மாறிப் போய்விடும். அதிகார தாகம், பாதுகாப்பின்மை, கொடுங்கோல் மற்றும் ஜனநாயகமற்ற போக்கு, ஊழல் … இவை எல்லாம் திரும்பவும் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த வகையில், உலகளவில் பெரும் மாற்றத்தை விரும்பும் சக்திகள் முழுவதுமாகத் தோல்வியுற்றன. இனி பெண்கள், பிற்படுத்தப்பட்ட வர்க்கத்தினர், மற்றவர்கள் இதற்கு மாற்று மதிப்பீடுகளை, செயல்பாடுகளை முன்மொழிவது சாத்தியமாகுமா? அல்லது வரலாறு உருவாக்கிய வளையத்தில் சிக்கிக் கொள்வார்களா? ஏமாற்றம் தரும் இந்த யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதிகாரத்தின் சுபாவத்தை, மனிதனின் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘விமுக்தா’ என்ற கதையில், சீதை, ராமனுடன் இலக்குமணன் சென்றுவிட்ட பிறகு, இடைவிடாமல் பதினான்கு வருடங்கள் செய்த சத்திய தேடுதலில், தவத்தில் ஊர்மிளாதேவி தெரிந்து கொண்ட மாபெரும் விஷயம் இதுதான். ‘அதிகாரத்தை எடுத்துக் கொள். அதிகாரத்தை விட்டுக்கொடு. அப்போது உனக்கு நீ சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சி இருப்பாய்’ என்று மிகவும் எளிமையான மொழியில் இந்த மாபெரும் உண்மையை சீதாப்பிராட்டியிடம் தெரியப்படுத்துகிறாள் ஊர்மிளா. ஆனால் (காந்தி மகான் ஒருவரைத் தவிர) அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்கு எவரும் தயாராக இருப்பதுபோல் தோன்றவில்லை. எது எப்படி இருந்தாலும் போராட்டத்திற்கு பிறகு உருவாகும் பரிணாமத்தை, அதிகாரத்தின் சுய ரூபத்தை விவரிக்கும் உயர்ந்த கதை இது.
***

ஓல்கா தன்னைப் பற்றி தான் ஒரு அரசியல் கதைசொல்லியாகத்தான் சொல்லிக்கொள்கிறார். அதனால் புராண பாத்திரங்களை ஏன் இப்படி வியாக்கியானம் செய்தாய்? வேறு விதமாக ஏன் எழுதவில்லை? என்று அவரைக் கேட்க நினைப்பதில் அர்த்தம் இல்லை. அவர் எந்த அரசியல் நோக்கத்துடன் இந்த முயற்சியைச் செய்தாரோ, அதனை பெருமளவிற்கு கலைத் திறனுடன், படைப்பாற்றலுடன் சாதித்து இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மார்க்ஸ் சொன்ன பொதுவான பிள்ளைப்பருவம், அதன்மூலமாக புராணங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு சக்தியின் பின்னால் – பிள்ளப்பருவத்திற்கு உண்டான எளிமை அப்பாவித்தனம் செயற்கையின்மை – இவையெல்லாம் இருக்கின்றன. ‘பிள்ளைப் பருவத்து அனுபவங்களை வேண்டியபோதேல்லாம் நினைவுப்படுத்திக் கொள்வதுதான் திறமை’ என்று சொன்னாராம் போதிலேர்.

நம்மிடையே இன்னும் வலிமையாக இருக்கும் நிலவுடைமையை சார்ந்த, ஜனநாயகமற்ற, முரண்பாடு நிறைந்த அமைப்பில், சமூக கதைகள் சரித்திரக் கதைகளாகவும், சரித்திரக் கதைகள் புராணக் கதைகளாகவும் சட்டென்று உருமாற்றம் கொண்டுவிடும். உயிருடன் இருக்கும் போதே சிலைகள், கோவில்கள் உருவாகும். ஆனால் இந்தப் போக்கினை, பிரவாகத்தை எதிர்த்திசையில் திருப்பி விடுவதற்கு படைப்பாற்றலுடன் துணிச்சலும் இருக்க வேண்டும். இவை இரண்டும் ஓல்கா செய்த, செய்து கொண்டுவரும் சோதனைகளில் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் கதைகள் படிக்கும் போது நமக்கு தர்மம் வேறு, நியாயம் வேறு என்பது தெளிவாகப் புரியும். நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்றும் புலப்படும். புராண புருஷர்கள் தர்மத்தின் பக்கம் நிற்பவர்களாக இருந்தால், அநியாயத்தை புராண யுகத்திலிருந்து இன்று வரையில் எதிர்த்து நிற்பவர்களாகத் தென்படுவார்கள் பெண்கள். சிக்கல்கள், போராட்டம், விழிப்புணர்வு, பரிசோதனை.. இவைதான் இதிஹாசத்தில் ஓல்கா கண்டுபிடித்த வெளிச்சத்து கோணங்கள். கேள்வி கேட்பது, அதிகாரத்திற்கு சவால் விடுவது, எதிர்த்து நிற்பது- இவை எதுவும் கூட மேற்கத்திய போக்குகள் அல்ல. பூர்ஷ்வாத்தனமும் அல்ல. புராணங்கள் அளவுக்குப் பழமையானவை. அதிகார பீடங்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தும் அளவுக்கு புதுமையானவை. எல்லோருக்கும் தெரிந்த கதைகளுடன் தொடங்கி, இருளில் சற்றுநேரம் உங்கள் கையைப்பற்றி, காட்டுக்குள் அழைத்துச் சென்று, அதற்கு பிறகு கொஞ்சம் வெளிச்சம் மங்கலாகத் தென்படும்போது உங்களை உங்கள் வழியில் விட்டுவிட்டு போய்விடுவார் ஓல்கா, ஜாக்கிரதை!

தெரிந்த விஷயங்களுடன் தொடங்கி, தெரியாத விஷயங்களை நோக்கி நாம் தத்தி தத்தி எடுத்துவைக்கும் அடிகளுக்கு கைகொடுக்கும் விதமாக எந்தக் கலைஞனாக இருந்தாலும் செய்யக் கூடியது அந்த அளவுதான். அவரவர் வழியை, சத்தியத்தை அவர்கள்தான் தேடிக்கொள்ள வேண்டும்.

புராணக் காப்பியங்களில் பெண்ணியத்தின் கோணங்களைத் தொட்டுப் பார்க்கும் இந்த முயற்சி, ஒல்கா செய்துவரும் நீண்ட ஆத்ம பரிசோதனையில் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. புராண காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் ஒரே சமூகமாக பார்க்கும் போக்கு இருந்திருக்கிறது. பெண்ணியம் தொடங்கிய முதல் கட்டத்தில் நடந்ததும் அதுதான். எல்லாப் பெண்களுடைய ஒருமித்த முழக்கத்தில் பல மாறுபட்ட குரல்கள் இருப்பதை இப்போது எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டு இருக்கிறார்கள். பெரிய சித்தாந்தங்களும், இறுதித் தீர்வுகளும் காலாவதியாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில்.. நவீன வாழ்க்கையின் சிக்கல்களை தாம் படைக்கவிருக்கும் அரசியல் கதைகளில், நாவல்களில் ஓல்கா போன்ற எழுத்தாளர்கள் எவ்விதமாகக் கையாளப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
நன்றி - புத்தகம் பேசுது

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்