/* up Facebook

Feb 28, 2016

பெண்களின் குரலை உலகம் கேட்க வேண்டும்: கலீசிய எழுத்தாளர் மரியா ரேமோந்தஸ் நேர்காணல்கலீசிய எழுத்தாளர் மரியா ரேமோந்தஸ் தேசியம், சமூகம், மொழி, பெண்ணியம் என்று பல தளங்களில் செயல்படுபவர். தமிழ்நாட்டின் சமகாலப் பெண் கவிஞர்களின் எழுத்துகளை இவர் கலீசிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தி இந்து ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கியத் திருவிழாவில் , ‘மாறும் தேசியக் கருத்தாக்கங்கள் - ஒரு பெண்ணியப் பார்வை’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் கலந்துகொண்டார். அவரிடம் பேசியதிலிருந்து...

உங்களைப் பற்றி...

நான் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். கடந்த 22 ஆண்டுகளாகப் பெண்ணிய அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். தென்னிந் தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், எத்தியோப்பியா போன்ற நாடுகளிலும் செயல்பட்டுவருகிறேன். இருபதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். கவிதைகள், நாவல்கள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள் எனப் பல தளங்களில் என் எழுத்துகள் இயங்கினாலும் ஒரு நாவலாசிரி யராக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதையே நான் விரும்புவேன்.

உங்கள் கவிதைத் தொகுப்பான ‘பிரெசண்டே கன்டினியோ’வைத் (Presente continuo) தமிழ்நாட்டுப் பயணத்துக்குப் பிறகு எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ஆமாம். 2013-ல் அதை எழுதினேன். இந்தக் கவிதை களில் சில பகுதிகளைத் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு வெள்ளைக்காரப் பெண் முற்றிலும் மாறுபட்ட பண்பாட்டுச் சூழலை எப்படி எதிர்கொள் கிறாள் என்பதை இந்தக் கவிதைகளில் பார்க்க முடியும். இந்தப் பயண அனுபவங்கள் என்னை எப்படி மையத்திலிருந்து விலகி யோசிக்க வைத்திருக்கின்றன என்பதைக் கவிதைகளாக்கியிருக்கிறேன்.

இங்கே இலக்கிய விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் அலெக்சாண்டர் மெக்கால் ஸ்மித்தின் உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருடைய பேச்சில், ஒரு வெள்ளை சமூகத்தைச் சேர்ந்த ஆணுடைய பார்வைகள்தான் அதிகமாக வெளிப்பட்டன. இவரைப் போன்றவர்களுக்கு ஒரு மேலாதிக்க அடையாளம் இருப்பதால், உலகின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிவதில்லை. இது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. இதைத்தான் நான் மையத்திலிருந்து விலகி யோசிப்பது என்று சொல்வேன். என்னுடைய கவிதைகள் இதைத்தான் பேசுகின்றன.

நான் ஒரு கலீசிய எழுத்தாளர். கலீசிய கலாசாரத்தைத் தீவிரமாக நம்புகிறேன். ஆனால், அதிலும் பல விஷயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ‘ஜாரா’ என்றொரு கலீசிய ஆடை நிறுவனம், உலகம் முழுவதும் அதற்குக் கிளைகள் இருக்கின்றன. இந்த நிறுவனம், பெண்களின் உழைப்பையும் குழந்தைகளுடைய உழைப்பையும் சுரண்டுகிறது. ஆனால், இந்த நிறுவனத்தைப் பொருளாதார வெற்றிக்கான முன்னு தாரணமாக கலீசியாவில் சொல்கிறார்கள். இதை என்னால் என் சமூகத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. மையத்திலிருந்து விலகி யோசிப்பது என்பதில் இதுவும் ஒன்று. என்னுடைய கவிதைத் தொகுப்பு இதைத்தான் பேசுகிறது.

சல்மா, குட்டி ரேவதி, தமிழச்சி ஆகியோரின் படைப்பு களை ஆங்கிலம் வழியே கலீசிய மொழியில் மொழிபெயர்த் திருக்கிறீர்கள். இதற்கு எந்த மாதிரி எதிர்வினை இருந்தது?

இந்த மொழிபெயர்ப்புகள் கலீசியப் பெண் கவிஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவர்கள் எல்லோருடைய எழுத்திலும் இருந்த தனித்தன்மை என்னை ஈர்த்தது. அவர்கள் மொழியைக் கையாண்டிருக்கும் விதம், பேசியிருக்கும் விஷயங்கள் என எல்லாமே தனித்தன்மையுடன் இருப்பது என்னை இயல்பாகவே அவர்கள் எழுத்துகளுடன் நெருக்கமாக உணரவைத்தது.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், சுசன்னா அரின்ஸ் (Sussana Arinz) என்ற கலீசியக் கவிஞர் சல்மாவையும், குட்டி ரேவதியையும் சந்தித்தார். அவர்களுடைய அனுபங்களைக் கேட்ட பிறகு, அவர் தன் கவிதைகளை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். சல்மாவின் நாவல் தமிழ்நாட்டின் கிராமத்தில் வாழும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றியது. கலீசியாவில் முற்றிலும் வேறுபட்ட சூழலாக இருந்தாலும், விமர்சகர்கள், வாசகர்கள் இரு தரப்புமே அந்தக் கதையை நெருக்கமாக உணர்ந்தார்கள்.

உங்கள் மொழிபெயர்ப்புகளின் நோக்கம் என்ன?

பல இடங்களில் பலவிதமான அனுபவங்களுடன் பெண்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதை எங்களுடைய கலீசிய சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். மேற்கத்திய நாடுகளில் இங்கேயிருக்கும் பெண்களைப் பற்றி ‘ஒரே மாதிரி’யான பிம்பம் இருக்கிறது. அதே மாதிரி, இங்கே மேற்கத்திய நாட்டுப் பெண்களைப் பற்றியும் ‘ஒரே மாதிரி’யான பிம்பம்தான் இருக்கிறது. இதை உடைப்பதற்கு என் மொழிபெயர்ப்பு உதவியது. எல்லாப் பெண்களின் குரலும் உலகத்துக்குக் கேட்க வேண்டும் என்பது என் விருப்பம்.

ஓர் எழுத்தாளராகப் பெண்ணியத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பெண்ணியத்துக்கென ஒன்றுபட்ட கோட்பாடு எதுவும் கிடையாது. உலகத்தை விமர்சனத்துடன் பார்ப்பதற்கு இதை ஒரு வழியாகச் சொல்லலாம். பெண்களின் அறிவை ஒப்புக்கொள்வதற்கான ஒரு வழி, ஓர் ஆற்றல், பிரச்சினைகளை ஒன்று சேர்ந்து தீர்ப்பதற்கான ஒரு மார்க்கம். என்னுடைய எழுத்தில், இந்த அம்சங்கள் முக்கியமாக இடம்பெற்றிருக்கின்றன. இதுவரை சொல்லப்படாத கதைகள், அசாதாரணமான கதாபாத்திரங்கள் போன்றவற்றையே நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

நான் பாலினம் தொடர்பான பிரச்சினைகளையும் எழுத்தில் பதிவுசெய்கிறேன். என்னுடைய படைப்புகளில் சில கதாபாத்திரங்கள் லெஸ்பியன்ஸ் அல்லது ஹீட்ரோசெக்சுவல் ஆக இருக்கிறார்கள். ஒரு இலக்கியம் சமூக, வர்க்க, ஆணாதிக்கக் கட்டளைகளைப் பின்பற்றும்போது, வித்தியாசமான பெண்களைப் படைப்புகளில் காண முடிவதில்லை. வித்தியாசமான பெண்களை உலகுக்கு அடையாளப்படுத்துவது பெண்ணிய எழுத்தின் கடமை என்று நினைக்கிறேன்.

கலீசிய மொழி, இலக்கியத்தின் தற்போதைய நிலைமை என்ன?

பதின்பருவத்தில் இருந்தே கலீசிய தேசியச் செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுவருகிறேன். கலீசிய மொழி பேசுபவர்களுக்கு அவர்களுடைய மொழி எதற்கும் உதவாது எனப் போதிக்கப்பட்டுவருகிறது. இந்தப் போதனையை ஸ்பெயின் அரசு, கலீசிய அரசு இரண்டும் சேர்ந்தே செய்துவருகின்றன. என் தந்தையின் காலத்தில் இருந்தே கலீசிய மொழி மீதான இந்த அடக்குமுறை தொடர்கிறது. அப்போது பள்ளிகளில் யாராவது கலீசிய மொழியில் பேசினால் தண்டிக்கப்படுவார்கள்.

கலீசிய மொழியில் எழுதியதற்காக சர்வாதிகார ஆட்சியில் பலரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 1939-லிருந்து 1950 வரை எழுதப்பட்ட கலீசிய புத்தகங்கள் எல்லாம் லத்தீன் அமெரிக்காவில்தான் வெளியிடப்பட்டன. சர்வாதிகாரம் 1975வரை நீடித்தது. 50களில்தான் அவர்கள் கலீசியப் புத்தகங்கள் வெளியிடுவதை அனுமதித்தார்கள். எங்கள் மொழி ஒரு ‘உதவாக்கரை’ மொழி என்பதைப் பாடமாகப் படிப்போம். சமூக அந்தஸ்துடன் வாழ்வதற்கு ஸ்பானிய மொழியைத்தான் பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம்.

கடந்த பத்து ஆண்டுகளாக கலீசியாவில் ஆட்சியில் இருப்பவர்கள், கலீசிய மொழியின்மீது பல விதங்களில் அடக்குமுறை செலுத்துகிறார்கள். இப்போதுகூட கலீசிய மொழிப் பள்ளிகள் கிடையாது. கலீசிய மொழியில் பேசுவதும், எழுதுவதும் இழுக்கு என எங்கள் கலாசார அமைச்சரே சமீபத்தில் பேசியிருந்தார். கலீசிய எழுத்தாளர்களுக்கு அரசின் எந்த விதமான ஆதரவும் கிடைக்காது. இந்தச் சூழ்நிலையிலும் கலீசிய இலக்கியம் வளர்ச்சியடைந்துவருகிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கலீசிய எழுத்தாளர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எங்கள் குழந்தை இலக்கியம் ஐரோப்பாவில் கவனிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வட கிழக்குப் பகுதியில் இருக்கும் தன்னாட்சிப் பிரதேசம் கலீசியா. இங்குள்ள மக்கள் கலீசிய மொழி பேசுபவர்கள். உலகம் முழுவதும் சுமார் முப்பது லட்சம் பேர் இந்த மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், ஸ்பெயின் ஆட்சிக்குட்பட்டிருப்பதால், கலீசிய மொழி தொடர்ந்து அடக்குமுறையைச் சந்தித்துவருகிறது. அடக்குமுறைகளை மீறித் தற்போது கலீசிய இலக்கியம் வளர்ந்துவருகிறது.

நன்றி - தி இந்து

...மேலும்

பொது வெளியில் பெண்கள் - உரையாடல் (காணொளி)


பொதுவெளியில் பெண்கள் என்கிற தலைப்பில் பகு பதம் உரையாடற் களம் பெப்ரவரி 14, 2016 அன்று கனடாவில் ஒழுங்குசெய்திருந்த நிகழ்வில் சுல்பிகா இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய ஆரம்ப உரையும்

"தமிழ் மொழியில் ஆண்மையவாதமும் பொதுமொழி பற்றிய உரையாடலும்"  என்கிற தலைப்பில் - நிரூபா ஆற்றிய உரையும் காணொளியாக இங்கு நன்றியுடன் பகிரப்படுகிறது.
...மேலும்

Feb 24, 2016

நீண்டு செல்லும் பட்டியல்


தற்போது பத்திரிகையை கையிலெடுத்தால் நாளாந்தம் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை என ஒன்றாவது வந்துவிடுகின்றன. வித்தியா, செயா. ஹரிஸ்ணவி ............என நீண்டு செல்லும் பட்டியலை என்ன சொல்வதென்று தெரியவில்லை 
இப்படியான கொடுமைகள் நடந்த பிறகு பெண்கள் அமைப்புகள் ஆர்பாட்டங்களை நடத்துவதும் கண்டனங்களை தொிவிப்பதும் அதற்கு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஆறுதல் கூறுவதும் நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதிகளை வழங்கிவிட்டு சென்றுவிடுவதும் தொடர் செயற்பாடாக போய்க்கொண்டிருக்கிறது.

அடுத்த சம்பவம் நடக்கும் வரை இந்த பேச்சு எல்லா தரப்பிலும் ஓய்ந்துவிடும் மறுபடி பெண்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்து மறுபடி கண்டனம் தெரிவித்துவிட்டு வழங்கும் மகஜர்களெல்லாம் குப்பைத்தொட்டிகளைத்தான் அலங்கரிக்கின்றன போலும்

இதற்கு மேலாக பிள்ளைகளை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்யும் கொடுரர்களை தண்டிக்க நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்ளும் காலமும் பிரச்சினையாகத்தான் உள்ளது காலந்தாழ்த்தப்பட்ட நீதி இவ்வாறான காமுகர்களுக்கு வாய்பாக மாறியுள்ளது எனலாம். இப்படியே தொடர்ந்து சென்றால் எமது சமூகத்தின் நிலைதான் என்ன?

பச்சிளம் குழந்தைகளென்றும் பாராமல் அவர்களை நாசப்படுத்துபவர்களை மனிதர்கள் என்று  கூறுதல் நியாயம் தானா? அப்படியானவர்களை விரைவாக தண்டிக்க ஏன் இவ்வளவு தாமதம் விசாரணை விசாரணை என்று காலம் நீடித்துச் செல்லாமல் இதற்காக விசேட பொறிமுறைகளை ஏற்படுத்தாத வரை இப்படியான சம்பவங்களுக்கு  முடிவு வரபோவதில்லை 

இது ஒரு பக்கம் இருக்க இப்படியான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் பெற்றோர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதை என்னவென்பது தமது பிள்ளைகளை கவணமின்றி விட்டு இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு ஆயிரம் காரணம் கூறியும் பயனென்ன எனவே பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறைகொள்ள வேண்டும்.

எமது இளம் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு  எமக்கு உண்டு என்பதை நாம் எவரும் மறந்துவிட முடியாது இனிவரும் காலங்களிலேனும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க யாவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

செல்வி. வினுசியா கமலேஸ்வரன்  
செயலாளர்
திருகோணமலை மாவட்ட 
பெண்கள் வலையமைப்பு

...மேலும்

Feb 18, 2016

நீங்கள் வலிமையான மனிதர்தான் அர்னாப். ஆனால் நீங்கள் இந்தியா அல்ல - சீமா முஸ்தஃபா

(மூத்த பெண் பத்திரிக்கையாளரான சீமா முஸ்தஃபா, அர்னாப் கோஸ்வாமிக்கு எழுதிய பகிரங்க கடிதம், தமிழில்:)


நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். ஏனென்றால், ஒரு தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் பத்திரிக்கையாளரென்றும் அவருக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும் என்று நீண்டகாலம் நான் நம்பியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களில் தொலைக்காட்சி ஊடகம் பெற்றிருக்கும் வலிமை எந்த அளவுக்கு உங்கள் மீது தாக்கம் செலுத்தியிருக்கின்றதென்றால், ஒவ்வொரு முறை திரையில் நீங்கல தோன்றும்போதும் உங்களை ஒரு பத்திரிக்கையாளாராக அல்லாமல் தேசத்தைக் காக்கவந்த தேவதூதனைப் போல்தான் முன்னிறுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அதீத சிந்தனையில் அன்று எந்தக் குடிமக்கள் வருகிறார்களோ அவர்களைப் பற்றிய மதிப்பீட்டில் இறங்கி, அவர்களுள் ஒருவரை தேசியவாதியாகவும், மற்றொருவரை தேசவிரோதியாகவும் அறிவிக்கிறீர்கள்.

இதுதான் ஒரு பத்திரிக்கையாளரின் வேலையா அர்னாப்? எனக்குத் தெரிந்த இதழியலில் அப்படி இல்லை? என்னை நம்புங்கள். நான் இதழியல் துறையின் அடிமட்டத்திலிருந்து மேல் வந்தவள். பீட் (beat) என்று பத்திரிக்கையாளருக்கு ஒதுக்கப்படும் துறைகள் எல்லாவற்றிலும் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் புத்திசாலித்தனமான பத்திரிக்கை ஆசிரியர்களுடனும் வேலை செய்திருக்கிறேன். எனக்கு என் கருத்தை எழுதும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் ஒரு குடிமகனின் தேசிய உணர்வைக் கேள்வி கேட்கும் உரிமை நிச்சயமாக இல்லை.

ஆனால் ஒவ்வொரு நாளும் இதைத்தான் செய்கிறீர்கள் அர்னாப். நீங்கள் போலீஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை நம்பி, அவற்றுக்கு நியாயம் கற்பித்து, நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் முன்னரே குற்றம்சாட்டப்பட்டவர்களைப் பிடித்து உலுக்கி ஒரு வினோதமான வகையைச் சேர்ந்ந தேசியத்தை உங்களுடைய விற்பனைக்குரிய சிறப்புத் தகுதியாக உருவாக்கி வைத்தூள்ளீர்கள். குற்றவாளி என்று நிரூபணம் வரும் வரையில் ஒருவர் குற்றமற்றவர்தான் என்று நம் சட்டம் சொல்வது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். பத்திரிக்கையாளராகிய நாம் ஒரு வழக்கின் விவரங்களை எழுதலாம். புலனாய்வினைப் பற்றிய கேள்விகளை எழுப்பலாம். ஆனால் ஒருவரின் தரப்பு வாதத்தை நீதிமன்றம் கேட்குமுன் அவரைச் சுட்டிகாட்டி குற்றவாளி என்று நாம் கூறும்போது எல்லா நெறிகளின் எல்லைகளயும் நாம் மீறிவிடுகிறோம். நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள் அர்னாப். ஏனென்றால் நீங்கள் இன்று வலிமையான மனிதர். ஒரு சிலரே உங்களை எதிர்த்து நிற்கும் துணிவுடன் இருக்கிறார்கள். 

ஏதோ நீங்கள் ஒரு ஜெட் போர்விமானத்தின் விமானி அறையில் அமர்ந்துகொண்டு பாகிஸ்தானியர் மீது குண்டுமாரி பொழிவதுபோல் அந்நாட்டிற்கு எதிரான போரை நடத்தும்போது உங்களின் தேசிய உணர்வு ஒரு புதிய உச்சத்தைத் தொடுகிறது. உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் விமானி அறையில் இல்லை. ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் படப்பிடிப்புத்தளத்தில்தான் கோட்டு, சூட்டு, டையுடன் அமர்ந்திருக்கிறீர்கள். போர் என்பது அசிங்கமானது. கொடூரமானது. அமைதி என்கிற நோக்கம்தான் நம்மை கட்டுப்படுத்துகிறது. போர்ப்படைகளுடன் இணைந்து செல்லும் பத்திரிக்கையாளர்கள் தவிர பிறருக்கு இதுதான் எழுதப்படாத உலகளாவிய விதி. போர்க்களத்திலிருந்து நாம் எழுதவேண்டிய துரதிருஷ்டமான நிலையில் இருக்குபோது நாம் கள விவரங்களைத்தான் எழுதவேண்டும். பாலிவுட் சினிமாவினைப் பற்றிய செய்திபோல் உணர்ச்சிமிகு எழுத்தாக இருக்கக்கூடாது. அனால் நாமே போரை நடத்தும்போது வன்முறையை நியாயப்படுத்துகிறோம் – அதற்கான தூண்டுதல் எதுவாயிருந்தாலும். இதைச் செய்யும்போது நாம் எழுதப்படாத அந்த விதியை நிச்சயம் மீறுகிறோம். நாம் பயிற்சிக்காலத்தில் இருக்கும் காலத்தில் களத்திற்குச் செல்லும்போது உங்களையும் என்னையும் விடப் பெரிய பத்திரிக்கை ஆசிரியர்கள் நமக்கு ஒரு எச்சரிக்கை கொடுப்பார்கள். மதக்கலவரம் நடக்கப்போகிறது என்று யூகித்து எழுதக்கூடாது, அப்படி எழுதினால் அது கலவரம் நடத்த இருப்பவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்து பெருந்துயரத்தில் முடிந்துவிடும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. ஒரு பத்திரிக்கையாளனுக்கு ஆன்மா இருந்தே ஆக வேண்டும். அர்னாப், ஆன்மா என்று இங்கு சொல்வதற்கு அடக்கமும், கருணையும் என்பதே பொருள். அப்படிப்பட்ட பத்திரிக்கையாளர்களின் பார்வையில் வன்முறை என்பது துயரமானது. உயிர்களை பலிவாங்குவது. வீடுகளைத் தகர்ப்பது. மனிதர்களை முடமாக்குவது. கொல்வது.
அது உங்களுக்குத் தெரியாது. இல்லை தெரியுமா? பார்வையாளர்களின் கண்கோளங்கள் என் திசைநோக்கி இருக்கும் வரை அல்லது என் முதலாளிகள் என்னை வேலையில் வைத்திருக்கும் வரை எனக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது என்று சொல்லவருகிறீர்களா?

எனக்கு உங்கள் ஷோவைப் பார்க்கப் பிடிக்காது. _ அதை செய்தி சார்ந்த நிகழ்ச்சி என்று நான் சொல்லாமல் இருப்பதற்கு என்னை மன்னிக்கவும். அதை ஒரு ரியாலிட்டி ஷோ போலத்தான் நடத்துகிறீர்கள் __ ஆனால் சிலர் அதைப் பார்க்கும்படி என்னிடம் சொன்னார்கள். பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி. அந்த நேரத்தில் நான் முற்றிலும் உறைந்துபோனேன். ஒரு இளைஞனை நீங்கள் கலவரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். அவன் மீது கோபத்தை உமிழ்ந்துகொண்டிருந்தீர்கள். அவனைப் பேசவிடாமல் ஒரு பயங்கரவாதி, தேசவிரோதி என்று குற்றம்சாட்டிக்கொண்டிருந்தீர்கள். அப்போது போலீஸ் கூறும் குற்றச்சாட்டுகள் என்னவானது என்பீர்கள். உங்கள் ஆதாரங்கள் எங்கே அர்னாப்? அந்த வீடியோவா? உண்மையாகவா? ஒரு மனிதனுக்கு தன்னைக் காத்துக்கொள்ள வாய்ப்புக்கொடுக்காமல், அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கே நடத்தாமல் அவனை உலுக்கி எடுத்துவிட்டால் போதுமா? 

இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானே? மக்கள் மன்றம், அரசியல் நிர்வாகம், நீதித்துறை என்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்று தூண்களுக்காகத்தான் நம் முன்னோர்கள் போராடினர். இதில் ஒரு குடிமகனை நீதித்துறை மட்டுமே குற்றவாளியென்றோ அல்லது குற்றமற்றவர் என்றோ முடிவுசெய்ய முடியும். அதுவரை உங்களைப்போன்ற சக்திவாய்ந்த பத்திரிக்கையாளர்கள் பொறுமை காக்கத்தான் வேண்டும். அவர்களே நீதிபதிகளாகவும், தூக்குக்கயிறை இழுப்பவர்களாகவும் மாறாமல், ஒரு வழக்கின் விவரங்களை மட்டுமே பேசவேண்டும். அல்லது, ஒழுக்கநெறிகளையும் சட்டத்தையும் சதியால் தகர்த்துவிட்டு, உங்கள் கதைகளுக்கு ஒவ்வாதவற்றை அனைத்தின் மீதும் ஏறி மிதிப்பதும் வலிமைக்குப் பொருளா?

முதலில் நீங்கள் அரசாங்கமும், போலீசும் பரப்பிய செய்திகளின் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரான கன்ஹையாவைத் துரத்திச் சென்றீர்கள். நீங்கள்தான் இந்தப் பிரச்சினைக்கு முதன்முதலாக எதிர்வினை ஆற்றியதாகக் கூறுகிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட மீக வீரியமாகவும் (மிகவும் பகுத்தறிவுப்பூர்வமாகவும்) இந்திய அரசியலமைப்புச்சட்டத்திற்கு ஆதரவாக கன்ஹையா ஆற்றிய உரையை ஏன் உங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பவில்லை? அப்படிச் செய்திருந்தால் நிலைமை கொஞ்சம் சீக்கிரமாகவே மட்டுபட்டிருக்கும். அவர் தேசவிரோதியா இல்லையா என்று ஏற்படுத்தப்பட்ட குழப்பச் சூழலை அந்தக் காட்சி உடைத்திருக்கும். அவர்க்கு நற்சான்றிதழ் வழங்குவதோ, அவர் மீது குற்றம் சாட்டுவதோ நம் வேலையில்லை. ஆனால் உண்மைகள் என்று நீங்கள் காட்டியவையுடன் (பெரும்பாலும் அவை போலீசும், பிற அமைப்புகளும் சப்ளை செய்தவை) கன்ஹையாவின் பேச்சினைக் காட்டும் வீடியோவையும் காட்டியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். 

அதற்குப்பிறகு உமர் காலித் என்கிற மாணவனைத் துரத்தினீர்கள். பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் சரியானவை என்பது யாருடைய வாதமுமல்ல. அதே நேரத்தில் அது இந்தியச் சட்டங்களின் படி தேசத்துரோகக் குற்றம் என்றும் சொல்லமுடியாது. நாம் பத்திரிக்கையாளர்கள் மட்டும்தானே அர்னாப். நாம் விவரங்களை வைத்து மட்டும்தானே பேசமுடியும். இந்திய சட்ட வல்லுனர்களான சோலி சோராப்ஜியும், ஃபாலி நாரிமனும் தேசத்துரோகக் குற்றம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்களாகிய நீங்களும் நானும் அவர்கள் எழுதியிருப்பதைப் படிக்கவேண்டும். நம் நாட்டின் சட்டங்களை மீண்டும் படித்து ஜேன்யூவில் என்ன குற்றம்தான் நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயலவேண்டும். யார் அதைச் செய்தார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டும். அல்லது பல்கலைகழகங்கள் மாணவர்கள் விவாதம் செய்வதையும், எதிர்கருத்துகளை வெளியிடுவதையும் ஊக்கப்படுத்தக்கூடாது என்பதுதான் நம் நிலைபாடா? அவர்கள் தேசியம் குறித்த கோணல் பார்வையாலும், வெறுப்பினை உமிழும் மொழியினாலும் முன்னிறுத்தப்படும் பழைமைவாதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக மட்டும்தான் இருக்க வேண்டுமா? நாம் எல்லோரும் ஒரு காலத்தில் மாணவர்களாகத்தான் இருந்தோம், ஆனால் இன்று கிடைத்திருக்கும் அதிகாரம் அந்த உண்மையை நாம் மறக்கச்செய்கிறது. 

மாணவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் பாட்டியால நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களைப் போன்றவர்கள் தாய்நாட்டின் மீது காட்டும் ஒருவிதமான நேசம் ஏன் விஷத்தை உமிழ்வதாகவும், வன்முறை நிறைந்ததாகவும் இருக்கிறது என்ற கேள்வியை எப்போதாவது எழுப்பியிர்க்கிறீர்களா? பாகிஸ்தானை விட ஜனநாயத்தன்மை கொண்டதாகவும், துடிப்பானதாகவும் இருக்கும் இந்தியாவில் விவாதம் செய்வதும், எதிர்கருத்தைக் கொண்டிருப்பதும் – அதுவும் இளம் மாணவர்கள் – எப்படி நாட்டிற்கு அபாயம் விளைவிக்கும். நீங்கள் தினமும் தேசத்திற்காகப் பேசுகிறீர்கள் என்பதை நான் அறிவேன் (தேசத்திற்காகப் பேசுவது என்பதே ஒரு பிரம்மைதான் என்பதையும் நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்) அப்படிப் பேசும் நீங்கள் இந்திய தேசியம் என்பதுதான் என்ன என்றும் கேட்க வேண்டும். இந்திய அரசியலைமப்புச் சட்டம் அதனை வரையறை செய்யவில்லை. ஆனால் அது வழங்கியிருக்கும் உரிமைகள், கோட்பாடுகளினால் வலுப்படுத்தப் பட்டிருக்கும் உள்ளுணர்விலும், பார்வையிலும் தேசியத்தை வைத்திருக்கிறது. ஆனால் அர்னாபிய நீங்களும், உங்களை வழிநடத்துபவர்களும் தேசியத்தை ஓர் ஒற்றைக்கலாலாகவும், இரும்புச்சட்டகத்துக்குள்ளும் குறுக்கி வைக்கப் பார்க்கிறீர்கள். அதனை பல கருத்துக்களும் உரிமைகளும், சமத்துவமும், நீதியும், அமைதியும் சங்கமித்து சுதந்திரமாகத் ததும்பும் கடலாகப் பார்ப்பதில்லை. நம் அரசியலமைப்புச் சட்டத்தைச் செதுக்கியவர்கள் அது அப்படித்தான் இருக்க வேண்டுமென்று விரும்பினார்கள். இந்த தேசத்தைக் காப்பவராகிய நீங்கள் இது என் கற்பனை என்று குற்றம்சாட்டுமுன் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன். தயவுசெய்து அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்குவதற்கான சபையில் நடந்த விவாதங்களையும், அம்பேத்கர், நேரு, காந்தி போன்றோரின் எழுத்துக்களையும் படியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பிரமிக்க வைக்கும் விஷயங்கள் அவை. அவற்றைப் படித்து விட்டபின், நீங்கள் பத்திரிக்கையாளராகிய எங்களைப்போலவே, ஒரு குடிமகனின் தேசிய உணர்வைக் கேள்விக்குள்ளாக்காமல் போகலாம். ஒரு மனிதனுக்கு ஆண், பெண் என்கிற உணர்வு எவ்வளவு இயற்கையானதோ அந்த அளவுக்கு இயற்கையானதுதான் இந்தியர்களின் தேசிய உணர்வும். ஒவ்வொரு ஆணையும் பார்த்து நாம் நீ ஒர் ஆணா என்று கேட்க வேண்டுமா?

யார் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தேசியவாதிகள், தேசத்துரோகிகள் என்கிற அடிப்படையில் மக்களைப் பிரித்து, இருதுருவங்களாக்க நினைப்பவர்களுக்குத்தான் நீங்கள் உதவிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் புதன்கிழைமையன்று தொலைக்காட்சியில் தோன்றினீர்கள் _ ஆம் சிறிது நேரம் பார்க்கலாம் என்று தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தேன் அன்று. ஊடகங்கள் போலித்தனமானவை என்று கத்திக்கொண்டிருந்தீர்கள். நான் உறைந்துபோய்விட்டேன். என்ன ஒரு நடிப்பாற்றல்! பிறகுதான் எனக்குப் புரிந்தது, நீங்கள் உங்கள் நிலைப்பாடை கொஞ்சம் மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது. இரண்டாவது நாளாக பத்திரிக்கையாளர்களைத் தாக்கி, கன்ஹையாவை அடித்து, ஒரு பயங்கரமான சூழலை நீதிமன்றத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை (அவர்களை குண்டர்கள் என்று அழைத்தீர்கள்) கடைசியாக கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள். நீதிமன்றத்திற்குள்ளும், வெளியிலும் இருப்பவர்களை கலவரப்படுத்த அனுமதித்தபின் எப்படி ஒரு நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்? இதையெல்லாம் ஓரத்தில் நின்று போலிஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. நீங்கள் யாருக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டிருக்கிறீர்களோ அந்த தேசம் முழுவதுமே இந்த வன்முறையைக் கண்டு கொதித்துப்போயிருந்த இருந்த சூழலில் நீங்களும் அதனை ஒரு பிரச்சினையாக எடுத்துப் பேச வேண்டியிருந்தது. அப்போதும் கூட உங்களின் வகையான தேசியம் துருத்திக் கொண்டிருந்தது.

ஜேன்யூ பிரச்சினையை இடதுசாரி, வலதுசாரி, இடதுசாரி தாராளவாதம் (நீங்கள் கேவலப்படுத்தி சொன்ன வார்த்தை) என்கிற முப்பட்டைக் கண்ணாடியின் வழியே பார்க்கின்றனர் சிலர் என்றீர்கள். போலிசாரையும், வழக்கறிஞர்களையும் விமர்சனம் செய்தீர்கள். ஆனால் உங்கள் தொலைக்காட்சித் திரையில் உங்களின் வகையிலான வினோதமான தேசியத்தைக் குறிக்கும் ஹாஷ்டாக் வாசகங்கள் மின்னிக்கொண்டிருந்தன: ‪#‎ஒரே‬ இந்தியா, ஒரே குரல்

#’தேசவிரோதப் பிரச்சாரத்தை நிறுத்து என்கிற வாசகங்கள்.
வேற்றுமைகள் நிறைந்த, பன்முகத்தன்மை வாய்ந்த அழகிய இந்த நாட்டை எப்படி ஒரே குரலுக்குள் அடைத்துவிட முடியும்? உண்மையிலேயே நீங்கள் சீரியசாகத்தான் பேசுகிறீர்களா? நீங்கள் என்றாவது உங்கள் ஸ்டுடியோவிலிருந்து வெளியெ வந்து நாட்டின் குறுக்கும் நெடுக்கும் சென்று வேறுபட்ட கருத்துக்களையும். டீக்கடைகளில் நடக்கும் விவாதங்களையும், துடிப்பான, உணர்ச்சிமிகு, சந்தடியான வாதங்களையும் கேட்டிருக்கிறீர்களா? இன்று எதிர்க்கட்சிகள் பாசிஸம் என்று கூறும் கருத்தாக்கத்திற்கும், பிரச்சாரத்திற்கும் ஊட்டமளிக்கும் வேலையைத்தானே உங்களுடைய ஹாஷ்டாக் வாசகங்கள் செய்கின்றன? அரசாங்கத்திற்கு ஆதரவு, அது சொல்வது மட்டுமே ஏற்கத்தக்கது என்ற புள்ளியைச் சுற்றிக் கட்டப்படும் ஒரே கருத்து, ஒரே சிந்தனை என்கிற கோஷம்தான் பாசிஸம். எந்த நாடாயினும் இத்தகைய சிந்தனை ஆபத்தானது என்பதை இன்றைய நிகழ்வுகளும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? 

நீங்களும், உங்களுடைய ஹாஷ்டாகுகளும், வன்முறையில் இறங்கிய பிஜேபி எம்எல்ஏ ஓ.பி. ஷர்மாவும், வழக்கறிஞர்களும் தேசவிரோதப் பிரச்சாரம் என்று தொடர்ந்து கூறி வருவதும் பெரும் அபாயம்தான். இப்படிப் பேசித்தான் வழக்கறிஞர்கள் வன்முறையில் இறங்கினார்கள். தேசத்தையும் அரசாங்கத்தையும் ஒன்றாகப் பார்க்கும் பழைய தவறைத்தானே செய்கிறீர்கள்? அரசியல் சார்ந்த அரசாங்கங்கள் சிறியவை. விமர்சனத்தையும், எதிர்க்கருத்தையும் தாங்கும் சக்தியற்றவை. ஆனால் இந்தியா என்கிற நாடு மிகப்பெரியது. பரந்த மனதுடையது. விவாதங்களையும், வேற்றுமைகளையும் நேசிப்பது. அது விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும் தாங்கும் சக்தி கொண்டது. இந்திரா காந்தி அவசர நிலையை அமுல்படுத்தினார். அப்போது காங்கிரஸ் தலைவராயிருந்த பரூவா இந்தியாவே இந்திரா; இந்திராவே இந்தியா என்றார். அது அப்படித்தானா? இந்தியா என்பது ஒரு அரசியல்வாதியான இந்திராவுக்கு மேலானது. அரசாங்கங்கள் பாதுகாப்பற்று உணரும்போதுதான் இப்படிப்பட்ட வாய்ப்பாடுகளை முன்னிறுத்துகின்றன. அப்படி நடக்கும்போது உங்கள் ஸ்டுடியோவில் எச்சரிக்கை மணி ஒலிக்க வேண்டும் ஒப்புதல் மணி அல்ல.

நண்பரே, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய பத்திரிக்கையாளாராக இருந்தாலும், உங்களுடைய சானல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உங்களிடம் எத்தனை கேமராக்கள் இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் தேசத்தின் சார்பாகப் பேசமுடியாது. எப்படி இந்தியா உங்களுக்காகப் பேச முயற்சிகூட செய்ய முடியாதோ, அது போல!. ஆனால் நீங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையிலும், அரசியலமைப்புச் சட்டத்திலும், அதன் ஏழைகளின் நலனிலும், விளிம்புநிலை மக்களின் நலனிலும், சுதந்திரங்கள் மீதும், உரிமைகள் மீதும் இந்நாட்டிற்கு இருக்கும் ஆழமான அன்பிலும் காலூன்றி நேர்மையான, வீரமிக்க இதழியலை நடத்தும்போது இந்தியாவை வலுப்படுத்த முடியும்.

முகநூலிலிருந்து நன்றியுடன் பகிரப்படுகிறது
...மேலும்

Feb 17, 2016

மூன்றாம் பாலின் முகம் (ஆய்வுக்கட்டுரை) ஒரு பார்வை

                            

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு திருநங்கை தனதும் தன்னை சார்ந்த திருநங்கைகளின் வலியையும்,வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக துணிவோடு வெளிப்படுத்தியிருக்கிறார். திருநங்கைகளின் வலிகளைகளையும் அவர்களின் இருத்தலுக்கான போராட்டங்களையும்,மனவுளைச்சலையும் தன்னை போன்ற இன்னொரு திருநங்கையே புரிந்துக்கொள்ள முடியும் என அடிக்கடி இவர் சுட்டிக்காட்டுவதில் நியாயமிருக்கிறது. ஏனெனில் இவர்களுக்கான அங்கீகாரத்தையும், அடைக்கலத்தையும் இவர்களை தவிர வேறெவரும் இவர்களுக்கு இலகுவில் கொடுத்துவிட முன் வரப்போவதில்லை.

இலக்கிய தளத்தில் இந்நூல் பேசப்படுவதற்கான காரணம் தன்னுணர்வுகளோடு தமக்கான உரிமைகளை வென்று விட குரல் கொடுத்திருப்பது ஈழநிலா என்ற திருநங்கை என்பதால் தான். மூன்றாம் பாலினத்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்,சமூக பார்வையில் அவர்களின் நிலைப்பாடு,உணர்வுகளோடு மல்லுக்கட்டும் அவர்களது தவிப்பு,ஏக்கம்,காதல் என அத்தனை விடயங்களையும் அணுகி அலசியிருக்கிறார் ஈழநிலா.

அத்தோடு தென்னிந்திய சினிமாக்களில் இவர்களை கொச்சைப்படுத்தும் மனநிலை மாற வேண்டுமென்பது அனைத்து திருநங்கைகளின் சார்பாக இவர் வைக்கும் கோரிக்கையாகவும் இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள் "மூன்றாம்பாலின் முகம்" என்ற இந்த ஆய்வுக்கட்டுரை நூலை நிச்சயம் வாசிக்க வேண்டும்.இது பேசப்படாத பொருள்.நிச்சயம் பேச வேண்டிய விடயம்.

நன்றி - பதுளை அருள் முகநூலிலிருந்து
...மேலும்

Feb 6, 2016

உயிரைக்குடிக்கும் பெண் உறுப்பு சிதைவு சடங்கு... இன்றும் தொடரும் கொடூர வழக்கம்!“ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன்” என்ற கொடுமைக்கு எதிரான நாளாக பிப்ரவரி-6 -ம் தேதியை ஐ.நா அறிவித்துள்ளது. ஃபீமேல் ஜெனிட்டல் மியுட்டிலேசன் என்றால் புரியாதவர்களுக்கு தமிழில் விளக்கம் 'பெண் உறுப்பு சிதைவு'.

படிக்கும் பொழுதே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த கொடிய செயல்,  ஆப்ரிக்க நாடுகளில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இன்று வரை வலுக்கட்டாயமாக நடத்துப்பட்டுவரும் ஒரு புனித சடங்கு என்றால் நம்ப சங்கடமாகத்தான் இருக்கும்.

3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து,  இன்றும் மம்மி களாக பிரமிடுகளுக்குள் இருக்கும் பெண்களுக்கும் இந்த கொடுமை நடந்தேறியுள்ளது. ஆப்ரிக்கா நாடுகளான சோமாலியா, சூடான், எகிப்து, உகாண்டா, கானா, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் பெண்களில், எழுபது சதவீதத்திற்கும் மேல் இப்படி பெண் உறுப்பு சிதைவுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவல். அதன் எதிரொலியாகத்தான் ஐ.நா சபை, பெண் உறுப்பு சிதைவிற்கு எதிரான நாளாக பிப்ரவரி-6ம் தேதியை அறிவித்துள்ளது. கிறிஸ்துவ சமயத்தின் துவக்கத்திற்கு முன்பே, இஸ்லாமிய மதம் ஆப்ரிக்காவை அடைவதற்கு பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே,  இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஏன்? 

பெண் உறுப்பு சிதைவு என்று இன்றைய உலகம் இதற்கு பெயர் சூட்டி இருந்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட இந்த சடங்கிற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் பெண் சுன்னத். அதாவது இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு சுன்னத் என்பது கட்டாயம். அதேபோல் பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு பெயர்தான் பெண் சுன்னத். இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு மட்டும்தான் சுன்னத் உள்ளதென அதன் மதகுருமார்கள் அறிவித்தாலும், ஆப்ரிக்க நாடுகளில் அதிகமாக இந்த வழக்கத்தை பின்பற்றுவதும் அதே இஸ்லாமிய சமூகம்தான்.

“பெண்கள் சைத்தானின் வடிவங்கள் என்று புனித நுால்கள் சொல்லியுள்ளது. அவர்களுக்கு பாலுணர்வு மட்டுமே இருக்கும். அந்த பாலுணர்வை கட்டுப்படுத்தி அவர்களை ஒழுக்கமான பெண்ணாக இருக்கச் செய்யத்தான் இந்த செயல்” என்று அர்த்தமற்ற விளக்கத்தை அதற்கு காரணமாக அவர்கள் சொல்கிறார்கள்.
எதற்கு?

இந்த பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது இதற்கு எழுதப்படாத விதி. அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை  பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள். பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது.

எப்படி?

அறுப்பது என்றால் முறையாக மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்து அல்ல; விளையாடி கொண்டிருக்கும் சிறுமியை சாப்பிட அழைப்பது போல் “இங்கே வா”  என்று அழைத்து,   நடக்கப் போகும் கொடுமையை அந்த சிறுமி பார்க்க கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் கண்ணை பொத்தி,  அவளை இருட்டு உலகிற்கு  கொண்டு சென்று,  அதன் பின் சிறுமியின்  கதறலோடு இந்த பாதக செயலை செய்கின்றனர். சாதாரணமாக சவரம் செய்யும் பிளேடுதான் இந்த ஆபரேசனுக்கு பயன்படுத்தப்படுகிறது.

க்ளிட்டோரியஸ் என்ற மேல் தோலை,  ஆட்டை அறுப்பது போல் அறுத்து வீசிவிடுவது இதன் முதல் படி. அதற்கு அடுத்தது “லேபியா பிளாஸ்டர்” என்று சொல்லப்படும் பெண்ணுறுப்பு உதட்டுப் பகுதியை அறுத்து எடுத்து,  அதன் பின் “வெஜைனா பிளாஸ்டி” என்று சொல்லபடும் பெண்ணுறுப்பை சிறு துளை மட்டும் விட்டு, துணி தைக்கும் நூலால் தைப்பது என்ற மூன்று நிலைகளில் இது செய்யப்படுகிறது. அறுப்பது முதல் தைப்பது வரை இத்தனை விஷயங்களையும் அரங்கேற்றுவது ஒரு மருத்துவர் அல்ல; அந்த ஊரில் இதற்கென 'வாழ்ந்துகொண்டிருக்கும்' பெரிசுகள் அல்லது அந்த  சிறுமியின் தாய். இந்த சடங்கை சங்கடம் இல்லாமல் செய்து முடிக்கின்றார்கள்.

அனைத்தும்  முடிந்த பின்,  அந்த பெண்ணின் கால்களை அகட்ட முடியாத அளவிற்கு கட்டிப் படுக்க வைத்துவிடுவார்கள். நாற்பது நாட்கள் கழித்தால்தான் அந்த புண் ஆறும் என்பது அவர்கள் கணக்கு. புனித சடங்கு முடித்த உற்சாகத்தில்,  வழிந்தோடிய குருதி படிவை தண்ணீரால் கழுவி விட்டு, அந்த வீட்டில் சடங்கு  விருந்து நடத்தும் நிகழ்வு இன்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் கிராமங்களில் நடந்து வருகின்றன. இந்த பாதக செயலை செய்தால்தான், அந்த பெண்ணின் உடலில் உள்ள துர்நாற்றம் போய் அவளுடைய மேனி அழகு பெற்று, திருமணம் செய்யும் பொழுது பாலுணர்வு அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

தைக்கப்பட்ட நுாலை அந்த பெண் திருமணம் செய்த பின் அவளின் கணவன் அறுத்தால்தான் அந்த பெண்ணின் கன்னித்தன்மைக்கு தரப்படும் சான்று. ஆனால் சில நாடுகளில் க்ளிட்டோரியஸை அறுப்பதோடு நிறுத்திவிடுகின்றனர்.

இன்றைய நிலை..!  

மதச்சடங்கு என்ற பெயரில் காலங்காலங்கமாக இந்த கொடுமை நடந்தேறி வந்தாலும், இது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் உலக அளவில் ஏற்படாமல் இருந்து வந்த நிலையில்,  சில ஆண்டுகளுக்கு முன் எகி்ப்தில் இந்த கொடூர சடங்கிற்கு ஆளான பெண் மரணம் அடைந்து, அது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்க,  அதன் பின் அந்த நாட்டில் இந்த சடங்கிற்கு தடை செய்யப்பட்டது. ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில்,  ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் “இது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டும். அந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேலான பெண்களுக்கு பெண் உறுப்பு சிதைவு நடந்தேறும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கும் இதற்கு தடை வந்து விட்டது.

ஐ.நா ஒப்புக்கொண்ட உண்மை

ஐ.நா.  சபை  பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில்,  ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்த பெண் சிதைவுக்கு உட்பட்ட பெண்களை வைத்தே பல பிரச்சாரங்களை தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றன. இந்த பெண்சிதைவுக்கு ஆளானவர்கள் சுமார் 20 கோடிக்கும் அதிகமாக இருப்பார்கள் என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. நாடாளும் சக்தியாக பெண்கள் உருவாகி வரும் இந்தநாளில்,  இன்றும் எங்கோ ஒரு சிறுமிக்கு பெண் உறுப்பு சிதைவு நடைபெற்றுவருவது வேதனைக்குரிய முரண்.

நன்றி - விகடன்
...மேலும்

Feb 2, 2016

சுமதி பாலராமின் 'நியோகா' திரைப்படம்


ஈழத்தின் யுத்தம் புலம்பெயர்ந்த பின்னரும் எவ்வாறு ஈழத்தமிழர்களின் வாழ்வில் தொடருகின்றது என்பதனையும், பிரத்தியேகமாக பெண்களின் வாழ்வில் அது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகின்றது, என்பதைத் தனது முதல் முழுநீளத் திரைப்படமான 'நியோகா' வில் இயக்குனரும், எழுத்தாளருமான சுமதி பாலராம் அவர்கள் தந்திருக்கின்றார்கள்.

சுமதி பாலராம், பல சிறுகதைகளையும், கவிதைகளையும், மேடைநாடகங்களையும் எழுதியிருக்கின்றார், பல குறுந்திரைப்படங்களையும் எழுதிய இயக்கியிருக்கின்றார். 'நியோகா' அவரது முதல் முழுநீளத்திரைப்படமாகும். இத்திரைப்படம் இதுவரை 'யாழ்ப்பாண உலகத்திரைப்படவிழாவிலும், “Woman up Independent “திரைப்படவிழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்படவிழாவிலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. சுமதி கனேடியத் தமிழ் திரைப்பட உலகின் முழுநீளத் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள முதலாவது பெண் இயக்குனர் ஆவார். இவரது படைப்புக்கள் புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும். 'நியோகா' திரைப்படமும் புலம்பெயர்ந்து வாழும் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி அமைந்திருக்கின்றது என்கின்றார் அவர். இதுவரை காலமும் பெண்களின் பிரச்சனைகளை ஆண் இயக்குனர்கள் தங்கள் பார்வையில் திரையில் கொண்டுவந்துள்ளார்கள், அதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஒரு பெண்ணால்தான் பெண்ணின் அக உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது இவர்வாதம். ஆண்களால் உருவாக்கப்பட்ட எமது கலாச்சாரம், பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை கொடுக்கின்றது,  ஆண் இயக்குனர்களும் அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு பெண்களை அதற்கேற்ப வடிவமைக்கின்றார்கள். இந்த நிலை மாறவேண்டும். 'நியோகா' திரைப்படம் ஒரு பெண்ணின் குரலாக, பெண்ணின் அகஉணர்வை சொல்லி நிற்கும் திரைப்படம் என்கின்றார் சுமதி.  'நியோகா' திரைப்படம் 2016இல் ஏப்ரல் மாதம் 2ம் திகதி ரொரொன்றோவில் திரையிடப்பட உள்ளது.

...மேலும்

Feb 1, 2016

பிப்ரவரி 1: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை நினைவு தின சிறப்பு பகிர்வுஅப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.

நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.

தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !

முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .

https://www.youtube.com/watch?v=y9MINdxTQsk  

கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் உதிர்ந்த தினம் இன்று.

நன்றி  விகடன்
...மேலும்

'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா!


''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார விவாதத்தில் உருவான ஸ்டார்..! 

’’அச்சச்சோ பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’


அந்த ஷோவில் என்ன நடந்துச்சு... முழுசா சொல்லுங்க?

’’என் ப்ரோ மாலினி ஜீவரத்தினம், ஷோவுக்கு முதல் நாள்தான் ’நீயா நானா’வில் கலந்துக்கணும்னு வரச் சொன்னாங்க. அதனால அவசரமா கிளம்பிப் போனேன். அங்கு போனதுல இருந்தே என்னை எல்லாரும் ஒரு மாதிரிதான் பார்த்துட்டு இருந்தாங்க. என் ஹேர் ஸ்டைல், டிரெஸ்லாம் சிலருக்கு உறுத்திருக்கலாம் போல. நான் நடுவுல உட்கார்ந்திருந்தேன். அதனால எதிர்ல யார் பேசினாலும் கவனிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிச்சதுல இருந்தே கடுப்பாக இருந்துச்சு. பாய்ஸுக்கு என்ன பாட்டு வேணும்னு கேட்டதுக்கு ’இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சி போச்சுடா’னு சொல்றதுல இருந்து,  பெண்கள் மீது வார்த்தை தாக்குதல் மேற்கொள்ளும் பாடல்களையே சொல்லிட்டு இருந்தாங்க. ’கிளப்புள மப்புல...’ பாட்டை யார் பாடினாலும் எனக்குப் பிடிக்காது.

ஒருவர் அந்தப் பாட்டை ஃபீல் பண்ணி பாடினார். அதுதான் கோபத்தை தூண்டி விட்ருச்சு.  அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும். ’பெண்கள் ஏன் காஞ்சிப்பட்டை கட்டாமல் கர்ச்சீப் கட்டுகிறார்கள்’னு ஒரு வரி. நான் கேக்குறேன்... அந்தப் பாட்டை பாடி ஆடுன ஹிப்ஹாப் ஆதி என்ன வேட்டி கட்டிட்டா ஆடுனார்?  தமிழ்நாட்டுல கிட்டதட்ட 90 சதவிகித யங்ஸ்டர்ஸ் எங்கே வேட்டி கட்டுறாங்க? ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் சுத்துறாங்க. அதைப் பத்திலாம் ஏன் யாரும் சமூக அக்கறையோட கேள்வி கேட்கலை. இந்தக் கோபத்தைதான் அன்னைக்கு ஷோவில் காமிச்சேன்!”

வேட்டி, சேலை விஷயத்தில் நீங்க சொல்றது சரி. ஆனா, ஆண்கள் மது அருந்தினால் பெண்களும் அருந்தணுங்றது கட்டாயமா?

’’ஆண்கள் குடிக்கிறதால நானும் குடிப்பேன்னு சொல்லலை. ஆண்கள் சோறு சாப்பிடுறாங்க... அதனாலதான் பெண்களும் சோறு சாப்பிடுறாங்கனு சொல்ற மாதிரி எதையும் பொதுப்படையா பார்க்க முடியாதுதான். ஆனா, பெண்களுக்கும் ஆண்களுக்கு இருக்கும் அதே வலி, வேதனை உணர்வுகளுடன் இருக்கும் உடல் அமைப்புதான். அவங்களும்  மனுஷிதான். ஒரு பெண்ணுக்குத் தோணும்போது குடிக்கலாம்ங்றதுல எந்தத் தப்பும் இல்லைங்றதுதான் என் பார்வை. அதே சமயம் அது ஒவ்வொருவர் தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது. ஒரு பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்துறது எவ்வளவு தப்போ, அதே அளவு தப்புதான் மது அருந்தும் ஒரு பெண்ணை விமர்சிப்பதும். 

மது குடிப்பதும், புகை பிடிப்பதும் உடல் நிலைக்குக் கேடுனு எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய மாட்டேன். ஆனா, அதே சமயம் ஆண்கள் மது அருந்தினால் அது சமூக வெளியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் பெண்கள் குடிப்பதைப் பற்றி பேசினாலே ’குய்யோ முய்யோ’னு கத்துறதும் சமூகத்தின் இறுகிய ஆணாதிக்கச் சிந்தனையைதான் வெளிப்படுத்துது. அது மட்டுமில்லாமல், இங்கே ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் பெண்களுக்கு கல்வி நிலையங்களின் ஆதரவு இருக்குனு அபத்தமா பேசினாங்க. அதுதான் எனக்கும் புரியலை. இது எவ்வளவு பெரிய பொய்? பெண்களுக்கு எப்போ எந்த கல்வி நிலையத்தின் ஆதரவு கிடைச்சிருக்கு. கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்கிற அடக்குமுறை அவளோட தோழிக்கே தெரியாது. பொதுவெளியில் பெண்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பாங்கனு நம்புறது மூடநம்பிக்கை. என் விஷயத்துலயே என்னலாம் நடந்துச்சுனு பார்த்தீங்கள்ல!’’

ஆமா... மீம்ஸ், கமெண்ட்னு வரம்பு மீறி விமர்சிச்சாங்களே... அதையெல்லாம் எப்படி எடுத்துக்கிட்டீங்க?

’’அதெல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, கண்டுக்கலை. பல மீம்கள் மிக மோசமா இருந்துச்சு.  சில ஃபேஸ்புக் பேஜ், வீடியோக்களை என் அக்கா புகார் கொடுத்து எடுக்க வைச்சாங்க. பல பின்னூட்டங்களில் என்னை நான்கு பேர் சேர்ந்து வலுக்கட்டாய உடலுறவு கொள்ளணும்னுலாம் எழுதியிருந்தாங்க. அவங்களை நினைச்சு பரிதாபமாத்தான் இருந்துச்சு. ஒரு பொண்ணை பழி வாங்க பாலியல் வன்புணர்வு பண்ணணும்னு நினைக்கிற உளவியலில் இருந்து பெண்கள் உடல் மீதான அடக்குமுறை தொடங்குது. உடலுறவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவங்ககிட்ட என்ன பேசி என்ன ஆகப் போகுதுனுதான் தோணுது. ஒரு நடிகைக்கு விருது தரப்படும்போது, அவரது நடிப்பைப் பற்றி விமர்சிக்காமல், அவரது அழகை விமர்சிப்பவர்கள் பலர். அதன் மூலம் அவர்களின் மன வக்கிரத்தையே நாம் புரிந்து கொள்ள முடியும். என்னைப் பத்தின  பின்னூட்டங்களும் மீம்ஸ்களும் அவங்களைப் பத்தி நிறைய உணர்த்தியிருக்கு. நேர்ல பேசுறப்போ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு வக்கிரமா பேசுறவங்ககிட்ட நான் ஏன் மல்லுக்கட்டணும். இவங்களுக்கு நடுவுல சில நல்ல மீம்ஸ்களும் பாராட்டுகளும் எனக்குக் கிடைச்சது. அதுதான் பெரிய சந்தோஷம்!’’

அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்களின் ரியாக் ஷன் என்ன?

’’அம்மா, அப்பா, இருவரின் நண்பர்களும் ‘நல்லா நறுக்குனு கேட்டம்மா’னு பாராட்டினாங்க. ‘ஒரு பையன் மாதிரி வளர்த்துட்டோம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, உன்னை ஒடுக்கும் சமூகத்துக்கு எதிரா நீ கேள்வி கேட்டப்ப, உன்னை சரியாதான் வளர்த்திருக்கேன் தோணுது’னு பூரிப்பா சொன்னார். மத்தபடி ஃப்ரெண்ட்ஸ்லாம் வாழ்த்தினாங்க. அவங்களுக்கு நான் இப்படி பேசுறதுலாம் புதுசு இல்லை. நான் எப்பவும் அவங்ககிட்ட பேசுறதை டி.வில பேசியிருக்கேன்... அவ்வளவுதான். ஆனா, நிகழ்ச்சி ஒளிபரப்பானதுல இருந்து குவியும் வாழ்த்துக்கள், திட்டுக்களால் ஓவர்நைட்டில் எனக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துட்டாங்க. எங்கெல்லாமோ இருந்து வேலைக்கான அழைப்பு வருது. தேங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்!”’

- ரமணி மோகனகிருஷ்ணன்

(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி - விகடன்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்