/* up Facebook

Jan 8, 2016

பெண் எழுத்து: வலியை வென்ற வலிமை - காளிங்கராயன்


உலகப் புகழ்பெற்ற கவிஞர் மாயா ஏஞ்சலோவின் தன்வரலாற்றுப் புனைவு என்று பலராலும் பாராட்டப்பட்ட புத்தகம், ‘கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது?’. அறியாமை சூழ்ந்த கருப்பினச் சிறுமியொருத்தி, எழுத்தையே தன் அடையாளமாக்கிய கதையைச் சொல்கிறார் மாயா.

மணவிலக்குப் பெற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் நான்கு வயது மாயாவும் அவளைவிட ஒரு வயது பெரியவனான அண்ணன் பெய்லியும். அவர்கள் கலிபோர்னியாவிலிருந்து தென்அமெரிக்காவின் ஆர்கான்ஸாஸ் மாகாணத்தின் ஸ்டாம்ப்ஸ் நகருக்கு ரயிலில் பயணமாவதுடன் தொடங்குகின்றன மாயாவின் நினைவுக் குறிப்புகள். இருவரும் ஸ்டாம்ப்ஸ் நகரில் அவர்களுடைய தந்தைவழிப் பாட்டியான ஆனி ஹெண்டர்சனிடம் வந்தடைகிறார்கள். பாட்டியின் அன்பில், அரவணைப்பில், பிரார்த்தனையில் கட்டுப்பாடுகளுடனும் சுதந்திரத்துடனும் வளர்கிறார்கள். பாட்டி ஆனி, பல்பொருள் அங்காடி நடத்திவருகிறார். சுற்றியிருக்கும் பருத்திக் காடுகளில் பணியாற்றும் கடும் உழைப்பாளிகளான கருப்பினத் தொழிலாளர்களின் தேவைகளைத் தீர்த்துவைக்கிறது அந்தக் கடை. பல வேளைகளில் கடனுக்கு. அது வெறும் கடை மட்டுமல்லாமல் அப்பகுதியின் அனைத்து மக்களுக்குமான நல்லதொரு கூடுமிடமாகவும் விளங்குகிறது. வார இறுதியின் மாலை வேளைகளில் எளிய நாடோடிக் கலைஞர்கள் உண்டு, பாடி, ஆடிக் களித்திடும் கொண்டாட்ட மையமாக அது உருமாற்றம் கொள்கிறது.

ஸ்டாம்ப்ஸ் எனும் அந்தச் சிறுநகரில் தமது பாட்டி, மாற்றுத் திறனாளியான சித்தப்பா மற்றும் அண்ணன் பெய்லியுடன் வாழ்ந்துவரும் மார்கரெட் எனும் மாயா பல்வேறு தருணங்களில் வெள்ளைக்காரர்களின் இன அடிப்படையிலான ஒதுக்குதல்களால் அவமானங்களையும் வேதனைகளையும் எதிர்கொள்கிறார். வெள்ளைப் பெண்மணி ஒருவரின் வீட்டில் பணியாற்றுகிறார் மார்கரெட். அந்தப் பெண்மணி தன்னை மேரி என்றுதான் அழைப்பேன் என்று சொல்லும்போது சீனக்களிமண் கோப்பைகளைத் தவறவிட்டதுபோல் வேண்டு மென்றே கீழே போட்டு உடைத்து தன் எதிர்ப்பைக் காண்பிக்கிறார் மாயா. வெள்ளைச் சிறுமிகள் தனது மாண்புமிக்க பாட்டியாரை ஆனி எனப் பெயரிட்டு அழைப்பது, அநாகரிகமான முறையில் முகத்திலும், சைகையாலும் ஒழுங்கு காட்டுவது போன்ற நிகழ்வுகளை மிகுந்த கோபத்துடன் கவனித்துவருகிறாள் சிறுமி மாயா. அத்தகைய வெள்ளைத் திமிர் நடத்தைகளுக்குப் பெரிய எதிர்ப்பு எதுவும் காட்டாமல் யதார்த்த வாதியான பாட்டி தொடர்ந்து பிரார்த்தனைப் பாடல்களை முணுமுணுத்தவாறு இருப்பார். எந்நேரமும் கடவுளை நோக்கிய மன்றாட்டின் மூலமாகத் தனது அவமானங்களையும் துயரங்களையும் களைந்திட நினைப்பவராகவே அவரது பாட்டி இருக்கிறார்.

ஒருமுறை மாயாவுக்குக் கடுமையான பல்வலி ஏற்படுகிறது. பாட்டியின் கைவைத்தியத்தில் குணமாகாததால் அவருக்குத் தெரிந்த, முன்பு அவரிடம் கடன் பெற்றிருந்த ஒரு வெள்ளை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். அந்த மருத்துவரோ, “நான் நாய்க்குக்கூட மருத்துவம் பார்ப்பேன், ஆனால் ஒரு நீக்ரோவுக்கு வைத்தியம் செய்ய மாட்டேன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவன்” என மறுத்துவிடுகிறார். அப்போது தனது பாட்டி பெருங்கோபத்துடன் அந்த மருத்துவமனையைச் சொல்லம்புகளால் துளைத்தெடுப்பதாக ஒரு கற்பனை உரையாடலை நிகழ்த்திச்செல்கிறாள் சிறுமி மாயா. பாட்டியோ தனது பேத்திக்கு மருத்துவம் பார்க்க மறுத்த வெள்ளை மருத்துவனிடம் முன்னர் பெற்ற கடனுக்கான வட்டிப் பணத்தைக் கொடு என வாங்கிக்கொண்டு, அதுவே அவருக்கான தண்டனை என்கிறார்.

வெள்ளையர்களின் குடியிருப்பைக் கடந்து செல்வதை மனித உண்ணிகள் வாழும் காட்டில் ஆயுதமில்லாமல் நடந்து செல்வதற்கு ஒப்பானதாகும் என்றெழுதுகிறார் மாயா.

அச்சத்திலும் ஆதரவின்மையிலும் துயருறும் ஆயிரமாயிரம் கறுப்பினக் குழந்தைகள் அமெரிக்காவின் குறுக்கும் நெடுக்குமாக நாள்தோறும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள் என்கிறார் மாயா. மாயாவும் அவள் அண்ணனும் அவ்வாறே தாயிடமும் தந்தையிடமும் மாறிமாறி அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

செயிண்ட் லூயிஸ் நகரில் அம்மாவின் கிழக் காதலனான ப்ரீமென் எனும் வக்கிரபுத்தி கொண்டவனால் எட்டு வயதுக் குழந்தையான மாயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். மிகுந்த உடல் வலியிலும் மனவலியிலும் வேதனையுறும் மாயா, ப்ரீமெனின் மிரட்டலுக்குப் பயந்து அதை மறைக்கிறாள். ரத்தக் கறை படிந்த உள்ளாடைகள் மூலம் அம்மா அதனைக் கண்டுபிடித்துவிட ப்ரீமென் கைது செய்யப்படுகிறான். பின்னர், கொலை செய்யப்பட்டுத் தெருவில் வீசியெறியப்படுகிறான். தனது வார்த்தைகளே ப்ரீமெனைக் கொன்றுவிட்டதாக எண்ணி மாயா பேசா மடந்தையாகிறாள். அண்ணன் பெய்லியைத் தவிர வேறு எவரிடமும் பேசாமல் மௌனம்காக்கிறாள். ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்த்தா ஃபிளவர் எனும் மூத்த தோழிதான் சொற்களின் வலிமையை, கவிதையின் மகத்துவத்தை மாயாவுக்கு உணர்த்துகிறார். உலக இலக்கியங்கள் பலவற்றை அவர் மாயாவுக்கு அறிமுகம் செய்கிறார்.

கலிபோர்னியாவின் தொழிலாளர் பள்ளியில் சேர்ந்து உதவித்தொகையும் பெற்றுக்கொண்டு நடனம், நாடகம் போன்ற கலைகளைக் கற்றுத்தேர்கிறாள் 14 வயது சிறுமி மாயா. சான்பிரான்சிஸ்கோவில் மேல்நிலைக் கல்வியை முடித்த பின்னர் தனது தளராத முயற்சியினால் அந்நகரத்தின் டிராம் வண்டியில் முதல் கருப்பினப் பெண் நடத்துநராகத் தேர்வுசெய்யப்படுகிறார்.

தனது துயரங்களையும், அவமானங் களையும், கோபங்களையும்கூட தீரம் மிக்க தன் மனவலிமையினூடாக நகைச்சுவையோடு வெளிப்படுத்துகிறார் மாயா.

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
மாயா ஏஞ்சலோ
தமிழில்: அவை நாயகன்,
எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002.
தொலைபேசி: 04259 226012, 9865005084

நன்றி - thehindu

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்