/* up Facebook

Jan 7, 2016

பெண் எனும் பகடைக்காய்: மகள்களுக்கும் கல்வி அவசியம் - பா. ஜீவசுந்தரி


எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாகச் சுட்டிக்காட்டும் மனநிலை நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், அமெரிக்கா அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை எட்டிவிடவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா தங்கள் நாட்டுப் பெண் குழந்தைகளின் கல்வி பற்றி ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்திருக்கும் கருத்துகளே இதற்கு சாட்சி.

‘பெண் கல்வி பற்றிய நேர்மையான விவாதம் தேவை.., உலக அளவில் பெண் கல்வியை உறுதி செய்ய, சமூகங்களில் பின்பற்றப்படும் பழமையான சட்டதிட்டங்கள், மரபுகள் குறித்து நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டும். என்னுடைய நாடு உட்பட பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் இது நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருப்பவர் சாட்சாத் மிஷேல் ஒபாமாவேதான்.

கடந்த நவம்பர் மாதம் கத்தார் நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உலகக் கல்விக்கான கண்டுபிடிப்புகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதன் ஒரு துளிதான் மேலே குறிப்பிட்டது.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் 6.2 கோடிச் சிறுமிகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படவில்லை என்ற சமீபத்திய புள்ளிவிவரம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஏன் பெண் குழந்தைகள் படிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறது.

நகரங்களையும் அவற்றின் பகட்டுகள், படாடோபங்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி வெளிவரும் செய்திகள், தகவல்கள் போன்றவை இவை போன்ற முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன. காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துமே பொழுதுபோக்குக்கு ஒதுக்கும் நேரத்தில் சிறிதளவேனும் இது போன்ற செய்திகளுக்கும் ஒதுக்கினால் இந்த அவலங்கள் பரவலாகச் சென்றடையும். குறிப்பாக மாநில, மத்திய அரசுகள் பெண் குழந்தைகள் கல்வியின் போதாமை குறித்துக் கவனம் குவிக்க அது பயன்படும்.

யாருக்கெல்லாம் இங்கு கல்வி மறுக்கப்படுகிறது? மலையோரக் கிராமங்கள், உள்ளடங்கிய கிராமப்புறங்கள், வனப்பகுதிகளை ஒட்டியிருக்கும் சின்னஞ் சிறிய ஊர்கள், விவசாயம் பொய்த்துப் போய் தங்கள் சொந்த நிலங்களை இழந்தவர்கள், அந்த நிலங்களில் கூலிக்கு வேலை செய்த விவசாயத் தொழிலாளர்கள் போன்றவர்கள்.

இடப்பெயர்வு வாழ்க்கை

ஊரை விட்டு நகரங்களுக்கோ மற்ற ஊர்களுக்கோ பிழைப்புத் தேடிக் குடும்பத்துடன் இவர்கள் இடம்பெயரும்போது முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளின் கல்விதான். வேலையும் தங்குமிடமும் பிரச்சினைகளாகிப் போகும்போது குழந்தைகளின் கல்வி பற்றி யோசிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. தப்பித் தவறிப் பள்ளியில் சேர்த்தாலும் ஆண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது. சென்னை மாநகரிலேயே அப்படிப் பலரைச் சந்திக்க முடிந்தது.

நவீன அகதிகள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடங்களைத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, காலம் காலமாய் அங்கே குடியிருந்தவர்களை நகரை விட்டு வெகு தொலைவில் கொண்டுபோய்க் குடியேற்றியதன் விளைவு அவை நவீன சேரிகளாகவும், அகதி முகாம்களாகவும் மாறிப் போயிருக்கின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவர்களைக் குடியேற்றியதுடன் அவர்கள் வாழ்வு நிறைவு பெற்றுவிடாது. தங்கள் வாழ்க்கைக்கான ஆதாரமாக அவர்கள் செய்து வந்த சிறு சிறு வேலைகளும்கூட வெகுதொலைவுக்குக் கையை விட்டுப் போய்விடுகின்றன. சாதாரணக் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் குறைந்தபட்சம் 25 அல்லது 30 கி.மீ. தொலைவு பயணித்து அந்த வேலையைச் செய்வது அவர்களின் ஊதியத்துக்கு ஏற்புடையதா?

பெண்களைப் பொறுத்தவரை ஏறக்குறைய அவர்கள் வாங்கிக்கொண்டிருந்த சொற்ப சம்பளம் தரும் வேலையில் நீடிக்க முடியாமல் போயிருக்கிறது. பல பெண்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டுக்குள் முடங்கிப் போயிருக்கிறார்கள்.

நகரில் இருந்தவரையிலும் அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த ஒரு சில குழந்தைகளின் கல்விக்கும் இதன் மூலம் வேட்டு வைக்கப்பட்டுவிட்டது. குடியிருக்க இடம் இருந்தால் மட்டும் போதுமா? அவர்கள் படிப்பதற்கு அருகில் பள்ளிகள் வேண்டாமா? அரசு புதிதாக ஒரு குடியிருப்பை ஏற்படுத்தும்போது, அதைச் சுற்றிலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாமா?

முறைப்படுத்தப்படாத கூலி உழைப்பாளர்கள்

மற்றொரு பிரிவினரின் பாடு இவர்களை விட இன்னமும் மோசம். முறைப்படுத்தப்படாத ஊதியம், வேலை இவற்றில் ஈடுபடும் இவர்கள் வாழ வழியின்றி பிஹார், ஒடிஷா, ஆந்திர மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடித் தமிழகம் வந்தவர்கள். இடம், மொழி, சூழல் அனைத்துமே அவர்களுக்குப் புதிது. பாலம் கட்டுதல், சாலைப் பணி, கட்டுமானப் பணி, மெட்ரோ ரயில் பணி என்று சகல வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் பலர் குடும்பத்துடன் தகரக் கொட்டகைகளில்தான் தங்கியிருக்கிறார்கள். தற்காலிகமாகத் தங்கியிருக்கும் அவர்கள் இங்கு ரேஷன் கார்டு போன்ற எந்த வசதிகளும் இல்லாதவர்கள். கிடைக்கும் சொற்ப சம்பளத்தை உணவுக்குச் செலவிடுவதே அவர்களுக்குப் பெரும்பாடு என்ற நிலையில் குழந்தைகளின் கல்வி பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரம் ஏது? இந்த வேலை முடிவடைந்தால் அடுத்த வேலை, அடுத்த ஊர் என்று பயணப்படுபவர்கள் எந்தப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பார்கள்? பெண் குழந்தைகள் என்றில்லாமல் அனைத்துக் குழந்தைகளின் கல்வியுமே இந்த இடப்பெயர்வு வாழ்வில் பெரும் கேள்விக்குறியாகிறது.

அவர்களில் சிலர் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை. ரேஷனில் இலவசமாகக் கொடுக்கப்படும் அரிசியைப் பலரும் வாங்கி, 5 முதல் 10 ரூபாய்வரை இவர்களுக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். கடையில் வாங்கும் அரிசியைவிட இது விலை குறைவு என்பதால், சிக்கனம் கருதி இலவச அரிசியை விலை கொடுத்து வாங்கித் தங்களுக்கு உணவாக்கிக்கொள்கிறார்கள்.

கல் குவாரிகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள் இவற்றில் வேலை செய்து கொத்தடிமை நிலையில் காலம் தள்ளும் பலரும் தங்கள் பெண் குழந்தைகளை வீட்டைக் கவனித்துக்கொள்ளவும், உணவு தயாரிக்கவும், அடுத்தடுத்த சிறு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளவும் வேண்டியிருப்பதால், அந்தக் குழந்தைகளுக்கு முறையான கல்வி மறுக்கப்படுகிறது.

நடுத்தர வர்க்கம் எனும் மாயச் சூழல்

அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல, நடுத்தரக் குடும்பத்தினரும்கூட இதே பாகுபாட்டைக் கைக்கொள்கிறார்கள். பெண் கல்வி என்பது நம்பிக்கையையும் அவரவர் மனப்பான்மையையும் பொறுத்தது. மகனின் கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு மகளின் கல்வியும் முக்கியமானது என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். சிறுமிகளாக இருக்கும்போது ஓரளவுக்குச் சமமாக நடத்தப்படும் பெண் குழந்தைகள், பதின்பருவத்திலும், மங்கையாக வளரும்போதும் பாலினரீதியில் பெரும் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பது எத்தனை கசப்பான உண்மை?

மீண்டும் மிஷேல் ஒபாமாவின் வார்த்தைகளை மனதில் கொள்ளுவோம்.

கட்டுரையாளார், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

நன்றி - thehindu

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்