/* up Facebook

Jan 28, 2016

கனேடியத்தமிழ் சினிமாவில் பெண்கள் - கறுப்பிதென்னிந்தியா சினிமாவிற்கு கிடைத்திருக்கும் பரவலாக்கம், ஈழ, புலம்பெயர் சினிமாவிற்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. புலம்பெயர் சினிமா எப்போது அந்தந்த நாட்டு சினிமாத்துறைக்குள் தன்னை நுழைத்துக் கொள்கின்றதோ அப்போதுதான் அதற்கான நிரந்தர தளமும் கிடைக்கும்.

தென்னிந்திய தமிழ் சினிமாவின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதனால் அதில் ஆய்வுகளை நிகழ்த்துவது சுலபம், ஈழத்தமிழ் சினிமாவில் என்று பார்த்தால்கூட மிகவும் குறைந்த அளவிலேயே படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. எனது தலைப்பு புலம்பெயர் தமிழ் சினிமாவில் பெண்கள்.

புலம்பெயர் எனும் போது அதற்குள் அடக்கும் நாடுகள் பல, அங்கிருந்து எத்தனை முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன என்ற தகவல்கள் என்னிடமில்லை, இருப்பினும் சினிமா விரும்பி என்ற வகையிலும் ரொறொன்டோவில் திரையிடப்பட்ட பல திரைப்படங்களை நான் பாத்திருக்கின்றேன், என்ற வகையிலும் பார்த்த திரைப்படங்களின் அடிப்படையில் நான் உள்வாங்கியவற்றைக் கொண்டு இங்கே பேச உள்ளேன். மேலதிக தகவல்கள் உங்களிடமிருப்பின் கேள்வி பதில் நேரம் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த சினிமா உலகை எடுத்துக் கொண்டால் ஒப்பீட்ளவில் பெண்களின் பங்களிப்பு என்பது ஆண்களை விட மிகக் குறைந்த அளவிலே இருக்கின்றது, மேற்கத்தேய நாடுகளிலேயே இந்த நிலையெனில் தமிழ் சினிமா உலகில் பெண்களினது பங்களிப்பை நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. கமெராவிற்கு முன்னால் இருப்பவர்களாகவே அவர்கள் எப்போதும் பார்க்கப்பட்டு வருகின்றார்கள். பின்னால் இருந்த, இருக்கும் சிலர் கூட அவர்களின் ஆண் குடும்ப அங்கத்தவரின் சிபாரியில், அல்லது தெரிந்தவர்கள் சார்பில் வந்தவர்கள் ஆகத்தான் இருக்கின்றார்கள். கமெரா பின்னால் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா உலகமென்பது ஆண்மயப்படுத்தப்பட்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தில் கதை சொல்லிகளாகவும், இயக்குனர்களாவும் எப்போதுமே ஆண்களே அதிகமிருந்து வருகின்றார்கள். ஆண்மேலாதிக்க நிறுவனம் ஒன்றிலிருந்து வரும் படைப்பு, தமக்கான உலகில் தாம் பெண்களிடமிருந்து எதிர்பாப்பதைத்தான் எடுத்துவரும், எடுத்துவர முடியும். அந்த வகையில்தான் தமிழ்சினிமா என்பது இதுவரைகாலமும் வந்துகொண்டிருக்கின்றது. சில விதிவிலக்குகள் இருக்கலாம்,  உதாரணத்திற்கு ரூத்திரய்யாவின் 'அவள் அப்படித்தான்' அதன் பின்னால் அவர் காணாமல் போய்விட்டார். இதுதான் தமிழ் சினிமாவின் நிலை. ரூத்திரய்யாவிற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதாவது இந்திய, ஈழ, புலம்பெயர் சினிமாக்களின் பெண் அகவாழ்வை ஆராயும் எந்தத் திரைப்படமும் வரவில்லை என்றுதான் கூறமுடியும்.  எந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கும் உள்ளது போல்தான், திரைப்படத்துறைக்கும் இரு வேறு நீரோட்டங்கள் இருக்கின்றன. ஒன்று ஜனரஞ்சகம், மற்றது கலைப்படைப்பு அல்லது தீவிர படைப்பு. ஜனரஞ்சகம் வினியோகம், பிரபல்யம் போன்றவற்றை மையப்படுத்தி உருவாவது, மாறாக கலைப்படைப்பு  சமூக அக்கறையோடு செயல்படுவது. ஜனரஞ்சகப் படைப்பு நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது,  கலைப்படைப்பு படைப்பாளியின் நெறிமுறையிலிருந்து தன்னை விலகாமல் பார்த்துக்கொள்ளும்.

சரி இனி எனது தலைப்பான புலம்பெயர் சினிமாவில் பெண்கள் என்று பார்த்தால், இதுவரை காலமும் வெளிவந்த திரைப்படங்களில் பெண்களின் இருப்பிடம் என்பது திரைப்படங்களில் எப்படி அமைந்திருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். முதலாவது நான் அறிந்து புலம்பெயர் சினிமாவில் இதுவரை பெண் இயக்குனரின் திரைப்படம் வெளிவரவில்லை. எனவே நான் மேற்கூறியது போல் ஆண்மயப்படுத்தப்பட்ட சினிமாத்துறையில் ஆண்களின் பார்வையிலிருந்துதான் இதுவரைக்கும் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அடுத்து, புலம்பெயர் தீவிர இலக்கியச் சூழல என்பது பல ஆண்டுகாலமானது. தீவிர இலக்கியம் என்பது எப்போதும் விழிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒன்றாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே பெண்களுக்காகவும் அது எப்போதும் குரல் கொடுத்தபடியே இருக்கின்றது. அதன் காரணமாக புலம்பெயர் இலக்கியச் சூழலில் தீவிர இலக்கிய செயல்பாட்டிற்குள் இணைத்துக்கொண்டவர்களுக்கு புலம்பெயர் சூழலில் தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இலகுவில் அடையாளம் காணவும், அதனை அடையாளப்படுத்தவும், அப்பெண்களின் அகஉணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் புலம்பெயர் தீவிர இலக்கியத்தின் பரிச்சயம் நிச்சயம் வழிவகுக்கும். 

1996இல் பாரிஸில் இருந்து அருந்ததியின் இயக்கத்தில் 'முகம்' என்றொரு திரைப்படம் வெளிவந்தது, அது அகதிகளின் ஆன்மாக்களின் குரலாக வெளிவந்த திரைப்படம், ஒரு முழுநீளக் கலைப்படைப்பாக தன்னை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் நானறிந்து வெளிவந்த பல புலம்பெயர் திரைப்படங்கள், ஒன்றில் தென்னிந்திய தமிழ் மசாலா திரைப்படங்களின் பாதிப்பில் வெளிவந்தவை, அல்லது புலம்பெயர் தமிழ் சினிமாவிற்கான ஒரு புதிய மொழியைப் பதிய வைக்க முயன்று தோன்றவை என்றே கொள்ளலாம். இத்திரைப்படங்களில் பெண்கள் எப்படிப் பார்க்கப் பட்டார்கள் என்று நோக்கினால் கே.எஸ் பாலச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான 'உயிரே' திரைப்படம் மகனை இழந்த ஒரு தாயின் சோகத்தை சொன்னது என்பதற்கு மேலால் குறிப்படும்படியாக எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், தென்னிந்திய சினிமாவின் தாக்கத்தில் தன்னை வீழ்த்திக் கொள்ளாமல் அத்திரைப்படம் கனேடிய தமிழ் சூழல் ஒன்றை அப்போது தாங்கிவந்தது. அதனைத் தொடர்ந்து வந்த பல திரைப்படங்கள் புலம்பெயர் சூழலில் தமிழ் மக்களின் பல பிரச்சனைகளை தளமாகக் கொண்டு அமைந்திருந்ததன. குறிப்பிடும் படியாகப் பெண்களின் பிரச்சனைகள் என்று எதையும் தொட்டுச் செல்லவில்லை. அண்மைக் காலங்களில் கனேடிய தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் பிரத்தியேகமாகப் பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்திருயிருந்ததைக் காணக்கூடியதாருந்திருந்தது. ஒன்று ஜனா கே சிவாவின்  'சகாராப்பூக்கள்' இத்திரைப்படத்தின் திரைமொழி, வசன அமைப்பு, என்பன நேர்த்தியற்றனவாக இருப்பினும், இரண்டாவது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைந்திருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இருப்பினும் மையக்கரு என்னளவில் அதற்கான நியாயத்தை அடையவில்லை. கடந்த வருடம் பார்த்த திரைப்படம் அது, மனதில் பதியும் வகையில் எந்தக் காட்சியும் அமையாயததால் திரைப்படத்தை என்னால் மீட்டுப் பார்க்க முடியாமல் உள்ளது. காதல் தோல்வி தற்கொலை என்ற சென்டிமென்டல் வலுவைக்கொடுத்து இயக்குனர் பார்வையாளர்களின் பாராட்டை பெற முயன்றுள்ளார் என்றே படத்தைப் பார்த்து முடித்த போது நான் உணர்ந்தது. 

அடுத்து கதிர் செல்வகுமாரின் ஸ்டார் 67
இதுவும் ஒரு பெண்ணை தொலைபேசி மூலம் தொல்லை செய்பவன் ஒருவனின் கதை, இது ஒரு த்ரில்லர் திரைப்படம், பெண்பாத்திரத்தை ஆராயும் அளவிற்கு பாத்திரப்படைப்புகள் எதுவும் இல்லை என்பது எனது கருத்து.

அடுத்து திவ்யராஜன் அவர்களின் இயக்கத்தில் வெளியான 'உறவு' திரைப்படம். 'உறவு’ நான் மேற்கூறிய கூற்றிற்கு நல்ல ஒரு உதாரணம். அதாவது ஆண் மேலாதிக்க உலகில் பெண்ணியம் என்பதின் பார்வையாகத்தான் என்னால் அத்திரைப்படத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது அண்மைக்கால இலக்கிய சர்சைகளின் வடிவில் சொல்வதானால் பார்ப்பனிய எழுத்தாளரின் தலித்திய சிறுகதை அது. ”உறவு” திரைப்படம் ஒரு பெண்ணின் பிரச்சனையை ஆராய்வதாக, பெண்ணிற்கு சார்ப்பான திரைக்கதை என்று முற்றுமுழுதாக இயக்குனரால் நம்பப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது என்று நான் நம்புகின்றேன், ஆனால் அது இயக்குனரின் பெண்ணியம் பற்றிய புரிதலின் போதாமை காரணமாக பெண்ணை ஒரு வில்லியாகப் பிரகடனப்படுத்திவிட்டதோ என்று நான் அஞ்சுகின்றேன். ஒரு சமூக பிரச்சனையை ஆராயும் வகையில் படைக்கப்படும் எந்தப் படைப்பும், பல உரையாடல்களுக்குள் சென்று பதப்பட்டுவருவதானல் மட்டுமே தன்னை நேர்த்திப்படுத்துக் கொள்ளும்.  பிரதிகளின் மையக்கரு சார் வல்லுனர்களிடம் கொடுத்து பலதடவைகள் வாசிக்கப்பட்டு மீள மீள எழுதுவதால் மட்டுமே ஒரு காத்திரமான பிரதியை உருவாக்க முடியும் என்று நான் நம்புகின்றேன். ஒரு கரு நுால் இழையில் தவறிப்போய் இயக்குனர் சொல்லவந்ததற்கு எதிர்கருத்தாக அது மாறிவிடும், அந்த வகையில்தால் ”உறவு” படத்தை என்னால் பார்க்க முடிந்தது.

அடுத்த புலம்பெயர் சினிமாவில் தனக்கென்றொரு காலடியைப் பதித்து நிற்கும் லெனின்.எம் சிவத்தின் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், தொழில்நுட்பத்தில் புலம்பெயர் சினிமாவில் ஒரு காத்திரமான தளத்தை இப்படம் கொண்டிருக்கின்றது. இத்திரைப்படத்தில் ஆறு வேறுபட்ட கதைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதனால், அக்கதைகள் மேலோட்டமாக மட்டுமே திரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. எனவே பெண் கதாபாத்திரங்களும் ஆய்வுக்கான தனது இடத்தை எடுத்துக் கொள்வதற்குப் போதிய கால அவகாசம் இயக்குனரால் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் இரண்டு பெண் பார்த்திரங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன். 

இளம் பெண்ணின் தாயார் பெண்ணின் விருப்பமின்றி அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கின்றாள், அப்போது சினம் கொண்ட அந்தப் பெண் தனது தாயைப்பற்றி, இல்லாவிட்டால் அந்த சந்ததி பற்றிப் பேசும் வசனங்கள் மிகவும் காத்திரமானவை, இன்று புலம்பெயர் தமிழர்கள் குடும்பங்கள் பலவற்றில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அது, அதாவது பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தாம் நல்லது செய்கின்றோம், என்று உண்மையில் நம்பிச் செய்யும் பல செயல்கள், பிள்ளைகளை பெற்றோரையே மிகவும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றது. உங்களில் எத்தனை பேர் ஜெனிபர் பான் என்ற வியட்நாமியப் பெண்ணின் கொலைவழக்கை அறிவீர்களோ தெரியாது, ஸ்புரோவில் வாழ்ந்த இந்தப் பெண் தற்போது தனது பெற்றோரைக் கொலை செய்ததற்காக சிறைச்சாலையில் இருக்கின்றாள். தாய் இறந்துவிட்டாள், தந்தை உயிர்தப்பினார் பெற்றோர்களின் அதிக அன்பும், இறுதியில் பெற்றோரையே அவள் கொல்லும் அளவிற்குக் கொண்டுபோய் விட்டது. 

லெனின் இன்னும் ஆளமாக இந்தக் கருவை கையாண்டிருக்கலாம் என்ற ஆதங்கள் எனக்குப் படம் பார்த்து முடித்தபோது ஏற்பட்டது.

அடுத்து இப்படத்தை முக்கிய பெண் பாத்திரத்தை லெனின் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். ஊரிலிருந்து வந்த பெண், நாடு புதிது, தான் நம்பிவந்தவர்கள் தன்னைக் கைவிட்ட போதும் தளர்ந்துவிடாமல்,  தனது கௌரவத்தை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காத காத்திரமான பெண்ணாக ஒரு நம்பிக்கையைத் தந்த பெண் பாத்திரமாக குறுகிய நேரத்திற்குள் அந்தப் பெண் பாத்திரத்தை நேர்த்தியாகப் படைத்த இயக்குனர் முடிவில் நான் மேற் கூறியது போலவே ஒரு ஆண் இயக்குனராகவே அப்பெண்ணின் முடிவை கையாண்டிருக்கின்றார். இம்முடிவில் எனக்குத் திருப்தியில்லை, நேர்த்தியாக உருவாக்கபட்ட ஒரு பாத்திரம் முடிவில், மிகவும் ஒரு சாதாரண பாத்திரமாகத் தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது. இயக்குனர் கட்டமைத்த இந்தப் பெண் பாத்திரம் இப்படியான ஒரு அவசர முடிவை எடுக்காது என்பது என் நம்பிக்கை. ஒரு பெண்ணியவாதி, அல்லது ஒரு சாதாரண பெண் இயக்குனர் இப்பாத்திரத்தைக் கையாண்டிருந்தால் நிச்சயம் வேறு ஒரு முடிவுதான் எமக்குக் கிடைத்திருக்கும். 

நிறைவாக கனடாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நான் பலவற்றைப் பார்த்திருக்கின்றேன், எனது தலைப்பிற்குப் பொருத்தமான சில திரைப்படங்களையே நான் தெரிந்தேன், எல்லாவற்றையும் நான் விமர்சனத்திற்குத் தெரியவில்லை. நானும் ஒரு முழுநீளத் திரைப்படம் எடுத்துள்ளேன். அதிலுள்ள சிரமங்கள் எனக்கும் தெரியும். இருப்பினும் இனிமேலும் நாம் காரணங்கள் சொல்லாமல் ஒரு படைப்பைப் படைக்கும் போது அதற்கான நியாயத்தை செய்ய முயலவேண்டும். எம்மிடமிருப்பது காத்திரமான திரைக்கதை மட்டுமே அதற்கான நியாயத்தை நாம் செய்யும் போதுதான் புலம்பெயர் சினிமாவிற்கான ஒரு நிரந்தர தளத்தை நாம் உருவாக்க முடியும். 


மார்கழி மாதம் 26ம் திகதி ரொரொண்டோ தமிழ்சங்க மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்