/* up Facebook

Jan 1, 2016

இருளுக்கு இங்கே இனி என்ன வேலை? - நம்பிக்கையோடு நடக்கிறேன் எனக்கான பாதையில்! - பிருந்தா சீனிவாசன்கவிதா தற்போது...
கவிதா தற்போது...

தொடர்ச்சியான கீமோதெரபியால என் உடம்புல நிறைய மாற்றங்கள். ஆனா என்னை இயல்பா காட்டிக்கறதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டேன். முகம் ரொம்ப கறுத்துப் போச்சு. உள்ளங்கை, நகம், நாக்கு எல்லாம் கறுப்பா மாறிடுச்சு. அதுக்காக ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை ஃபேஷியல் பண்ணிப்பேன். கண் புருவம் கொட்டிடுச்சு. ஐப்ரோ பென்சிலால புருவம் வரைஞ்சிக் கிட்டுப் போவேன். என்னோட இந்தத் திடீர் மாற்றங்களைக் கவனிச்சு சிலர், ‘என்ன மேடம், வர வர சினிமா ஹீரோயின் மாதிரி மேக் அப் போட ஆரம்பிச்சுட்டீங்க’ன்னு கேட்டாங்க. அதுக்கு நான் புன்னகையதான் பதிலா வச்சிருந்தேன்.

கீமோதெரபில முதல் நாலு சுற்று முடிஞ்ச பிறகு வேற காம்பினேஷன்ல மருந்து கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு நாக்கு சுத்தமா மரத்துப்போச்சு. தொடர்ச்சியான வாந்தியும் இருந்துச்சு. அதனால கீமோதெரபி முடிஞ்ச மறுநாள் மட்டும் லீவு எடுத்துக்கிட்டேன். ஆறு சுற்று முடியறபோது கண்ணிமைகூட கொட்டிப்போச்சு. அதைப் பார்த்துட்டு என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். நான்தான் எல்லாம் சரியாகிடும்னு அவரைச் சமாதானப்படுத்தினேன்.

நான் சிகிச்சையில இருந்தப்போ யார் வீட்டுக்கும் போகலை. ஊர்ல சொந்தக்காரங்க வீட்ல நிறைய விசேஷம் நடந்துச்சு. எதுலயுமே நான் கலந்துக்கவேயில்லை. விஷயம் தெரிஞ்சும் சிலர் என்கிட்டே கேட்டாங்க. சிலர் நாகரிகமா எதையும் கேட்காம இருந்தாங்க. ரேடியேஷன் முடியறவரைக்கும் என்னை வந்து யாரும் பார்க்கக் கூடாதுன்னு நான் உத்தரவே போட்டிருந்தேன். அதனால சித்தி, பெரியம்மா எல்லாரும் போன் பண்ணி ஓன்னு அழுவாங்க. போன்ல பேசும்போதே இப்படி உணர்ச்சிவசப்படுறாங்களே, நேர்ல என் நிலைமையப் பார்த்தா என்ன ஆகும்னு நினைச்சிப்பேன்.

அன்னைக்குதான் கீமோதெரபியோட கடைசி நாள். அன்னைக்கு ராத்திரி சரியா சாப்பிட முடியாதுங்கறதால என் வீட்டுக்காரர் காலையிலேயே ஹோட்டல்ல லஞ்சுக்கு ஏற்பாடு செய்திருந்தார். புதுப் புடவை கட்டிக்கிட்டு பளிச்சுன்னு போனேன். ‘உன்னைப் பார்த்தா கீமோதெரபி டிரீட்மெண்ட் எடுத்துக்கறவன்னு யாருமே சொல்ல மாட்டாங்க. அசத்தறீயே’ன்னு அக்கா சொன்னாங்க. நான் விதவிதமா நிறைய அயிட்டங்களை ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

கீமோ டிரீட்மெண்ட் முடிஞ்சதும், ‘இந்த டிரீட்மெண்டைக் கடந்து வர்றதுக்கு மன உறுதி அவசியம். அது உன்கிட்டே நிறையவே இருக்கு’ன்னு பேச்சுவாக்குல டாக்டர் சொன்னார். கீமோதெரபியோட ஏழாவது சுற்று நடக்கும்போதே ரேடியேஷன் டிரீட்மெண்ட்டுக்காக ரேடியாலஜிஸ்ட்டைப் பார்த்தோம். அவங்களோட பேச்சிலேயே அன்பும் அக்கறையும் ததும்பி வழியறதை உணர முடிஞ்சது. அம்மா மாதிரி கனிவாப் பேசினாங்க. பயங்கர சுறுசுறுப்பு. நடக்கறதே ஓடற மாதிரி இருக்கும். கறுப்பு பார்டர் வச்ச நீல நிறப் புடவை கட்டிக்கிட்டு போயிருந்தேன். முதல்ல அந்தப் புடவையைப் பத்திதான் விசாரிச்சாங்க. அதுதான் எங்க உரையாடலை ரொம்ப இனிமையானதாக்குச்சு.

நான் ஒரு முறை ரேடியேஷன் டிரீட்மெண்ட்டுக்குப் போயிருந்தபோது கணவனும் மனைவியும் அவங்களோட எட்டு வயசு மகளோட உட்கார்ந்துட்டு இருந்தாங்க. அந்த குட்டிப் பொண்ணுக்குக் கண்ணுல கேன்சராம். கருப்பு விழி வெளியே தொங்கிட்டு இருந்துச்சு. அவங்க அப்பாவோட தோள்ல சாஞ்சி உட்கார்ந்துகிட்டு இருந்த அந்த சித்திரத்தை என்னால இன்னைக்கு வரைக்கும் மறக்கவே முடியல. அவங்க அப்பா முகத்துல இருந்தது கவலையா, துயரமா இல்லை எல்லாத்தையும் கடந்த நிலையான்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை. ‘கடைசி கட்டத்துலதாம்மா கேன்சர்னு கண்டுபிடிச்சோம். இன்னும் மூணு மாசம்தான்னு சொல்லிட்டாங்க. ரேடியேஷன் கொடுத்தா இன்னும் கொஞ்சம் மாசம் இருக்கலாம்னு சொன்னாங்க. அதான் வந்திருக்கோம்’னு அந்தக் குழந்தையோட அம்மா சொன்னபோது என்னை மீறி கண்ணுல தண்ணி வந்துடுச்சு.

தங்கள் மகளுக்காக வேலை, வீடு, சொத்து எல்லாத்தையும் இழந்துட்டு அவ இன்னும் கொஞ்ச நாள் உயிர் வாழ மாட்டாளான்னு தவம் இருக்கற பெற்றோரை நான் ஏன் பார்க்கணும்? அவங்களோட வாழ்க்கை எனக்கு என்ன சொல்ல வருது? இப்படி பலப்பல சிந்தனைகள் என்னை அலைக்கழிச்சுது. வாழ்க்கையோட கடைசிக் கட்டத்துல இருக்கறவங்களே நம்பிக்கையோட இருக்கறபோது நமக்கு என்ன? தங்கமா வாழலாம்னு அந்த நிமிஷம் முடிவு பண்ணேன். காலையில கீமோ, சாயந்திரம் ரேடியேஷன்னு கடகடன்னு நாட்கள் ஓடுச்சு. ரேடியேஷன் கொடுத்ததால மார்பகம் முழுக்க கறுத்துப் போய், மரக்கட்டை மாதிரி ஆகிடுச்சு. சில வருஷத்துல எல்லாமே இயல்பாகிடும்னு டாக்டர் சொன்னாங்க.

2015 ஜனவரி எனக்கு நல்லபடியா விடியும்னு நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகலை. எல்லா சிகிச்சையும் முடிஞ்சு நான் என்னோட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினேன். நாலு மாசம் கழிச்சு என் விரல் நகங்கள்ல கறுப்பு நிறம் மறைஞ்சுது. ஆறு மாசம் கழிச்சு தலைமுடி வளர்ந்தது. என்ன ஆச்சரியம்னா ரொம்ப சுருட்டையாவும் அடர்த்தியாவும் வளருது! இன்னொரு விஷயம் தெரியுமா? நான் என்னோட பி.எச்டி.யை நல்லபடியா முடிச்சிட்டேன். என்னைச் சுத்தியிருக்கற மனிதர்கள் மேல நம்பிக்கை அதிகரிச்சிருக்கு. வாழ்க்கை மேல பிடிப்பு ஏற்பட்டிருக்கு. இன்னும் நான் கடக்க வேண்டிய தூரம் அதிகம், நம்பிக்கையோட நடந்துக்கிட்டு இருக்கேன்.

நன்றி thehindu

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்