/* up Facebook

Jan 2, 2016

'பீப்' பாடல்: சிம்பு ஒரு நோய் அல்ல: நோயின் அறிகுறி மட்டுமே! - அரசி விக்னேஸ்வரன்


"பீப் பாடல்" என்று பரவலாக அறியப்பட்ட  சிம்பு அனிருத் கூட்டணியில் உருவான பாடல் பற்றி பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பி சமூக வலைத்தளங்களை சென்ற வாரம் அதிர வைத்தன. பெண்களின் யோனியைக் குறிக்கும் "ஆபாச" அல்லது வசைச் சொல் ஒன்று அந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டு  இருப்பதே இந்த சர்ச்சைக்குக் காரணம். நல்லதோ கெட்டதோ, இந்தப் பாடல் பற்றிய கருத்துக்கள் பரவலாக, சென்னை வெள்ளத்தையும் தாண்டி பரவி இருந்தன. பாடலை வெளியிடவில்லை எனவும் அது இணையத்தில் திருடப்பட்டு பதிவிடப்பட்டுவிட்டது எனவும் சிம்பு தெரிவித்து விட்டார். ஆனால் இந்தியாவின் விடாப்பிடியான கருமமே கண்ணான ஊடகவியலாளர்கள்  விடுவார்களா? இளையராஜாவிடம் அதுபற்றி அபிப்பிராயம் கேட்டு வாங்கிக் கட்டிக்  கொண்டார்கள். இளையராஜா கலைத் திமிர் கொண்ட மனிதர் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம். இந்தக் கேள்வி அவருக்கு மிகவும் கோபமூட்டிவிட்டது. அது சமூக வலைத்தள "ஊடகவியலாளர்களுக்கு" வாய்ப்பாகப் போய் விட்டது. இளையராஜா கோபப்பட்டது அடுத்த வைரஸ் பதிவாகப் பரவத்தொடங்கிவிட்டது.

சரி, அந்தப் பாடலில் இருந்த அந்த வார்த்தைக்காக கோபம் கொண்ட சகல மனிதர்களின் கோபத்திற்குப் பின்னாலும் என்ன இருக்கிறது? அந்த வார்த்தை ஒரு வசைச் சொல், அதை சொல்வதும் கேட்பதும் நாகரீகம் அல்ல என்று மனதில் ஊறி இருப்பதால் அப்பாடல் சற்று கேட்க ஒரு மாதிரி அநாகரீகமாக பலருக்கு இருந்திருக்கலாம். ஆனால், இவ்வளவு கோபம் பொங்கி வரும் காரணம் என்ன? ஆங்கிலப் பாடல்களில், மைய நீரோட்ட பாடல்களில் மட்டுமல்ல, சிறந்த கலைப் படைப்பாக அல்லது ஒரு போராட்ட வடிவமாக திகழும் மாற்றுச் சிந்தனை நோக்கிய பாடல்களில் கூட வசைச் சொற்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது வழமை. அண்மையில் வெளிவந்த மாயாவின் அகதிகள் பற்றிய பாட்டில் ("Borders") கூட ஆங்கில வசைச் சொல்லொன்று இடம் பெறுகின்றது. அதையும் பீப் பாடலையும் கருத்து ரீதியாக ஒப்பிட நினைப்பது தவறு. அதிலுள்ள வார்த்தையை மட்டுமே இங்கு நான் ஒப்பிடுகிறேன்.   "பீப்" பாடலின் கருத்து நிலையைக் கொண்ட எத்தனயோ தமிழ்ப் பாடல்கள் வெற்றிகரமாக இளைஞர்கள் வாய்களில் வலம் வந்துகொண்டிருந்தன, இருக்கின்றன. பெண்களை இழிவுபடுத்துவதில் தமிழ் சினிமாவும் பாடல்களும்  உலகளாவிய விருது வாங்குமளவுக்கு 'சிறப்பாக' செயற்பட்டிருக்கின்றன.   பல வெற்றிப் பாடல்கள் இதில் அடக்கம். இந்த “பீப்” பாடலில் இருந்த ஒரே வித்தியாசம் அதில் இருந்த "ஆபாச" வார்த்தைதான்.

தமிழ் சினிமா பொதுப்புத்தியில் நிகழ்த்தும் தாக்கம் என்பது அளப்பரியது. அது பெரும்பாலான வேளைகளில் எதிர்மறையானதும் கூட. உதாரணமாக இந்த வருடம் வெளிவந்த மிகப் பிரமாண்டமான ஒரு திரைப்படமான "ஐ" மாற்றுப் பாலியலாலர்களை காயப்படுத்துவதாக அல்லது இழிவுபடுத்துவதாக அமைந்திருப்பது பற்றி "லிவிங் ஸ்மைல் வித்யா" என்று அறியப்படும் பிரபல மாற்றுப் பாலியல் செயற்பாட்டாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இதைத் தவிர பெண்களை கொச்சைப்படுத்தும், அடிமைப்படுத்தும் பல வகையான திரைப்படங்கள், பாடல் வரிகள் பற்றி பல விமர்சனகள் வந்திருக்கின்றன. இவை எல்லாம் இந்த மாதிரி ஒரு பெரும் பொதுஜன செய்தியாக வளரவில்லை. தமிழ்நாட்டு ஊடகங்களும் அவற்றை அதிகம் பரப்பவில்லை. இந்த காத்திரமான விமர்சகங்கள் எல்லாம் பெறாத ஒரு பெரும் வெளிப்பாட்டை " பீப்" பாடல் எளிதில் பெற்றது. எப்போதும் இல்லாதவாறு கோப அலை சிம்பு, அனிருத் மேல் வீசியது.

இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கும் அதற்கு எழுந்த கோபப்  பதிலடிகளுக்கும் பின்னால் ஒரு கலாசார,  நம் மக்கள் சிந்தனை சார்ந்த, பெண்கள் மற்றும் உடலுறவு சார்ந்த ஒரு பக்கம் இருக்கிறது. அதைப்பற்றி மட்டும் யாரும் இன்னும் கதைக்கவில்லை. அல்லது கதைத்து நான் பார்க்கவில்லை. உடலுறவு  சார்ந்த அல்லது பாலுறுப்பு சார்ந்த சொற்களை சொல்லக்கூடாத அல்லது வசைக்குரிய சொற்களாக பிரயோகிக்கும் வழக்கம் எங்கிருந்து வந்தது? எப்போது வந்தது?  இந்த வழக்கம் பாலுணர்வு, பாலியல் தொடர்பான ஒரு இறுக்கமான காட்டுப்பாடு என்கிற விஷயத்தில் இருந்து வருகிறது. உடலுறவு அல்லது பாலுணர்வு என்பது ஒளித்துவைக்கப்பட வேண்டிய அல்லது அவமானப்பட வேண்டிய விடயம் என்னும் ஒரு நம்பிக்கையில் இருந்து வருகிறது. இது காலம் காலமாக நம் பண்பாட்டில் ஊறியதால் ஒரு தலைமுறையில் மாறக்கூடிய மனோபாவம் அல்ல; இலகுவில் எல்லோராலும் மாற்றிக்கொள்ளக்கூடிய மனோபாவமும் அல்ல.

இந்த வகையில் பார்க்கும் போது, "பீப்" பாடலுக்கு எழுந்த பெரும்பாலான எதிர்ப்புக்கள் ஒரு தூய்மைவாத சிந்தனையில் இருந்தே வருகின்றது என்பதை அவதானிக்கலாம். (இளையாரஜாவையும் சேர்த்துத் தான் ). அதனால் தான், சிம்புவை விளக்குமாற்றால் அடிக்க வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் செல்ல விட வேண்டும் என்றெல்லாம் ஆத்திரத்தோடு சூளுரைக்கின்றார்கள். (சமூக வலைத்தளத்தில் வலம் வரும் ஒரு திரைப்பட விமர்சகரின் கருத்து இது. இதே கருத்தை இன்னும் பலபேர் கொண்டிருப்பது தெளிவு.) இந்த அவமானத்தையும் கூச்சத்தையும் ஏற்படுத்துகின்ற, ஒளிக்கப்பட்டுவந்த வார்த்தைகள் பொதுஜன ஊடகங்களில் வெளிப்படத் தொடங்குகிறது என்றால் அதற்க்கு நானறிந்த காரணம் ஒன்று இருக்க முடியும். அது தான் பாலியல் புரட்சி. அது மேலைத்தேய உலகில் நடந்த காரணத்தால் தான், இச்சொற்கள் மற்றும் பாலியல் தொடர்பான அதிகமான விடயங்கள் வெளிப்படையாக வலம் வருகின்றன. அதற்காக மேலை நாடுகளில் எல்லோரும் புரட்சிகர பாலியலினை ஆதரிப்பவர்கள் என்றுவிட முடியாது. ஆனால், அந்த விஷயம் இன்று பேசப்படக் கூடிய ஒரு பொது விஷயமாக இருக்கிறது. நம் தமிழரிடையே அதன் வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. இவற்றை நாம் பேசுகையில் தான் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட சகல பேசப்பட வேண்டிய விடயங்கள் எல்லாம் வெளி வரும். தமிழகத்தின் நகர வாழ்க்கையில் பாலியல் புரட்சி என்பது இன்று ஒரு குறை மாதக் குழந்தை போலப் பிறந்து இருக்கிறது. அதன் காத்திரமான வளர்ச்சிக்குத் தேவையான பெண்விடுதலை தொடர்பான கருத்துக்கள், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் பாலியல் சுகாதாரம், கர்ப்பத்தடை, ஓரினச்சேர்க்கை மற்றும் மாற்றுப் பாலியலாளர்கள்  தொடர்பான விழிப்புணர்வு போன்ற  எல்லா விஷயத்திலும் பெரும் தடைகள் நிலவுகின்றன. 

உதாரணமாக அண்மையில் வெளிவந்த மணிரத்தினத்தின் "ஒகே கண்மணி" என்கிற படத்தை நோக்கலாம். இங்கு ஒரு பெண்ணும் ஆணும் ஒரே அறையில் திருமணம் செய்து கொள்ளாமல், நீண்ட காலம் சேர்த்து வாழும் திட்டமும் இல்லாமல் சகஜமாக வாழ்கின்றனர். இந்தப் படத்தை பல தூய்மைவாதிகள் எதிர்த்தாலும், வணிக ரீதியில் அது வெற்றி என்பது மக்கள் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதன் அறிகுறிதான். ஆனால், இந்தப் படத்தில் இறுதியில், அந்த சேர்ந்து வாழும் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் உறவு அப்போது தான் உறுதிப்படுத்தப்படுகிறது. அப்போது தான் அது முழுமை பெறுகிறது. அது குறைமாத்தத்தில் பிறந்த பாலியல் புரட்சியின் அறிகுறிதான். காத்திரமான வகையில், அறிவுபூர்வமாக இந்தப் பாலியல் புரட்சியை அணுக முயலாத தூய்மைவாதிகளுக்கும் அரைகுறையாகவும் ஆபத்தான வகையிலும் பாலியல் புரட்சியைப் புரிந்து கொண்ட நகர்ப்புற இளைஞர்களுக்கும்  இடையில் ஏற்பட்ட ஒரு மோதல் தான் இந்தப் பாடலும் அதற்கு எழும் எதிர்ப்புக்களும்.

சிம்புவின் பாடலில் உள்ள பிழை அந்த சொல் அல்ல. அதில் பல பிழைகள் இருக்கின்றன. அந்தப்பிழைகள் இந்தப்பாட்டுக்கு மட்டுமுரியவை அல்ல. மொத்தமாக தமிழ் சினிமா தொடர்பில் ஆராயப்பட, பேசப்பட வேண்டியவை. இந்தப் பாடலைத் தனித்துவமாக்கியது அதன கருத்தியல் அல்ல. அந்த "ஆபாச" வசைச் சொல் தான். இந்த வார்த்தைப் பிரயோகம் என்பது  தமிழ்நாட்டின் நகர இளைஞர்களிடையே வெளிவரத் துடிக்கும்  பாலியல் புரட்சிக்கான அறிகுறி தான்.  இதைத் தவிர வேறு எப்படி அதை பார்த்தாலும், நாம் தூய்மைவாதத்துக்குள்  இருந்து வெளிவரமுடியாமல் நிற்கிறோம் என்பது தான் உண்மை.
 சிம்பு ஒரு நோய் அல்ல. அவர் அந்த நோயின் அறிகுறி. அந்த நோய் பழைய, புரையோடிப்போன நோய். இந்தப் பாடலுடன் உருவாகிய நோய் அல்ல. அந்த நோயை  எவ்வாறு பொறுப்புடன் கையாள்வது என்று நாம் சிந்திக்கலாம். சிம்புவை தனிப்பட்ட ரீதியில் வசைபாடுவதில் எந்தப் பொறுப்புணர்ச்சியும் இல்லை. அதை விடுத்து ஆழமான சிந்தனைக்கு ஒரு தூண்டியாக இந்த பாடலையும் அதற்கு வந்த விமர்சனங்களையும் எடுத்துக் கொல்லலாம்.

சரி, இறுதியாக ஒரு விஷயம், முகப்புத்தகத்தில் கோபப்பட்டவர்களின் கொந்தளிப்பைப் பார்த்து ஐயோ பிழையான நேரத்தில் அனிருத் டொரோண்டோவில் நிகழ்ச்சி நடத்த வந்துவிட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் அந்த நிகழ்விலும், அரங்கம் நிறைந்த விதத்திலும் எந்த பாதிப்பும்  இருந்தது போலத் தெரியவில்லை..

நன்றி - தீபம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்